World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Amid Sri Lankan political crisis

LTTE offers reassurances to major powers

இலங்கை அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் தமிழீழ விடுதலை புலிகள் வல்லரசுகளுக்கு மீள் உத்தரவாதம் வழங்குகிறது

By Wije Dias
9 December 2003

Back to screen version

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நவம்பர் 27 அன்று தனது வருடாந்த "மாவீரர் தின" உரையில், பிரதான சர்வதேச சக்திகளுக்கு மீள் உறுதிவழங்குவதற்காக வளைந்து கொடுத்தார். தனது அமைப்பு பெயரளவிலான சமாதான முன்னெடுப்புகளுடன் முன்செல்ல திட்டமிட்டிருப்பதாகவும் ஒரு இடைக்கால தன்னாட்சி அதிகாரசபைக்கான விடுதலைப் புலிகளின் பிரேரணைகள் சகிதம் கொழும்பு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும் அவர் உறுதியளித்தார்.

இந்த உரையானது, பிரபாகரன் ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார ஆணையாளர் கிரிஸ் பேட்டனைச் சந்தித்தை அடுத்தே வெளியானது. விடுதலைப் புலிகள் மீண்டும் வன்முறைக்கு திரும்பினால், அது சர்வதேச சமூகத்தின் "அமைதிப்படுத்த முடியாத விமர்சனத்துக்கு" உள்ளாகும் என அவர் எச்சரிக்கை செய்திருந்தார். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலான கிளிநொச்சிப் பிரதேசத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில், இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்கான பிரேரணைகள் ஒரு ஐக்கிய இலங்கையின் வரம்புக்குள்ளான "ஒரு சமஷ்டித் தீர்வுடன்" ஒத்துப்போவது கடினமாகையால், அதை ஒரு இறுதித் தீர்வாக தாம் எதிர்பார்க்கவில்லை என அவர் தெரிவித்தார்.

பேட்டன், கொழும்பில் அவரை ஒரு "வெள்ளைப் புலி" என கண்டனம் செய்த சிங்கள பேரினவாத குழுக்களின் எதிர்ப்புக்கும் முகம்கொடுத்தார். பிரபாகரனுடனான சினேகப்பூர்வ உரையாடலுக்கு அப்பால், தற்போது கொழும்பில் நிலவும் அரசியல் நெருக்கடியை பயன்படுத்திக்கொள்ள வேண்டாம் என்ற தெளிவான செய்தியை பிரதான வல்லரசுகளின் சார்பில் விடுதலைப் புலிகளின் தலைமைக்குத் தெரிவிப்பதே பெட்டனின் விஜயத்தின் நோக்கமாகும்.

அக்டோபர் 31, விடுதலைப் புலிகள் தனது இடைக்கால தன்னாட்சி அதிகார சபை பிரேரணையை வெளியிட்டு சற்றே சில நாட்கள் கடந்த பின்னர், ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு அதிகளவிலான சலுகைகள் வழங்குவதன் மூலம் தேசியப் பாதுகாப்பை கீழறுக்கின்றார் என குற்றஞ் சாட்டினார். அவர் ஜனாதிபதி என்ற வகையில் தனது நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்தி மூன்று முக்கிய அமைச்சுக்களின் கட்டுப்பாட்டையும் அபகரித்ததுடன், பாராளுமன்றத்தையும் இரு வாரங்களுக்கு ஒத்திவைத்ததோடு அவசரகால நிலைமையைப் பிரகடனம் செய்வது வரையும் சென்றார்.

பிரபாகரன் தனது "மாவீரர் தின" உரையை பேட்டனின் செய்தியை விளங்கிக்கொண்டதாக அறிவிப்பதற்குப் பயன்படுத்திக் கொண்டார். அவர் விடுதலைப் புலிகள் தமது இராணுவ அமைப்பை பலப்படுத்துவதோடு ஒரு யுத்தத்திற்கும் தயாராகிறது என்ற கூற்றை திட்டவட்டமாக மறுத்தார். இலங்கை இராணுவத்தின் ஆத்திரமூட்டல்கள் இருந்துகொண்டிருந்த போதிலும் இரண்டு வருடங்களாக விடுதலைப் புலிகள் யுத்த நிறுத்த ஒழுங்குகளைப் பின்பற்றி வந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், "நாம் சமாதான முன்னெடுப்புகளில் மிகவும் உறுதியாக உள்ளோம்" எனக் குறிப்பிட்டார்.

இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்கான பிரேரணைகள் "ஒரு தனியரசுக்கான திட்டமாக பிழையாக அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது" என விடுதலைப் புலிகளின் தலைவர் சுட்டிக்காட்டினார். கடந்த வருடம் பேச்சுவார்த்தைகளின் ஆரம்பத்தில், விடுதலைப் புலிகள் தீவின் வடக்குக் கிழக்கில் தமிழீழ தனியரசை ஸ்தாபிப்பதற்கான தனது நெடுங்காலக் கோரிக்கையை உத்தியோகபூர்வமான கைவிட்டது. இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை மற்றும் அரசாங்கத்தின் சொந்தப் பிரேரணையான இடைக்கால நிர்வாக சபை ஆகிய இரண்டும் கடந்த ஏப்பிரலில் பொறிந்து போன பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான முயற்சிகளாகும்.

பிரபாகரனின் உரையானது, கொழும்பு அரசாங்கத்துடன் ஒரு அதிகாரப் பகிர்வு கொடுக்கல் வாங்கல்களுக்கு தள்ளுவதற்காக விடுதலைப் புலிகள் மீது திணிக்கப்படும் உக்கிரமான சர்வதேச அழுத்தத்தின் பெறுமானத்தைக் காட்டுகிறது. கடந்த இரு தசாப்தங்களாக இந்த அழிவுகரமான யுத்தத்தை நிராகரித்துவந்த அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய சக்திகள், இப்போது அதை அதிகரித்துவரும் பொருளாதார மற்றும் மூலோபாய முக்கியத்துவம் கொண்ட பிராந்தியத்தில் ஒரு ஸ்திரமற்ற நிலைமையை உருவாக்கும் அபாயகரமான காரணியாக கருதுகின்றன. வாஷிங்டன் விடுதலைப் புலிகளைத் தொடர்ந்தும் ஒரு "பயங்கரவாத அமைப்பாக" முத்திரைகுத்தி வந்துள்ளது. வகுக்கப்பட்டுள்ள பாதையில் செல்லத் தவறின் அது இராணுவ இலக்குக்கு உள்ளாகும் எனவும் வாஷிங்டன் குறிப்பாக உணர்த்தியுள்ளது.

விடுதலைப் புலிகளைப் பொறுத்தமட்டில், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்காக தொழிலாள வர்க்கத்தை அடிபணியச் செய்யவும் தீவை ஒரு மலிவு உழைப்பு மேடையாக மாற்றவும் கொழும்பு அரசாங்கத்தின் இளைய பங்காளியாக செயற்பட தனது விருப்பத்தை ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளது. கடந்தாண்டு முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையில், விடுதலைப் புலிகளின் பிரதான பேச்சுவார்த்தையாளரான அன்டன் பாலசிங்கம் இலங்கையை "புலி பொருளாதாரத்தை" நோக்கி திருப்புவதற்கான திட்டத்தை விடுதலைப் புலிகள் ஆதரிப்பதாக பிரகடனம் செய்தார். விடுதலைப் புலிகள் கொழும்பையும் பெரும் வல்லரசுகளையும் தழுவக்கொள்வது, தனியான தமிழீழ முதலாளித்துவ அரசுக்கான அதன் முன்னைய கோரிக்கையின் தர்க்கரீதியான வெளிப்பாடே அன்றி கைவிடுதல் அல்ல.

பிரபாகரன் தனது "மாவீரர் தின" உரையில், விடுதலைப் புலிகளின் பிரேரணைகள் "முற்போக்கான, கட்டமைப்பான, நிஜமான மூலங்களை" உள்ளடக்கியுள்ளதாக பிரகடனம் செய்தார். பிரேரிக்கப்பட்டுள்ள இடைக்கால தன்னாட்சி அதிகார சபையில் எந்தவொரு முற்போக்கும் கிடையாது. இந்தத் திட்டம், தமிழ் மக்கள் எதிர்பார்த்திருக்கும் ஜனநாயக உரிமைகள் மற்றும் ஒழுக்கமான வாழ்க்கை நிலைமைகளை இட்டுநிரப்புவதற்கும் அப்பால், அது குறுகிய செல்வந்த தட்டுக்களின் நலன்களைப் பேணும் மற்றும் தேர்தல்மூலம் தெரிவுசெய்யப்படாத ஒரு சபையை வடக்குக் கிழக்கில் அமுல்படுத்தும்.

விடுதலைப் புலிகளும் அரசாங்கமும் வரைந்த பிரேரணைகளுக்கிடையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஆனால் குறிப்பாக அவர்களுக்கிடையில் ஒரு அடிப்படை ஒருமைப்பாடு கோடிட்டுக்காட்டப்படுகிறது: இரு சாராரும் ஜனாநாயக விரோதமானவர்களாக இருப்பதோடு, வடக்கு கிழக்கு மக்கள் மீது இனவாத அடிப்படையிலான நியமனங்களை உள்ளடக்கிய ஒரு சபையை திணிப்பதிலும் ஈடுபட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் பிரேரணைகள்

இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை, முறையே விடுதலைப் புலிகள், அரசாங்கம் மற்றும் முஸ்லிம் இனவாத அமைப்புகளால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக அமையும். விடுதலைப் புலிகளுக்கு பெரும்பான்மை உறுதிப்படுத்தப்படுவதோடு, அரசாங்கத்தின் பிரேரணையைப் போலன்றி தன்னாட்சி சபையின் தலைவரை தேர்ந்தெடுப்பதிலும் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும். அதன் தலைவர் பிரதான நிர்வாகி மற்றும் இதர அலுவலர்களை நியமிப்பது மற்றும் விலக்குவது உட்பட வடக்குக் கிழக்கிலான நிர்வாகத்தில் பரந்த அதிகாரங்களை நிர்வகிப்பார். இந்த சபை ஐந்து வருடங்களுக்கு தொடர்ந்து இருக்கும்.

தன்னாட்சி சபையில் தனது பெரும்பான்மையை நியாயப்படுத்துவதற்காக, விடுதலைப் புலிகள் முன்னுரையில் தம்மை தமிழ் மக்களின் "ஏக பிரதிநிதிகளாக" பிரகடனப்படுத்தியுள்ளது. விடுதலை புலிகளின் பிரகடனம் வெளிப்படுத்துவது என்னவெனில், அது பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொள்ளும் அதே மக்களுக்கு எதிராக நேரடியாக அதிகாரத்துவ நடவடிக்கைகளை முன்னெடுத்த நீண்ட வரலாற்றையே ஆகும். இலங்கை இராணுவத்திற்கு எதிரான ஆயுதப் போராட்டம் என்ற பெயரில், அது அரசியல் மற்றும் சமூகக் கோரிக்கைகளை எழுப்பிய எந்தவொரு எதிர்ப்பையும் வன்முறையாக நசுக்கி வந்துள்ளது. இது விடுதலைப் புலிகளின் சமூக எதிரிகளுக்கு எதிரான அதன் நடவடிக்கைகளின் மூலம் மிகத் தெளிவாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. அது 1998ல் சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க) உறுப்பினர்களை வன்னியில் தடுத்து வைத்திருந்ததோடு, 2002ல் ஊர்காவற்துறை தீவில் உள்ள சோ.ச.க உறுப்பினர்களுக்கு எதிராக மரண அச்சுறுத்தல்களையும் விடுத்துள்ளது.

விடுதலைப் புலிகள் தன்னாட்சி சபையில் அதிகளவிலான அதிகாரங்களைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், வடக்கு கிழக்கு மாகாணத்தில் எட்டு மாவட்டங்களில் ஸ்தாபிக்கப்படவுள்ள நிர்வாக குழுக்கள் மீதும் கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்கும். விடுதலைப் புலிகளின் பிரேரணைகளின் படி, "தன்னாட்சி சபைக்கு மாவட்டங்களில் நிர்வாகத்தை மேற்கொள்வதற்காக மாவட்டக் குழுக்களையும் உருவாக்குவதோடு, அத்தகைய குழுக்கள், அத்தகைய அதிகாரங்களிலும் தன்னாட்சி சபையின் தீர்மானத்தின்படி பிரதிநிதித்துவம் செய்யும்." தற்போது இருந்துகொண்டுள்ள உள்ளூர் அரசாங்க சபைகள் ரத்துசெய்யப்படும்.

தன்னாட்சி சபை பிரேரணைகள் மிகவும் சந்தேகத்திற்கிடமின்றி விடுதலைப் புலிகளை வடக்கு கிழக்குக்கு பொறுப்பாளியாக்கும் அதே வேளை, அரசாங்கத் திட்டத்துடனான பிரதான வேறுபாடு சபை நீடிக்கும் காலமாகும். தன்னாட்சி சபை, மிகவும் மோதலுக்குரிய விடயங்களான வருமானவரி, சட்டம் ஒழுங்கு மற்றும் காணி உட்பட அரசாங்கப் பிரேரணையில் சேர்க்கப்பட்டிராத பல பிரதேசங்கள் மீதான தகமையற்ற "முழு" அதிகாரத்தையும் கொண்டிருக்கும்.

கிழக்கிலங்கையில் முஸ்லிம்களின் செல்வாக்கிலான பிரதேசங்களில் வரி, காணி மற்றும் ஆளுமை மீதான விடுதலைப் புலிகளின் கொள்கைகள் சம்பந்தமாக ஏற்கனவே கசப்பான சில சமயங்களில் வன்முறை ரீதியான இன பூசல்கள் வெடித்துள்ளன. அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகளும் பிரேரித்துள்ள தீர்மானங்கள், முரண்பாடுகளுக்கு முடிவுகட்டுவதற்குப் பதிலாக இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட அமைப்புகள் தோன்றுவதற்கும் மேலதிக பதட்ட நிலைமைகளுக்கும் மோதல்களுக்கும் மட்டுமே வழிவகுக்கும் என்பதை இந்த மோதல்கள் கோடிட்டுக் காட்டுகின்றன.

இடைக்கால தன்னாட்சி சபையானது உள்ளூரிலும் வெளிநாட்டலும் கடன்பெறுதல், உத்தரவாதம் மற்றும் நஷ்டஈடு வழங்கல், நேரடியாக நிதி உதவி பெறுதல் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபடுதல் அல்லது ஒழுங்குபடுத்தல் உட்பட பரந்த பொருளாதார அதிகாரங்களை கொண்டிருக்கும். இதற்கும் மேலாக, இலங்கைக்கு வரும் ஏனைய அரசுகள் மற்றும் அமைப்புகளால் ஒப்பந்தத்தின் மூலம் வடக்கு கிழக்குக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதிகளையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும். விடுதலைப் புலிகள் கடல் சம்பந்தமான மற்றும் கடல்சார்ந்த வளங்கள் மீதான கட்டுப்பாட்டையும் கோருகிறது.

விடுதலைப் புலிகள் வடக்கும் கிழக்கும் ஐக்கிய இலங்கை அரசு என்ற வரம்புக்குள் இருக்கும் என ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, பிரேரிக்கப்பட்டுள்ள அமைப்பு மிகவும் தளர்ச்சியானதாகும். வெளித்தோன்றும் எந்தவொரு பிளவும் இலங்கை அரசியலமைப்பின் வரம்புக்குள் தீர்க்கப்படமாட்டது. ஆனால் சமாதான முன்னெடுப்புக்கு தற்போது அணுசரனை வழங்கும் நோர்வேயின் மத்தியஸ்தத்தின் தலையீட்டுடன் இறுத்தி தீர்ப்பு ஒரு நீதிமன்றத்தின் மூலம் அடையப்படும். நீதிமன்ற தலைவரின் முக்கிய பாத்திரத்தை சர்வதேச சட்டமே தீர்மானிக்கும்.

தமிழ் மக்களுக்கு எந்தவொரு சலுகையும் வழங்கப்படுவதை எதிர்க்கும், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) மற்றும் சிஹல உறுமய போன்ற சிங்களத் தீவிரவாதக் கும்பல்கள், விடுதலைப் புலிகளின் பிரேரணைகள் ஒரு தனியான தமிழீழத்தை உருவாக்குவதற்கான முதற்படி என உடனடியாக நிராகரித்தன. அவர்களின் எதிர்ப்பில் குமாரதுங்கவின் பொதுஜன முன்னணியில் உள்ள சில பிரிவினரும் கலந்துகொண்டதோடு, இந்த எதிர்ப்புகள் பாதுகாப்பு, உள்துறை மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்களை அபகரிக்கும் குமாரதுங்கவின் தீர்மானத்திற்கு சந்தேகத்திற்கிடமின்றி பங்களிப்பு செய்துள்ளன.

தன் பங்கிற்கு விடுதலைப் புலிகளும் தனது பிரேரணைகள் பேச்சுவார்த்தைகளுக்கு உகந்தது என வலியுறுத்திவந்தது. பரந்த அதிகாரங்களுக்கான அதன் கோரிக்கைகளை விமர்சித்தவர்ளுக்கு, விடுதலைப் புலிகள் வடக்குக் கிழக்கில் தனது கட்டுப்பாட்டில் உள்ள குறிப்பிடத்தக்க பிரதேசங்களில் இத்தகைய அதிகாரங்களை ஏற்கனவே கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டியது.

சிங்களத் தீவிரவாதிகளின் எதிர்ப்பு எவ்வாறான போதிலும், அரசாங்கம், பெரும்பான்மையான ஊடகங்கள் மற்றும் வர்த்தகத் தலைவர்களும் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான அடிப்படையாக விடுதலைப் புலிகளின் பிரேரணைகளை வரவேற்றனர். ஒரு தசாப்தத்திற்கு முன்னர், அல்லது ஐந்து வருடங்களுக்கு முன்னர், சிங்களப் பேரினவாதத்தில் ஊறிப்போயுள்ள தற்போதைய அரசியல் நிறுவனத்தால் இத்தகைய திட்டம் கண்டனங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்க கூடும்.

யுத்தத்திற்கு முடிவுகட்டுவதன் மூலமும், விடுதலைப் புலிகளை இளைய பங்காளியாகவும் பொலிஸ்காரனாகவும் கவசமிடுவதன் மூலமும் மட்டுமே இலங்கையை பூகோளப் பொருளாதாரத்தில் இணைப்பதும் மற்றும் தெற்காசியாவில் திறந்துவிடப்பட்டுள்ள வியாபார வாய்ப்புக்களில் இலாபமடைவதும் சாத்தியமாகும் என ஆளும் கும்பலின் மிகவும் சக்திவாய்ந்த பகுதியினர் கணக்கிடுகின்றனர். வடக்குக் கிழக்குக்கான இரண்டு பிரேரணைகளதும் பண்பு தொழிலாள வர்க்கத்துக்கு ஒரு எச்சரிக்கையாகும். சமாதான முன்னெடுப்பில் இருந்து பிரிக்கமுடியாத ஒரு பகுதியான பொருளாதார மறுசீரமைப்புத் திட்டம் ஜனநாயக முறையில் அமுல்படுத்தப்பட முடியாது.

பிரபாகரனின் "மாவீரர் தின" உரையானது, கொழும்பில் அரசியல் நெருக்கடி இருந்த போதிலும் மற்றும் இடைநிறுத்தப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகளின் முட்டுச்சந்து தொடர்கின்ற போதிலும் விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்தும் "பொறுப்புடன்" செயற்படும் என ஏகாதிபத்திய சக்திகளுக்கு மீள் உத்தரவாதம் வழங்குவதை இலக்காகக் கொண்டதாகும். விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுக்காக அன்றி, தனது சுய இலாபத்திற்காக ஒரு பங்கினை ஒதுக்கிக்கொள்வதை குறிக்கோளாக கொண்டிருக்கும் ஒரு சிறிய செல்வந்த கும்பலுக்காகவே பேசுகின்றது என்ற உண்மையை இது உறுதிப்படுத்துகின்றது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved