WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு :
ஈராக்
Mounting attacks on US-led troops in
Iraq
ஈராக்கில் அமெரிக்கா தலைமையில் இயங்கும் படைகள் மீது பெருகிவரும் தாக்குதல்கள்
By Mike Head
9 January 2004
Use this
version to print |
Send this link by email |
Email the author
சதாம் ஹுசைன் பிடிபட்டது முதல் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் படைகள்
மீது ஈராக்கில் தொடர்ந்து, ராக்கட், பீரங்கி மற்றும் வெடிகுண்டுத் தாக்குதல்கள் நீடித்துக் கொண்டிருக்கின்றன.
இது மக்களிடையே பெருகிவரும் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. தற்போது நடைபெற்றுக்கொண்டுள்ள
தாக்குதலில், நுட்பமிக்க ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அமெரிக்காவிற்கு எதிரான கிளர்ச்சிக்கு ஈராக்கில்
ஆதரவு பெருகிக் கொண்டு வருகிறது. அமெரிக்க இராணுவம் நடத்தி வரும், ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு
மக்களது எதிர்ப்பு வளர்ந்து வருவதைத் தாக்குதல்கள் எடுத்துக்காட்டுகின்றன.
ஜனவரி 7இல் சமீபத்திய தீவிர தாக்குதல்கள் ஆரம்பமாகின. பாக்தாதிற்கு மேற்கே
சுமார் 20 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தில், அமெரிக்கப்படைகள் மீது
பெருமளவில், வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடைபெற்றன. இந்தத் தாக்குதலில் ஒரு இராணுவத்தினர் பலியானதுடன்
மற்றும் 34 பேர் காயமடைந்தனர்.
இராணுவத்தின் கொத்தளங்களில் 6 வெடி குண்டுகள் வீசப்பட்டன.
2004 ஆரம்பமாகிய பின்னர் நடத்தப்பட்ட இரண்டாவது பெரிய வெடிகுண்டுத் தாக்குதல் இது. கிளர்ச்சியாளர்கள்
தங்களது தாக்குதல் உத்திகளை மாற்றிக் கொண்டு தொலை இயக்கி(remote-control)
மூலம் ராக்கெட்டுகளை இயக்கி வருகிறார்கள். பாக்தாத்திற்கு வடக்கே 75 கிலோ மீட்டர் தூரத்தில், பால்டாவிற்குத்
தெற்கில் நடைபெற்ற வெடிகுண்டுத்தாக்குதலில் ஒரு இராணுவம் இறந்ததுடன், இரண்டு பேர் காயமடைந்தனர்.
ஜனவரி 8ஆம் திகதியன்று, பலூஜாவில் பிளேக் ஹவாக் ஹெலிகாப்டர் மீது நடத்தப்பட்ட
தாக்குதலில் அதிலிருந்த 9 அமெரிக்கப் படையினர் பலியாயினர். அதற்கு முன்னர்,
C-5 போக்குவரத்து
விமானம் 63 பயணிகள், மற்றும் சிப்பந்திகளுடன் பாக்தாத் விமான நிலையத்தில் ராக்கெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகியது.
இந்த இரு நிகழ்ச்சிகளுமே, அமெரிக்கத் துருப்புகள் சந்தித்து வரும் சங்கடங்கள் பெருகிக் கொண்டிருப்பதைக்
காட்டுகிறது.
எதிரிகள் தாக்குதலில் ஹெலிகாப்டர் பாதிக்கப்படவில்லை என்று ஆரம்பத்தில்
பென்டகன் அறிவித்தது. ஆனால் நேரில் பார்த்தவர், அந்த ஹெலிகாப்டர் வால் பகுதி தாக்கப்பட்டு
தீப்பிடித்ததைப் பார்த்ததாகச் சொன்னார். அருகாமையில் இருந்த வீட்டிலிருந்த முகம்மது அகமது (வயது 27)
என்ற விவசாயி ராக்கட் செலுத்தப்படும் சத்தத்தை கேட்டு ஹெலிகாப்டர் பிற்பகுதி தாக்கப்பட்டதாக
தெரிவித்தார். பின்னர், அவ்விடத்திற்கு ஓடி வந்து பார்த்தபோது அந்த ஹெலிகாப்டரிலிருந்த அனைவரும் மாண்டு
கிடந்தனர் என கூறினார்.
புத்தாண்டில் நடைபெற்ற இவ்வகை இரண்டாவது தாக்குதல் இது. ஜனவரி 2இல்
OH58D
- கியோவா ஹெலிகாப்டர், பலூஜா அருகில் வீழ்த்தப்பட்டது. அதிலிருந்த விமானி இறந்தார். சென்ற மே இல்
''நடவடிக்கை பூர்த்தியாகி" விட்டன என்று, ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் அறிவித்த பின்னர், குறைந்த பட்சம் 14
ஹெலிகாப்டர்கள் ஈராக்கில் நொறுங்கி விழுந்திருக்கின்றன. இவற்றால் 58 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்க
இராணுவத்தில் அவசியமான அச்சாணியான எந்த அளவிற்குத் தாக்குதலுக்கு இலக்காகும் தன்மை கொண்டதாக உள்ளது
என்பதை இத்தாக்குதல்கள் எடுத்துக் காட்டுகின்றன.
ஈராக்கில் நிலை பெற்றுள்ள அமெரிக்கத் துருப்புக்கள் பெருமளவில்
ஹெலிகாப்டர்களைச் சார்ந்தே இருக்க வேண்டியுள்ளது. நாடு முழுவதிலும் துருப்புக்கள், அதிகாரிகள், மற்றும்
வினியோகத்திற்கு கொண்டு செல்வதற்கு ஹெலிகாப்டர்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நவம்பர் முதல்
தேதிக்குப் பின்னர், போர்க்களத்தில் பலியானவர்களில், மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்க படையினர்
ஹெலிகாப்டர்கள் வீழ்த்தப்பட்டதில் இறந்தனர். நவம்பர் 2, நவம்பர் 15, ஜனவரி 8இன் மூன்று தாக்குதல்களில்
மட்டும் பலியான இராணுவத்தினர் 41 பேராகும்.
மார்ச் மாதம் படை எடுப்பு ஆரம்பித்ததிலிருந்து இதுவரை 350 அமெரிக்கப்
படையினர் போர்க்களத்தில் பலியாகியுள்ளனர். மே முதல் தேதி புஷ்ஷின் போர் வெற்றிப் பிரகடனத்திற்குப்
பின்னர், இவர்களில் 225 பேர் இறந்துள்ளனர். போர்க்களத்தில் அல்லாத இதர மரணங்களையும் சேர்த்துப்
பார்த்தால், அமெரிக்க படையினர் மொத்தம் 495 பலியாகியுள்ளனர் .
தரையிலிருத்து ஏவப்படும் ராக்கட், பாக்தாத் விமான நிலையத்தில் மிகப்பெரிய
அமெரிக்க விமானப் படைப் போக்குவரத்து விமானத்தின் மீது தாக்குதல் நடத்தி இருப்பது, அமெரிக்க
இராணுவத்தின் பலவீனத்தை அம்பலப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது.
C-5 விமானம்
அவசரமாகத் தரையிறங்க வேண்டிய கட்டாயம், எஞ்சின் கோளாறினால் ஏற்பட்டது என்று முதலில் அமெரிக்க
விமானப்படை தெரிவித்தது. பின்னர், விமான எஞ்சின் தாக்கப்பட்டது என்று ஒப்புக் கொண்டார்கள். "அந்த
விமானத்தின் 4-வது எஞ்சின் தாக்கப்பட்டதாகத் தோன்றுகிறது. விமானத்தைத் தாக்கும் ராக்கெட் மூலம்
இத்தாக்குதல் நடந்திருக்கின்றது. ஆனால் அந்த விமானம் திரும்பி வந்து தரை இறங்க முடிந்திருக்கின்றது" என்று
மூத்த அதிகாரி ஒருவர் தனது பெயரை வெளியிடவேண்டாமென்ற நிபந்தனை அடிப்படையில் குறிப்பிட்டார்.
அந்த விமானம் பாதுகாப்பாக, தரை இறங்க முடிந்திருக்கிறதென்றாலும், அண்மை
வாரங்களில் தாக்குதலுக்கு இலக்கான மூன்றாவது விமானம் அது. நவம்பர் 22இல் பாக்தாத் விமான
நிலையத்திலிருந்து கிளம்பிய DHL
சரக்கு விமானம் மீது SA-14
தோளிலிருந்து இயக்கும் ராக்கெட் தாக்கியது. டிசம்பர் 10இல் விமானப்படை
C-17 துருப்புக்கள்
ஏற்றும் விமானம் ராக்கட் தாக்குதலுக்கு இலக்காயிற்று.
பாக்தாத்திலிருந்து தொலை தூரத்தில் உள்ள பிரிட்டிஷ் படைகள் வசம் உள்ள துறைமுக
நகரான பாஸ்ரா தவிர பாக்தாத் விமான நிலையம் தான் இராணுவத்தினரின் போக்குவரத்திற்கும், தளவாட
வினியோகத்திற்கும் பிரதான வழியாக இயங்கி வருகின்றது. இவ்வார நிகழ்வுகள், இது போன்ற படுபயங்கர
தாக்குதல்களிலிருந்து வழக்கமான விமான போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு உத்தரவாதம் வழங்க முடியாது
என்பதை உறுதிப்படுத்துகின்றன.
வளர்ந்து வரும் பகை உணர்வுகள்
பலூஜா பகுதியில், அண்மைக்காலங்களில் அமெரிக்காவிற்கு எதிரான பகை உணர்வுகள்
வலுவாகிக் கொண்டிருக்கின்றன. பாக்தாத்திற்கு மேற்கில் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பலூஜாவில்
அண்மையில் அமெரிக்கப் படைகள் அட்டூழியம் புரிந்து 24 மணி நேரத்திற்குப் பின்னர் ஹெலிகாப்டர்
வீழ்த்தப்பட்டிருக்கின்றது. பலூஜா பகுதியில் ஜனவரி 7ஆம் திகதியன்று பீரங்கியிலிருந்து ராக்கெட் ஒன்றை குடியிருப்பு
பகுதி மீது ஏவினார்கள். அது ஒரு வீட்டிற்குள் இருந்த கணவன் மனைவியைக் கொன்றது என நேரில் கண்ட பலர்
தெரிவித்தனர்.
அசோசியேட்டட் பிரஸ் தொலைக்காட்சி செய்தி (Associated
Press Television News) அந்தத் தாக்குதலைப்
படமாக்கியுள்ளது. அந்தப் படத்தில் சிதைந்து விட்ட செங்கற்சுவர்கள், மற்ற இரண்டு சுவர்களில் இரத்தக்கரை
படிந்திருந்தது. தாக்குதல் நடந்த போது அந்த அறையில் 37 வயது அஹமது ஹஸன் பார்ஹெளட், 28 வயது
அவரது மனைவி சுஹாம் ஓமர் இருவரும் அமர்ந்திருந்தனர். அவர்களது ஐந்து குழந்தைகள் பக்கத்து அறையில் தூங்கிக்
கொண்டிருந்ததால் அவர்கள் உயிர் பிழைத்தார்கள் என்று நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
"இந்தச் சடலங்கள்தான் ஜனநாயகமா?" என்று பக்கத்து வீட்டுக்காரர் ராத்
மஜூத் கேட்டார். அமெரிக்க இராணுவத் தலைமையகம் அந்தச் சம்பவம் பற்றி எந்தக் கருத்தும்
தெரிவிக்கவில்லை. அசோசியேட்டட் பிரஸ் பலூஜா நகரிலிருந்த இராணுவ அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலமும் மின்
அஞ்சலிலும் திரும்பத்திரும்பத் தொடர்பு கொண்டது. அதற்குப் பின்னர், 82ஆவது பிரிவு தளபதிகள் "இரண்டு முறை
எங்களை நோக்கித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்துதான் திருப்பிச் சுட்டதாக" தெரிவித்தனர். குண்டு
வீச்சில் சிதைக்கப்பட்ட வீட்டில் எந்த ஆயுதமும் கண்டுபிடிக்கப் படவில்லை.
மத்திய ஈராக் பகுதிகளில் உள்ள
பலூஜா, இதர நகரங்கள், மற்றும் கிராமங்கள் "சன்னி முக்கோணத்தில்" (Sunni
triangle) இடம் பெற்றிருப்பதாக, ஆத்திரமூட்டும் வகையில்
அமெரிக்க அதிகாரிகளும் ஊடகங்களும் வர்ணித்து வருகின்றன. இந்தப் பகுதிகளில் அமெரிக்கப் படைகள் தீவிரமாக
அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. சுடுவதும், மாதக் கணக்கில் காவலில் வைக்கும் நடவடிக்கைகளும்
நீடிக்கின்றன. இதனால் பொது மக்களது எதிர்ப்புணர்வும், வெறுப்பும் வளர்ந்து கொண்டே வருகின்றது.
பலூஜாவில் கடைசியாக நடைபெற்ற இரத்தக்களறி, ஒரே ஒரு சம்பவம் மட்டுமல்ல.
ஒரு நாளைக்கு முன்னர் ஜனவரி 6இல் சுமார் 6000 முன்னாள் ஈராக் இராணுவத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
செய்தனர். அவர்களை நோக்கி பிரிட்டிஷ் துருப்புக்கள் சுட்டதில் 4 பேர் காயமடைந்தனர். பிரிட்டிஷ்
துருப்புக்களிடையே உரையாற்றுவதற்காக, பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயர், பாஸ்ரா நகருக்கு திடீர் விஜயம்
மேற்கொண்டு இரண்டு நாட்களுக்குப் பின்னர் இந்த மோதல் நடைபெற்றது.
தற்போது வேலை இழந்துள்ள முன்னாள் இராணுவ வீரர்கள், தங்களுக்கு சேரவேண்டிய
ஊதியம் கிடைக்கவில்லை என்பதற்காக 3 வங்கிகளின் முன் திரண்டு நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர். மூன்றுமாத
சம்பளத்திற்கு பதிலாக ஒருதரம் வழங்கப்பட்ட $150 கூட செப்டம்பர் மாதத்திற்குப் பின்னர் கிடைக்கவில்லை
என்று அவர்கள் தெரிவித்தனர். தங்களது ஊதிய பாக்கியையும், ஓய்வூதியத்தையும் வழங்க வேண்டுமென அவர்கள்
கோரினர். அவர்கள் பிரிட்டிஷ் துருப்புக்கள் மீது கல்லெறிந்தனர். ஒரு வங்கிக்குள் நுழைய முயன்றபோது, பிரிட்டிஷ்
பீரங்கி வண்டிகள் அவர்களை தடுப்பதற்கு தயாராக நின்றன.
முன்னாள் ஈராக் இராணுவ அதிகாரியான அஹமது அப்துல் அஸிஸ், நிருபர்களுக்குப்
பேட்டியளித்தபோது, "நாம் சம்பாதித்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்தான். எங்களுக்கு குடும்பங்கள் உள்ளன.
அவர்களுக்காக நாங்கள் சம்பாதித்தாக வேண்டும்" என்று கூறினார். பிரிட்டிஷ் துருப்புக்களின் நடவடிக்கையை அவர்
கண்டித்தார். "நாங்கள் எங்களது உரிமைகளை அமைதிவழியில் போராடிப் பெற வேண்டுமா? அல்லது
ஆயுதந்தாங்கிப் போரிட வேண்டுமா? எது சிறந்த வழி?" என்றும் அவர் கேட்டார்.
ஜனவரி 4இல் அமெரிக்க இராணுவம் ஈராக் போலீசார் பின் தொடர மேற்கு
பாக்தாத்தில் உள்ள ஒரு சன்னி மசூதியில் அதிரடி சோதனைகள் நடத்தியதால் பெரும் கண்டன கூக்குரல் எழுந்தது.
ஆயுதங்களையும், வெடி குண்டுகளையும் கைப்பற்றியதாக அமெரிக்க இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். அல் தபூல்
மசூதியில் அப்போது வழிபாடு (தொழுகை) நடத்திக் கொண்டிருந்த 1000 இற்கு மேற்பட்டவர்கள், 5 மணி
நேரம் நடைபெற்ற அதிரடி சோதனைகளை கடுமையாக கண்டித்தனர். துருப்புக்கள் தங்களது வழிபாட்டின் புனிதத்
தன்மையை கெடுத்துவிட்டதாகக் குற்றம் சாட்டினர். தங்களது காலணிகளோடு, அமெரிக்க சிப்பாய்கள்
பள்ளிவாசலுக்குள் நுளைந்தனர். அவரது கரங்களில் இயந்திர துப்பாக்கிகளை ஏந்தியிருந்தனர். "புனித திருக்குர்
ஆன்" மீது மிதித்துக் கொண்டு சென்றனர். தொழுகை நடத்திய சிலரை அடித்தனர். பள்ளி வாசலுக்குச்
சொந்தமான கணணியையும் நன்கொடை பெட்டி ஒன்றையும் களவாடிக் கொண்டு சென்று விட்டனர் என்று அந்த பள்ளி
வாசல் இமாம், "அப்துல் சத்தார் அல்ஜனாபி" கூறினார்.
சதாம் ஹூசைன் பிடிபட்டது மற்றும் அவரிடம் புலன் விசாரணை நடைபெற்று வருவது,
அமெரிக்காவிற்கு எதிராக நடைபெற்றுவரும் கிளர்ச்சியை பெரும் அளவிற்கு பாதித்து விட்டதாக, அல்லது,
பிரதானமாக, சன்னி முஸ்லீம்கள் வாழும் பகுதிகளில், மட்டுமே கடுமையான சக்திகள் ஒடுக்கப்பட்டுவிட்டதாகவும்,
அமெரிக்க தளபதிகளும் அதிகாரிகளும் கூறிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், அண்மையில் நடைபெற்ற தாக்குதல்களும்,
தகவல்களே வெளிவராமல் நடந்து வருகின்ற சம்பவங்களும், நிலைப்பாட்டை வேறு வகையாக சித்தரிக்கின்றன.
பாக்தாத்தின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் சோதனைச்
சாவடிகளும், மின்சாரக் கம்பி வேலிகளும் அமைக்கப்பட்டிருந்தாலும், 2004 ஆம் ஆண்டு ஆரம்பத்திலேயே, ஈராக்
தலைநகரில் இரண்டு கார் குண்டு வெடிப்பு நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. ஒரு கார் குண்டு வெடிப்பு, அமெரிக்க கவச
வாகனத்தை தாக்கியது. அதில் 5 அமெரிக்க இராணுவ வீரர்களும், 5 ஈராக்
உள்நாட்டு பாதுகாப்பு
பணியாளர்களும் காயம் அடைந்தனர். மேலும், 8 வயது சிறுவனும்
பிற 11 பேரும் பலியாயினர். மற்றொரு கார் குண்டு வெடிப்பில், முக்கிய அங்காடிப்பகுதியில் உள்ள உணவு விடுதி
ஒன்று சிதைந்தது. அந்தப் பகுதியில் அமெரிக்க அதிகாரிகளும், அமெரிக்க பத்திரிக்கையாளர்களும், வழக்கமாக
நடமாடுவது வாடிக்கை, அந்த குண்டு வெடிப்பில் 5 பேர் கொல்லப்பட்டனர். பன்னிரண்டிற்கு மேற்பட்டோர்
காயமடைந்தனர்.
எண்ணெய் வளம் மிக்க வடக்குப் பகுதி நகரமான, கிர்குக் பகுதியில் பூர்வ குடி அரபு
மக்களும் உதுமானிய சாம்ராஜிய பாராம்பரியத்தை சேர்ந்தவர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த மாதம்
முதல் வாரத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கொல்லப்பட்டனர். குர்திஸ் இனத்தவர் கட்டுப்பாட்டில்
தன்னாட்சி மண்டலம் ஒன்றை உருவாக்குவதற்கு குர்திஸ்தான் தேசபக்தி யூனியன் தெரிவித்துள்ள ஆலோசனைகளுக்கு
எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த வாரம் முழுவதிலும், நாடு
முழுவதிலும் திடீர் தாக்குதல்கள், துப்பாக்கி சண்டைகள் மற்றும் வெளிநாட்டுத் துருப்புக்கள், ஒப்பந்தக்காரர்கள்
மற்றும் புதிய எண்ணெய் நிறுவன அமைப்புக்களுக்கு எதிராக நாச வேலைகள் நடைபெற்றது சம்பந்தமான தகவல்கள்
வந்துகொண்டேயிருந்தன. இதில் ஒரு குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டான நிகழ்ச்சி ஜனவரி 7இல் நடந்தது. கிர்குக்கு
மேற்கில் 135 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிரியா நாட்டு எல்லைக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த எண்ணெய்
குழாய் வெடிகுண்டுகளால் சேதப்படுத்தப்பட்டது. அதே நாளில், கிர்குவில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில்
உள்ள போலீஸ் எல்லைச் சாவடி ஒன்றை கிளர்ச்சிக்காரர்கள் தாக்கினர். அந்த தாக்குதலில் ஒரு போலீஸ்
அதிகாரி பொதுமக்களில் ஒருவர் பலியாயினர். மற்றும் எண்ணெய் கம்பெனியைச் சேர்ந்த ரோந்துக் காவலர்கள் 3
பேரும் காயம் அடைந்தனர்.
எதிர்ப்பை அடக்குவதில் வெற்றி பெற்று விட்டதாக ஈராக் பொம்மை நிர்வாக
கவுன்சிலும், அமெரிக்க தலைமையிலான நிர்வாகமும் வலியுறுத்தி கூறிக் கொண்டிருந்தாலும், ஜனவரி 8 அன்று
தாக்குதல்தொடர்பான முக்கிய புலனாய்வு தகவல்களை பெறுவதற்கு, இரண்டு அறிவிப்புக்களை
வெளியிட்டிருக்கிறார்கள். தேடப்பட்டு வரும் கிளர்ச்சிக்காரர்கள் தொடர்பான புலனாய்வு தகவல்களை
தருபவர்களுக்கு 2 லட்சம் அமெரிக்க டொலர்கள் பரிசளிக்கப்படும் என்றும், மற்றும் கைதிகளை விடுதலை செய்யும்
திட்டம் ஒன்றையும் வெளியிட்டார்கள்.
ஈராக்கில் உள்ள அமெரிக்க நிர்வாகியான போல் பிறீமர் அமெரிக்கா கைது செய்து
காவலில் வைத்துள்ள 12,800 பேரில் 506 பேர் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அறிவித்தார். இவர்கள்
ஈராக் முழுவதிலும், பல மாதங்களாக விசாரணை எதுவும் இல்லாமல் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். இப்படிப்பட்டவர்களை
விடுதலை செய்வதற்கு நிபந்தனை ஒன்றையும் அமெரிக்க நிர்வாகி அறிவித்திருக்கிறார். கிளர்ச்சிக்கு இனி ஆதரவு
தரமாட்டோம் என்று உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுக்க வேண்டும் மற்றும் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பிற்கு
ஆதரவான ஒரு ஈராக் குடிமகன் அவர்களுக்கு பிணை உறுதி கொடுக்க வேண்டும். முதல் 100 பேர் இந்த அடிப்படையில்
பாக்தாத்தின் அபுகாரி சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட இருக்கின்றனர். ஒரு காலத்தில் "பாத்" கட்சி ஆட்சி
பயன்படுத்திக் கொண்ட இந்தச் சிறையின் சித்ரவதை அறைகளை தற்போது அமெரிக்க அதிகாரிகள் பயன்படுத்தி
வருகின்றனர்.
இது ஒரு நல்லெண்ண சமிக்கை என்று அமெரிக்க அதிராரிகள் சித்தரிக்க முயன்றது மிக
வேகமாக, அவர்களுக்கு எதிராக மாறிவிட்டது. தங்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள்
என்று காத்துக் கொண்டு நின்ற பல குடும்பங்கள் ஏமாற்றம் அடைந்தன. சுமார் 80பேர் "அபுகரின்" சிறையிலிருந்து
விடுதலை செய்யப்பட்டனர். பெண்கள் காணாமல் போய் விட்ட தங்களது கணவன், தந்தை, புகைப்படங்களை எடுத்துக்கொண்டு
வந்தனர். அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை என்று தெரிந்ததும், கதறி அழுதனர். "அவர்-பொய்யர்கள்" விடுதலை
செய்யமாட்டார்கள் என்று ஒரு பெண் கூக்குரலிட்டார்.
பல அப்பாவி ஈராக்கியர்கள் எந்தவிதமான அடிப்படையும் இல்லாமல் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
அல்லது துப்பாக்கி வைத்திருந்தார்கள் என்பதற்காக, அல்லது அரசியல் பகையின் காரணமாக அமெரிக்க அதிகாரிகளுக்கு
தரப்பட்டுள்ள பட்டியலில் இடம் பெற்றிருந்தார்கள் என்பதற்காக பல ஈராக்கியர் கைது செய்யப்பட்டிருப்பது
குறித்து, நிருபர்களுக்கு பொதுமக்கள் தகவல்களை தந்தனர். இப்படி கைது செய்யப்பட்டவர்கள், இப்போது
அமைக்கப்பட்டுள்ள புதிய ஆட்சியின் போலீஸ் ஆள்காட்டிகளாக செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள்.
இத்தகைய அநீதிகள் அமெரிக்க ஆக்கிரமிப்பு தன்மையின் சட்டவிரோத மற்றும்
தான்தோன்றி போக்கை காட்டுகின்றது. அத்துடன் ஈராக் மக்களிடையே, வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி
வருவதுடன், மின்சாரம் வெட்டு, பெட்ரோலுக்கு பங்கீட்டுமுறை போன்ற காரணங்களால், ஈராக் காலனித்துவ முறையில்
கைப்பற்றப்பட்டிருப்பதற்கு எதிரான பொது மக்களது வெறுப்பும் அதிகரித்துக் கொண்டு வருகிறது.
Top of page
|