WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
கலை விமர்சனம்
Michael Moore's contribution
Fahrenheit 9/11, written and directed by Michael
Moore
மைக்கல் மூரின் பங்களிப்பு
மைக்கல் மூரினால் எழுதி, இயக்கப்பட்ட பாரென்ஹீட் 9/11
By David Walsh
30 June 2004
Use this
version to print |
Send this link by email |
Email the author
ஈராக் போருக்கு எதிரான தங்கள் எதிர்ப்பு, புஷ் நிர்வாகத்தின் கொள்கைகளுக்கு
எதிரான எதிர்ப்பு, பொதுவாக அரசியல், செய்தி ஊடகங்களின் நடைமுறைகளைப் பற்றிய தங்கள் அருவெறுப்பு
இவற்றை வெளிப்படுத்துவதற்கு அமெரிக்க மக்கள் பெரும்பாலோருக்கு மைக்கல் மூரின் பாரென்ஹீட் 9/11
வெளியிடப்பட்டுள்ளது ஒரு வாய்ப்பைக் கொடுத்துள்ளது. திரை அரங்குகளில் திரையிடப்பட்ட அதன் முதலாவது
வாரத்திலேயே முப்பது லட்சம் மக்களுக்கும் மேலானோர் பார்த்திருக்கின்றனர், எல்லாவகையிலும்
பெரும்பான்மையோர் அதன் செய்தியை அங்கீகரித்துள்ளனர்.
வட அமெரிக்காவில் மூரின் படம் வெளிவந்ததே ஓர் உண்மையான அரசியல் நிகழ்வாகும்;
இது போலியாக உணர்வை வெளிப்படுத்தவில்லை. பல பத்தாண்டுகளாக அதிகாரபூர்வ அரசியல் வாழ்வு முற்றிலும்
சிலரால் எழுதப்பட்டு, மிகக் குறுகிய முறையில் அரங்கத்திற்கு கொண்டு வரப்படும் நிலைமையிலிருந்து இதுவே ஒரு
அபூர்வமான நிகழ்வாகும்.
பெரும்பாலான மக்களுக்கு, திடீரென ஒரு திரைப்படம் பார்ப்பதற்கு வாங்கப்படும்
நுழைவுச்சீட்டு, தங்கள் எதிர்ப்பை பொது அறிவிப்பாக வெளியிடும் வகையாக ஆகியுள்ளது. அதிகாரபூர்வமான
கட்டுக்கதைக்கு எதிராக, இந்நிகழ்வு அமெரிக்காவில் மில்லியன் கணக்கான மக்கள் தங்களுடைய அரசாங்கத்தின் குற்றஞ்சார்ந்த
கொள்கைகளை தீவிரமாக எதிர்க்கிறார்கள் என்பதை உறுதியாகக் காட்டுகிறது.
இது ஒரு சிறிய விஷயமல்ல. பாரென்ஹீட் 9/11 க்கு மக்கள்
கொடுத்துள்ள வரவேற்பு, அமெரிக்க செய்தி ஊடகத்தையும் அதன் முன்னணி நபர்களையும் முறித்து உடைக்கும் வகையில்
அம்பலப்படுத்தும் செயலாகும். திரையரங்குகளில் மிக மிக அதிகமான அளவில், ஒரு கதையல்லாத திரைப்படத்திற்கு
மக்கள் குழுமியுள்ளது, "போர்க்கால ஜனாதிபதி" என்ற புகழ், அவருடைய ஆட்சி இரண்டைப் பற்றிய கூற்றுக்களையும்
பொய்மைப்படுத்தியுள்ளது. ஒருவர் எல்லா மக்களையும் எல்லாக்காலத்திலும் முட்டாளாக்க முடியாது என ஆப்ரஹாம்
லிங்கன் அறிவித்தது சரியே.
போருக்கு,
மிகப் பெரிய மக்கள் எதிர்ப்பு உள்ளது
என்பதை எவ்வாறு செய்தி ஊடகம் "கவனிக்கத் தவறியது? பெப்ரவரி 2003ல் தோன்றியிருந்த மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களுக்குப்
பின்னரும், தேசிய வாழ்வின் வெளிப்படையான உண்மை என்று புதிய சாதனை படைத்துள்ள இந்த மூரின் திரைப்படம்
உறுதியாக்கியுள்ள வரை, இந்த உண்மை ஏன் மறுக்கப்பட்டு, மறைக்கவும் பட்டது? "தாராள செய்தி ஊடகம்" எனக்
கூறிக்கொள்ளுவோர் உட்பட அனைத்து செய்தி ஊடகங்களும், புஷ் ஒரு பிற்போக்கு பூஜ்யம், அறவழியில் ஓர் அரவாணி,
அவருடைய ஒவ்வொரு சொல்லும் செயலும் பெருநிறுவன செல்வந்தத் தட்டின் நலன்களுக்கு மட்டுமே பயன்பட்டது
என்ற உண்மையை எவ்வாறு "கவனிக்கத் தவறின"?
இத்தகைய மக்கள் வெள்ளத்தின் திரட்டு, அமெரிக்காவில் தீவிரமயமாக்கல்
தலையெடுத்துவிட்டன என்பதை உறுதிப்படுத்துவதோடு, தொலைநோக்கான விளைபயன்களையும் கொண்டுள்ளன
என்பதையும் உறுதிப்படுத்துகிறது.
மேலும், திரையரங்குகளுக்கு மில்லியன் கணக்கில் திரண்டு சென்றிருந்த மக்களுக்கு
ஒன்றும் கிடைக்காமல் போய்விடவில்லை; அவர்கள் ஏமாற்றப்படவும் இல்லை. ஒரு போற்றத் தக்கத்
திரைப்படமாகவும், சில பகுதிகளில் மிகக்குறிப்பிடத்தக்க அம்சங்களைக் கொண்டதாகவும், கணிசமாக
உளப்பூர்வத்துடனும் எடுக்கப்பட்ட படமாகவும் பாரன்ஹீட் 9/11 திகழ்கிறது. உள்ளுணர்வு, ஆற்றல்,
தைரியம் இவற்றை மிகுந்த நுட்பத்துடன் கையாளும் திரைப்படத் தயாரிப்பாளராகத்தான் மூர் உள்ளார்.
உண்மையாகவும் குறிப்பிடத்தகுந்த முறையிலும் இருக்கும் படத்தின் சில குறைபாடுகளும்
ஒரு குறிப்பிட்ட உள்ளடக்கத்தில்தான் வைக்கப்பட வேண்டும். மிக அதிகமான விஷயங்களைக் கூற வேண்டும் என்ற
முயற்சியைக் கொண்டிருந்தாலும், மிகக் கூடுதலான பிரச்சினைகள் பற்றி எடுத்துரைக்கவேண்டும் என்ற ஆர்வம்
இருந்தபோதிலும், மிக ஆழ்ந்த முறையில் ஒன்றுகூட கூறப்படவில்லை என்றாலும், எவரேனும் மூரை முழுமையாகக்
குறைகூறமுடியுமா? அமெரிக்க செய்தி ஊடகமே, அதன் மிகப்பரந்த இருப்புக்களையும், தொழில் நுட்பத்தையும்
கொண்டிருந்தும் சிறிது நேர்மையுடன்தான் நிகழ்வுகளைப் பற்றிக்கூறியுள்ளது என்றால், அத்தகைய பெரும் பிளவை
ஒற்றை மனிதனாக மூர் இட்டு நிரப்ப இயலுமா? அதிகாரபூர்வமான செய்தி ஊடகம் எதையுமே
விசாரணை செய்து அம்பலப்படுத்தாத நிலையில், தன்னால் அனைத்தையுமே
திரட்டிக்கூறிவிடமுடியும் என்று மூர் நினைக்க முடியுமா?
இவருக்கு கூடுதலான "தன்முனைப்பும்", "தன்னை உயர்த்திக்கொள்ளும்" தன்மையும்
அதிகமாக இருப்பதாக வலதுசாரி விமர்சகர்கள் மூரைத் தாக்கியுள்ளனர். இந்தப் பிற்போக்காளர்கள், பலரும்
அச்சுறுத்தப்பட்டோ, இலஞ்சம் பெற்றோ ஒதுங்கிப் பேசாமல் சென்றுள்ள நிலையில், இப்படத்தயாரிப்பாளர்
அதிகாரத்திற்கு சவால்விடும் தீவிரத்தை கொண்டுள்ளது பற்றி பெரும் சீற்றத்தை காட்டியுள்ளனர். இவருடைய
நிலைப்பாடு, ஒரு மிகப் பரந்த அடக்கப்பட்ட, வெளியிடமுடியாத நிலையில் உள்ள சமூகத்தொகுதி இருப்பதைத்தான்
வெளியில் கொண்டுவர உதவியுள்ளது.
அமெரிக்க அறிவுஜீவுகளின் செய்தித்துறைப் பிரிவு பெரும்பாலும் வெறுமையும், ஊழலும்
நிறைந்த குட்டைநீர் போலத்தான் இருக்கிறது. அண்மைக் காலத்தில் தனக்கென அமெரிக்கச் செய்தி ஊடகம்
வரையறுத்துக்கொண்டுள்ள முக்கிய பணி விஷயங்களை மூடிமறைக்க வேண்டும் என்பதும் தன்னுடைய கண்டறியும் தன்மையை
பயன்படுத்தி பெரும்பாலான மக்கள் அரசாங்கத்தையும் சமுதாயத்தையும் பற்றிய உண்மையைக் கண்டுகொள்ள
முடியாமல் செய்துவிடவேண்டும் என்பதே ஆகும்.
தெள்ளத் தெளிவாகக் கூறப்பட்டுள்ள பொய்களின் அடிப்படையில் ஓர் அப்பட்டமான
ஆக்கிரமிப்புப் போர் தொடக்கப்படமுடியும், அதன் விளைவாக பல்லாயிரக் கணக்கான மக்கள் உயிரிழக்க
நேரிடும், இன்னும் முழுமையாக அறியப்படாத பெரும் அழிவுகளை காணக்கூடிய விளைவுகள் ஏற்படும், ஒரு
பெரிய குரல்கூட அமெரிக்கச் செய்தி ஊடகத்தில் இருந்து இதற்கெதிராக எழுப்பப்படவில்லை; செய்தி ஊடக
அதிபதிகளும், அவர்களுடைய மில்லியன் டாலர் ஊதியங்கள் பெரும் செய்திவாசிக்கும் ஆடவரும் பெண்டிரும்,
கட்டுரையாளர்களும் விடையிறுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
மூரின் சில அரசியல் கஷ்டங்களும், ஜனநாயகக் கட்சியிலிருந்து முறித்துக் கொள்ள
மறுத்தல், மக்களுக்கு இரைபோடும் வகையில் சில செயல்கள், புஷ் -ஐ தனி மனிதராகப் பார்க்கும் மனத்தை
ஆட்டிப்படைக்கும் கருத்து இவை அனைத்தும் அப் பின்னணியில்தான் பார்க்கப்பட வேண்டும். சமீபகாலத்தில்
அமெரிக்காவில் தாராள-இடது போக்கின் பெரும்பாலான பிரிவுகள், இவற்றைப்பற்றி சற்றும் பொருட்படுத்தாமல்,
தங்கள் வளங்களைப் பெருக்கிக் கொள்ளுவதிலும், வலதுபுறத்திற்கு திரும்புவதிலும், பெரும் மக்கட்தொகையினரின்
விதியைப் பற்றிய அசட்டையைப் பெருகிவரும் முறையில் காட்டுவதிலும்தான் கருத்தாயுள்ளனர். இவ்விதத்தில் மூர் ஒரு
தனித்த நபராகத்தான் விளங்குகிறார். அடக்கப்பட்ட மக்களின் நிலை பற்றிய உண்மையான பரிவுணர்வையும்
அக்கறையையும் அவர் இன்னும் கொண்டுள்ளார்.
2000 தேர்தல்களும் அதற்கு அப்பாலும்
Roger & Me, Bowling for Clumbine
புகழ் மூர், தன்னுடைய திரைப்படத்தை
2000 தேர்தல்கள் புஷ் முகாமினால் கடத்தப்பட்டதற்கும், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அல் கோரும் அவருடைய
கட்சியும் இத்திருட்டை தடுக்க மறுத்ததற்கும், அர்ப்பணித்து கதையை ஆரம்பிக்கிறார். புஷ், எதிர்ப்புக்கள்
இடையேயும், அதிகாரத்தைப் பெறுகிறார், உடனே ஒரு விடுமுறையிலும் செல்கிறார்.
புதிய நிர்வாகம் தன்னுடைய பொதுமக்களுக்கு காட்டும் முகங்கள் பற்றி சில
காட்சிகளுக்குப் பிறகு, திரை கறுப்போடுகிறது; பயங்கரவாதிகளின் தாக்குதலால் செப்டம்பர் 11, 2001
ஒலித்த சப்தங்களை நாம் கேட்கிறோம்; பின்னர் அதை ஒட்டிய தெருக்களில் உள்ள மக்களின் பெரும் பீதிக்கு
உட்பட்ட முகங்களைக் காண்கிறோம். மிக அசாதாரணமான முறையில் ஜோர்ஜ். டபுள்யூ புஷ் பற்றிய காட்சியை
உடனே காண்கிறோம். உலக வர்த்தக மையத்தின் மீதான இரண்டாவது வான்வழித் தற்கொலைப்படை தாக்குதலைப்
பற்றி தெரிவிக்கப்பட்டபின்னர், அமெரிக்க ஜனாதிபதி ஒரு வகுப்பறையில் தொடர்ந்து உட்கார்ந்து கொண்டு ஒரு
குழந்தைகளுக்கான புத்தகத்தை ஏழு நிமிஷங்கள் படித்துக் கொண்டிருப்பதையும், என்ன செய்வதென்று தெரியாமல்
திகைத்து நிற்கும் ஒரு மனிதர் போல் தோற்றமளிப்பதையும் பார்க்கிறோம்.
ஈராக் அமெரிக்காவை தாக்கவில்லை என்றாலும், அதற்கு எந்தத் தொடர்பும்
இல்லை என்றாலும்கூட, பயங்கரவாதத் தாக்குதலில் சதாம் ஹூசைன் ஆட்சி தொடர்புடையது என்ற எண்ணத்தை
மக்களிடையே தோற்றுவிக்கும் தன்மையை, வேண்டுமென்றே புஷ் நிர்வாகம் செப்டம்பர் 11 தாக்குதலை அடுத்து
ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறது என்பதை மூர் சரியான முறையில் விளக்கியுள்ளார்.
அடுத்து விரிவாக்கப்பட்ட தொடர் காட்சிகள் மிகப் பரந்த அளவில் புஷ் குடும்பமும்
செளதி ஆளும் செல்வந்தத் தட்டிற்கும் இடையே உள்ள தொடர்புகளைப்பற்றிக் கூறுகின்றன. இந்த தொடர்புகள்
உண்மையானவையும், முக்கியத்துவம் வாய்ந்தவையும் ஆகும்; அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கை, பொருள்சார்
நலன்களால் உந்தப்படுகிறது என்ற பொது வாதம் -- எண்ணெய், இலாபங்கள், பேராசை இவற்றால் என்பது --
மத்திய கிழக்கில் "ஜனநாயகத்தைக் கொண்டு வருவது", ஈராக்கை "விடுவிப்பது" எனக் கூறப்படும்
பிதற்றல்களுக்கெல்லாம் தக்க நச்சு மாற்று மருந்தாக உள்ளது; ஆனால் இப் பிரிவில் உண்மையில் மிகத் தவறான
குறிப்பைத்தான் மூர் காட்டியிருக்கிறார்.
மிக அரிய நேர்த்தியுடன் அனைத்தையும் திரிப்பவர்களாகவும், புஷ் நிர்வாகத்தையே
கட்டுப்படுத்துபவர்களாகவும் செளதிக்களை பாரன்ஹீட் 9/11 சித்தரிக்கிறது. இது பெரும் தவறான
அறிவுப்பிரயோகமாகும். "செல்வம் கொழிக்கும் அரேபியர்கள்" நாட்டின் கட்டுப்பாட்டை எடுத்து வருகிறார்கள்
அல்லது கூடுதலான செல்வாக்கைப் பெற்றுள்ளார்கள் என்ற கருத்து அமெரிக்க மக்களின் அரசியல்-பண்பாட்டளவிலான
நனவை உயர்த்துவதற்கு உதவாது. அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒர் இரக்கமற்றதன்மை, குற்றஞ்சார்ந்த நிலை,
கொள்ளை முறை இவற்றைக் கொண்டுள்ளது ஆகும். செளதி முடியாட்சி ஒரு அமெரிக்க நலன்களை பாதுகாக்கும்
கைப்பாவை அரசாங்கம் ஆகும்; எவ்வளவு செல்வத்தைப் பெற்றிருந்தாலும், அது சுதந்திரமாக செயல்படும்
தன்மையை பெற்று இருக்கவில்லை.
இவ்விடத்தில் மிகக் குறைவான எதிர்ப்பு முறையை இயக்குனர் கையாண்டிருக்கிறார்;
ஆழ்ந்த, கூடுதலான பகுப்பாய்விற்குப் பதிலாக, எளிதில் விளக்கம் தரக்கூடிய ஒரு உத்தியைக் கையாண்டிருக்கிறார்.
பாரன்ஹீட் 9/11-ல் இத்தகைய குறுக்குவழி கையாளப்பட்டுள்ளது இந்த ஒரு காட்சியில் மட்டும் அல்ல.
செப்டம்பர் 11 தாக்குதல்களுக்கான பின்னணியை, தலிபான் அதிகாரிகள்
அமெரிக்காவிற்கு வருகை தந்து ஒரு எண்ணைய்க்குழாய் பேரம் முடிப்பது பற்றிய நல்ல வெளிப்பாடு உடைய
காட்சிகள் உட்பட, தன்னுடைய கோணத்தில் இருந்து சிலவற்றைக் கொடுத்தபின், மூர் மிகவும் நேரடியாக புஷ்
நிர்வாகம் நியூயோர்க்கிலும் வாஷிங்டனிலும் நிகழ்ந்த துயரமான இறப்புக்களை தன்னுடைய கொடிய அரசியல்
நோக்கங்களுக்கு பயன்படுத்துவதை அம்பலப்படுத்தியுள்ளார்.
நீண்ட காலமாக தீவிர வலதுசாரி மற்றும் சட்டத்தை செயல்படுத்தும் நிறுவன அமைப்புக்கள்
கோரும் கடுமையான அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் அமெரிக்க தேசபக்த சட்டம் தேசியச் சட்ட
மன்றத்தால் இயற்றப்படுகிறது. ஜனநாயகக் கட்சியில் சட்டமன்ற உறுப்பினரான ஜிம் மக்டெர்மூட் (வாஷிங்டன்
பிரதிநிதி) செப்டம்பர் 11 "ஏதேனும் ஒன்றைச் செயல்படுத்த" ஒரு வாய்ப்பு என்று கூறிப்பிடுகிறார்; இதை முழுமையாக
புஷ் நிர்வாகம் பயன்படுத்தி, முன்னோடியில்லாத முறையில் ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதலை, காங்கிரசில்
ஜனநாயகக் கட்சியிடம் முழு ஒத்துழைப்புப் பெற்றுக் கட்டவிழ்த்துவிடுகிறது. முற்றிலும் சட்டத்திற்கு அடிபணிந்து நிற்கும்
குடிமக்களுக்கு எதிராக, மிக அயோக்கியத்தனமான, ஆணவமான முறையில்
FBI
நடந்து கொள்ளும் போக்கின் சில விவரங்களை மூர்
பட்டியலிட்டுள்ளார்.
மார்ச் 2003ல் ஈராக்கிற்கு எதிரான
ஆக்கிரமிப்பு போரை தொடக்கியதன் விளைவுகளை பாரென்ஹீட் 9/11 துல்லியமாக சித்தரித்துள்ளது:
இளம் ஈராக்கியக் குழந்தைகளின் சடலங்கள் (டோனால்ட் ரம்ஸ்பெல்டின் பொறுத்துக்கொள்ள முடியாத
போரைப்பற்றிய ஆணவ உரையான "இந்தப் போர் நாம் எவ்வாறு மனிதகுலத்தைக் காக்கிறோம் என்பதற்கு
உதராணம்" என்ற பின்னணியில்), பேரழிவிற்குட்பட்ட குடும்பங்கள், அமெரிக்கப் படைகளின் நள்ளிரவு
தாக்குதலுக்குட்டபட்ட குடும்பத்தில் பீதியுற்ற பெண்கள், குழந்தைகள் என்ற காட்சிகள் உள்ளன. புஷ் நிர்வாகம்
பேரழிவு ஆயுதங்கள் பற்றியும் ஈராக்கியர்-அல்கொய்தாவிற்கும் இடையே உள்ள தொடர்புகள் பற்றி நிகழ்த்திய
தொடர் பொய்யுரைகள் பற்றியும் திரைப்படம் மிகத்தெளிவான முறையில் அம்பலப்படுத்தியுள்ளது. மேலும்
ஜனநாயகக் கட்சித் தலைமையையும் போருக்கு ஒப்புதல் கொடுத்ததற்காகவும், அமெரிக்கச் செய்தி ஊடகத்தை
அரசாங்கத்தின் பொய்களை திறனாயாமலும், கேள்விக்குட்படுத்தாமலும் வெளியிட்டதற்காகவும் கடுமையாகச்
சாடியுள்ளது.
மூரின் சொந்த ஊரான மிச்சிகனிலுள்ள பிளின்டில் எடுக்கப்பட்ட காட்சிகள்தாம்
படத்திலேயே சந்தேகத்திற்கு இடமின்றிப் பெரும் வலுவைக் கொண்டவையாகும். தனக்குப் பெரிதும்
அறிமுகமானவற்றிற்கு இயக்குனர் திரும்புகிறார். இங்கு திரைப்படம் வேறு தன்மையைக் கொண்டு, "இடது" நடுத்தர
வர்க்கத்தின் வர்ணனையைவிடக் கூடுதலான தரத்திற்கு உயர்கிறது. இங்கு நெருக்கடியான சமுதாய, வர்க்க
கேள்விகள் மிகவும் கூர்மையான நம்பிக்கையூட்டக்கூடிய பாணியில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
ஒருகாலத்தின் மோட்டார் தொழில் பெரும் அமைப்பான ஜெனரல் மோட்டார்சின்
தலைமையிடமாகவும் ஆயிரக்கணக்கான வேலைகளைத் தோற்றுவித்த இடமான பிளின்ட் இப்பொழுது உண்மையில் 50
சதவிகிதம் பேர் வேலையற்ற நிலையில் இருக்கிறது. ஈராக் நகரம் ஒன்று குண்டுவீசப்பட்டு நாசத்திற்குட்டபட்ட
நிலையைத் தொலைக்காட்சியில் கண்டது அவருக்கு தன்னுடைய பகுதியை நினைவுபடுத்தியதாக ஒரு இளைஞர் விளக்குகிறார்.
சிதைந்த வீடுகள், பேரழிவிற்குட்டபட்ட வறுமையால் வாடும் நகரப்பகுதிகள் அவர் கூற்றை மெய்ப்பிக்கின்றன.
அமெரிக்க இராணுவத்தில் "தானாகவிரும்பி" சேருவோர் உண்மையில் பொருளாதார
முறையில் கட்டாயத்திற்குட்பட்டும், பின்னர் கல்வி, அல்லது வேலைக்கான பயிற்சி கிடைக்கக் கூடும் என்ற
நம்பிக்கையில்தான் வாழ்வைப் பணயம் வைத்து சேருகின்றனர் என்ற வாதத்தை பாரன்ஹீட் 9/11
முன்வைக்கிறது. ஒரு கறுப்பு இளைஞர் கூட்டத்தை, அவர்களுடைய உறவினர்களில் எவ்வளவு பேர் இராணுவத்தில்
இருக்கின்றனர் என மூர் கேட்கிறார். அநேகமாக ஒவ்வொருவருமே கையை உயர்த்துகின்றனர்.
மிகத் தெளிவாக கருத்தை விளக்கும் காட்சிகள் ஒன்றில், இரண்டு கடற்படைக்கு ஆள்
எடுப்போர், நகரத்தின் வறுமை நிறைந்த கடைத்தெருப்பகுதி ஒன்றில் எவரேனும் ஏமாந்தவர் தன்னுடைய
பெயரையும் விலாசத்தையும் கொடுப்பரோ என அவநம்பிக்கையுடன் அலைந்து திரிதல் காட்டப்படுகிறது.
ஈராக்கில் துருப்புக்களுடைய உளப்பான்மையும் அறநெறியுணர்வும், மூரினால் நல்ல
கவனத்திற்குட்பட்டுள்ளன. இவருடைய படம் நிறைய கருத்துக்களைத்தான் அடக்கியுள்ளது: அமெரிக்க துருப்புக்கள்
ஈராக்கிய சாதாரண மக்களை அச்சுறுத்துவதும் அவர்களை திட்டுவதையும், கைதிகளை பெரும் அவமானத்திற்கு
உட்படுத்துவதையும் மனரீதியான பாதிப்பிற்குட்பட்டுள்ள நிலையையும் நன்கு நிரூபிக்கிறது. (ஒரு இரவுச்
சோதனையின்போது உலோகச்சத்தம் வெளிவந்தனைக் கேட்கும்பொழுது இது
"மிகச்சிறந்த படப்பிடிப்பு"
என்று ஒரு அமெரிக்கப் படைவீரர்
கூறுகிறார்) இவை அனைத்தும், மிருகத்தனமான காலனித்துவ முறையிலான போர்முறையில், தவிர்க்கமுடியாத
மிருகத்தனமான விளைவு ஆகும். தங்கள் நிலைமை பற்றியும், தங்குடைய செயல்கள் பற்றியும் சிந்திப்பவர்களையும்,
அதையொட்டி குற்ற உணர்வையும் வெட்கத்தையும் கொள்ளுபவர்களையும் நாம் காண்கிறோம்; ஒரு சிறுவயது
படைவீரர் கேமராவை நோக்கிக் கூறுகிறார்:"மற்றொரு உயிரைக் கொல்லும்பொது உங்களுடைய ஆன்மாவில்
ஒருபகுதியும் அழிந்து படுகிறது." மற்றொருவர் கூறுகிறார்: "ரம்ஸ்பெல்ட் இங்கு இருந்தால், ராஜிநாமா
செய்யுங்கள் என நான் கோருவேன்."
வாஷிங்டனில் உள்ள வால்டர் ரீட் மருத்துவமையத்திலிருந்து கொடூரமான காட்சிகள்
ஈராக்கிலிருந்து திரும்பிய அமெரிக்க வீரர்களைப் பற்றி, பலரும் இளைஞர்கள், கால்களோ கைகளோ,
தோள்களோ இல்லாமல் உள்ளவை, முகமலர்ச்சியுடன் புஷ் பெரும் செல்வம் கொழிக்கும் பணக்காரர்களிடையே
நிதிதிரட்டும், இடிபோன்ற சிரிப்பு, ஆரவாரம் இவற்றிற்கிடையே அவர் அறிவிக்கும் "இது ஒரு செல்வம்
வைத்திருப்போர், கூடுதலான செல்வம் வைத்திருப்போர் கூட்டம். சிலர் உங்களை ஆளும் செல்வந்தத் தட்டு என
அழைக்கின்றனர்; ஆனால் நான் உங்களை என்னுடைய தளம் எனக் கூறுவேன்" என்று கூறுவதற்கிடையே வருகின்றன.
ஈராக் போரிலிருந்து திரட்டக்கூடிய பெரும் இலாபங்கள் பற்றிய ஒரு கூட்டம்
பெருவர்த்தகக் குள்ளநரிகளை ஈர்க்கிறது. "பில்லியன்கள், பில்லியன் டாலர்கள் என்ற அளவில் பணம்
ஈட்டப்படவேண்டும்" என்று ஒரு குரல் மேடையிலிருந்து முழங்குகிறது. ஒரு பங்கு பெறுபவர் குறிப்பிடுகிறார்,
இப்போர் "வர்த்தகத்திற்கு மிக நல்லது, மக்களுக்குத் தீமை பயப்பது."
பாரென்ஹீட் 9/11 உள்ளத்தை உடைக்கும் உண்மையையும் திரட்டியுள்ளது.
பிளின்டில் உள்ள பொருளாதார நிலைமைகள் பற்றிய ஆய்வின் ஒரு பகுதியாக, மூர்
Career Alliance
என்ற ஒரு வேலைப்பயிற்சி, வேலைப் பெருக்க நிறுவனத்தின்
Lila Lipscomb
ஐப் பேட்டி காண்கிறார். தன்னை "பழமைவாத
ஜனநாயகக் கட்சியாள்" என்று விவரித்து உற்சாகத்துடன் கொடியசைக்கும் நாட்டுப்பற்று மிக்கவர் என்று
கூறிக்கொள்ளும் லிப்ஸ்கோமிற்கு ஈராக்கில் இராணுவத்தில் பணி புரியும் ஒரு மகன் இருக்கிறார். நாம்
அவ்வம்மையாரை முதலில் சந்திக்கும்போது, போரைப் பற்றி முழுமையாக ஆதரவைத் தெரிவிக்கிறார்.
மீண்டும் லிப்ஸ்கோமைச் சந்திக்கும்போது பெருந்துன்பம் அவரை ஆட்கொண்டுவிட்டது.
அவருடைய மகன் ஈராக் போரில் கொல்லப்பட்டுவிட்டார். சிறிதும் விட்டுக்கொடுக்காத நேர்மையான முறையில்
அவர் தன்னுடைய கடந்தகால நினைத்துப்பார்க்கா தேசபக்தியை ஆராய்கிறார்; நிர்வாகத்தின்பால் கொண்டிருந்த
நம்பிக்கை பற்றி ஆராய்கிறார்; அரசாங்கத்தின் நேர்மையற்ற போக்கு நாட்டைப் போருக்கு
இட்டுச்சென்றுவிட்டதை பெருகிய முறையில் உணர்கிறார்.
ஈராக்கியப் பெண்எதிர்ப்பாளர் ஒருவருடன் லிம்ஸ்கோப்
சண்டைபோடுவதாகக் காட்டும் மூரைக் குற்றம் சாட்டுகின்ற ஒரு போர் ஆதரவாளரை வெள்ளைமாளிகைக்கு
வெளியே அவர் எதிர்த்து நிற்கிறார்.
இறுதிக்காட்சியில், லிப்ஸ்கோம்ப் தன்னுடைய மகனின் கடைசிக் கடிதத்திலிருந்து
போரைக் கண்டனம் செய்யும் பகுதியைப் படிக்கிறார்: "இந்த புஷ்ஷின் மனத்தில், தன் தந்தையைப் போல்
இருக்கவேண்டும் என்ற எப்படிப்பட்ட கெட்ட நினைப்பு? இந்நபரை அவர்கள் மீண்டும் தேர்ந்தெடுக்க மாட்டார்கள்
என்று நினைக்கிறேன்." இவ்வம்மையாருடைய கணவர் ஆணித்தரமாகக் கேட்கிறார், "[அவன்
இறந்தான்]
எதற்காக? எதற்காக இறந்தான்?" இக்காட்சி மிகவும் நெஞ்சை உருக்குவதாக உள்ளது.
இறுதியில் குரல் வடிவில், மூர் சமுதாயப் பிரச்சினைகளுக்கு வலிமையுடன்
திரும்புகிறார்; தொழிலாள வர்க்கத்தின் மகன்களும், மகள்களும் மிகப் பெரும் செல்வந்தருக்கு நலம் தரக்கூடிய
ஒரு போரை நடத்துவதற்காக உள்ள நிலை மீண்டும் எழுப்பப்படுகிறது. இவர் பிரிட்டிஷ் இடதுசாரி எழுத்தாளர்
ஜோர்ஜ் ஓர்வெலின் மேற்கொள் ஒன்றில் கூறப்பட்டுள்ள இச்செய்தியுடன் முடிக்கிறார்: "போர் வெற்றி பெறுவதற்காக
நடத்தப்படுவது அல்ல; அது தொடர வேண்டும் என்பதற்காகத்தான் நடத்தப்படுகிறது....சமுதாயத்தின் அடுக்குகள்
ஏழ்மை, அறியாமை இவற்றைக் கொண்டுதான் இயக்கப்பட முடியும். கொள்கையளவில், போர் முயற்சி சமுதாயத்தைப்
பட்டினி விளிம்பில் நிறுத்திவைக்கத்தான் எப்பொழுதும் திட்டம் இடப்படுகிறது. ஆளும் குழு தன்னுடைய சொந்த மக்களுக்கு
எதிராக நடத்துவதுதான் போர், அதன் இலக்கு வெற்றி அல்ல...மாறாக சமூக அமைப்பை உள்ளது போலவே
காத்திடுவதுதான்."
சுருங்கக் கூறினால், பாரன்ஹீட் 9/11 முதலாளித்துவ அமைப்பை பற்றிக்
கடுமையாகச் சாடிய வகையில் முடிவடைகிறது; சொற்கள் பயன்படுத்தப்படவில்லை என்றாலும், எவ்வாறு
முதலாளித்துவ அமைப்பு சமூக நெருக்கடிகளை தன்னுடைய ஏகாதிபத்தியப் போரின் மூலம் ஓரளவு கட்டுப்படுத்துகிறது
என்ற வகையைத் தெரிவிக்கிறது. ஒரு திரண்ட பார்வையாளர்களுக்கு இத்திரைப்படம் ஒரு அசாதராணமான
விஷயத்தைக் கொண்டுள்ளது; உண்மையில் ஒரு தற்கால படத்திற்கே இது ஒரு அசாதராண இருப்பைக் கொண்டுள்ளது.
உள்நாட்டிலேயே வசூலில் 100 மில்லியன் டாலர்களைத் தாண்டிவிட்டது என்று இப்பொழுது கூறப்படுகிறது,
அமெரிக்காவில் இதன் பொருள் 15 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர் என்பதாகும் அல்லது 14 வயதிற்கு
மேற்பட்டவர்களில் 15ல் ஒருவர் பார்த்துள்ளார் என்று பொருள் ஆகும். சில வெறிபிடித்த வலதுசாரிகள்
இப்படத்தைத் திரையிடும் அரங்குகள் மூடப்படவேண்டும் எனக் கூறுவதில் வியப்பு இல்லை.
மூரின் படைப்பு, மிகச்சிறப்பான முறையில் கூறவேண்டும் என்றால், அமெரிக்காவில்
வளர்ந்து கொண்டு இருக்கும் சமுதாய கோபத்தை ஆழமாக்கியுள்ளது; திரைப்படத் தயாரிப்பாளர் கருத்தை அது
ஒட்டியதாக இல்லாமல் போனாலும் கூட, இதற்கு அரசியல் வடிவு கொடுக்கப்படவேண்டும்.
கலையும் அரசியலும்
மைக்கல் மூர், பல பேட்டிகளில், தான் ஒரு கலைஞர் என்றும்,
படத்தயாரிப்பாளர்தான் முதலிலும் முக்கியமான தன்மையிலும் என அடிக்கடி வலியுறுத்திக் கூறியுள்ளார். இது
பொதுவாக புத்திசாலித்தனமானது அல்லது தவிர்க்கும் கருத்துரை என்று விளக்கம்தரப்படுகிறது. ஒருவேளை
அத்தகைய கருத்து, நடக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஒருபுற ஆதரவைக் காட்டுகிறது என்ற குற்றச்சாட்டைத்
தவிர்ப்பதற்காகக் கூட கூறப்பட்டிருக்கலாம். அதன் விளைவாக தன்னுடைய படத்தின் பரந்த அடுக்குப்
பார்வையாளருடன் ஒரு சமரச முயற்சியும் மேற்கொள்ளப்படலாம்; ஆனால் நிகழ்வைப் பதிவு செய்த முறையிலோ,
தெரிந்தோ தெரியாமலோ, ஒரு முக்கியமான பிரச்சினையை இது தட்டியெழுப்பியுள்ளது.
ஓர் அரசியல்வாதி, வர்ணனையாளர் என்ற முறையில், மூர் வருந்தத்தக்க முறையில்
ஒரேநிலையில் நின்றதில்லை. அவர் ஊசலாடுகிறார்; உதாரணமாக ஜனநாயகக்கட்சியினரை அவர்கள் முதுகெலும்பு
இல்லாமல் இருப்பதற்காக கடுமையாகக் கண்டனம் செய்வது அக்கட்சியின் மரபுவழி ஆதரவாளர்களை கட்சியின் கட்டுப்பாட்டை
"மீண்டும் எடுத்துக் கொள்ளுவது" என்ற இரு நிலைப்பாடுகளுக்கும் இடையே ஊசலாடுகிறார். இந்த ஆண்டு
தொடக்கத்தில் அவர் நேட்டோவின் தளபதியாக இருந்து மிருகத்தனமான தாக்குதலை சேர்பியாமீது நடத்திய, பழைய
இராணுவத் தளபதி வெஸ்லி கிளார்க்கின் ஜனநாயகக் கட்சியின் வேட்பு மனுவுக்குக் கொடுத்த ஆதரவு முற்றிலும்
கண்டிக்கத்தக்கதே ஆகும்; இது மூர் மிக வலுவற்ற நிலையில், நடைமுறைக்கு இணங்க நடந்துகொண்டதை, மிகச்சிந்திக்காத
முறையில் ஆதரவு கொடுத்ததைக் காட்டுகிறது.
ஆயினும், ஒரு நேர்மையான கலைஞன் என்ற முறையில், தன்னுடைய நனவான அரசியல்
பார்வையின் வரம்புகளை மீறிப் பார்வையைக் கொள்ளும் கட்டாயத்திற்கு மூர் நிர்பந்திக்கப்பட்டார். சித்திரங்களை
படைத்ததில் அந்தத் தன்மையைக் கொண்டுள்ளது. ஜனநாயகக் கட்சியின் தலைமைக்கு உதவியும் வசதியும் கொடுக்கும்
படம் அல்ல இது. கடந்த நான்கு ஆண்டுகளின் வரலாற்றைத் துருவி ஆராய்ந்த முறையில், மூர் ஜனநாயகக் கட்சி
இருகட்சி உத்தியை பெரிதும் உடன்பாட்டுடன் கொண்ட அமைப்பு என்று வெளிப்படுத்துவதுடன், ஒரு ஆளும் செல்வந்தத்
தட்டின் ஒருமித்த கருத்து எவ்வாறு அமெரிக்கா உலக ஆதிக்கத்தை கொள்ளவேண்டும் என்ற கருத்தில் தோய்ந்துள்ளது
என்பதையும் புலப்படுத்துகிறார்.
பிளின்ட், மற்றும் அது போன்ற சமூகங்களை நேர்மையாகக் கண்டதில், மூர்
அமெரிக்க தொழிலாள வர்க்க இளைஞர்களுக்கு இப்பொழுதுள்ள சமுதாய மற்றும் பொருளாதார ஒழுங்கில்
வருங்காலம் இல்லை என்பதை உட்குறிப்பாக அல்லது நேரடியாக ஒப்புக்கொள்ளவேண்டிய கட்டாயத்திற்கு
உட்பட்டுள்ளார். இதற்கும் அப்பால், மிகவும் நம்பிக்கையுடன் அவர் ஏகாதிபத்தியப் போர் வறுமையை
பயன்படுத்திக்கொண்டு அதை இரையாகவும் கொள்ளுகிறது என்பதை தெளிவாக வாதிட்டுள்ளார். அதேநேரத்தில்
போர் உள்நாட்டில் உள்ள வர்க்கப்போராட்டத்தை அமுக்குவதற்கு ஒரு வடிகாலாகப் பயன்படுகிறது என்பதையும்
குறிப்பிடுகிறார். இந்த நுண்மான்நுழைபுலத்தின் உட்குறிப்புக்கள் புரட்சிகரமானவையாகும்.
அரசியல், வரலாற்று விஷயங்களை நேரடியாக பிரதிபலிக்கும் படைப்புக்களை
தோற்றுவிக்கும்போது, ஒரு கலைஞர், மிக நேர்மையான கலைஞரும் தன்னுடைய வரம்புகளை முற்றிலும் கடந்துவிட
இயலாது. தீர்வுகாணப்படாத வினாக்கள் கலையுலக படைப்புக்களில் மீண்டும் தவிர்க்கமுடியாமல் வந்தடையும். இது
மூரின் படைப்பிலும் காணக்கூடியதுதான்.
பாரென்ஹீட் 9/11 படத்தின் சிந்தனை நிறைந்த பிளின்ட் பகுதிக்
காட்சிகளுக்கும் அதன் சில மேம்போக்கான எரிச்சலூட்டும், நகைச்சுவை கிட்டத்தட்ட மயக்கவைக்கும்
காட்சிகளுக்கும் இடையே ஒரு நெருக்கடி நிலவியுள்ளது. அமெரிக்காவில் உழைக்கும் மக்கள்பால் உள்ள ஆழ்ந்த
பரிவுணர்விற்கும். அமெரிக்காவின் பெருவர்த்தக இருகட்சி முறையில் ஒன்றான ஜனநாயகக் கட்சின் இழிந்த வகை
சமரசம் கொண்டுள்ள "தாராளவாத" பிரிவினர்பால் சந்தர்ப்பவாத நோக்குநிலைக்கும் இடையே ஒரு பதட்டம்
உள்ளது. அனைத்து வகை தேசிய மற்றும் பிற இனப் பழிப்புவெறிகளுக்கும் விரோதப்போக்கு உடைய சோசலிச
நம்பிக்கைகளுக்கும், அமெரிக்காவின் மக்களை இழிவானமுறையில் கவர்ச்சி செய்யும் தேசிய உணர்வுக் கருத்தையூட்டும்
சிந்தனையோட்டத்திற்கும் இடையே பதட்டம் நிலவுகிறது.
வழிவகையிலும், அழகியல் கண்ணோட்டத்திலும் எங்கு தொடங்க வேண்டுமோ, அங்கே
அது முடிவுறுகிறது என்பது பாரென்ஹீட் 9/11 ன் இடர்ப்பாடுகளில் ஒன்றாகும். செளதி அரேபியா
அல்லது புஷ் குடும்பம் இவற்றின் வளமையான நிலைபற்றி கூடுதலான குவிப்பு மட்டும் இதன் முக்கியத்துவத்திற்குக்
காரணம் அல்ல; அமெரிக்காவில், மிச்சிகனில் தோன்றும் காட்சிகளும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும்.
ஈராக்கில் தோன்றியுள்ள பெரும் கொடூரங்கள் புஷ்ஷின் தனிப்பட்ட பேராசை அல்லது முட்டாள்தனத்தினால்
விளைந்தவை அல்ல; உண்மையில் அவை இருந்தாலும்; அவை அமெரிக்கச் சமுதாயம் ஒட்டுமொத்தத்தையும்
முழுமையாகச் சூழ்ந்துள்ள சமூக முரண்பாடுகளை வெளிப்படுத்துகின்றன
மூரின் திரைப்படத்தில் இன்னும் கூடுதலான நோக்கத்தில் கவனிக்கப்பட்டிருக்க
வேண்டியது, எத்தன்மையான சமுதாயத்தில் இருந்து ஈராக் போர் போன்ற பெரும் கொடூரமான நிகழ்ச்சி
விளைந்திருக்கக் கூடும் என்பது பற்றிய தொடர் சீரான பகுப்பு ஆய்வு ஆகும். ஒரு ஏகாதிபத்திய படையெடுப்பிற்கு
எத்தருணத்திலும் பொய்யையும் போலிக்காரணங்களையும் கூற முற்படும் ஆட்சியாளர்கள் இரண்டாந்தர இடத்தைக்
கொள்ளுவர். புஷ், கோர் அல்லது ஜோன் கெர்ரி, எவராயினும் அமெரிக்கா உலகத்தை ஆதிக்கம்
கொள்ளவேண்டும் என்ற உந்துதலே தொடரும். புஷ்ஷை அரக்கத்தன்மையுடையவராகத் தனிப்பட்ட முறையில்
காட்டுவது முக்கிய வினாவைத் தவிர்ப்பது போல் ஆகிவிடும்; அதாவது வரலாற்றளவில், முறையாக அமெரிக்க முதலாளித்துவம்
திவாலாகி உள்ளது என்பது; அதைப்பற்றி மூரின் படைப்பு மிகவும் நேர்மையாக சுட்டிக்காட்டியுள்ளது.
படத்தயாரிப்பாளரின் சங்கடம் அவருடையது மட்டும் அல்ல. தொழிலாள வர்க்க மக்கள்
பிளின்ட்டில் பட்ட கடுமையான அனுபவங்களை மூரும் கடந்துள்ளார்; அது அமெரிக்கா முழுவதும் 1970 களிலும்
1980 களிலும் இருந்தது; தொழிற்சங்கங்களால் மிகப்பரந்த அளவில் குறைக்கப்பட்ட, கைவிடப்பட்ட தொழிலாளர்
நிலை, அதையொட்டிய அழிவுகரமான பொருளாதா, சமுதாய, அறநெறிமுறையிலான விளவுகள். அந்த அனுபவத்தின்
வரம்புகளும் அவருடைய வரம்புகளும் தீர்வு காணப்படாத அரசியல் பிரச்சினைகளை அமெரிக்க தொழிலாள வர்க்கம்
எதிர்கொண்டுள்ள நிலையைக் காட்டுகின்றன; அதில் தொழிற்சங்கங்களின் தன்மை, ஜனநாயகக் கட்சியின் இயல்பு
மற்றும் தாராண்மைக் கொள்கையின் வரலாற்றுப் பங்கு ஆகியவையும் அடங்கியிருக்கின்றன.
இங்கிருந்து மூர் எங்கு செல்லுவார்? நம்முடைய பார்வையில், கலைஞர் என்ற முறையில்
அவருடைய மேலதிக பரிணாமவளர்ச்சி அவருடைய அறிவார்ந்த மற்றும் அரசியல் வளர்ச்சியைப் பொறுத்து அமையும்.
முதலில் தன்னுடைய உள்ளார்ந்த சோசலிச நம்பிக்கைகளை அவர் வெளிப்படையாக்கவேண்டும். படத்தயாரிப்பாளர்
என தன்னையே மீண்டும் கூறிக்கொள்ளாதிருப்பாரானால் அமெரிக்க முதலாளித்துவம் பற்றிய வெளிப்படையான,
நேர்மையான விமர்சனம் தவிர்க்க இயலாதது, அல்லது இன்னும் மோசமான முறையில், பின்னால் விழுந்து, அவருடைய
படைப்பு எதிர்வகையில், அவர் கொண்டுள்ள ஆழ்ந்த கருத்துக்களுக்கு முரணாக அமையும் நிலை ஏற்படும்.
மூர், மிக அதிக அளவில் படித்துச் சிந்தித்தும் இருந்திருக்கிறார் என்பது வெளிப்படை;
அதன் அடிப்படையில் மிக முக்கியமான முன்னேற்றத்தை இப்படைப்பில் கண்டிருக்கிறார். மிக, மிக அதிக தூரத்தை
அவர் கடந்துள்ளார். தன்னுடைய சிந்தனையிலும், கலையிலும் உள்ள பதட்டங்களுக்கு அவர் தீர்வு காண்பார் என்று
ஒருவர் நம்ப முடியும்.
Top of page |