World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா
ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியலமைப்பு பற்றிய உடன்பாட்டை தேசிய பதட்டங்கள் மூழ்கடிக்கின்றன By Chris Marsden புருஸ்சல்ஸ் உச்சிமாநாட்டில், ஐரோப்பியத் தலைவர்கள் ஓர் அரசியலமைப்பிற்காக உடன்பாடு காணமுடியாதுபோன தோல்வி, ஐரோப்பாவில் அரசியல் சிதைவை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கான அரசியலமைப்பினை ஏற்றால், அது தெளிவான பொருளாதார, அரசியல் ஒருங்கிணைப்பிற்கு வழிவகுக்கும் என்று, அதன் உறுப்பினர்கள் எண்ணிக்கை 10-லிருந்து 25 ஆக, மே மாதம் விரிவாக்கப்படுமுன் கருதப்பட்டது. மாறாக, அந்தந்த நாடுகளுக்கு வாக்களிக்கும் உரிமைகள் வழங்கப்படுவதில் திட்டமிடப்பட்ட மாறுதல்களினால் பேச்சு வார்த்தைகளே முறிந்து விட்டன. பிரான்சும், ஜேர்மனியும் தங்களுடைய தேவையான புதிய "இரட்டைப் பெரும்பான்மை" என்ற வாக்களிக்கும்முறையின் கோரிக்கையை, அதையொட்டி கூடுதலான மக்கள் தொகை இருக்கும் நாடுகளுக்கு அதிக வலிமை கொடுக்கக் கூடிய கோரிக்கையைக் கைவிட மறுத்துவிட்டன. ஒவ்வொரு நாட்டிற்கும் கிட்டத்திட்ட சம அளவு வாக்கு இருக்கும், தற்பொழுதைய முறையைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று போலந்தும், ஸ்பெயினும் வலியுறுத்தியுள்ளன. நீஸ் இல் 2000ம் ஆண்டு உடன்பாடு கொள்ளப்பட்டு 2009 வரை நடைமுறையிலிருக்கும் ஒப்பந்தப்படி, போலந்தும், ஸ்பெயினும், விரிவுபடுத்தப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தில் கனம் கொடுக்கப்பட்ட அல்லது தகுதிப் பெரும்பான்மை என்ற முறையின்படி தலா 27 வாக்குகளை பெறுகின்றன. ஜேர்மனி தன்னிடம் 80 மில்லியன் மக்கள் இருந்தபோதிலும், கூட்டாகப் போலந்தும் ஸ்பெயினும் கொண்டுள்ள 54 வாக்குகள் மூலம் அவைகளும் 80 மில்லியன் மக்களைக் கூட்டாகக் கொண்டிருந்தாலும், தன்னை வாக்குகள் மூலம் வீழ்த்திவிட முடியும் என்று வாதிடுகிறது. இத்தாலியின் சில்வியோ பெர்லுஸ்கோனி, சுழற்சிமுறையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் என்ற முறையில், இந்தச் சிக்கலைத் தீர்க்கும் முயற்சியாக நான்கு மாற்றுத்திட்டங்களை அளித்தும்கூட, எந்தப்பலனும் தோன்றவில்லை. பேச்சுவார்த்தைகள் முறிந்ததற்கு, விரோதம் அதிகமாகப்போன காரணம் உண்மையில் மக்கள்தொகைபற்றியும், வாக்கெடுப்புப் பற்றியவையும் அல்ல. ஜேர்மனியும், பிரான்சும், தங்களுடைய பொருளாதார வலிமையைப் பிரதிபலிக்கக் கூடிய தன்மை, விரிவாக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்துள் இருந்து, தங்கள் மேலாதிக்கம் அதற்குள் பாதுகாப்பாக தக்க வைக்கப்பட வேண்டும் என்ற விதத்தில் அரசியலலைமைப்புத் திருத்தங்கள் ஏற்கப்படவேண்டும் என்ற கோரிக்கைக்காக இந்தப் பிரச்சினையைப் பயன்படுத்தின. ஐரோப்பிய ஒன்றியத்திற்குள், புதிய வினாக்களான பொது வேளாண்மைக் கொள்கை, வரவுசெலவுத்திட்டத்தில் கட்டுப்பாடுகள் விதித்தல், பொது அயலுறவு, இராணுவக்கொள்கைகைள் கடைபிடிக்கப்படுதல் ஆகியவை வரும்போது, நிறைய புதிய உறுப்பினர்கள் சேர்வது அரசியல் முடக்கத்திற்கு வழியாகிவிடக்கூடாது என்பதைப் பற்றியும் கவலையிலிருந்தன. இந்த இலக்கைக்கருத்திற் கொண்டு, 105 உறுப்பினர்களைக் கொண்டு, பழைய பிரெஞ்சு ஜனாதிபதி Valery Giscard D'Estang தலைமையிலான மாநாடு ஒன்றில் தயாரிக்கப்பட்ட, முன்மொழியப்பட்ட அரசியலமைப்பில், "இரட்டை வாக்குமுறை" யின்படி ஒரு வாக்கெடுப்பின் வெற்றிக்கு 50 சதவீத நாடுகளின் ஆதரவு, ஐரோப்பிய ஒன்றியத்தின் மக்கட்தொகையில் 60 சதவீதத்திற்கும் மேலாகப் பிரதிபலிக்கப்பட்டால், அது ஏற்கப்பட்டுவிடும் என்று கூறப்பட்டுள்ளது. பிரிட்டனுடைய பிரதம மந்திரி, டோனி பிளேயர், இன்னும் கூடுதலான நிலையற்ற நிலைப்பாட்டைக் கொண்டார். ஜூன் மாதம் எம்.பி.க்களுக்கு QMV (qualified majority voting) வரம்பிற்குட்பட்ட பெரும்பான்மை வாக்கெடுப்பு பற்றிப் பேசுகையில், அவர் விளக்கினார்;" நாம் பொருளாதாரச் சீர்திருத்தத்தை உந்தி முன்னேற்ற வேண்டுமென்றால், சந்தைகளைத் தாராளமாக்க வேண்டுமென்றால், உதவித்தொகைகளைத் தகர்க்க வேண்டுமென்றால், பின், ஐரோப்பாவில் 25 QMV க்களைக் கொண்டு, பணிகளில் வியாபாரம், ஒருவருக்கொருவர் தகுதிகளை அறிதல் ஆகியவை, பிரிட்டிஸ் தேசிய நலனுக்கு இன்றியமையாதவை ஆகும். ஆனால் பிளேயர், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் ஜேர்மனி-பிரான்சின் ஆதிக்கம் இணைந்துவிடாமல் தடுக்கத் தான் உறுதிகொண்டுள்ளதாகவும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளான போலந்து போன்றவை, புதிதாக ஐரோப்பிய ஒன்றியத்தில் நுழைவது, அவருக்கு இச்செயற்பட்டியலைத் தொடர நட்பு நாடுகளாக இருக்கும் என்பதையும் கூறியிருந்தார். பாராளுமன்றத்தில் அவர் கூறியதாவது: "ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரவுள்ள புதிய நாடுகள், பலவிதங்களில், பிரிட்டிஷ் முன்னோக்கைத்தான் கொண்டுள்ளன. அவை அட்லாண்ட்டிக் கடந்த உறவுகளுக்கு ஆதரவில் உறுதியாக உள்ளன.... எனவே இம்மாநாடு ஐரோப்பியக் கூட்டு உயர் அரசு கருத்தை வெளிப்படையாகப் புறக்கணித்துவிட்டது ஆச்சரியப்படத்தக்கது அல்ல.'' இதன் விளைவாக, பிளேயர், போலந்து, ஸ்பெயின் இவற்றுடன் வெளிப்படையாகத் தோழமை கொள்ளாமல், அவர்களுடைய கருத்துக்கள் மதிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்திய புருசல்ஸில் ஓர் இரட்டை விளையாட்டைக் கொண்டார். அவரும் அவருடைய வெளியுறவு அமைச்சர் ஜாக் ஸ்ட்ரோவும், 2009 வரை முடிவெடுப்பதற்கு கால அவகாசம் ஒத்திவைக்கப்படலாம் என்றும், இல்லாவிடில், தவறான முடிவிற்குப் பதிலாக, முடிவே எடுக்காதது நல்லதுதான் என்றும் குறிப்பிட்டனர். திட்டமிடப்பட்டுள்ள அரசியல் அமைப்பை ஏற்பதில், ஆவணம் ஒரு தெளிவான பொருளாதார, அரசியல் ஆற்றலை உருவைக் கொள்ளுவதில், ஐரோப்பிய சக்திகளின் மாறுபட்ட தேசிய நலன்களுக்கு எதிரான தன்மையினால், கஷ்டத்திற்கு உள்ளாயிற்று. ஐரோப்பாவிற்குள், தேசிய விரோதங்களின் வெடிப்பு தோன்றுவதற்குப்பல நீண்டகாலக் காரணங்கள் உள்ளன. அதன் துவக்கத்திலிருந்தே, ஐரோப்பிய ஒன்றியம், கண்டத்தின் விவாதத்திற்கிடமில்லாத பொருளாதார ஆற்றல் நிலையமான ஜேர்மனியினாலும், அதன் உற்ற அரசியல் தோழமை நாடான பிரான்சுடன், வழிநடத்தப்பட்டு வருகிறது. உதாரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்தச் செலவில் நான்கில் ஒரு பங்கினை பேர்லின் முழுமையாக ஏற்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின்மீது ஜேர்மனியின் ஆதிக்கம் அதிகமிருக்கும் என்ற பயங்கள், போலந்து போன்ற ஐரோப்பியச் சிறுநாடுகளில் எப்பொழுதுமே இருந்திருக்கின்றன. பிரிட்டிஷ் முதலாளித்துவத்தின் ஐரோப்பியத் திட்டத்திற்கு எதிரான போக்கையும், இதே அச்சம்தான் உருவாக்கியுள்ளது. 1970களில் பொதுச் சந்தையில் அது நுழைந்திருந்ததிலிருந்தே, வாஷிங்டனுடைய நட்பில் குளிர்காய்ந்த லண்டனின் கொள்கை, "பிரான்ஸ்-ஜெர்மனிய அச்சு" என்ற கருத்திற்கு எதிரான உள்விரோதத்தைத்தான் கொண்டிருக்கிறது. ஆனால் இதை நேரடியான மோதுதலுக்கு வெளிப்படுத்திய காரணம், புஷ் நிர்வாகத்தின் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடைய பூகோள நலன்களில் ஆக்கிரோஷமான உறுதிபூண்டிருப்பதும், இதுகாறும் ஆதரித்து வந்திருந்த ஐரோப்பிய ஒற்றுமைத்திட்டத்திற்கு வாஷிங்டன் வளர்த்துக்கொண்டு வரும் விரோதப் போக்குத்தான். அரசியலமைப்பின் நோக்கங்களும், விதிகளும் 250-பக்கம், 465 விதிகள் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியலமைப்பு வரைவு, ஏற்கனவை 70 திருத்தங்களைக் கொண்டுள்ளதோடு, ஜனநாயக, மனித உரிமைகள்பற்றி, அதன் பங்கிற்கான மிகைக் கருத்துக்களையும் பெற்றுள்ளுது. ஆனால், இதன் செயல்பட்டியல்படி, பெரிய ஐரோப்பிய நாடுகள் இதை ஒரு வலிமைமிகுந்த, பொருளாதார, அரசியல், இராணுவ சக்தியாக அமெரிக்காவுடன் போட்டியிடும் திறனுடையாதகக் காட்ட முற்பட்டுள்ளன. எனவே, இதன் விதிமுறைகள், ஐரோப்பிய அரசுகள் தங்களுடைய பூகோள பேரவாக்களை அடைவதற்காக ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு விரோதமாகவும், அதனது வாழ்க்கைத்தரங்களை அழிப்பதனூடாக, இராணுவவாதத்தை தீவிரமாக்கும் வகையில் செல்கின்றன. அரசியலமைப்பின் வரைவு, "உறுப்பு நாடுகளின்" அரசியலை ஒருங்கிணைக்கவும், அவற்றிற்கிடையே உள்ள உறவுகளை வரையறுக்கவும் முற்படுகிறது. நாடுகளின் உரிமைகள், அவற்றின் "நாட்டளவுப் பணிகள் எனப்படும் இராணுவ, போலீஸ், அடக்குமுறைக் கருவிகள், ஆகியவை, நாட்டின் ஒற்றுமையைக் காத்திடவும், சட்டம், ஒழுங்கு இவற்றைப் பராமரிப்பதும்" என்பதாக விரிவாகக் கூறப்பட்டபின்னரே, குடிமக்களின் பெயரளவு உரிமைகள் பற்றிய விவரங்கள் கூறப்படுகின்றன. உட்பகுதியைப் பொறுத்தவரையில், அரசியலமைப்பு, ஐரோப்பிய ஒன்றியத்தை ஒரு தடையற்ற-வணிகப்பகுதியாக ஒருங்கிணைத்து, பெரிய நிறுவனங்கள் தங்கள் நலன்களுக்காகப் பொருளாதாரச் சமூகக்கொள்கைகளை நடைமுறைக்குக் கொண்டுவரவேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடிய வகையில், விதிமுறைகள் போடப்பட்டுள்ளன. நோக்கத்தின் இலக்குகள்கூட "சுதந்திரம், பாதுகாப்பு, நீதி" ஆகிய கருத்துக்கள் "ஒரு தடையற்ற, சிதைவிற்குட்படாத முறையில் போட்டி இருப்பதைக் காப்பதற்கு" உறுதியளித்துக் காப்பதுடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. "அடிப்படைச் சுதந்திரங்கள்" என்ற தலைப்பில் தடையற்ற "பண்டங்கள், பணிகள், மூலதனம்" ஆகியவை நான்காம் விதியின்கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு "தனிப்பட்ட நிர்வாக அதிகாரம்" யூரோப் பகுதியின் (Euro zone) நிதிக் கொள்கையைப் பொறுத்தவரை கொடுக்கப்பட்டு, பொருளாதார, வேலைவாய்ப்பு, சமூக கொள்கைகள் மீதும் அவற்றின் பங்கு இருக்கவேண்டும் என்று, வரைவு வாதிடுகிறது. இது நலன்புரி சேவைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு எளிதாகி, அதன்மூலம் பெருவணிகத்திற்கு வரிக் குறைப்புக்களும், மற்ற சலுகைகளும் கொடுப்பதற்கு அரிய வாய்ப்பாகும். சர்வதேச அளவில், அரசியலமைப்பின் வரைவு, ஐரோப்பிய ஒன்றிய சக்திகளுக்கு "அனைத்து அயலுறவுக் கொள்கை, முன்னேற்றமான வகையில் பொதுப் பாதுகாப்புக் கொள்கை இயற்றுதல் உட்பட, ஒன்றியத்தின் பாதுகாப்பு" வழங்கப்பட உள்ளது. பிளேயர் மற்றும் வாஷிங்டனுடைய எதிர்ப்பையும் சமரசப்படுத்த வேண்டும், என்ற முயற்சிகள் இருந்தபோதிலும் கூட, அமெரிக்கா, நேட்டோ இவற்றிலிருந்து விடுபட்டு, ஐரோப்பாவைத் தனியாக இராணுவ சக்தியாக நிறுவும் தெளிவான முயற்சியாக இது இருப்பதுடன், இதன் தனிக் கட்டளைப்பிரிவு பற்றியும், அயலுறவு அமைச்சர் பற்றியும் நிறைய விதிகள் கூறப்பட்டுள்ளன. உச்சிமாநாடு தொடங்கு முன் அமெரிக்கத் தலையீடு தன்னுடைய பூகோள ஆதிக்கத்திற்கு, இத்தகைய நேரடிச் சவாலைப் பொறுத்துக் கொள்ளமுடியாத புஷ் நிர்வாகம், ஜேர்மனி, பிரான்ஸ் இவற்றின் பேரவாக்களைக் குறைக்கும் வகையில் பணிகளைத் தொடங்கியுள்ளது. உச்சிமாநாடு தொடங்குவதற்கு முன், ஈராக்கில் அது மேற்கொண்டுள்ள சட்டவிரோதப் போரை ஆதரிக்காத நாடுகள் அனைத்தும் 18.6 டாலரை பில்லியன் சீரமைப்பு ஒப்பந்தங்களில் பங்கு பெறமுடியாது என்று பென்டகன் தூண்டிவிடும் என புஷ் நிர்வாகம் ஓர் அறிவிப்பை விடுத்தது. ஜனாதிபதி புஷ்ஷே, இந்த நடவடிக்கையை ஆதரிக்க முன்வந்துள்ளார்; இது வெளிப்படையாகவே பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளிலிருக்கும் ஒப்பந்தக்காரர்களுக்கு கறுப்புப்புள்ளி வைத்துள்ளது. பாதுகாப்புத் துணை மந்திரி போல் உல்போவிட்ச் ஒருபடி மேலே சென்று, "அமெரிக்க நலன்களின் அடிப்படைப் பாதுகாப்பிற்கு" இத்தகைய நடவடிக்கைகள் இன்றியமையாதவை என்று குறிப்பிட்டுள்ளார்; இதன் உட்குறிப்பு ஜேர்மனிய, பிரெஞ்சு ஒப்பந்தக்காரர்கள் விரோதி நாடுகளுடைய பிரதிநிதிகள் என்பது ஆகும். புஷ், ஐரோப்பாவிலுள்ள தன் நட்பு நாடுகளான பிரிட்டன், போலந்து போன்றவற்றிற்கு, அவை முயலுடன் ஒடிக்கொண்டும், வேட்டைநாயுடன் வேட்டையில் சேர்ந்தும் ஒரே நேரத்தில் இருபணிகளையும் செய்ய இயலாது என்ற செய்திக்குறிப்பை வெளியிட்டு, வாஷிங்டனுடன் விசுவாசமாக இருந்தால் அதற்குத் தக்க வெகுமதிகள் கிடைக்கும் என்றும், ஐரோப்பிய சக்திகளுடன் மிகநெருக்கமாகப் போகும் முயற்சி கொண்டால் அதற்குத் தக்க தண்டனை கிடைக்கும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. இச்செய்தியின் உட்குறிப்பை, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் அறியாமற் போகவில்லை; ஒப்பந்தப் பிரச்சினை டிசம்பர் 13ம் தேதி குறிப்பிட்டிருந்த தேதிக்கு ஒரு நாள் முன்பே, மாநாட்டின் சரிவு ஏற்படும்முன், விவாதங்களில் ஒப்பந்தப் பேச்சுக்கள் ஆதிக்கம் செலுத்தும் அச்சம் ஏற்பட்டது. "அமெரிக்கர்கள் அவர்களுடைய பணத்தை எவ்வாறு செலவு செய்வது என்பததை அவர்களே தீர்மானித்துக் கொள்ளட்டும்" என்று கூறி தன்னுடைய நிலைமையை, பிளேயர் தெளிவாக்கி விட்டார். அதிகம் புகழப்பட்ட, ஐரோப்பிய ஒன்றியத்தின் இலாபங்கள் பற்றி, ஐரோப்பியப் பாதுகாப்பு உடன்பாடு, டிசம்பர் 11ம் தேதி, பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி ஆகியவற்றால் கையெழுத்திடப்பட்டு, பரஸ்பர பாதுகாப்பு விதி அடங்கிய, ஐரோப்பிய "பாதுகாப்பு உத்தி" ஏற்கப்படாதது, அமெரிக்காவின் ஆக்ரோஷம் மிக்க அரசியல் தலையீட்டினால்தான். இப்பொழுது கொள்ளப்பட்ட உடன்பாடு, ஐரோப்பிய ஒன்றியத்தின், புருஸ்சல்ஸ் இராணுவத் தலைமையகத்தில் ஒரு "திட்டக் குழு" தோற்றுவிக்கப்படுவதற்குத்தான்; இது பாரிஸ், பேர்லின் இவையிரண்டும் கருத்திற்கொண்டிருந்த தனித்த கட்டளை அமைப்பிலிருந்து மிகவும் குறைந்த தரமுடையதுதான். இந்தக் குழு, கடைசிபட்சமாகத்தான் பயன்படுத்தப்படும் என்றும், முதலில் ஐரோப்பிய ஒன்றியம் எப்பொழுதும் நேட்டோ வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளும் என்றும் தீர்மானிக்கப்பட்டு விட்டது. வாஷிங்டனுக்கு இன்னும் கூடுதல் சலுகையாக, ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ நிரந்தரமாக ஐரோப்பிய ஒன்றியத் தலைமையகமான பிருஸ்ஸல்ஸில் தொடர்பு அலுவலகம் ஒன்றைக் கொள்ளலாம் எனக் கட்டாயமாக ஒத்துக் கொள்ளப்பட்டது. இதற்குப் பதிலாக, ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோவின் இராணுவத் திட்டத் தலைமையகமான பெல்ஜியத்திலுள்ள Mons இல் நிரந்தரத் தொடர்பு அலுவலகத்தை வைத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன் கூறப்பட்டிருந்த மிக ஆர்வம் நிறைந்திருந்த 25,000 வீரர் அடங்கிய விரைவுப் பதில் தாக்குதல் படைபற்றி, இப்பொழுது பேச்சு வார்த்தைகள் கூட நடக்கவில்லை. மாறாக, பிரிட்டன், பிரான்சுடனும், ஜேர்மனியுடனும் உடன்பாட்டில் கையெழுத்திட்ட அன்றே, பாதுகாப்பு மந்திரி ஜெப் ஹூன்(Geoff Hoon), உயர்தர நுட்பம் கொண்ட பிரிட்டிஷ் விரைவுப்பதில் தாக்குதல் படை ஒன்றைத் தோற்றுவிக்கும் என்றும், இது அமெரிக்காவுடன் "பயங்கரவாதத்திற்கெதிரான போரில்" பங்குபெறலாம் என்றும் திட்டங்களை அறிவித்தார். ஹூனால் குறிப்பிடப்படும், இத்தகைய உயர் தொழில்நுட்பம், அமெரிக்கர்களால் மட்டுமே வழங்கப்பட இயலும். ஓர் இரு-வேக ஐரோப்பா ஜேர்மனியும் பிரான்சும் தங்கள் பேரவாக்கள் தகர்க்கப்பட்டதற்குப் பதிலாக, மாற்று உத்தி ஒன்றைத் தெரிவிப்பதன் மூலம் விடையறுத்தன. உச்சிமாநாட்டிற்கு முன்பே, இந்த இரண்டு நாடுகளும், ஒரு "கடினத் தொகுப்பு", "முன்னோடிக்குழு" என்ற ஐரோப்பிய ஒன்றியத்தை விரைவுபடுத்தத் தயாராக உள்ள நாடுகளோடு சேர்ந்து அமைக்க விவாதித்திருந்தன. இந்த மாநாடு முடிந்தவுடன், ஜேர்மனியின் சான்ஸ்லரான ஷ்ரோடர், அரசியலமைப்பின் உடன்பாட்டிற்கு நிச்சயமான தோல்வி என்றால், அந்நிலை "ஓர் இரு-வேக ஐரோப்பாவிற்கு" வழிவகை செய்யலாம் என்று தெரிவித்தார்; பிரான்சின் ஜனாதிபதி சிராக் அத்திட்டத்தை "உதாரணம் காட்டக்கூடிய மோட்டார் போல இருக்கும்.... அது ஐரோப்பாவை விரைவாக, சிறந்த முறையில் முன்னேற்றுவிக்கும்" என்று கூறினார். அத்தகைய திட்டம் நடைமுறைக்கு வருமா, அல்லது சமரசங்களும் அச்சுறுத்தல்களும் அத்தகைய முறையான பிளவைத் தடுக்குமா என்று கணிப்பது இயலாது. ஆயினும் கூட, புருஸ்ஸல்ஸில் கண்டுபிடிக்கப்பட்ட பிழைகள் எளிதில் சென்று விடா. அமெரிக்கப் பாதுகாப்பு மந்திரி டோனால்ட் ரம்ஸ்பெல்ட் ஜனவரி மாதம் வரையறை செய்திருந்த "பழைய", "புதிய" ஐரோப்பியருக்களுக்கிடையேயான பிளவை, ஓரளவு பிரதிபலிக்கக்கூடும். "புதிய" ஐரோப்பா என்பது எல்லாவற்றையும் அடக்கிய கிழக்கு ஐரோப்பிய நாடுகள் என்ற பொருளில் எடுத்துக்கொள்ளாமல், அரசியலளவில் வாஷிங்டனுக்கு நெருக்கமாக இருக்கும் பிரிட்டன், ஸ்பெயின், போலந்து போன்ற நாடுகளை வரையறுக்கக்கூடும். ஜேர்மனி, தன்னுடைய பொருளாதார வலிமையைப் பயன்படுத்தி, "Visegrad group" என்று கூறப்படும் ஹங்கேரி, செக் குடியரசு, ஸ்லோவாக்கியா ஆகிய மற்ற உறுப்புநாடுகளிலிருந்து பிரிக்க முற்படும்; அவை தாங்கள் எத்தகைய விரைவு வழிக்குழு அமைக்கப்பட்டாலும், அதோடு சேர்ந்கொள்ளத் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்துள்ளன. பிளேயர், தன்னுடைய அமெரிக்க நட்பு, ஜேர்மனி, பிரான்ஸ் இவற்றுடனான உறவுகளை முறிக்கும் அளவிற்குச் சென்றுவிடத் தயாராக இல்லை. உதாரணமாக, உச்சிமாநாடு நடந்துமுடிந்த உடனேயே, பிரிட்டன் Prodi க்கு, ஆஸ்திரியா, பிரான்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து, ஸ்வீடன் ஆகியவற்றோடு சேர்ந்து, அடுத்த ஆண்டிற்கான, ஐரோப்பிய ஒன்றியத்திற்கான வரவுசெலவுத்திட்டத்தில் சராசரி செலவுகள் இப்பொழுதுள்ள தரத்திலேயே இருக்கவேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார்; இது கிழக்கிலிருந்து வரும் புதிய உறுப்புநாடுகளைக் கடுமையாகத்தாக்கும் நடவடிக்கையாகும். இத்தகைய கூட்டுக்கள் அனைத்தும், பொருளாதார நடவடிக்கைகள், அயல்நாட்டுக்கொள்கைகளின் தொடக்க முயற்சிகள் ஆகியவை, ஐரோப்பிய வல்லரசுகள் உலகின் இருப்புக்களையும் சந்தைகளையும் தாங்கள் இராணுவமுறையில் பங்கிட்டுக்கொள்ளத்தான் பயன்படுத்தப்படும். ஆனால், இந்த ஜேர்மனிய, பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் உத்திக்கு ஒரு கடுமையான அடி கொடுக்கப்பட்டது. Le Monde அதை, "ஒதுக்கப்பட்டுவிட்ட" இருநாடுகளுக்கும், அவை ஈராக்கில் போரை நிறுத்தத் தவறியதற்காக, "ஓர் ஆண்டிற்குள் இரண்டாம் தோல்வி" என்று விவரித்தது; Libération "பிராங்கோ-ஜேர்மனிய மோட்டார்" ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் எந்தத் தொடக்க முயற்சியையும் எடுக்கத் தவறியதற்குக் குறைகூறியுள்ளது. எனவே, இவையனைத்தும் ஐரோப்பாவிற்குள்ளும், ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயும் ஏகாதிபத்திய சக்திகளுக்குள் தீவிரமான விரோதம் வரவுள்ளது என்பதையே சுட்டிக்காட்டுகின்றன. |