:
செய்திகள்
ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு :
ஈராக்
Saddam Hussein in court: a show trial made in the USA
நீதிமன்றத்தில் சதாம் ஹூசைன்: அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட நாடக விசாரணை
By Peter Symonds
5 July 2004
Use this version
to print |
Send this link by email |
Email the author
சென்ற வியாழக்கிழமையன்று சதாம் ஹூசைன் நீதிமன்றத்தில், சிறிது நேரம் காட்சியளித்தது,
அரசியல் நாடக விசாரணையின் அனைத்து சூழ்ச்சிகளையும் உள்ளடக்கியதாகும். புஷ்-ன் உள்நாட்டு, அரசியல் எதிர்காலத்தையும்,
ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்கள் போரில் சிக்கிக்கொண்டிருப்பதாலும் ஏற்பட்டுள்ள உற்சாகக் குறைவை
சரிகட்டுகின்ற முயற்சியாக, அமெரிக்க நிர்வாகம், தனது உள்ளூர் ஒத்துழைப்பாளர்களது உதவியோடு இந்த நாடகத்தை
நடத்தியிருக்கிறது.
அந்த உண்மையான வடிவத்திற்கேற்ப, அமெரிக்க மற்றும் சர்வதேச ஊடகங்கள்
தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள சிறப்பான பங்களிப்பான, இந்த விவகாரம் தொடர்பாக, ஈராக்கியர்களே ஈராக்கியருக்காக
நீதி வழங்குவதாக, பாசாங்கை நிலைநாட்ட உதவுவதுதான். சதாம் ஹூசைனின் குற்றங்களில் அமெரிக்காவும்,
இதர பெரிய வல்லரசுகளும் உடந்தையாக, செயற்பட்டிருப்பது குறித்து அவை தொடர்ந்து முற்றிலும் மெளனம்
சாதித்தன.
உலக சோசலிச வலைத் தளம், சதாம் ஹூசைனுக்காக வாதாடவில்லை, அவர்
கொடூரமான கருணையற்ற சர்வாதிகாரி, ஈராக் மக்களுக்கெதிராக கொடூரமான குற்றங்களை புரிந்தவர் என்பதில்
சந்தேகத்திற்கு இடமில்லை. ஆனால், வயதாகிக் கொண்டுவரும் அந்த சக்திவாய்ந்த மனிதர் அவர் மீது
குற்றம்சாட்டியிருப்பவர்களைவிட அதிக நேர்மையாகவும், கண்ணியமாகவும் நடந்து கொண்டிருக்கிறார், அந்த நீதிமன்றத்தின்
சட்டபூர்வமான தன்மையை அவர் ஏற்றுக்கொள்ளமால் புறக்கணித்தார் அல்லது அமெரிக்கப் படையெடுப்பையும் ஏற்றுக்
கொள்ளவில்லை. "அந்த குற்றவாளி, புஷ் நடத்துகின்ற நாடகம்தான் இது என்பது, உங்களுக்கே தெரியும், தன்னுடைய
[தேர்தல்]
பிரச்சாரத்தில் தனக்கு உதவுவதற்காக, இந்த நாடகத்தை அவர்
நடத்திக்கொண்டிருக்கிறார்". என்று நீதிபதியை பார்த்து, மிக அலட்சியமாக அவர் கூறினார்.
30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த விசாரணைகள், ஆரம்பத்திலிருந்து இறுதிவரை
எல்லா அம்சங்களிலும், "அமெரிக்காவால் தயாரிக்கப்பட்டவை" என்ற முத்திரை குத்தப்பட்டிருந்தது. பாக்தாத்தின்
புறநகர் பகுதியிலுள்ள, அமெரிக்க இராணுவத்தளம் ஒன்றில் தற்காலிகமாக உருவாக்கப்பட்ட நீதிமன்றத்தில் ஹூசைன்
தோன்றினார், பின்னணியில் அமெரிக்க ஹெலிகாப்டர்களின், பறக்கும் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது. அப்போது அடையாளம்
கூறப்படாத இடங்களில் இருந்து அமெரிக்க போர்வீரர்கள், அவரையும் அவரது ஆட்சியின் இதர 11 மூத்த தலைவர்களையும்
தோற்றத்திற்காக கொண்டு வந்தனர், ஈராக் போலீசாரால் அவர்கள் நடத்திக் கொண்டுவரப்பட்டனர்.
கைதிகள் இப்போது, ஈராக்கியர் காவலில் உள்ளனர் என்ற பாவனையை
ஸ்தாபிப்பதுதான் இந்த நீதிமன்ற தோற்றத்திற்கு உடனடி நோக்கமாகும். ஜூன் 28-ல் சம்பிரதாய முறையில்,
இறையாண்மை ஒப்படைக்கப்படுவதற்கு பலவாரங்களுக்கு முன்னர், புஷ் நிர்வாகம் புதிய இடைக்கால ஈராக்
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் ஹூசைன் இருக்கமாட்டார் என்று வலியுறுத்திக் கூறிவந்தது. ஆனால் ஆக்கிரமிப்புக்கு
முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டதாக கூறப்பட்டதற்கு பின்னர், ஹூசைன் போர் கைதி
(PoW) என்கிற
முறையில் அவரை காவலில் வைத்திருப்பதற்கு எந்தவிதமான, சட்ட அடிப்படையும் இல்லை. எனவே ஹூசைன்
பெயரளவில் ஈராக் நீதிமன்றத்தில் ''ஒப்படைக்கப்பட்டார்'', அன்றைய விசாரணை முடிந்ததும், அமெரிக்க
இராணுவ சிறைச்சாலைக்கே அழைத்துச் செல்லப்பட்டார்.
ஒரு பெயர் குறிப்பிடாத ஈராக் நீதிபதி பெயருக்காக, விசாரணையை நடத்தினார்,
அமெரிக்க அதிகாரிகள் கட்டுப்பாட்டில் அந்த விசாரணை நடந்தது தெளிவாகத் தெரிந்தது. சிறிய மற்றும் கவனமாக
சோதிக்கப்பட்ட பார்வையாளர்கள்தான் அனுமதிக்கப்பட்டனர். அமெரிக்க இராணுவ, சீருடை அணிந்தவர்கள் யாரும்
அங்கு இல்லை, ஆனால் நியூயோர்க் டைம்ஸ் விளக்கியிருப்பதைப் போல்: "புதிய ஈராக் அரசாங்க
அதிகாரிகள் மூன்று அமெரிக்க நிருபர்களோடும், மற்றும் மூன்று அமெரிக்க அதிகாரிகளோடும் அமர்ந்திருந்தனர்:
இரண்டு வக்கீல்கள், ஈராக் நீதிபதிக்கு ஆலோசனை கூறிக்கொண்டிருந்தனர், மற்றும் ஒரு அமெரிக்க கடற்படை அட்மிரல்
அந்த நீதிமன்றத்தின் பிரதிநிதியாக, அரைச் சட்டை விளையாட்டு உடுப்பில், கலந்து கொண்டார்".
ஊடகங்கள் தகவல் சேகரிப்பது மிகக் கடுமையாக, கட்டுப்படுத்தப்பட்டது. நீதிமன்றத்தில்
எந்த ஈராக் நிருபரும் அனுமதிக்கப்படவில்லை. ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட வீடியோ படத்தில் ஒலி வரவில்லை.
மத்திய கிழக்கு பகுதி செய்தி சேகரிப்பில் நிபுணரான
Robert Fisk, இன்டிபென்டனில் விளக்கியுள்ளதைப்போல்,
அந்த வீடியோ சுருளை அமெரிக்க அதிகாரிகள் குழு ஒன்று, தணிக்கை செய்த பின்னர்தான் ஆடியோ வெளிவந்தது.
நீதிமன்றத்தில் இருந்த, ஒரு அமெரிக்க தொலைக்காட்சிக் குழு உறுப்பினர் பின்னர்
Fisk- இடம்
கூறினார்: "அவர்கள் அந்தக் காட்சியை, நடத்திக் கொண்டிருந்தார்கள். அமெரிக்கர்கள், இந்த விசாரணையில்
எதை உலகம் பார்க்கவேண்டும் எதை பார்க்கக் கூடாது என்ற முடிவை செய்தார்கள்--- அது ஒரு ஈராக்கியர்
விசாரணையாக, இருக்க வேண்டும் என்பதற்காக, நடத்தப்பட்டது. நீதிமன்றத்தில், ஒரு பிரிட்டீஷ் அதிகாரி
இருந்தார், அவரது படத்தை காட்ட எங்களை அனுமதிக்கவில்லை. நீதிமன்றத்தில் இருந்த மற்றவர்கள் அமெரிக்க
துருப்புக்கள், அவர்கள் நீதிமன்றத்தில் 'குடிமக்களாக' தோன்ற வேண்டும் என்பதற்காக, அவர்கள் சீருடை அணியாமல்
சாதாரண உடுப்பில் வருமாறு கட்டளையிடப்பட்டனர்".
சதாம் ஹூசைனுக்கு வாதாட வக்கீல் எவரும் இல்லை என்பது இந்த மோசடி
விசாரணையை மேலும் அம்பலப்படுத்தியது. தலைமை வகித்த நீதிபதி மிகவும் பகட்டாரவாரமாய், ஹூசைனிடம்
நீங்கள் உங்கள் தரப்பு வக்கீல் யாரையாவது வைத்துக்கொள்ள முடியுமா என்று கேட்டார், அதே நேரத்தில்
ஹூசைனின் மனைவியும், மகன்களும் ஏற்பாடு செய்துள்ள வக்கீல்கள் குழு தங்களது கட்சிக்காரரை சந்திக்க
முடியவில்லை, அல்லது அரசுதரப்பு குற்றச்சாட்டு ஆவணங்களைப் பெறமுடியாதிருந்தனர். அவ்வழக்கறிஞர்கள்
அமெரிக்கா நியமித்துள்ள தலைவர்களிடமிருந்து கொலை மிரட்டல்கள் தங்களுக்கு வந்து கொண்டிருப்பதாக குற்றம்
சாட்டினர், ஈராக்கில் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று அவர்கள், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன்
மற்றும் பெல்ஜியத்திலுள்ள சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திற்கு மனு செய்திருக்கின்றனர். ஹூசைனை சந்திப்பதற்கு
அமெரிக்க அதிகாரிகள் அனுமதிதர மறுத்திருப்பது குறித்து அமெரிக்காவில் அந்தக் குழுவினர் ஒரு வழக்கு தாக்கல்
செய்திருக்கின்றனர்.
வழக்கறிஞர்கள் குழுவிற்கு தலைமை வகிக்கும் ஜோர்தான் வழக்கறிஞர்
Mohammed Rashdan,
சென்றவாரம் நடைபெற்ற விசாரணைகளை கண்டித்திருக்கிறார்:
"கேலிக்கூத்தான (அந்த) விசாரணை ஜனநாயகம் எதுவும் இல்லை
என்பதை எடுத்துக்காட்டுகின்றது. அங்கு ஒரு வழக்கறிஞர் இல்லாமல், அவரிடம் அவர்கள் எந்தக் கேள்வியும்
கேட்டிருக்க முடியாது.... சட்ட மீறல்கள் நடப்பதை தெளிவாக நாங்கள் காணமுடிகிறது. இது ஒரு நியாயமான
விசாரணையாக, இருக்குமென்று கூறப்படுவது அடிப்படை இல்லாதது.... அவர்கள் உண்மையை வெளியே கொண்டு,
வருவதற்கு பயந்து கொண்டிருக்கிறார்கள். நியாயமான விசாரணை ஜோர்ஜ் புஷ் மீது குற்றம் சாட்டுவதாக
அமைந்துவிடும். முதலில் அவர் ஈராக்கில் நுழைந்தது சட்டபூர்வமானதா இல்லையா என்பதை நிரூபித்தாக வேண்டும்"
என்று குறிப்பிட்டார்.
ஒரு கங்காரு நீதிமன்றம்
''ஈராக் சிறப்பு நீதிமன்றத்தின்'' மோசடித்தன்மையை ஹூசைன் நீதிமன்றத்தில்
ஆஜராகும் நாடகம் வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றது. சென்ற ஆண்டு அமெரிக்க, இடைக்கால கூட்டணி
நிர்வாகமும் (CPA),
அதன் பொம்மை ஈராக் ஆளும் சபையும்
(IRC) இதை
அமைத்தது. அந்த இரண்டும் முன்னாள், சேர்பிய அதிபர் சுலோபோடான் மிலோசெவிக் மீது விசாரணை
நடைபெற்று வரும் முன்னாள் யூகோஸ்லாவியாவிற்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்ற பாணியில் ஐ.நா
கட்டளைப்படி, நீதிமன்றம் ஸ்தாபிக்கப்படுவதை பிடிவாதமாக எதிர்த்து வந்தன.
வெளியிலிருந்து எவரும் நீதிமன்றத்தை ஆராய்வது, மற்றும் கட்டுப்படுத்துவது கண்டு
அஞ்சிய புஷ் நிர்வாகம், சுதந்திரம் என்ற தோற்றம் கூட இல்லாத ஒரு நீதிமன்றத்தை அமைத்திருக்கிறது. அது
முற்றிலும் வாஷிங்டன் செலவில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதன் செயல்பாட்டு அம்சம் ஒவ்வொன்று குறித்தும்,
குறைந்தபட்சம் 50 அமெரிக்க அதிகாரிகள் குழு ''ஆலோசனை'' கூறிக் கொண்டிருக்கிறது.
FBI தலைமையில்,
அமெரிக்க போதைப்பொருள், புகையிலை, துப்பாக்கி முதலிய ஆயுதங்கள் தொடர்பான குழு புலன் விசாரணையில்
ஈடுபட்டிருக்கிறது. நீதித்துறை வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டுக்களை உருவாக்குவதில் சம்பந்தப்பட்டிருக்கின்றனர்.
சென்ற டிசம்பரில் IRC-க்கு
ஒரு நீண்ட குறிப்பை, அமெரிக்காவை தளமாக கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பு
(HRW) அமைப்பு அனுப்பியிருந்தது. அந்தக் குறிப்பில், மிக,
கவனமாக, அமைக்கப்பட்டுள்ள நீதிமன்றத்தின் சட்டபூர்வமான, தன்மைகுறித்து, ஆட்சேபனை தெரிவித்திருக்கின்றது.
சர்வதேச சட்டத்திற்கேற்ற வகையில் அதை கொண்டு வருவதற்காக பல திருத்தங்களை ஆலோசனையாக தெரிவித்தது.
IRC-
யோ
அல்லது அமெரிக்க ஆக்கிரமிப்பு நிர்வாகமோ அந்த கடிதத்தை பொருட்படுத்தவில்லை. தனது ஆட்சேபனைகளை
ஜனவரியில் தெரிவித்த HRW,
அமெரிக்கா, "'நீதிமன்றம் அமைக்கப்படுவதற்கான சர்வதேச மனித நேய
சட்ட அடிப்படையில் எதையும் ஸ்தாபிக்கவில்லை'' என்றும் அதன் வரைவுவிதிகள் "மிகவும் இரகசியமாக விரிவான
ஆலோசனைகள் எதுவுமில்லாமல் அல்லது பொது கருத்துக்கள் இல்லாமல் உருவாக்கப்பட்டிருப்பதாக'' விமர்சித்திருந்தது.
அடிப்படை சட்ட நடைமுறைகள் மீறப்பட்டிருப்பதாக
HRW அடையாளம்
காட்டியிருப்பது நீதிமன்ற நீதிபதிகளும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்களும் சுதந்திரமானவர்களாகவும் நடுநிலையோடும்
செயல்படுபவர்களாக இருக்க வேண்டும் மற்றும் தேவையான சட்ட அனுபவமும் உள்ளவர்களாக இருக்க வேண்டும்
என்பதாகும். இந்த தேவைகள் அடிப்படையில் நீதிமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்குமானால், அந்த
நீதிமன்றத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள சலீம் சலாபி இயல்பாகவே தகுதியற்றவராக
அறிவிக்கப்பட்டிருப்பார். அவர் தண்டனை பெற்ற மோசடிப் பேர்வழியும் நீண்ட காலமாக அமெரிக்காவின்
கையாளாக செயல்பட்டு வருபவரும் அண்மைக் காலம் வரை ஈராக் பிரதமர் பதவிக்கான பென்டகனின்
விருப்பத்திற்குரியவர்களுள் ஒருவராக இருந்தவருமான அகமது சலாபியின் மருமகன் ஆவார்.
அவரது மாமாவைப் போல் சலீம் சலாபியும், 1990களின் தொடக்கத்தில்
CIA உருவாக்கிய ஈராக்கிய தேசிய காங்கிரஸ் உறுப்பினர்,
அந்த அமைப்பிற்கு வாஷிங்டன் தசாப்தங்களுக்கு மேலாக நேரடியாக நிதியளித்து வந்தது. அமெரிக்க
ஆக்கிரமிப்பிற்கு சலீம் உற்சாகமாக ஆதரவளித்தவர், ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதில்
தனிப்பட்ட முறையில் இலாபம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளவர். சென்ற ஆண்டு, சலீம் தனது தொடர்புகளை
காசாக்குவதற்கு முயன்று ஈராக் சர்வதேச சட்டக் குழுவை
(Iraqi International Law Group - IILG)
நிறுவினார். அந்த அமைப்பின் வலைத்தளம், தனது பணியாக குறிப்பிட்டிருப்பது ''ஈராக்கிற்கு தனியார் முதலீட்டைக்
கொண்டு வருவது'' ஆகும். மற்றும் தங்களது வாடிக்கையாளர்கள் பலர் ''உலகில் உள்ள மிகப்பெரும் நிறுவனங்கள்
மற்றும் அமைப்புகளில் இடம்பெற்றிருப்பதாக'' பெருமைபேசிக்கொண்டது.
''பாதுகாப்பு'' காரணங்களால் அந்த நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகள்
அல்லது அரசு வழக்குரைஞர்கள் பற்றி எந்த விபரமும் மற்றும் பெயர்கள்கூட வெளியிடப்படவில்லை, அவர்களது
பின்னணியை விசாரிக்க வேண்டிவருவதை இவ்வாறு தடுத்தனர். ஆயினும், பத்திரிகையாளர்
Robert
Fisk
ஹூசைன் மீது விசாரணை நடத்திய நீதிபதியை 33 வயதான, பாத்திஸ்ட் ஆட்சியில் 10 ஆண்டுகள் நீதிபதியாக
பணியாற்றிய Ra'id Juhi
என்று அடையாளப்படுத்தினார். அவர் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஏப்ரல் மாதம் மற்றொரு அரசியல்
சேவையை செய்தார், எதிர்ப்பாளர் ஷியைட் மதகுரு மொக்தாதா அல் சதர் மீது அப்பொழுது கொலைக் குற்றம்
சாட்டினார்---- அமெரிக்க இராணுவம் அல் சதரின் குடிப்படைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அந்த முடிவு ஒரு
சாக்குப் போக்கை வழங்கியது.
HRW நினைவுக் குறிப்பு, நீதிமன்ற
சபையால் குற்றம் சாட்டப்பட்டவரின் அடிப்படை சட்ட உரிமைகளை பாதுகாக்க தவறிவிட்டதாக குற்றம்
சாட்டுகிறது. சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமை ஒப்பந்தங்களின்படி குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி
நிரூபிக்கப்படவேண்டும் என்ற நிபந்தனையை நிறைவேற்றத் தவறிவிட்டது. 1960-களின் கடைசியிலும், 1970-களின்
தொடக்கத்திலும், பாத் கட்சி அதிகாரத்தை பிடித்துக்கொண்ட பின்னர் சர்வாதிகார ஆட்சியை திணித்தது,
அப்போது உருவாக்கப்பட்ட குற்றவியல் சட்டத்தின்படி இந்த நீதிமன்ற நடைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. புலன்
விசாரணையின்போது நீதிமன்றத்தில் கேள்விகள் கேட்கப்படும்போதும், குற்றம் சாட்டப்பட்டவர் பதிலளிக்க
மறுப்பதற்கு, வழக்கறிஞரை கலந்து ஆலோசிப்பதற்கு குற்றச்சாட்டின் தன்மை பற்றி அறிந்துகொள்வதற்கு இந்த
நீதிமன்ற அமைப்பு விதிகளில் எந்த வழிவகையும் செய்யப்படவில்லை. முறையற்ற கைது அல்லது சித்ரவதை
மனத்தளவில் சித்ரவதை அல்லது கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெறுவது ஆகியவற்றிற்கு எதிராக எந்த பாதுகாப்பும்
தரப்படவில்லை.
அபுகிரைப் சிறைச்சாலையில் அமெரிக்க புலனாய்வாளர்களும், காவலர்களும்
திட்டமிட்டு சித்ரவதை மற்றும் முறைகேடுகளை செய்திருப்பது அம்பலத்திற்கு வந்திருப்பதால், ஹுசைனும் இதர
''உயர் மதிப்பு கைதிகளும்'' ஏற்கனவே பல்வேறு வகையான நிர்பந்தங்களுக்கு ஆட்பட்டிருப்பார்கள் என்று
நம்புவதற்கு இடம் இருக்கிறது. குறைந்தபட்சம் அவர்கள் மாதக் கணக்கில் தனிமைச் சிறையில் காவலில்
வைக்கப்பட்டார்கள்---- அப்படி நடத்துவது மனோத்தத்துவ அடிப்படையில் கட்டாயப்படுத்துவதாகும், அது
இவ்வாறு ஜெனீவா ஒப்பந்தங்களின்படி தடை விதிக்கப்பட்ட நடவடிக்கையாகும்.
வாஷிங்டனின் பதற்றம்
சென்ற வாரம் அமெரிக்காவில் வெளியிடப்பட்ட ஏராளமான ஊடக செய்திகளில்,
ஹுசைன் விசாரணை திருப்பித்தாக்கும் விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்ற திட்டவட்டமான பீதி உணர்வு நிலவுகிறது.
ஹுசைன் நீதிமன்றத்தில் தோன்றி அவரது தோற்றம் ''அங்க அசைவுகளும்,'' ஈராக் தெருக்களிடம்'' எத்தகைய
பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கவலையை உருவாக்கியிருக்கின்றது, சேர்பியாவின் முன்னாள் ஜனாதிபதி மிலோசெவிக்
விசாரணையின்போது குற்றச்சாட்டை குற்றம் சாட்டியவர்கள் மீதே திருப்பிவிட்டது மற்றும் அது அரசியல் தாக்கத்தை
ஏற்படுத்தியதை போன்று ஹுசேனும் செய்துவிடக்கூடும் என்ற பீதி ஊடக விமர்சனங்களில் காணப்படுகின்றது.
ஆரம்பகட்ட கருத்துக்கணிப்புக்கள் பேட்டிகளை கொண்டு பார்க்கும்போது, வாஷிங்டன்
நம்பிக்கொண்டிருக்கும் துருப்புச் சீட்டாக இந்த விசாரணை அமையாது என்று தோன்றுகிறது. பாக்தாத் வானொலி
நிலையம் ஹுசைன் நீதிமன்றத்தில் ஆஜரானபோது நடத்திய கருத்துக்கணிப்பில் 45 சதவீதம் பேர் ஹுசைனுக்கு மரண
தண்டனை விதிக்க வேண்டும் என்றும், 41 சதவீதம் பேர் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கூறினர்.
அண்மையில் ஈராக் ஆய்வு மற்றும் மூலோபாய ஆய்வுகள் நிலையம் விரிவான திட்டவட்டமான ஆய்வை நடத்தியது.
இந்த அமைப்பு அமெரிக்க ஆக்கிரமிப்பு அதிகாரிகளோடு இணைந்து செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது. இந்த அமைப்பு
வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 20 சதவீத ஈராக்கியர் ஹுசைனுக்கு பொது மன்னிப்பு வழங்கவேண்டும் என்று
கூறியுள்ளனர்.
ஹுசைன் ஈராக்கில் இரு தசாப்தங்களுக்கு மேலாக மிகக் கொடூரமாக ஆட்சி
செய்து வந்தார், எனவே புஷ் நிர்வாகத்தின் குற்றச்சாட்டிற்கு ஆதரவு இருந்திருக்க வேண்டும். ஆனால், சட்ட
விரோதமாக அமெரிக்கா ஈராக்கை கைப்பற்றியிருப்பது, படையெடுத்து வந்தது, ஆகியவற்றிற்கு
மிகப்பெரும்பாலான சாதாரண ஈராக் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து விரோத போக்கு காட்டுவதால் தான்
ஹுசைனுக்கும் ஆதரவு காணப்படுகிறது. பலர் அந்த கொடுங்கோலனுக்கு ஏதாவது ஒரு வகையில் மரண தண்டனை
விதிக்க வேண்டுமென்றே கூறுகின்றனர். ஆயினும், மற்றவர்கள் தங்கள் நாட்டின் மீது அமெரிக்கா திணித்துள்ள
மற்றொரு இழிவுபடுத்தும் நடவடிக்கையே இந்த விசாரணை என்று கருதுகின்றனர். எனவே ஹுசைன் ஒடுக்குமுறை
கொடுங்கோல் ஆட்சியை நீண்ட காலம் நடத்தி வந்ததாலும் அவர் மீது மறைமுகமாக பாராட்டுகின்றனர்.
பாக்தாத் உணவு விடுதி ஒன்றில்
San Francisco Chronicle-க்கு
அபு அல்லாஹ் பேட்டியளித்தார். அவர் கூறினார்: ''அவர் எப்படி நீதிபதியுடன் வாதாடுகிறார் பாருங்கள், அவர்
அதிகாரத்தில் இருந்தபோது அவரை நான் விரும்பவில்லை--- -எனது சகோதரனின் நிலத்தை ஒரு முறை
பறித்துக்கொண்டார், அவரை ஆறு மாதங்கள் சிறையில் அடைத்தார். ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள
வேண்டும் அப்போதும் அவர் எங்களது தலைவர் தான், அவர் ஒரு ஈராக்கியர் அவர் தான் கோழையல்ல என்பதை
காட்டிவிட்டார், இது நல்லது." அமெரிக்கா படையெடுத்து வந்த பின்னர், உருவாகிவிட்ட சமூக சீரழிவுகளால் பல
ஈராக்கியர்கள் தங்களது அன்றாட வாழ்விற்கே திண்டாடிக் கொண்டிருக்கும்போது சதாம் ஹுசைன் விசாரணை
பற்றியோ அல்லது அவரது முடிவு பற்றியோ கவலைப்பட நேரம் இல்லாமல் உள்ளனர்.
அரபு நாடுகளின் தலைவர்கள் கோழைத்தனமாக அமைதியை கடைப்பிடித்தாலும், மத்திய
கிழக்கு முழுவதிலும் பத்திரிகை தலையங்கங்கள் நீதிமன்ற விசாரணையை கண்டித்திருக்கின்றன. பரந்த பொதுமக்களது
விரோதப்போக்கை பிரதிபலித்தன. எடுத்துக்காட்டாக ஜோர்டான் டைம்ஸ் ஒரு எச்சரிக்கை ஒன்றை
விடுத்திருக்கிறது. இந்த விசாரணை மூலம் ஹுசைன் எப்படி ''பதவிக்கு வந்தார் எந்த நாடுகள் குறிப்பாக எந்த
மேற்கு நாடுகள், அவர் தனது அதிகாரத்தை இறுக்கமாக கைப்பற்றிக்கொள்வதற்கு'' உதவின என்பது
அம்பலத்திற்கு வரும். "ஈரானுக்கும், குவைத்திற்கும் எதிரான போர்களை நடத்துவதற்கு ஈராக் ஆட்சிக்கு உதவிய
மேற்கு நாடுகளின் பங்களிப்பையும், தனது சொந்த மக்களுக்கு எதிராகவே இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்துவதில்
உதவியதையும்" அந்த விசாரணை கொண்டுவரும் என்று அது எச்சரித்துள்ளது.
இந்த விசாரணையின் போது அமெரிக்க நிர்வாகம் சில விபரங்கள் வெளிவருவதை
தாங்கிக்கொள்ள முடியாது. வாஷிங்டன் நீண்ட காலமாக சதாம் ஹுசேனோடும் பாத் கட்சியோடும் உறவுகளை
வைத்திருந்தது. 1959-ம் ஆண்டு ஈராக்கின் இடதுசாரி தேசியவாத தலைவர் ஜெனரல் அப்துல் கரீம் காசீம்,
கொலை முயற்சியில் சதாம் ஹுசேன் ஈடுபட்ட காலத்திலிருந்து
CIA-இற்கும்
அவருக்கும் தொடர்பு இருந்ததாக சில தகவல்கள் தெரிவித்தன. நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், பாத் கட்சி காசீம்
ஆட்சியை CIA
ஆதரவோடு கவிழ்த்தது. அப்போது CIA
கைது செய்து தூக்கிலிட வேண்டிய முன்னணி ஈராக் கம்யூனிஸ்டுகளது பெயர்கள் மற்றும் முகவரிகளை ஹுசேனுக்கு
தந்தது.
வழக்கு விசாரணை ஒரு அரசியல் வீழ்ச்சியாக ஆவதை தடுக்கும்பொருட்டு ஈராக்
சிறப்பு நீதிமன்றம் தனது கடுமையான கட்டுப்பாட்டில் இருக்கவேண்டுமென்பதை புஷ் நிர்வாகம் உறுதிப்படுத்திக்
கொண்டிருக்கிறது. சேர்பியாவின் முன்னாள் ஜனாதிபதி மிலோசெவிக், ஹேக் நீதிமன்றத்தில் தனது தரப்பை நிலைநாட்டுவதற்கு
முயன்று வருவது நன்றாகவே வாஷிங்டனுக்குத் தெரியும். பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயர், முன்னாள் ஜனாதிபதி
பில் கிளிண்டன் ஆகியோர் சாட்சிக்கூண்டில் ஏற்றபட்டு விசாரிக்கப்படலாம். பால்கன் பகுதிகளில் நடைபெற்ற இரத்தக்களரி
சம்பவங்களுக்கு தங்களது பொறுப்பு குறித்து அவர்கள் அப்போது சாட்சியமளிக்க வேண்டியிருக்கும். 1980-களின்
இறுதியிலும், 1990-களின் ஆரம்பத்திலும் அமெரிக்காவின் முன்னாள் தலைவர்கள் ஈராக் நிகழ்ச்சிகளில் சம்பந்தப்பட்டிருந்தமை
தொடர்பாக தனது மூத்த தலைவர்களை சாட்சிக்கூண்டில் ஏற்றுவதற்கு வெள்ளை மாளிகை தயாராகவில்லை.
சிறப்பு நீதிமன்ற இயக்குநர் சலிம் சலாபி சென்ற வாரம் இதைத்
தெளிவுபடுத்தினார். அப்படி எதுவும் நடக்காது என்று குறிப்பிட்டார். பல மாதங்கள் விசாரணை தொடங்காது,
நேரடி ஒளிபரப்பு இருக்காது, இது ஹுசைன் தன்னை "வீரனாக காட்டிக்கொள்ளுவதை" தடுப்பதற்குத் தான் என்று
விளக்கினார். சாட்சியமளிக்கும்போது வழக்குக்கு "சம்பந்தப்படாத" விஷயங்களை குற்றம் சாட்டப்பட்டவர்
நீதிமன்றத்தில் எழுப்பாமல் தடுப்பதற்கு சாட்சிய பதிவு விதிகள் கண்டிப்பாக வகுக்கப்படும் என்று சலிம் சலாபி
விளக்கினார் ``சதாம் இந்த சிறப்பு நீதிமன்றத்தை தனது அரசியல் கருத்துகளை தெரிவிக்கும் அரணாக மாற்ற
விரும்புகின்றார். ஆனால் அப்படி நடக்க நாங்கள் அனுமதிக்கமாட்டோம், அவருக்கு எதிராக காட்டப்படும்
குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் பற்றி மட்டுமே அவர் கருத்து தெரிவிக்க வேண்டும்`` என்று அவர் குறிப்பிட்டார்.
சென்ற வியாழன் ஹுசேனுக்கு எதிராக வாசிக்கப்பட்ட ஏழு குற்றச்சாட்டுக்கள் மிக
பொதுவான வார்த்தைகளால் அமைக்கப் பெற்றிருந்தன. மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அரசியல் எதிரிகளை
கொலை செய்தது; 1974 மத தலைவர்களை கொலை செய்தது: 1983-ல் குர்திஸ்
Barzani
உறுப்பினர்களை கொலை செய்தது: 1986-88 வரை குர்துகளை பலவந்தமாக வெளியேற்றியது; 1988ல் ஹலபாஜாவில்
குர்துகளின் மேல் விஷ வாயுவை செலுத்தியது;1990-ல் குவைத் மீது படையெடுத்தது மற்றும் 1991-ல் குர்திஸ்
மற்றும் ஷியாக்கள் கிளர்ச்சியை அடக்கிக்கியது, ஆகிய குற்றச்சாட்டுக்கள் அவற்றுள் உள்ளடங்குவனவாகும்.
இந்த சம்பவங்கள் எதிலும் ஹூசேன் மட்டுமே தனித்து இருக்கவில்லை. 1980கள் முழுவதிலும்
றேகன் மற்றும் புஷ் நிர்வாகங்கள் ஈரானுக்கு எதிராக பாத்திச ஆட்சி நடத்திய இரத்தக்களரி போரை ஆதரித்தன
மற்றும் ஈரான் இராணுவ வீரர்களுக்கு எதிராக இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியபொழுது வேண்டுமென்றே
கண்ணை முடிக்கொண்டு இருந்தன. அவர்களது அரசாங்க ஒப்புதலோடு பல்வேறு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய
கம்பெனிகள் ஈராக்கிற்கு ''பேரழிவு ஆயுதங்களை'' தயாரிப்பதற்கான தொழில்நுட்பக் கருவிகளை வழங்கின.
ஈரான்- ஈராக் போருக்கு பின்னர்தான் புஷ் நிர்வாகம் தனது உள்ளூர் பண்ணையாரை
எதிர்க்க தொடங்கியது மற்றும் 1990ல் குவைத் மீது படையெடுத்ததை ஒரு சாக்குப்போக்காகக் கொண்டு பாரசீக
வளைகுடாவில் அமெரிக்காவின் மூலோபாய நிலைப்பாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த நேரத்தில்
பாக்தாத்தில் அமெரிக்க தூதராக பணியாற்றி வந்த
April Glaspie திட்டமிட்டே சதாம் ஹுசேனை
ஊக்குவித்தார், தெற்கு ஈராக்கில் அல்-ரமல்லாஹ் எண்ணெய் கிணறுகளிலிருந்து எண்ணெய் குவைத் வழியாக கடத்தப்படுவது
தொடர்பான குவைத்துடன் அவருக்குள்ள தகராறில் வாஷிங்டன் அவரை ஆதரிக்கிறது என்று நம்பச் செய்தார்.
1991ல் அமெரிக்க தலைமையில் ஈராக் மீது படையெடுப்பு நடந்தபொழுது ஜனாதிபதி மூத்த புஷ் முதலில் ஹுசைன்
ஆட்சிக்கு எதிராக குர்துகளையும் ஷியைட்டுகளையும் கிளர்ச்சி செய்யுமாறு ஊக்குவித்தார், அதற்கு பின்னர் அத்தகைய
கிளர்ச்சி மத்திய கிழக்கில் பாக்தாத் இராணுவ சர்வாதிகாரியினால் வரும் ஆபத்தைவிட அமெரிக்க நலன்களுக்கு பெரிய
ஆபத்தாகிவிடும் என்று தெரிந்ததும் அவர்களைக் கைவிட்டுவிட்டார்.
ஹுசைனும் அவரது ஆட்சியின் இதர உறுப்பினர்களும் ஈராக் மக்களால் அவர்களது குற்றங்களுக்காக
விசாரணைக் கூண்டில் ஏற்றப்பட வேண்டும். ஆனால் எந்த நியாயமான நீதிக்கும் ஒரு முன் நிபந்தனை என்னவென்றால்
எல்லா அமெரிக்க மற்றும் வெளிநாட்டு துருப்புகளும் ஈராக்கிலிருந்து வெளியேற வேண்டும். மேலும் தற்போது ஈராக்கில்
நடைபெற்றுக் கொண்டுள்ள சட்ட விரோத ஆக்கிரமிப்பிற்கு பொறுப்பான எல்லா அமெரிக்க அதிகாரிகளும், மற்றும்
அவர்களுடன் சதாம் ஹுசைனின் குற்றங்களில் இதற்கு முன்னர் உதவிய, உடந்தையாக இருந்த அனைவரும் தங்களது செயல்களுக்கு
சட்டபூர்வமான பொறுப்பு ஏற்குமாறு செய்யப்பட வேண்டும்.
Top of page |