World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கைSri Lankan High Court whitewashes massacre of Tamil detainees இலங்கை உயர் நீதிமன்றம் தமிழ் கைதிகளின் படுகொலைகளை மூடிமறைக்கின்றது By Wije Dias இலங்கையில் மூன்று நீதிபதிகளைக் கொண்ட ஒரு விசேட உயர்நீதிமன்றம், 2000 அக்டோபர் 25 அன்று பிந்துனுவெவ புனர்வாழ்வு முகாமில் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான குண்டர்தாக்குதலில் ஐந்து பிரதிவாதிகளான இரண்டு பொலிசாரும் மூன்று பொது மக்களும் வகித்த பங்குக்காக ஜூலை முற்பகுதியில் அவர்களுக்கு மரணதண்டனை விதித்துள்ளது. முகாமில் இருந்த 41 தமிழ் கைதிகளில் 27 பேர் வெட்டிச் சிதைக்கப்பட்டனர் அல்லது இறக்கும்வரை தாக்கப்பட்டுள்ளனர், மற்றும் எஞ்சிய 14 பேர் காயமுற்றதோடு சிலர் படுகாயமடைந்தனர். படுகொலைகள் இடம்பெற்ற காலை நேரம், 2,000 முதல் 3,000 வரையிலான சிங்களத் தீவிரவாதிகளால் முகாம் சுற்றிவளைக்கப்பட்டிருந்தது. ஒரு குறிப்பிட்டளவிலான பொலிஸ் படை தன்னியக்க ஆயுதங்களுடன் நின்றிருந்த போதிலும், பொல்லுகள் மற்றும் கத்திகளுடன் ஆயுதபாணிகளாகியிருந்த குண்டர்கள் முகாமுக்குள் நுழைந்து தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களை தாக்கும்போது எதையும் செய்யவில்லை. பொலிசார் தாக்குதலை நிறுத்துவதற்காக தமது ஆயுதங்களை பயன்படுத்துவதற்குப் பதிலாக, உயிரைக் காக்க ஓடிய கைதிகளின் பக்கம் தமது துப்பாக்கிகளைத் திருப்பினர். சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க) இந்தப் படுகொலைகள் பற்றி பூரண விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் பொறுப்பாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் உறுதியாகக் கோரியது. ஆனால் உயர் நீதிமன்றத் தீர்ப்பானது சம்பவத்தையும் மற்றும் அதற்கான பொறுப்பாளிகளையும், விசேடமாக அரச மற்றும் அரசியல் ஸ்தாபனத்தின் உயர் மட்டத்தினரை, மூடி மறைப்பதை இலக்காகக் கொண்ட பூசி மெழுகும் நடவடிக்கையாகும். தண்டனை பெற்றவர்கள் இந்தக் கொடூரமான குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் நீண்ட கால சிறைத் தண்டனைக்கு உரித்தானவர்கள் என்பதில் சந்தேகம் கிடையாது. ஆனால் அவர்கள் உண்மையான குற்றவாளிகளுக்கு பதிலாக பொருத்தமான பலியாடுகளாக்கப்பட்டுள்ளார்கள். மேலும், சோ.ச.க. மரண தண்டனையை அமுல்படுத்தும் நீதிமன்றத் தீர்ப்பை கண்டனம் செய்கின்றது. இது தண்டணை என்ற பெயரில் அரச அனுசரணையிலான கொலைகளுக்காக வளர்ச்சி கண்டுவரும் ஆரவாரங்களை ஊக்குவிக்கவே உதவும். இலங்கை சட்ட நூல்களில் மரண தண்டனை உள்ளடங்கியிருந்த போதிலும் 1976 முதல் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை. உயர் நீதிமன்றம் இந்த ஐந்து பேருக்கும் மரண தண்டனை கொடுப்பதன் மூலம், முழு தொழிலாளர் வர்க்கத்துக்கும் எதிராக இலக்கு வைக்கப்பட்டுள்ள தமது சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சாரத்தின் பாகமாக மீண்டும் மரண தண்டனை நிறைவேற்றத்தை ஆரம்பிக்க அழைப்புவிடுக்கும் சட்டமாஅதிபரதும் ஏனையவர்களதும் கைகளை மேலும் பலப்படுத்துகிறது. ஒருவரை குற்றவாளி என இனங்காண்பதும் அரசியல் முக்கியத்துவங்களோடு இணைந்துகொண்டுள்ளது. இப்போது ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் 20 வருடகால கசப்பான யுத்தத்துக்கு பேச்சுவார்த்தை மூலமாக முடிவுகாண முயற்சித்துக் கொண்டிருக்கின்றது. பாதுகாப்புப் படையினரும் சிங்களத் தீவிரவாதிகளும் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொண்ட பல வன்முறை குற்றங்களில் ஒன்றுக்கேனும் இலங்கை அரசு நியாயம் வழங்கியுள்ளதாக தமிழ் மக்களை நம்பச் செய்ய இந்த உயர் நீதிமன்றத் தீர்ப்பு பயன்படுத்தப்படும் என்பதில் சந்தேகம் கிடையாது. இந்த வழக்கு குறிப்பிடத்தக்க தாமதங்களுக்கு பின்னரே ஆரம்பமானது. ஆரம்பத்தில் 41 பொலிசாரும் பொதுமக்களும் இந்தப் படுகொலைகளில் சம்பந்தப்பட்டவர்களாக குற்றஞ் சாட்டப்பட்டனர். ஆனால் விசாரணைகளின் போது "சாட்சிகள் போதாத" காரணத்தால் 23 பேர் விடுதலை செய்யப்பட்டார்கள். எஞ்சிய 18 பேரில் இந்த ஐவர் மட்டுமே குற்றவாளிகளாகக் காணப்பட்டதோடு ஏனையவர்கள் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கப்பட்டார்கள். உயர் நீதிமன்றம் 12 சடலங்கள் அடையாளங்காண முடியாதவாறு எரிந்து போயிருந்தததை சில குற்றச்சாட்டுக்களை விலக்குவதற்கு சாதகமாக்கிக்கொண்டது. முனசிங்க ஆராச்சிகே சாமி, திசாநாயக முதியான்சேலாகே சிறிபால திசாநாயக மற்றும் ராஜபக்ச முதியான்சேலாகே பிரேமானந்த ஆகியோர் படுகொலைகளுக்கான குற்றவாளிகளாக இணங்காணப்பட்டனர். பொலிஸ் பரிசோதகர் ஜயம்பதி கருணாசேன மற்றும் துணைப் பரிசோதகர் வஜிரா ரட்னாயக்க ஆகியோர் குற்றவாளிகளுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் கொலையாளிகளின் செயலில் சமபங்கு வகித்தவர்களாக குற்றஞ்சாட்டப்பட்டனர். மரணதண்டனை விதிக்கப்பட்ட உடன், பண்டாரவளை பொலிஸ் நிலையப் பரிசோதகரான கருணாசேன தனது மேலதிகாரிகளான பண்டாரவளை பொலிஸ் பொறுப்பதிகாரி ஜயன்த செனவிரட்ன மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.டபிள்யூ. தயாரட்ன ஆகியோரே பொறுப்பாளிகள் என குற்றஞ்சாட்டினார். "நான் எந்தவகையிலும் படுகொலைகளோடு சம்பந்தப்பட்டவன் அல்ல," எனக் கூறிய அவர், "நான் எனது கடமைக்கு அப்பால் செயற்பட்டிருக்காவிடில் இந்த நிலைக்கு முகம்கொடுத்திருக்கப் போவதில்லை. அன்றைய தினம் உத்தரவு பிறப்பித்தவர்கள் தப்பிக்கொண்டார்கள்," எனவும் தெரிவித்தார். கருணாசேன முகாமுக்கு வெளியில் இருந்த பொலிஸ் படையின் சிரேஷ்ட பொறுப்பதிகாரியாக இருந்ததோடு சம்பவத்துக்கு பெரும் பொறுப்பாளியாகும். ஆனால் கண்டுகொள்ளப்படாத அவரது கருத்துக்கள் படுகொலைகள் சம்பந்தமாக பதிலளிக்கப்படாத பல கேள்விகளைச் சுட்டிக்காட்டுகிறது. படுகொலைகளுக்கான பின்னணி பிந்துனுவெவ தடுப்பு முகாம் மீதான தாக்குதலானது 2000 அக்டோபரில் இடம்பெற்ற பொதுத் தேர்தலையடுத்து காணப்பட்ட மிகவும் சூடான அரசியல் சூழ்நிலையிலேயே இடம்பெற்றது. அதே ஆண்டு ஏப்பிரல் மாதம், தமிழீழ விடுதலைப் புலிகள் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஆனையிறவு இராணுவத் தளத்தை கைப்பற்றியதோடு, மே மாதமளவில் வடக்கில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் பெரும்பகுதியையும் கைப்பற்றினர். ஒரு சந்தர்ப்பத்தில் தீவின் வடமுனையில் சிக்கிக்கொண்டிருந்த ஒரு தொகை இராணுவத்தையும் கைப்பற்றும் நிலை காணப்பட்டது. இராணுவத் தோல்வி கூர்மையான அரசியல் நெருக்கடியைத் தோற்றுவித்தது. கொடுமையான புதிய அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்திய அதே வேளை, ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் அவரது பொதுஜன முன்னணியும் விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளை நோக்கி நகர்ந்தனர். பெரும் வல்லரசுகள் மற்றும் பெரும் வர்த்தகர்களின் நெருக்குவாரத்தின் காரணமாக, பொதுஜன முன்னணி தமிழ் ஆளும் கும்பல்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட சலுகைகளை வழங்கும் ஒரு "அதிகாரப் பகிர்வு பொதிக்காக" ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க) ஆதரவைக் கோரியது. இந்த நடவடிக்கையை மக்கள் விடுதலை முன்னணி போன்ற சிங்களத் தீவிரவாதக் குழுக்களும், பெளத்த தலைவர்களும் மற்றும் யுத்தத்தில் இலாபம் பெற்ற வியாபாரப் பிரிவினர், அரச அதிகாரத்துவம் மற்றும் இராணுவத்துடனும் நெருங்கிய தொடர்புகொண்டுள்ள இரு பெரும் கட்சிகளின் உறுப்பினர்களும் கடுமையாக எதிர்த்தனர். குமாரதுங்க 2000 ஆகஸ்டில் அரசியலமைப்பு பொதியை பாராளுமன்றத்தில் முன்வைத்த போதிலும், பேரினவாதிகளின் பக்கம் சாய்ந்துகொண்ட ஐ.தே.க தனது முன்னைய வாக்குறுதியை மறுத்ததையடுத்து அதை விலக்கிக்கொள்ளத் தள்ளப்பட்டார். அடுத்து வந்த தேர்தலில் பொதுஜன முன்னணி அரிதாக வெற்றி கண்டபோதிலும் அதற்கான பிரச்சாரங்கள் சேறடிப்புகள் மற்றும் குண்டர் தாக்குதல்களால் நிறைந்து போயிருந்ததோடு சிங்களப் பேரினவாதத்துக்கும் அழைப்பு விடுத்தது. குமாரதுங்க அதிகாரப் பகிர்வு பொதியை அமுல்படுத்தும் முயற்சியில் தோல்வியடைந்ததை அடுத்து, பொதுஜன முன்னணியின் தேசாபிமான நட்சாற்சிப் பத்திரத்தை ஒப்புவிப்பதற்காக ஒரு உக்கிரமான இராணுவ எதிர்த்தாக்குதல்களைத் தொடர்ந்தார். இதில் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகின. இச்சந்தர்ப்பத்தை ஜே.வி.பி மற்றும் சிஹல உறுமய போன்ற சிங்களத் தீவிரவாதிகள் தமக்குச் சார்பாக பயன்படுத்திக் கொண்டது ஆச்சரியத்துக்குரியதல்ல. இவர்கள் தேர்தலுக்குப் பின்னரும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்களை தொடுக்கக் கோரி தொடர்ந்தும் பிரச்சாரத்தில் ஈடுபட்டன. பிந்துனுவெவ சம்பவம் நேரிட்டது இந்தச் சூழ்நிலையிலேயே ஆகும். இலங்கையின் மத்திய மலையகப் பகுதியில் உள்ள இந்த குறைந்த பாதுகாப்பு கொண்ட நிலையம் ஒப்பீட்டளவில் வசதியான இலக்காகும். அச்சமயம் ஆயிரக்கணக்கான தமிழர்கள் "விடுதலைப் புலி சந்தேக நபர்களாக" இலங்கை பூராவும் உள்ள சிறைகளிலும் முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். குறைந்த அலுவலர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்களைக் கொண்ட பிந்துனுவெவ முகாமில் புனர்வாழ்வுக்காக சுமார் 40 அல்லது அதற்கும் மேற்பட்ட கைதிகள் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். சில சந்தர்ப்பங்களில் கைதிகள் வெளியேறவும் முகாமுக்கு வெளியில் சென்று வேலை செய்யவும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். நீதிமன்றத்தில் குறைந்த பட்சம் தமிழ் கைதிகள் அவர்களாகவே கலகத்தை உண்டுபண்ணியதாக சித்தரிக்க முற்பட்டதன் மூலம் இந்த படுகொலைகளை ஒரு தன்னிச்சையான இனவாத மோதலின் விளைவாகக் காட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எவ்வாறெனினும், சூழ்நிலைகள் மற்றும் உண்மையில் சாட்சிகளும் கூட முற்றிலும் வேறுபட்ட ஒன்றை சுட்டிக்காட்டுகின்றன. அதாவது பொலிஸ் மற்றும் இராணுவத்தின் உதவியுடன், அல்லது அவர்களின் நேரடித் தலையீட்டுடன் ஒழுங்கமைக்கப்பட்ட குண்டர் படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதாகும். படுகொலைகளை அடுத்து, அரசாங்கமும் கொழும்பு ஊடகங்களும் கைதிகளுக்கும் உள்ளூர் கிராமத்தவர்களுக்கும் இடையிலான மோசமான உறவே தாக்குதலுக்கு காரணம் என குற்றம்சாட்டின. உயர்நீதிமன்றத் தீர்ப்பு இத்தகைய குற்றச்சாட்டுக்களை மீண்டும் உச்சரித்தது. "சாட்சிகளை ஆராயும் போது தெளிவாவது என்னவென்றால் புனர்வாழ்வு முகாமை பிந்துனுவெவயில் நடத்துவதை கிராமத்தவர்கள் விரும்பவில்லை என்பதேயாகும்," என அது குறிப்பிட்டது. நீதிபதிகளின் படி, கைதிகள் விடுதலைப் புலி சந்தேக நபர்களாகையால் கிராமத்தவர்கள் அவர்களுக்கு அஞ்சுவதோடு "முகாமைக் கடந்து செல்லும் இளம் யுவதிகளை அவசியமின்றி தொந்தரவு செய்வதாகவும்" அவர்களைக் குற்றஞ்சாட்டுகிறார்கள். இலங்கை சோ.ச.க படுகொலைகளையிட்டு ஒரு நீண்ட சுயாதீனமான விசாரணைகளை மேற்கொண்டதோடு பல அறிக்கைகளையும் வெளியிட்டது. உள்ளூர் கிராமத்தவர்களிடம் உரையாடிய போது அவர்கள் கைதிகளை எதிர்ப்பதாக கூறப்பட்டது பொய் என்பது அம்பலத்துக்கு வந்தது. அவர்கள் பிரதேசத்தில் கிராமத்தவர்களோடு சேர்ந்து சிரமதானத்தில் ஈடுபட்டதாக கூறிய ஒரு பாடசாலை அதிபர் "மிக நல்ல இளைஞர்கள்" எனக் குறிப்பிட்டார். கைதிகள் செய்த உதவிக்காக பல கிராமத்தவர்கள் அவர்களைப் பாராட்டியதோடு அங்கு எந்தவொரு பிரச்சினையும் இருக்கவில்லை என விளக்கினார்கள். எவ்வாறெனினும் சில வாரங்களுக்கு முன்னர், பாதுகாப்புப் படைகளுடன் நெருங்கிய தொடர்புகள் வைத்துள்ள சிங்களத் தீவிரவாத குழுக்கள் பிரதேசத்தில் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளன. சிஹல உறுமய பொதுத் தேர்தலில் போட்டியிட்டதோடு அதன் வேட்பாளர்களில் சிலர் முகாமுக்கு அருகில் உள்ள கிராமங்களில் வசிக்கின்றனர். உள்ளூர் கிராமத்தவர்களின் படி, முகாமை அகற்றக் கோரும் மனு ஒன்றும் சுற்றுக்கு விடப்பட்டுள்ளது. அக்டோபர் 24 இரவு, முகாம் பொறுப்பதிகாரியான வை.பி. அபேரட்ன சில நாள் விடுமுறையில் இருந்து மீண்டும் கடமைக்குத் திரும்பியிருந்தார். அன்று மாலை இடம்பெற்ற சமயம் சார்ந்த கூட்டத்தின் பின்னர் (இந்தக் கூட்டத்தின் போது கைதிகள் வலுக்கட்டாயமாக தேசிய கீதத்தைப் பாட வேண்டும்), பல கைதிகள் தமது விடுதலை தாமதமாவது பற்றியும் அவர்களின் சொந்தக் கடிதங்கள் காணாமல் போகும் விதம் பற்றியும் அபேயரட்ணவிடம் முறைப்பாடு செய்தனர். ஒரு காவலாளி துப்பாக்கிப் பிரயோகம் செய்தவுடன் பதட்டநிலை உக்கிரமடைந்தது. ஆனால் ஊடகங்களும் பொலிசும் வன்முறையொன்று இடம்பெறவில்லை என உறுதிப்படுத்த முயன்றன. துப்பாக்கிச் சூடு அருகில் இருந்த கிராமத்தவர்களின் கவனத்தை ஈர்த்ததோடு பல நூற்றுக்கணக்கானவர்கள் கூட்டமாகத் திரண்டனர். முகாம் அலுவலர்கள் உடனடியாக பண்டாரவளை பொலிசுக்கும் நிலையப் பொறுப்பதிகாரி செனவிரட்னவுக்கும் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர்களை அங்கு வரவழைத்தனர். 70 பொலிசாரும் மற்றும் தியத்தலாவை இராணுவத் தளத்திலிருந்து ஒரு இராணுவக் குழுவினரும் அங்கு வந்தனர். எவ்வாறெனினும் குறைந்தபட்சம் முகாமுக்கு உள்ளே நிலைமை பாதுகாப்பாக உள்ளது என்ற திருப்தியுடன் செனவிரட்ன அங்கிருந்து வெளியேறினார். திட்டமிடப்பட்ட தாக்குதல் எவ்வாறெனினும், திட்டமிடப்படுவது என்ன என்பதையிட்ட பல அறிகுறிகள் காணப்பட்டன. உயர் நீதிமன்ற தீர்ப்பும் கூட, முகாமுக்கு வெளியில் இருந்த பொலிசார் முகாமை மூடிவிட வேண்டுமென வாதாடிய ஒரு குழுவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளது. அன்றிரவு, முகாமைச் சுற்றி மோசமான தமிழர் விரோத சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அவை பொலிஸ் காவலரண்களைச் சூழவும் ஒட்டப்பட்டிருந்தன. முகாமினுள் இருந்த கைதிகள் நிலைமையைப் புரிந்துகொண்டிருந்ததோடு மட்டக்களப்பில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அலுவலகத்தோடும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டிருந்தனர். முகாமுக்கு வெளியில் பொலிஸ் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. அதற்குப் பதிலாக கடமையில் இருந்த படைவீரர்கள் அதிகாலையில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர். மற்றும் தொலைபேசி மூலம் பிரதேச பொலிசுடன் தொடர்புகொண்ட செஞ்சிலுவைச் சங்க அலுவலர்களுக்கும் சகலதும் "கட்டுப்பாட்டில் இருப்பதாக" அறிவிக்கப்பட்டது. அக்டோபர் 25 அன்று அதிகாலை, முகாமுக்கு வெளியில் 2,000 முதல் 3,000 பேர் வரையான பெரும் கூட்டமொன்று கூடியிருந்தது. இது தற்செயலாக இடம்பெற்றிருக்க முடியாது. பொல்லுகள் மற்றும் கத்திகளால் ஆயுதபாணிகளாக்கப்பட்டவர்கள் ட்றக் வண்டிகளில் கொண்டுவரப்பட்டிருந்தனர். படுகொலைகளை அடுத்து சோ.ச.க நிருபர்களோடு பேசிய உள்ளூர் கிராமத்தவர்கள் தாங்கள் சம்பந்தப்படவில்லை என ஆத்திரத்துடன் தெரிவித்ததோடு அவர்களில் யாருக்கும் சொந்த வாகனம் கிடையாது என்பதையும் சுட்டிக்காட்டினர். அதனைத் தொடர்ந்து கொடூரமான படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டன. குண்டர்கள் முகாமுக்குள் நுழைந்து எல்லாக் கைதிகளையும் கொல்லும் வரை பொலிஸ் அவர்களைத் தடுக்க எந்த முயற்சியும் மேற்கொண்டிருக்கவில்லை. ஒரு அறிக்கையின்படி வாசல்கதவு திறந்தே வைக்கப்பட்டிருந்ததால் தாக்குதல்காரர்களுக்கு அதனைத் தள்ள வேண்டிய அவசியம் கூட இருக்கவில்லை. கைதிகள் வெட்டிக் கொத்தப்பட்டு அல்லது அடித்துக் கொல்லப்பட்டனர். அவர்களது சடலங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. உடமைகள் நாசம் செய்யப்பட்டன. குண்டர்களிடமிருந்து தப்பிச் சென்றவர்ளை பொலிசார் சுட்டதோடு தாக்கவும் செய்தனர். பொலிஸ் அலுவலர்கள் இருந்த வாகனங்களில் இருந்தும் இந்தத் தாக்குதல் தொடுக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்துக்கு மீண்டும் வருகைதந்த பொலிசும் இராணுவமும் படுகொலைகளில் ஈடுபட்டவர்களை கைது செய்ய எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தாக்குதல் சம்பந்தமாக தனது விசாரணைகளை முடித்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, "இது கைதிகளின் ஆத்திரமூட்டலால் ஏற்பட்ட ஒரு முன்னேற்பாடற்ற குண்டர் வன்முறை அல்ல," மாறாக "முன்னேற்பாடு செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட தாக்குதலாகும்" எனத் தெரிவித்துள்ளது. அப்படியிருந்தும் சட்டமா அதிபரின் வழக்கறிஞர்களும் உயர் நீதிமன்றத் தீர்ப்பும் இந்தப் படுகொலைகள் தன்னிச்சையானவை என்ற கட்டுக்கதையை தொடர்கின்றன. இதன் பெறுபேறாக, மிகவும் வெளிப்படையான கேள்விகள் கவனிக்கப்படாது விடப்பட்டுள்ளன. அக்டோபர் 24-25 இரவு இந்தத் தாக்குதலை திட்டமிட்டது யார்? பிந்துனுவெவ முகாமுக்கு எதிரான பிரச்சாரத்திலும் சுவரொட்டிகளை ஒட்டுவதிலும் ஈடுபட்ட சிங்களத் தீவிரவாத குழு எது? அங்கு பயங்கரமான நிலைமைகள் வளர்ச்சியடைவதை தெரிந்துகொண்டிருந்த, இராணுவ மற்றும் பொலிஸ் கட்டளை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது யார்? நடந்தது என்ன என்பதை அறிந்துகொண்டிருந்த அரசாங்கத்தோடு தொடர்புபட்டவர் யார்? இந்தக் பிரச்சினைகள் எதுவும் விசாரணை செய்யப்படாததோடு எழுப்பப்படவும் இல்லை. ஏனெனில், இவை சிங்களப் பேரினவாதத்தில் மூழ்கிப் போயுள்ள பொலிஸ், இராணுவம், அரச அமைப்பு மற்றும் அரசியல் நிறுவனம் ஆகிய அனைத்திலும் உள்ள உயர்மட்டத்தினரை இலக்காகக் கொண்டதாகும். அதே சமயம், சிஹல உறுமய, ஜே.வி.பி மற்றும் ஏனைய தீவிரவாதக் குழுக்கள் தற்போது ஆட்சியில் இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் அணிசேர்ந்துகொண்டிருந்தன. இப்போது இதே அமைப்புகள் குமாரதுங்கவையும் பொதுஜன முன்னணியையும் சூழ அணிதிரண்டுகொண்டுள்ளன. பொறுப்பாளிகள் யார் என்பதையிட்டு ஆளும் கும்பலில் உள்ள எவருக்கும் ஒரு மதிப்பீடு கிடையாது. உண்மையில் படுகொலைகள் பற்றிய நீதிமன்ற நடவடிக்கைகளும் கூட, சம்பவத்தை அடுத்து ஆத்திரமுற்ற தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களின் பரந்த வேலை நிறுத்தம் மற்றும் கண்டனங்களின் பின்னரே ஆரம்பமானது. தமிழீழ விடுதலைப் புலிகளோ அல்லது பெயரளவிலான இடதுசாரிக் கட்சிகளான லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நவ சமசமாஜக் கட்சிகளோ சம்பவம் தொடர்பாக உறுதியான கண்டனங்களை தெரிவிக்கவில்லை. 2001ல் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்ட போது, சோ.ச.க மேற்கொண்ட ஆய்வுகளின்படி சாட்சிகளை வழங்குவதற்கான தயார்நிலையை கடிதம் மூலம் அறிவித்திருந்த போதிலும் விசாரணைகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆணைக்குழு சேகரித்துக் கொண்ட விடயங்கள் வெளியிடப்படாததோடு இறுக்கி பூட்டி வைக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து இந்த விடயங்கள் முழுமையாக மூடி மறைக்கப்பட்டுவிட்டன. ஊடகங்களில் உள்ள கடும் பேரினவாத பிரிவினர், குற்றவாளிகளான கொலையாளிகளைப் பாதுகாக்க அழைப்பு விடுக்கும் வலுக் குறைந்த முயற்சியின் ஒரு பாகமாக, முழு மெளனிகளாக இருந்தனர். அதே போல், இடதுசாரிக் கட்சிகளும் மற்றும் மத்தியதர வர்க்க தீவிரவாத கருவிகளும் மரணதண்டனை பற்றியோ அல்லது கொலைகள் பற்றியோ எதையும் கூறவில்லை. இந்த நீதிமன்றத் தீர்ப்பை அதன் உண்மையான பெயரில் அழைக்க எவரும் தயாரில்லை: இது, இந்தக் கொடுமையான குற்றம் பற்றிய ஒரு அக்கறைகொண்ட விசாரணை மேற்கொள்ளப்படுவதைத் தடுக்கும் நோக்கம் கொண்ட அரசியல் ரீதியில் திட்டமிடப்பட்ட மூடிமறைக்கும் நடவடிக்கையாகும்.
|