World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா :
ரஷ்யா மற்றும் முந்தைய USSR Georgia: "Rose revolution" destabilises southern Caucasus ஜோர்ஜியா: "ரோஜாப் புரட்சி" தெற்கு காகசஸ் பகுதியின் உறுதித்தன்மையைக் குலைக்கிறது Part 1 By Simon Wheelan அமெரிக்க ஆதரவுடன் ஜோர்ஜியாவில் நடைபெற்ற ஆட்சிமாற்றம், அதற்குப்பின் நடந்தவை பற்றிய இரு பகுதிகள் தொடரின் முதல் கட்டுரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இறுதிப் பகுதி அடுத்தவாரம் வெளியிடப்படும். வாஷிங்டனில் தூண்டிவிடப்பட்டு, ரிபிலிஸி (Tbilisi) யில் நிறைவேற்றப்பட்ட "ரோஜாப் புரட்சி" என்று அழைக்கப்பட்ட இந்த ஜோர்ஜியாநாட்டு எழுச்சி, நாட்டின் சோகத்தைக் குறைத்துவிடவில்லை. மாறாக, ஜனாதிபதி எடுவார்ட் ஷெவர்ட்நாசே (Eduard Shevardnadze) இன் ஆட்சியை பறித்து, வாஷிங்டனுடன் இதைவிடக்கூடுதலான சார்பு உடைய ஆட்சியை பதவியில் இருத்தியது, பூகோளமுறையில் மிகமுக்கியமான தெற்கு காகசஸ் பகுதியில் ஆதிக்கத்தை செலுத்துவதற்கு அமெரிக்காவிற்கும், ரஷ்யாவிற்கும் இடையேயான போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. பூகோள-அரசியல் ரீதியான ஜோர்ஜியாவின் முக்கியத்துவம் குறைந்த மதிப்பீட்டிற்கு உட்படுத்தமுடியாதது. Baku-Tbilisi-Ceyhan எண்ணெய், Baku-Tbilisi-Esrzurum எரிவாயுக் குழாய், இவற்றில் மையம் கொண்டிருப்பதோடு, கருங்கடல், காஸ்பியன் கடல்களுக்கு இடையேயும், இரண்டு அல்லது மூன்று பிரிந்துசெல்லும் மாநிலங்களைக் கொண்டு, ரஷ்யா, துருக்கி, அசெர்பாஜன், ஆர்மீனியா இவற்றுடனான எல்லைகளையும் கொண்டிருக்கிறது. காகசஸ் எரிபொருள் ஆற்றல் இருப்புக்களை, ரஷ்யா, யூரேஷியா இவற்றிலிருந்து மேலைச் சந்தைகள் புறம் மாற்றும் எண்ணெய், எரிவாயுக் குழாய்கள், மூன்று உறுதித்தன்மையற்ற நாடுகள் வழியாகக் கடந்து, தெற்குத் துருக்கிய குர்டிஷ் பகுதியைச் சுற்றிவந்து, செச்னிய எல்லையை ஒட்டியுள்ள ஜோர்ஜிய நாட்டின் Pankisi Gorge க்கு 60 மைல் தூரத்திற்குள்ளும், மொத்தமாக 1000 மைல்களைக் கடக்கவேண்டும். இதன்விளைவாக, பூகோள-அரசியல் முறையில் இப்பகுதியைக் கட்டுப்படுத்துதல், 'The Great Game" (பெரிய விளையாட்டு அல்லது வேட்டையாடல்) என்று புஷ், புடின் நிர்வாகங்களுக்கிடையில் காகசஸ், மத்திய ஆசியப் பகுதிகளை ஆதிக்கத்திற்குட்படுத்த நடத்தப்படும் போராட்டத்தை விவரிக்கக் குறிக்கப்பெறும் சொற்றொடர், மறுபடியும் உயிரூட்டப்பட்டுள்ளது. இப்பகுதியியைப் பற்றிய கருத்தாய்வாளர்கள், மிக்கில் சாகேஷ்விலி (Mikhqil Saakashvili), இடைக்காலத்லைவர் நினோ புர்ஸ்நாட்சே (Nino Burdzhanadze) மற்றும் ஸுராப் ஸவானியா (Zhurab Zhvania) மூவரையும் கொண்டுள்ள இடைக்கால அரசாங்கத்தின் ஒப்புமைக் கண்ணோட்டத்தில், போதிய அனுபவமின்மையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்கள். ஷெவர்ட்நாசே இன் இந்த மூன்று பழைய உதவியாளர்களும் அநேகமாக வரவிருக்கின்ற அரசாங்கத்தை அமைக்க உள்ளனர் என்றும் சாகாஷ்விலி ஜனாதிபதியாக முடிசூட்டப்பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வாஷிங்டனில் உள்ள புஷ் நிர்வாகத்துடன் அவர்கள் கொண்டுள்ள நேரடியான நம்பிக்கையும், ஜோர்ஜியாவைப் பழையபடி இணைக்கவேண்டும் என்னும் அவர்களுடைய திட்டங்களும், காகசஸ் பகுதியை இன்னும் கூடுதலாக உறுதியற்றதாகத்தான் செய்துவிடும். சாகேஷ்விலி அஜாரிய மாநிலத்தைத் தேவையானால் வலிமையைப் பயன்படுத்தி மீண்டும் ஜோர்ஜியாவோடு இணைக்கும் திட்டம் உள்ளதாக அச்சுறுத்தியுள்ளார். பதவி ஏற்பு முடிந்தபின்னர், "புரட்சி தொடர்கிறது, ஜோர்ஜியா மகிழ்ச்சியுடனும், வெற்றியுடனும், முழு வடிவமைப்புடனும் விளங்கிய பின்னர்தான், அது முடிவடையும்" என்று அவர் முழக்கமிட்டார். இந்த அச்சுறுத்தல் நீண்ட நாட்களாகப் பிரிந்து சென்றுள்ள Abkhazia மற்றும் தெற்கு ஒசேஷியாவிற்கும் (Ossetia) சமமாகப் பொருந்தும். நவம்பர் தேர்தலில் ஷெவர்ட்நாசே உடன் தன்னுடைய விதியை இணைத்துக்கொண்ட, அஜாரிய கவர்னரான, அஸ்லன் அபாஷிட்ஜே (Aslan Abashidze), இடைக்கால அரசாங்கம் ஜனவரி 4ம் தேதி நிர்ணயித்து, அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி, பாராளுமன்றத் தேர்தல்களை, அவருடைய மாநிலம் புறக்கணிக்கும் என்று கூறியுள்ளார். நவம்பர் மாதத் தேர்தலுக்கு சற்று முன்புவரை, அபஷிட்ஜேயும், ஷெவர்ட்நாசேயும் தீராப்பகையுடைய விரோதிகளாக இருந்தனர் என்பது மட்டுமல்லாமல், சாகேஷ்விலி ஜனாதிபதியுடைய செல்லப்பிள்ளைகளில் ஒருவராக இருந்தார். அபஷிட்ஜே, புடின் அரசாங்கத்துடன் மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டிருப்பதுடன், ரஷ்யப் படைகள் அஜாரியத் தலைநகரான படூமியில் (Batumi) நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. சாகேஷ்விலி எல்லா ரஷ்யப் படைகளையும், ஜோர்ஜிய மண்ணிலிருந்து விரட்டிவிடுவதாகச் சபதம் மேற்கொண்டிருக்கிறார். நவம்பர் தேர்தலில் படூமியில் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தபோது, சாகேஷ்விலியின் அடியாட்கள் அஜாரிய பாதுகாப்புப் படைகளுடன் கைகலந்தன. கைத்துப்பாக்கிகள் வெளியே எடுக்கப்பட்டுப் பூசல்கள் பெரிய அளவாகப்போனாலும், எவரும் ஆபத்தான காயங்களுக்கு உட்படவில்லை. அபாஷிட்ஜே அண்மையில் ரஷ்ய அரசியல், வணிகத்தலைவர்களோடு, மாஸ்கோவில் பேச்சுவார்த்தைகள் நடத்தியதோடு, ஷெவர்ட்நாசேயின் சார்பாக, அவர் பதவியிலிருந்து அகற்றப் படுவதற்கு முன்பு, அஜேர்பைஜன், ஆர்மீனியாவிற்கும் சென்றிருந்தார். படூமிக்கும் ரிபிலிஸிக்கும் இடையே இரயில், விமானப் போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஆட்சிமாற்றம் வெற்றி பெற்றுவிட்டது என்ற தகவல் ரிபிலிஸியிலிருந்து உறுதியானவுடனேயே அப்கஜியன் (Abkhazian), தெற்கு ஒசேஷியன் (South Ossetian) என்னும் இரு நாடுகளிலும் அதிகாரிகள் தங்களுடைய இராணுவப்படைகளை உஷார்நிலையில் வைத்து விட்டனர். இதைத்தவிர, நாட்டில் தேவைகளும், சமத்துவமற்ற நிலைப்பாடுகளும் மலிந்திருப்பதால், கணக்கிலடங்காப் பிரிவுகள் உள்ள தன்மையில் மக்களைத் தூண்டிவிடும் அரசியல்வாதிகள் தழைத்து இருக்கமுடியும். ரஷ்யர்கள் படையனுப்பியிருக்கும், இனவகையில் அஜேரி ஆதிக்கம் மிகுந்த Kvemo Kartli என்ற ஜோர்ஜிய பகுதியும், ஆர்மினியாவில் Saktkhe-Javakheti பகுதியும், மிகவும் உறுதியற்ற நிலையில் இருக்கின்றன. பிரிந்து சென்றுள்ள அப்காஜிய (Abkhazi) மாநிலம் முஸ்லிம் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருக்கையில், மரபு வழி ஜோர்ஜிய, ரஷ்ய திருச்சபை ரிபிலிஸியில் ஆதிக்கத்தைக் கொண்டுள்ளது. பல தெற்கு ஒசேஷியர்களும் ரஷ்யப் பகுதியான வட ஒசேஷியிடம், ரிபிலிஸியில் உள்ளதை விட, பெரும் பிணைப்பைக் காண்கிறார்கள். ஜோர்ஜிய பொருளாதாரம், நாட்டு மொத்த உற்பத்தியில் 60 சதவீதம் கடன்களை செலுத்தப் பயன்படுத்தப்படுவதால், மோசமான நிதிமுறைக்கு உட்பட்டுள்ளது. இடைக்கால அரசாங்கம், இதற்குமுன் ஆட்சிசெலுத்திய ஷெவர்ட்நாசேயுடைய கடுஞ் சிக்கன நடவடிக்கைகளைத் தொடர்கிறது; மேலும் உலக வங்கி, சர்வதேச நிதியமைப்பு, வாஷிங்டன் ஆகியவற்றின் கோரிக்கைகளுக்கும் கட்டுப்படுவதாக உறுதிகொண்டுள்ளது. அதன் முக்கிய உறுப்பினர்கள், ஷெவர்ட்நாசேயுடைய வளர்ப்பில் இருந்ததால், நிர்வாகம் ஜோர்ஜியர்களை மிகவும் சிக்கனத்துடன் வாழவேண்டும் என்றும், வாழ்க்கைத் தரத்தில் உடனடியான பெரும் முன்னேற்றத்தை எதிர்பார்க்கவேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது. ஷெவர்ட்நாசேயுடைய ஆட்சியைப் பின்பற்றி, இடைக்கால அரசாங்கம் ஆட்சிப்பதவிகளைத் தங்கள் நெருங்கிய உறவினர்கள், ஒத்துழைப்பவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்துள்ளது. அப்படியும்கூட, சில பிரிவுகள் மனநிறைவு பெறவில்லை என்பதனால், வெவ்வேறு பிரிவினருக்கிடையே உறவுகளில் நெருக்கடியான அழுத்தம்தான் நிலவுகிறது. ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே பதட்டங்கள் வளர்தல் ஷெவர்ட்நாசே வெளியேற்றப்பட்டதிலிருந்து, ரஷ்ய, அமெரிக்க அரசாங்கங்களிடையே ரிபிலிஸி ஐ பற்றிய போராட்டம் அதிகமாகிவிட்டது. ஜோர்ஜிய இடைக்கால ஆட்சித்தலைவர் நினோ புர்ஸ்நாட்சே இடம், புஷ், "உங்களுக்கு ஏதாவது பிரச்சினை இருந்தால், வெள்ளை மாளிகையுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள். நாங்கள் உடனடியாக உதவிக்கு வருவோம்." என்று தெரிவித்தித்திருக்கிறார் போலும். தன்னுடைய பங்கிற்கு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் புதிய ரிபிலிஸி அரசாங்கத்திற்கு எவ்வளவு அழுத்தங்கள் கொடுக்கமுடியுமோ, அவற்றை அனைத்துச் சந்தர்ப்பங்களிலும், கொடுத்து வருகிறார். அமெரிக்கப் பாதுகாப்பு மந்திரி, டோனால்ட் ரம்ஸ்பெல்ட், அண்மையில் மத்திய ஆசியா, காகசஸ் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அஜைர்பைஜனில் இருக்கும் (Azerbaijan) பாகுவிலிருந்து (Baku), உஸ்பெகித் தலைவரான கரிமோவைப் பார்ப்பதற்கு விமானத்தில் செல்வதாக இருந்தது; ஆனால் உஸ்பெக் தலைநகரான தாஷ்கென்ட்டில் (Tashkent) கடுமையான மூடுபனி இருந்ததால் தரையிறங்கமுடியாமல் போயிற்று. இவருடைய அரசாங்கத்தின் உதவியுடன் ஷெவர்ட்நாசேயை விரட்டியடித்திருந்தவர்களைப் பார்ப்பதற்காக ரிபிலிஸிக்குப் பறந்து சென்றார். ரிபிலிஸி இன் புதிய தரகு முதலாளித்துவ (Comprador) ஆட்சியின் சார்பாக ஆக்ரோஷத்துடன் பேசிய ரம்ஸ்பெல்ட், 1999ம் ஆண்டு இஸ்டான்புல் ஒப்பந்தப்படி, ஜோர்ஜியாவிலிருந்து உடனடியாக அதன் படைகளை மாஸ்கோ திருப்பப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதற்கு, ரஷ்ய அயலுறவு மந்திரி Igor Ivanov, கோபத்துடன் விடையிறுத்தார்: "தேர்ந்த தூதுவர் என்ற முறையில், ஒவ்வொருவரும் ஆவணங்களை, அதுவும் அவற்றின் முதற்படிவத்தை, ஆய்ந்து படிக்குமாறு பரிந்துரை செய்கிறேன்." குறைந்தது பத்து ஆண்டுகளாவது புடின்அரசாங்கத்திற்கு ஜோர்ஜிய பகுதியிலிருந்து படைகளை நீக்கிக் கொள்வதற்கு காலஅவகாசம் பிடிக்கும் என்றும், உடன்படிக்கையின்படி ஒரு சிறிய எண்ணிக்கையிலான படைகளை அங்கு வைத்துக்கொள்ளலாம் என்றுள்ளது எனவும் தெரிவித்தார். "மேற்கு நாடுகளின் அசையா நட்புநாடு" என்று ரம்ஸ்பெல்ட் ஜோர்ஜியாவைத் தொடர்ந்து புகழ்ந்ததுடன், ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் அது கொடுத்திருந்த பங்களிப்புகளையும் புகழ்ந்தார். (ஷெவர்ட்நாசே ஒரு சிறப்புப்படைப் பிரிவை, கூட்டணி படையெடுப்பு தொடங்கிய பின் ஈராக்கிற்கு அனுப்பியிருந்தது.) ரம்ஸ்பெல்டு அங்கு சென்றிருந்தபோது, அரச தினைக்களம், பென்டகன், கருவூலத்துறை, தேசிய பாதுகாப்புக் குழு இவற்றிலிருந்து அதிகாரிகள் குழு ஒன்று, ஏற்கனவே ரிபிலிஸியின் வருங்கால திட்டங்களைப்பற்றி இடைக்கால அரசாங்கத்துடன் ஆலோசனைகள் நடத்துவதற்காக அங்கு இருந்தது. ஜோர்ஜியப் படைகளின் நான்கு பிரிவுகளுக்காக, சிறப்புத் தாக்குதல், கடற்படைப் பயிற்சிகள் இவற்றிற்காக புஷ் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த பயிற்சி, கருவிகள் இராணுவமையத்திற்கும் செல்வதற்கு ரெம்ஸ்பில்டிற்கு நேரம் இருந்தது. இடைக்காலத்தலைவரான புர்ஸ்நாட்சே இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, இரண்டு ஆண்டுகளில் $64 மில்லியின் திட்டமான இப்பயற்சி வருங்காலத்திலும் தொடரவேண்டும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்து இது இறுதியில் இராணுவப்படை முழுவதும் இயந்திரப்பிரிவாக மாறும் நிலை வரும் என்ற கருத்தையும் கூறினார். இந்த சொற்களைப்பிடித்துக்கொண்டு, புஷ் நிர்வாகம் தன்னுடைய இராணுவ ஆலோசகர்களையும் படைகளையும் நிரந்தரமாக ஜோர்ஜியாவில் நிறுத்துவைக்க விரும்புகிறது. ரிபிலிஸி ஆட்சிக் கவிழ்ப்பிற்குப்பிறகு, Maastricht ல் ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பிற்பான அமைப்பின் (Organisation for Security and Cooperation in Europe) கூட்டத்தில், வெளியுறவுத்துறை அமைச்சர் கொலின் பவலைச் சந்தித்த புர்ட்ஷ்நட்ஜே, ரஷ்யப்படைகளை விரைவில் ஜோர்ஜியாவிலிருந்து திரும்பப் பெறவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ரஷ்யாவை, இரு பிரிந்து செல்லும் குடியரசுகளுக்கு ஆதரவு அளித்ததற்காகவும், அஜாரிய சர்வாதிகாரி அபாஷிட்ஜேயின் தனியே செல்லவேண்டும் என்ற பேரவாக்கிற்கு ஆதரவு கொடுப்பதற்கும் கண்டனம் தெரிவித்து, பவல் வலியுறுத்தியதாவது; "மாஸ்கோ, ஜோர்ஜியாவின் நிலப்பகுதி இறைமையை மதிக்க வேண்டும்." அமெரிக்கப்படைகளை ஜோார்ஜியாவின் Pankisi George பகுதி, மற்றும் பல மத்திய ஆசிய நாடுகளிலும், ரிபிலிஸி யிலிருந்து சில நூறுமைல் தூரத்திற்குள் இருக்கும் ஈராக்கிலும்தான், நிறைய படைகளைக் கொண்டுள்ளது. புர்ட்ஷ்நட்ஜே, நேட்டோவிலும் (NATO), ஐரோப்பிய ஒன்றியத்திலும் ஜோர்ஜியா சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். ஒரு நாட்டின் புதிய தலைவர் என்ற முறையில் இந்த அம்மையாருடைய முதல் உரையிலேயே, அவர், ஷெவர்ட்நாசேயால் பின்பற்றப்பட்ட பலமான மேற்கத்தைய ஆதரவு கொள்கைகளில் இருந்து திடீரென கிரெம்ளினை நோக்கி சாயத்தொடங்கியது வரையான கொள்கைகளிலிருந்து பிறழமாட்டடோம் என்றும் உறுதிமொழியளித்தார். கடந்த சில நாட்களாக, ரிபிலிஸி அரசாங்கம், தன்னுடைய இறைமையை மதிப்புக்குறைக்கும் வகையில் அஜரியா மக்களுக்கு புதிய விசா வழங்கும் முறையை அறிமுகப்படுத்தும் முயற்சிக்காக ரஷ்யாவை சாடியுள்ளது. புர்ட்ஷ்நட்ஜே "பிரபுவிற்கு ஒரு விதித்தொகுப்பும், கப்பம் செலுத்துபவருக்கு மற்றொரு விதித்தொகுப்பும் இருந்ததைப் போன்ற முறையில்தான் இது உள்ளது" என்று கூறியிருப்பதுடன், அஜைரியர்கள் ரஷ்ய விமானநிலையங்களில் நுழைந்தவுடன் அனுமதி விசா பெறமுடியும் என்றும் மற்ற ஜோர்ஜியப் பகுதியினர் ரஷ்யத்தூதரகத்தின் முன் வரிசையில் நிற்கவேண்டியிருப்பதையும் சுட்டிக் காட்டினார். $3 பில்லியன் மதிப்புடைய எண்ணெய், எரிவாயுக் குழாய்களைத் தாக்குவதற்கு நாசவேலைக்காரர்களுக்கு ஏற்பாடு செய்வதாகவும் ரஷ்யாவை, ஜோர்ஜியப் பாதுகாப்பு அதிகாரிகள் குற்றச்சாட்டிற்கு உட்படுத்தியுள்ளனர். ஜனநாயக நெறியற்ற முறையில் ஷெவர்ட்நாசே பதவியிலிருந்து அகற்றப்பட்டுவிட்டதாக, ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. இதற்கான காரணம் பெரிதும் வாஷிங்டன்தான் என்று கூறும் புடின், அமெரிக்க சார்பிற்காக ஷெவர்ட்நாசேயையும் கடுமையாகக் குறைகூறியுள்ளார். ரிபிலிஸி ஆட்சிமாற்றத்திற்குப் பிறகு உடனே நடந்த அமைச்சரவை கூட்டத்தில், புடின் எப்படி, "ஜோர்ஜியாவில் அதிகார மாற்றம், முறையாகத் தொடர்ந்திருந்த உள்நாட்டு, வெளிநாட்டுப், பொருளாதாரக் கொள்கைகளின் தர்க்கரீதியான விளைவு" என்று பேசினார். அவருடைய பங்கிற்கு ஷெவர்ட்நாசே, ஜோர்ஜ் சோரஸ்ஸும், மற்றவற்றுடன் சேர்ந்து, தன்னுடைய வீழ்ச்சிக்குக் காரணம் என்றும், புஷ் நிர்வாகம் தனக்கு நிலைமை சாதகமாக இல்லை என்று தெரிந்தவுடன் "நல்லகாலத்தில் மட்டும் கொள்ளும் நட்பு போல்" இருந்துவிட்டது என்றும் குறைகூறினார். ரஷ்யப் பெருவணிகர் போரிஸ் பெரிஜோவ்ஸ்கி (Boris Berezovsky) ஏன் தடையின்றி ரிபிலிஸியில் ஆட்சிமாறிய பின்னர், இறங்குவதற்கு அனுமதிக்கப்பட்டார் என்பதை ஜோர்ஜியா விளக்கவேண்டும் என்று மாஸ்கோ வற்புறுத்தியுள்ளது. ரஷ்ய வெளியுறவு அமைச்சரகம் ஜோர்ஜியாவிற்கு சர்வதேச வாரண்டின்படி அவரைப்பிடித்திருக்கவேண்டிய அதன் பொறுப்பைப் பற்றி நினைவுறுத்தியது. மோசடி, நிதி ஊழல் இவற்றிற்காக நீதிமன்றங்களில் கொண்டுவரப்படவேண்டியவர், பிரிட்டனில் புகலிடம் பெற்றுள்ளார். ஒரு பிரிட்டிஷ் குடிமகன் Elein Platon என்ற மாற்றுப்பெயரில், Ekho Moskvy வானொலிக்கு வந்திருந்த பெரிஜோவ்ஸ்கி, விளாடிமிர் புடினுடன் பின்னர் நட்பிழந்து நாட்டை விட்டோடி போரிஸ் யெல்ட்சினுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த நிதிச்சிறுகுழுவனரில் ஒருவர் ஆவார். பின்னர் இவர் செச்னியாவின் எதிர்ப்புப் பிரிவினைவாதிகளுக்கு பண உதவி அளித்ததை ஒப்புக்கொண்டுள்ளார். காஸ்பியன் பகுதிக்கு அமெரிக்கா உரிமை கோரல் பழைய சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவமுறை மீட்கப்பட்ட பின்பு, தெற்கு காகசஸ், காஸ்பியன் பகுதிகளில் அமெரிக்கா நுழையும் முயற்சியை மேற்கொள்ள, கிளின்டன் நிர்வாகம் காரணமாக இருந்தது. ஒரு சர்வதேச எண்ணெய் பெருநிறுவனத்துடன் இணைந்து, காகசியப் பகுதிகளின் ஆட்சிகளில், குறிப்பாக அஜெர்பைஜானிலும், ஜோர்ஜியாவிலும், மாபெரும் அளவில் முறைதவறிக் கொடுக்கப்பட்ட லஞ்சத்தாலும், உதவித்தொகையாலும், தீவிரமாக உறவுகொள்ள முற்பட்டு, காஸ்பியப் பகுதிகளிலிருந்து மத்தியதரைக்கடல் துறைமுக நகரமான Ceyhan க்கு எண்ணெய்க் குழாய்கள் தொடர்பு அமைத்திடுவதற்கு பேரங்களை வற்புறுத்தி வெற்றியடைந்தது. இந்த எரிவாயு மற்றொரு துருக்கிய இறுதியடமான உள்நாட்டிலிருக்கும் Erzurum க்கும் வந்து சேரும். இந்த முயற்சியை கிளின்டன் "தவிர்க்கவியலாத தேசிய நலன்" கொண்டது என விவரித்துள்ளார். ஜனநாயகக் கட்சி விட்ட இடத்திலிருந்து, புஷ் நிர்வாகம் தொடர்ந்து, தேவையான மாறுதல்களை வேண்டும்பொழுது செய்துவந்தது. ஜோர்ஜியாவில் அமெரிக்கத் தூதராகக் கடந்த ஆண்டு பதவிக்கு வந்து ஷெவர்ட்நாசே உடைய வீழ்ச்சியில் முக்கிய பங்கைக் கொண்டிருந்த ரிச்சர்டன் மைல்ஸ், 1993 ம் ஆண்டு, அதன் அண்டை நாடான அஜெர்பைஜனுடைய தூதராக நியமிக்கப்பட்டிருந்தார். இவருடைய பணி, எண்ணெய்க் குழாய்கள் அமைப்பது பற்றிய ஒப்பந்தங்களில் இருந்த தேக்கநிலையைக் கடந்து சீர் செய்வதாக இருந்தது. அவர் பின்னர் ரிபிலிஸிக்கு மாற்றப்பட்டது அமெரிக்கப் படைகளை ஜோர்ஜியாவிலிருந்த Pankisi Gorge என்ற இடத்தில் கடந்த ஆண்டு கொண்டுசெல்லப்பட்ட நேரத்தோடு இணைந்திருந்தது. துணை ஜனாதிபதி ரிச்சார்ட் சென்னி, 1998ம் ஆண்டு, பேசுகையில், "காஸ்பியன் பகுதி போர்த்தந்திரமுறைக்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்த தன்மையுடன் திடீரென்று வெளிப்பட்டது போல், வேறு ஒரு பகுதி வெளிப்பட்ட தன்மையை நான் நினைத்துப்பார்க்கமுடியவில்லை." என்று ஒப்புக் கொண்டார். ஜூன் 2000 த்தில், அமெரிக்க இராணுவப் போர்க் கல்லூரியின் முக்கிய தந்திரநிறைவுடைய இடங்கள் பற்றிய ஆய்வுக்கூடம் (Strategic Studies Institute of the US Army War College ) "காகசசிற்கு அப்பாலும் மத்திய ஆசியாவிலும் அமெரிக்க இராணுவ நடைமுறைகள்" என்ற பெயரில் ஒரு ஆவணத்தை வெளியிட்டு, ஆற்றல் ஆதாரங்களுக்கு, இப்பகுதி பேர்சிய வளைகுடா, அரேபியத் தீபகற்பம் இவற்றின் உறுதியற்ற திறனுடைய நிலைக்கு மாற்றாக, இப்பகுதியை அடையாளம் கண்டது. காஸ்பியன் பகுதியைப் பொறுத்தமற்ற மிகையான பயன்பாட்டு இயல்புகளின் கூற்றைப்பற்றி ஐயம் எழுப்பப் பட்டிருந்தாலும், இப்பகுதி முழுவதும், இதுவரை குறைந்த அளவில் பயன்படுத்தப்படும் கஸகஸ்தானி இருப்புக்கள் உட்பட, 160 பில்லியன் பாரெல்கள் (பீப்பாய்கள்) எண்ணைய்த் திறன் உடையதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இப்பகுதிக்கு மற்ற வட்டார சக்தியின் அச்சுறுத்தல் பற்றிய கருத்தை இந்த ஆவணம் உணர்ந்து கொண்டு எச்சரிக்கை விடுக்கிறது: " நன்கு சோதிக்கப்பட்டு வெற்றியடைந்துள்ள முறைகளைக் கையாண்டு எளிமையான முறையில், வரக்கூடிய ஆற்றல் திட்டங்கள் பலவற்றையும், ஏன் முழுமையாகக் கூட, ரஷ்யா நாசவேலையினால் தகர்த்துவிடமுடியும் என்பதோடு, இப்பகுதியில் வலுவான, நீண்டகாலத் திட்டத்தை மேற்கொள்வதைவிட நாம் வேறு எதுவும் செய்வதற்கு இல்லை". 9/11 தாக்குதல்களைப் பயன்படுத்தி, புஷ் நிர்வாகம் இதைத்தான் சரியாகச் சாதித்துள்ளது, அது, மத்திய ஆசியா முழுவதும் படர்ந்துள்ள தளங்களுடன், பகுதியில் இராணுவ சக்தியையும் வெளிப்படுத்தியிருப்பது என்பதேயாகும். மத்திய ஆசியாவில் ஆப்கானிஸ்தானிலும், பாரசீக வளைகுடாப்பகுதியில் ஈராக்கிலும் நடைபெற்றுள்ள போர்கள், வாஷிங்டனுடைய மூலவளங்களுக்கான பூகோள அரசியல் திட்டங்களுக்கு தடையற்ற முறையில் அணுகவேண்டும் என்ற கருத்துள்ளதை வலியுறுத்துகின்றன. அதன் கொள்கைகள், பொருளாதார, அரசியல், இராணுவ நடவடிக்கைகளை எடுத்து தெற்கு காகசஸ் பகுதியிலும், மத்திய ஆசியாவிலும் கட்டுப்பாட்டைப் பெறுவதை இலக்காகக் கொண்டுள்ளன. தொடரும்........ |