World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கைSEP holds public meeting on the political crisis in Sri Lanka சோ.ச.க இலங்கையில் அரசியல் நெருக்கடி சம்பந்தமாக பொதுக் கூட்டமொன்றை நடத்தியது By our correspondent சோசலிச சமத்துவக் கட்சி தற்போது இலங்கையில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் அதனது முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்தை தெளிவுபடுத்துவதற்காக டிசம்பர் 18 கொழும்பில் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தியது. சோ.ச.க பொதுச் செயலாளர் விஜே டயஸ் தனது அறிக்கையை முன்வைக்கும் போது, நிகழ்வுகள் விரிவடையும் போது தொழிலாளர் வர்க்கத்தால் ஒரு பக்கம் விலகி நிற்க முடியாது. அது தனது வர்க்க நலன்களின் அடிப்படையில் அரசியல் நிலைமைகளுக்குள் சுயாதீனமாக தலையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். சுமார் 200 தொழிலாளர்கள், மாணவர்கள், வேலையற்ற இளைஞர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களும் கூட்டத்திற்கு சமூகமளித்திருந்தனர். சோ.ச.க அதனது அரசியல் அறிக்கைகளின் பிரதிகளை சிங்களத்திலும் தமிழிலும் விநியோகித்ததோடு கூட்டத்தை விளம்பரப்படுத்தி சுவரொட்டிகளையும் ஒட்டியிருந்தது. பலர் உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிட்டிருந்த பிரசுரத்தை வாசித்தப் பின்னர் வருகை தந்திருந்தனர். உ.சோ.வ.த அனைத்துலக ஆசிரியர் குழுவின் உறுப்பினரான கே.ரட்னாயக்க கூட்டத்துக்கு தலைமை வகித்தார். ஆரம்பத்திலேயே, நவம்பர் 4 அன்று ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மேற்கொண்ட சர்வாதிகார நடவடிக்கைகளை அடுத்த உருவாகியுள்ள இந்த அரசியல் நெருக்கடி ஒரு திருப்புமுனையாகும் என அவர் விளக்கினார். நாடு "அரசியல் எரிமலைக்கு" முகம் கொடுத்துக்கொண்டிருப்பதாக குறிப்பிட்ட டெயிலி மிரர் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தின் எச்சரிக்கையை சுட்டிக்காட்டிய அவர், ஜனாதிபதியும் அரசாங்கமும் ஒரு சமரசத்தை எட்டுவதில் தோல்வியடைந்தமைக்கு ஆளும் வட்டாரத்தில் உள்ள விரக்தியே காரணம் என சுட்டிக்காட்டினார். சில ஆய்வாளர்கள் இந்த நெருக்கடியை ஜனாதிபதிக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்விற்கும் இடையிலான அரசியலமைப்பு ரீதியிலான விட்டுக்கொடுப்பற்ற நிலை என குறைத்து மதிப்பிட முயலுவதாக ரட்னாயக்க தெரிவித்தார். எவ்வாறெனினும் இந்த மோதலானது நாட்டின் 20 வருட உள்நாட்டு யுத்தத்தோடு தொடர்புபட்ட மிகவும் அடிப்படை விடயங்களின் பெறுபேறாகும். இந்த நெருக்கடியின் வரலாற்று வேர்களையும் அதேபோல் சர்வதேச ரீதியில் இடம்பெற்ற ஆழமான பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களையும் ஆய்வு செய்வதன் மூலம் மட்டுமே தொழிலாள வர்க்கத்தால் தனது பணிகளை புரிந்துகொள்ள முடியும் என அவர் கூறினார். உ.சோ.வ.த அனைத்துலக ஆசிரியர் குழுவின் உறுப்பினரான விஜே டயஸ் பிரதான உரையை ஆற்றினார். அவர் இலங்கையின் அரசியல் நெருக்கடியை மாற்றம் அடைந்துள்ள உலக நிலைமைகளின் உள்ளடக்கத்தில் இருத்தி தனது உரையை ஆரம்பித்தார். "விசேடமாக புஷ் நிர்வாகத்தின் செல்வாக்கிலான உக்கிரமான நவ-காலனித்துவக் கொள்கைகள் பூகோளத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பெரும் ஸ்திரமற்ற நிலைமையைத் தோற்றுவித்துள்ளது" என அவர் குறிப்பிட்டார். "ஈராக் மீதான ஆக்கிரமிப்பானது தனது கொள்ளையடிக்கும் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இரக்கமின்மையில் மட்டுமன்றி, ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக இயங்கிவரும் ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச ஒழுங்குபடுத்தும் சபைகளின் வங்குரோத்திலும் தங்கியுள்ளது," என அவர் தெரிவித்தார். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு இந்தியத் துணைக் கண்டத்திலான பதட்ட நிலைமையை கூர்மைப்படுத்தியுள்ளதாக டயஸ் விளக்கினார். கடந்த காலத்தில் பாகிஸ்தான் இராணுவமும் அரச எந்திரங்களும் அணிவகுத்திருந்த இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்களை நசுக்கித் தள்ளுமாறு ஜனாதிபதி பேர்வஷ் முஷாப்பின் அரசாங்கத்தை வாஷிங்டன் நெருக்குகிறது. அதே சமயம், பாகிஸ்தானின் நீண்ட கால எதிரியான இந்தியாவின் பாரதீய ஜனதாக் கட்சியின் இந்துத்துவ தலைமைகளுடன் அமெரிக்கா நெருக்கமான உறவுகளை வளர்த்து வருகிறது. இலங்கையின் நீண்ட உள்நாட்டு யுத்தத்திற்கு முடிவு கட்டுவது வாஷிங்டனின் தேவையாக உள்ளது. இந்த யுத்தம் பிராந்தியத்தில் தனது மூலோபாய மற்றும் பொருளாதார குறிக்கோள்களுக்கு தடையாக உள்ளதோடு ஸ்திரமற்ற நிலைமைக்கு செல்வாக்குச் செலுத்துவதாகவும் வாஷிங்டன் கருதுகிறது என டயஸ் குறிப்பிட்டார். பெரும் வல்லரசுகளின் அழுத்தம் மற்றும் உள்ளூர் வர்த்தகர்களின் நலன்களுக்காகவும், 2001 டிசம்பரில் ஆட்சிக்கு வந்த விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளோடு யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சாத்திட்டதுடன் சமாதானக் கொடுக்கல் வாங்கல்களுக்கான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டது. ஆனால், 2002 பெப்பிரவரியில் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தமும் 2002 செப்டம்பரில் ஆரம்பமான சமாதானப் பேச்சுவார்த்தைகளும் ஆளும் கும்பல்களுக்கு மத்தியிலும் மற்றும் முதலாளித்துவ அரசியல் கட்சிகளுக்கு இடையிலும் பெரும் பிளவைத் தோற்றுவித்தது. தமிழ் சிறுபான்மையினருக்கு சலுகைகளை வழங்கும் பாசாங்குகளும் கூட இலங்கையின் அரசியல் நிறுவனத்தின் சில பிரிவுகளின் கடுமையான எதிர்ப்புக்குள்ளாகியது ஏன் எனப் புரிந்துகொள்ள ஒருவர் வரலாற்றுப் பிரச்சினைகளுக்குள் நுளைய வேண்டும். "1983ல் ஆரம்பமான யுத்தமானது கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பித்த இலங்கை ஆளும் கும்பலின் சிங்களப் பேரினவாத அரசியலின் உச்சக்கட்டமும் தொடர்ச்சியுமாகும். அவர்கள் "பிரித்தாளும்" நாசகரமான வழிமுறையை தமது பிரித்தானிய குருக்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். "1948 சுதந்திரத்தின் பின்னர் கொழும்பு அரசாங்கத்தின் முதலாவது சட்டங்களில் ஒன்று, இந்திய வம்சாவளியின் என்ற அடிப்படையில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களின் வாக்குரிமையைப் பறிக்கும் பிரஜா உரிமை மசோதா ஒன்றை முன்வைப்பதாக இருந்தது. எட்டு வருடங்களின் பின்னர், சிங்களம் மட்டும் அரச கரும மொழியாக்கப்பட்டது. சிங்கள மொழியில் பரீட்சியம் இல்லாதக் காரணத்தால் பல தமிழர்கள் அரசாங்கத் தொழிலை இழக்கத் தள்ளப்பட்டனர். "1972 அரசியலமைப்பில், தமிழர்களில் பெரும்பான்மையினர் பின்பற்றி வந்த இந்த மதம் உட்பட ஏனைய எல்லா மதங்களுக்கும் எதிராக பெளத்த மதம் அரச மதமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த எல்லா சந்தர்ப்பங்களிலும் தமிழர்கள் அமைதியான எதிர்ப்பைக் காட்டியபோது பொலிஸ் மற்றும் இராணுவத்தின் அடக்குமுறைக்கு உள்ளாகினர்." "1977ல் அதிகாரத்திற்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க), தீவை பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்தியை நோக்கி அபிவிருத்தி செய்வதற்காக திறந்த பொருளாதாரக் கொள்கையை அமுல்படுத்தியது. சமூகநல நடவடிக்கைகளிலான வெட்டுக்களும் அரச மற்றும் கூட்டுத்தாபன துறையிலான ஆயிரக்கணக்கான தொழில் வெட்டுக்களும் 1980 ஜூலையில் ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு வழிசமைத்தது. ஐ.தே.க அரசாங்கம் தொழிலாளர் வர்க்த்தை பிரிப்பதற்காக இனவாத நச்சுப் பிரச்சாரத்தை முன்னெடுப்பதன் மூலம் பதிலிறுத்தது -- இது 1983ல் யுத்தம் வெடிப்பதற்கான முன்னோடியாக அமைந்தது என டயஸ் விளக்கினார். மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) உட்பட எல்லா முதலாளித்துவக் கட்சிகளும் மற்றும் பழைய இடதுசாரிக் கட்சிகளான லங்கா சமசமாஜக் கட்சி (ல.ச.ச.க) மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியும் யுத்தத்தை ஆதரித்தன. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியும் சோ.ச.க.வின் முன்னோடி இயக்கமுமான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் மட்டுமே யுத்தத்தை உறுதியாக எதிர்த்ததோடு, தீவின் வடக்குக் கிழக்கில் இருந்து இராணுவத்தை நிபந்தனையின்றி வெளியேற்றவும் கோரிக்கை விடுத்தது. ரணில் விக்கிரமசிங்க ஐ.தே.க அரசாங்கம் 11 வருடங்களாக யுத்தத்தை முன்னெடுத்தபோது அதில் அமைச்சராக இருந்தார். 1994ல் இருந்து எதிர்க் கட்சியில் இருந்தபோது, குமாரதுங்கவின் பொதுஜன முன்னணி அரசாங்கம் விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்காக இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்தபோது அதற்கும் ஆதரவளித்தார். இப்போது பெரும் வல்லரசுகள் மற்றும் பெரு வர்த்தகர்களின் நெருக்குவாரத்தின் கீழ் யுத்தத்துக்கு முடிவுகட்ட முனைவதோடு தசாப்த காலங்களிலான இனவாத அரசியலின் விளைவுகளுக்கும் முகம் கொடுக்கின்றார். "இரு பிரதான கட்சிகளான ஐ.தே.க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியும் பொதுஜன முன்னணியும் தர்மசங்கடத்துக்குள் சிக்கிக்கொண்டுள்ளன" என டயஸ் தெரிவித்தார். யுத்தத்திற்கு முடிவுகட்டவும் தீவை ஒரு மலிவு உழைப்பு மேடையாக மாற்றுவதற்குமான ஏகாதிபத்திய சக்திகளதும் அவர்களது உள்ளூர் பெரு வர்த்தகர்களதும் கோரிக்கைகளை அவர்களால் எதிர்க்க முடியாது. ஆனால் இராணுவத்தின் சில பிரிவினர், பெளத்த தலைவர்கள் மற்றும் தமது சொந்த தேர்தல் அடித்தளங்ளில் உள்ள சிங்களப் பேரினவாத பிரிவினரின் கடுமையான எதிர்ப்புக்கும் முகம் கொடுக்கின்றனர். இந்தப் பிரிவினருக்கு உதவிவருவதோடு, யுத்த நிறுத்தமும் 'சமாதான முன்னெடுப்புகளும்' தேசிய பாதுகாப்பையும் இறைமையையும் கீழறுப்பதாக குற்றம்சாட்டிய ஜனாதிபதி குமாரதுங்க அவற்றுக்கெதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்தார். விடுதலைப் புலிகளின் படகுகளை மூழ்கடிக்க நேரடியாக கடற்படைக்கு கட்டளையிடுவதன் மூலம் சமாதானப் பேச்சுவார்த்தைகளை கவிழ்க்க குமாரதுங்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்விகண்டதை அடுத்து, ஐ.தே.மு அரசாங்கத்தை ஆட்டங்காணச் செய்ய மேலும் நேரடியான நடவடிக்கைகளில் ஈடுபட அவர் தீர்மானித்தார்." கடந்த பல மாதங்களாக அரசாங்கத்துக்கும் நாட்டின் அரசியலமைப்பின் கணிசமான நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்டுள்ள ஜனாதிபதிக்கும் இடையில் அரச அதிகாரத்தின் நெம்புகோளுக்கான தொடர்ச்சியான போராட்டம் இடம்பெற்று வருகின்றது. குமாரதுங்க இராணுவ மற்றும் ஏனைய பிரதான நியமனங்களில் தலையீடு செய்தார். அவர் பாதுகாப்பு விடயங்கள் சம்பந்தமான இயக்கக் கட்டுப்பாடுகளில் தமக்குள்ள அரசியலமைப்பு உரிமையை உறுதிப்படுத்துவதற்காக உயர்நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றையும் பெற்றுக்கொண்டார். அரசாங்கம் பிரதம நீதியரசருக்கு எதிராக ஒரு குற்றப் பிரேரணையை தயார் செய்வதன் மூலம் பிரதிபலித்தது. விடுதலைப் புலிகள் அக்டோபர் 31 அன்று இடைநிறுத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்கும் நோக்கில், வடக்கு கிழக்கில் ஒரு இடைக்கால நிர்வாக சபைக்கான தனது பிரேரணைகளை வெளியிட்ட அடுத்த கணம் விடயங்கள் உச்ச நிலையை அடைந்தன. குமாரதுங்க நவம்பர் 4 ம் திகதி பாதுகாப்பு, உள்துறை மற்றும் ஊடகத் துறை ஆகிய மூன்று முக்கிய அமைச்சுக்கள் மீதான கட்டுப்பாட்டை ஒருதலைப்பட்சமாக அபகரித்துக்கொண்டதோடு பாராளுமன்றத்தையும் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தார். அவர் அவசர கால நிலைமைகளை அறிவித்தபோதிலும், விசேடமாக வாஷிங்டன் மற்றும் புது டில்லியில் இருந்து வந்த பலமான சர்வதேச அழுத்தத்தின் காரணமாக கைவிடவேண்டியதாயிற்று. வெளிநாட்டு இராஜதந்திரிகள், உள்ளூர் வர்த்தக அமைப்புக்கள் மற்றும் ஊடகங்களும் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் கூட்டாக செயற்படுமாறு எண்ணற்ற அழுத்தங்களைக் கொடுத்த போதிலும் அரசியல் விட்டுக்கொடுப்பற்ற நிலை தொடர்கிறது. குமாரதுங்கவுக்கும் விக்கிரமசிங்கவுக்கும் கலந்துரையாடலை இரகசியமாக நடத்துவது என்ற ஒரே ஒரு விடயத்தில் மட்டும் உடன்பாடு இருந்தது. இது தயாராகிக் கொண்டிருக்கும் புதிய ஒழுங்குகளின் பிற்போக்குத் தனத்தையும், தமது நோக்கம் தொழிலாளர்கள் ஒடுக்கப்படும் மக்கள் முன்னிலையில் எந்தவகையிலும் பகிரங்கமாக வெளிப்படுத்தப்படுவதையிட்டு அவர்கள் கொண்டுள்ள பீதியையும் அம்பலப்படுத்துகிறது," என டயஸ் தெரிவித்தார். "இலங்கை தொழிலாள வர்க்கம் இந்த நெருக்கடியில் பார்வையாளராக இருக்க முடியாது. தொழிலாளர் வர்க்கம், தம்மை அதிகரித்து வரும் துன்பத்துக்குள் தள்ளிவிடும் முதாளித்துவ ஆளும் வர்க்கத்திற்கு எதிராக வெகுஜனங்களின் தலைமைத்துவத்தைப் பெறும் ஒரு வரலாற்று நிகழ்வாக சுயாதீனமாக தலையீடு செய்வதற்கு வழி தேட வேண்டும். ஆனால் இந்த வரலாற்றுப் பணியை ஏற்றுக்கொள்வதற்கு தொழிலாள வர்க்கம் மார்க்சிச இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்ட அதன் முன்னைய போராட்டங்களின் மூலோபாயப் படிப்பினைகளால் ஆயுதபாணிகாளாக்கப்படல் வேண்டும்." 1964ல் ல.ச.ச.க வின் காட்டிக் கொடுப்பின் விளைவுகளை தொழிலாளர்கள் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். ல.ச.ச.க ட்ரொட்ஸ்கிசத்தின் அடிப்படை மூலங்களைக் கைவிட்டு குமாரதுங்கவின் தாயாரான சிறிமா பண்டாநாயக்கவின் முதலாளித்துவ அரசாங்கத்தினுள் நுளைந்து கொண்டது. ல.ச.ச.க வின் நடவடிக்கையானது இனவாத அரசியலை அடிப்படையாகக் கொண்ட ரடிகல்வாத குட்டி முதலாளித்துவ இயக்கங்கள் தோன்றுவதற்கு நேரடியாக வழியமைத்தது. தெற்கில் சிங்கள இளைஞர்களுக்கு மத்தியில் ஜே.வி.பி தோன்றியது. வடக்கில், வளர்ச்சி கண்டுவந்த தமிழர் விரோத வேறுபாடுகளால் உருவான அதிருப்தியை சுரண்டிக்கொண்டு விடுதலைப் புலிகளும் உருவாக்கப்பட்டது," என டயஸ் கூறினார். தொழிலாள வர்க்கம் இரண்டு தசாப்தகால யுத்தத்தைத் திணித்த எல்லா விதத்திலுமான தேசியவாதம் மற்றும் இனவாதத்தையும் முழுமையாக நிராகரிக்க வேண்டும். தற்போதைய தொடர்ச்சியான நெருக்கடி நிலைக்கு முடிவு கட்டுவதில் கொழும்பில் உள்ள அரசியல் நிறுவனம் இலாயக்கற்றுப் போயுள்ளமையானது வெறுமனே முதலாளித்துவ ஆளுமையின் கூர்மையான நெருக்கடி மாத்திரமன்றி தேசிய அரச அமைப்பின் பொறுத்தமின்மையையும் பிரதிபலிக்கின்றது. 1948ல் ஸ்தாபிக்கப்பட்ட பெயரளவிலான சுதந்திர அரசானது யுத்தத்திற்கு பிந்திய அபிவிருத்திகளின் அசாதாரணமான நிலைமைகளிலும் தேசிய ரீதியில் பாதுகாக்கப்பட்ட பொருளாதாரத்தின் மட்டுப்படுத்தப்பட்ட விரிவாக்கத்திலும் தங்கியிருந்தது. பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்தியின் அபிவிருத்தியானது இலங்கையிலும் உலகம் பூராவும் தேசிய பொருளாதார ஒழுங்குகளின் மூலங்களை முழுமையாக கீழறுத்துவிட்டது. டயஸ் தொழிலாளர் வர்க்கத்துக்கான ஒரு வேலைத் திட்டத்தைப் பற்றி விளக்கும் போது, தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீனமான அரசியல் முன்னோக்கைக் கொண்டிருப்பது அவசியம் என வலியுறுத்தினார். அண்மையில் நாம் தெற்கிலும் அதே போல் வடக்கிலும் தொழிலாளர் வர்க்கத்தின் பல பிரிவினர் போராட்டத்தில் இறங்கியதைக் கண்டோம். இந்த வேலை நிறுத்த இயக்கம் சிங்களத் தமிழ் ஏழை விவசாயிகளின் துடிப்பான ஆதரவையும் பெற்றிருந்தது. ஆனால், தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீனமான அரசியல் தலைமைத்துவத்தை வழங்கும் பணியை நோக்கி எழுச்சி பெறும் வரை, தொழிலாளர்களுக்கும் வறிய வெகுஜனங்களுக்கும் இடையிலான ஒரு புரட்சிகரமான கூட்டணி அமைக்கப்பட முடியாது. "இதன் காரணமாகவே தொழிலாள வர்க்கம் ஏகாதிபத்திய சக்திகளால் ஒழுங்கு செய்யப்படும் கொழும்பு அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதானக் கொடுக்கல் வாங்கல்களை நிராகரிக்கவும் மற்றும் யுத்தத்தை நிறுத்துவதற்குமான முன்நிபந்தனையாக வடக்குக் கிழக்கில் இருந்து இலங்கை இராணுவத்தை வெளியேற்ற அழைப்பு விடுக்கவும் வேண்டும். இந்தக் கொடுக்கல் வாங்கல்களின் பிற்போக்குத் தன்மை, வடக்குக் கிழக்குக்கான ஒரு இடைக்கால நிர்வாக சபைக்கான அரசாங்கத்தினதும் விடுதலைப் புலிகளதும் பிரேரணைகளின் மூலம் தெளிவாகியது. இந்தத் திட்டங்கள் முற்றிலும் இனவாத ரீதியிலானதும் ஜனநாயக விரோதமானதுமாகும்." அவசியமாவது என்னவெனில், சகலவிதமான வேறுபாடுகளைத் தோற்றுவிக்கும் இனவாத சட்டங்கள், ஒடுக்குமுறையான பாராளுமன்ற சட்டங்கள் மற்றும் பிற்போக்கு அரசாங்கங்களுடனான இராணுவ உடன்படிக்கைகளையும் ரத்துச் செய்யும் ஒரு புதிய அரசியலமைப்பை வரைவதற்கான ஒரு அரசியலமைப்புச் சபைக்கான சுதந்திரமான பகிரங்கத் தேர்தலே அன்றி, அரசியல் நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கான இரண்டு முதலாளித்துவக் கட்சிகளுக்கிடையிலான பூசி மெழுகும் நடவடிக்கை அல்ல. "இத்தகைய கோரிக்கைகள், முதலாளித்துவ கொள்ளைக்காரர்களின் இலாப அவசியங்களுக்குகாக அன்றி, தொழிலாள வர்க்கத்தின் சமூகத் தேவைகளுக்காக பொருளாதாரத்தை மீளமைக்கும் கோரிக்கையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். சோசலிச அடிப்படையிலான சமுதாய மாற்றத்தால் மட்டுமே முழு ஜனநாயக உரிமைகளையும் உறுதிப்படுத்த முடியும். சோ.ச.க மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அபிவிருத்தி செய்த முன்நோக்கு இதுவேயாகும். அதாவது இந்தியத் துணைக் கண்ட ஐக்கிய சோசலிச அரசின் ஒரு பாகமாக ஸ்ரீலங்கா ஈழம் சோசலிசக் குடியரசை ஸ்தாபிப்பதாகும்." இறுதியாக இந்த வேலைத் திட்டம் ஒரு அனைத்துலக தொழிலாள வர்க்க முன்நோக்கின் அடிப்படையில் மட்டுமே அடைய முடியும் என டயஸ் விளக்கினார். உலகம் பூராவும் உள்ள தொழிலாளர்களுக்கு அன்றாடம் அரசியல் தலைமையை வழங்கும் உலக சோசலிச வலைத் தளத்திற்கு ஆதரவு கோரியதோடு இலங்கை சோ.ச.க வில் சேரவும் அதைக் கட்டியெழுப்பவும் அழைப்பு விடுத்தார். |