World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: Perfecting the system of rejecting refugees

ஜேர்மனி: அகதிகளை நிராகரிக்கும் முறையை ஒழுங்கு படுத்துகின்றது

Martin Kreickenbaum
22 January 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஜேர்மனியின் வெளிநாட்டு அகதிகள் ஏற்கப்படும் அலுவலகம் (Germany's Federal Office for the Recognition of Foriegn Refugees - BAFI Bundesant fur die Anerkennung Auslandischer Fluchlinge), அதன் ஐம்பது ஆண்டுகள் பணி நிறைவு பெற்றுள்ளதைக் குறிக்கும் விழாவில், சிறப்பு பேச்சாளர்களாக அழைக்கப்பட்டிருந்த அரசியல்வாதிகள் அதன் பெயரின் பொருளுக்கு முற்றிலும் மாறுபட்டு அது செயலாற்றவேண்டும் என்பதைக் கிட்டத்தட்ட ஒரு கோரிக்கையாக முன்வைத்தனர். நாட்டின் உள்துறை அமைச்சர் ஒட்டோ ஷிலி (சமூக ஜனநாயக கட்சி- SDP) உடைய நினைவு நாள் உரையிலோ அல்லது அவருடைய பவேரிய மாநில சக ஊழியரான Guenter Beckstein (Christian Social Union - CSU) உடைய வாழ்த்துரையிலோ, தஞ்சம் கோரும் உரிமை இடம் பெறாமல், இந்த உரிமை எவ்வாறு "மிக அதிக அளவு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது" என்பதுபற்றித்தான் அதிகம் பேச்சு இருந்தது.

இக்கண்ணோட்டத்தில்தான், மிகக்குறைந்த அளவிலான வெற்றிகரமாக ஏற்கப்பட்ட தஞ்சம் கோரும் விண்ணப்பங்கள் அவநம்பிக்கையுடன் குறிப்பிடப்பட்டன. உண்மையில், 1980களிலிருந்து, அரசியல் வாதிகள் விருப்பிற்கேற்றவாறும், பின்னர் சட்டபூர்வமாக சட்டத்தின் ஆதரவும் கொடுக்கப்பட்ட BAFI தன்னுடைய அதிகாரத்தை முடிந்த அளவு பயன்படுத்தி, தஞ்சம் கோருவோர் எண்ணிக்கையையும் அங்கீகாரத்தையும் எவ்வளவு குறைக்கமுடியமோ அவ்வளவு குறைத்துக் கொண்டுதான் வந்துள்ளது. இந்த நிறுவனம் மிக அதிகமான அளவில் "வெளிநாட்டு அகதிகள் கோரிக்கையைத் தள்ளுபடி செய்யும் கூட்டாட்சி அலுவலகம்" ஆக ஆகியிருக்கிறது.

BAFI இன் தோற்றம்

தனிநபர் தஞ்ச உரிமை, ஜேர்மனியுடைய 1949 அரசியலமைப்பிலேயே ஆழமாகப் பதிந்து காணப்படுகிறது. அதன்படி: அரசியல்ரீதியாக விரட்டப்படுபவர்கள் தஞ்சம் கோரும் உரிமையை அனுபவிக்க முடியும்". உலகப்போருக்குப் பிந்தைய ஜேர்மன் கூட்டாட்சிக் குடியரசு, ஐக்கிய நாடுகள் சபையின் 14ம் விதியான அனைவருக்கும் பொதுவான மனித உரிமைகள் பிரகடனத்தை, அரசியலமைப்பு விதியாக ஏற்றுள்ள சில நாடுகளுள் ஒன்றாகும்.

நாஜி ஆட்சியின்போது நூறாயிரக்கணக்கில் ஜேர்மனியிலிருந்து வெளியேறிய அகதிகள் அருகிலிருந்த ஐரோப்பிய நாடுகளில் பாதுகாப்பு பெறாமற்போனதும், முகாம்களில் அடைக்கப் பட்டிருந்தனர் அல்லது நாஜிக்களிடமே ஒப்படைக்கப்பட்ட பொழுது, நாஜி ஆட்சியின் அனுபவங்கள் இதற்கு ஒரு முக்கிய பங்கை கொண்டிருந்தன. ஜேர்மனியில் போருக்குப்பிந்தைய அரசியலமைப்பை இயற்றும் பொறுப்புக் கொடுக்கப்பட்டிருந்த பாராளுமன்றக் குழுவில், பொதுவாக ஜேர்மனியரல்லாதவர்கள், சோசலிஸ்டுகள் ஆகியோருக்கும், சில இன குழுக்கள் மற்றும் அரசியல்வகையில் தஞ்சம் கோருவோருக்கு அந்த உரிமை கொடுக்கப்படக் கூடாது என்பது பற்றிய விவாதம் அதிகமாக இருந்தபோதிலும், கட்சி கடந்த நிலையில் ஒவ்வொரு தனி நபரும் உரிமை கோரலாம் என்ற கருத்து ஏற்கப்பட்டது; ஏனெனில் அப்பொழுதுதான் "தஞ்சம் கோரும் உரிமை" என்ற சொற்றொடருக்கே அது உரிமை கொடுக்கும் என்று சரியான முறையில் பொருள் கொள்ளப்பட்டது.

ஆயினும், நடைமுறையில், பல ஆண்டுகளில் தொடர்ந்து தஞ்சம் கோரும் உரிமை நீர்த்துப் போய், மதிப்புக் குறைவிற்கும் உட்படுத்தப்பட்டு 1993ம் ஆண்டை ஒட்டி, கிட்டத்தட்ட அது மதிப்பையே இழந்து போயிற்று. அது எப்பொழுதுமே அதிகாரபூர்வமான அரசியலின் தேவைகளுக்கும் கஷ்ட நஷ்டங்களுக்கும் உட்பட்ட தன்மை பெற்றதாக போய்விட்டது. இந்த இலக்கைக் கருத்திற்கொண்டு, கூட்டாட்சி வெளிநாட்டுத் தஞ்சம் கோருவோர் ஏற்பு அலுவலகம் தோற்றுவிக்கப்பட்டு அதன் 50 ஆண்டு கால வரலாற்றில் அது ஆளும் செல்வந்த தட்டினரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் செயல்பட்டு வருகிறது.

1953 ம் ஆண்டு வரை, அப்பொழுது ஜேர்மனியை ஆக்கிரமித்திருந்த நேசநாடுகள் எவருக்கு தஞ்சம் கொடுக்கலாம் என்ற உரிமையை நிர்ணயித்திருந்தன; ஜேர்மனிய நிர்வாக அமைப்போ அல்லது சட்டபூர்வமான நெறியோ தஞ்சத்தை நிர்ணயித்து நெறிப்படுத்தவில்லை.

இந்த நிலைமை 1951ம் ஆண்டு ஜெனிவா மாநாட்டுத் தீர்மானங்கள் ஏற்கப்பட்ட பின்னரும் மாறவில்லை. இத்தீர்மானங்கள் மிகப்பரந்த அளவில் அகதிகள் பற்றிய வரையறையைக் கொடுத்திருந்தாலும், தனிநபர் தஞ்சம் கோரும் உரிமை பற்றிப் பேசவில்லை; தீர்மானங்கள், வெளியேற்றப்படுதல் நாடுகடத்தப்படுதல் இவற்றிற்கெதிரான பாதுகாப்பை மட்டுமே கொடுத்திருந்தன.

"வெளிநாட்டு அகதிகள் அங்கீகரிக்கப்பட்டு பகிர்ந்து இடமளிக்கப்படுதல் பற்றிய ஒழுங்குமுறை" என்பது 1953 ஜனவரி 12ம் தேதி, இயற்றப்பட்டு, ஜெனிவா மாநாட்டு தீர்மானம் என்று ஜேர்மன் சட்டமாக நடைமுறைக்கு வந்ததுதான், வெளிநாடுகள் அகதி அங்கீகாரத்திற்கான கூட்டாட்சி அலுவலகம் தொடங்கியதைக் குறிக்கிறது. அதற்கு முன்பு, இந்த அமைப்பு அதிகாரம் குறைவாகக் கொண்டு, பழைய நூரெம்பர்க் போர்க்கைதிகள் முகாகமருகே போருக்குப் பின் அகதிகள் முகாமாக இயங்கி வந்த அலுவலமாக இருந்தது.

இந்நிறுவனத்தில் கிட்டத்தட்ட 40 அலுவலர்கள் இருந்தனர்; ஜெனிவா தீர்மானங்களின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு உரிமை உடையவர்கள் தகுதி பற்றி முடிவு எடுக்கும் அலுவலகமாகத்தான் 1965 வரை செயல்பட்டுவந்ததே ஒழிய, தஞ்சம் கோருபவர் அனைவரையும் பற்றிய முடிவு எடுக்கும் பொறுப்பைக் கொண்டிருக்கவில்லை. அப்பொழுது தஞ்சம் கோருவதற்கான வேண்டுதல்கள், கூட்டாட்சிக்கு பொறுப்புக்கூற கட்டாயம் இல்லாத வெளியார் போலீஸ் நிர்வாகம் (Aliens Police Authority) என்றிருந்த அமைப்பால் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்தத் துறையை பொறுத்தவரையில் 1938ம் ஆண்டு நாஜிக்களால் இயற்றப்பட்டிருந்த, பின்னர் சில இனக் கருத்துக்கள் மாற்றப்பட்டுவிட்ட Aliens Police Regulation என்ற அரசாங்க சட்டத்தின்கீழ் செயல்பட்டது.

கூட்டாட்சி முகவாண்மையின் முதல் பன்னிரண்டு ஆண்டுகள் அமைதியாகவே கழிந்தன. ஆண்டு ஒன்றிற்கு கிட்டத்தட்ட 2,500 விண்ணப்பங்கள், ஜெனிவா தீர்மானங்கள்படி, நடவடிக்கைகளுக்கு உட்பட்டன, அங்கீகாரம் கொடுக்கப்படுதல் 10-லிருந்து 50 சதவிகித மாறுதல்களுக்கு உட்பட்டிருந்தது, 1965 வரை கூட்டாட்சி குடியரசில் 10,000 அகதிகளுக்கும் சற்றுக் குறைவானோரே புகலிடம் பெற்றனர். இவர்களில் அநேகமாகப் பெரும்பாலானவர்கள், கிழக்கு ஐரோப்பா பகுதியிலிருந்து, ஜெனிவாத் தீர்மானங்களையொட்டியே வந்த அகதிகளாவர். அவர்கள் ஸ்ராலினிச ஆட்சியிலிருந்து தப்பி ஓடி வந்தது பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்பட்டாலும்கூட, சிலசமயம் தஞ்சம் கோருவோருடைய விண்ணப்பங்கள் மறுக்கப்பட்டு, அதேநேரத்தில் அவர்கள் பிராக்கிற்கோ, புடாபெஸ்டிற்கோ, வார்சாவிற்கோ செல்லும் விமானங்களில் உடனடியாக அனுப்பப்படுவதும் உண்டு.

BAFI உடைய வளர்ச்சி

1965ம் ஆண்டு, இந்த அமைப்பு ஒரு கூட்டாட்சியின் அலுவலமாக மாற்றப்பட்டு, கூட்டரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ், தஞ்சம் கோருவோர் விண்ணப்பங்கள் பரிசீலனை தவிர ஜெனீவா தீர்மானங்களின் அடிப்படையில் வெளியேற்றத்திலிருந்து பாதுகாப்பிற்கு உட்படும் பிரிவைச் சேர்ந்தவர்கள் பற்றிய பரிசீலனையையும் மேற்கொள்ளலாயிற்று. இந்த முடிவிற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருந்தன. முதலாவதாக தலைமை நீதிமன்றம் 1959 தீர்ப்பு ஒன்றில் தஞ்சம் கோரும் உரிமை பரந்த அளவிற்குட்பட்ட பரிசீலனையை பெறவேண்டும் என்று கூறியிருந்ததும், இரண்டாவதாக ஜேர்மன் வர்த்தகம், புலம்பெயர் தொழிலாளர் தேவை எனக்கருதியும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் அகதிகள் குறைந்த ஊதியங்களுக்கு அமர்த்தப்படக் கூடிய ஆதாரமாக நினைக்கப்பட்டனர். 1965ல், Aliens Pocice Regulation என்பது Aliens Act என்ற வேறு ஒரு சட்டமாக மாற்றப்பட்டு, முதல்தடவையாக தஞ்சம் கோருவோர் கடைப்பிடிக்கவேண்டிய வழிவகைகள் சட்டவடிவில் கொண்டுவரப்பட்டன.

1974-ம் ஆண்டுவரை பெரும்பாலான அகதிகள் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்தவர்களாவர். 1969ம் ஆண்டு செக்கோஸ்லோவாக்கியாவின் "பிராக் இலையுதிர்" தோற்கடிக்கப்பட்ட பின்னர், அவர்களில் 85 சதவிகிதத்தினர் புகலிடம் பெற்றனர். இந்நிலை 1970களின் நடுவில் மாறத்தலைப்பட்டு, ஜேர்மனியில் தஞ்சமுறுவோர் "மூன்றாம் உலகம்" என அழைக்கப்படும் பகுதிகளிலிருந்து பெருகிய முறையில் வரத்தலைப்பட்டனர். முதலில், சிலி நாட்டவர், பின்னர் வியட்நாமியர், பாலஸ்தீனியர்கள் என்று அகதிகள் வரத்தலைப்பட்டனர். 1979லிருந்து அநேகமாக ஆப்கானிஸ்தானிலிருந்தும், துருக்கியில் இருந்தும் எண்ணிக்கை அதிகமாயிற்று; 1980ம் ஆண்டு புகலிடம் கோரியோர் எண்ணிக்கை 108,000 ஆக உயர்ந்தது. அதேநேரத்தில் அகதிகள் என்று அங்கீகரிக்கப்பட்டவர்களுடைய எண்ணிக்கை 12 சதவிகிதத்திற்கும் குறைந்து, 1982 அளவில் இது 7 சதவிகிதமாயிற்று.

கூட்டாட்சியில் வெளிநாட்டு அகதிகள் அங்கீகார அலுவலகம், தலைமை நீதிமன்றத்தின் தீர்ப்புக்களுக்கு விரோதமாக, ஐரோப்பியரல்லாத அகதிகளின் உரிமை பற்றி மிகக் குறுகிய வரம்பையே நிர்ணயித்துக்கொண்டிருந்தது. பொதுவாகக் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து தப்பியோடிவருவோர் அதிக எண்ணிக்கையில் தஞ்சம் கொடுக்கப்பட்டும், சில சமயம் வெளியேற்றத்தின் பிடியிலிருந்து பாதுகாப்பும் பெற்றனர்.

ஆனால் வெளிநாட்டினரைப் பொறுத்தவரையில் அரசியல் சூழ்நிலை மோசமாகப் போய்விட்டது. 1973ம் ஆண்டின் எண்ணெய் நெருக்கடியுடன், வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதில் தடையேற்பட்டதுடன், நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கும் பெருகிவரும் சமூக நெருக்கடிக்களுக்கும் அவர்கள் பலியாடுகளாக ஆக்கப்பட்டனர். "பெரும் அலை போல் அகதிகள் கூட்டம்", "பொருளாதார அகதிகள்", "போலி தஞ்சம் கேட்போர்", என்ற சொற்றொடர்கள், எல்லாக் கட்சிகளையும் சேர்ந்த அரசியல்வாதிகளிடமிருந்து உதிர்ந்தவண்ணம் இருந்தன. 1980 பொதுத் தேர்தல்களின்போது, கூட்டாட்சி ஜனாதிபதியாக இருந்த Helmut Schmidt (SPD), தஞ்சம் கோரும் அடிப்படை உரிமை பற்றியதில் திருத்தம் ஏதேனும் வந்தால் தான் அதை ஆதரிப்பதாகக் கூறினார்.

அரசியலமைப்பு சட்டத்திற்கு திருத்தம் ஏதும் வரவில்லை என்றாலும், தஞ்சம் கோரும் உரிமை கடுமையாய் பலவீமானது. தஞ்சம் கோருவோருக்காக முகாம்களில் இடவசதிகள் ஏற்பாடாயின; பல அகதிகளும் விசா (Visa) கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டனர். அகதிகள் தக்க விசா இல்லாமல் ஏற்றப்பட்டால், விமான நிறுவனங்கள் அபராத தொகை கட்ட நேரிட்டது; தஞ்ச வழக்குகள் பற்றி விசாரணைமுறை மாற்றங்கள் பெற்றன. இந்த மாற்றங்கள் விரைவில் செயல்படுத்தப்படுவதற்காக, மூவர் அடங்கிய நடுவர் குழுவிற்குப்பதிலாக தஞ்சம் வழங்குதல் பற்றி ஒரே நபர் முடிவு எடுக்கும் நிலை ஒப்புக்கொள்ளப்பட்டது. தஞ்சம் கோருவோர் சட்டபூர்வமான பரிகாரங்கள் கோருவதில் பல தடைகள் ஏற்படுத்தப்பட்டன. அகதிகளின் விண்ணப்பங்கள் தஞ்சத்திற்கு ஒப்புதல் பெறாவிட்டால், அவர்கள் நீண்ட நாட்கள், கடுமையான பொருளாதார நஷ்டங்களையும் கொடுக்கும் சட்ட நடவடிக்கைகளை தங்கள் தஞ்ச உரிமைக்காக நிர்வாகப்பிரிவு நீதிமன்றங்களில் போராடும் நிலையேற்பட்டது.

இந்த நடவடிக்கைகள் பெரும்பாலும் ஆபிரிக்கா, ஆசியா, தென்அமெரிக்கா ஆகியவற்றிலிருந்து வரும் அகதிகளுக்கு எதிராகத்தான் பயன்படுத்தப்பட்டன. ஒரே ஆண்டிற்குள் தஞ்சம் கோருவோர் எண்ணிக்கை பாதியாகி, 1983ம் ஆண்டு 20,000 ஐ விட குறைந்து போயிற்று.

தஞ்சம் கோரும் உரிமை 1993ல் முடிவிற்கு வருகிறது

கிழக்கு ஐரோப்பாவிலும் பால்கன் பகுதிகளிலும் 1990களின் தொடக்கத்தில் இருந்த பெரும் கொந்தளிப்பினால், புதிய தஞ்ச நடைமுறைகளினாலும்கூட ஜேர்மனிக்கு ஓடிவருபவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தஞ்சம் கோருவோர் எண்ணிக்கை விரைவாக உயர்ந்தது. மேலும் உள்துறை அமைச்சரகம் BAFI அலுவலக அதிகாரிகள் எண்ணிக்கையை உயர்த்த மறுத்துவிட்டதால், தஞ்ச நடவடிக்கைகள் முடிவதற்குப் பலகாலம் பிடித்து, முடிவிற்கு காத்திருப்போர் எண்ணிக்கை மிகப்பெரிய அளிவில் வளர்ந்துவிட்டது. இந்தக் கஷ்டங்களும், தஞ்சம் கோரும் உரிமை மீதான மேலும் தாக்குதலை நியாயப்படுத்த பின்னர் பயன்படுத்தப்பட்டன.

மீண்டும் ஒருமுறை, தஞ்சம் கோருவோர், "பொருளாதாரப் புலம் பெயர்வோர்" எனவும், "போலியாகப் புகலிடம் கேட்பவர்கள்" சமூக பாதுகாப்பு முறைக்கு சுமையாயிருப்பவர் என்றும் கண்டிக்கப்பட்டனர், 1990ம் ஆண்டில் ஜேர்மனிய நாடுகள் மீண்டும் ஒன்றிணைந்து மகிழ்ந்திருந்த தேசிய கொண்டாட்ட நேரத்தில், தஞ்சம் கோருபவர்களைத் "தாக்குவது தவறாகாது" என்ற கருத்து ஏற்பட்டு, புதிய-நாஜிக்களின் குழுக்கள் தஞ்சம் புகுவோர் தங்கும் விடுதிகளுக்குத் தீவைத்தலும் தாக்குதல்கள் நடத்துதலும் வாடிக்கையாயிற்று.

1993ம்ஆண்டு, BAFI அரசியல் அழுத்தங்களுக்கு விடையிறுக்கும் வகையில் தஞ்சம் கோருவோர் விண்ணப்ப எண்ணிக்கையில், ஒப்புதல் 3.2 சதவிகிதத்தினருக்கு மட்டும் என்ற மிகக்குறைந்த அளவை மட்டுமே கொடுத்தது. BAFI நடுவர்கள், "தஞ்சமுறையில் சமரசம்" என்று கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் (CSU) மற்றும் சுதந்திர ஜனநாயகக் கட்சி (Free Democratic Party) கூட்டணி அரசாங்கம் சமூக ஜனநாயகக் கட்சியிடம் கொண்டிருந்த இணக்கத்திற்கு உட்பட்ட முறையில், விரைவாகவும், தாழ்ந்தும் நடக்கலாயிற்று. அநேகமாக எல்லா நடைமுறையையும் பொறுத்தவரையில் 1993 தொடக்கத்தில் வந்த "தஞ்ச சமரசம்", 1993 ஜூலை1-ம் தேதி சட்டபூர்வ அதிகாரத்தைப்பெற்றது, ஜேர்மனியை பொறுத்தவரையில் தஞ்சம் கோரும் உரிமையை அகற்றிவிட்டது.

BAFI உடைய வளர்ச்சி இந்தக் காலக்கட்டத்தில் கணிசமாக இருந்தது. "தஞ்ச சமரசத்தை" அடுத்து இதனுடைய 4,100 அலுவலர்களைத்தவிர, மற்ற அரசாங்கத்துறைகளிலிருந்த ஆயிரக்கணக்கானவர்கள் பணியில் இருத்தப்பட்டனர். இந்த அமைப்பு ஒரு நேரத்தில், மையத் தலைமை அலுவலகத்தை தவிர, நாடெங்கிலும் 48 கிளை அலுவலகங்களைக் கொண்டிருந்தது.

இன்றைய BAFI

அதற்குப்பின் அமைப்பு எண்ணிக்கையில் குறையத்தொடங்கி 24 அலுவலகங்களையும் 2,300 அலுவலர்களையும் கொண்டிருந்தது. 1993இலிருந்து தொடர்ச்சியாக விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்ததை அடுத்தும், தஞ்சம் கொடுக்கும் வரைமுறைகளில் கடுமையான பிடிப்புக்களும் ஏற்படுத்தப்பட்டதுமே காரணமாகும்.

இதற்கிடையில், அகதிகளுக்கு தங்கள் நாட்டைவிட்டு ஏன் ஒடிவந்துள்ளளோம் என்பதை விளக்குவதற்கு வாய்ப்புக்கள் கொடுக்கப்படுவதில்லை. மாறாக, தஞ்சம் கோருவதில் முறைகேடுகள் மலிந்துவிட்டன என்று காரணம் கூறி, நடுவர்கள் அகதிகளை முரண்பாடு நிலகைளில் ஆழ்த்தி, அதிர்ச்சிக்கு உட்படும் அகதிகள் தாங்கள் ஜேர்மனிக்கு "பாதுகாப்பு" என்று கருதப்படும் மூன்றாவது நாடுகள் முறையில் வருவதாக ஒப்புக்கொண்டு விடுவதால், அவர்களுடைய விண்ணப்பம் "சிறிதும் ஆதாரமற்றவை" என்று எளிதில் புறக்கணிக்கக் காரணமாகிவிடுகின்றன.

விமான நிலையங்களில் விரைவாகத் தஞ்ச நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், வெளியுறவு அலுவலக அறிக்கைகளிலிருந்து முன்னரே தயாரிக்கப்பட்ட கருத்துரைகளை எடுத்துக் கொள்ளுதல் இவற்றின் மூலம் தஞ்சம் கோரும் விண்ணப்பங்கள் மிக வேகமாக நிராகரிக்கப்படும் நிலையை அடைந்தன. ஓட்டோ ஷிலி (SPD) தலைமையில் இயங்கும் உள்நாட்டு அமைச்சகம், மற்றும் Joschka Fischer (Green Party) உடைய தலைமையின் கீழ் இயங்கும் வெளியுறவு அமைச்சரகம் ஆகியன இந்த இலக்கிற்கு கைகோத்துச் செயல்படுகின்றன.

இவ்வாறு இப்பொழுதைய சமூக ஜனநாயகக் கட்சி-பசுமைக் கட்சி அரசாங்கத்தின் கீழ், தஞ்சம் கோருவோர் விண்ணப்பங்கள் ஏற்கப்படுவது என்பது மிகத்தாழ்ந்த நிலைக்குப் போய்விட்டது. கடந்த ஆண்டு, விண்ணப்பித்த அகதிகளில் 1.7 சதவிகிதத்தினருக்குத்தான் புகலிடம் கொடுக்கப்பட்டது. வெளியேறுதலிருந்து பாதுகாப்பு கொடுக்கப்பட்டவர்கள் (Mini-Asylum, தற்காலிகப் புகல்), சதவிகிதமும் 1.7 க்கு வந்துவிட்டது. இவ்வாறு, சமூக ஜனநாயகக் கட்சி-பசுமை கட்சி கூட்டணி, Kohl அரசாங்கத்தின் கடைசி ஆண்டுகளில் ஏற்கனவே குறைந்துவிட்ட தஞ்சம் கோருதல்கள் எண்ணிக்கையை இன்னும் குறைந்த அளவிற்குக் கொண்டுவந்து விட்டது.

இந்தக் குறைவான எண்ணிக்கையாக கட்டுப்படுத்தியதுகூட, BAFI அலுவலர்களை கண்டிப்பு பெறுவதைத் தடுத்து நிறுத்தமுடியவில்லை; முகவாண்மையின் ஆண்டு நிறைவை நினைவூட்டும் உரையில் ஒட்டோ ஷிலி. "அகதிகள் பாதுகாப்பு என்ற பெயரில், குடியேற்ற நடவடிக்கைகளில் தவறு நிகழ்ந்து விடக்கூடாது" என்று தெரிவித்தார். அவர் ஒன்றும் கவலைப்படத் தேவையில்லை. உள்நாட்டு அமைச்சர் உரையில் காணப்பட்ட இன, நாட்டுவெறியின் சொற்றொடர்தான் BAFI துண்டுப் பிரசுரத்திலும் பயன்படுத்தப்படுகிறது. "குடியேற்ற அழுத்தம், தஞ்சம் கோரும் உரிமையினால் ஏற்படுவது பற்றியும்", "இதற்கு முக்கிய ஆதார நாடுகளாக இருந்த ஈராக், ஈரான், மற்றும் ஆப்கானிஸ்தான் இவற்றில் அரசியல் கருத்துவேறுபாட்டையொட்டி மக்களைத் தாக்குவது குறைந்து விட்டதால், பாதுகாப்பான நாடுகளிலிருந்து தஞ்சம் கோருவோர் எண்ணிக்கை குறையும்" என்றும், இவ்விதமான கருத்துக்கள் முழங்குகின்றன.

தஞ்சம் கோருவோர் எண்ணிக்கை குறைவதெல்லாம் "மனத்திருப்தியளிக்கும் செயல்" என்று வர்ணிக்கும் ஷிலீயின் முழுத்திருப்திக்காக BAFI பணியாற்றிக்கொண்டிருக்கிறது. இவருடைய பதவிக் காலத்தின்பொழுது, தஞ்சம் கோருவோருக்கு BAFI ஒப்புதல் அளிப்பது மிகப் பெரியமுறையில் குறைந்து விட்டது; தஞ்சம் கோருவோர் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. 2003-ம் ஆண்டு தஞ்சம் கோரியோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 51,000 என்று, 1984 அளவைத் தாண்டாமலும், 2002 ஆண்டை விட 20,000, கிட்டத்தட்ட 30 சதவிகிதம் குறைவாகவும் இருந்தது. இந்த எண்ணிக்கையும் சமூக ஜனநாயகக் கட்சி- பசுமைக் கட்சி கூட்டணி அதிகாரத்திற்கு வந்த பின்னர் அரைவாசிக்கும் குறைவாயிற்று.

ஆனால் இதற்குக் காரணம் அகதிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்று பொருள் இல்லை. ஐரோப்பிய ஒன்றியமும் அதன் உறுப்பு நாடுகளும் தங்களால் முடிந்தவற்றைச் செய்து, தங்கள் நிலப்பகுதிகளில் அகதிகள் கால் எடுத்து வைக்காமல் எவ்வளவு முடியுமோ, அவ்வளவையும் செய்தாலும், தஞ்சம் கோருவோர் எண்ணிக்கை 1998 லிருந்து 2003 வரையில் ஆண்டு ஒன்றுக்குக் கிட்டத்தட்ட 320,000 என்று ஒரே அளவில் இருந்து வருகிறது.

1998ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைவோரில், கிட்டத்தட்ட 30 சதவிகித அகதிகள், ஜேர்மனியில் புகலிடம் கோரினர். ஐரோப்பிய ஒன்றியத்தில் மொத்த ஜனத் தொகையில் 22 சதவிகிதம் மக்கள் ஜேர்மனியில் இருந்தாலும்கூட, இந்த ஆண்டு, இது 16 சதவிகிதம்கூட இருக்காது; ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஜேர்மன் பொருளாதாரம் 25 சதவிகிதம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஷிலியும் அவருக்கும் முன் அவர் பதவியில் இருந்தவர்களும், 1990களில் ஐரோப்பிய ஒன்றிய நீதி, உள்துறை அமைச்சு கூட்டங்களில், "அகதிகள் பங்கீட்டுமுறை நியாயம் வாய்ந்தமுறையில் இருக்கவேண்டும் என்று" கூறி வந்திருந்தாலும், இப்பொழுதெல்லாம் எவரேனும் அப்படிப்பேசினால், விகிதாசாரம் பற்றிப் பேசுவதற்காக, அவர்களை அவர் தாக்குகிறார்.

அங்கீகாரம் வாபஸ்பெறப்படல்: அகதிகள் மீது ஒரு தாக்குதல்

தஞ்சம் கோரும் விண்ணப்பங்கள் குறைந்ததும், அதைவிடக் குறைந்த அளவினர்தான் ஒப்புதல் கொடுக்கப்பட்டாலும்கூட, ஜேர்மனியின் உள்துறை அமைச்சருக்குப் போதவில்லை. இன்னும் கூடுதலான ஆவேசத்துடன், ஷீலி இப்பொழுது ஏற்கனவே ஒப்புதல் கொடுக்கப்பட்டுவிட்ட அகதிகளுடைய அங்கீகாரத்தைத் திருப்பப்பெறப்போவதாகப் பயமுறுத்துகிறார். BAFI ஆண்டு விழாவில் பேசுகையில், "தஞ்சம் கோரும் உரிமை ஏற்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.... அதற்கான காரணங்கள் தக்கமுறையில் இல்லை என்றால்," என்று கூறினார்; மேலும், சட்ட அளவில் இந்தக் கருத்து செயல்படுத்தப்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இத்தகைய அங்கீகாரம் விலக்கிக் கொள்ளும் நடைமுறைகள், தங்கள் நாட்டைவிட்டு ஓடிவந்துவிடும் காரணங்கள் உண்மையில்லை எனக்கூறி அகதிகளை இறுதியில் வெளியேற்ற வகை செய்துவிடும். தஞ்ச உரிமை விலக்கிக் கொள்ளுதல் தஞ்ச நடவடிக்கைகள் சட்டம் 73வது பந்தியின் கீழ் உள்ளது என்றாலும், சில ஆண்டுகள் முன்பு வரை, அது உபயோகிக்கப்பட்டதே இல்லை.

"பயங்கரவாதத்திற்கெதிரான திட்டங்களின் பொதி II" என்று கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட நடவடிக்கைகளின் கீழ், ஷிலி ஒப்புதல் விலக்கல் விதிகளை பயன்படுத்த எந்த அளவு செய்யமுடியுமோ அந்த அளவு அதில் ஈடுபடுகிறார். சில மாதங்களாக, உள்துறை அமைச்சகம், எண்ணிக்கை பெரும்பாலும் குறைந்து விட்ட போதிலும், BAFI இடம், கூடுதலான அளவு ஒப்பந்த விலக்கல்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது; நடுவர்கள் மீது வரும் அழுத்தங்களைக் குறைக்கவும் பார்க்கிறது. ஒளிவுமறைவின்றிக்கூற வேண்டுமென்றால், Pro Asyl எனும் அமைப்பு வர்ணித்துள்ளபடி BAFI அதிகாரிகள் "தங்கள் வேலையில் தொடரவேண்டும் என்றால் அகதிகளை ஒட்டவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்" என்று பொருளாகின்றது.

கோடையின் ஆரம்பத்திலிருந்தே, BAFI ஒப்புதல் விலக்குதல் நடைமுறைகளில் சான்றுகள் நிரூபிக்கப்பட வேண்டிய பொறுப்பை மாற்றி, அங்கீகரிக்கப்பட்ட தஞ்சம் கோருவோருக்கு கேள்விப்படிவங்களை அனுப்பி வருகிறது; தாங்கள் ஏன் வெளியேற்றப்படக்கூடாது என்பதற்கு அவர்கள் தக்க காரணங்களை அதில் காட்டவேண்டும்.

இதில் இப்பொழுது அதிகமாக பாதிப்பிற்கு உட்பட்டுள்ளவர்கள் சிறீலங்காவிலிருந்து வந்துள்ள தமிழ் தஞ்சம் கோருவோராகும்; இவர்கள் நாடு திரும்பினால் கைது, சித்திரவதை ஆகியவற்றிற்கு உட்பட நேரிடும். BAFI, உள்நாட்டுப் போர் நாட்டில் முடிந்துவிட்டது என்ற காரணத்தைக் காட்டி, அவர்களுடைய தஞ்சத் தகுதியை விலக்க நியாயங்களைக் கற்பிக்கப் பார்க்கிறது.

இவர்களுக்கு அடுத்தபடியாக தள்ளுபடி செய்தல் நடவடிக்கைகளின் கீழ் அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்படுபவர்கள், ஈராக்கிலிருந்தும், ஆப்கானிஸ்தானிலிருந்தும் தஞ்சம் கோரியவர்கள் ஆவர். இவர்கள் 2004 வசந்த காலத்தில் வெளியேற்றப்பட உள்ளனர். தள்ளுபடி செய்தல் விதிகள் தேவையான சட்ட நிபந்தனைகளை வகுத்துள்ளன; தஞ்சத் தகுதி பற்றிய பொறுப்பை வட்டார நிர்வாக அதிகாரிகளுக்கு வழங்கி விட்டதால், அவர்கள் எளிதில் தங்குமிடம் பற்றி நிர்ணயிக்கமுடியும். மிகுந்த நலிந்த நிலையிலும், ஏழ்மையிலும் உள்ள அகதிகள், குறைந்த கால வசிக்கும் உரிமை மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாலும், நலன்புரி நன்மைகளை நம்பி இருப்பதாலும், அவர்கள் உடனடியாக வெளியேற்றப்படவேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

BAFI யோ அல்லது உள்துறை அமைச்சகமோ, கடந்த ஐந்து ஆண்டுகளில் தள்ளுபடி செய்தல் விதிகளின் மூலம் எத்தனை பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை குறிப்பிடவில்லை என்றாலும் ஒப்புதல் அளிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 8000 பேருக்கு மேல், 1998 லிருந்து 2002 வரை விலக்கலும், வெளியேற்றமும் பெற்றது, உள்துறை அமைச்சரால் கூடுதலான "வெற்றி" என்று கருதப்படுகிறது.

ஷிலி கொண்டு வரவிருக்கும் குடியேற்றச் சட்டம், வட்டார அதிகாரிகள் தொடர்பை கூட துண்டித்துவிடும் நிலையை கருத்திற்கொண்டுள்ளது. இச்சட்டம் பற்றிய வரைவில், ஏற்கனவே ஒப்புதல் பெற்றுவிட்ட அகதிகள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைமுறையில் ஆய்விற்குட்படவேண்டியிருக்கும். உடனடியாக தஞ்சம் அகற்றப்படும் என்றால், தங்கும் உரிமை பறிக்கப்பட்டு, அகதி உடனடியாக நாட்டைவிட்டு வெளியேறவேண்டும்.

BAFI இன் எதிர்காலம்

BAFI க்கு இன்னும் கூடுதலான பொறுப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஜேர்மனியில் இதனுடைய அலுவலகத்திலேயே, ஐரோப்பிய அகதிகள் நிதி அதிகாரத்தின் தலைமை அலுவலகமும் உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், புதிய நாட்டில் வாழ்வதற்கு வசதிவாய்ப்புக்களை பெற்றுத்தருவதில் அக்கறை இல்லாமல், அகதிகள் தாயகம் திரும்ப உடனடியாகப் பணம் கொடுக்கப்படும். ஆதலால், எவ்வளவு விரைவில் இருக்கும் பணத்தை திரட்டி BAFI, அகதிகளை துரத்திவிட முடியம் என்பதை ஊகித்திக்கொள்ளமுடியும்.

இதைத்தவிர, BAFI-க்கு, "குடியேறுவோர் இணைந்து வாழ்தலுக்கு ஆவன செய்யவேண்டிய" பொறுப்பும் உண்டு; இதில் மொழிவகுப்புக்கள், சமுதாய அளவில் ஒன்றுபடுவதற்கு தேவையானவற்றை செய்தலும் அடங்கும். குடியேறுவோரை எப்படி வரவிடாமல் தடுக்கமுடியும், எவ்வளவு குறைந்த பேருக்கு தஞ்ச உரிமை கொடுப்பது என்பதுதான் தன்னுடைய வேலை என்று நினைக்கும் ஓர் அமைப்பு இப்பணியில் எவ்வாறு ஈடுபடும் என்று ஊகிக்கமுடியும். "நமக்கு யார் அதிகம் பலன் தருவர்" என்ற கருத்தில் அகதிகள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, ஷீலியுடயை நெருங்கிய நண்பர் Guenter Beckstein (CSU) கூறியிருப்பதுதான் நடைமுறைப்படுத்தப்படும். "சமுதாயத்துடன் இணையும் ஆற்றல்" இல்லாதவர்கள் என்று கருதப்படுபவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படலாம்.

BAFI உடைய "திறமையான" நிர்வாகப் பணியை ஷிலி முற்றிலும் நம்பலாம். "தற்கால கருத்து மிகுந்த, மாறுதல்களை செய்யக்கூடிய கூட்டமைப்பின் அமைப்பு" என்று அவர் BAFI ஐ காரணம் இல்லாமல் புகழ்ந்து விடவில்லை. சமூக ஜனநாயகக் கட்சி-பசுமைகட்சி கூட்டரசாங்கத்தின் கீழ், BAFI உடைய தலைவர், Albert Schmid (SPD) மின்னக முறையில் தகவல் அறிதல், மாற்றுதல் (ஐரோப்பிய யூனியன் முழுவதுமான EURODAC கைரேகை அடையாளம் காண்பதில் முற்றிலும் சரியான முறை உள்ள இயந்திரம் நிறுவப்பட்டது உட்பட) ஒன்றைக் கொண்டு வந்துள்ளார். அதனால், அகதிகள் பற்றிய முற்றிலும், பதிவு செய்யப்பட்டதிலிருந்து, நலன்கள்தரும் அமைப்புக்கள்வரை அவர்கள் செயற்பாடுகள் அனைத்தும், உள்ளுர் குடியிருப்பு பதிவு, கூட்டாட்சி, மாநில அரசாங்கங்களின் குற்றப் பிரிவு போலீஸ் துறையுடன் கருத்துப்பரிமாற்றம், மற்ற ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடுகளுடான தொடர்பு இவையனைத்தும் கண்காணிக்கப்பட்டு, தஞ்சம் கோருவோர் வெளியேற்றப்படுவதற்கு எதிராக பாதுகாப்பு கேட்டால், தக்க முறையில் அவை பயன்படுத்தப்பட முடியும்.

அதே நேரத்தில், தஞ்ச விண்ணப்பத்தை நிராகரித்தல், முன்பே கொடுக்கப்பட்டவர்களுக்கு அது விலக்கப்படுதல் இவற்றைப் பொறுத்தவரையில், நடைமுறையில் இருக்கும் மதிப்பீட்டு வழக்கத்தை பயன்படுத்துவதில் எந்த வரையறையும் இல்லாமல்தான் நடக்கிறது. அரசியல் எஜமானர்களை திருப்தி செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ள ஙிகிதிமி, ஷிலி என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தாரோ, அதைச் செய்து வருகிறது: தஞ்சம் கோருவோரை தடைசெய்ய எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்தல், மற்றும் ஏற்கனவே ஜேர்மனியில் இருப்பவர்களை வெளியேற்ற எவ்வளவு அழுத்தம் கொடுக்கமுடியுமோ, அவ்வளவு கொடுப்பது. இந்தக் கொள்கையினால், அல்லல்படுபவர்கள், பாதிப்பிற்குட்படுபவர்கள் அகதிகள்தான்; ஏனென்றால் அவர்களுடைய தலைவிதி எவருடைய சமுதாய அக்கறையும் இல்லை என்பதுடன் அவர்கள் முற்றிலும் இங்கு தேவையற்றவர்கள் எனத்தான் கொள்ளப்படுவர் என்றும் உணர்த்தப்படுகின்றனர்.

Top of page