World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா

Poland and the European elections

போலந்தும் ஐரோப்பியத் தேர்தல்களும்

By Marius Heuser
26 June 2004

Back to screen version

கிழக்கு ஐரோப்பிய நாடுகள் முழுவதும் தீவிர அரசியல் துருவமுனைப்படல் பின்னணி இருக்கும் நிலையிலும், பரந்த மக்களுக்கும் ஆளும் செல்வந்தத் தட்டிற்கும் இடையே விரோதப் போக்கு என வரும்பொழுது, போலந்து தனி உதாரணமாகவே விளங்குகிறது. இது ஜூன் 13ம் தேதி நடைபெற்ற ஐரோப்பியத் தேர்தல்களில் தெளிவான வெளிப்பாட்டைக் கொண்டிருந்தது. வேறு எந்த நாட்டிலும் வாக்காளர் பங்கேற்பு இந்த அளவு குறைவாகவும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவும் இந்த அளவு சரிந்ததாக காணப்படவில்லை.

மொத்த வாக்காளர்களில் 20.8 சதவிகிதத்தினரே வாக்கெடுப்பில் கலந்துகொண்டனர். ஆளும் கட்சிகளான Democratic Left Alliance (SLD) மற்றும் Labour Union (UP) இரண்டும் 2001 பாராளுமன்ற தேர்தலில் 41 சதவிகிதத்தை பெற்றிருந்தபோது, இப்பொழுது 9.1 சதவிகிதம் மட்டுமே பெற்றன.

மொத்த வாக்காளர் பட்டியல் கணக்கிலேயே, மொத்தத்தில் 50 போலந்து வாக்காளர்களில் ஒருவருக்கும் குறைவாகவே ஆளும் கூட்டணிக்கு வாக்குப் போட்டனர். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிறுவப்பட்டுள்ள, பழைய SLD உறுப்பினர்கள் நிறையப்பேரைக் கொண்ட, அரசியலில் புதிதாக வந்துள்ள அமைப்பான போலிஷ் சமூக ஜனநாயகக் கட்சி (SDPL) ஆச்சரியப்படத்தக்க முறையில் குறைவாக வாக்குகளைப் பெற்று, பாராளுமன்றத்திற்கு தேவையான குறைந்த 5 சதவிகித வாக்குகளையும் பெறமுடியாமல் போய்விட்டது. 2003 மார்ச் மாதம் SLD கூட்டணியில் இருந்து விலகிய விவசாயிகள் கட்சி (PSL) ஐரோப்பிய பாராளுமன்றத்தில் 6.9 சதவிகித வாக்குகள் பெற்று நுழையமுடிந்தது. 2001 பாராளுமன்ற தேர்தல்களில் இக்கட்சி மொத்தத்தில் 9.0 சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்தது.

இதற்கு மாறாக, முக்கியமான எதிர்க்கட்சியான, புதிய-தாராள குடியியல் அரங்கு Neo-liberal Civic Platform (PO), அதற்குத் தேவையான 30 சதவீத வாக்குகளை, குறைந்த வாக்காளர் வரவு இருந்தபோதிலும் அடைய முடியவில்லை. PO 23.5 சதவிகித வாக்குகளைத்தான் பெற்றது. 2001 தேர்தல்களில் PO மொத்தம் போடப்பட்ட வாக்குகளில் 12.7 சதவிகிதத்தை பெற்றிருந்தது.

இந்தத் தேர்தலில் தெளிவாக வெற்றிபெற்றவர்கள் வலதுசாரிக் கட்சிகளான ஆண்ட்ரேஜ் லேப்பெர் தலைமையிலான Samoobrona (Self Defence) உம், Leage of Polish Families (LPR) உம் தான். இவை இரண்டும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விரோதப்போக்கைக் காட்டியவையாகும். இரண்டும் சேர்ந்து 28 சதவிகிதத்தைப் பெற்றுள்ளன; LPR தன்னுடைய வாக்குகளை 16.4 சதவிகிதத்திற்கு உயர்த்தியுள்ளதோடு (2001ல் இருந்து 7.9 சதவீதத்தோடு ஒப்பிடுகையில்), சமூபோரானாவையும் விடக் கூடுதலாக (அது 2001ல் பெற்ற 10.2 சதவீதத்தோடு ஒப்பிடுகையில்) இப்பொழுது 11.6 சதவீதம் பெற்றுள்ளது. சட்டம் மற்றும் ஒழுங்கு கட்சியான (PiS) தன்னுடைய பங்கைச் சற்றே உயர்த்தி 12.5 ஐப் பெற்றது. (2001 தேர்தலில் இது 9.5 சதவிகிதத்தைப் பெற்றிருந்தது). இந்தக் கடைசிக் கட்சி PO எதிர்கால கூட்டணிப் பங்காளராகக் கருதப்படுகிறது.

மொத்தத்தில், மிக ஆச்சரியப்படத்தக்க முறையில் முடிவு இருந்துவிடவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தில் நுழைவது என்பது பெரும்பாலான போலந்து மக்களுக்கு வாழ்க்கைத் தரத்தில் பெரும் சரிவு என்பதே ஆகும். பிரஸ்ஸல்ஸ், போலந்து உறுப்பு நாடாவதற்கு முன் நிபந்தனையாக, அரசு உடைமையாக இருந்த நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட வேண்டும் என்றும் கூடுதலான அடிப்படை சீர்திருத்தங்கள் விவசாயம், மீன்பிடித்தல் துறைகளில் கொண்டுவரப் படவேண்டும் என்றும் விதித்திருந்தது.

இக்கொள்கைகளின் விளைவாக அதிகாரபூர்வமான வேலையின்மை 20 சதவிகிதத்தை ஏற்கனவே தாண்டியுள்ளது. போலந்தில் வேலையின்மைக்கான உதவித்தொகை மிகக் குறைவு, அதுகூட அதிக பட்சம் ஓராண்டிற்குத்தான் கொடுக்கப்படும். அதன்பின்னர், வேலையற்றோர் பெரும் ஏழ்மையில் வாடுவதைத் தடுக்க, இல்லாவிடின் பெரும் வறிய நிலையில் வாடுவதைத் தவிர்க்க எதுவும் இல்லை.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இந்த ஆண்டு மே 1ம் தேதி நுழைந்தது நாட்டின் சமூக நிலைமைகளை மோசமாகத்தான் செய்துள்ளது. நீண்டகால EU உறுப்புநாடுகளுக்குக் கொடுக்கப்படும் உதவித்தொகையில் ஒரு சிறுபகுதியைத்தான் போலிஷ் பண்ணைகள் பெறும்; அதே நேரத்தில் அவை மேற்கிலிருந்து பெரும் போட்டிகளை எதிர்கொள்ள வேண்டும். அதிகாரபூர்வ ஆய்வுகளின்படி, விவசாய நிறுவன அமைப்புக்களில் 26 சதவிகிதங்கள் இனி வளர்ச்சியுறுவதற்கு வாய்ப்புக்கள் இல்லை.

மற்ற பிரச்சினைகள் ஒருபுறம் இருக்க, இந்த ஆண்டு ஆரம்பத்தில், லெஸ்ஜெக் மில்லர் தலைமையிலான அரசாங்கம் ஹெளஸ்னர் திட்டம் என்று அழைக்கப்படும் ஒரு திட்டத்தை செயல்படுத்த தொடங்கியது; இது பொதுநலத் திட்டங்கள் மற்றும் சமூக செலவினங்களில் பெரும் குறைப்புக்களையும் ஓய்வூதியத் தொகை விவசாயிகளுக்கான சமுதாய காப்புத் தொகை பெருமளவு குறைக்கப்படுவதும் சம்பந்தப்பட்டதாகும்.

அரசாங்கம் பெருவாரியான மக்கட்தொகையுடன் தொடர்பை இழந்துவிட்டது. முந்தைய போலந்து அரசாங்கம், Election Action Solidairity (AWS), ஜெர்சி பூஜெக் தலைமையின் கீழிருந்த Freedom Union (UW) இவற்றின் கூட்டு, 2001 தேர்தல்களில், அதன் சமுதாய எதிர்ப்புக் கொள்கைகள், மற்றும் ஊழல்கள் மலிந்த நிலை இவற்றால், வாக்காளர்களால் பெரும் தண்டனைக்கு ஆளாக்கப்பட்டது. AWS, UW இரண்டுமே 1997 பாராளுமன்ற தேர்தல்களில் 47.1 சதவிகிதத்தில் இருந்து, கடந்த தேசிய தேர்தல்களில் மொத்தமாக 9 சதவிகிதத்தைத்தான் பெற்றன. அவை பாராளுமன்றத்திற்கு தேவையான குறைந்த அளவு சதவிகித வாக்குகளை பெறவும் இயலாமல் போயிற்று.

SLDஐ பொறுத்தவரை, இந்த AWS, UW சரிவினால் பெரிதும் நன்மையை அடைந்தது. SLD, செல்வாக்கிழந்த பழைய ஸ்ராலினிச கட்சியின் பின்தோன்றலான SdRP யில் இருந்து வந்ததாகும். SLD ஐ வழிநடத்திச் செல்லுபவர்கள் பழைய ஸ்ராலினிச செயலர்கள் ஆவர். இவர்கள் புதிய தாராள "தடையற்ற சந்தை" கொள்கைக்காக வாதிடுபவர்களாக மாறி, அரசியல் பதவிகள், அதிகாரங்கள் இவற்றின் முழு உரிமையையும் பெற்றனர்.

போலந்தின் தற்போதைய ஜனாதிபதியான அலெக்சாந்தர் க்வாஸ்நீவ்ஸ்கி, முன்பு ஸ்ராலினிச இளைஞர் பிரிவில் தலைவராக இருந்துபழைய ஆளும் கட்சியில் மிக உயர்ந்த பதவிகளுக்கு வந்தவர் ஆவார். பழைய அரசாங்கத்தின் தலைவரான லெஸ்ஜெக் மில்லர், ஸ்ராலினிச மத்திய குழுவின் செயலராக இருந்து ஒரு கடினமான ஸ்ராலினிசப் போக்கு உடையவராகக் கருதப்பட்டார். இப்பொழுதைய பிரதம மந்திரியான மாரேக் பெல்கா, மாநில கட்சியின் நீண்டகால உறுப்பினர் ஆவார்.

சில ஆண்டுகளாக, இத்தகைய மக்கள் ஜனநாயகத்திற்கு எப்படி விளக்கம் கொடுக்கிறார்கள் என்பதில் சிறிதும் மாற்றம் இல்லை. அதிகாரத்தைக் கைப்பற்றிய சிறிது காலத்திற்குள், SLD, UP, மற்றும் PSL இவற்றின் கூட்டு அரசாங்கம் ஊழல்கள் அம்பலப்படுத்தப்பட்டதில் முதல் வழக்கை சந்தித்தது; மற்றவர்களோடு இதில் அரசாங்கத்தின் தலைவரான மில்லரும் தொடர்பு கொண்டிருந்தார். ஆயினும்கூட, அரசாங்கம் வெட்டுக்களை செயல்படுத்தியதுடன், உறுப்பு நாடாவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் கோரிய தனியார் மயமாக்குதலையும் செயல்படுத்தியது. விவசாயிகள், சுரங்க ஊழியர்கள், மருத்துவமனை செவிலியர்கள், மற்றய தொழிலாளர்கள் நடத்திய பல தொடர் போராட்டங்களையும் அரசாங்கம் அசட்டை செய்ய முயன்றது.

கருத்துக் கணிப்புக்கள் SLD க்கு ஒற்றை எண் முறையில்தான் பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்று கூறியபோது, பாராளுமன்றத் தலைவர் மாரேக் போரோவ்ஸ்கி தலைமையில் 20 பிரதிநிதிகள் பிரிந்து SDPL கட்சியைத் தோற்றுவித்தனர். பிரதம மந்திரி மில்லரின் நிலைமை தொடர்ந்து இருக்கமுடியாமல் தள்ளப்பட்டதை அடுத்து அவர் மே 1ம் தேதி பதவியை ராஜிநாமா செய்தார். புதிய தேர்தல்களை நடத்துவதற்குப் பதிலாக SLD அதிகாரத்தை முயன்று தக்க வைத்துக்கொண்டு அதிகாரத்துவ சூழ்ச்சிகள் அனைத்தையும் பயன்படுத்தி அதிகாரத்தில் தொடர முற்பட்டது.

க்வாஸ்நீவ்ஸ்கி ஒரு பொருளாதார வல்லுனரான மாரேக் பெல்காவை இடைக்காலப் பிரதம மந்திரியாக நியமித்ததை ஒட்டி, இப்பொழுது SLD, பெல்காவிற்கு போலந்துப் பாராளுமன்றத்தின் பெரும்பான்மை கிடைப்பதற்கும், விரைவில் தேர்தல்கள் வருவதைத் தவிர்க்கவும், முயன்று வருகிறது. மே 14ம் தேதி பாராளுமன்றத்தில் ஒரு பெரும்பான்மையினால் பெல்கா தோற்கடிக்கப்பட்டார். அவருக்கு எதிராக 262 வாக்குகளும் ஜனாதிபதி நியமித்தவருக்கு 188 வாக்குகளும் கிடைத்தன.

பாராளுமன்றம் தன்னுடைய வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் உரிமையைக் கொண்டுள்ளது; ஆனால் நடைமுறையில் செயல்படக்கூடிய ஒரு மாற்று வேட்பாளரை அது இப்பொழுது முன்மொழியவில்லை. இதன் விளைவாக க்வாஸ்நீவ்ஸ்கி மீண்டும் பெல்காவின் பெயரைத்தான் பரிந்துரைத்தார். இவர் தேவையான வாக்குகளை இந்த வார வாக்கெடுப்பில் பெறாவிட்டால், அரசியலமைப்பு விதிகளின்படி, புதிய தேர்தல்கள் நடத்தப்படும்.

தனிப்பட்ட கட்சிகள் புதிய தேர்தலில் தங்களுடைய தேர்தல் வெற்றிகளை கணிக்கும் வகையில்தான் வாக்காளர்களின் பங்கு இந்த வழிவகையில் முழுமையாக உள்ளது. தேர்தல் வகையில் தோல்வியை எதிர்கொள்ளும் கட்சிகள் பெல்காவை ஆதரிக்க முற்பட்டுள்ளன. தேர்தலில் கூடுதலான நன்மையைப் பெறலாம் என்று கருதும் கட்சிகள் தேர்தலுக்கு ஆதரவைக் காட்டுகின்றன.

PO இன் தலைவரான டோனால்ட் டஸ்க், ஐரோப்பியத் தேர்தல்களின் முடிவு பெல்காவின் வாய்ப்புக்களை அதிகரிக்க உதவும் என்று கூறியுள்ளார்; ஏனெனில் அவர் மோசமாகத் தேர்தலில் முடிவுகளைக் கண்டிருந்த SDPL, PSL போன்றவற்றின் ஆதரவை நம்பலாம் என்று அவர் கருத்துத் தெரிவித்துள்ளார். ஆனால் உண்மையான ஜனநாயகத்துடன் இந்த முழு வழிவகையும் சிறிதும் தொடர்பு அற்றது என்பதுதான் தெளிவாகி இருக்கிறது.

அதே நேரத்தில், பொதுவாக நடைமுறையில் உள்ள எதிர்க்கட்சிகள், தற்போதுள்ள அரசாங்கம் கடைப்பிடிக்கும் இதேபோன்ற அல்லது இன்னும் தீவிர கொள்கைகளை கடைபிடிக்கப்போவதாக உறுதிகொண்டுள்ளன. போரோவ்ஸ்கி சமீபத்தில் SDPL, SLD உடன் இணைந்து செயலாற்றப்போவதாகவும், இரண்டுமே ஒரேமாதிரியான கொள்கைகளைத்தான் கொண்டுள்ளன என்றும் கூறியிருக்கிறார்.

POவைப் பொறுத்தவரை, அது சமூகநலச் செலவினக்குறைப்புக்கள் இன்னும் அதிகமாக ஆக்கப்படவேண்டும் என்று பலமுறையும் கூறியுள்ளது. உதாரணமாக ஹெளஸ்னர் திட்டத்தில் கூறியுள்ள வெட்டுக்கள் தீவிரப்படுத்தப்படும் என்றும், அரசுடைமை நிறுவனங்கள் இன்னும் விரைவான, தீவிரமான, முறையில் தனியார் மயமாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். PO செல்வாக்கிழந்த AWS இலிருந்து தோன்றியது; ஏழு ஆண்டுகளுக்கு முன் AWS க்கு பேரழிவுத் தோல்வி ஏற்பட்டபோதிலும், PO அதன் பழைய அரசாங்க தலைவரான புஜேக்கைத் தன்னுடைய வேட்பாளர் பட்டியலில் காட்டியுள்ளது.

ஒரு சமீபத்திய கணக்கீடு போலந்து ரேடியோவால் நடத்தப்பட்டது; இதன்படி போலந்து மக்களில் 14 சதவிகிதத்தினர்தான் புதிய தேர்தல்களை ஆதரிக்கின்றனர். கிட்டத்தட்ட 53 சதவிகிதத்தினர் இப்பொழுதுள்ள சேஜிம் அரசாங்கத்திற்கும் முன்பிருந்த அரசாங்கத்திற்கும் இடையே தாங்கள் எந்தவித பெருத்த மாற்றத்தையும் காணவில்லை என்று கூறியுள்ளனர்.

அதிகாரபூர்வ அரசாங்கத்தை எதிர்க்கும் கட்சிகள் சமூப்ரோனாவும் LPR ஆகும், அவை மக்களுடைய அதிருப்திக்கு முறையீடு செய்து, அதைப் பிற்போக்கு வழிகளில் செலுத்த முற்படுகின்றன. சமூப்ரோனா கட்சி 1991ல் ஆண்ட்ர்சேஜ் லேப்பராலும் மற்றவர்களாலும் தோற்றுவிக்கப்பட்டு, ஆரம்பத்தில் சிறிய விவசாயிகளின் தொழிற்சங்க முறையில் செயல்பட்டு வந்திருந்தது.

சமூக தேவைகளை திறமையுடன் பயன்படுத்தி, வியத்தகு நடவடிக்கைகளான தெருத்தடைகள் மூலம், இக்கட்சி கணிசமான செல்வாக்கை ஈர்த்தது. 2001 தேர்தலில் இது முதன் முறையாக, தன்னுடைய பிரதிநிதிகள் மூலமே, சேஜிமிற்குள் நுழையமுடிந்தது.

ஆரம்பத்தில் இருந்தே, சமூப்ரோனா, போலந்து சமுதாயத்தின் மிகப் பிற்போக்கான கூறுபாடுகளைத் தளமாக கொண்டிருந்தது. இக்கட்சி போலந்து தேசியவாதத்தை பிரச்சாரம் செய்து, செமிட்டிய எதிர்ப்பு, ஜேர்மானிய எதிர்ப்பு உணர்வுகளுக்கு ஊக்கம் கொடுத்து, வலதுசாரி தீவிர கூறுபாடுகளுடன் ஒன்றாக உழைத்து வந்தது. ஒருமுறை லெப்பர் தான் நாஜித் தலைவர் கோயெபெல்சுடைய உத்திகளை நன்கு படித்துள்ளதாக பிரகடனப்படுத்தினார்.

LPR, 2001ம் ஆண்டு தேசியவாம் சார்ந்த, சமய தளத்தை கொண்ட வானொலி நிலையமான ரேடியோ மேரிஜாவை சூழ உள்ள சக்திகளால் தோற்றுவிக்கப்பட்டது. அது தன்னை செமிட்டிய-எதிர்ப்பு, அமெரிக்க-எதிர்ப்பு, மற்றும் ஜேர்மனிய-எதிர்ப்பு அமைப்பு என அறிவித்துக் கொண்டுள்ளது. போலந்து தேசிய பண்பாடு காக்கப்படல் அடிப்படையில் மற்றும் அதில் சேர்ந்தால் அறநெறிச் சரிவு ஏற்படும் என்ற அடிப்படையில் EU வில் உறுப்பு நாடாவதற்கு எதிர்ப்பாக வாதிக்கிறது. துருக்கிய உணவு விடுதிகளும், மசூதிகளும் ஏற்கனவே ஒடெர் நதிக்கரை ஓரம் வந்துவிட்டதாக சுட்டிக்காட்டி, துருக்கியால் நாடு படையெடுக்கப்பட்டது என்ற அளவு வரை எச்சரிக்கையை கூட இது விடுக்கிறது.

இந்த கட்சிகள் எதுவுமே போலந்தின் பெருகிவரும் சமுதாயப் பிரச்சினைகளுக்கு விடையை கொண்டிருக்கவில்லை. அவற்றின் பிற நாட்டுப் பழிப்பு வெறி முற்றிலும் இப்பொழுதுள்ள சமூக உறவுகளை தக்கவைத்துக்கொள்ளும் முறையில்தான் உள்ளன. ஜேர்மனிய நாளேடான Financial Times Deutschland, க்கு ஐரோப்பிய தேர்தலுக்கு முன்கொடுத்த பேட்டி ஒன்றில், லெப்பர் அறிவித்தார்: "ஜேர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரியா இன்னும் பலநாடுகளில் இருக்கும் சமூக அதிருப்தி, ஐரோப்பா ஒரு பெரும் சமுதாய எழுச்சியினால் அச்சுறுத்தப்படும், ஏன் ஒரு சமூக புரட்சியினால்கூட அச்சுறுத்தப்படலாம் எனக் காட்டுகிறது" என்று தெரிவித்துள்ளார். இந்தக் கட்சிகள் அனைத்தினது இலக்கும் எப்படியாயினும் அத்தகைய எழுச்சியை தவிர்க்க முயலவேண்டும் என்பதுதான்.

இவற்றின் வெற்றிக்கு முழுக்காரணம் ஒரு தீவிரமான மாற்று முறை இல்லாததே ஆகும். கடந்த மே 18ல் நடந்த கருத்துக்கணிப்பின்படி, 71 சதவிகித போலந்து மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை நிராகரித்தபோதிலும் கூட, ஐரோப்பிய ஒற்றுமையை ஆதரிக்கிறார்கள். போலந்தில் அத்தகைய ஒற்றுமை தேவை என்பது தெளிவாக உணரப்பட்டாலும், அது உழைக்கும் மக்கள் அனைவரும் ஆளும் செல்வந்தத் தட்டினருக்கு எதிராக ஒன்றாகச் செயல்பட்டால்தான் அடையப்பட முடியும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved