World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

What the September 11 commission hearings revealed

Part four: A deliberate stand-down against airplane hijackings

செப்டம்பர்11 விசாரணைக்குழு எவற்றை வெளிப்படுத்தின

நான்காம் பகுதி: விமானக் கடத்தல்கள் வேண்டுமென்றே கைவிடப்பட்டன

By Patrick Martin
1 May 2004

Back to screen version

இது, செப்டம்பர் 11 அன்று உலக வர்த்தக மையம், பென்டகன் ஆகியவை தாக்கப்பட்டதைப் பற்றிய விசாரணைகள், அண்மையில் வாஷிங்டன் DC-யில் நடைபெற்றது பற்றிய நான்கு பகுதிகள் கொண்ட தொடர்கட்டுரையின் நான்காம் பகுதியாகும். முதல் கட்டுரை ஏப்ரல் 22, இரண்டாம் பகுதி ஏப்ரல் 26, மற்றும் மூன்றாம் பகுதி ஏப்ரல் 27லும் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்டன.

புஷ் நிர்வாகத்தினரும் அவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களும், பொதுவாகக் கொண்டுள்ள கூற்றுகளில் ஒன்று, செப்டம்பர் 11-க்கு முன் எவரும் கடத்தப்பட்ட விமானங்கள் பறக்கும் வெடிகுண்டுகளாகப் பயன்படத்தப்படமுடியும் என்று நினைத்துப் பார்த்திருக்கமுடியாது என்பது ஆகும்.

இந்த வகையான நினைப்புக்களில் மிகுந்த உறுதியைக் கொண்டிருந்த அறிக்கை ஒன்று மே 2002 ல் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் கோண்டலீசா ரைஸிடமிருந்து வந்தது.

இப்பொழுது நன்கு அறியப்பட்டுவிட்ட ஆகஸ்ட் 6-ம் தேதி ஜனாதிபதிக்கு அன்றாடத் தகவல் குறிப்பு பற்றி, செய்தி ஊடகங்களில் வந்திருந்த ஏராளமான தகவல்களுக்கு அவர் விடையளித்திருந்தார். உலக வர்த்தக மையம், மற்றும் பென்டகன் மீதான தாக்குதல்கள் திடீரென விண்ணிலிருந்து இறங்கிய இடிபோன்றவை என்ற பொதுக் கூற்றுக்களுக்கு எதிராக, அல்கொய்தா பயங்கரவாதத் தாக்குதல்களின் ஆபத்து அமெரிக்க மண்ணில் வரலாம் என்று குவிமையப்படுத்தியிருந்து CIA உயர்மட்ட இரகசியத் தகவல், செப்டம்பர் 11 தாக்குதலுக்கு ஐந்து வாரம் முன்னரே அவருக்குப்(புஷ்சிற்கு) கொடுக்கப்படிருந்தது என்பதை வெள்ளை மாளிகை ஒப்புக் கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தது.

இந்தத் தகவல் இருந்தது பற்றி மறைக்கப்பட்டதற்கு புஷ் நிர்வாகத்தின்மீது பெரும் கோபம் இருந்த நிலையில், ஒரு செய்தியாளர் கூட்டத்தில் ரைஸ் அம்மையார் இதைப் பற்றிப் பேசுவதற்கு அழைக்கப்பட்டார். தோற்றத்திலேயே கவலைக்கும், கலக்கத்திற்கும் உட்பட்டிருந்த நிலையில் ஒவ்வொரு கேள்விக்கும் விடையளித்த அவர் கடைசியில் அறிவித்தார்: "இந்த நபர்கள் ஒரு விமானத்தை எடுத்துக்கொண்டு உலக வர்த்தக மையம், மற்றொன்றை எடுத்துக் கொண்டு பெண்டகன்மீதும் மோதிவிடுவார்கள் என்றும், ஒரு விமானத்தையே ஏவுகணைபோலப் பயன்படுத்துவர் என்றும் எவரும் கணித்துக் கூறியிருக்கமுடியாது."

விமானங்கள் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படல்

9/11 விசாரணைக்குழு உறுப்பினரும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவரும் முன்னாள் வாட்டர்கேட் வக்கீலுமான ரிச்சர்ட் பென்-வெனிஸ்டே, பாதுகாப்பு செயலர் டோனாட்ல் ரம்ஸ்பெல்ட், FBI உடைய முன்னாள் இயக்குனர் லூயிஸ் ப்ரீ என்ற இரண்டு சாட்சிகளிடத்தும் நீண்ட விசாரணை செய்ததில், இக்கூற்று ஒரு பொருளாயிற்று. இரண்டு வெகு முக்கியமான உண்மைகளை நிலைநிறுத்த பென்-வெனிஸ்டேயினால் முடிந்தது: விமானங்கள் கடத்தப்பட்டு ஆயுதங்களாகப் பயன்படுத்தப் படக்கூடிய ஆபத்து நீண்ட காலமாகவே அமெரிக்க உளவுத்துறையினால் கருதப்பட்டது என்பதும், புஷ் நிர்வாகம் இந்தக் கவலையைப் பற்றித் தெரிந்திருந்தது என்பதுமாகும்.

9/11 விசாரணைக்குழுவின் முன் மார்ச் மாதம் ரம்ஸ்பெல்ட், ரைசின் மந்திரமான "எவரும் கற்பனை செய்திருக்கமுடியாது" என்பதைப் பிரதிபலிக்கும் வகையில் பேசிய கருத்திற்குச் சவாலாக, பென்-வெனிஸ்டே விசாரணைக்குழு அதிகாரிகளால் சேகரிக்கப்பட்டிருந்த ஏராளமான எச்சரிக்கைகளைப் பற்றிக் குறிப்பிட்டார். இந்த அடித்தளங்கள் கூட உளவுத்துறை ஆதாரங்களில் இருந்து வரவில்லை; இவை இணைதளத்தில் பரவலாக கிடைக்கக்கூடிய வெளியிடப்பட்ட அறிக்கைகள்தான். தலைமைத் தளபதி, ஜெனரல் ரிச்சர்ட் மியேர்சுடன், இணைந்து குழுமுன் தோன்றிய ரம்ஸ்பெல்டுக்கு இவர் சவால் விட்டார்:

 

பென் வெனிஸ்டே : செப்டம்பர் 10, 2001 வரை நாம் அறிந்துள்ளபடியும், உங்கள் உளவுத்துறை பற்றிய கருத்தில், நீங்கள் அமெரிக்காவில் விமானங்கள் கடத்தப்பட்டு கட்டிடங்களில் மோதுவது போல் செலுத்தப்படக்கூடும் என்ற முறையில் ஆலோசனைகள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை என்று உங்கள் அறிக்கையில் கூறியுள்ளீர்கள்.

நல்லது, அமெரிக்க உளவுத்துறைப் பிரிவு, பயங்கரவாதிகள் 1994-லில் இருந்தே திட்டங்கள் கொண்டிருந்தனர், விமானங்களை ஆயுதம் போல் பயன்படுத்த, அவற்றில் எரிபொருள், குண்டுகள், வெடிப் பொருட்களை இவற்றையெல்லாம் நிரப்பிக் கொண்டு தாக்குவதற்கு திட்டங்கள் தீட்டினர் என்பதற்கு ஏராளமான உளவுக்குறிப்புக்களைக் கொண்டிருந்தது. அல்ஜீரியர்கள் 1994ல் Eiffel Tower மீது ஒரு விமானத்தை மோதத் திட்டமிட்டிருந்தனர். 1995ல் போஜின்கா ஒரு சதித் திட்டம் தீட்டி, வெடிமருந்துகள் திணித்து ஒரு சிறு விமானத்தை CIA மீது செலுத்துவது பற்றி ஆராய்ந்திருந்தனர். நிச்சயமாக CIA -க்கு அது பற்றி நன்கு தெரிந்திருந்தது.

1997 ல் ஒரு UAV ஐப் பயன்படுத்தும் திட்டங்கள் இருந்தன. 1998ல் ஒரு அல் கொய்தாவைச் சேர்ந்த குழு ஒன்று வர்த்தக விமானம் ஒன்றை உலக வர்த்தக மையத்தின்மீது தாக்குதல் பற்றிய திட்டங்கள் பற்றிப் பேசியது. 1998-ல், விமானம் ஒன்றை ஆயுதமாகப் பயன்படுத்தும் சதி ஒன்று துருக்கிய உளவுத் துறையினால் உடைக்கப்பட்டது. 1999-ல் ஒரு விமான நிலையத்தில் விமானம் ஒன்றை வெடிக்கச் செய்யும் சதித்திட்டம் இருந்தது. 1999-லேயே ஒரு ஹாங்-கிளிடரைக் கொண்டு வெடிமருந்துகள் வீசும் திட்டம் இருந்தது. 1999 அல்லது 2000-த்தில் ஒரு 747 ஐக் கடத்தும் திட்டம் ஒன்று இருந்தது. 2001 ஆகஸ்ட்டில், நைரோபி தூதரகத்தில், நம்முடைய நைரோபி தூதரகத்தின் மீது விமானத்தை மோத இருப்பது பற்றிய தகவலை நம் உளவுத்துறை அறிந்திருந்தது.

எனவே, 2001 கோடையில் ஒரு பெரிய தாக்குதல்பற்றிய அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என்ற நிலையில், நீங்கள் குறித்தபடி FAA சுற்றறிக்கையும் விடுகிறது, ஆனால் அடிப்படை ஜிகாதிஸ்ட்டுகளின் அச்சுறுத்தல் உள்ள திறன் பற்றி மக்களுக்கு எந்த எச்சரிக்கையும் கொடுக்கப்படவில்லை; இதுபற்றி அவர்கள் சட்டமன்ற விசாரணைக் குறிப்புக்களில் படித்துத் தெரிந்தபோதிலும், அதாவது அமெரிக்காவிற்கு ஒரு கடத்தல் விமான அச்சுறுத்தல் உள்ளது என்று 2001 கோடையில் தெரிந்திருந்தபோதிலும், அது பற்றிய நடவடிக்கைகளுக்கு எவ்வித முயற்சியும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை என நான் கருதுகிறேன்.

விமான நிலையங்களில் எவரும் குறிப்பிட்ட அச்சுறுத்தலுக்காக எச்சரிக்கை கொடுக்கப்படவில்லை. விமானத்தை ஓட்டுபவர்கள் எவரும் தற்காப்புத் தன்மையில் நடந்துகொண்டதாகத் தெரியவில்லை.

அல்கொய்தாவிற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்போவது ஒரு விஷயம் நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் அமெரிக்காவைப் பாதுகாப்பது என்பது வேறு விஷயம். அப்படிப்பட்ட ஒரு விஷயம் உண்மையில் நடக்கும் என்பதை நாம் நினைத்தும் பார்க்கமுடியாது என்று கூறும் அறிக்கை 2001 ஐ ஒட்டி நம் உளவுத்துறையின் உண்மை நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை என எனக்குத் தோன்றுகிறது, ஐயா.

ரம்ஸ்பெல்ட்: ஓரிரு கருத்துக்கள். நீங்கள் கூறுவதை நான் ஏற்கிறேன்; பல தகவல்கள் விமானக் கடத்தல் திறனைப் பற்றி இருந்தன. UAV பற்றி (Unmanned Aerial Vehicles-- drones, ஆளில்லாத ஆகாய ஊர்திகள், டிரோன்கள் பற்றிக்கூட) எனக்கு ஞாபகம் இருக்கிறது. தனியார் விமானங்கள் சிலவற்றைத் தாக்கக் கூடும் என்பதையும் நான் படித்துள்ளேன். ஆனால் நான் அரசாங்கத்திற்கு மீண்டும் வந்தபின்னர் ஒரு வர்த்தக விமானம் கடத்தப்பட்டு ஏவுகணையாகப் பயன் படக்கூடும் என்பது பற்றி படித்ததாக நினைவு இல்லை. எனக்கு அவ்வாறு நினைப்பு இல்லை. உங்களுக்கும் அப்படியா, டிக்?

மையர்ஸ்: இல்லை, எனக்கும் அப்படி நினைவில்லை.

பென்-வெனிஸ்டே: அப்படியா, உண்மை என்ன என்றால் எங்கள் அதிகாரிகள், இந்தக் கூட்டு விசாரணையில் என்று நான் கூறலாம், எட்டு அல்லது பத்து அத்தகைய உதாரணங்கள், உளவுத்துறைக்கு நன்கு அறியப்பட்டிருந்திருந்தன எனக் கூறமுடியும். என்ன ஆச்சரியம்!, ஒரு தனிநபர் ஒரு சிறிய விமானத்தை வெள்ளை மாளிகை அருகிலேயே கீழிறக்கியதாகத் தெரியும்.

ரம்ஸ்பெல்ட்: ஆம், எனக்கு நினைவிருக்கிறது.

பென்-வெனிஸ்டே: அதுவும் கட்டாய இறக்கம் அது. ஒரு விமானம் வெடிமருத்துப் பொருட்களைக்கொண்டு CIA தலைமையகத்தையே தாக்க இருக்கப் போவததாகவும் CIA -க்குத் தெரியும். எனவே, நம்முடைய உளவுத்துறைக்குள்ளேயே, ஒரு திறனுடைய உத்தி இது என்ற உண்மை அறியப்பட்டிருந்தது என்பதை நாம் அறிவோம்.

அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்கள் தெரிந்துகொண்டிருந்தவை யாவை

ஏப்ரல் மாதப் பொது விசாரணைகளின்போது, 9/11 விசாரணை குழு உறுப்பினர், FBI இயக்குனர் பிரீயைக் கீழ்க்கண்ட முறையில் விவாதத்தில் ஈடுபடுத்தினார்; இது அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்கள் கடத்தப்பட்ட விமானங்கள் ஆயுதங்களாகப் பயன்படுத்தக்கூடிய திறன் உடையவை என்பது 1990- நடுப்பகுதியலேயே அவர்களால் கருதப்பட்டது என்பதை உறுதிபடுத்துகிறது.

பென்-வெனிஸ்டே: இந்தக் விசாரணைக்குழு பெரிதும் ஆர்வம் கொண்டுள்ள விஷயமாகிய, விமானங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்தப்படக்கூடிய திறன் பற்றி உளவுத்துறை அமைப்புக்கள் அறிந்த நிலைப்பாடு பற்றிய விஷயத்திற்கு வருவோம். 1996 அட்லான்டாவில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் போது விமானங்கள் ஆயுதங்களாகப் பயன்படுத்தக் கூடும் என்ற விஷயம் பாதுகாப்புப் பற்றிய முறையில் கருதப்பட்டதா?

பிரீ: ஆம், நாங்கள் சிறப்பு விஷயங்கள் என்ற தலைப்பின்கீழ் தொடர்ந்து விவாதித்தபோது, இவ்விஷயம் விவாதத்திற்கு வந்தது என நினைக்கிறேன். இவை பல அரசாங்கங்களுக்கு இடையே நடத்தப்பெறும் முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள், நடவடிக்கைகள். 2000, 2001 ஆண்டுகளில், இன்னும் சொல்லப்போனால் 2000 ஒலிம்பிக்ஸ் போதும், திட்டங்களில் இது ஒரு அம்சமாகவே இருந்தது. அத்தகைய குறிப்பிட்ட அச்சுறுத்தல் பற்றி எப்படிப்பட்ட வகைகளைக் கையாளவேண்டும் என்றுகூடக் குறிப்பிடப்பட்டிருந்தது.

பென்-வெனிஸ்டே: எனவே உளவுத்துறைப் பிரிவுகளில், பயங்கரவாதிகள் பயன்படுத்தக்கூடிய முறை, வகைகளில் ஒன்று, நம்முடைய உளவுத்துறை அறிந்த வகையில் அவர்கள் விவாதித்திருந்தது, விமானங்களைப் பயன்படுத்தி, அவற்றை வெடிமருந்து மூலம் நிரப்பித் தற்கொலை ஆயுதமாகக் கொள்வதும் ஒன்று?

பீரீ: அது அந்நிகழ்ச்சிகளுக்கான திட்டங்களில் ஒரு பகுதி, அது உண்மைதான்.

பென்-வெனிஸ்டே, பின்னர் கிளின்டன் காலத்திலிருந்து, இரண்டாம் புஷ் காலத்திற்கு மாறிய காலகட்டத்தைக் குவித்துக் காட்டினார், குறிப்பாக ஜெனோவாவில் 2001 ஜூன் மாதம் நடைபெற்ற G-8 நாடுகளின் உச்சி மாநாட்டை ஒட்டிய திட்டம் பற்றிக் குறிப்பிட்டார்.

பென்-வெனிஸ்டே: இதே விஷயம், மீண்டும் விவாதத்திற்கு வந்ததா? நீங்கள் கிளின்டன் நிர்வாகத்தில் இருந்து, புஷ் நிர்வாகத்தின் மாறுதலிலும் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் தொடர்ந்து இருந்தீர்கள் என்று எனக்குத் தெரியும். இந்த விஷயம் G-8 உச்சி மாநாடு, இத்தாலியில் நடைபெற்றபோது, மீண்டும் விவாதிக்கப்பட்டதா?.

பீரீ; எனக்கு அது விவாதிக்கப்பட்டதா என்று நினைவில்லை; அப்படியிருந்தாலும் அந்தத் திட்டத்தில் எனக்குத் தொடர்பு இருந்திருக்காது. FBI-க்கு அக்குறிப்பிட்ட திட்டத்துடன் தொடர்பு கிடையாது.

பென்-வெனிஸ்டே: ஒரு CAP அல்லது பறக்கக் கூடாத பகுதி என்ற கட்டுப்பாடு முதலில் நேபிள்ஸ் தயாரிப்புக் கூட்டத்திலும், பின்னர் ஜெனோவாவில் எட்டு நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தின்போதும் வலியுறுத்தப்பட்டது என்ற நமக்குக் கூறப்பட்டுள்ளது. இதன்பின்னர் எகிப்தின் ஜனாதிபதி முபாரக் உச்சி மாநாட்டின் மீதே, வெடிமருந்துகள் நிறைந்த விமானம் ஒன்று தற்கொலைப் படை போல் தாக்கும் திறனுடையதுபற்றி எச்சரிக்கை விடுத்திருந்தார் எனக் கூறப்பட்டது.

பிரீ: நான் அதை மறுக்கவில்லை. ஆனால் அந்தத் திட்டங்கள் அனைத்தும் இரகசியப் பணித்துறையினால், ஒருகால் பாதுகாப்புத் துறையினால் செய்யப்பட்டிருக்கும். அமெரிக்காவிற்கு வெளியே நடந்திருந்த அந்நிகழ்வோடு நாங்கள் தொடர்பு கொண்டிருந்திருக்க மாட்டோம், அதாவது சிறப்புத் திட்டங்கள் பற்றி; அதில் இருந்த சிலருக்கு நாங்கள் அறிவுறுத்தல்கள் கொடுத்திருப்போம்.

இதன் பின்னர் கேள்விகள் அத்தகைய தற்கொலைப்படைக்கான விமானக்கடத்தல் பற்றி மாறின:

பென்-வெனிஸ்டே: உங்களிடம் இதைக் கேட்கிறேன்: அமெரிக்காவிற்கு மீண்டும் வருவோம், 2001-ல் உளவுத்துறை சேகரித்திருந்த பல சதித்திட்டங்கள், உண்மையோ, கற்பனையோ, தற்கொலைக்குத் தயாராக இருந்த விமானியைக் கொண்டு விமானங்கள் மோதும் உத்திகள் ஆகியவற்றை அடுத்து, ஒருங்கிணைந்த ஆகாயப் பாதுகாப்புத் திட்டம் ஏதேனும் தாய்நாட்டைக் காப்பதற்கு, குறிப்பாக நம்முடைய தலைநகரைக் காப்பதற்குத் தயாரிக்கப்பட்டதா?.

பிரீ: அத்தகைய திட்டம் பற்றி எனக்கு ஏதும் தெரியாது.

பென்-வெனிஸ்டே: இத்தகவல் நாம் அறிந்துள்ளோம் என்ற நிலையில், இருந்த நிலைப்பாடான நம்முடைய ஆகாயப்பாதுகாப்புமுறை 9/11-ஐ ஒட்டி ஒரு பனிப்போர்த் தோற்றத்தைக் கொண்டிருந்தது என்பதை நாம் அறிந்துள்ள நிலையில், உட்காப்பு முறையை விட வெளித் தாக்குதல் முறையில் என்ற நிலையில், ஒரு பாதுகாப்புத் தோற்றத்திற்கா நாம் ஏன் அத்தகைய திட்டம் ஒன்றைக் கொள்ளவில்லை என்பதை நீங்கள் விளக்கமுடியுமா? இது கிளின்டன் நிர்வாகத்தின் தோல்வியா அல்லது புஷ் நிர்வாகத்தின் தோல்வியா, அதுவும் அக்காலக் கட்டம் வரை நாம் சேகரித்திருந்து தகவல்களின் அடிப்படையில் எத்தகைய தோல்வி இது?

பிரீ: நன்று, எந்த நிர்வாகத்தினுடைய தோல்வி இது என்று நான் சித்திரித்துக் கூறமாட்டேன். எனக்கும் தெரியும், உங்களுக்கும் தெரியும், சில ஆகாயப் பாதுகாப்பு முறைகள் வெள்ளை மாளிகையைப் பொறுத்த வரை இருந்தன. சில ஆகாயவழிப் பாதுகாப்பு முறைகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழ் வாஷிங்டன் டி.சி. பகுதியில் சேர்க்கப்பட்டுவிட்டன. வர்த்தக விமானங்கள் ஆயுதங்களாக ஒரு கடத்தலுக்குப் பின் பயன்படுத்தப்படக் கூடும் என்ற கருத்தை ஒட்டிய திட்டங்கள் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. ஒரு ஒருங்கிணைந்த திட்டம் அவ்வாறு இருந்ததாக நான் நினைக்கவில்லை.

பிரீ, பென்-வெனிஸ்டே இருவரும், ஜெனோவா உச்சி மாநாட்டைப் பொறுத்த வரையில் பென்டகன் ஆகாயப் பாதுகாப்புத் திட்டங்களில் தொடர்பு கொண்டிருந்தது, இதில் பாதுகாப்புக் காரணங்களிற்காக, ஓர் இத்தாலிய ஓட்டலில் தங்குவதைவிட, புஷ் ஒரு அமெரிக்க கடற்படைக் கப்பல் ஒன்றில், கடற்கரையிலிருந்து தள்ளி நிறுத்தப்பட்டிருந்ததில் உறங்கினார் என்பதை அறிந்திருந்தனர் என்றும் தெரியவருகிறது. நகரத்தைச் சுற்றி விமான எதிர்ப்பு ஆயுதங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டு, கடத்தப்பட்ட விமானம் ஒன்று கூடியுள்ள தலைமை அமைச்சர்கள் அல்லது ஜனாதிபதிகள் இருக்குமிடத்திற்கு வந்தால் சுட்டுத்தள்ளுமாறும் உத்திரவு இடப்பட்டிருந்தது. ஆனால் இத்தகைய எச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் வாஷிங்டன் DC-யில் எடுக்கப்படவில்லை.

NORAD பயிற்சி

9/11 விசாரணைக்குழு, கடந்த மாதம் CIA, FBI இவற்றிடம் பொதுவிசாரணை நடத்திய நேரத்திலேயே. வாஷிங்டன் போஸ்ட், வட அமெரிக்க ஆகாயப் பாதுகாப்புக் கட்டப்பாடு, (North American Aerospace Defense Command-NORAD), ரம்ஸ்பெல்ட் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டை ஏற்றபின், 9/11 தாக்குதல்களுக்குச் சில மாதங்களுக்கு முன்பு ஒரு தற்கொலைத் தாக்குதல் ஜெட் விமானம் கடத்தப்பட்டுப் பென்டகன்மீது மோதும் வகையைப் பற்றிய விவாதம் ஒன்றை மேற்கொண்டிருந்ததாகத் தகவல் கொடுத்துள்ளது.

ஏப்ரல் 15 அன்று வெளியிடப்பட்ட போஸ்டின் கட்டுரை, கூறுகிறது: "செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களுக்குச் சில மாதம் முன்னர் ஓர் உயர்மட்ட பயிற்சியைத் திட்டமிடும்போது, அமெரிக்க இராணுவ அதிகாரிகள் ஒரு கடத்தப்பட்ட அயல்நாட்டு வர்த்தக விமானம் பென்டகன்மீது மோத வந்தால் ஏற்படும் தோற்றத்தைப் பற்றி நேற்று விவாதித்தது."

ஓர் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி செப்டம்பர் 11 தாக்குதல்கள் நடத்திய உடனே கொடுத்திருந்த மின்னஞ்சல் செய்தியில் NORAD பயங்கரவாத தாக்குதலுக்கு ஆதரவைத் தெரிவித்திருந்த பின்னணியை ஆதாரமாகக் கொண்டது. நான்கு விமானங்கள் கடத்தப்பட்டு FAA இக்குத் தெரிவிக்கப்பட்ட பின்னரும், காரணம் கூற முடியாத வகையில் நியூயோர்க் நகரம், வாஷிங்டன் இவற்றின் மீது பாதுகாப்பிற்கு ஜெட் விமானங்கள் வரக் காலதாமதம் ஆனதற்கு ஆகாயப் பாதுகாப்புப் பிரிவு குறைகூறுதலுக்கு உட்பட்டிருந்தது.

விமானக் கடத்தல் அச்சுறுத்தல் திட்டம் ஒரு NORAD அதிகாரியால் கூறப்பட்டது என்றும் இது "கூட்டு நடவடிக்கை அதிகாரிகளால்", "மிகவும் உண்மைநிலையில் இருந்து பிறழ்ந்துள்ளது" என்று நிராகரிக்கப்பட்டது என்று அந்த அதிகாரி நினைவுகூர்ந்தார். அவருடைய மின்னஞ்சல், அமெரிக்க பசிபிக் கட்டுப்பாட்டிலிருந்தும் எதிர்ப்பு இருந்ததாக மேற்கோள் இடுகிறது; இத்தகைய மாதிரித்திட்டம், "பயிற்சிகளின் நோக்கங்களில் இருந்து" பிறழ்ந்தவை என்று அக்கட்டுப்பாடும் கருதியது. ஒரு பென்டகன் அதிகாரி, Positive Force என்று அழைக்கப்பட்டிருந்த இப்பயிற்சி முறை முன்வைக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டது என்று உறுதிப்படுத்தினார்; ஒரு போர்க்காலச் சூழ்நிலையில் பென்டகன் கட்டிடமே பயன்படுத்தப்படமுடியாமல் போனால் இராணுவப் படைகள் கட்டுப்படுத்துவது பற்றிய பயற்சியாக அது அமைக்கப்பட்டிருந்தது என்று அவர் கூறினார்.

9/11 விசாரணைக்குழு மீண்டும் மே மாதம் கூடும்போது செப்டம்பர் 11-ல் NORAD உடைய பங்கு பற்றி பழையபடி விவாதம் வரும். அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் 11 உலக வர்த்தக மையத்தில் மோதி நாற்பத்தி நான்கு நிமிடங்கள் கடந்தபின்புதான், லாங்க்லி விமானப்படைத்தளம், வர்ஜினியாவில் இருந்து போர்விமானங்கள் செலுத்தப்பட்டன. வாஷிங்டனுக்கு வெகு அருகாமையில் உள்ள ஆண்ட்ரூ விமானப் படைத்தளத்தில் இருந்து எந்த போர்விமானமும் ஏவப்படவில்லை.

ஜனாதிபதி புஷ், ஆகாயப் பாதுகாப்பு விமானங்கள் கடத்தப்பட்ட விமானங்கள் சுட்டுத் தள்ளப்படுவதற்கும், அந்த உத்தரவு எப்பொழுது பென்டகன் மூலம் NORAD போர் விமானிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது அல்லது எப்பொழுதாவது தெரிவிக்கப் பட்டதா என்பதும் தெளிவாக இல்லை. தாக்குதல்கள் நடந்த தினத்தன்று காலை 10.10 மணிக்குத்தான், நான்காவது ஜெட் பென்சில்வானியா புறப்பகுதியில் வீழ்ந்த பின்புதான், அத்தகைய உத்தரவைப் பற்றித் தாங்கள் தெரிந்துகொண்டதாக NORAD அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சாதாரண விமானக் கடத்தல் பற்றிக்கூட ஏன் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் இல்லை?

அவற்றின் அடிப்படைக் கருத்தையும், தர்க்கரீதியாக எழும் வினாவையும் பார்த்தோமானால், "கற்பனைத் தோல்வி" என்ற கூற்று தகர்க்கப்படுகிறது. அனைத்து வரலாற்றுச் சான்றுகளுக்கும் எதிராக புஷ் நிர்வாகத்தில் எவருமே ஒரு கடத்தப்பட்ட வணிக விமானம் பறக்கும் வெடிகுண்டாகப் பயன்படுத்தப்படலாம் என்ற கருத்தை ஏற்கவில்லை என்றே வைத்துக் கொள்ளுவோம். ஆனால் இன்னும் கூடுதலாக அறியப்பட்டுள்ள, கடத்தல்காரர்கள் அரசியல் காரணங்களுக்காக பயணிகளைப் பணயம் பிடிக்கும் நிலை இருக்கும் சாதாரண விமானக்கடத்தலைத் தடுக்க என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன? அடிப்படைப் பாதுகாப்பு முன் எச்ரிக்கை நடவடிக்கைகள் அத்தகைய தாக்குதல்களில் புறக்கணிக்கப்படுகின்றன என்பதுதான் தெளிவாகிறது.

2001 ஜூலை 5ம் தேதி, பல உளவுத்துறைப்பிரிவுகள் எச்சரிக்கைகள், பின்னர் தேசியப் பாதுகாப்புக் குழுவில் பயங்கரவாத எதிர் நடவடிக்கை அதிகாரி ரிச்சர்ட் கிளார்க்கின் இடைவிடா அழுத்தத்திற்குப் பின், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் கோண்டலீசா ரைஸ், மற்றும் வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி, ஆண்ட்ரூ கார்ட் இருவரும் முக்கிய உள்நாட்டு நிறுவனங்களின் தலைவர்களை வெள்ளை மாளிகைக்கு, கிளார்க்கைச் சந்திப்பதற்காக கூட்டினர். FBI தவிர, கூட்டாட்சி விமானப் போக்குவரத்து நிர்வாகம், சுங்கத்துறை, குடியேற்றம், குடியுரிமை துறை ஆகியவை இந்தக் கூட்டத்தில் அடங்கியிருந்தன.

ஜூலை 6-ம் தேதி ஒரு மின்னஞ்சல் செய்தி கிளார்க்கிடமிருந்து ரைசுக்கு, அக்கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்துக் கோடிட்ட குறிப்பொன்று அனுப்பப்பட்டது. FBI, CIA மற்றும் பென்டகன்" ஆகியவை "மூன்றில் இருந்த ஐந்து ஒரே நேரத் தாக்குதல்கள் நடைபெற்றால் திட்டம் எப்படி இருக்கவேண்டும் என்ற விரிவான திட்டத்தை வரைவர்" என்பதும் இதில் அடங்கியிருந்தது.

ஆயினும் கூட இம்முடிவுகளின் சாராம்சம் அவற்றைச் செயல்படுத்தவேண்டிய அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்படவில்லை. FAA நிர்வாகியான ஜேன் கார்வே அல்லது அவருடைய மேலதிகாரியான போக்குவரத்துத்துறை செயலரான நோர்மன் மினேடாவோ, இந்த ஜூலை 5ம் தேதி கூட்ட முடிவுகளைப் பற்றித் தெரிவிக்கப்படவில்லை. FAA பொதுவாக விமானப்போக்குவரத்து அமைப்புக்களுக்கு விமானக்கடத்தல் அச்சுறுத்தல் கூடுதலான கவனத்தில் இருக்கவேண்டும் என்று வலியுறுத்தியதே ஒழிய, குறிப்பிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று கூறவில்லை. FBI உடைய கள அதிகாரிகளுக்கும், உள்நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றிய எச்சரிக்கைகள் பற்றி தகவல் கொடுக்கப்படவில்லை.

"ஜூலை 27 தொடங்கி, FAA பாதுகாப்பு நெறிகளை அமெரிக்க விமான நிறுவனங்களுக்கு செப்டம்பர் 11-க்கு முன் வெளியிட்டது. இதைத்தவிர, FAA, விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு, அச்சுறுத்தல் திறன்கள் பற்றி, அதிலும் வெளிநாடுகளைப் பொறுத்தவரையில், பொது எச்சரிக்கைகளை நிறையக் கொடுத்தது. இவை அனைத்தும் கூடுதலான விமானப் பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தவேண்டியவை பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை. அவை விமான நிறுவனங்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என்று மட்டும் குறிப்பிட்டிருந்தன.

விசாரணைக்குழு உறுப்பினர், ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஜேமி கோரேலிக், கிளின்டன் நிர்வாகத்தில் உதவித் தலைமை வக்கீலாக இருந்தவர், இதைப்பற்றி ஏப்ரல் 8 அன்று சாட்சியம் கொடுத்த கோண்டலீசா ரைஸிடம் கேள்வியை எழுப்பினார்; ஆனால் புஷ்ஷின் தேசிப் பாதுகாப்பு ஆலோசகர் வாய் அடைத்துத் திகைத்த நிலையில் இருந்தது போல் தோன்றியது.

கோரேலிக்: நான் அறிந்த வரை சில உண்மைகளை முன்வைக்கிறேன்; நீங்கள் அவற்றின்மீது கருத்துக்களைத் தெரிவியுங்கள்.

முதலில், டிக் கிளார்க் உங்களிடம் தகவல், தெரிவித்திருக்கக் கூடும், CSG மட்டத்திலும் பலரும், தங்களுடைய தலைமையிடத்தில் தெரிவிக்காத சில உள்நாட்டு அமைப்பைச் சேர்ந்தவர்களும் தகவல்கள் கூறியிருக்கலாம். போக்குவரத்து மந்திரி மினேடாவிற்கு அச்சுறுத்தல் பற்றி எதுவும் தெரியாது. FAA உடைய நிர்வாகி, நம்முடைய விமானங்களின் பாதுகாப்பிற்கு பொறுப்பு உடையவருக்கும் எதுவும் தெரியவில்லை. ஆம், தலைமை வக்கீலுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது, ஆனால் அவர் ஏதேனும் இதைப்பற்றிச் செய்தாரா என்பது பற்றி எதுவும் தெரியவில்லை.

உங்களுடைய அறிக்கையில் FBI அங்கு என்ன நடக்கிறது என்பதைக் கண்டறியுமாறு அதிகாரிகளைப் பணித்தது எனக் கூறியுள்ளீர்கள். இதற்கு சான்று ஏதும் இல்லை. வாஷிங்டனில் சர்வதேச பயங்கரவாதம் பற்றிய பிரிவினர் அவர்கள் இந்த எச்சரிக்கைகள் பற்றி ஏதும் கேள்விப்பட்டதில்லை என்று கூறுகின்றனர், அவர்களைக் கூட்டி கருத்துக்கள் ஆராயப்படவில்லை என்று கூறுகின்றனர். SACs-க்கள், சிறப்புப் பொறுப்பு அலுவலர்கள், நாடெங்கிலும், குறிப்பாக மியாமியில் இருப்பவர்களும் இதுபற்றித் தெரியாது எனக் கூறுகின்றனர். எனவே உங்களிடத்தில் கேட்கவேண்டியதாக உள்ளது. நீங்கள் உண்மையில் FBI கொடுத்திருந்த தகவல்களைப் பகுப்பாய்வு செய்திருந்தீர்களா?

ரைஸ்: செய்திருக்கிறேன்.

கோரேலிக்: அப்படியானல் பயனற்ற முறையில் செய்துள்ளீர்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. நீங்கள் இதற்குத் தடையின்றி விடையளிக்கலாம். அவர்கள் எதையும் எவருக்கும் கூறவில்லை. எவரையும் போர் வரிசையில் முன் நிறுத்தவில்லை.

முன்னாள் செனட் உறுப்பினரும், ஒரு ஜனநாயகக்கட்சியைச் சேர்ந்தவருமான விசாரணைக்குழு உறுப்பினர் பாப் கெர்ரி, ஈராக் போரைத் தீவிரமாக ஆதரிப்பவர், புஷ் நிர்வாகத்தின் கூற்றான, செப்டம்பர் 11 தாக்குதல் பற்றி, போரின் முன்வரிசையில் இருந்தபோதிலும் கூட ரைஸ் கூறியிருப்பதுபோல், அல்கொய்தா பயங்ரவாதம் பற்றிய அச்சுறுத்தல் இருந்தபோதிலும், அது ஆச்சரியப்படத்தக்கதாக இருந்தது என்ற கூற்றில் இருந்த எதிர்மறைகளை சுருக்கிக் கூறினார். முன்னாள் பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரியான Cofer Black இவர் விசாரணை செய்ததுடன், FAA கட்டுப்பாட்டு அதிகாரிக்கும் மற்றும் கடத்தப்பட்ட விமானத்தில் இறந்துபோன விமான அதிகாரியான Betty Ong இடையிலான ஒலிநாடாவில் பதிவுசெய்யப்பட்ட விவாதத்தினை இவர் மேற்கோள் காட்டி குறிப்பிட்டார்.

கெர்ரி: உங்களிடம் கடைசியாக ஒரு கேள்வி: ஆண்டவன் பெயரில், இது எவ்வாறு நிகழ்ந்தது? போர்வரிசையில் முன் நிற்பதாகக் கூறுதல், பலவற்றைச் செய்து கொண்டிருக்கிறோம் என்றெல்லாம் கேட்டோம், ஆனால் நம்முடைய விமான நிலையங்களிலோ சிறிதும் கவலையற்று இருந்திருக்கிறோம். நம்மிடத்தில் ஆயுதங்கள் குவிந்துள்ளன. ஆனால் ஒரு விமானக்க கடத்தலை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவில்லை. நீங்கள் சொல்லலாம்: "நன்று, நாங்கள் சதித்திட்டத்தைப் பற்றி அறிந்திருக்கவல்லை"; ஒரு கடந்தல் எங்களை வியப்படையச் செய்தது என்று. அதுதான் பெட்டி ஓக், அவருடைய குரலைக் கேட்டபோது கூறியது, அரசாங்கமும் FAA-வும், நம்மில் ஒரு பிரிவுகூட சாதாரண கடத்தலுக்குத் தயார்நிலையில் இல்லை. ஆண்டவன் பெயரால், இது எப்படி நிகழ்ந்தது?

பிளாக்: நான் இதற்கு விடையளிக்கவேண்டுமா, ஐயா?

கெர்ரி; ஆம், உங்களால் முடிந்தால். முடியாவிட்டால் ரொம்ப நல்லது. என்னைப் பொறுத்தவரையில் என்னால் பதில் கூறமுடியாது.

பிளாக்: என்னுடைய விடை, எனக்குத் தெரியவில்லை; ஆனால் என்னுடைய பார்வையிலிருந்து, நான் ஒன்று கூறுவேன்: அதனால்தான் நாங்கள் இவற்றைப் பற்றிய முழுநேர நினைப்புடன், அதிக தூக்கமும் இல்லாமல் வாழ்ந்து வருகிறோம்.

.கெர்ரியின் கருத்தும் சிந்தனைக்கு உரியது. போர்த்தீவிரம் உடைய செனட் உறுப்பினர்கூட, புஷ் நிர்வாகத்தின் கூற்றுக்களான அச்சுறுத்தல் பற்றிய எச்சரிக்கைகளை 9/11 க்கு முன் தீவிரமாகக் கொண்டிருந்தது என்பதில் இருந்த வெளிப்படையான உண்மையற்ற தன்மையினால் செயலற்ற கோப உணர்வை வெளிப்படுத்துகிறார். சாதாரண விமானக்கடத்தல் பற்றிய அடிப்படையான முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகள் கூட மேற்கொள்ளப்பட இல்லை என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். ஏன் காட்டக்கூடாது? முழு, பரந்த அமெரிக்க உளவுத்துறை அமைப்பு முழுவதும் தூங்கப் போய், தனது கடையைக் கட்டிவிட்டது, "கற்பனை வளம் இல்லாமல் போய்விட்டது," போன்றவற்றையெல்லாம் கூறுவது பெரும் அகந்தை நிறைந்த சொற்களாகும்.

இன்னும் ஏற்கும் விதத்தில் ஒரு விடையுள்ளது, கெர்ரியோ, பிளாக்கோ சொல்லவும் தயங்குவார்கள்; அமெரிக்க அரசாங்கத்தின் ஒரு மட்டத்தில் வேண்டுமென்றே பாதுகாப்புத்துறை முற்றிலும் கைவிடப்பட்டது என்பதுதான் அது. ஒரு பயங்கரவாதத் தாக்குதலை புஷ் நிர்வாகம் விரும்பியது, ஒரு விமானக்கடத்தல், ஒரு சில நூறு மக்களுக்கு ஆபத்து, என்பது அதற்கு அதன் உலகளாவிய போர்முயற்சிகளுக்குப் போலிக் காரணம் கொடுத்திருக்கும்; ஏற்கனவே அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தான், ஈராக் இவற்றில் அரசாங்கங்களைக் கவிழ்த்து அப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ளன.

ரைஸ், புஷ், ரம்ஸ்பெல்ட், சேனி நிறுவனத்தார், இடைவிடாமல் வினோத முறையில் சொற்களைப் பயன்படுத்தி, செப்டம்பர் 11 அன்று நான்கு விமானங்கள் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு அவை உலக வர்த்தக மையம், மற்றும் பென்டகன் மீது செலுத்தப்படும் என்று அறிந்திருந்தால், அவர்கள் அதைப் பற்றி ஏதேனும் செய்திருப்பர் என்ற கூற்றைத் தெரிவித்துள்ளனர். இக்கூற்றுக்களில் ஏதேனும் உண்மை இருக்குமாயின் அது இதுதான். புஷ் நிர்வாகம் பொதுவாக ஒரு பயங்கரவாதத் தாக்குதல் வரும் என்று அறிந்திருந்தது; நிர்வாகம் அதை முக்கிய காரணமாக வரவேற்க இருந்தது. "கற்பனைத் திறமை இல்லை" எனக் கூறியது, அது இத்தாக்குதல் செப்டம்பர் 11 அன்று தாக்குதலின் விளைவு மகத்தான அழிவு கொடுப்பதாக இருக்கும் என்பதுதான்.

முற்றிற்று


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved