World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : கொரியா

Beheading of Kim Sun-il fuels South Korean protests over troop deployment

கிம் சுன்-இல் தலை கொய்து கொலையால் துருப்புக்களை அனுப்புவது தொடர்பாக தென்கொரியாவில் கொழுந்துவிட்டு எரியும் கண்டனம்

By John Chan
26 June 2004

Back to screen version

ஈராக்கில் புதன் கிழமையன்று, தென் கொரியாவைச் சேர்ந்த மொழிபெயர்பாளர் கிம்-சுன்-இல் இன் தலையை கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டது தொடர்பாக பொது மக்களிடையில் கடுமையான கருத்துவேறுபாடுகளும், ஜனாதிபதி Roh Moo-hyun நிர்வாகத்தை சூழ ஆழமான நெருக்கடியும் எழுந்துள்ளன. வலதுசாரி குழுக்கள் இந்தக் கொலையை கையில் எடுத்துக்கொண்டு அரபு நாடுகள் மற்றும் முஸ்லீம்களுக்கெதிரான உணர்வுகளை கிளறிவிட்டுக்கொண்டிருக்கும் அதே வேளையில், பொது மக்களது ஆத்திரமூட்டலை தூண்டுவிடுகின்ற வகையில் அரசாங்கம் நேரடியாக மேலும் 3,000- தென்கொரிய துருப்புக்களை, ஈராக்கில் அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்புப்படைகளின் வலிமையை வலுப்படுத்த அனுப்புவதற்கு திட்டமிட்டிருக்கிறது.

கிம்மின் கொலையைத் தொடர்ந்து உடனடியாக அடுத்து, புதன் கிழமையன்று தேசிய பாதுகாப்பு சபையை ரோக் புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கூட்டினார், அரசாங்கத்தின் கருத்துக்களை கலந்துரையாடினார். Kim- கொலையின் காட்டுமிராண்டித்தனத்தை ஜனாதிபதி கண்டித்தார் மற்றும் ஈராக்கிற்கு துருப்புக்களை அனுப்பும் திட்டத்தில் "மாற்றம் இல்லை" என்று அறிவித்தார். ''பயங்கரவாதத்திற்கு'' அரசாங்கம் இடம் கொடுக்காது என்று வலியுறுத்திக் கூறினார்--- இந்த அறிக்கை உடனடியாக வெள்ளை மாளிகையால் பாராட்டப்பட்டது.

தலையை வெட்டிக்கொலை செய்யப்பட்டது உடனடியாக அரசாங்கத்திற்கு எதிரான கண்டன எதிர்ப்புக்களைத் தூண்டிவிட்டது. புதன் கிழமை மாலை, சியோல் நகரத்தில் சுமார் 2000-பேர் மெழுகுவர்த்தி ஏந்தியும், ''புஷ்ஷும், ரோக்கும், கிம் சுன்-இல்-ஐ கொன்றார்கள்'' மற்றும் ''கொரிய துருப்புக்கள் உடனடியாக வெளியேற வேண்டும்'' என்ற முழக்கங்கள் அடங்கிய பதாகைகளுடன் அவர்கள் கண்டனப்பேரணி நடத்தினர்.

அந்த கண்டனப்பேரணியில் கலந்து கொண்ட ஒருவர் வாஷிங்டன் போஸ்டிற்கு: ''இது நமது போரல்ல. அமெரிக்காவுடன் நமது கூட்டணியின் பொறுப்பினால் அங்கே நாம் சென்றிருக்கிறோம். ஆனால் உண்மை என்னவென்றால் ஈராக் மக்கள் அந்த நாட்டில் நாம் இருப்பதை விரும்பவில்லை-- இது மிக சாதாரணமான உண்மையாகும். நடந்ததற்காக நான் தீவிரவாதிகள் மீது பழிபோடுகிறேன். ஆனால் அதே நேரத்தில் நான் ஜோர்ஜ் புஷ் மீதும் பழிபோடுகிறேன், தென் கொரிய மக்கள் அவர்களது விருப்பத்திற்கு விரோதமாக செயல்படுவதற்கு அவர் அழுத்தம் கொடுத்தார். இப்போது ஓர் அப்பாவி தென்கொரியர் மடிந்திருக்கிறார்.''

அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புக்களில், 60-சதவீதத்திற்கு மேற்பட்ட தென்கொரிய மக்கள் ஈராக்கிற்கு துருப்புக்களை அனுப்புவதை எதிர்க்கின்றனர். கிம் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் அனைத்து தென் கொரிய மக்களும் போரை ஆதரிக்கவில்லை என்று தெளிவுபடுத்துவதற்கு ஆங்கிலம் மற்றும் கொரியன் இரண்டிலும், நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்கள் அரபு தொலைகாட்சி அலைவரிசையான அல் ஜெசீராவிற்கு அனுப்பப்பட்டன. தென் கொரியாவின் சிறிய முஸ்லீம் சமுதாயமும் கிம்மை பிடித்துக்கொண்ட அல் கொய்தாவோடு தொடர்புடைய Jama'at al-Tawhid-யும் ஜிஹாத் குழுவும் அவரை விடுவிக்குமாறு கோரி மனு ஒன்றை அனுப்பியிருந்தது.

பல்வேறு போர் எதிர்ப்புக்குழுக்களும் தென் கொரியாவின் நகரங்களில் வாரக்கடைசியில் பேரணிகளை நடத்த திட்டமிட்டிருக்கின்றன. 365-அமைப்புக்கள் கூட்டாக ஓர் அறிக்கையை அறிவித்துள்ளன: ''தென் கொரிய மக்களாகிய நாங்கள் நரகத்தின் தலைவாசலில் நின்று கொண்டிருக்கிறோம்---- அந்த வாசலை, திறந்துவிட்டது ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின் அமெரிக்க நிர்வாகம் தான். ஆக்கிரமிப்புச்செய்துள்ள அமெரிக்க போர் வீரர்களால் மனித உரிமைகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு ஈராக் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை நாங்கள் அறிவோம். எனவேதான் அரசாங்கம் அங்கு துருப்புக்களை அனுப்புவதை தடுத்து நிறுத்த நாங்கள் முயன்று கொண்டிருக்கிறோம்''

கொரியாவின் தொழிற்சங்க கூட்டமைப்பு (KCTU) ஈராக்கிற்கு துருப்புக்களை அனுப்புவதை தடுத்து நிறுத்துவதற்கு தனது 500,000 உறுப்பினர்களும் ''ஒட்டு மொத்தமாக போராட்டத்திற்கு வருவார்கள்'' என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது. கொரியாவின் இரண்டு பிரதான வர்த்தக விமான நிறுவனங்களான கொரியன் ஏர் மற்றும் ஏசியானா நிறுவனங்களை சார்ந்த விமானிகள் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் ஈராக்கிற்கு துருப்புக்களை ஏற்றிச்செல்லும் விமானங்களை புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருக்கின்றனர்.

ரோஹ்-இன் நிலைப்பாடு அவரது ஆதரவாளர்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தியிருக்கிறது. 50-க்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் - அவர்களில் 20-பேர் Roh- விற்கு ஆதரவான Uri கட்சியை சேர்ந்தவர்கள்---- புதன் கிழமையன்று நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்து ரோக் ஈராக்கில் இராணுவத்தலையீடு தொடர்பான முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கின்றனர். ''பொதுவாக எந்தவிதமான காரணமும் இல்லாமல் நடத்தப்படுகிறதென்று கருதப்படுகிற ஒரு போருக்கு ஏராளமான துருப்புக்களை அனுப்ப விரும்புகிற ஒரே நாடு தென்கொரியா தான்'' என்று உரி (Uri) கட்சியின் உறுப்பினர் Kim Won-Woong கூறினார்.

2002 டிசம்பரில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் Roh வாஷிங்டன் வடகொரியா மீது எடுத்திருந்த ஆக்கிரமிப்பு நிலைப்பாட்டையும், அந்த ஆண்டு தொடக்கத்தில் தென்கொரியா பள்ளிச் சிறுமிகள் இரண்டு பேரை கொல்வதற்கு காரணமாக இருந்த இரண்டு கவசவாகனங்களையும் ஓட்டிச்சென்ற இரண்டு அமெரிக்க போர்வீரர்களை விடுதலை செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட கடுஞ்சீற்றத்தையும் பயன்படுத்தித்தான் வெற்றி பெற்றார். அவரது நிர்வாகம் பொருளாதார சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாலும் சென்ற ஆண்டு ஈராக்கிற்கு துருப்புக்களை அனுப்புவதற்கு சம்மதித்ததாலும் பொதுமக்களிடையே அவரது ஆதரவு சரிந்தது. ஆனால் மார்ச் மாதம் வலதுசாரி கட்சிகள் பதவி நீக்க விசாரணையை கொண்டுவந்து அவரை நீக்குவதற்கு மேற்கொண்ட முயற்சி படுதோல்வியடைந்தது. அது உரி கட்சி உருவாக வழிவகுத்தது. ஏப்ரலில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் அக்கட்சி வெற்றி பெற்றது.

துருப்புக்கள் அனுப்பப்படுவதை ''மனிதநேய அடிப்படையிலான உதவிகளை'' ஈராக் மக்களுக்கு வழங்குவதற்காக என்று ரோக் நியாயப்படுத்துகிறார். ஏற்கனவே 660 தென் கொரியா இராணுவ மருத்துவர்களும், பொறியாளர்களும் ஈராக்கிற்கு அனுப்பப்பட்டிருக்கின்றனர். ஈராக்கின் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு போராளிகளோடு மோதல் ஏற்படுவதை தவிர்க்க முடியும் என்று நம்பி, ரோஹ் மேலும் 3000- துருப்புக்களை வடக்கு ஈராக்கின் குர்திஸ் பகுதிகளுக்கு அனுப்ப இருக்கிறார். இதுவரை அப்பகுதியில் ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பு உணர்வுகள் அதிகமாக இல்லை. தென்கொரியா படை வீரர்கள் அனுப்பப்படுவார்களானால், ஈராக்கில் அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் படைகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய படைப்பிரிவாக அது அமையும்.

மனிதநேய அடிப்படையிலான கவலைகளுக்கும் ரோஹ்-ன் முடிவிற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. 2002 தேர்தல் பிரச்சாரத்தில் வாஷிங்டனின் கட்டளைக்கு ''அடிபணிந்து'' செல்லப்போவதில்லை என்று அவர் அறிவித்தார். தேர்தலுக்கு பின்னர் ரோஹ் தென்கொரியாவில் அமெரிக்க உறவை நிலைநாட்டுவதிலும் புஷ் நிர்வாகத்தோடு நெருக்கமான நட்பு வைத்துக்கொள்வதிலும் மிக கவனமாக இருந்தார். வட கொரியாவின் அணு திட்டங்களுக்கு எதிராக வாஷிங்டன் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு நிலைப்பாட்டை மட்டுப்படுத்த வேண்டுமென்று உறுதிமொழியை கைமாறாகப் பெற்று ரோஹ் சென்ற ஆண்டு துருப்புக்களை அனுப்புவதற்கு சம்மதித்தார்.

தென்கொரியாவிலிருந்து துருப்புக்கள் அனுப்பப்படுவதற்கு வளர்ந்து வருகிற எதிர்ப்பு ரோஹ்-ன் அரசியல் பிரச்சனையை அதிகரித்துள்ளது. அவர் பதவிக்கு வந்தது அமெரிக்காவிற்கு எதிரான விரோதப்போக்கு மற்றும் மக்களுக்கு ஒவ்வாத கொள்கையை ஜனாதிபதி அறிமுகப்படுத்தியதால் மக்களது வாழ்க்கத்தரம் மோசமடைந்ததால் எழுந்த எதிர்ப்பினாலுமாகும். Abu Mussab Al-Zarqawi தலைமையில் இயங்கிவருவதாக கூறப்படும் Jama'at al-Tawhid மற்றும் ஜிகாத் குழு பிற்போக்குத்தனமாக முடிவெடுத்து பிணைக் கைதியை தலையைவெட்டி கொலைசெய்தது, மற்றும் தென் கொரிய மக்கள் அனைவர் மீதும் எடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கை என்று அறிவித்திருப்பது, ரோஹ்-ன் கரத்தை வலுப்படுத்துவதற்கு சேவை செய்திருக்கிறது.

இந்த வகையில் நாட்டின் மிக அதிக விற்பனையுள்ள செய்திப்பத்திரிகையான Chosun Ilbo, '' இந்த சம்பவம் அதிர்ச்சி தரக்கூடியதும், துயரமிக்கதுமாகும், ஆனால் ஈராக்கிற்கு துருப்புக்களை அனுப்பவேண்டுமென்ற கொள்கையையும், நமது முடிவையும் அந்த நிகழ்ச்சி அசைத்துவிட முடியாது. இது போன்ற நேரங்களில் ஜனாதிபதியும் அரசாங்கமும் துருப்புக்களை அனுப்புவதில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர அந்த பிரச்சனை மக்களது கருத்தை பிளப்பதற்கு மீண்டும் அனுமதித்துவிடக்கூடாது'' என்று குரல் எழுப்பியுள்ளது.

கிம்மின் கொலை வலதுசாரி குழுக்களை ஊக்குவித்திருக்கிறது. அவர்கள் துருப்புக்களை அனுப்ப வேண்டுமென்று கோருகின்றனர், இனவாத உணர்வுகளையும் உசுப்பிவிட்டுக் கொண்டிருக்கின்றனர். சியோலில் சுமார் 50-பேர் கொண்ட ஒரு சிறிய கண்டனக்குழு Zarqawi- ன் உருவபடத்தை, எரித்தும், ''பயங்கரவாதத்தின் மீது போர்'' என்ற முழக்க அட்டைகளை ஏந்தியும் வந்தனர். சியோலில் உள்ள மத்திய கிழக்கு நாடுகளின் தூதர் அலுவலகங்களுக்கும், நகரத்தின் பிரதான மசூதிக்கும் பல மிரட்டல் தொலைபேசிகள் வந்ததாக கூறப்படுகிறது. ஈராக்கில், கிம்மை கொன்றதற்கு காரணமாக இருந்தவர்களை ''பயங்கரவாதிகளுக்கு'' எதிராக போரிடுவதன் மூலம் பழிவாங்க வேண்டும் என்று வெள்ளம் போல் மின்னஞ்சல் வந்ததைத் தொடர்ந்து தங்களது வலைத் தளம் செயலிழந்துவிட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.

தென்கொரியாவின் வெளிவிவகார அமைச்சகம், கிம் கடத்தப்பட்டது தொடர்பாக பொதுமக்களுக்கு தவறான தகவல் தந்திருக்கக்கூடும் என்பதால், அரசாங்கத்திற்கெதிரான பரவலான எதிர்ப்புணர்வு மேலும் கொழுந்துவிட்டு எரிகிறது. ஜூன் 18-ல் கிம்மும், அவரை பிடித்துக்கொண்டவர்களையும் காட்டுகின்ற ஒளி நாடாவை, அல் ஜெசீரா ஒளிபரப்பியதைத் தொடர்ந்து தான் அந்த தகவல் தங்களுக்குத் தெரியும் என்று வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் கூறினர். கிம் காணாமல் போய்விட்டார் என்ற தகவலை மூன்று வாரங்களுக்கு முன்னரே சியோலுக்கு தெரிவித்து விட்டார்கள் என்று இப்போது தெரியவருகிறது.

அசோசியேடட் பிரஸ் செய்தி நிறுவன நிருபர்கள் சியோலிலுள்ள வெளியுறவு அமைச்சகத்தோடு ஜூன் தொடக்கத்திலேயே தொடர்பு கொண்டு ஒரு தென்கொரிய குடிமகன் கடத்தப்பட்டாரா இல்லையா என்பதை விசாரித்தார்கள் என்று வியாழனன்று தெளிவுபடுத்தியுள்ளது. Kim- அவரைபிடித்துக் கொண்டவர்கள் தொடர்பான முந்திய வீடியோ டேப் பிரதியை ஏஜென்சி வைத்திருந்தது, அது இப்போது வெளியிடப்பட்டிருக்கிறது. தங்களது மொழிபெயர்ப்பாளர் மே 31- முதல் காணாமல் போய்விட்டார் என்ற தகவல்களை Kim- ஐ பணியில் அமர்த்திய கானா ஜெனரல் டிரேடிங் கம்பெனி உறுதிப்படுத்தியுள்ளது. இந்த தேதிக்கும் அல் ஜெசீரா ஒளிபரப்பிய தினத்திற்குமிடையில் குறைந்த பட்சம் நான்குமுறை அந்த கம்பெனியின் பிரதிநிதி பாக்தாத்திலுள்ள தென்கொரிய தூதர் அலுவலகத்திற்கு வந்திருக்கிறார் என்று பாக்தாத் தகவல்களை Agence France Press மேற்கோள் காட்டியுள்ளது.

இந்கக் கட்டத்தில் கிம் கடத்தப்பட்டது தொடர்பாக வாரக்கணக்கில் தென் கொரிய அரசாங்கம் எப்படி மெளனமாக இருந்தது என்பது தெளிவாக இல்லை, இதனால் அதிருப்தியும், ஆத்திரமும் அதிகரித்திருக்கிறது. தென்கொரிய வெளிவிவகார அமைச்சகம், புலனாய்வு அமைப்பு பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஆகியவற்றில் இந்த வழக்குப்பற்றி முழுமையாக விசாரிக்கும்படி அறிவிக்க இப்போது ரோஹ் நிர்பந்திக்கப்பட்டுள்ளார். அரசாங்கம் திறமைக்குறைவாக செயல்பட்டிருப்பதாக வலதுசாரி GNP கட்சி குற்றம் சாட்டியும், வெளியுறவு அமைச்சர் Ban Ki-moon-ஐயும் தேசிய பாதுகாப்பு சபையின் தலைவர் Lee Jong-seok-யும் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்று அக்கட்சி கோரியுள்ளது.

இந்த சம்பவங்கள் முழுவதும் அரசாங்கத்திற்கும் மற்றும் அரசியல் ஸ்தாபனத்திற்கும் பொதுமக்களிடம் ஆதரவும் நம்பிக்கையும் இல்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved