World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு :
ஈராக் Blair in Basra: Iraq a "test case" for other countries பாஸ்ராவில் பிளேயர்: இதர நாடுகள் மீது நடவடிக்கைக்கு "சோதனைக் களம்" ஈராக் By Chris Marsden பொது உறவுகள் பகட்டுவித்தை என்ற வகையில் அது தனி ஒரு தோல்வி ஆகும். பிரிட்டனின் பிரதமர் டோனி பிளேயர் எகிப்தில் ஷாம் எல்-ஷேக் கூடல்தளத்தில் 10 நாட்கள் கிறிஸ்துமஸ் விடுமுறையை முடித்துக் கொண்டு ஜனவரி 4ல் ஈராக்கின் இரண்டாவது நகரான பாஸ்ராவிற்கு விஜயம் மேற்கொண்டார். ஐ.நா முன்னாள் ஆயுத ஆய்வாளரும் பாதுகாப்பு அமைச்சக ஆயுத நிபுணரும் முன்னாள் ஐ.நா ஆயுத ஆய்வாளருமான டாக்டர் டேவிட் கெல்லி, மரணம் குறித்து விசாரணை செய்து வந்த ஹட்டன் பிரபு அறிக்கை அடுத்த சிலவாரங்களில் வெளிவர இருக்கிறது, எனவே அதற்கு முன்னர் அரசியல் எதிர்ப்பிரச்சார இயக்கத்தை தொடக்கி வைக்கும் நோக்கோடு டோனி பிளேயர் இந்த ஒரு நாள் திடீர் விஜயத்தை மேற்கொண்டிருக்கிறார். ஈராக்கிடம் பயங்கர ஆயுதங்கள் இருப்பதாகக் கூறப்பட்ட புலனாய்வு ஆவணங்களை அரசாங்கம் குழப்பிவிட்டதான விவாதம் பற்றிய ரேடியோ 4 இன்று நிகழ்ச்சிக்கு மூல ஆதாரமாக இருந்தவர் டாக்டர் கெல்லி. பிபிசி நிருபர் ஆண்ட்ரூ ஜில்லிகனிடம் கெல்லிக்கு உள்ள தொடர்புகள் குறித்து நாடாளுமன்ற வெளிவிவகாரங்கள் குழு அவரிடம் விசாரணை நடத்தியதற்கு இரண்டு நாட்களுக்குப் பின்னர் சென்ற ஆண்டு ஜூலை 18ம் தேதி டாக்டர் கெல்லி இறந்து கிடந்தார். அவரது மரணம் ஈராக்கிடம் பேரழிவு ஆயுதங்கள் இருப்பது தொடர்பாக அரசாங்கம் கூறிய பொய்கள் மீது கவனத்தைக் குவிமையப்படுத்தியது. ஈராக் மீதான புஷ் நிர்வாகத்தின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு அவரது ஆதரவிற்கு இவ்வாயுதங்களை வைத்திருத்தல் சரியான காரணமாக பிளேயரால் கொடுக்கப்பட்டது. போர் ஆயத்தம் நடைபெற்ற நேரத்தில் பேரழிவு ஆயுதங்கள் தொடர்பாக தவறான புலனாய்வுத் தகவலைப் பயன்படுத்தியது குறித்து தீர்ப்பு அளிப்பதை ஹட்டன் விசாரணை தவிர்த்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இருந்தாலும், ஈராக் மீது படை எடுத்துச்சென்ற பின்னர் கூட ஈராக்கில் பயங்கர ஆயுதங்கள் எதுவும் இருப்பதற்கான ஆதாரத்தை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் துருப்புக்கள் கண்டுபிடிக்க தவறியமை தொடர்பான அரசியல் விமர்சனங்களிலிருந்து இது பிளேயரைத் தடுக்காது. பிரிட்டனின் நாடாளுமன்ற தாராளவாத ஜனநாயகக் கட்சி தலைவர், சார்லஸ் கென்னடி மற்றும் ஏனையோர், ஈராக்குடன் போர் தொடுக்கப்பட்டது தொடர்பான முழு நடவடிக்கைகள் குறித்தும் முழு அளவிலான நீதி விசாரணை நடத்தக் கோருவதை டோனி பிளேயர் எதிர்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய தாக்குதல் தன் மீது வந்துவிடக்கூடாது என்பதை முன்கூட்டியே தவிர்க்கும் முயற்சியாகவே டோனி பிளேயர் பாஸ்ராவிற்கு 6மணி நேரப் பயணத்தை மேற்கொண்டார். பிரிட்டனிலிருந்து வந்திருக்கும் 10,000 துருப்புக்களில் கட்டுப்பாடு மிக்க, கைதட்டுகின்ற வரவேற்கின்ற இராணுவ வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு, போர் புரிய செல்வதற்குதான் செய்த முடிவை நியாயப்படுத்தி புகைப்படமும் எடுத்துக் கொள்ள ஒரு அருமையான சந்தர்ப்பத்தை வழங்கும் என்று அவர் கணக்குப்போட்டார். மிகுந்த சிறப்பு மிக்க சொற்கள் அடங்கிய பத்து நிமிட உரையை அவர் ஆற்றினாலும் ஈராக்கிய பேரழிவு ஆயுதங்களே போருக்கு செல்வதற்கான காரணம் என்று காட்டுவதற்கு தவறிவிட்ட உரையாகவே அது அமைந்திருந்தது. தன்னுடைய உரையின் போக்கிலேயே பட்டும் படாமலும் சதாம் ஹூசேன் அத்தகைய ஆயுதங்களை தயாரிப்பதற்கு திட்டங்கள் வைத்திருந்தார் என்று குறிப்பிட்டார். ஆட்சி மாற்றத்தால் நலன்கள் ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்ட அவர் அதையே போரை சரி என்று காட்டுவதற்கான ஆதாரமாகவும் காட்டினார். பயங்கரவாதம் மற்றும் பேரழிவு ஆயுதங்கள் மிகப் பெரிய ஆபத்துக்கள் என்றும் அவற்றைச் சமாளிப்பதற்கு ஒரு உறுதியான எடுத்துக்காட்டு நடவடிக்கை தேவை என்ற எச்சரிக்கைகளையும் சேர்த்துக் கொண்டார். ஈராக் ஒரு "சோதனைக் களம்" என்று வர்ணித்தார். "அதிலிருந்து நாம் பின்வாங்கி இருப்போமானால், இந்த அச்சுறுத்தல் நிலவுகின்ற பிறநாடுகளில் அவற்றை எதிர்கொள்ள ஒருபோதும் முடிந்திருக்காது" என்று வாதிட்டார். இது ஈராக்கிலிருந்து அத்தகைய அச்சுறுத்தல் இருப்பது நிரூபிக்கப்படவில்லை என்ற முக்கிய கேள்வியை மட்டுமல்லாமல், பிரிட்டிஷ் மக்களிடம் பிளேயர் பொய் சொல்லி இருக்கிறாரென்பது தெளிவாகிறது. எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் பேரழிவு ஆயுதங்கள் திட்டங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் அல்லது பயங்கரவாதத்துடன் சம்பந்தம் என்ற அடிப்படையில் பிரிட்டன் தனியாகவோ அல்லது அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் அணிசேர்ந்தோ எதிர்காலத்தில் ஆக்கிரமிப்பு போர்களை நடத்துவதற்கு ஒரு முன்மாதிரியை உருவாக்குவதில் பிளேயர் உறுதியாக உள்ளார் என்பதையும் அவரது உரை தெளிவுபடுத்துகிறது. "21வது நூற்றாண்டில் புதிய முன்னோடி போர்வீரர்கள்" என்று தமது ஆக்கிரமிப்புப் படைகளை பிளேயர் வர்ணித்தார். "ஒடுக்குமுறை அரசாங்கங்கள் மற்றும் பயங்கரவாதம் என்ற இரட்டை அச்சுறுத்தல்களை சமாளிப்பதில்" போர்புரிவது பற்றிய அறிவுடைமை மற்றும் இந்த அர்ப்பணிப்பில்" எவ்வாறு தான் "உணர்வுகரமாக" நம்பிக்கை கொண்டார் என்பதை விவரிக்க பிளேயர் அனைத்து வகையான உயர்வுநவிற்சிகளையும் பயன்படுத்தினார். "ஷாய்பா" இராணுவ தளத்தில் 1000 அல்லது சற்று அதிகமான பிரிட்டிஷ் இராணுவ வீரர்கள் தலைமையில் பணியாற்றுகின்ற பிரிவினரிடம் அவர் உரையாற்றும்போது அவர்கள் "உன்னதமான நல்ல நோக்கங்களுக்காக" பணியாற்றி வருவதாக குறிப்பிட்டார். தத்துவ சிந்தனை மேலிட்டால், வார்த்தைகள் தவறிவிடுவதைப் போன்று பிளேயர் வாய்தவறி "வெப்பன் ஆப் மாஸ் டிஸ்ட்ராக்ஷன்" (கவனத்தை திசை திருப்பும் ஆயுதங்கள்) என்று கூற, "மக்களை திசைதிருப்பும் ஆயுதங்களை உருவாக்கும் ஒடுக்குமுறை அரசுகள்" என விளக்கம் தந்து தனது சொற்களில் ஏற்பட்ட நழுவலை சமாளித்தார். இப்பொழுது அவர் இதுபோன்ற மக்களது கவனத்தை திசைதிருப்பும் நடவடிக்கையில் ஈடுபடுவது எந்தவிதமான பயனையும் அளிக்காது. ஹூசைனது கொடூரமான ஆட்சி முடிவுக்கு வந்தது பற்றிய மனித நேய அடிப்படையிலான பாதிப்பு தமக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று கருதி போருக்கான நியாயப்படுத்தலை சொல்லுகின்றதன் மூலம் - அவரது முந்தைய முயற்சிகள் அரசியல் திசைதிருப்பல் செய்வதில் அம்பலப்படுத்தப்படுவதிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் அவரது அண்மைய முயற்சி எடுபடாது. ஏனெனில் அவர் சதாம் ஹூசேன் இரசாயன, உயிரியல் மற்றும் அணு ஆயுதங்கள் கூட வைத்திருக்கலாம் என்று குற்றம்சாட்டி, அவை உலக அமைதிக்கு உடனடி அச்சுறுத்தல் என்பதை சட்டபூர்வ அடிப்படையாக மேற்கோள் காட்டி போருக்கு சென்றார். அத்தகைய வல்லமை ஈராக்கிடம் என்றைக்கும் இருந்ததில்லை. பிரிட்டனிலும் உலகம் முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் டோனி பிளேயரின் பொய்களை மறக்கவும் இல்லை மன்னிக்கவும் இல்லை. அதுமட்டுமல்ல, அந்த போர் மூலம் ஈராக்கிலோ அல்லது வேறு எங்குமோ-ஜனநாயகம் மற்றும் சமாதானத்திற்கான ஒரு புதிய சகாப்தம் தொடங்கப்பட்டிருக்கிறது என்ற அவரது கூற்றையும் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஈராக் பெறும் நலன்களே போருக்குச் சென்றதை நியாயப்படுத்தும் என்ற அவரது வாதத்தை மீண்டும் திணிப்பதற்கு, ஈராக் மக்களது எதிர்ப்பு வலுவாகிக் கொண்டு வருவதை குறைத்து மதிப்பிடுகின்ற நோக்கில் டோனி பிளேயரும் மற்றும் இதர அரசாங்க அதிகாரிகளும், ஜூலை முதல் தேதி ஈராக்கின் பொம்மை அரசாங்கத்திற்கு அந்நாட்டின் இறையாண்மை மாற்றித் தரப்படும் என்று காலக்கெடு நிர்ணயித்து இருப்பதையும் பொதுமக்கள் நம்பவில்லை. ஏனென்றால் ஒவ்வொரு நாளும் கூட்டணிப் படைகள் மீது தாக்குதல்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. புத்தாண்டு தினத்தன்று ஈராக்கில் ஒரு கார் விபத்தில் இரண்டு பிரிட்டிஷ் படையினர் மாண்டனர். போர் தொடங்கிய பின்னர், இதுவரை மாண்ட பிரிட்டன் துருப்புக்கள் எண்ணிக்கை 55 ஆகும். ஏறத்தாழ 500 அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதைவிட பல மடங்கு ஈராக் மக்கள் பலியாகி இருக்கிறார்கள் இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்கு 10,000 பிரிட்டிஷ் துருப்புக்கள் ஈராக்கில் நீடித்திருக்கும் என்று பிளேயர் தெளிவு படுத்தியுள்ளார். எனவே வரும் வாரங்களில் அவரது அராசங்கத்தின் மீது எழுகின்ற தீவிர விமர்சனங்களை தடுத்து நிறுத்துகின்ற வழி எதுவும் அவருக்கு இல்லை. |