World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்தியா India: Tamil Nadu government continues witchhunt of strikers இந்தியா: தமிழ்நாடு அரசாங்கம் வேலைநிறுத்தம் செய்தவர்களை தொடர்ந்து வேட்டையாடுகிறது By Ram Kumar தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் ஜூலையில் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தத்தின்போது தவறாகநடந்துகொண்டனர் என்று மாநில அரசாங்கத்தால் குற்றம்சாட்டப்பட்ட நூற்றுக்கணக்கான அரசாங்க பணியாளர்கள் மீது நீதிபதிகளைக் கொண்ட குழு ஒன்று கடும் தண்டனைகளைத் திணித்துள்ளது. நீதிபதி கே.சம்பத், நீதிபதி மலைசுப்பிரமணியன் மற்றும் நீதிபதி தங்கவேல் ஆகிய ஓய்வுபெற்ற மூன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள், மாநிலத் தலைநகர் சென்னைக்கு வெளியே உள்ள மாவட்டங்களைச் சார்ந்த அரசாங்கப் பணியாளர்கள் 2,777 பேரது வழக்குகளை ஆய்வு செய்தனர். சம்பத்தும், சுப்பிரமணியனும் டிசம்பர் 26 அன்று தங்களின் சமீபத்திய தீர்ப்புக்களை வெளியிட்டனர் மற்றும் தங்கவேல் டிசம்பர் 31 அன்று வெளியிட்டார். அவர்கள் 412 பேருக்கு வேலைநீக்கத்திற்கு ஆணையிட்டுள்ளதுடன், இதர பணியாளர்கள் சம்பள வெட்டுக்கள் மற்றும் அபராதம் போன்ற தண்டனைகளுக்கு ஆளாகி உள்ளனர். 75 தொழிலாளர்கள் மட்டுமே குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். சற்றே ஒப்புக்கான இந்த நீதிபதிகள் குழு, மாநில அரசாங்கம் 2,00,000 பணியாளர்களை பரந்த அளவில் பணிநீக்கம் செய்ததன்மூலம் பொதுவேலை நிறுத்தத்தை நசுக்கியதை அடுத்து அமைக்கப்பட்டது. இந்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் கீழ் பெரும்பாலோர் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்ட அதேவேளை, ஆயிரக்கணக்கானோர் இடையூறுவிளைவிப்பவர்களாகத் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கு நீதிபதிகள் குழுவிடம் விடப்பட்டார்கள். அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக (அதிமுக) மாநில அரசாங்கத்தால் வெட்டிக் குறைக்கப்பட்ட ஓய்வூதியங்கள் மற்றும் சம்பள சலுகைகளை மீட்டமைப்பதற்கு கோரி ஜூலை 2ம் தேதி காலவரையற்ற தொழில்துறை நடவடிக்கை ஆரம்பமானது. முதலமைச்சர் ஜெயராம் ஜெயலலிதா வேலைநிறுத்தம் செய்பவர்களை ஒடுக்குமாறு போலீசுக்கு ஆணையிட்டார், பிறகு அரசாங்கத் தொழிலாளர்களை பரந்த அளவில் ஒட்டுமொத்தமாக பணிநீக்கம் செய்வதற்கு, ஜூலை 4ம் தேதி தமிழ்நாடு அத்தியாவசிய பணிகள் பராமரிப்பு சட்டம் 2002 இற்கு (Tamil Nadu Essential Services Maintenance Act -TESMA) ஒரு திருத்தத்தை முன்கொண்டுவந்தது. அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு பரந்த அளவில் எதிர்ப்பு இருப்பினும், தொழிற்சங்கமானது ஜூலை12 அன்று வேலைநிறுத்தத்தை நிபந்தனை இன்றி வாபஸ் வாங்கியதுடன், இந்திய உச்சநீதிமன்றத்தில் சட்டரீதியில் சவால் செய்தது. நீதிமன்றமானது பணிநீக்கம் செய்யப்பட்ட பெரும்பாலான தொழிலாளர்களை அவர்கள் எழுத்துமூலம் மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்தால் திரும்ப பணியில் அமர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசாங்கத்திற்குக் கூறியதோடு, ஜூலை24 அன்று "பணியாளர்களுக்கு வேலைநிறுத்தம் செய்ய தார்மீக உரிமை இல்லை" என்று தீர்ப்பு அளித்தது. அது ஜெயலலிதா அரசாங்கத்தை வேலைநிறுத்தம் செய்தவர்கள் எங்கு கைது செய்யப்பட்டிருந்தார்கள் அல்லது அவர்களுக்கு எதிராக போலீஸ் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருந்தது என வழக்குவிவரங்களை விசாரிக்குமாறு எடுத்துரைத்தது. தமிழ்நாடு அரசாங்கம் பணிநீக்கம் செய்யப்பட்ட1,70,241 பணியாளர்களில் 6,072 பேரை மீண்டும் பணியில் அமர்த்த மறுத்தது. இந்த தொழிலாளர்களுக்கு நீதியின் ஒட்டுமொத்த இயல்பு பயன்படுத்தப்பட்ட நடைமுறையினால் சுட்டிக்காட்டப்பட்டது. அவர்களுக்கு வழக்கினால் நன்மை கிடைக்கவில்லை அல்லது சாத்தியமான சட்டநடைமுறை கிடைக்கவில்லை. செப்டம்பர் முதல், இம்மூன்று நீதிபதிகளும் 5,715 அரசாங்க தொழிலாளர்களின் வழக்குகளை தங்களுக்குள் பிரித்துக்கொண்டதுடன், மற்றும் ஒவ்வொரு தனிநபரதும் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கு சராசரியாக 5முதல் 10நிமிடங்கள் வரை எடுத்துக் கொண்டனர். அரசு தலைமைச்செயலகம் மற்றும் சென்னையில் உள்ள ஏனைய அரசாங்க அலுவலகங்களைச்சேர்ந்த 2,937 பணியாளர்கள் சம்பந்தப்பட்ட, முதலாவது தீர்ப்பு நவம்பர்15ம் தேதி வழங்கப்பட்டது. இவற்றுள் 587 பேர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர் ஏனையோர் சம்பளவெட்டுக்கள், கட்டாய இடமாற்றங்கள் மற்றும் பதவிஇறக்கங்கள் உட்பட்ட பல்வேறு வடிவிலான தண்டனைகளைப் பெற்றனர். பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு என்ன குற்றங்களுக்கு தண்டிக்கப்பட்டார்கள் என்று கூறப்படவில்லை. 132 பேர்கள் மட்டுமே தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டனர். நடுவர் மன்ற விசாரணையின் ஜனநாயகமற்ற மற்றும் தன்னிச்சையான நடவடிக்கைகள் பின்வரும் விஷயங்களால் விளக்கிக் காட்டப்படுகிறது. தன்ராஜ், ராதாகிருஷ்ணன், சித்தையன், வாசுதேவன், தங்கராஜ் மற்றும் ராசையன் ஆகியோர் திட்டமிட்ட ஜூலை2 வேலைநிறுத்தத்திற்கு முன்னதாகவே போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டு, முன்னெச்சரிக்கைத் தடுப்புக் கைதின் கீழ் வைக்கப்பட்டனர். அவர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொள்ளாததன் காரணமாக, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர். ஆயினும் , அவர்கள் நடுவர் மன்றத்தின் முன் கொண்டுவரப்பட்டபொழுது, அவர்களின் வழக்குகள் "கைதுசெய்யப்பட்டோரின்" வகையினத்தின் கீழ் கேட்கப்பட்டது மற்றும் அதன்படி தண்டனை கொடுக்கப்பட்டது. தன்ராஜ், ராதாகிருஷ்ணன் மற்றும் சித்தையனுக்கு மூன்று ஆண்டுகளுக்கு சம்பள உயர்வு வெட்டப்பட்டு தண்டிக்கப்பட்டனர், வாசுதேவன் பதவி இறக்கம் செய்யப்பட்டார் மற்றும் தங்கராஜூம் ராசையனும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இன்னொரு விவகாரத்தில், ஆதிதிராவிடர் (தலித்)நலத்துறையைச் சேர்ந்த சரோஜினி என்ற பெண் துறை அதிகாரி ஒருவர், வேலைநிறுத்தத்தின்போது மார்பக புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார் என்ற உண்மை இருப்பினும், பணி நீக்கம் செய்யப்பட்டார். நீதிபதிகள் குழு அவரது மருத்துவ சான்றுகளை கவனத்திற்கு எடுக்கவில்லை. சட்டத்துறை பதிவு எழுத்தரான விஜயலிங்கம் நீதிபதிகள் குழு விசாரணைக்குப் பின்னர் மாரடைப்பால் இறந்தார். அவர் சம்பளப்படி உயர்வு கிடையாது என தண்டிக்கப்பட்டார். நிதித்துறையிலிருந்த கனக வள்ளி நீதிபதி குழு தீர்ப்பு வழங்கிய பின்னர் ஒரு வாரம் கழித்து மாரடைப்பால் இறந்தார். உயர்நிலைக் கல்வித்துறை செயலருக்கு தனிஉதவியாளராக பணியாற்றிய பட்சி ராஜா விசாரணை நடத்தப்படும் முன்னரே இறந்துவிட்டார். இரு தொழிலாளர்களுமே மூன்று ஆண்டுகளுக்கு படி உயர்வு ரத்து செய்யப்பட்டிருந்தனர். கிராமப்புற வளர்ச்சி இயக்குநர் மேலாளரும் நீரிழிவு(சர்க்கரை)நோய்க்கு ஆளானவருமான நிர்மலா தாஸ் என்பவர் பொது வேலை நிறுத்தத்திற்கு முன்பு மருத்துவ விடுமுறை எடுத்திருந்தார். அரசாங்கம் அவர் பணிக்கு வராததையிட்டு பணிநீக்கம் செய்தது, நீதிபதிகள் குழு இந்த அப்பட்டமான பழிவாங்கலை அங்கீகாரம் செய்தது. இம்முடிவுக்குப் பின்னர் அவர் தூக்கமாத்திரைகளை (குளிசைகளை) விழுங்கி தற்கொலை செய்ய முயற்சித்தார். பணிநீக்கம் செய்யப்பட்ட கீதா என்ற இன்னொரு பெண் ஊழியரும் தற்கொலைக்கு முயற்சித்தார். உலக சோசலிச வலைதள செய்தியாளர்களிடம் பழிவாங்கப்பட்ட பணியாளர்கள் பலர் ஜெயலலிதா அரசாங்கத்தின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளைக் கண்டனம் செய்தனர். தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் நிதித்துறையில் பணிநீக்கம் செய்யப்பட்ட பாதிக்கப்படுவோம் என அஞ்சி தன் பெயரை வெளியிட விரும்பாத, பெண் தொழிலாளி ஒருவர் விவரித்தார் "(வேலை நிறுத்தத்தின்பொழுது) நான் மருத்துவ விடுப்பில் இருந்தேன். நான் மருத்துவ சான்றிதழைக் காட்டியபொழுது, நீதிபதி அதனை வழங்கிய மருத்துவர் பணிநீக்கம் செய்யப்பட்டதால் அந்த மருத்துவர் கொடுத்த சான்றிதழை ஏற்க மறுத்தார். இதற்கிடையில், எனது சக ஊழியருக்கு அதே மருத்துவரிடம் இருந்து வழங்கப்பட்ட மருத்துவ சான்றிதழை இன்னொரு நீதிபதி ஏற்றுக்கொண்டார்'' என தெரிவித்தார். "இது எப்படி நியாயம் ஆகும் மற்றும் என்னை விசாரணை செய்த நீதிபதி மலைசுப்பிரமணியன் ஏன் வேறுவிதமாக நடந்துகொண்டார்? 587 அரசாங்க பணியாளர்களில் 300 அளவில் பணிநீக்கம் செய்யப் பரிந்துரைத்த இந்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆளும் அ.தி.மு.க கட்சியின் தீவிர உறுப்பினராக இருந்திருக்கிறார். ஆளும் கட்சியின் தாக்குதலுக்கு எப்படி அவர் நடுநிலைமையுடன் பணியாற்றி இருக்க முடியும்?''. தமிழ்நாடு அரசாங்க அதிகாரிகளிடம் தொழிற்சங்கத் தலைவர்களால் விடப்பட்டுக் கொண்டிருக்கும் வேண்டுகோள்களைப்பற்றியும் கூட அவர் பின்வருமாறு விமர்சித்தார்: "தொழிற்சங்கத் தலைவர்கள் அமைச்சர் பொன்னையனிடம் பேசப் போகிறோம் என்கின்றனர், ஆனால் எனக்கு நம்பிக்கை இல்லை. உயர்நீதி மன்றத்தில் எங்களது பிரச்சினை விவாதத்திற்கு வந்த பொழுது, தில்லிக்கு நேரடியாக சென்று எப்படியும் எங்களைத் தண்டித்தாக வேண்டும் என்று கேட்டுக் கொண்ட இவரிடம் எப்படி நீதியை எதிர்பார்க்க முடியும்?". போாக்குவரத்துத் துறையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஒரு இணைத் துறை அதிகாரி கூறினார்:"பணி நடத்தை விதிகளின் கீழ் அரசாங்கம் எங்களை வேலை பார்க்காததற்கு சம்பளம் இல்லை என்று கூறி ஒரு எச்சரிக்கை விடவேண்டும். ஆனால் நாங்கள் வேறுவிதமாக நடத்தப்படுகிறோம் மற்றும் டெஸ்மா (TESMA) சட்டத்தின் அடிப்படையில் பணிநீக்கம் செய்யப்படுகிறோம், இது உச்சநீதிமன்ற ஆணைக்கு எதிரானதாக இருக்கிறது." "இந்த அரசாங்கம் -- அரசாங் ஊழியர்கள், மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என்று இப்படியே மக்களின் அனைத்துப் பிரிவினரையும் தாக்குகிறது. அடுத்த தேர்தலில் அவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்" என்றார். கோபத்தை தணிப்பதற்கு தொழிற்சங்கங்கள் முயற்சி பாதிக்கப்பட்ட அராசங்க ஊழியர்கள் தங்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கக் கோரும்போது, தொழிற்சங்க அலுவலர்களோ தொழிலாளர்களின் கோபத்தை சிதறடிக்கும் வகையில் இயங்குவதுடன், சட்டரீதியான நடவடிக்கையிலும் அரசாங்கத்திற்கு பாதிப்பில்லாத வேண்டுகோள்களிலும் அவர்களை சிக்க வைக்கின்றனர். இந்தியாவின் இரு பிரதான ஸ்ராலினிச அமைப்புக்களான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்), (சிபிஐ-எம்) மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) உட்பட எதிர்க்கட்சிகள் அரசாங்கத் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தவோ அல்லது நீதிபதிகள் குழுவின் முடிவுகளை முறியடிக்கவோ ஒன்றும் செய்யவில்லை. சிபிஐ(எம்) மாநில செயலாளர் என்.வரதராஜன் நீதிபதிகள் குழுவின் தீர்ப்புக்கள் இயற்கை நீதிக்கு முரணானது என்று கூறினார். ஊழியர்கள் தண்டிக்கப்படல் குற்றங்களுக்கு பொருத்தமானதாக இல்லை என்று அவர் கூறுவது, குறைந்தபட்ச தண்டனை ஏற்றுக்கொள்ளப்படலாம் என்பதை இது உட்குறிப்பாக காட்டுகிறது. ஜெயலலிதா அரசாங்கத்தை ஆட்சி அதிகாரத்துக்குக் கொண்டு வர உதவிய சிபிஐ-எம் மற்றும் சிபிஐ கட்சிகள் தண்டிக்கப்பட்டமை தொடர்பாக கையெழுத்துப் படிவ பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்கு ஏனைய எதிர்க்கட்சிகளுடனும் தொழிற்சங்கங்களுடனும் சேர்ந்துள்ளனர். அகில இந்திய மாநில அரசாங்க ஊழியர் கூட்டமைப்பின் பொருளாளர் பிரபிர் சென்குப்தா தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கு ஆதரவாகவும் வேலை நிறுத்தம் செய்யும் உரிமையை மீளப்பெறவும் பிப்ரவரி 11 அன்று, தேசிய அளவிலான ஒரு வேலை நிறுத்தத்துக்கு திட்டமிட்டு வருவதாக அறிவித்தார். அதேவிதமான அறிவித்தல்கள் கடந்த காலத்திலும் செய்யப்பட்டது, பின்னர் அவை கைவிடப்பட்டது மட்டுமே நடந்தது. தமிழ்நாடு அரசாங்கப் பணியாளர் கழகம் இந்த தண்டனை தொடர்பான ஆணை "கடும் அதிர்ச்சி"யை ஏற்படுத்தியதாகக் கூறியது மற்றும் பணிநீக்கங்களை மறுபரிசீலனை செய்யுமாறு அது முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுக்கப்போவதாகக் கூறியது. இது தோல்வி அடைந்தால், தொழிற்சங்கம் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும் என்றது. உலக சோசலிச வலைதள செய்தித்தொடர்பாளர், பழிவாங்கப்பட்டிருப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு தலைமைச் செயலக ஊழியர் சங்கத் தலைவர் பாண்டுரங்கனை பேட்டிகாண முயன்றபோது, இப்போது அரசு ஊழியர்கள் பேட்டி கொடுக்கும் மனநிலையில் இல்லை, மற்றும் தான் தமிழக நிதிஅமைச்சர் பொன்னையனைச் சந்தித்து பணிநீக்க முடிவை வாபஸ்பெறுமாறு கேட்கப் போவதாகவும் கூறினார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பேரளவு பணிநீக்கம் செய்யப்பட்டமை அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் அரசாங்கத்தின் தனியார்மயமாக்கலுக்கும் மற்றும் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்திற்குமான எதிர்ப்பை நெரித்துக் கொல்லும் நோக்கம் கொண்டதுடன், இந்தியத் தொழிலாளர்கள் மீதான தாக்குதலில் ஒரு அரசியல் திருப்புமுனையைக் குறிக்கிறது. தொழிற்சங்க அதிகாரத்துவத்தாலும், எதிர்க் கட்சிகளாலும் அரசாங்கத்திற்கு வெற்று எதிர்ப்புக்களும் வேண்டுகோள்களும் விடுப்பது, மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களை அவர்களின் தாக்குதல்களை ஆழப்படுத்துவதற்கு அனுமதித்திருக்கிறது. உண்மையில், ஜூலை வேலைநிறுத்தம் செய்தவர்கள் பழிவாங்கப்பட்டிருப்பதுடன் சேர்த்து, தமிழ்நாடு அரசாங்கம் அரசாங்க விடுமுறை நாட்கள் மற்றும் ஏனைய வேலை நிலைமைகளில் வெட்டுக்கள் உள்பட, அரசு ஊழியர்கள் மீது புதிய தாக்குதல்களை அறிவிப்பதற்கு வழிவகை செய்திருக்கிறது.
|