World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா On eve of Milwaukee convention: Green Party divided over Nader campaign மில்வாகீ மாநாட்டிற்கு முன்பாக: நாடெர் பிரச்சாரத்தையொட்டி பசுமைக் கட்சியில் பிளவு By Patrick Martin World Socialist Web Site , பசுமைக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் மாநாட்டை பற்றித் தகவல்கள் சேகரிக்க ஒரு குழுவை மில்வாகீக்கு அனுப்பியுள்ளது; இம்மாநாடு ஜூன் 23 அன்று தொடங்கியது. அதைப்பற்றிய தொடர்ந்த அறிக்கைகள் WSWS ல் வெளிவரும்.வெள்ளியன்று மில்வாக்கியில் பசுமைக் கட்சி மாநாட்டின் பிரதிநிதிகள் கூடியபின்னர், 2004 ஜனாதிபதி தேர்தலில் எத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளுவது என்பது பற்றி அவர்களிடையே கருத்து வேறுபாடு தோன்றியது. சனிக்கிழமையன்று தன்னுடைய வேட்பாளரையே ஜனாதிபதியாக நிறுத்துவதா அல்லது சுதந்திரமான வேட்பாளரான ரால்ப் நாடெருக்கு ஒப்புதல் தருவதா அல்லது முற்றிலும் தேர்தல் பற்றிக் கவலைப்படாமல் அதிலிருந்து வெளியே நிற்பதா என்ற முடிவை மாநாடு தீர்மானிக்கும். கடைசி நிலைப்பாட்டிற்கு பெரும்பாலான பிரதிநிதிகள் இடையே ஆதரவு கிடையாது; தனிப்பட்ட முறையில் கெர்ரிக்கு அவர்கள் தீவிர விரோதப் போக்கைக் காட்டியுள்ளனர்; அவரைப் பெருவணிக அமெரிக்காவின் பிரதிநிதி என்றும் ஈராக் போரை ஆதரிப்பவர் என்றும் கிட்டத்தட்ட புஷ்போன்ற கொள்கையை உடையவர் என்றும்தான் அவர்கள் கருதுகின்றனர். இவர்களுள் ஒரு சிறிய குழு, மாநாட்டிற்கு வெளியே கெர்ரிக்காகச் சற்று தீவிர ஆதரவைக் காட்டினர்; பசுமைக் கட்சி தன் சார்பில் எவரையும் நிறுத்தவேண்டாம் என்றும் ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்கு இடத்தை விட்டுக் கொடுக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்த துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டனர். ஆனால் அவர்களுக்கு மாநாட்டில் ஒரு நாற்காலி, மேசை கூட போட்டு உட்கார அனுமதி கொடுக்கப்படவில்லை. மாநாட்டு பிரதிநிதிகள் இரண்டு எதிர்முகாம்களாக பிரிந்துள்ளனர். ஒரு குழு, கட்சியின் பழைய டெக்சாஸ் வேட்பாளரும், நீண்ட காலமாக பசுமைக் கட்சியில் தீவிரமாக இருப்பவருமான கலிபோர்னிய வழக்குரைஞைர் டேவிட் காப்-ஐ வேட்பாளராக நிறுத்துவதை விரும்புகிறது. மற்றொரு குழு காப், நாடெர் இருவருமே பசுமைக் கட்சி சார்பில் ஏற்கனவே வாக்கு உள்ள 23 மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தின் பசுமைக் கட்சியினர் யாருக்கு ஆதரவு என முடிவு செய்யலாம் என்றும், மற்ற மாநிலங்களில் எங்கு வாக்குச்சீட்டில் பெயர் வர மனு கொடுத்துள்ளதோ, அங்கும் அதேபோன்ற முறையை கையாளலாம் என்றும் கூறுகின்றன நாடெருக்கு ஏற்கனவே Reform Party எனப்படும் சீர்திருத்தக் கட்சியின் ஆதரவு உள்ளது; இக்கட்சி ரோஸ் பெரோட் என்னும் பில்லியனர் ஒருவர் நிறுவியிருந்த கட்சியின் ஒரு எஞ்சிய பிரிவு ஆகும்; இது 2002 தேர்தலில் தீவிர வலது சாரியாளரான பாட்ரிக் புகானனை ஆதரித்திருந்தது. சீர்திருத்தக் கட்சியின் வகையில் நாடெருக்கு எட்டு மாநிலங்களில் வாக்குச்சீட்டில் அந்தஸ்து கிடைக்கும்; கட்சி தலைமையின் முடிவில் ஒவ்வொரு மாநில அமைப்பும் இணக்கம் தெரிவித்தால் அந்நிலை உருவாகும். பசுமைக் கட்சியின் ஆதரவைப் பெறுவதற்காக, மாநாடு கூட்டப்படுவதற்கு ஒரு வாரம் முன்பு, கலிபோர்னிய பசுமைக் கட்சித் தலைவர் பீட்டர் மிகுவெல் காமெஜோவைத் தன்னுடைய துணை ஜனாதிபதி வேட்பாளராகக் கொள்ளுவேன் என்று நாடெர் அறிவித்திருந்தார். சோசலிச தொழிலாளர் கட்சியின் பழைய தலைவரும், 1976 தேர்தலில் SWP இன் ஜனாதிபதி வேட்பாளருமான காமெஜோ, கலிபோர்னியக் கவர்னர் தேர்தலில் 2002, 2003 என இரு ஆண்டுகளும் நின்றிருந்தார். இவர் 2002 தேர்தலில் 300,000 வாக்குகள், கிட்டத்தட்ட மொத்த வாக்குகளில் 5% பெற்றிருந்தார்; அமெரிக்க பெரும் தேர்தல் பிரச்சாரத்தில் பசுமைக் கட்சியின் சிறந்த வாக்கைக் கொண்டது அதுவேயாகும். இருபிரிவுகளிலும் ஒன்று கூட ஜனநாயகக்கட்சி அல்லது கெர்ரியின் பிரச்சாரத்தில் ஒரு கொள்கை உடைய நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. புஷ் குறுகிய வாக்கில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டாலும்கூட அரசியலளவில் பசுமைக் கட்சி இழப்பிற்குட்படும் மற்றும் "முற்போக்கான" வாக்காளர்கள் பசுமைக் கட்சியின் வாக்குகளால் முக்கிய மாநிலங்களில் கெர்ரிக்குத் தேர்தலில் தோல்வி ஏற்படும் என்று காப் வாதிடுகிறார். ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனி அணுகுமுறை வேண்டும் என்று காப் கூறுகிறார்; முக்கியமான மாநிலங்களான புளோரிடாவிலும், ஓகியோவிலும் மாநிலக் கட்சிகள் இணங்கினால் தான் அதைப் போர்க்களமாக ஆக்குவதாகவும், தன்னுடைய முக்கிய முயற்சிகளை கலிபோர்னியா, நியூயோர்க், டெக்சாஸ் போன்ற மாநிலங்களில், எங்கு பசுமைக் கட்சி வாக்குகள் சமநிலையைக் கொள்ளுமோ, அவற்றில் கூடுதலாகச் செலுத்தப் போவதாகவும் கூறியுள்ளார். நாடெரும் காமெஜோவும், ஜனநாயகக்கட்சிக்கு ஏற்றவாறும் மாறிக் கொள்வர்; ஆனால் அவர்கள் இதற்காக வேறு வேறு உத்தியை முன்வைத்துள்ளனர். காப் பிரச்சாரத்தின் பகுதிக் கண்ணோட்டத்திற்கு ஆதரவு கொடுப்பதோடு, அவர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு முறை என்ற முறையில் மாநாடு இரு வேட்பாளர்களுக்கும் ஒப்புதல் கொடுத்து, அந்தந்த மாநிலம் விருப்பமுடையவரைத் தங்கள் வாக்குச்சீட்டில் சேர்க்குமாறு செய்ய வேண்டும் எனக் கூறுகின்றனர். வெள்ளி பிற்பகல் இந்த அணுகுமுறையை காமெஜா மாநாட்டில் மிச்சிகன் பிரதிநிதிகளுக்கு விளக்கியபோது, மிச்சிகன் போன்ற மாநிலங்களில் நாடெர் சீர்திருத்த கட்சி வகையில் நிற்பார், மாநில பசுமைக் கட்சி காப்பை வாக்குச்சீட்டில் கொள்ளலாம் என்று கூறினார். மற்ற மாநிலங்களில், பசுமைக் கட்சிக்குக் கூடுதலான செல்வாக்கு இருக்கும் இடத்தில் நாடெர்தான் வேட்பாளராக இருப்பார் என்று அவர் கூறினார். நாடெர், காமெஜோ இருவருமே காபின் இந்த அணுகுமுறை ஜனநாயகக்கட்சியினருக்கு ஒரு சலுகை என்று குறைகூறி, முக்கியமான "போர்க்களங்களுக்கு ஒப்பான" மாநிலங்களில் புஷ்-கெர்ரி மோதலில் தாக்குதலைக் கருத்திற்கொள்ளாமல், தங்களுடைய போக்கு ஜனநாயகக் கட்சியைவிட மாறுபட்டதாக இராது என உறுதியாகக் கூறுகின்றனர். நாடெர் தொடர்ந்து தன்னை கெர்ரிப் பிரச்சாரத்தின் இடது ஆலோசர் என்று தெரிவித்து வருகிறார்; ஜனநாயகக் கட்சியினர் எவ்வாறு தன்னுடைய ஆதரவாளருக்கு முறையிட்டு அவர்களுடைய வாக்குகளைப் பெறலாம் என்றும் தெரிவிக்கிறார். அவருடைய நோக்கம், பெருவணிகத்தின் கட்டிப்பாட்டிற்குள் இருக்கும் இரு கட்சி முறையை முற்றிலும் எதிர்ப்பது அல்ல; இரண்டில் ஒன்றிற்கு இடதுபுறம் செல்லுமாறு அழுத்தம் கொடுத்தலேயாகும். இந்த வார தொடக்கத்தில் நாடெர் ஓர் அறிக்கையை வெளியிட்டார்; இதில் அவர் கெர்ரியை வட கரோலினா செனட்டரான ஜோன் எட்வர்ட்சை தன் உடன் நிற்கும் துணை ஜனாதிபதியாக அறிவிக்கவேண்டும் எனக் கோரினார்; ஏனெனில் அவர்தான் நாடெருக்குக் கிடைக்க வாய்ப்பு இருக்கக் கூடிய வாக்குகளைத் திறமையுடன் முறையீடு செய்து பெற்றுவிடுவார் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார். ஈராக் போரைப் பொறுத்தவரையில் கெர்ரியின் நிலைதான் எட்வர்ட்ஸுக்கும்; அக்டோபர் 2002 தீர்மானத்தில் புஷ்ஷின் போருக்கு ஒப்புதல் கொடுத்து வாக்கு அளித்ததிலும், பின்னர் செப்டம்பர் 2003 ல் தொடர்ந்து ஆக்கிரமிப்பிற்கு ஆகும் கூடுதலான செலவினங்கள் கோரிக்கைக்கு எதிராக, ஹோவர்ட் டீனுக்கு எதிராக அவரும் கெரியும் பிரச்சாரம் செய்திருந்த காலத்திலேயே இது நடந்தது; டீனுடைய முயற்சிகள் போர் எதிர்ப்புத் தன்மையைத் தீவிரமாக்கி இருந்தன. 2004 தேர்தல்களைப் பொறுத்தவரையில், முக்கியமான பிரச்சினை நாடெரைப் பொறுத்தவரையில், ஈராக்கியப் போரல்ல, வணிகக் கொள்கைதான் என்ற அறிவிப்பு இதில் இருந்து புலப்படுகிறது; ஏனெனில் எட்வர்ட்ஸ் தன்னை ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி பதவிக்கான துவக்கத் தேர்தல்களில் பிரபலமாக ஆக்கிக்கொண்டது, அமெரிக்க உற்பத்தித் தொழிற்துறைகளில் வேலைகளின் மீதான "தடையற்ற வணிகத்தின்" தாக்கம் பற்றிய அவரது விமர்சனம் மூலமாகத்தான்.ஜனாதிபதி வேட்பாளருக்கான வாக்கெடுப்பிற்கு முன்பு, நாடெருடையை ஆதரவாளர்கள் பிரதிநிதிகளுக்கு ஒரு பகிரங்கக் கடிதத்தை வினியோகித்தனர்; இதில் நாடெர், காமெஜோ முன்வைத்திருந்த "ஒற்றுமைத் தீர்மானத்திற்கு" (காப் மற்றும் நாடெர்-காமெஜோ கூட்டு ஒப்புதல்கள் பற்றியது) ஆதரவு தேவை என வலியுறுத்தியிருந்தார். தன்னுடைய பிரச்சாரம் பசுமைக்கட்சியை வளர்ப்பதற்கு காப் செய்வதைவிடக் கூடுதலாகச் செய்யும் என்றும் "இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை அதிகம் கவலைப்படாமல், பல நெருக்கமான முடிவுகள் இருக்கும் மாநிலங்களில் இருந்து தேசிய வாக்குகளைப் பெறப் போவதில்லை" என்ற முடிவையும் பெரிதும் குறை கூறினார். நாடெர் தொடர்ந்தார்: "உங்கள் கட்சியை விரிவு செய்ய இது வினோத வழிவகையாகும்; இது ஒரு வருந்தத்தக்க முன்னோடியாக ஜனநாயக வாதிகள் சுரண்டுவதற்கு இடமளித்துவிடும்". ஜூன் 24, வியாழன் இரவு அன்று, சில நூற்றுக்கணக்கான பசுமைக் கட்சியினர் மாநாட்டிற்கு முன் நடந்த ஒரு கூட்டத்தில் கட்சியின் ஜனாதிபதி பதவிக்காக வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் பேசுவதைக் கேட்கக் கூடினர். துவக்கத்தில் பசுமைக் கட்சியின் வேட்பு முறையை நாடியிருந்த காமெஜோ, இப்பொழுது நாடெரின் துணை ஜனாதிபதி வேட்பாளராக இருப்பதற்கு ஒப்புக் கொண்டார்; இவர் கூட்டத்தில் காப் மற்றும் இன்னும் குறைந்து ஆதரவைக் கொண்டிருந்த மூன்று வேட்பாளர்களுடன் உரை நிகழ்த்தினார். இந்தக் கூட்டத்தில் நிறைய ஏளன ஒலிகளும், பல ஆதரவாளர்களின் புறத்திலிருந்து நகைப்பொலியும் கேலி ஆரவாரங்களும் நிறைந்திருந்தன. நாடெருடைய பிரச்சாரத்தை பசுமைக் கட்சி அமைப்பின் நீண்ட காலத் திட்டத்திற்கு ஒரு தடை என்று, காப் சித்தரித்துக்காட்டினார், தன்னுடைய பிரச்சாரம் "பசுமைக் கட்சியினருடன் வளர்தல்" என்ற நோக்கத்தைக் கொண்டுள்ளது என்றும் கூறினார்; பசுமைக் கட்சியில் இல்லாத ஒருவரை நியமிப்பதைவிட, ஒரு பசுமைக் கட்சி வேட்பாளரை நியமிப்பதுதான், "நிறுவனத்தின் சுய மரியாதை" செயல் ஆகும் என்று அவர் குறிப்பிட்டார். காமெஜோ கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நின்றால் தான் அவருக்குச் சாதகமாக விலகிக்கொள்வதாகவும் குறிப்பிட்டார். அதே நேரத்தில், அவர் "புஷ்ஷைத் தவிர எவரேனும்" என்ற கருத்திற்குத் தெளிவான ஆதரவைத் தெரிவித்தார்; இந்த உணர்வுதான் பசுமைக் கட்சியின் பல ஆதரவாளர்களையும் இறுதியில் கெர்ரிக்கும், ஜனநாயகக் கட்சிக்கும் வாக்களிக்கச் செய்துவிடும் என்றார். "ஜோர்ஜ். டபுள்யூ. புஷ் ஒரு பிரச்சினை; ஜார்ஜ் புஷ் வெளியேற்றப்படவேண்டும்" என்றார் காப். காப்புடைய செய்தித் தொடர்பாளர் ஒருவர், பின்னர் இந்த நிலைப்பாட்டிற்கான தர்க்கத்தை எடுத்துரைத்தார், ஒரு WSWS நிருபரிடம் அவர் கூறினார்: "புஷ்ஷை அதிகாரத்தில் இருந்து அகற்றுவது மிகவும் முக்கியமானது ஆகும். கெர்ரியை பெருவணிக, இராணுவவெறியாளர் என்று (காப்) விளக்கினாலும், இரண்டாம் முறை புஷ் நிர்வாகம் வருவதைப் பற்றி அவருக்கு அச்சம் உண்டு, புஷ்ஷை வெளியே அகற்ற ஒரே வழி கெர்ரி வெற்றிபெறுவதுதான்." இந்த வாதத்தின் அப்பட்டமான சந்தர்ப்பவாதத்தை காமெஜோ பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வியாழக்கிழமை இரவுக் கூட்டத்தில், பசுமைக் கட்சியினர் ஒருபோதும் ஜனநாயகக் கட்சிக்கு வாக்குப்போடக்கூடாது என்று கூறினார். "புஷ் என்ன செய்யவேண்டும் என்று விரும்புகிறாரோ அதைத்தான் கெர்ரி செய்வார்; இன்னும் சிறந்த முறையிலேயே செய்வார்" ஆனால், அப்படிப்பட்ட நிலையில், நாடெர் ஏன் ஊகிக்கக்கூடிய ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்கு உபயோகமான ஆலோசனை கூறுகிறார் என்பதற்கு இவர் விளக்கம் கொடுக்க வில்லை. 2000 தேர்தலில் நாடெரின் பசுமைக் கட்சி "கெடுக்கும் முறையைக்" கையாண்டு புஷ்ஷை வெள்ளை மாளிகையில் அதிகாரத்தில் இருத்தியது பற்றி செய்தி ஊடகமும், ஜனநாயகக் கட்சியும் குறைகூறியதைப் பற்றி இருபிரிவுகளுமே உணர்ந்துதான் உள்ளன. அத்தகைய பிரச்சாரம் இரண்டு நோக்கங்களைக் கொண்டது: ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி என்ற இரு கட்சிமுறையின் ஆதிக்கத்திற்கு சவால்விடும் எந்த மூன்றாம் கட்சியையும் அது செல்வாக்கை இழக்கவைக்கும்; இரண்டாவதாக கோரும் அவர் குழுவினரும் 2000ம் ஆண்டு தேர்தலில் மக்கள் விரோத வழியைக் கையாண்ட குடியரசுக்கட்சியின் முறைகளையும், அமெரிக்கத் தலைமை நீதிமன்றம் புளோரிடாவில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்திய அரசியல் சட்ட விரோதத் தலையீட்டை மூடிமறைப்பதற்கும் இது பயன்படுகிறது. அமெரிக்கா ஈராக்கில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதற்கு நாடெரை விட காப் குறைவான எதிர்ப்பைத்தான் தெரிவித்துள்ளார் என்றும் காமெஜோ கருத்துக் கூறியுள்ளார்; ஈராக்கிலிருந்து, அமெரிக்கா "கட்டறுத்துக் கொண்டு ஓடிவிடமுடியாது", ஈராக்கிய இடைக்கால அரசாங்கம் கேட்டுக்கொண்டால் அமெரிக்கப் படைகள் தொடர்ந்து இருக்கும் என்று காப் கூறிய அறிக்கைகளை மேற்கோளிட்டு, இது ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் இம்மாதத் தீர்மானத்தை அப்படியே முத்திரையிட்டுக் காட்டுகிறது என்றும் கூறியுள்ளார். நாடெரின் பிரச்சாரத்திற்கு ஒரு "இடது" முகத்தைக் காண்பிப்பதுதான் காமெஜோவின் குறிப்பான பங்காகும்; ஆனால் நாடெரோ சீர்திருத்தக்கட்சியின் வலதுசாரித் தலைவர்கள், மற்றும் புகானனுடன் விரும்பத்தகாத உத்திகளைக் கையாள்கிறார். American Conservative என்ற சஞ்சிகைக்கு கடந்த வாரம் கொடுத்த பேட்டி ஒன்றில் புகானன் நாடெரைப்பற்றி நட்பு முறையில்தான் கருத்துத் தெரிவித்துள்ளார். கலிபோர்னியாவில் ஹிஸ்பானிய வாக்காளர்களின் நலன்களைப் பிரதிபலிப்பதாகக் காமெஜோ கூறுவது நம்பிக்கையற்ற முறையில்தான் இருக்கிறது; நாடெரோ புகானனிடம் இனவெறி பிடித்த வலதுசாரியினர் விரும்பும் குடியேற்றத்தடைகளை ஆதரிப்பதாகக் கூறுகிறார். WSWS இடம் பேசிய பல மாநாட்டுப் பிரதிநிதித் தொண்டர்கள், இரு பிரிவுகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளினால் எழும் குழப்பத்தை வெளிப்படுத்தினர். காபை ஆதரிப்பவர்களில் சிலர் நாடெரே அமெரிக்கப்படைகள் இந்த ஆண்டு இறுதிவரையில் தொடர்ந்து இருக்கவேண்டும் எனக்கூறியதைச் சுட்டிக்காட்டுகின்றனர், காபோ, கடந்த மாதம் படைகள் உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் என்று கூறினார்.கெர்ரியுடைய பிரச்சாரத்தைப் போலவே, எந்தப் பகுதியும் ஈராக் போரைப் பற்றி ஒரு கொள்கை அடிப்படையிலான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. இரு பகுதிகளும் அமெரிக்க இராணுவக் கட்டுப்பாட்டிற்குப் பதிலாக ஐ.நா. நடத்தும் இடைக்காலப் பொறுப்பாட்சியை விரும்புகின்றன; அது ஈராக்கை பெரும் வல்லரசுகள் சார்பில் அமெரிக்கா பிரத்தியேகமாக கட்டுப்படுத்தும் முறையை அடிப்படையில் மாற்றும் எனவும் கருதுகின்றன; ஏற்கனவே அமெரிக்கச் செயல்முறை அரசியல், பொருளாதார மற்றும் இராணுவமுறையில் ஒரு பேரழிவாகப் போய்விட்டது என்றும் அவை கருதுகின்றன. இறுதிப்பகுப்பாய்வில், பசுமைக் கட்சி மாநாட்டு பூசலின் குழப்பமான, அரசியல் தெளிவற்ற தன்மை, பசுமைக் கட்சியின் முரண்பாடான, உறுதியற்ற தன்மையின் பிரதிபலிப்பாகத்தான் உள்ளது. இக்கட்சியைப் பொறுத்தவரையில் குழப்பமும் அரசியல் உறுதியற்ற தன்மையும் ஒரு வாழ்க்கை வழிநெறியாகவே இருக்கிறது. இது மத்தியதர வர்க்கத்தின் பலதரப்பட்ட, உறுதியற்ற அடுக்குகளை தளமாகக் கொண்டுள்ளது; அதில் பலரும் சுயமாய் ஏதேனும் தொழில் செய்பவர்கள் அல்லது பொருளாதார வாழ்வோடு ஓரத்தில் ஒட்டியவர்கள்; பழைய 1960 தீவிரமயப்போக்கில் பங்கு பெற்றவர்களில் இருந்து, பின்னர் நடுத்தர வயதிற்கு வந்துவிட்ட, கல்லூரிப்படிப்பைக் கண்டிருந்த மாணவர்களாக இங்குமங்கும் இருந்தவர்கள் ஆவர். |