WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
ஜேர்மனி
Deportations and the border regime
The deadly consequences of Germany's refugee policy
நாடுகடத்தப்படுதலும், எல்லை ஆட்சியும்
ஜேர்மனியின் அகதிகள் தொடர்பான கொள்கையின் பேரழிவான விளைவுகள்
By Lena Sokoll
8 January 2004
Use this version to
print |
Send this link by email |
Email the author
கடந்த செப்டம்பர் மாதம், ஜேர்மனியில் பிராண்டன்பேர்க் மாநிலத்தில், பிராங்க்பேர்ட்-ஓடர்
என்ற நகரத்தில், குடியேற்ற அலுவலகத்தில் விஷமிகள் நடத்திய தாக்குதல்களைப் பயன்படுத்தி, உளவுப்பணித்துறை
(Verfassungsschutz),
உலக சோசலிச வலைத் தளத்தை வன்முறையை தூண்டிவிடுவதாகவும், வன்முறை, "இடது தீவிரவாதத்தின்"
பகுதியாக இது இருப்பதாகவும் அவதூறு செய்தது.
இந்த அரசியல் தாக்குதலுக்கான போலிக்காரணமாக "வெளியேற்றுக் கொள்கையும்
எல்லை ஆட்சியும்: ஜேர்மன் அகதிக்கொள்கையின் பேரழிவுதரக்கூடிய விளைவுகள்" என்று உலக சோசலிச வலைத்
தளத்தில் (WSWS)
மூன்று ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஒரு கட்டுரையாகும். தாக்கப்பட்டிருந்த குடியேற்ற அலுவலகத்தில் இந்தக்
கட்டுரையொன்று விட்டுச்செல்லப்பட்டது என்றும், அந்த அடிப்படையில் உலக சோசலிச வலைத் தளம்தான் இதற்குப்
பொறுப்பு என்பதும், பிராண்டன்பேர்க் உளவுத்துறை கூற்றாகும்.
"குற்ற நடவடிக்கைகளுக்கு இத்தகைய கட்டுரைகள்தாம் வழியமைத்துக் கொடுக்கின்றன"
என்று, இந்த தாக்குதல்பற்றி தன்னுடைய வலைதளத்தில் கொடுத்த அறிக்கையொன்றில், உளவுத்துறை அறிவித்தது.
கட்டுரையின் பொருளுரைபற்றி பல திரிபுகளையும், பொய்க்கூற்றுக்களையும் தொடர்ந்த பின்னர், ஜேர்மனியுடைய
அகதிக்கொள்கையின் விளைவுகள் பற்றி WSWS
எடுத்துக்கூறும் தன்மையின் உண்மை பற்றியும் சந்தேகங்களை தெரிவித்தது.
WSWS கட்டுரை, நன்கு பிரபல்யமான மற்றும்
அனைவருக்கும் கிடைக்கக் கூடிய தகவல்களைத்தான் அடிப்படையாகக் கொண்டிருந்தது. 1993 லிருந்து 2000
வரையிலான 7 ஆண்டு காலத்தில், அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட குடியேற்றத்தை நசுக்கவேண்டும் என்ற
கொள்கையினால், குறைந்தது 239 அகதிகளாவது உயிரிழந்திருக்கக் கூடும் என்றும், இதைவிடப் பலர்
காயமுற்றிருக்க கூடுமென்றும் உண்மையை ஆதாரம் கொண்டு கட்டுரையில் மதிப்பீடு இருந்தது.
இந்த காலகட்டத்தில், இனவெறித் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட அகதிகளின்
எண்ணிக்கையை விட, மிருகத்தனமான வெளியேற்றும் நடவடிக்கைகளின் விளைவாகவும், வெளியேற்றும் நிலையங்களில்
நிலவிய மனிதாபிமானமற்ற சூழ்நிலையினாலும், உயிரிழந்த அகதிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
இனவாதத்திற்கு எதிரான விரோதப்போக்கு காட்டுவதாக அரசியல்வாதிகள் உதட்டளவில் எப்பொழுதாவது
பரிவுகாட்டிப் பேசியபோதிலும் அரசாங்க கொள்கைகள், ஜேர்மனியில் "விரும்பத்தகாத" அந்நியரின் வாழ்வு
மதிப்பற்றது என்று கூறும் நவ-நாஜிகளுடைய
(Neo-Nazis) கருத்தை உண்மைப்படுத்துவதுபோல்தான்
இறுதியில் இருக்கிறது என்றும் கட்டுரை கூறியிருந்தது.
"இந்த கட்டுரையின் ஆசிரியை, குடியேற்ற அதிகாரிகள், எல்லைப் பாதுகாப்பு படை
(BGS)
மற்றும் வாடிக்கையான காவல்துறை ஆகியவை அகதிகளையும், அயல்நாட்டினரையும் இழிவானமுறையில்
நடத்துவதாகவும், எல்லைப் பாதுகாப்பு படையின் 'எல்லை ஆட்சி' எனப்படுவது முதலில் அகதிகள் ஜேர்மனிக்குள்
நுழைவதையே தடுக்கிறது என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், நாடுகடத்தும் நடவடிக்கையும் மிகுந்த
குறைபாடுகளைக் கூறும் முறையில் எழுதப்பட்டுள்ளது. நாடுகடத்தப்படும் நடவடிக்கையின் போது,
தொடர்புடையவர்கள் அடிக்கடி காயமுறுகிறார்கள் அல்லது இறந்து போகின்றனர். இந்த 'உண்மை' ஆதாரமாகக்
கொண்டு, கட்டுரையாசிரியை அரசாங்கம் தீவிர வலதுசாரிகளுக்கு எதிரான போராட்டத்தின் தன் கவனத்தை
உண்மையாகவே கொண்டுள்ளதா என்ற அவநம்பிக்கை கருத்தையும் எழுப்பியுள்ளார்." என்று உளவுத்துறை தன்னுடைய
வலைத்தள அறிக்கையில் கொடுத்துள்ளது.
வழமையாக செய்தித்தாள்களிலும், குடியேறுவோரின் உரிமைகள் காக்கும் பல
அமைப்புக்கள் ஆராய்ந்து கொடுக்கும் தகவல்களைக் கேள்விக்குட்படுத்தும், அதுவும் மனித கெளரவம்,
அரசியலமைப்பு இவற்றைப் பாதுகாக்கும் கடமை உடைய நிறுவனம் எனக்கூறப்படும் ஓர் அரசாங்கத் துறையைப்பற்றி
ஒருவர் என்ன கருதமுடியும்? ஐரோப்பாவில் சட்டபூர்வமாக நுழைவதில் கஷ்டங்கள் இருப்பதால், உலகெங்கிலுமிருந்து
பல புலம்பெயருவோர் மற்ற வழிகளில் உள்ளே நுழையும்போது தங்கள் உயிரை இழக்கிறார்கள் அல்லது
காயமடைகிறார்கள் என்பது மறுக்கப்படமுடியாத உண்மையாகும். அவர்கள் ஆறுகளையும், கடலையும்
கடக்கும்பொழுது மூழ்கிப் போகிறார்கள் அல்லது குளிரில் விறைத்து மடிகிறார்கள் அல்லது பெரும்
சரக்குப்பெட்டிகளில் (Containers)
மூச்சத்திணறி மடிகிறார்கள் அல்லது எல்லைப் பாதுகாவலர்கள் துரத்தும்போது காயத்திற்கு உட்படுகிறார்கள்.
இதைத்தவிர, புலம்பெயருபவர்கள், நாடுகடத்தும் முகாம்களில் பொறுத்துக்கொள்ள முடியாத நிலைமைகளை
எதிர்கொள்ளவதோடு, நாடுகடத்தப்படும் நேரத்திலும் கூட பலமுறையும் காவல்துறை அல்லது பாதுகாப்பு
காவலர்களால் மிருகத்தனமாக நடத்தப்படும் முறைக்கு உள்ளாகிறார்கள்.
2001ம் ஆண்டு WSWS
கட்டுரையில் அம்பலப்படுத்தப்பட்ட நிலைமைகள் இடைப்பட்ட காலத்தில் முன்னேற்றம் அடைந்துவிட்டன என்பதற்கான
சான்றுகள் இல்லை. போலந்துடன் பொது எல்லையை கொண்டிருக்கும் மாநிலமான பிராண்டன்பேர்க்கில்
அதிகாரிகளின் பார்வைக்கு, அகதிகள் புலம்பெயருவோரை மனித தன்மையின்றி நடத்தும் முறைபற்றிய குறிப்புகள்
அரச அதிகாரிகளுக்கு தெரியாமல் போவதற்கு வழியில்லை.
எல்லையில் இறப்புக்களும், காயமடைதலும்
Oder, Neiße ஆறுகளைக் கடந்து
ஜேர்மனிக்குள் நுழைய முயற்சிக்கும்போது, தொடர்ந்து பாதிக்கப்படுபவர்கள் இறந்துவிடும் நிலை உள்ளது. மற்றும்
பல குடியேறுவோர், போலீஸ் மோப்ப நாய்கள் துரத்துவதினால் காயமடைகின்றனர் அல்லது எல்லைப்
போலீசாரால் சுட்டுக்கொல்லப்படுகின்றனர்.
பின்வருவது ஜூலை 2001 மட்டும் நிகழ்ந்தது தொடர்பாக ஜேர்மனியப்
பாராளுமன்றத்தில் (பட்டியல் வரிசை எண்.14/8432), வெளியிடப்பட்ட ஆவணத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு
சுருக்கமான அட்டவணையாகும்:
ஜூலை 8: செக்கோஸ்லாவாக்கியா- சாக்சனி எல்லையில்,
Neuhermsdorf
அருகில், ருமேனியாவைச் சேர்ந்த ஒரு நபர், ஜேர்மன் எல்லைக் காவல் துறையினரால் கைது செய்யப்படும்
நேரத்தில், போலீஸ் நாய் ஒன்றினால் கடித்துக் காயப்படுத்தப்பட்டார்.
ஜூலை 16: ஜேர்மனி-போலந்து எல்லையில், பிரண்டன்பேர்கில் உள்ள நகரமான
Manschow
விற்கு வடக்கில், ஓடர் ஆற்றிலிருந்து அடையாளம் தெரியாத, குடிபோதையிலிருந்திருக்க கூடிய நபர் ஒருவர்
கரையேற்றப்பட்டார்.
ஜூலை 22: பிராங்க்பேர்ட்-ஓடர் நகரத்திற்கருகே ஆற்றிலிருந்து,
குடிபோதையிலிருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கரையேற்றப்பட்டார்.
ஜூலை 31: சாக்சனிப் பகுதியருகே,
Niederschlag
என்ற இடத்தில், செக்கோஸ்லாவாக்கிய எல்லை அருகே, எல்லைக்காவல் படையின் போலீஸ் நாயினால்,
ஆர்மேனியாவை சேர்ந்த ஒரு நபர் கடிபட்டார்.
இப்படிப் பட்டியல் 2001ல் எஞ்சிய மாதங்களுக்கும், நீண்டுகொண்டே போகலாம்.
இந்த ஆண்டிற்கோ அல்லது கடந்த ஆண்டிற்கோ, அதிகாரபூர்வமான புள்ளிவிவரங்கள்
இல்லை. குடியேற்ற அதிகாரிகள் அல்லது எல்லைப் பகுதிக் காவலர் நடைமுறையில் ஏற்பட்ட மாறுதலினால்
அல்லாது, 2002 ஜேர்மனிய பொதுத்தேர்தலுக்கு பிறகு பாராளுமன்றத்தின் அமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையே
இது பிரதிபலிக்கிறது. 2001க்கு முன்பு, ஜனநாயக சோசலிச கட்சி (Party
for Democratic Socialism-PSD) யின்
பாராளுமன்றபிரிவு ஜேர்மன் எல்லைகளில் அகதிகளின் கதியைப்பற்றி எப்பொழுதும் கேள்வி கேட்டு வந்திருந்தது.
2002 தேர்தலில் ஜனநாயக சோசலிச கட்சி ஒரு பிரிவாக இயங்கும் தன்னுடைய தகுதியை பாராளுமன்றத்தில்
இழந்துவிட்டது என்பதாலும், சமூக ஜனநாயக கட்சி
(SPD), பசுமைக்கட்சி உட்பட வேறு எந்தக்கட்சியும்,
இத்தகைய விஷயங்களில் தற்போதைய நிலவரத்தை அறிந்து கொள்ள எந்த ஆர்வமும் காட்டுவதில்லை.
2002ம் ஆண்டு எல்லைக்காவல் படை பற்றிய ஆண்டு அறிக்கையில், ஜேர்மனிய
உள்துறை மந்திரி Otto Schily (SPD)
முந்தைய ஆண்டைவிட, "நாட்டின் எல்லைப்பகுதிகளில் சட்டபூர்வமற்ற
நுழைவுகளும்", "கடத்தல் வேலைகளும்" கணிசமாகக் குறைந்துவிட்டன என்று வலியுறுத்தி பேசினார். ''ஐரோப்பிய
ஒன்றியமும், அது தொடர்புடைய சர்வதேச விரிவாக்க, கட்டுப்பாட்டு தந்திர உத்திகளும் எல்லை
மேற்பார்வையில், எல்லைகளுக்கப்பாலும் ஒத்துழைப்புக்கும் எல்லைக் காவல்படையின் வெற்றிகளுக்கும் காரணம் "
என்றும் குறிப்பிட்டார்.
அகதிகள் வராமல் தடுத்தல், இன்னும் திறமையுடன் "கூட்டு ரோந்துப்பணி" என்று
அழைக்கப்படும் கொள்கையினாலும், எல்லைக்காவல் படையுடன், ஜேர்மனியின் எல்லையில் உள்ள போலந்து,
செச்சேனியா, மற்றய கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் கூடுதலான ஒத்துழைப்பாலும் கிழக்கு நோக்கி
நகர்ந்துள்ளது. இதன் நோக்கம் ஐரோப்பாவின் வெளி எல்லைகளில் இருந்து அகதிகளை தடுத்துவிடவேண்டும் என்பது
ஆகும். ஷில்லி "மத்திய, தூரகிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு எல்லை போலீஸ் தொடர்பு அதிகாரிகளும்
ஆலோசகர்களும் அங்கு அனுப்பப்பட்டதும், இருபுறத்திலும் பயிற்சி அளித்தல், மற்றும் கருவிகள் வழங்குதல் ஆகியவை
Schengen
உடன்படிக்கை (15 பொது எல்லைகளைக் கொண்டிருக்கும் ஐரோப்பிய நாடுகள் தங்கள் எல்லைக்
கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ள) நாடுகளிலும், மற்ற எல்லைப் பகுதிகளிலும் அழுத்தத்தை குறைத்துள்ளன" என்று
குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிக்கை, ஐரோப்பிய ஒன்றிய எல்லைகளுக்குள் தடுப்பு, கண்டுபிடிப்பு,
கைதுசெய்யப்பட்டோர் எண்ணிக்கை ஆகியவற்றைப் பற்றி எதுவும் கூறவில்லை என்பதுடன் இத்தகைய எல்லைக்
கொள்கையினால் மனிதச் சேதம் எவ்வளவு என்ற தகவலைப் பற்றியும் குறிப்புக் கொடுக்கவில்லை.
தற்கொலைகளும் சுயமாக ஏற்படுத்திக்கொண்ட காயங்களும்
அகதிகள் சுயமாக ஏற்படுத்திக்கொள்ளும் காயங்களும், தற்கொலை முயற்சிகளும்,
தற்கொலைகளும் மிக உயர்ந்த அளவில் உள்ளன. இத்தகைய சோகச் சம்பவங்கள், தங்கள் நாட்டிற்கு
அனுப்பப்பட்டு விடுவோம் என்ற தவிர்க்கமுடியாத, தாங்கமுடியாத நிலையினாலும், அகதிகள் முகாமிலும்
நாடுகடத்தும் மையங்களிலும் உள்ள மோசமான நிலைமையினாலும் ஏற்படுகின்றன.
2001-2002 களில் பேர்லின் இனவெறி எதிர்ப்பு அமைப்பு, ஓர் ஆவணத்தில்,
தாங்கள் நாடுகடத்தப்படுவதற்கு முன் தற்கொலை செய்துகொண்டது அல்லது சிறையிலிருந்து தப்பி ஓடும்போது
கொல்லப்பட்டது என்ற வகையில் 8 அகதிகள் பற்றிய விவரங்களைக் கொடுத்துள்ளது. இதே காலத்தில்,
குறைந்தது, 57 நாடுகடத்தலை எதிர்நோக்கியவர்கள் (அதில் 28 பேர் ஏற்கனவே வெளியேற்ற முகாம்களில்
சிறைவைக்கப்பட்டிருந்தவர்கள்), வேண்டுமென்றே தங்களை காயப்படுத்திக்கொண்டனர், அல்லது தற்கொலை
முயற்சியில் ஈடுபட்டனர்; அவர்களில் பெரும்பாலானவர் கடுமையான காயங்களுடன் உயிர் தப்பினர்.
2003ம் ஆண்டிற்கான புள்ளி விவரங்கள் கிடைக்கவில்லை; ஆனால் ஊடக அறிக்கைகள்
நிறைய சம்பவங்களை வெளிக்கொண்டு வந்துள்ளன. இந்த ஆண்டு ஜனவரி மாதம், டேவிட் மமேடோவ் என்ற அகதி,
Gutersloh என்ற பகுதியின் குடியேற்ற அலுவலகங்களுக்குச்
சென்று திரும்பிய பின்னர் தூக்கிலிட்டுக் கொண்டார். இவர் 1996ம் ஆண்டு ஜேர்மனிக்கு முதலில் ஜோர்ஜியாவிலிருந்து
குடும்பத்துடன் வந்தார். பின்னர் 1997 பெப்ரவரியில், அரச மற்றும் அரசுசாரா அமைப்புக்களினால் தண்டனைக்கு
உட்படுத்தப்படலாம் என்ற நிபந்தனையில், அகதி அந்தஸ்து கொடுக்கப்பட்டார். இவர் ஜோர்ஜியாவில்
நசுக்கப்பட்ட சிறுபான்மைப் பிரிவைச் சார்ந்தவர். அவர் தன்னுடைய நாட்டில் போலீசாரால் பெருந்துன்பத்திற்கு
ஆளானவர். ஒரு சம்பவத்தில் அவருடைய கால் சூடான இரும்புத்தடியினால் கடுமையான தீக்காயத்திற்கு உள்ளானது.
மமெடோவின் அகதி அந்தஸ்து தக்கவைப்பதற்கு எதிராக வாதாடிய, ஜேர்மன்
அதிகாரிகள், போலீஸ் தாக்குதலினால் ஏற்படும் காயங்கள் அடக்குமுறையென்று ஏற்கப்படக்கூடாது என்று கூறினர்.
முன்ஸ்டர் நகர மேல்முறையீட்டு மன்றமும், இந்த வாதத்தை ஏற்றுக்கொண்டு, அவருடைய தற்கொலைக்கு முன்பு,
மமெடோவிற்கு அவர் நாடுகடத்தப்பட்டுவிடுவார் என்று அறிவித்தது. அடுத்த 6 மாதங்களுக்கு உள்ளாக, அவருடைய
விதவை மனைவியும் அவராகவே நாட்டை விட்டு வெளியேறவில்லை என்றால், ஜோர்ஜியாவிற்குத் திருப்பியனுப்பிவிடும்
நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டார்.
ஜூலை 2003ல், ஹுசேயின் டி. என்ற 33 வயது நபர், அதே குடியேற்ற
அலுவலகக் கட்டிடத்திற்குள்ளேயே தனக்கே நெருப்பு வைத்துக் கொண்டார். அதையொட்டி, அவர் விரைவில்
மரணமடைந்தார். இவர் முறையான இருப்பிட அனுமதி பெற்றுள்ள ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டிருந்த
போதும், கட்டாய நாடுகடத்தலை எதிர்நோக்க வேண்டியிருந்தது. இந்த தன்னழித்தலைப்பற்றிய அவநம்பிக்கை
வர்ணனையில், Gutersloh
அதிகாரியான Sven-Georg Adenauer,
"நாடுகடத்தலை தவிர்ப்பதற்கு எந்த அளவு மக்கள் செல்லத் தயாராக
இருக்கின்றனர் என்பது நம்பமுடியாமல் உள்ளது. எதிர்காலத்தில், குறிப்பாக இத்தகைய நடவடிக்கைகளால் எம்மீது
அழுத்தங்கள் வருவதை நாம் அனுமதிக்கமாட்டோம்" என்று கூறினார்.
2003 ஆகஸ்ட் 16ம் தேதி
Wendlingen
என்ற இடத்தில், 16 வயதுப் பெண் Nurcan B.
நாடுகடத்தப் படுதலை தவிர்க்கும் வீண்முயற்சியில் வீட்டில் இருந்து ஜன்னல் வழியே வெளியே குதித்துவிட்டார்.
கடுமையான உடல் காயங்களுடன் இவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இச்சிறுபெண், கிட்டத்தட்டத் தன்
வாழ்நாள் முழுவதையும் ஜேர்மனியில் கழித்திருந்ததால், தனக்கு முற்றிலும் அறிமுகமாயிராத நாட்டிற்கு
வெளியேற்றப்படுவதை எதிர்நோக்கியிருந்தார்.
அக்டோபர் 3, 2003 அன்று, 48 வயதான
Lewon A.
தனக்கே நெருப்புவைத்த காயங்களின் விளைவாக இறந்து போனார். திருமணமாகி குழந்தைகளுடன் இருந்த இவர்,
குடியேற்ற விதிகளினால் வேலையிழுந்து, பலமுறையும் நாடுகடத்தலுக்கு உட்படவேண்டும் என்ற அச்சுறுத்தல்களையும்
எதிர்கொண்டிருந்தார். நாட்டில் தொடர்ந்திருக்கவேண்டும் என்ற அவருடைய முறையீடுகள், அவருடைய முன்னாள்
தொழில் வழங்குனர், திருச்சபை, மற்றும் பல குடியேறுவோர் அமைப்புக்கள் ஆகியவை ஆதரவு
கொடுத்திருந்தபோதிலும், நிராகரிக்கப்பட்டன. இவருடைய குடும்பப் பாதிரியாரான
Christoph Schulze-Gockel,
இவருடைய தற்கொலைக்குப் பின்னர் "திரு. கி. ஜேர்மனிய குடியேற்ற, அகதிச் சட்டங்களின் மற்றொரு
பாதிப்பிற்குட்பட்டவர் ஆனார். நாடுகடத்தப்பட்ட பின்னான பயமும், அவருடைய குடியிருப்பு படித்தொகை
நிரந்தரமாக புதுப்பிக்கப்பட வேண்டும் என்பதும் இத்தகைய மக்களை நசுக்கிவிடுகின்றன." கி உடைய குடும்பத்தை
சேர்ந்த மற்றவர்கள் நாடுகடத்தப்படுதலை எதிர்நோக்கியிருக்கின்றனர்.
வெளியேற்றப்படுவோருக்கான சிறைகளும் அகதிகள் முகாம்களும்
பல ஆண்டுகளாக, அகதி அமைப்புக்கள் பலவும் நாடுகடத்தும் முகாம்களிலும், அகதி
முகாம்களிலும் காணப்படும் நிலைமை மனித கெளரவத்திற்கே இழுக்கு என்றும், சிறைபிடிக்கப்பட்டோர் மன
உறுதியைக் குலைக்கும் திட்டத்தையுடையவை, இதனால் ஆவணங்களில்லாத மற்ற குடியேறுபவர்களை ஜேர்மனியுள்
வரவிடாமல் செய்யும் முயற்சியைக் கொண்டது என்றும் குற்றஞ் சாட்டியுள்ளனர்.
ஒரு பகிரங்கக் கடிதத்தில், பிராண்டன்பேர்க்
(Rathenow)
இல் உள்ள அகதி முகாம் ஒன்றில் இருப்போர், நிலையத்திலிருக்கும் பணியாளர்கள் தங்களை "அவமானப்படுத்தும்
முறையில் நடத்துவதாக" எழுதினர். Security
Zarnikow என்ற பாதுகாப்பு நிறுவனத்தையும் அவர்கள் குறை
கூறியிருந்தனர். பாதுகாப்பு நடவடிக்கைகள் முற்றிலும் அகதிகளை எதிர்த்துத்தான் இருந்தன என்றும் அவர்களுடைய
சொந்தக் கடிதங்கள் கூட தணிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றன என்றும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். நன்கு
அறியப்பட்டிருந்த நவ-நாஜிகள் பாதுகாப்பு நிறுவனத்தில் பணிபுரிவதையும் நிலையத்திலிருந்த அகதிகள் நிரூபித்தனர்.
கடந்த குளிர்காலத்தில், குறைந்தது நிறுவனத்தின் நான்கு உறுப்பினர்களாவது தீவிர வலதுசாரி அமைப்பான
Kameradschaft Hauptvolk
(பெரும்பான்மை மக்களின் தோழமை அமைப்பு) இனை சேர்ந்தவர்கள் என்று புலனாயிற்று.
Thuringia மாநிலத்திலிருக்கும் வேறு ஒரு
நிலையத்தில் இருப்பவர்கள், உள்துறை மந்திரிக்கு, தங்கள் இழிவான நிலைமைகளையும், நடத்தப் படுவதுபற்றியும்
ஒரு கடிதத்தில் "இந்த மையத்தின் தலைவர் எங்களை மிருகங்கள் போலவும், அடிமைகள்போலவும், கைதிகள்
போலவும் நடத்துகிறார்.... இந்த நிலைமை பற்றி புகார் கூறினால், நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவோம்
என்றும் அச்சுறுத்துகிறார்" என எழுதினர். நிலையத்தில் வாழ் மக்கள் மருத்தவ வசதியில்லாதது பற்றியும், ஒதுக்குப்
புறமாக மையம் இருப்பதுபற்றியும் குறிப்பாகத் தெரிவித்துள்ளனர். மிக அருகிலிருந்த கிராமமே 5 கி.மீ.
தொலைவு என்றும், அருகிலுள்ள நகரம் 25 கி.மீ என்றும் கூறியிருந்தனர். இதைத்தவிர மையத்தின் உட்பகுதியைச்
சுற்றி முள்வேலியும் போடப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
பேர்லின் புறநகரான
Kopenick இல் நிறுவப்பட்டுள்ள வெளியேற்றப்பட்டோர்
சிறையில், 68 பேர் ஜனவரி 2003ல், சகிக்கமுடியாத நிலைமையினாலும், சுகாதாரமின்மையினாலும், நீண்ட
காலம் தடுத்துவைக்கபபட்டதாலும் அவதியுற்று, உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இந்த
Koprnick
சிறையில் தொடர்ச்சியான தற்கொலகைளும், தற்கொலைமுயற்சிகளும் நிரபராதியான நபர்களால்
மேற்கொள்ளப்பட்டன; அவர்கள் ஒருவேளை "தலைமறைவாகப்" போய் விடுவாரகளோ என்ற அச்சத்தினால்தான்
அவர்களை அதிகாரிகள் கைது செய்திருந்தனர். இப்படிப் பாதிப்பு அடைந்தவர்களில் சிலர், வெளியேற்றப்படுவோர்
சிறையில் 18 மாதங்களுக்கும் மேலாக இருந்திருக்கின்றனர். மேலும் அவர்கள் விடுதலையடைந்தால், ஒவ்வொரு
நாள் சிறையில் இருந்ததற்கும் 60 யூரோக்கள் அபராத தொகையையும் அதிகாரிகள் அவர்கள்மீது விதிக்கிறார்கள்.
இவர்கள் செய்தி ஊடகத்திற்கு அளித்த அறிக்கையொன்றில், உண்ணாவிரதப்
போராட்டம் நடத்திய அகதிகள், சிறைப்பணியாளர்களிடம் தாங்கள் இழிவான முறையில் நடத்தப்பட்டது பற்றி
தெரிவித்துள்ளனர். "நினைவிழந்து சரிந்த ஒரு மனிதனுக்குக் கிடைத்த கவனம், ஏளனமான சிரிப்புத்தான்....
போலீசார் மிகுந்த தன்னிச்சையுடன் செயல்படுவதோடு அவமானம், வேதனை தரக்கூடியமுறையிலும் நடந்து
கொள்ளுகின்றனர். எப்படிப்பட்ட வேண்டுகோளும், கேள்வியும் வெளிப்படையான முறையற்ற நடத்துதலுக்கும்,
திட்டுதல்களுக்கும் இலக்காகிவிடும்."
மிருகத்தனமான நாடுகடத்தப்படுதல்கள்
வெளியேற்றும் நடவடிக்கைகள் பலமுறையும் மிகத்தீவிரமான மிருகத்தனத்துடன்
செயல்படுத்தப்படுகின்றன; குறிப்பாக அகதிகள் தங்களைக் பாதுகாத்துக்கொள்ள முற்பட்டாலோ அல்லது எதிர்ப்பு
இருக்கும் என்று போலீஸ் எதிர்பார்த்தாலோ, இது அதிகமாகிவிடும்.
சிலசமயங்களில், வெளியேற்றப்படுவோர் உடலளவில் தடுக்கப்பட்டு, வாய்கள்
கட்டிப்போடப்பட்டு கட்டாயமாக கொடுக்கப்படும் போதைமருந்துகளினால் செயலற்றுப் போகும்படி
செய்யப்பட்டு, தங்கள் வீட்டிலிருந்து துரத்தப்பட்டு விமானம் ஏறும்வரையில் துப்பாக்கிமுனையினால்
கொண்டுசெல்லப்படுகின்றனர்.
இந்த முறையில், நவம்பர் 20, 2002 அன்று நைஜீரியாவிற்கு நாடுகடத்தபட்டதை
உதாரணமாக கொள்ளப்படலாம். இந்த விமானத்தில் ஜேர்மனியிலிருந்து 21 நாடுகடத்தப்பட்டவர்களும்,
இத்தாலியிலிருந்து நாடுகடத்தப்பட்ட 24 பேர்களும் இருந்தனர். நைஜீரியாவில் இறங்கியதும் அவர்களில்
பெரும்பாலானவர்களுடைய கைகள், கால்களுடைய மணிக்கட்டுக்களில் புதிய காயங்கள் காணப்பட்டிருந்தன; இது
அவர்கள் பயணம் முழுவதும் கைகள், கால்கள் கட்டப்பட்டு, தரையிறங்குவதற்குச் சில நிமிஷங்கள் முன்புதான்
கட்டுக்கள் அவிழ்க்கப்பட்டன என்பதைக் குறித்தது. பெரிதும் களைப்புற்றிருந்த அவர்கள் ஜேர்மனிய, இத்தாலியப்
போலீசாரால் கடுமையான மோசமானமுறையில் நடத்தப்பட்டதாகக் கூறினர். நைஜீரிய அதிகாரிகள் இரண்டுபேரை
ஏற்றுக்கொள்ளாமல் ஜேர்மனிக்குத் திருப்பியனுப்பினர். அவர்களில் ஒருவர் நினைவிழந்து, தானே விமானத்தைவிட்டு
இறங்கவும் முடியாமலும், மற்றவர் கழுத்து முறிந்திருந்தும் இருந்தனர்.
1983ம் ஆண்டிலிருந்து, நாட்கடத்தல் நடவடிக்கைகளின்போது 5 அகதிகள்
இறந்துள்ளனர், குறைந்தது 179 பேர் உடலளவில் கட்டப்பட்டதாலும், வெளியேற்றத்தின்போது மோசமாக
நடத்தப்பட்டதாலும் காயமுற்றிருந்தனர்.
ஜேர்மனிய அதிகாரிகள் அக்கறை காட்டாதாலும், தகவல் அறிவதற்கு அகதிகள்
அமைப்புக்கள் கொள்ளும் முயற்சிகள் தடைகளுக்கு உட்படுவதாலும், தங்கள் நாடுகளுக்கு திரும்பிய பின்னர் இந்த
வெளியேற்றப்படுவோரின் கதி என்ன என்பது பொதுவாக அறியப்படவில்லை. அரசியல் ரீதியாக
துன்புறுத்தல்குள்ளானதற்காக நாடுகடத்தப்படுவோர், பலநேரங்களில் விமான நிலையங்களிலேயே விமானங்களைவிட்டு
வெளியே வரும்போதே கைது செய்யப்பட்டு விடுகின்றனர் என்பதோடு சித்திரவதைக்குட்படுத்தப்படுகின்றனர், அல்லது
எந்த அடையாளமும் இல்லாமல் "மறைந்துவிடுகின்றனர்".
உதாரணமாக, 2001 ஜூலையில், துருக்கியச் செய்தி ஊடகத் தகவல்படி,
ஜேர்மனிய மாநிலமான வடக்கு ரைன் வெஸ்ட்பாலியாவிலிருந்து துருக்கிக்கு தனிவிமானம் மூலம் அனுப்பப்பட்ட
வெளியேற்றப்பட்டவர்களில் மொத்தம் 63 பேரில் 25 பேர் தடை செய்யப்பட்டிருந்த குர்திஸ்தான் தொழிலாளர்
கட்சி (Kurdish Workers Party-PKK)
உறுப்பினர்கள் என்று குற்றஞ் சாட்டப்பட்டு தரையிறங்கியவுடனேயே
கைது செய்யப்பட்டார்கள்.
ஜனவரி 2002ல், 31 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தபின் பெரிதும் பலவீனமாயிருந்த
அகதி E
என்பவர் ரோகோவிற்கு நாடுகடத்தப்பட்டார். ஓர் அகதி அமைப்பிற்கு தொலைபேசிமூலம் தொடர்பு கொள்ளுவதாக
அவர் கூறியிருந்தபோதிலும், அதன்பின் அவரைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அவர்
Union des Forces pour le Changement (UFC)
என்ற எதிர்க்குழுவின் அங்கத்தவர். அவர் அவ்வமைப்பின் அங்கத்தவரான தனது தந்தை கைது செய்யப்பட்டு
காணாமல் போனபின்னர் ரோகோ நாட்டைவிட்டு வெளியேறியிருந்தார்.
பேர்லின் இனவாத எதிர்ப்பு அமைப்பு நடத்திய ஆய்வு ஒன்றின்படி, 1993லிருந்து,
ஜேர்மனியிலிருந்து வெளியேற்றப்பட்ட நடவடிக்கைகளில் குறைந்தது 13 பேராவது கொல்லப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளதுடன்,
குறைந்தது 307 நபர்களாவது, அவர்கள் நாட்டில் இறங்கியவுடன் போலீசாராலோ அல்லது இராணுவத்தினராலோ
சித்திரவதைக்கு உட்பட்டனர் அல்லது மோசமாக நடத்தப்பட்டனர் என்பதும் தெரிய வந்துள்ளது. குறைந்தது 47 பேராவது
"மாயமாக மறைந்துவிட்டிருந்தனர்".
அரசியல் குற்றச்சாட்டு இல்லாதவர்களும் வெளியேற்றப்படுதலால் துன்பத்திற்கு
ஆளாகியுள்ளனர்; உதாரணமாக, சிலர் நோய்வாய்ப்பட்டுள்ளபோது அதற்கு வைத்திய வசதிகள் இல்லாத நாடுகளுக்குச்
செல்ல நேரிடுகிறது. Sikrie Dervisholli
என்ற அல்பானியருக்கு, ஜேர்மனியிலிருந்து கொசவோவிற்குச் சென்றவுடன் அத்தகைய கதிதான் ஏற்பட்டது. 2002
நவம்பர் 5, காலை 4 மணிக்கு இந்த பெண், போலீசாரால் படுக்கையிலிருந்து இழுத்து செல்லப்பட்டு
Pristina
செல்லும் விமானத்தில் அனுப்பிவைக்கப்பட்டார்.
Dervisholli கடுமையான நரம்பு சம்பந்தமான
நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். தக்க வைத்தியம் இல்லாத நிலையில் இந்த பக்கவாதம் இறப்பிற்கு காரணமாகலாம்.
பல மருத்துவர்களும், அவருடைய வக்கீலும் கூட இவரை வெளியேற்றும் முயற்சியை கைவிடுமாறு அதிகாரிகளை கோரியது
பயனளிக்கவில்லை. அவருக்கு கொசவோவில் உறவினர்கள் ஒருவரும் கிடையாத; தன் வாழ்நாளின் குறுகிய எஞ்சிய
பகுதியைத் தன்னுடைய சகோதரியுடன் ஜேர்மனியில் கழிக்க முயன்றிருந்தார். அவருடைய நரம்பு வைத்தியர், அதிகாரிகள்
இவரை நடத்தியது பற்றி கடுமையாகவும் கசப்பாகவும் "இப்படிப்பட்ட நபர் மிகப்பரிதாபமாக இறப்பதற்கு எவரேனும்
அனுமதிப்பார்களா?" என கேட்டார்.
See Also:
அரசியல் மடத்தனமா அல்லது
ஆத்திரமூட்டுதலா?
பிராண்டன்பேர்க்கின் "இனவெறி-எதிர்ப்புக்குழு" உலக சோசலிச வலைத் தளத்தை தாக்குகிறது
ஆத்திரமூட்டும்
இரகசிய ஒற்றர்களும் குற்றவாளிகளும், பிராண்டன்பேர்க் உளவுப்பணித்துறையின் கீழ் வேலை பார்க்கின்றனர்
ஜேர்மனி : பிராண்டன்பர்க்
உளவுப்பணித்துறை உலக சோசலிச வலைதளத்தை அவதூறுக்கு உட்படுத்துகிறது
Top of page |