:
ஆசியா
:
இலங்கை
Sri Lankan health unions call off two-day strike
இலங்கை சுகாதார தொழிற்சங்கங்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு
கொண்டுவந்துள்ளன
By Ajitha Gunaratna
30 June 2004
Use this version to
print |
Send this link by email |
Email the author
இலங்கையில் சுகாதார சேவை தொழிற்சங்க கூட்டமைப்பில் (சு.சே.தொ.கூ)
அங்கம் வகிக்கும் சுகாதார தொழிற்சங்கங்கள், தமது கோரிக்கைகளுக்கு இரண்டு வாரங்களுக்குள் நடவடிக்கை
எடுப்பதாக பிரதமர் இராஜபக்ஷ நேற்று வாக்குறுதியளித்ததை அடுத்து, நேற்று ஆரம்பிக்கப்படவிருந்த இரண்டு
நாள் வேலை நிறுத்தத்தை கடைசி நிமிடத்தில் ஒத்திவைத்துள்ளன. சுகாதார ஊழியர்களின் ஆர்ப்பாட்டங்கள் ஐக்கிய
மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களை எதிர்ப்பதாக சுட்டிக்காட்டியிருந்த போதிலும்
தொழிற்சங்கத் தலைவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
சுமார் 50 சுகாதாரத்துறை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பான சு.சே.தொ.கூ,
மத்திய அரசாங்க தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள அதிகரிப்பு விரிவாக்கத்தை மாகாண சபைகளின் கீழ்
சேவையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் வழங்க வேண்டும்; தற்காலிக மற்றும் அமையத் தொழிலாளர்களுக்கான சம்பள
அதிகரிப்பு; 1997 முதல் அதிகரிக்கப்பட்ட கடந்தகால கொடுப்பனவு; தற்காலிக மற்றும் அமையத்
தொழிலாளர்களை நிரந்தரமாக்கல் உட்பட ஒரு தொகை கோரிக்கைகளுக்காக இந்த இரண்டு நாள் வேலை நிறுத்தத்திற்கு
அழைப்பு விடுத்திருந்தது. இந்த பிரச்சினை பற்றி அழுத்தம் கொடுப்பதற்காக தொழிற்சங்க தலைவர்கள்
"சாகும்வரை உண்ணாவிரதம்" இருக்கப் போவதாகவும் பிரகடனம் செய்தனர்.
சு.சே.தொ.கூ, பதிவு செய்யப்பட்ட மற்றும் உதவி மருத்துவ ஊழியர்கள், குமாஸ்தாக்கள்,
சாரதிகள், மருத்துவிச்சிகள், ஆஸ்பத்திரி உதவியாளர்கள், அமையத் தொழிலாளர்கள் மற்றும் தாதிகளில் ஒரு
பிரிவினர் உட்பட முழு பொது சுகாதார அமைப்பின் மருத்துவம் சாராத ஊழியர்களையும் சார்ந்துள்ளது. இவர்களில்
பெரும்பாலானவர்கள் குறைந்த ஊதியம் பெறுவதோடு ஏற்புடைய ஊதியத்திற்கான நீண்ட தொழிற்சங்க பிரச்சாரத்திற்கும்
ஆதரவளித்துள்ளனர். கடந்த வியாழனன்று, சுமார் 80,000 சுகாதார ஊழியர்கள் சுகவீன விடுமுறை பெற்று தீவுபூராவும்
இடம்பெற்ற ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் பங்குபற்றினர். 10,000 ற்கும் அதிகமான சுகாதார தொழிலாளர்கள்
கொழும்பில் உள்ள சுகாதார அமைச்சின் முன்னால் தமது கோரிக்கைகளை முன்வைப்பதற்காக பல மணித்தியாலங்களாக
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதமர் இராஜபக்ஷ, வேலை நிறுத்தங்கள் வெடிப்பதை தடுக்கும் முயற்சியில், இந்த
வார வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதன் பேரில் சு.சே.தொ.கூ தலைவர்களுக்கு ஒரு தொகை நிச்சயமற்ற
வாக்குறுதிகளை வழங்கியுள்ளார். அவர், தற்காலிக மற்றும் அமைய தொழிலாளர்களுக்கான ஊதிய அதிகரிப்பிற்கு
உடன்பட்ட போதிலும், இந்த சம்பள அதிகரிப்பு பற்றி மாகாண சபைகளுடன் கலந்துரையாடுவதற்காக இரு வார
தாமதத்தை கோரியுள்ளார். பதிவுசெய்யப்பட்ட மற்றும் உதவி மருத்துவ அலுவலர்களுக்களுக்கிடையிலான சம்பள
முரண்பாடு சம்பள ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சு.சே.தொ.கூ எடுத்துள்ள முடிவானது, இன்னும் இரு வாரங்களுக்கும் முன்னதாக,
ஜூலை 10 அன்று இடம்பெறவுள்ள ஆறு மாகாண சபைகளுக்கான தேர்தலை எதிர்கொண்டுள்ள சுதந்திரக் கூட்டமைப்பிற்கு
ஒரு தீர்க்கமான ஓய்வுக்காலத்தை வழங்கியுள்ளது. ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஸ்ரீலங்கா சுதந்திரக்
கட்சியையும் (ஸ்ரீ.ல.சு.க) மக்கள் விடுதலை முன்னணியையும் (ஜே.வி.பி) உள்ளடக்கியுள்ள சிறுபான்மை சுதந்திரக்
கூட்டமைப்பு அரசாங்கம், இரண்டு மாதங்களுக்கும் மேலாக அதிகாரத்தில் இருந்துவருகின்ற போதிலும் வளர்ச்சி
கண்டுவரும் எதிர்ப்புக்கு முகம்கொடுக்கிறது.
சுகாதார ஊழியர்களின் பிரச்சாரமானது சீரழிந்துவரும் வாழ்க்கை நிலைமைகளையிட்டு
இலங்கை தொழிலாளர்களுக்கு மத்தியில் புகைந்துகொண்டிருக்கும் அதிருப்தியின் வெளிப்பாடாகும். முன்னைய ஐக்கிய
தேசிய முன்னணி (ஐ.தே.மு) அரசாங்கம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலகவங்கியின் வேண்டுகோளின் படி
அமைக்கப்பட்ட தனியார்மயமாக்கம் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு திட்டமான, "புத்துயிர் பெறும்
இலங்கை" என்ற அதன் நிகழ்ச்சித் திட்டத்தையிட்டு உருவான பரந்த எதிர்ப்பின் காரணமாக ஏப்பிரல் 2 தேர்தலில்
தோல்விகண்டது.
கடந்த செப்டம்பர் மாதம் சு.சே.தொ.கூ சம்பள உயர்வு கோரி தீவு
பூராவுமான காலவரையறையற்ற வேலைநிறுத்தம் உட்பட ஒரு நீண்ட பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்தது. இந்த
வேலை நிறுத்தம் 13 நாட்கள் தொடர்ந்தது. எவ்வாறெனினும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், சு.சே.தொ.கூ
அதிகாரத்துவவாதிகள் அரசாங்கத்தின் பலவிதமான வாக்குறுதிகளையும் ஏற்றுக்கொண்டனர். அவை அனைத்தும்
நிரந்தரமான வெற்று வாக்குறுதிகள் என்பது நிரூபிக்கப்பட்டது. ஐ.தே.மு அரசாங்கம், முடிவில் ஜனாதிபதி
குமாரதுங்க அரசாங்கத்தை பதவி விலக்க வழிவகுத்த, வளர்ச்சிகண்டுவந்த அரசியல் நெருக்கடிக்கு மத்தியில்,
பெப்பிரவரியில் தவணைமுறையிலான 40 வீத சம்பள உயர்வை வழங்கத் தள்ளப்பட்டது.
பெப்ரவரியில் சம்பள உயர்விற்கு ஐ.தே.மு உடன்பட்டவுடன், சு.சே.தொ.கூ தனது
அங்கத்தவர்களுக்கு சகலதும் தீர்க்கப்பட்டதாக குறிப்பிட்டது. ஆனால் சிலவாரங்களுக்குள் சுமார் 40,000
மாகாண சபை தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு மறுக்கப்படுவதாக தோன்றியது. இது முழு சுகாதாரத் துறை
ஊழியர்களின் தொகையில் கிட்டத்தட்ட அரைவாசியாகும். போராட்டங்கள் இடம்பெற்றதை அடுத்து மூன்று
மாகாணசபைகள் சம்பள உயர்வை வழங்கிய போதிலும், ஏனைய ஆறு சபைகளும் பணம் இல்லை என மறுத்துவிட்டன.
தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஸ்ரீ.ல.சு.க மற்றும் ஜே.வி.பி யும், மக்கள்
நலன்சார்ந்த வாய்வீச்சுக்களை பயன்படுத்தி தொழிலாளர்களுக்கும் ஏழைகளுக்கும் ஒரு தொகை வாக்குறுதிகளை
கொடுப்பதன் மூலம், வீழ்ச்சியடைந்துவரும் வாழ்க்கை நிலைமைகள் சம்பந்தமான பரந்த அதிருப்தியை
சுரண்டிக்கொண்டன. எல்லாவிதமான சம்பள முரண்பாடுகளும் தீர்க்கப்படும் என சுகாதார ஊழியர்களுக்கு
சொல்லப்பட்டது. ஆனால், அதிகாரத்திற்கு வந்த பின், சுதந்திர கூட்டமைப்பானது பொருளாதார மறுசீரமைப்பை
தொடர வேண்டிய அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதோடு, ஏற்கனவே தனது வாக்குறுதிகளை கைவிடத்
தொடங்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஏனைய நிதி உதவியாளர்களும், 4.5 பில்லியன்
அமெரிக்க டொலர் பொருளாதார உதவியை கொடுக்காமல், தமீழீழ விடுதலைப் புலிகளுடனான சமாதான
பேச்சுக்கள் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பின் அடிப்படையிலான உடன்படிக்கைகளுக்காகவும்
காத்திருக்கின்றனர்.
ஜே.வி.பி யின் நயவஞ்சகப் பாத்திரம்
சுகாதார ஊழியர்கள், தொழிலாள வர்க்கம் நாட்டின் பொருளாதார நெருக்கடியின்
தாக்கத்தை தாங்கிக்கொள்ள வேண்டும் என்ற உறுதிப்பாட்டை கொண்டுள்ள, ஒரு பிரதிகூலமான அரசாங்கத்தை
எதிர்கொண்டுள்ளனர். ஜே.வி.பி, கொழும்பு ஊடகங்களுடன் சேர்ந்து, திருப்திகரமான ஊதியம் மற்றும்
நிலைமைகளுக்காக போராடுவதற்காக சுகாதார ஊழியர்களை தாக்குவதில் ஒரு நயவஞ்சகப் பாத்திரத்தை இட்டு
நிரப்புகிறது. சில சந்தர்ப்பங்களில் மார்க்சிஸ்டுகள் என போலியாக கூறிக்கொண்ட ஜே.வி.பி, சிங்களப்
பேரினவாதம் மற்றும் மக்கள் சார்ந்த வாய்வீச்சுக்களின் கலவையை அடிப்படையாகக் கொண்டதாகும். கடந்த
வருடம், ஜே.வி.பி தலைமையிலான அகில இலங்கை சுகாதார ஊழியர் சங்கம் (அ.இ.சு.ஊ.ச),
சு.சே.தொ.கூ முன்னெடுத்த பிரச்சாரத்தில் மிகவும் போர்க்குணம் கொண்ட தொழிற்சங்கமாக
காட்டிக்கொண்டது. இப்பொழுது அதன் தலைவர்கள், ஒரு ஒன்றிணைந்த போராட்டத்தை கீழறுப்பதற்காக
தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கின்றனர்.
கடந்த வார ஒரு நாள் போராட்டத்திற்கு முன்னதாக, அ.இ.சு.ஊ.ச
தலைவர்களான ஆர்.எம்.டபிள்யூ ரணசிங்க மற்றும் சமந்த கோரலேயாராச்சியும் சுகாதார அமைச்சர் நிமால்
சிறிபால டீ சில்வாவை சந்தித்ததோடு, வேண்டுமென்றே தமது தொழிற்சங்கத்தை சு.சே.தொ.கூ வில் இருந்து
தொலைவில் வைத்தனர். ஒரு பத்திரிகை அறிக்கையில், கோரிக்கைகளைத் தீர்ப்பதாக அமைச்சர்
உறுதியளித்துள்ளதாக பிரகடனப்படுத்தியதோடு, தொழிலாளர்களை போராட்ட நடவடிக்கைகளில் பங்குபற்ற
வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்தது.
அ.இ.சு.ஊ.ச அலுவலர்கள், பல ஆஸ்பத்திரிகளிலும் மற்றும் சுகாதார
நிலையங்களிலும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதை தவிர்க்க முயற்சித்தபோது பலமான எதிர்ப்புக்கு
முகம்கொடுத்தனர். கடந்த வாரம், கொழும்பு தெற்கு பொது வைத்தியசாலையில் நடந்த கூட்டத்தில் இருந்து
வெளியேறத் தள்ளப்பட்டார்கள். கூட்டத்திற்கு வருகைதந்திருந்த ஒரு தொழிலாளி உலக சோசலிச வலைத்
தளத்துடன் உரையாடும் போது: "அ.இ.சு.ஊ.ச தமது அரசாங்கம் பதவிக்கு வந்தவுடனேயே அதன்
தாளத்தை மாற்றிக்கொண்டது. இதற்கு முன்னர் அவர்கள் எமக்கு புரட்சிகர முகத்தைக் காட்டினர். அவர்கள்
இப்போது உண்மையான கருங்காலிகளாகியுள்ளனர்," எனத் தெரிவித்தார்.
வேலை நிறுத்தத்திற்கு முந்தைய தினம், டீ.என்.எல் தனியார் தொலைக்காட்சி
சேவையில் தோன்றிய ஜே.வி.பி உறுப்பினரும் அரசாங்க மருந்தாளர்கள் சங்க (அ.ம.ச) செயலாளருமான
ஹரிந்திர குருப்பு, சுகாதார ஊழியர்களை போராட்டத்தில் பங்குகொள்ள வேண்டாம் என தூண்டினார். அவர்,
புதிய அரசாங்கத்திற்கு மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் என வாதிட்டதுடன், சு.சே.தொ.கூ
தலைவர்கள் தமது பிரச்சாரத்தில் புதிய கோரிக்கைகளையும் சேர்ந்துக்கொண்டதற்காக அவர்களை குற்றம்
சாட்டினார். அவர் வேண்டுகோள் விடுத்திருந்த போதிலும், அ.ம.ச உறுப்பினர்களில் பலர் போராட்டத்தில்
பங்குபற்றியிருந்தனர்.
ஜே.வி.பி யின் தொழிற்சங்க பத்திரிகையான ரது லங்கா (சிவப்பு
இலங்கை) ஜூன் மாத வெளியீட்டில், முழுத் தொழிலாளர் வர்க்கத்திற்கும் எதிராக ஒரு மூர்க்கத்தனமான
தாக்குதலை தொடுத்திருந்தது. "ஐ.தே.க வை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவதற்காக ஒரு தொழிற்சங்க
முன்னணி," எனத் தலைப்பிடப்பட்டிருந்த அந்த கட்டுரை, அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக சில தொழிற்சங்கங்கள்
"இரகசியத் திட்டத்தில்" ஈடுபட்டுள்ளதாக பிரகடனப்படுத்தியது. அது விசேடமாக சுகாதார மற்றும் புகையிரதத்
துறை தொழிற்சங்கங்களை சுட்டிக்காட்டியது.
இந்த நடவடிக்கை (அரசாங்கத்திற்கு எதிராக) ஐந்து கட்டங்களாக
இடம்பெறுவதாக கட்டுரை குறிப்பிடுகிறது. "முதாலாவது கட்டம் ஊடக பிரச்சார முறை மூலம் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது கட்டம், அவர்கள் செல்வாக்கு செலுத்துகின்ற துறைகளில், தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு
ஒதுக்கித்தள்ளப்பட்டுள்ளதாக கூறுவதுடன், அந்தத் துறைகளில் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தூண்டிவிட்டு, சுதந்திரக்
கூட்டமைப்பு அரசாங்கத்தைப் பற்றிய அதிருப்தியை பரவச்செய்வதன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது," என அந்தக்
கட்டுரை குறிப்பிடுகின்றது.
ஜே.வி.பி, சுகாதார ஊழியர்களின் பிரச்சாரத்தை தகர்ப்பதற்காக மிகவும் கடுமையான
நடவடிக்கையை மேற்கொள்ள வக்காலத்து வாங்கும் கொழும்பு ஊடகங்களுடன் நேரடியாக அணிதிரள்கின்றது.
தொழிலாளர்களை கண்டனம் செய்த ஜூன் 23 டெயிலி மிரர் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்: "அரசாங்கத்தைப்
பொறுத்தவரையில், சில குழுக்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தை பிரேரித்த போதிலும், பொது பாதுகாப்பு
சட்டத்தின் கீழ் சில நடவடிக்கைகளையிட்டு அக்கறை செலுத்துவது சாத்தியமானதாக இருக்கலாம். ஏனென்றால்,
சில தொழிற்சங்கங்கள் நோயாளர்களை அச்சுறுத்துமளவிற்கு செயற்படுகின்றன," என குறிப்பிட்டுள்ளது. "மேல்
எழும்ப முடியாத பொருளாதார நிலைமையை" சுட்டிக்காட்டிய ஜூன் 22 ஐலண்ட் பத்திரிகையின் ஆசிரியர்
தலையங்கம், "சுகாதாரத் துறையிலான நடைமுறைக்கு ஒவ்வாத வேலை நிறுத்தங்கள் சட்டவிரோதமானதாக்கப்பட
வேண்டும்," என வலியுறுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தின் போது, ஐ.தே.மு இராணுவத்
துருப்புக்களை வேலைநிறுத்தங்களைத் தகர்ப்பதற்காக பொது வைத்தியசாலைகளில் பயன்படுத்தியதோடு பல தொழிற்சங்கத்
தலைவர்களையும் உறுப்பினர்களையும் கைதுசெய்தது. ஜே.வி.பி யின் கருத்துக்களும் நடவடிக்கைகளும், சுதந்திரக்
கூட்டமைப்பு அரசாங்கம் தற்போதைய பிரச்சாரத்தை தகர்ப்பதற்காக இதே போன்ற அல்லது இன்னும் கொடூரமான
நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராகின்றது என்பதற்கான தெளிவான எச்சரிக்கையாகும்.
சுகாதாரத் தொழிலாளர்களின் கைத்தொழில் நடவடிக்கையை எதிர்ப்பதில் ஜே.வி.பி
இட்டுநிரப்பும் பாத்திரமானது, இந்த இனவாத கட்சியின் தொழிலாளர் வர்க்க விரோத பண்பை மீண்டுமொரு முறை
வெளிக்காட்டுகிறது. ஜே.வி.பி யின் கொலைப் படைகள், 1980 களின் கடைப்பகுதியில், இந்திய-இலங்கை உடன்படிக்கைக்கு
எதிரான அதனது சிங்களப் பேரினவாத பிரச்சாரத்தில் பங்கெடுக்க மறுத்த ஒரு தொகை தொழிலாளர்கள், தொழிற்சங்க
வாதிகள் மற்றும் அரசியல் எதிரிகளை கொன்றனர். இப்போது முதல் தடவையாக ஆட்சிக்கு வந்துள்ள ஜே.வி.பி,
சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் பெரு வர்த்தகர்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கோரிவருகின்ற
பொருளாதார மறுசீரமைப்புடன் முன்செல்கின்ற நிலைமையில், தொழிலாளர்களதும் ஏழைகளதும் எதிர்ப்பை நசுக்க
மிகத் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயங்கப் போவதில்லை.
Top of page |