:
ஆசியா
:
இலங்கை
Sri Lankan artist speaks about death threats by Sinhala extremists
இலங்கை கலைஞர் சிங்களத் தீவிரவாதிகளின் தாக்குதலைப் பற்றி பேசுகிறார்
By Panini Wijesiriwardana
12 December 2003
Back to screen version
இலங்கையின் சர்வதேச புகழ்பெற்ற கலைஞரான தர்மசிறி பண்டாரநாயக்க, அண்மையில்
தனக்கெதிராக சிங்களத் தீவிரவாதிகளால் விடுக்கப்பட்ட தொடர்ச்சியான அச்சுறுத்தல்களைப் பற்றி உலக சோசலிச
வலைத் தளத்திற்கு (உ.சோ.வ.த) வழங்கிய பேட்டியை இங்கு பிரசுரிக்கின்றோம். அவர் தீவில் சமாதானத்தை
உருவாக்கும் அனுசரணையாளராக கலை செயற்பட முடியும் என்ற அவரது வெளிப்படையான சிந்தனைகளுக்காக இலக்குவைக்கப்பட்டார்.
54 வயதான பண்டாரநாயக்க, மேடை நாடகம், நடிப்பு, திரைக்கதை வசனம் மற்றும்
தயாரிப்பின் மூலம் நன்கு அறியப்பட்டவராகும். அவரது திரைப்படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டுள்ளது.
கலைத் துறையில் அவரது வெற்றிகளுக்காக, 1990ல் அமெரிக்காவின் "நியு ஓர்லீன்ஸ்" நகரம் அவருக்கு கெளரவ பிரஜை
விருது வழங்கியது.
பண்டாரநாயக்க அவரது படைப்புக்களுக்காக பல விருதுகளைப் பெற்றுள்ளார். அவற்றில்
பின்வருவனவும் அடங்கும்: 1987ல் இலங்கை திரைப்பட விமர்சன அமைப்பு, பண்டாரநாயக்கவை இலங்கையின் சிறந்த திரைப்பட
இயக்குனர்கள் பத்துபேரில் (1947-1987) ஒருவராகத் தேர்தெடுத்து விருது வழங்கியது; 1996ல் ஜப்பான்- இலங்கை
நட்புறவு கலாச்சார நிதியம், சிறந்த நாடகம் மற்றும் திரைப்பட படைப்புகளுக்காக "புன்கா" பரிசு
வழங்கியது; மற்றும் 1996ல் இலங்கை நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் அவரது பங்களிப்புக்காக கொழும்பில் உள்ள
இலங்கைப் பல்கலைக்கழகம் "பிரசாத பிரனாம" விருதை வழங்கியது.
பண்டாரநாயக்கவின் புதிய படைப்பான ட்றோஜன் பெண் -- யூரோபிடசின் "ட்றோஜன்
வுமன்" என்ற கிரேக்க நாடகத்தின் சிங்கள ஆக்கம்-- நாடகம் யுத்தத்தில் அழிவுக்குள்ளான வடக்கு மற்றும் கிழக்கு
மாகாணங்கள் உட்பட தீவுபூராவும் தற்போது மேடையேற்றப்பட்டு வருவதோடு பரந்த ஆதரவையும் பெற்றுள்ளது.
உ.சோ.வ.த: அண்மையில் உங்களுக்கு எதிரான மரண அச்சுறுத்தல்களைத் தூண்டியது
எது?
தர்மசிறி பண்டாரநாயக்க: இத்தகைய அச்சுறுத்தலகள் எனக்கு விடுக்கப்பட்டது இது
முதல்தடவை அல்ல. வித்தியாசமானது என்னவெனில், இம்முறை பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதே ஆகும்.
அக்டோபர் 29 அன்று, கொழும்பு புதிய நகர மண்டபத்தில் சிங்களத் தமிழ் கலைவிழா நடைபெற்றுக்கொண்டிருந்தது.
அமைப்பாளர்களால் இந்த விழாவில் உரையாற்ற நான் அழைக்கப்பட்டிருந்தேன். ஆனால் நிகழ்வுகள் ஆரம்பமாகி சிறிது நேரத்தின்
பின்னர், ஆத்திரமூட்டல் குழுவொன்று பார்வையாளர்கள் மீது சரீர ரீதியிலான தாக்குதலை முன்னெடுத்தது. தமிழீழ விடுதலைப்
புலிகளை அர்த்தப்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு புலிப் பயங்கரவாதிகளுக்கு ஆதரவானது என அவர்கள் கூச்சலிட்டனர்.
இந்த குழப்பத்தில் கூட்டம் இடைநிறுத்தப்பட்டிருந்த வேளை, வெளியில் காத்துக்கொண்டிருந்த
இன்னுமொரு ஆயுதம் தாங்கிய கும்பல் மண்டப வாயிலுக்குள் நுளைந்து பார்வையாளர்களை தாக்கியது. அச்சமயத்திலேயே
அந்தக் கும்பல் என்னை விரைவில் கொல்வதாக கூச்சலிட்டு அச்சுறுத்தியது. அவர்கள் என்னை "ஒரு சிங்களப் புலி
பயங்கரவாதி" என அழைத்ததோடு, அடுத்த பத்து நாட்களுக்குள் --நவம்பர் 7,8 மற்றும் 9 திகதிகளில்--
நடைபெறவிருந்த தமிழ் நடன மற்றும் நாடக விழாவை நடத்த அனுமதிக்கமாட்டோம் எனவும் பிரடனப்படுத்தினர். இந்த
விழாவை நான் திருமலை கலா மன்றம் ஊடாக ஒழுங்கு செய்திருந்தேன்.
உ.சோ.வ.த: கலைவிழா மீதான இந்தத் தாக்குதலை ஏற்பாடு செய்தது யார்
என நீங்கள் கருதுகிறீர்கள்?
பண்டாரநாயக்க: சிங்களத் தமிழ் கலைவிழாவுக்கு எதிரான சிஹல உறுமய கட்சியின்
வெறுக்கத் தக்க பிரச்சாரத்தின் மத்தியிலேயே அது இடம்பெற்றது. சிஹல உறுமய ஒரு தீவிர சிங்களப் பேரினவாதக்
கட்சியாகும். கலை விழாவைப் பற்றி அறிவித்தவுடன், ஊடகங்கள் மூலம் பிரச்சாரத்தை முன்னெடுத்த சிஹல உறுமய,
அமைப்பாளர்களை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கும் பயங்கரவாதிகள் என குற்றஞ் சாட்டியது. அதை
நடத்தவிடாமல் செய்வதற்கு அது சபதம் செய்திருந்தது. ஐலண்ட் குழுவால் வெளியிடப்படும் சிங்கள நாளிதழான
திவயன இந்தப் பிரச்சாரத்தில் முன்னணிப் பாத்திரம் வகித்தது. இது அன்றைய தாக்குதலின் பின்னணியில் இருந்தது
யார் என்பதை தெளிவாக்குகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, ஆரம்பத்தில் எந்தவொரு தலையீட்டையும் நிராகரித்த
சிஹல உறுமய, பின்னர் தாக்குதலின் சந்தேக நபர்கள் விளக்க மறியலில் இருந்து பிணையில் விடுதலையான போது
அவர்களை மாவீரர்களாக வரவேற்க ஒரு பகிரங்க ஊர்வலத்தையும் கூட்டத்தையும் நடத்தியது.
உ.சோ.வ.த: தாக்குதல் நடைபெறும் போது நீங்கள் என்ன நினைத்தீர்கள்?
பண்டாரநாயக்க: அக்டோபர் 29 விழாவானது, சுமார் இரண்டு தசாப்தகால
உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் சிங்கள மற்றும் தமிழ் கலைஞர்கள் கொழும்பில் ஒன்றுகூடிய முதல் நிகழ்வாகும். இந்த
ஒன்றுகூடல் எல்லா சமூகங்களையும் சேர்ந்த கலைஞர்களை உள்ளடக்கியிருந்தது. சிலர் யுத்தத்தால் அழிவுற்ற வடக்கு
கிழக்கு பிராந்தியத்திலிருந்தும் வருகைதந்திருந்தனர். நான் தாக்குதல் நடைபெறும் போது மேடையில் இருந்ததோடு,
சரியாக மூன்று வருடங்களுக்கு முன்னர், 2000 அக்டோபரில் பிந்துனுவெவ புனர்வாழ்வு முகாமில் இருந்த தமிழ் கைதிகளின்
படுகொலைகளே என் நினைவுக்கு வந்தது. அச்சமயம் முகாமை முற்றுகையிட்டிருந்த வெறிபிடித்த சிங்கள இனவாத
கும்பலால் நிராயுதபாணிகளாக இருந்த 27 தமிழர்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். 1983 "கறுப்பு
ஜூலையின்" போது மேற்கொள்ளப்பட்ட தமிழர்களுக்கு எதிரான பரந்தளவிலான படுகொலைகளும் என் நினைவிற்கு
வந்தன. புதிய நகர மண்டத்தில் நடந்த தாக்குதல் பாசிச நடவடிக்கையின் சகல அடையாளங்களையும் கொண்டுள்ளது.
உ.சோ.வ.த: நீங்கள் மரண அச்சுறுத்தலின் விசேட இலக்கானது ஏன்?
பண்டாரநாயக்க: சுருக்கமாக கூறின், பேரினவாத கும்பல்களின் விருப்பத்திற்கு
முரணான தமிழர் விரோத யுத்தத்திற்கு எதிரான எனது நிலைப்பாடேயாகும். 1999 டிசம்பரில் எனது "ட்ரோஜன்
பெண்" நாடகம் கொழும்பில் அரங்கேற்றப்பட்டதை அடுத்து தெற்கின் பல நகரங்களில் நான் அதை
மேடையேற்றினேன். அது ஒரு யுத்த விரோத நாடகமாகையால் பின்னர் அதை வடக்கு மற்றும் கிழக்கிலும் மேடையேற்றத்
தீர்மானித்தேன். கிழக்கின் பிரதான நகரமான திருகோணமலை எனது முதல் தெரிவாக இருந்தது. 2001ம் ஆண்டு ஆரம்ப
ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்த சமயம் ஒரு கடிதத்தின் மூலம் எனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.
வடக்குக் கிழக்கிலோ அல்லது தமிழ் பேசும் தொழிலாளர்கள் பெரும்பான்மையாக வாழும் மத்திய மலையக
பெருந்தோட்டப் பிரதேசங்களிலோ நாடகத்தை மேடையேற்றக் கூடாது என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் அக்கடிதம் தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் எழுதப்பட்டிருந்த போதிலும் அவர்கள் அவ்வாறு செய்வார்கள்
என நான் நம்பவில்லை.
உ.சோ.வ.த: அந்த அச்சுறுத்தல்கள் விடுதலைப் புலிகளால் விடுக்கப்படவில்லை என
நீங்கள் நினைப்பது ஏன்? .
பண்டாரநாயக்க: என்னைப் பொறுத்தளவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அடிமைநிலைக்கும்
துஷ்பிரயோகங்களுக்கும் உள்ளான ட்ரோய் நகர பெண்களுக்கும், யுத்தத்தால் அழிவுக்குள்ளான கொசோவா, காஷ்மீர்
அல்லது இலங்கையிலும் பாதிப்புக்களான இன்றைய பெண்களுக்கும் இடையில் வேறுபாடுகள் கிடையாது. இலங்கையில்
யுத்தத்தின் துன்பங்களை மிகவும் அனுபவித்தது வடக்கும் கிழக்குமேயாகும். அந்தப் பிரதேசங்களில் அரச பாதுகாப்புப் படையினரின்
கைகளில் தமிழ் பெண்கள் அனுபவித்த துன்பங்கள் ட்ரோஜன் பெண் நாடகத்தில் பிரதிபலிக்கின்றன. ஆகவே,
இந்த நாடகத்திற்கெதிரான அச்சுறுத்தல் தமிழ் பகுதியிலிருந்து விடுக்கப்பட்டிருக்க முடியாது என நான் நினைத்தேன். இது
நான் விடுதலைப் புலிகளின் ஜனநாயக விரோத அடக்குமுறைகளை புறக்கணிப்பதாக அர்த்தப்படாது. நான் ஊர்காவற்துறையில்
சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க) அங்கத்தவர்களுக்கு எதிரான விடுதலைப் புலிகளின் மரண அச்சுறுத்தல்களை
வன்மையாகக் கண்டனம் செய்துள்ளேன் என்பது உங்களுக்குத் தெரியும். எவ்வாறெனினும், நான் நம்புவதுபோல் எனது யுத்த
விரோத நாடகத்திற்கு எதிரான அச்சுறுத்தல்கள் சிங்களப் பேரினவாத யுத்த விரும்பிகளிடம் இருந்தே வந்தது.
உ.சோ.வ.த: தற்போதைய மரண அச்சுறுத்தல்களுக்கும் 1988ல் உங்களுக்கு
எதிராக இலக்கு வைக்கப்பட்டதற்கும் இடையிலான தொடர்பை உங்களால் விளக்க முடியுமா?
பண்டாரநாயக்க: 1988ல் நான் ஜீன் போல் சாட்ரேயின் "மென் வித்தவுட்
ஷடோவ்ஸ்" (Men Without Shadows)
நாடகத்தின் சிங்கள ஆக்கமான "தவலபீஷன" நாடகத்தை
மேடையேற்றனேன். அச்சமயம் தொழிலாள வர்க்கப் போராளிகள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக பாசிச
தாக்குதல்களில் ஈடுபட்டிருந்த மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), எனது நாடகம் அவர்களின் தலைவர் ரோஹன
விஜேவீரவை அவமானப்படுத்துவதாக குற்றஞ் சாட்டியது. தெற்கில் உள்ள புறநகர் பகுதியான தெலிஜ்ஜவில நகரில்
ஜே.வி.பி யின் உள்ளூர் தலைவர் ஒருவர் நாடகத்தை மேடையேற்றுவதை தவிர்க்குமாறு நெருக்கினார். அவர்கள்
இந்திய-இலங்கை உடன்படிக்கை காலத்தில் தமிழர் விரோத மற்றும் இந்திய விரோத பேரினவாதத்தை தூண்டினர்.
ஜே.வி.பி யின் மரண அச்சுறுத்தலால் நான் தலைமறைவாக இருக்க நேரிட்டது.
நான் எப்பொழுதும் யுத்தத்தையும் இனவாதத்தையும் வெறுத்து வந்துள்ளேன். நான்
வெகுஜனங்களை இந்த வழியில் அறிவூட்டுவதற்காக கலைத்துறையை பயன்படுத்த முயற்சிக்கின்றேன். இதனாலேயே நான்
ட்ரோஜன் பெண் நாடகத்தை சிருஷ்டித்தேன். நான் நாட்டில் யுத்தத்திற்கு முடிவுகட்டவும் எமது சமுதாயத்திற்கு
நிரந்தர சமாதானத்தை கொணரவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எனது பங்களிப்பாக இந்த நாடகத்தை
தேர்ந்தெடுத்தேன். 25 நூற்றாண்டுகளின் பின்னரும் ட்ரோஜன் பெண் நாடகம் உலக மேடையில் சக்திவாய்ந்த
மற்றும் முக்கியமான யுத்த விரோத படைப்பாக இருந்துவருகின்றது. அது யுத்தத்திற்கும் மிலேச்சத்தனத்திற்கும் எதிரான
போராட்டத்தில் சக்திவாய்ந்த ஆயுதமாக கலைஞர்களால் மேடைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாடகத்தை
மேடையேற்றுவதன் மூலமும் அதன் ஒன்றுபட்ட நாடகபாணியிலான செய்தியை நாட்டின் எல்லா பாகங்களுக்கும்
கொண்டுசெல்வதன் மூலமும் ஒரு கலைஞன் என்ற வகையில் யுத்தத்திற்கு முடிவுகட்டும் முயற்சிகளுக்கு நான் செய்யும் மிகவும்
சக்தவாய்ந்த சேவையாகவும் பங்களிப்பாகவும் அதை கருதுகிறேன்.
உ.சோ.வ.த: யுத்த்தை முடிவுக்குக் கொண்டுவர எடுக்கவேண்டிய ஆரம்ப அரசியல்
நடவடிக்கைகள் என்ன?
பண்டாரநாயக்க: அரச ஆயுதப் படைகள் உடனடயாக வடக்கு கிழக்கில் இருந்து வெளியேற்றப்பட
வேண்டும். இங்கு நான் வடக்குக் கிழக்கில் இருந்து இலங்கை ஆயுதப் படைகளை உடனடியாக விலக்கக் கோரும் சோசலிச
சமத்துவக் கட்சியின் நீண்ட காலப் பிரச்சாத்துடன் முழுமையாக உடன்படுகிறேன். ஊர்காவற்துறையில் சோ.ச.க உறுப்பனர்கள்
மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு எதிராக நான் விடுத்த அறிக்கையில், சோ.ச.க வின் இந்தக் கொள்கையை
நான் வலியுறுத்தினேன். வடக்குக் கிழக்கில் இடம்பெற்ற நாடகக் கருத்தரங்கிலும் நான் பகிரங்கமாக இந்த கருத்துக்களை
எழுப்பினேன். தெற்கிலும் கூட இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளேன்.
உ.சோ.வ.த: தற்போதைய "சமாதான முன்னெடுப்புகளைப்" பற்றிய உங்களது
கருத்து என்ன?
பண்டாரநாயக்க: பல்வேறு அரசாங்கங்கள் பல்வேறு காலப்பகுதிகளில் சமாதானத்தை
கொண்டுவருவதாக கூறிக்கொண்டு பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அந்த ஒவ்வொரு காலத்திலும் நாங்களும்
சமாதானத்திற்காக எதையாவது செய்ய முயற்சித்துள்ளோம். 1987ல் தர்மசேன பதிராஜ, வசன்த ஒபேசேகர மற்றும்
பிரசன்ன வித்தானகே போன்ற கலைஞர்களுடன் நானும் சேர்ந்து யுத்தப் பிரதேசங்களில் வாழ்க்கை நிலைமைகள் பற்றிய
விவரணத் திரைப்படங்களை வீடியோ மூலம் கூட்டாக அறிமுகப்படுத்தினோம். அரச தொலைக்காட்சியான ரூபவாஹினி
அவற்றில் சிலவற்றை தணிக்கை செய்தது. எனது "யுத்தத்தின் எதிரொலி"
(Echo of War)
அவற்றில் ஒன்று. அது, இந்தியத் தொலைக்காட்சி ஒளிபரப்புகளில்
ஒன்றான தூர்தர்ஷன் மற்றும் ஏனைய பல சர்வதேச தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டது. ஆனாலும் அதற்கும் அப்பால்
எங்களால் செல்ல முடியவில்லை.
எவ்வாறெனினும், இம்முறை யுத்த நிறுத்த உடன்படிக்கையின் காரணமாக எங்களால் தமிழ்
கலைஞர்களை நாட முடிந்தது. சிங்கள தமிழ் கலை விழாவை யாழ்ப்பாணத்தில் நாம் நடத்தியதோடு, அதைத்
தொடர்ந்து கொழும்பு விழாவையும் நடத்தினோம். உங்களுக்கு உண்மையை சொல்வதானால், தற்போதைய சமாதானம்
பல மட்டங்களில் உள்ளவர்களுக்கு தட்டினருக்கு பல்வேறுபட்ட தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை நான் காண்கின்றேன். அது
பெரும் வியாபாரிகளைப் பொறுத்தளவில் தமது இலாபப் பொதியை நிரப்புவதற்கான சந்தர்ப்பமாகியுள்ளதோடு,
தொழிலாளர்கள் மற்றும் சாதாரண மக்களின் துன்பங்களை அதிகரிக்கச் செய்துள்ளது. எமது குழுக்களுக்கிடையில் இத்தகைய
தெளிவான மற்றும் சரியான ஆய்வுகள் இடம்பெறவில்லை என்பதை நான் குறிப்பிட்டாக வேண்டும்.
உ.சோ.வ.த: தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றிய உங்களது கருத்து என்ன?
பண்டாரநாயக்க: விடுதலைப் புலிகளின் ஆட்சியின் கீழ் இத்தகைய விடயங்கள்
எழுமானால், ஒருவர் ஜனநாயக விரோத சர்வாதிகாரத்தை எதிர்பார்க்க முடியும். அத்தகைய ஒரு நிர்வாகம் கலை
அல்லது சமூக முன்னேற்றத்திற்கான ஏனைய துறைகளுக்கு தகுந்ததாக அமையாது. நான் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள
தமிழ் பேசும் கலைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுடன் இந்த விடயம் பற்றி கலந்துரையாடியுள்ளேன். அந்தப் பிரதேசங்களில்
வாழும் கலைஞர்கள் தற்பாதுகாப்பிற்காக விடுதலைப் புலிகளை பகிரங்கமாக விமர்சிக்காவிட்டாலும், அவர்களது கலைப்
படைப்பு மற்றும் ஏனைய நடவடிக்கைகள் மூலம் விடுதலைப் புலிகளின் தேசியவாத வேலைத் திட்டத்திற்கு தமது எதிர்ப்பை
வெளிப்படுத்தியுள்ளனர். கலையின் உள்ளார்ந்த விதிகள் மற்றும் தரம் ஆகியவையும் கூட, கலையின் அபிவிருத்தி மற்றும்
நன்மைக்காக மனித குலத்தினதும் மற்றும் அதன் கலாச்சார வெற்றிகளதும் ஒன்றிணைப்பையே வேண்டிநிற்கின்றன.
உ.சோ.வ.த: இப்போது, தமது சொந்த சட்டம் மற்றும் ஒழுங்குகளின் கீழ் தனித்தனியாக
இயங்கி வரும் தேசிய அரசுகள், கலாச்சாரம் மற்றும் கலையின் முன்னேற்றத்திற்கு இடையூறாக உள்ளன என்பது உங்களது
சொந்த அனுபவங்களில் இருந்து தெளிவாகிறது. இந்தத் தடையை தோற்கடிப்பது எப்படி?
பண்டாரநாயக்க: ஒரு படைப்புத் திறமையுள்ள கலைஞனுக்கு ஆழமான மற்றும் நிரந்தமான
அரசியல் பார்வை இருக்கவேண்டும் என்பதை நான் புரிந்துகொண்டுள்ளேன். நான் இக்காரணத்துக்காக முன்பிருந்தே
உலக சோசலிச வலைத் தளத்தை வாசிக்கின்றேன். என்னைப் பொறுத்தவரை உ.சோ.வ.த ஒரு சர்வதேச
அரசியல் நோக்குக்கான சிறந்த மூலமாகும். தற்போது நாம் முகம்கொடுத்திருக்கும் அரசியல் நெருக்கடி பற்றிய
சோ.ச.க வின் அறிக்கைகளும் "இலங்கை சமாதான முன்னெடுப்புகளின் அரசியல் பொருளாதாரம்" பற்றிய நிக் பீம்ஸின்
இரு பாகங்களைக் கொண்ட கட்டுரைகளும் மிகச் சிறந்த உதாரணமாகும். தமிழ் பேசும் எனது நண்பர்கள் மற்றும் கலைஞர்களில்
சிலர் கொழும்பு ஆளும் தட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடியையிட்டு குழப்பநிலையில் இருப்பதோடு வாசிப்பதற்கு
பிரதிகளை எதிர்பார்க்கின்றார்கள். ஆகவே நான் தாமதமின்றி அவர்களுக்கு உ.சோ.வ.த கட்டுரைகளை அஞ்சல் செய்தேன். |