World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : தென் அமெரிக்கா

Kissinger and Argentina: a case study in US support for state terror

கிஸிங்கரும் ஆர்ஜென்டினாவும்: அரசபயங்கரவாத நடவடிக்கைகளுக்கு அமெரிக்க ஆதரவு பற்றிய ஓர் ஆய்வு

By Bill Vann
31 December 2003

Back to screen version

சதாம் ஹூசேன் பிடிக்கப்படுவது தொடர்பாக அமெரிக்க அரசாங்கமும் செய்தி ஊடகமும் பிரச்சாரம் தொடங்கியதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான், பாதுகாப்புக் கருதி கடந்த 27- ஆண்டுகளாக இரகசியம் என்று காப்பாற்றப்பட்டு வந்த பத்திரங்களை அமெரிக்க அரசுத்துறை வெளியிட நேர்ந்தது. சர்வாதிகாரம் மற்றும் பயங்கரவாதம் தொடர்பாக தொடர்ந்து வந்துகொண்டிருந்த அமெரிக்க அரசாங்கங்களின் உண்மையான அணுகுமுறை காட்சிக்குப் புலனாவதை அந்த ஆவணங்கள் காட்டுகின்றன.

1976 அக்டோபரில் அன்றைய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹென்றி கிஸிங்கர் அன்றைய ஆர்ஜென்டினா இராணுவ சர்வாதிகார ஆட்சியின் வெளியுறவு அமைச்சரான அட்மிரல் சீசர் ஒகுஸ்டோ குஸெட்டியுடன் (Cesar Augusto Guzzetti) நடத்திய இரகசிய பேச்சு வார்த்தை பற்றிகுறிப்பிடுகிறது. தகவல் சுதந்திர சட்டப்படி அரசாங்கத்தின் இரகசிய பதிவேடுகளை பெற்று பொதுமக்களுக்கு தகவலாகத் தருகின்ற பணிகளை மேற்கொண்டுள்ள அரசு சாராத ஆராய்ச்சி நிறுவனமான தேசிய ஆவணகாப்பகத்தால் இப்பதிவேடுகள் டிசம்பர் 4-ம் தேதி வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்பட்டன. [http://www.gwu.edu/~nsarchiv/NSAEBB/NSAEBB104/index.htm]

முக்கியமான பத்திரமான "கலந்துரையாடலின் அறிக்கை" -அரசுத்துறை பரிபாஷையில் "மென்கான்" என்று குறிக்கப்பட்டது- மத்திய கிழக்கு தொடர்பாக ஐ.நா-வில் நடைபெற்ற விவாதங்களில் அன்றைய தினம் அமெரிக்க அரசுத்துறை செயலாளர் பங்கெடுத்துக்கொண்டாரா என்பது பற்றி நியூயோர்க் நகரில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் கிஸிங்கருக்கும் குஸெட்டிக்கும் இடையிலான, இதுவரை இரகசியமெனக் கருதப்பட்ட கலந்துரையாடல் பதிவு செய்யப்பட்டது.

அப்போது Guzzetti, ஆர்ஜென்டினா இராணுவ ஆட்சி அந்நாட்டு தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் அறிவுஜீவிகளுக்கு எதிராக மேற்கொண்டுவரும் ''கறைபடிந்த போர்'' பற்றிய ஒரு முன்னேற்றகரமான அறிக்கையை கிஸிங்கருக்கு கொடுத்தார்:

''கடந்த 4 மாதங்களில் எங்களது போராட்டம் நல்ல பயனைத்தந்தது,'' என அவர் குறிப்பிட்டார். ''பயங்கரவாத அமைப்புகள் கலைக்கப்பட்டுவிட்டன. இந்த நடவடிக்கை நீடிக்குமானால், இந்த ஆண்டு முடிவில் ஆபத்தை ஒழித்துக்கட்டிவிட முடியும்.''

உண்மையிலேயே, அந்த நாட்டு சர்வாதிகாரம் அந்தக் காலக்கட்டத்தில் ஏவி விட்ட ஒடுக்குமுறை நடவடிக்கைகள் உச்சக்கட்டத்தை எட்டியிருந்தன. பரந்த மக்கள் படுகொலை, ''காணாமல் போனவர்கள்'' மற்றும் சித்ரவதை சம்பவங்கள் பல ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்தது, 30,000 ஆர்ஜென்டினியர்கள் கொல்லப்பட்டதாக கூறுகிறது.

ஆர்ஜென்டினா மக்கள் மீது ஏவி விடப்பட்ட காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறைகள் குறித்தும் அந்நாட்டில் "பயங்கரவாதத்தின்" உண்மையான இயல்பு குறித்தும் அமெரிக்க அரசாங்கம் நன்கு அறிந்திருந்தது. ஆர்ஜென்டினிய சர்வாதிகாரத்தின் முதல் ஆறுமாதங்கள் பற்றிய அரசுத்துறையின் மதிப்பீட்டு அறிக்கை கிஸிங்கர்-குஸெட்டியின் சந்திப்புக்கு ஒரு வாரத்திற்கு முன்னர்தான் வழங்கப்பட்டது. அது பின்வருவனவற்றை உள்ளடக்கியுள்ளது:

''எதிர் பயங்கர நடவடிக்கைகளில் மிகவும் கவனிக்கத்தக்க அம்சம் சட்டத்திற்கு புறம்பாக இயங்கும் வலதுசாரி குண்டர் குழுக்கள் ஈடுபட்டதாகும். அவர்களுக்கு எந்தக்கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாக இயங்கிய அவர்கள் பாதுகாப்பு அதிகாரிகளைப்போல் காட்டிக் கொண்டு பயங்கரச் செயல்களில் ஈடுபட்டனர். ஆபத்தானவர்கள் என்று கருதப்பட்ட நூற்றுக்கணக்கான 'பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கும் இடதுசாரி' நபர்களை கடத்திச் செல்வது மற்றும் கொலை செய்வதற்கு வலதுசாரிகள் பொறுப்பாக இருந்தார்கள். இவர்களுள் வெளிநாட்டைச்சேர்ந்தவர்கள் பக்கத்து நாட்டைச் சேர்ந்த அரசியல் ரீதியாய் புலம் பெயர்ந்தவர்கள், அரசியல்வாதிகள், மாணவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மதகுருமார்கள் ஆகியோரும் அடங்குவர். இத்தகைய வலதுசாரிகளின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு சில உண்மையான பயங்கரவாதிகளும் இலக்காயிருக்கக் கூடும். ஆனால் பாதிக்கப்பட்டவர்களில் மிகப்பெரும்பாலோர் கொரில்லாக்கள் அல்லர், வலதுசாரி பயங்கரவாதிகளில் எல்லோருமே போலீஸ் அல்லது இராணுவ வீரர்கள் என்று சொல்லமுடியாவிட்டாலும் மிகப்பெரும்பாலோர் அவர்கள் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. உயர்மட்ட பாதுகாப்பு மற்றும் நிர்வாக அதிகாரிகளின் வழிகாட்டுதல்மூலம் அல்லது அவர்களுக்கு தெரிந்தே இத்தகைய கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றன என்பது அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கையில் காணப்படுகிறது.

கிஸிங்கருக்கு தாக்கல் செய்யப்பட்ட இதர அறிக்கைகளில் அரசியல் குற்றம் சாட்டுக்களின்பேரில் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட அமெரிக்க குடிமக்களின் வாக்குமூலமும் அடங்கியிருந்தன. அத்தகைய ஆவணங்களில் ஒன்று அமெரிக்க குடிமகளான கிவென்டா லோக்கன் லோபஸ் (Gwenda Loken Lopez) சித்ரவதை செய்யப்பட்டது தொடர்பாக சுட்டிக்காட்டுகிறது. 1976ல் ஏப்பிரலில் பாதுகாப்பு படைகள் பேருந்தில் இருந்த அந்த அமெரிக்கப் பெண்ணை இழுத்து வந்தார்கள். ஒரு பூங்காவில் அமர்ந்து அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய அறிக்கைகளை அவர் பொது மக்களுக்கு விநியோகம் செய்திருந்தார். அவர் சித்ரவதைகளுக்கு பின் அமெரிக்கா திரும்பி, ஆர்ஜென்டினா நாட்டு ரகசிய போலீசாரின் SIDE சித்ரவதைகளை பற்றி விவரித்திரிக்கிறார்.

''என் கண்ணை கட்டிவிட்டார்கள், எனது கைகளையும் கட்டி சுவர் ஓரம் நிறுத்தினார்கள். ஒரு மின்சார கருவி என் கையைத் தொட்டது. நான் தரையில் விழுந்தேன். என்னுடைய உடைகளை அவிழ்த்துவிட்டார்கள். பிறகு நான் நினைக்கிறேன் மேஜைக்கு கிழே விழுந்திருந்தபொழுது நான்கு ஐந்து நபர்கள் இருந்தனர். அவர்கள் மின்சார அதிர்ச்சி கொடுத்தார்கள். அவர்கள் என்னை கட்டி விட்டு தண்ணீரை என்மீது வீசினார்கள், என்னிடம் பல கேள்விகளைக் கேட்டனர் அது சம்பிரதாயத்திற்காக அதற்கு பின்னர் அவர்கள் என்னை கற்பழித்தார்கள்''

அவர் இன்னொரு பெண் அதே அறையில் நிர்வாணமாக தலைகீழாக தொங்கவிட்டது பற்றியும் திரும்பத்திரும்ப மின்சார அதிர்ச்சிகள் தரப்பட்டது குறித்தும் தகவல் தந்தார். அந்தப் பெண்ணின் உடலை சிகரெட் நெருப்பால் சுட்டார்கள் மற்றும் அவரது பெண்உறுப்பின் மயிர்களைப் பிடித்து இழுத்தார்கள். அந்தப்பெண் எந்த அரசியல் அமைப்பிலும் உறுப்பினர் கிடையாது. போலீசார் திடீர் சோதனை நடத்தியபொழுது அங்கு காணப்பட்டார் என்பதற்காக அவர் கைது செய்யப்பட்டார்.

லோக்கன் லோப்பஸ் விவகாரம் இரண்டு அம்சங்களில் வழக்கத்திற்கு எதிர்மாறானது. அவர் அமெரிக்க குடிமகள், உயிர் தப்பி வந்திருக்கிறார். அதே காலக்கட்டத்தில் இராணுவ குழுக்கள் பல்லாயிர மக்களை கைது செய்து இரகசிய முகாம்களில் போதையூட்டி, சித்திரவதை செய்து, இராணுவ விமானத்தில் ஏற்றி கடலில் தூக்கி எறிந்திருக்கின்றனர்.

இது போன்ற பயங்கரமான நடவடிக்கைகளை இராணுவ ஆட்சி தொடருமாறு கிஸிங்கர் வெளிப்படையாக ''பச்சைக் கொடி'' காட்டியுள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறை மெமோன் பதிவுகளில் ஆர்ஜென்டினா அட்மிரலிடம் அவர் குறிப்பிட்டதாவது:

''நீங்கள் வெற்றிபெறவேண்டும் என்பதுதான் எங்களது அடிப்படை அணுகுமுறை. நண்பர்கள் ஆதரிக்கப்பட வேண்டும் என்பதில் நான் பழமையான கருத்துடையவன். உங்கள் நாட்டில் உள்நாட்டுப்போரை நீங்கள் சந்தித்து வருகிறீர்கள் என்பது அமெரிக்காவில் புரிந்து கொள்ளப்படவில்லை. நாங்கள் மனித உரிமைப் பிரச்சினை பற்றி படித்துள்ளோம் ஆனால் உள்ளடக்கத்தை அல்ல. எவ்வளவு விரைவாக வெற்றிபெறுவீர்களோ அந்த அளவிற்கு நல்லது... மனித உரிமைகள் பிரச்சினை வளர்ந்து வருகின்ற ஒன்று. உங்களது தூதர் அதைப்பற்றி உங்களுக்கு தெரிவிப்பார். நிலையான சூழ்நிலையை நாங்கள் விரும்புகிறோம். உங்களுக்கு அவசியமற்ற சங்கடங்களை கொடுக்கமாட்டோம். காங்கிரஸ் மீண்டும் தனது கூட்டத் தொடரை தொடங்கும் முன்பு நீங்கள் உங்களது பணிகளை முடித்துக்கொள்வது நல்லது. நீங்கள் மீட்டுத்தருகின்ற சுதந்திர உரிமைகள் எதுவாகயிருந்தாலும் அது உதவும்''

இவ்வாறு கிஸிங்கர் தெளிவாக பிரகடனம் செய்தவாறு, நிர்வாகத்தின் முக்கிய பிரச்சினைகளுள் ஒன்று ஆர்ஜென்டினிய சர்வாதிகாரம் மனித நேயத்திற்கு எதிராக புரிந்த குற்றங்களுக்காக காங்கிரஸ் பொருளாதார தடை சட்டங்களை இயற்றும், அதன்மூலம் ஆட்சிக்கு புதிதாக அமெரிக்க நிதிய கடன்கள் கிடைப்பதற்கு வழியில்லாமல் போய்விடும் என்பதாகும்.

அப்போது அவரிடம் ஆர்ஜென்டினா இராணுவ குழு உடனடியாக அமெரிக்காவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கியிடம் கடன்களை பெறுவதற்கு முயலவேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார். அப்போது ஆர்ஜென்டினா அதிகாரியிடம் உங்களது ''பொருளாதார முன்னேற்றம் முன்னேற்றப்பாதையில் செல்லவேண்டும் என்று விரும்புகிறோம் மற்றும் வெற்றிபெற எங்கள் சிறந்த உதவியை வழங்குவோம்'', என்று அவர் குறிப்பிட்டார்.

கார்ட்டர் நிர்வாகம் ஓரளவிற்கு பொருளாதார தடை விதித்திருந்தாலும், ஆர்ஜென்டினாவிற்கு கடன்கள் தொடர்ந்து கிடைத்துக் கொண்டுதான் இருந்தன, அதற்குப் பின்னர் ரொனால்ட் றேகன் அதனை மாற்றினார். இதன் இறுதி விளைவு என்னவென்றால் ஆர்ஜென்டினாவில் ஏழு ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சியின் பொழுது வெளிநாட்டு கடன்கள் ஆறு மடங்கு உயர்ந்தன, அந்த நாடே திவாலானது.

கிஸிங்கர் Waldorf-ல் கூட்டத்தை நடத்துவதற்கு ஒரு நாளைக்கு முன்னர், வாஷிங்டனில் உள்ள இணைச்செயலாளர் சார்லஸ் றொபின்சனிடமிருந்து அதே வகையான ஒரு உறுதிமொழியை குஸெட்டி பெற்றிருந்தார். அப்போது ராபின்சன் நடத்திய உரையாடலைப் பதிவு செய்த ஒரு குறிப்பு பின்வருமாறு விளக்கியது.

''இப்போது ஆர்ஜென்டினாவில் நாசம் விளைவிக்கும் உள்நாட்டுப்போர் நடந்துகொண்டிருக்கிறது. ஆரம்பக்கட்டத்தில் தேவைப்படும் நடவடிக்கைகள் நீண்டகால அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருக்கலாம். முதலில் சற்றுக் கடுமையான நடவடிக்கைகள் தேவைப்படும் காலப்போக்கில் மிக மிதமான நடவடிக்கையை நோக்கி ஆர்ஜென்டினா நகரவேண்டும், அது நிரந்தரமாக இருக்கும் என நாம் நம்புகிறோம்.... பிரச்சினை என்னவெனில் அமெரிக்கா இலட்சிய மனப்பான்மை கொண்ட மற்றும் தார்மீக நெறி உடைய நாடு மற்றும் அதன் குடிமக்கள் ஆர்ஜென்டினா இன்று எதிர்கொள்கிற பிரச்சினையின் வகைகளைப் புரிந்துகொள்வதில் பெரும் கஷ்டத்தைக் கொண்டிருக்கின்றனர்."

றொபின்சன் அதற்கு பின்னர் தனது குறிப்பில் வலதுசாரி கொலை வெறிக்கும்பல்களுக்கு ஆதரவு கொடுக்கின்ற வகையில் எழுதியிருந்தார். இந்த கடிதக் குறிப்பு தொடர்கிறது:

''1850-ம் ஆண்டு கலிஃபோர்னியா மாகாணம் நிலைநாட்டப்படுவதற்கு போராடிக்கொண்டிருந்த நேரத்தில் மாகாணத்தின் சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதற்கான உத்தியோக ரீதியான படைகள் போதுமானதாகயில்லை. எனவே பொது மக்களே விழிப்புணர்வுக் குழுக்களை அமைத்தனர், ஆனால், அமெரிக்க வரலாற்றில் நடந்த சிறிய சம்பவத்தை அமெரிக்க மக்கள் மறந்துவிட்டனர். இன்றைய தினம் உலகின் இதர பகுதிகளிலும் அன்றைய நிலையுடன் ஒப்பிடக்கூடிய நிலைகள் உள்ளன என்பதை மறக்கின்றனர்.''

கொலைப் படை தொடர்பான றொபின்சன் அணுகுமுறை குஸெட்டியிடமே எதிரொலித்தது, தனது அமெரிக்க விஜயத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் மிகவும் அதிர்ச்சி தரத்தக்கவகையில் பகிரங்கமாக வெளிப்படுத்தினார். "நாசவேலைப்பற்றிய எனது கருத்துரு இடதுசாரி பயங்கரவாத இயக்கங்களைக் குறிக்கும்" என்றார் ஆர்ஜென்டனிய வெளிவிவகார அமைச்சர். நாசவேலையும், பயங்கரவாதமும் வலதுசாரிகள் அணிகள் மூலம் உருவாவது இடதுசாரி நடவடிக்கை போன்றதல்ல. நாட்டின் சமூக அங்கம் செல்லரிக்கின்ற நோயால் தொற்றுகின்றபோது அது நோயை எதிர்க்கின்ற கிருமிகளை உருவாக்குகின்றது. இந்த நோய் தடுப்புக் கிருமிகளை நோய்க்கிருமிகளோடு ஒப்பிடமுடியாது."

அப்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் றொபின்சனுடன் கலந்து கொண்ட மற்றொரு அமெரிக்க அரசுத்துறை அதிகாரி ஒரு பயனுள்ள ஆலோசனையை சொன்னார். சர்வாதிகார ஒடுக்குமுறையில் கைதாகும் பாதிரிமார்கள், கன்னிகாஸ்திரிகள் விஷயத்தில் "அவர்கள் சாதாரணமாய் 'காணாமல்' போய்விடுகிற நிலை ஏற்பட்டுவிடக்கூடாது", மாறாக அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்கள் மூலம் விசாரணை செய்யப்படவேண்டும்."

இதன் உள்ளார்ந்த செய்தி என்னவெனில், ஆயிரக்கணக்கான போர்க்குணமிக்க தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் பிறர்காணாமற்போனது ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருந்தது.

வாஷிங்டன் கொள்கைகளுக்காக வக்காலத்து வாங்கும் சிலர், புராதன வரலாற்றில் போன்று உலகின் மிகக் கொடூரமான சர்வாதிகாரத்துள் ஒன்றினால் அமெரிக்க ஆதரவு வெகுஜனப் படுகொலை மற்றும் அரச பயங்கரவாதம் பற்றிய இந்த மறுக்கமுடியாத சான்றை- கடந்து போன நிர்வாகத்தின் நீண்டகாலமாய் மறந்துபோன நடவடிக்கைகள் என தள்ளிவிடுவர் என்பதில் ஐயமில்லை.

ஆயினும், குற்ம்சாட்டப்பட்டவர் பிறிதோரிடத்தில் இருந்தார் என்ற வாதம், அந்நபர் 1976க்கும் தற்போதைய நிர்வாகத்திற்கும் இடையில் குறிப்பிடத்தக்க தொடர்ச்சியைக் கொண்டிருக்கிறார் என்பதை எடுத்துக் கொள்கையில், ஏற்றுக்கொள்ள முடியாதது. 2001 செப்டம்பர் 11-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கு ஜோர்ஜ் டபுள்யூ. புஷ் முதலில் நியமித்த விசாரணைக் குழுவின் தலைவர் கிஸிங்கர்தான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். அவர்தான் இன்றைக்கும் அமெரிக்காவின் ஆட்சி நிர்வாகத்திற்கு மூத்த ஆலோசகராக பணியாற்றி வருகிறார். துணை ஜனாதிபதி ரிச்சர்ட் செனி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பெல்ட் ஆகியோருக்கு அரசியல் ஆசான் அவர்தான். தற்போதைய புஷ் நிர்வாகத்தில் உள்ள இந்த இரண்டு முன்னனி நபர்களுமே, அர்ஜென்டினா, சிலி, மற்றும் லத்தீன் அமெரிக்காவின் இதர நாடுகளில் அமெரிக்க அரசாங்கம் படுகொலைகளை ஊட்டி வளர்த்தபோது, அக்கால கட்டத்தில் வெள்ளை மாளிகை தலைமை நிர்வாகக் குழுவில் பல்வேறு சமயங்களில் பணியாற்றி வந்தவர்கள்தான்.

இன்றைய ஜனாதிபதியின் தந்தையான புஷ் அப்போது CIA இயக்குநராக பணியாற்றி வந்தார். அந்தக் காலக்கட்டத்தில்தான் கிஸிங்கரும் குஸெட்டியும் சந்தித்து பேசினார்கள். அப்போது ஆர்ஜென்டினாவின் இராணுவம், மக்களை கொன்று குவித்ததன் முழு விபரங்கள் நெருக்கமான வகையில் அவர் நன்றாகவே அறிந்து வைத்திருந்தார்.

கிஸிங்கரும் அமெரிக்க அரசாங்கமும் ஆர்ஜென்டினா நாட்டில் பல்லாயிரக்கணக்கான குடிமக்கள் படுகொலை செய்யப்படுவதை வெளிப்படையாய் ஆதரித்து நின்றார்கள் என்பதை நிரூபிக்கும் உரையின் முக்கியத்துவம் ஒரு புறம் இருக்க, தேசிய பாதுகாப்பு ஆவணக்காப்பகத்தால் வெளியே கொண்டுவரப்பட்ட இப்பத்திரம் மற்றொரு வரலாற்று சர்ச்சையையும் வெளிச்சம் போட்டுக்காட்டுவதாக அமைந்திருக்கின்றது- சதாம் ஹூசேன் பிடிக்கப்பட்டது தொடர்பாக புஷ் நிர்வாகத்தை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கும் பிரச்சினையை நோக்கித் திரும்பும் வகையில் அச்சுறுத்துகிறது.

நெருக்கமான உறவுகளை உருவாக்கும்பொருட்டு சதாம் ஹூசேனையும் அவரது வெளியுறவு அமைச்சர் தாரிக் அசிசையும் சந்திக்க 1983 கடைசியிலும் மற்றும் 1984 தொடக்கத்திலும் டொனால்ட் ரம்ஸ்பெல்ட் பாக்தாத்திற்கு இரண்டு முறை பயணம் செய்திருக்கிறார். அந்தக்காலகட்டத்தில் தான் ஈராக், ஈரானுக்கு எதிரான போரில் நச்சுவாயுவை பயன்படுத்தியது, அது ஈராக்கிற்கு எதிராக சர்வதேச அளவில் கண்டனங்களை எழுப்பியது. 1984 மார்ச் மாதம் வாஷிங்டன் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்துவதை பகிரங்கமாக கண்டித்தது. அதே நேரத்தில் சதாம் ஹூசேன் ஆட்சிக்கு தனது மூலோபாய ஆதரவை நிலைநாட்டும் வகையிலும் அறிக்கை வெளியிட்டது மற்றும் மோதலுக்கு ஈரான்தான் காரணம் என பழிபோட்டது.

அந்த மாதம் பாக்தாத்திற்கு ரம்ஸ்பெல்ட் இரண்டாவது முறையாக திரும்பியபோது அமெரிக்க அரசுத்துறையால் அவர், "இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதற்காக ஈராக் மீதான எமது கண்டனத்தால் இருதரப்பு உறவுகள் கடுமையாக பின்னடைவிற்கு ஆளாகி உள்ளன" என எச்சரிக்கப்பட்டார். அதே நேரத்தில் அமெரிக்காவின் பொருளாதார நலன்களை மேம்படுத்துகின்ற வகையில், ஈராக் ஆட்சி அமெரிக்காவின் கடன்களை பெற்று மற்றும் ஏற்றுமதி இறக்குமதி வங்கியிலிருந்து கடனை வாங்கி, வாஷிங்டன் உடன் ஒப்பந்தம் செய்து கொண்டு புதிய எண்ணெய் குழாய் இணைப்புகளை உருவாக்க ஈராக் ஆட்சியை இணங்கச்செய்ய முயற்சிக்க வேண்டும் என அவருக்கு வலியுறுத்தப்பட்டது.

ரம்ஸ்பெல்ட் 1983 டிசம்பரில் சதாம் ஹூசேனுடன் நடத்திய முதல் சுற்று பேச்சுவார்த்தைகள் தொடர்பான குறிப்புகள் இப்போது வெளியிடப்பட்டிருக்கின்றன. அந்தக் குறிப்புகளில் ஈராக் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தி வருவதாக எந்த குறிப்பும் இல்லை. கிசிங்கர்-குஸெட்டி சந்திப்பு பற்றிய "கலந்துரையாடல் குறிப்பு" வகையிலான, ஈராக் தலைவருடனான ரம்ஸ்பெல்டின் இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தைகள் தொடர்பான விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஈராக்கின் விஷவாயு யுதத்தை சம்பிரதாய முறையில் வாஷிங்டன் கண்டித்த பின்னர்தான், இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்ஜென்டினா சர்வாதிகாரம் தொடர்பாக கிஸிங்கர் கடைப்பிடித்த நடைமுறைகள் போன்றுதான் ரம்ஸ்பெல்ட் ஈராக் சர்வாதிகாரம் தொடர்பாகவும் அணுகுமுறையை மேற்கொண்டிருந்தார். அதன் பொருள் என்னவென்றால் பொதுமக்கள் ஏற்றுக்கொள்வதற்காக மட்டுமே கண்டனம் செய்கிறோம், பாக்தாத் வாஷிங்டனை நம்பி செயல்படலாம் என்பதுதான்.

தனது மூலோபாய அக்கறைகளையும் கூலிக்கு செயல்படும் போக்கையும் மறைக்கும் முகமூடி அணிந்து கொண்டு, ஆர்ஜென்டினாவிலும் ஈராக்கிலும் மனித உரிமைகள் பற்றியும் சர்வாதிகாரம் தொடர்பாகவும் பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்தும் வாஷிங்டன் போலியாக அக்கறை கொண்டுள்ளது. இரண்டு நாடுகளிலுமே உழைக்கும் மக்களுக்கு அமெரிக்காவின் கொள்கை பெருமளவில் துயரத்தைத்தான் உருவாக்கி இருக்கின்றன.

மனித இனத்திற்கு எதிராக குற்றங்களை புரிந்தார் என்பதற்காக சதாம் ஹூசேன் மீது விசாரணை நடத்துவதற்கான ஆலோசனை தொடர்ந்து நடைப்பெற்று வந்தாலும், ஹென்றி கிசிங்கர், டோனால்ட் ரம்ஸ்பெல்ட், ரிச்சர்ட் செனி, மூத்த ஜோர்ஜ் புஷ் மற்றும் அவரது புதல்வர் இன்றைய ஜனாதிபதி ஆகியோரையும் சதாம் ஹூசேனுடன் கைதி கூண்டில் நிறுத்தி விசாரணை நடத்துவத்தற்கு தேவைப்படும் அளவிற்கு மேல் சான்றுகள் கிடைத்திருக்கின்றன.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved