World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பர்மாSanctions provoke deepening economic crisis in Burma தடைகள் ஆழமான பொருளாதார நெருக்கடிகளை பர்மாவில் உண்டுபண்ணுகின்றன By Sarath Kumara முடக்கவைத்துள்ள பொருளாதார தடைகளின் அழுத்தத்தைக் குறைக்கும் வகையில், பர்மிய இராணுவ ஆட்சி, டிசம்பர் 15ம் தேதி பாங்காக்கில் நடைபெற்ற சர்வதேச மாநாடு ஒன்றில் அரசியல் சீர்திருத்தத்திற்காக தன்னுடைய "சாலை வரைபடத்தை" அளித்தது. பிரான்ஸ், ஜேர்மனி, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகியவை உட்பட பல நாடுகள் Bangkok Process Forum என்ற பாங்காங்கின் வழிப்படுத்தும் அரங்கில் கலந்துகொண்டபோது, அமெரிக்காவும், பிரிட்டனும் பர்மியத் திட்டத்தை முற்றிலுமாக நிராகரித்து, கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை. புதிய கடுமையான தண்டனைகள் விளையத் தொடங்கிய அளவில், ரங்கூன், ஆகஸ்ட் மாதம் தன்னுடைய "சாலை வரைபடத்தை" முதலில் முன்வைத்தது. இந்த தடைகள், எதிர்க்கட்சித் தலைவரான Aung San Suu Kyi, மே மாதம் காலவரையின்றிச் சிறையில் அடைத்தவுடன், சுமத்தப் பெற்றன; இதையொட்டி, அவருடைய ஆதரவாளர்கள் மீதும் வன்முறையான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இராணுவ சார்புடைய குண்டர்கள், சூ க்யி தேசிய அளவில் ஆதரவைத் திரட்ட முற்பட்டவுடன், திட்டமிட்டு நாடகமாடப்பட்டிருந்த தூண்டுதல் முறையினால், கிட்டத்தட்ட, 100 தேசிய டெமகிராடிக் லீக்கின் (National Democratic League NDL), உறுப்பினர்களைக் கொன்றனர். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும், சூ கியி விடுவிக்கப்பட்டு, அவருடைய அரசியல் நடவடிக்கைகளை தடையின்றித் தொடருவதற்கு அனுமதிக்கப்படவேண்டும் எனக் கோரின. ஆயுதங்கள் வழங்காமல் இருத்தல், குறைந்த அளவு மனிதாபிமான நடவடிக்கைள் தவிர மற்ற பொருளாதார உதவிகள் நிறுத்தப்படல், மூத்த பர்மிய அதிகாரிகள் மீது பொருளாதார மற்றும் பயண வரம்புகள் உள்ளிட்ட ஐரோப்பிய பொருளாதாரத் தடைகள் நடைமுறைக்கு வந்தன. பர்மாவிற்கு கொடுத்துவந்த உதவியை, ஜப்பானும் திடீரென்று நிறுத்திவிட்டது. ஆகஸ்ட் கடைசியில் கொண்டுவரப்பட்ட பர்மிய சுதந்திரம் மற்றும் ஜனநாயக சட்டத்தின்படி, அமெரிக்கா தான் சுமத்தியிருந்த பொருளாதாரத் தடைகளை தீவிரப்படுத்தியது. பர்மிய உற்பத்திப் பொருட்கள் மீதான தடைகள் அதிகப்படுத்தப்பட்டது, பர்மாவிற்கு அமெரிக்க டாலர்கள் அனுப்புவதை நிறுத்தியது, இராணுவ ஆட்சிக்குழுவினரிடம் சொத்துக்களை முடக்கியது, பழைய, தற்போதைய பர்மியத் தலைவர்கள் மீது விசாத் தடையை அதிகமாக்கியது ஆகியவையும் இத்தடையில் அடங்கின. இத்தடைகள் பர்மாவிற்கு மிகுந்த பொருளாதாரக் கஷ்டங்களைத் தோற்றுவித்தன. 2002ம் ஆண்டு அமெரிக்கா பர்மிய பொருட்களை, நாட்டின் மொத்த உற்பத்தியில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு, 356 மில்லியன் அமெரிக்க டாலர், பெரும்பாலும் ஜவுளிகள், ஆடைகளை வாங்கியிருந்தது. தடைகள் சுமத்தப்பட்ட பின்னர் கிட்டத்தட்ட 100 ஜவுளி ஆலைகளும், ஆடை உற்பத்தி ஆலைகளும் மூடப்பட்டு, 100,000 மேற்பட்ட வேலையிழப்பு ஏற்பட்டது. எந்த நாட்டிலிருந்தும் பர்மாவிற்கு வரும் அமெரிக்க டாலர் வரவுகள், அமெரிக்க வங்கிகளின் மூலம்தான் ஒப்பதல் பெறவேண்டும். பணம் அனுப்புவதற்கு விதிக்கப்பட்ட தடை, உடனடியாக பணப் புழக்கம், இருப்பு, செலவழித்தல் ஆகியவற்றில், அமெரிக்க டாலர் தொடர்புடைய செயல்கள் நிறுத்தப்பட்டதால் பிரச்சினையை ஏற்படுத்தியது. இந்தப் பிரச்சனையை சமாளிக்க, இராணுவ ஆட்சிக்குழு, தன்னுடைய சர்வதேச பொருளாதார செயல்களை, யூரோக்களாகவும், சிங்கப்பூர் டாலர்களாகவும், ஜப்பானிய யென்களாகவும் மாற்றவேண்டியிருந்தது. அண்மை நாடுகளான பங்களாதேசம், இந்தியா, லாவோஸ், தாய்லாந்து, ஆகியவற்றோடு வர்த்தகத்தை அதிகரித்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடவைத்தது. ஆனால் இந்த நடவடிக்கைகளில் எதுவும் பிரச்சினையின் தீவிரத்தைக் குறைக்க முடியவில்லை. இராணுவ ஆட்சி தன்னுடைய வருவாய்க்கு Union of Myamar Economic Holdingsd Limited (UMEH) எனப்படும், மையான்மர் பொருளாதார இருப்புக்கள் (வரையறுக்கப்பட்டது) அமைப்பைத்தான் பெரிதும் நம்பியுள்ளது; இந்த அமைப்போ பொருளாதாரத் தடைகளினால் மிகவும் பாதிப்பை அடைந்துள்ளது. 1990ல் நிறுவப்பட்ட இந்த அமைப்பு, நாட்டின் முதலீட்டில் கிட்டத்தட்ட 40 சதவிகிதத்தை கொண்டுள்ளது என்பதுடன் அயல்நாட்டு முதலீட்டாளர்களுடன் தொடர்ச்சியான பாகஸ்தர்களாவும் விளங்கி வருகிறது. இரகசியமாக கசிந்துவிட்ட 1995-96ம் ஆண்டு அறிக்கையின்படி, அதனுடைய இரண்டு முக்கிய பணிகள், "இராணுவத்தினரையும் அவர்கள் குடும்பங்களையும் ஆதரவுடன் வைத்திருத்தல்", "படிப்படியாக தொழில்களை ஏற்படுத்துவதின் மூலம் இராணுவத்திற்கு அமைப்பு முறைகளில் ஆதரவு அளித்தலில் முக்கிய பங்கு கொள்ளுதல்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆகஸ்ட் மாதக் கடைசியில், பர்மிய இராணுவம் சர்வதேச அழுத்தத்தை தளர்த்தும் வகையில் சில நடவடிக்கைகளை எடுத்தது. ஆகஸ்ட் 25ம் தேதி, இராணுவ உளவுத்துறைத் தலைவரான ஜெனரல் கின் ந்யுன்ட், பிரதம மந்திரியாக நியமிக்கப்பட்டார். இவர் "சீர்திருத்தச் சார்பு" உடையவர் என்று கருதப்படுவதுடன், கடந்த ஆண்டு சூ கியுவுடைய வீட்டுக் கைதை முடிக்கவும், NLD உடன் சமரச உடன்பாட்டை காண கொள்ளப்பட்ட முயற்சிகளில் தொடர்பு உடையவராகவும் கருதப்படுகிறார். Khin Nyunt தன்னுடைய அரசியல் சீர்திருத்திற்கான ஏழு அம்ச "சாலை வரைபடத்தை", ஐந்தே நாட்களுக்குப் பின் ஆகஸ்ட் 30 அன்று அறிவித்தார். ஒரு தேசிய மாநாடு, புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கும், அது தேசிய வாக்கெடுப்பின் மூலம் உறுதி செய்யப்படுவதற்கும் அவர் கருத்தை கொண்டிருக்கிறார். புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு பொதுத்தேர்தல்கள் நடத்துவதும் மற்ற நடவடிக்கைகளில் அடங்கியுள்ளது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் 2006 க்குள் நடத்தப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிப்பு, ஜப்பான் ஆகியவை இந்தத் திட்டத்தை நிராகரித்தவுடன், தாய்லாந்து Bangkok Process Forum கூட்டப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு, அம்மாநாடு டிசம்பர் 15ம் தேதி நடைபெற்றது. பர்மாவின் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தாய் அரசாங்கம் கருதுவது, தாய்லாந்தின் பொருளாதாரம் பாதுகாக்கப்படுவதற்கும், பர்மிய அகதிகள் எல்லை தாண்டி தம் நாட்டிற்குள் வருவதைத் தடுக்கும் நோக்கத்தையும் பெற்றுள்ளது. தாயின் வெளியுறவு மந்திரி Surakiart Sathiarathai இந்த அமைப்பு பர்மாவிற்குத் தன் சாலை வரைபடத்தை விளக்குவதற்கு ஒரு வாய்ப்பு அளிக்கும் என அறிவித்துள்ளார். பர்மியத் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள விரும்பியது, கடந்த காலத்திலிருந்து ஒரு மாறுதலைக் கொடுத்துள்ளது ஆகும். முன்பெல்லாம் ஆட்சிக்குழு, தன்னுடைய ஆட்சியை மாற்ற வேண்டும் எனக்கூறிய சர்வதேசக் கூட்டங்களில் கலந்துகொள்ள மறுத்திருந்தது. பாங்காக்கிற்கு அது வந்துள்ளமை பர்மாவிற்குள் நிலவும் பொருளாதார, அரசியல் நெருக்கடியின் தீவிரத்தைப் பிரதிபலிக்கிறது. நிறைய நாடுகள் கலந்து கொண்டாலும், சூ கியி மற்றும் NLD சார்புடையவர்களும் எப்படியாவது சேர்க்கப்படவேண்டும் என்பதற்காக ரங்கூன்பால் அழுத்தம் நிறைய உள்ளது. சாலை வரைபடம், ஆட்சியில் எந்த முக்கியத்துவம் மிக்க மாற்றத்தையும் காட்டவில்லை என்று அமெரிக்கா வலியுறுத்தியிருக்கிறது. அமெரிக்க அரச திணைக்களத்தின் செய்தித் தொடர்பாளர், ரிச்சர்ட் பெளச்சர், அக்டோபர் மாதம் செய்தி ஊடகத்திற்குக் கூறியிருந்தார்: "எதிர் கட்சிகளின் முழுப்பங்கு இருந்தால் அன்றி, சாலை வரைபடத்திற்கான தேவை இருப்பதாக நாம் காணவில்லை." பர்மிய இராணுவ ஆட்சிக்குழுவின் இழிவான பழைய செயல்களான, சாதாரண உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகள் நசுக்கப்பட்டது பற்றிய அக்கறை ஏதும் புஷ் நிர்வாகத்தின் நிலைப்பாட்டில் இல்லை. சூ கியிக்கு ஆதரவு கொடுப்பதின் மூலம், தங்கள் நாட்டின் பொருளாதார, அரசியல் தந்திர முறைகளை முன்னேற்றுவிக்கவேண்டும் என்பதைத்தான் அமெரிக்கா முயலுகிறது. இராணுவ ஆட்சி மக்களின் பெரும்பாலான பிரிவுகள்மீது கடுமையான கட்டுப்பாட்டை கொண்டிருப்பது, அயல்நாட்டு முதலீடு செய்வதற்குத் தடையாக இருக்கிறது. சூ கியிவும், NLD யும், அயலார் மூலதனத்திற்கு நாட்டைத் திறந்துவிடும், பொருளாதார மறுசீரமைப்புத் திட்டத்தை செயல்படுத்த உறுதிமொழி கொடுத்துள்ளனர். மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வகையில் பர்மா, எல்லையில் சீனாவைக் கொண்டு இந்தியத் துணைக்கண்டத்திற்கும், தென்கிழக்கு ஆசியாவிற்கும் இடையே உள்ளது. இராணுவ ஆட்சி, பெய்ஜிங்குடன் நெருங்கிய அரசியல், பொருளாதார உறவுகளைக் கொண்டுள்ளது. ஒப்புமையில், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே உள்ள தற்போதைய சுமுகமான உறவுகள் இருந்தாலும், புஷ் நிர்வாகம், பெய்ஜிங்கை விரோதியாகத்தான் கருதிவருவதோடு, அதன் எல்லைப்புற நாடுகளுடன் நெருங்கிய நட்புகொள்ளும் முயற்சிகளைத்தான் செய்துவருகின்றது. ரங்கூனில் அமெரிக்க சார்புடைய ஆட்சி அமைக்கப்பட்டால், சீனாவைச் சுற்றவளைக்கும் வடிவமைப்புத் திட்டத்தில் அது ஒரு பகுதியாக விளங்கும். அமெரிக்க -சீன பொருளாதார, பாதுகாப்பு பரிசீலனைக் குழுவின் முன், டிசம்பர் 4ம் தேதி சாட்சியம் அளித்த ஜோர்ஜ்டெளன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேவிட் ஸ்ரைன்பேர்க்: "சில காரணங்களை ஒட்டி, அமெரிக்கா பர்மா/மையான்மர் உடன் இருதரப்பு உறவுகள் அமெரிக்காவைப் பொறுத்தவரையில், மிக முக்கியமானது: சீனாவின் பொருளாதார, இராணுவ நுழைவு அந்நாட்டில் பரந்த அளவு ஏற்படுதல்; சீன-இந்தியப் பூசல் தோன்றும் திறனில் பர்மா முக்கியக் கூறுபாடாக இருக்கக் கூடிய திறன்; வங்காள விரிகுடா, மலாக்கா ஜலசந்தி (பர்மா வழியே) சீனர்கள் அணுகக்கூடிய நிலைப்பாடு; பர்மாவில் தவறான நிர்வாகத்தாலும், போக்குக்களினாலும், சிதறி வரும் விளைவுகள் நம்முடைய நட்பு-உடன்பாடு கொண்டுள்ள நாடாகிய தாய்லாந்தைப் பாதிக்கக் கூடிய தன்மை." என அறிவித்தார் இந்தச் சாலைவரைபடத்தை முன்வைத்ததின் மூலம் பர்மிய இராணுவ ஆட்சி, சர்வதேச நாடுகளைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு அதேநேரத்தில் அதன் அரசியல் அதிகாரத்தின்மீது இறுக்கமான பிடியையும் கொள்ளவிரும்புகிறது. 1962லிருந்து தளபதிகள் தொடர்ச்சியாக நாட்டை ஆண்டு வருகின்றனர். இப்பொழுதுள்ள தலைவர்கள் 1988ல், மிருகத்தனமான முறையில் இராணுவ-எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நசுக்கியும், ரங்கூனில் மட்டும் 3000 பேரைக் கொன்றும், அதிகாரத்தைக் கைப்பற்றியவர்களாவர். தற்போதைய பிரதம மந்திரியான Nyunt தான் இந்தக் குருதிப்பாதைக்கு தளமிட்டவராவார். ஆனால் அரசியல்முறையில் சூ க்யிவம் NLD தலைவர்களும், தேர்தல்கள் வரவுள்ளன என்ற உறுதிமொழி கொடுக்கப்பட்டதை அடுத்து ஆர்ப்பாட்டங்களை விலக்கிக் கொண்டதின் மூலம் இராணுவத்திற்கு உதவி கிடைத்தது. எதிர்க்கட்சி 1990 தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றாலும், இராணுவம் சூ க்யியை அரசாங்கம் அமைத்திட மறுத்ததுடன், NLD ஐயும் தாக்குதலுக்கு உட்படுத்தியது. கடந்த மாதம் UN உடைய பர்மாவிற்கான தூதரான Paulo Sergio Pinheiro, நாட்டில் இன்னும் 1200 லிருந்து 1300 அரசியல் கைதிகள் இருப்பதாகக் கூறியுள்ளார். இதேபோன்ற சீர்திருத்தத் திட்டதை 1993ல் இராணுவம் அளித்திருந்து, அதைப்பற்றிய விவாதத்திற்கு ஒரு தேசிய மாநாட்டையும் அழைத்திருந்தது. ஆனால் அம்முயற்சி தோல்வியடைந்தது. உளவுத்துறை அதிகாரிகள் எல்லா விவாதங்களையும் கண்காணித்ததுடன், ஆட்சியில் நலன்களுக்கு ஏற்ப கருத்துரைகள் அனைத்தும் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. ஷான் இனவழிச் சிறுபான்மை உறுப்பினர், திருத்தப்பட்டிருந்த உரையிலிருந்து சற்று மாறுபட்டு பேசியவுடன், அவர் உடனடியாகப் பேச்சை நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டார். 1995 கடைசியில் எதிர்ப்புத் தெரிவித்து NLD வெளிநடப்புச் செய்தவுடன் மாநாடு என்ற பெயரிடப்பட்டிருந்த கேலிக்கூத்து சரிந்தது. நாட்டின் இனவழிச் சிறுபான்மை அமைப்புக்கள் பல, புதிய தேசிய மாநாட்டில் கலந்து கொள்ளுவதாகக் குறிப்புக் காட்டியுள்ள போதிலும், NLD தொடர்புகொள்ளும் என்று அறிவிப்பு எதையும் குறிக்கவில்லை. பாங்காக் அரங்கில் வாஷிங்டன் கலந்து கொள்ளாமை, இராணுவ ஆட்சியுடன் உடன்பாடு கொள்ளுவதில் விருப்பமின்றி, ரங்கூனில் "ஆட்சி மாற்றத்தைத்தான்" விரும்புகிறது என்பதை குறிகாட்டுகின்றது. அமெரிக்க நிலைப்பாடு, ரங்கூனில் கடுமையான விளைவை ஏற்படுத்தியுள்ளது; அது ஆப்கானிஸ்தானத்திலும், ஈராக்கிலும் அமெரிக்கப் படையெடுப்புக்கள் பற்றியும், அந்த நாடுகளில் ஜனநாயக வழியற்ற, கைப்பாவை அரசாங்கங்கள் நிறுவப்பட்டது பற்றியும் குறிப்பிடுகிறது. டிசம்பர் 17ம் தேதி வெளிவந்த அறிக்கை ஒன்றில், ஈராக்கும், ஆப்கானிஸ்தானும், "ஜனநாயக வழிக்கு மாற்றம் கொண்டுவருவது, எளிமையான, சாதாரணமான, சுலபமான வழியல்ல என்பதை" நிரூபிக்கின்றன, என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் பொருளாதாரப் பேரழிவைத் தடுப்பதற்கு, இராணுவ ஆட்சிக்குழுவிற்கு வாஷிங்டனுடைய ஆணைகளுக்கு கீழ்ப்பணிந்து, சூ கியி உடன், உடன்பாடு கொள்ளுவதைத் தவிர வேறு வழியில்லை. |