WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:ஆசியா
: பாகிஸ்தான்
Amid mounting political crisis
Pakistan's military dictator survives assassination
attempt
முற்றிக் கொண்டு வரும் அரசியல் நெருக்கடிகளுக்கிடையில்
கொலை முயற்சியிலிருந்து பாக்கிஸ்தான் இராணுவ சர்வாதிகாரி தப்பினார்
By Keith Jones
23 December 2003
Use this version to
print |
Send this link by email |
Email the author
டிசம்பர் 14-அன்று பாக்கிஸ்தானின் இராணுவ சர்வாதிகாரி பர்வேஷ் முஷாரஃப்பின்
மோட்டார் வாகனங்கள் ஒரு பாலத்தைக் கடந்த சில நொடிகளில் அந்தப் பாலமே நொறுங்கி விழுகிற அளவிற்கு
பல குண்டுகள் வெடித்துச்சிதறிய பொழுது, படுகொலை முயற்சியிலிருந்து அவர் மயிரிழையில் உயிர் தப்பினார். தனது
வீரத்தை வெளிச்சம் போட்டுக்காட்டுகின்ற வகையில் முஷாரஃப் அந்தத் தாக்குதலின் கடுமையைக் குறைத்து மதிப்பிட
முயன்றாலும் பயன்படுத்தப்பட்ட குண்டுகளின் நுட்பத்தன்மையைப் பார்க்கும்போது பாக்கிஸ்தான் இராணுவ புலனாய்வு
சேவையில் இடம்பெற்றுள்ள சக்திகள் சம்மந்தப்பட்டிருக்க கூடும் என்று கருதுவதற்கு வலுவான அடிப்படை உள்ளது.
பாக்கிஸ்தான் தலைநகரின் இரட்டை நகரமாக விளங்கும் ராவல் பிண்டியில் மிகப்பெரும்
அளவில் போலீஸ் கண்காணிப்புள்ள பகுதியில் இந்தக் கொலை முயற்சி நடந்துள்ளது. நூற்றுக்கணக்கான பவுண்டுகள்
எடையுள்ள பிளாஸ்டிக் குண்டுகளை ஐந்து தனித்தனி குண்டுகள் ரிமோட் கன்ட்ரோலில் வெடிக்க வைத்திருக்கிறார்கள்.
முஷாரஃப் சென்ற காரில் 200-மீட்டர் சுற்றளவிற்கு வரும் ரேடியோ சிக்னல்களை அந்தக்கார் செல்லும் வரை தடுத்து
நிறுத்தும் கருவி பொருத்தப்பட்டிருக்காதது, இராணுவத் தளபதியாகவும் ஜனாதிபதியாகவும் உள்ள அவர் கொல்லப்பட்டிருந்திருக்கலாம்
என்பதை இரட்டிப்பாக்கி இருக்கிறது என்பதை பாக்கிஸ்தான் அதிகாரிகள் ஒப்புக்கொள்கின்றனர். அந்த தடுப்புக்
கருவியின் காரணமாக, குண்டானது முஷாரஃப் கார் அவற்றைக் கடந்த பின்னர்தான் வெடித்திருக்க முடியும்.
கொலைமுயற்சிக்காக இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகள் மீது உடனடியாக
முஷாரஃப் பழிபோட்டார், ''நமது நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்து வெளிநாடுகளிலிருந்து வரவில்லை. உள்நாட்டில்
மத மற்றும் குறுங்குழுவாத தீவிரவாதிகளிடமிருந்து தான் வருகிறது. என்று நான் சொல்லிக்கொண்டிருந்தேன், இது
அதற்குத் தகுந்த எடுத்துக்காட்டாகும்.'' என்று முஷாரஃப் குறிப்பிட்டார்.
முஷாரஃப்பைக் கொல்வதற்கான சதியில் உறுதியாய் இஸ்லாமிய அடிப்படைவாத
பயங்கரவாதிகள் சம்மந்தப்பட்டிருக்கக் கூடும் என்ற சாத்தியக்கூறு உண்டு. வாஷிங்டன் கொடுத்த நிர்பந்தங்களின்
காரணமாக ஆப்கனிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் அல்கொய்தா தீவிரவாதிகள் தலைமறைவாக
இருக்கக்கூடும் என்று கருதி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அண்மையில் முஷாரஃப் கட்டளையிட்டார். பயங்கரவாத
அமைப்புகளோடு உறவுவைத்திருப்பவை எனக் கருதப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்கள் பலவற்றிற்குத் தடைவிதித்தார்
மற்றும் இந்தியாவுடன் எல்லையில் மோதல் நிறுத்தத்திற்கும் உடன்பட்டிருக்கிறார், இது இந்திய கட்டுப்பாட்டில் உள்ள
காஷ்மீர் பகுதியில் செயல்பட்டுவரும் இஸ்லாமிய அடிப்படை வாதிகளது ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளது
கிளர்ச்சியை ஊடறுக்கிறது.
பாக்கிஸ்தானின் இராணுவ பாதுகாப்பு அமைப்பு இஸ்லாமிய அடிப்படைவாத
கிளர்ச்சிக்காரர்களுடன் நீண்ட காலமாக நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்தது. ஆப்கானிஸ்தான் உள்நாட்டுப்
போரின் போது பாக்கிஸ்தானின் புலனாய்வு அமைப்பு ஐஎஸ்ஐ (Inter-Service
Intelligence Agency) இஸ்லாமிய அடிப்படைவாத கொரில்லாப் படைகளுக்கு அமெரிக்காவின்
நிதிகளைக்கொண்டு சேர்க்கும் இணைப்புப்பாலமாக இயங்கிவந்தது. இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில்
கிளர்ச்சிக்கு தலைமை ஏற்கும் பொறுப்பை மதச்சார்பற்ற தேசியத் தலைவர்களிடமிருந்து பறித்தெடுக்கும்
அடிப்படைவாதிகளின் முயற்சிகளை பாக்கிஸ்தான் ஆதரித்தது. 1990-களின் கடைசியில் ஆப்கனிஸ்தானின் தலிபான்
ஆட்சியின் பிரதான வெளிநாட்டு புரவலராக பாக்கிஸ்தான் செயல்பட்டு வந்தது.
இது எப்படி இருந்தாலும், ஆசியா டைம்ஸ் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரை
முஷாரஃபே நடத்திய நாடகம்தான் கொலை முயற்சி என்று வாதிடுகிறது. பாக்கிஸ்தான் பாதுகாப்புப்படை
நிர்வாக உயர் பொறுப்பில் உள்ள பெயர் குறிப்பிடப்பிட விரும்பாத தகவல் மூலம் ஒன்று, "பிடிவாதமாக"
முஷாரஃப் மற்றும் அவரது ஆள் ஏற்பாடு செய்த குண்டு வெடிப்பு வாஷிங்டனிலிருந்து வரும் அழுத்தத்தை
திசைதிருப்புவதற்காக -அமெரிக்காவின் கோரிக்கையை எந்த அளவிற்கு முஷாரஃப் ஏற்றுக் கொள்ள முடியும் என்ற
மட்டுப்பாடுகள் இருக்கின்றது என்பதுதான் அந்த செய்தி என்று அக்கட்டுரை கூறுகிறது.
இதில் உண்மை எதுவாக இருந்தாலும் பாக்கிஸ்தான் ஆட்சி எவ்வளவு பலவீனமானது
என்பதை இந்த கொலை முயற்சி குண்டு வெடிப்பு சுட்டிக்காட்டுகிறது. புஷ் நிர்வாகத்தின் "பயங்கரவாதத்திற்கு
எதிரான போரில்" முக்கியமான நட்பு நாடு பாக்கிஸ்தான் ஆகும்.
1999- அக்டோபரில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிமூலம் முஷாரஃப் பதவிக்கு வந்தார்.
அது முதல் சர்க்கஸ் வித்தைக்காரன் கம்பிமேல் நடப்பதுபோல் வாஷிங்டனை திருப்திப்படுத்தவும் முயல்கிறார். அதே
நேரத்தில் பாக்கிஸ்தானின் பாரம்பரிய புவிசார் அரசியல் மற்றும் மூலோபாய நலன்களை தெற்கு மற்றும் மத்திய
ஆசியாவில் நிலைநாட்ட முயல்கிறார். மற்றும் பாக்கிஸ்தானில் பாரம்பரிய அரசியல் செல்வந்த தட்டிலுள்ள அவரது
எதிர்ப்பாளர் மற்றும் அதற்கு கீழே இருந்து வரும் மக்களது எதிர்ப்பினால் உருவாகும் அச்சுறுத்தல் ஆகிய
எதிர்ப்புக்களுக்கு எதிரிடையாக உள்நாட்டில் இஸ்லாமிய அடிப்படைவாத வலது சாரிகளையும் வளர்க்க முயலுகிறார்.
வாஷிங்டன் பாக்கிஸ்தானை எதிரிநாடு என பிரகடனப்படுத்திவிடுமோ என்ற
அச்சுறுத்தலின் கீழ், 2001-செப்டம்பர்-11-ஐ அடுத்து உடனடியாக பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்ற சில
நாட்களில் முஷாரஃப் ஆட்சிதனது கொள்கையில் பெருமளவிற்கு மாற்றம் செய்தது. தலிபான் ஆட்சிக்கு வழங்கிவந்த
ஆதரவை திரும்ப பெற்றுக்கொண்டு ஆப்கனிஸ்தானை அமெரிக்கா பிடித்துக் கொள்வதற்கு முக்கியமான இராணுவ
கேந்திர உதவிகளை வழங்கியது.
இதற்கு வெளிப்படையான கைமாறாக, அமெரிக்கா முஷாரஃப்பின் ஒடுக்குமுறை
ஆட்சிக்கு எதிர்ப்பு என்கிற பாவணையை கைவிட்டது. புஷ்ஷே பலமுறை பாக்கிஸ்தான் சர்வாதிகாரியின் தலைமையை
பாராட்டியிருக்கிறார். அமெரிக்காவும் அமெரிக்கா தலைமையில் இயங்கிவருகின்ற உலக வங்கி போன்ற
அமைப்புகளும் பல பில்லியன் டாலர்கள் மதிப்பிற்கு கடன்களையும், மானியங்களையும் மற்றும் புதிய ஆயுதங்களையும்
பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ளன. (ஆப்கானிஸ்தான் போரின் விளைவாக பாகிஸ்தான் பொருளாதாரம் படு
வீழ்ச்சியடைந்துவிட்டதாகவும் அந்த வீழ்ச்சியை சரிக்கட்டி தலை நிமிரச்செய்வதற்காக பாகிஸ்தானுக்கு 10-பில்லியன்
டாலர் கடனைக் குறைப்பதற்காக அமெரிக்கா வழங்கும் உதவி என்று முஷாரஃபின் விமர்சகர்கள்
குறிப்பிடுகின்றனர்.) பொருளாதாரத்தில் தனியார்மயமாதல் திட்டத்தையும், சீரமைப்புத் திட்டங்களையும் முஷாரஃப்
மிகவேகமாக மேற்கொண்டிருப்பதாக உலக வங்கியும் சர்வதேச நிதி நிறுவனமும் (IMF)
பாராட்டியுள்ளன.
அண்மைய மாதங்களில் அதைத்தான் ஆசியா டைம்ஸ் கட்டுரை
சுட்டிக்காட்டுகிறது. இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு தீவிர நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் இந்தியாவுடன் பதட்டங்களை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் வாஷிங்டன்
மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடான பிரிட்டனின் டோனி பிளேயர் போன்றவர்களிடம் இருந்து வரும் புதிய
நிர்பந்தங்களின் கீழ் முஷாரஃப் இருந்து வருகிறார். அல்கொய்தா இயக்கம் பாகிஸ்தானை தனது பிரதான
நடவடிக்கை கேந்திரமாக மாற்றிவிட்டது, என்று அமெரிக்கா அஞ்சுகிறது. மேலும் இந்தியாவின் வசமிருக்கும்
காஷ்மீரில் கிளர்ச்சியாளர்களை நீண்ட காலமாக பாகிஸ்தான் ஆதரித்து வருவது சர்வதேச அளவில் இஸ்லாமிய
பயங்கரவாதத்திற்கு விஷயத்தை வழங்குகின்றது என்று அமெரிக்கா நம்புகிறது. நீண்டகால கண்ணோட்டத்தில்
பார்க்கும்போது பல தலைமுறைகளாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்றுக் கொண்டுள்ள
மோதல்கள் இந்த மண்டலத்தில் மிகவும் ஆபத்தான குழப்பத்தை ஏற்படுத்தி விடக்கூடும் என்று அமெரிக்கா அதிகமாய்
கருதுகின்றது. தெற்கு ஆசியாவில் கிடைக்கும் அள்ளக்குறையாத மலிவான கூலி உழைப்பு மற்றும் அந்த இந்திய மனித
வளத்தை ஆசியாவில் சீனாவைக் கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்திக் கொள்ளமுடியும் என்ற சாத்தியக் கூறுகள்
இவற்றின் காரணமாகத்தான் இப்பிரச்சனையில் திடீரென்று அமெரிக்கா மிகப்பெரும் அக்கறையை எடுத்துக்
கொண்டிருக்கின்றது.
பாக்கிஸ்தானின் ஆளும் வர்க்கம் மற்றும் குறிப்பாக இராணுவ புலனாய்வு அமைப்பு
அமெரிக்கா கோருகின்ற கொள்கை மாற்றத்தால் பெரும் சங்கடங்களை முன்வைக்கின்றது. ஜெனரல் ஜியா
காலத்திலிருந்து பாக்கிஸ்தான் இஸ்லாமிய அடிப்படைவாத வலது சாரிகளை வளர்த்து வருகின்றது. காஷ்மீர் மீதான
இந்தியாவுடன் நிலவுகின்ற மோதலின் மூலங்கள் 1947-ம் ஆண்டு இந்திய துணைக்கண்டத்தின் வகுப்புவாத பிரிவினையில்
இருக்கின்றது, எனவே காஷ்மீரை பாகிஸ்தானின் செல்வந்த தட்டு தேசிய வாழ்விற்கு உயிர்நாடியானது என்று
கருதிவருகின்றது. குறிப்பாக பாக்கிஸ்தான் இராணுவம் அந்நாட்டு அரசியல் வாழ்வில் முன்னிலை பங்குவகிப்பதே,
தன்னை விட மிகப்பெரிய, குரோத நாடான இந்தியாவோடு வாழ்வா சாவா என்ற போராட்டத்தில்
ஈடுபட்டிருக்கிறது மற்றும் பாகிஸ்தானின் தேசிய இருப்பினை இராணுவம்தான் காப்பாற்ற முடியும் என்ற அடிப்படையில்
இராணுவம் அந்நாட்டு அரசியலில் அதனுடைய மேலாதிக்கப் பாத்திரத்தை நியாயப்படுத்தி வருகின்றது.
முஷ்ராப்பே இந்தியாவிற்கு எதிரான மிகக்கடுமையான சக்திகளோடு நெருக்கமான
தொடர்டையவர்தான். அவரது 1999 ஆட்சிக்கவிழ்ப்பு சதியானது, அமெரிக்க அழுத்தத்திற்கு நவாஸ் ஷெரீப்
அடிபணிந்து, காஷ்மீரில் கார்கில் மண்டலத்தில் பாகிஸ்தான் ஊடுருவலை முடிவுக்கு கொண்டு வந்தது மீதாக அவருக்கும்
நவாஸ் ஷெரீப்பிற்கும் இடையிலான மோதலின் குறைந்த பட்சம் ஒரு பகுதியாக எழுந்தது. இந்தியா
2001-2002-ம் ஆண்டில் போருக்கான முன்னேற்பாடுகளைச் செய்து நிர்பந்தம் கொடுத்தபோது அதற்கு அடிபணிய
மறுத்ததன் மூலம் முஷாரஃப் அவரது கடும் நிலையில் உறுதியாக நின்றார். "பயங்கரவாதத்தை முடிவுகட்ட"
பாக்கிஸ்தான் மீது இந்தியா படையெடுக்கும் என்று அச்சுறுத்தியதற்கு இந்தியாவிற்கு எதிராக அணு ஆயுதங்களை
பயன்படுத்தப் போவதாக முஷ்ராப் கூறியதன் மூலம் பதிலளித்தார்.
அண்மை வாரங்களில், இஸ்லாமிய அடிப்படைவாத "தீவிரவாதிகள்" மீது நடவடிக்கை
எடுத்துக் கொண்டே அதே நேரத்தில் இஸ்லாமிய அடிப்படைவாத ஆறு கட்சிகளின் கூட்டணியின் ஆதரவை
உறுதிப்படுத்துவதற்கு முஷாரஃப் முயன்று வருகிறார். முக்தாஹிதா மஜ்லீஸ்-ஐ- அமல் (M.M.A)
என்கிற கூட்டணிக் கட்சிகளோடு அரசியல் சட்ட மாற்றங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி
வருகிறார். முஷாரஃப் இந்த மாற்றங்களை ஏற்கனவே திணித்துவிட்டார்- தேசிய நாடாளுமன்றத்தைக் கலைக்க
மற்றும் இராணுவத்தினர் ஆதிக்கம் செலுத்தும் பாதுகாப்பு சபையை உருவாக்க ஜனாதிபதிக்கு உள்ள உரிமை, மற்றும்
ஒரே நேரத்தில் இராணுவத் தளபதியாகவும் ஜனாதிபதியாகவும் இருப்பதற்கு உள்ள முஷாரஃப்பின் உரிமை ஆகியவை
உள்பட- ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட கட்டளை மூலம் சட்டரீதியான கட்டமைப்பு ஒழுங்கு என்று அழைக்கப்படுவதன்
கீழ் நடைமுறைப்படுத்திவிட்டார். நாடாளுமன்றத்தில் அவற்றுக்கு அங்கீகாரம் பெறவும் ஜனாதிபதியாக அங்கீகாரம்
பெற வாக்குகள் பெறவும் அவருக்கு M.M.A- ஆதரவு
தேவைப்படுகிறது.
வாக்குப்பதிவில் மோசடி லஞ்ச ஊழல் மற்றும் மிரட்டல்கள் மூலம் முஷாரஃப், போலி
நாடாளுமன்ற அரசாங்கத்தை உருவாக்கியிருப்பதாக குற்றம் சாட்டி அதில் பங்கு எடுத்துக்கொள்ள ஆறு கட்சி கூட்டணி
ஏற்கனவே மறுத்து வந்திருக்கின்ற போதிலும், M.M.A-
அமைப்பை பொறுத்தவரை அவருக்கு அரசியல் சட்ட ரீதியிலான அங்கீகாரம் என்கிற மூடிமறைப்பை வழங்குவதற்கு
தயாராக இருக்கிறது. பூர்வீக அரசியல் கட்சிகளான பெனாசீர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும்
நவாஸ் ஷெரீப்பின் முஸ்லீம் லீக்கின் மீது முஷாரஃப் விதித்த கட்டுப்பாடுகளின் காரணமாக தேர்தலில்
M.MA- கூட்டணி இரண்டு மாகாணங்களில் ஆட்சியை
பிடித்தது. எல்லாவற்றுக்கும் மேலாக பாகிஸ்தானில் அமெரிக்காவின் செல்வாக்கு வளர்ந்து வருவதாக குற்றம்
சாட்டி அதன் புதிய செல்வாக்கைப் பெற்று முன்னணிக்கு வந்திருக்கின்றன.
இப்போது அவசரமாக சட்டபூர்வமான அங்கீகாரம் பெறுவதற்கு முஷாரஃப் முயற்சிப்பது
இந்தியாவுடன் ஆக்கபூர்வமான சமரச பேச்சுவார்த்தை நடத்துமாறு அமெரிக்காவால் வரும் அழுத்தம்
மட்டுமல்லாமல், உள்நாட்டில் பொருளாதார நிலை சீர்குலைந்து வருவதும் கூட ஆகும். உலக வங்கியும் மூடிஸ்
(Moodys) போன்ற முதலீட்டு நிறுவனங்களும்
பொருளாதாரத்தை முஷாரஃப் நடத்திச்செல்லும் பாங்கைப் பாராட்டிக் கொண்டிருந்தாலும் பாக்கிஸ்தானில் வறுமையும்,
வேலையில்லாத் திண்டாட்டமும் மிகப்பெரும் அளவில் பெருகிவிட்டது. அரசு வங்கி அண்மையில் தயாரித்து வெளியிட்டுள்ள
அறிக்கையின்படி, வறுமையில் வாழும் மக்கள் தொகையின் சதவீதம் 33வீதமாக உயர்ந்துள்ளது. மற்றவர்கள் உண்மையான
புள்ளி விவரம் 40-சதவீதத்திற்கு நெருக்கமாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.
மக்களிடையே வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வு மீதாக
வளர்ந்து வரும் கோபமும், அதேபோல முஷாரஃப் மிக குறைந்த அளவிற்கு கூட தனது அதிகாரங்களை விட்டுத்தர
மறுப்பதன் மீதான கோபமும் பெனாசிர் பூட்டோவின் பாக்கிஸ்தான் மக்கள் கட்சியும், நவாஸ் ஷெரீப்பின் முஸ்லீம்
லீக்கும் இணைந்து உருவாகியுள்ள பாக்கிஸ்தான் ஜனநாயக மீட்பு கூட்டணி
(A.R.D) ''முஷாரஃபே வெளியேறு'' கிளர்ச்சியை
தொடக்கப்போவதாக அச்சுறுத்தி உள்ளது. இந்த ஜனநாயக மீட்பு கூட்டணி தலைவர்கள் முஷாரஃப் அண்மையில் தெரிவித்துள்ள
ஆலோசனைகளைக் கேட்டு துள்ளிக்குதித்து நாட்டின் தேசிய நலனுக்கு துரோகம் செய்கின்ற வகையில் காஷ்மீர் பிரச்சனையில்
"நீக்கு போக்குடன்" பேச்சுவார்த்தை நடத்த முன்வந்திருப்பதை குற்றம் சாட்டியிருப்பதில் வியப்படைவதற்கு எதுவும்
இல்லை.
பாக்கிஸ்தானின் மிகப்பெரிய ஆங்கில மொழி நாளிதழும் முஷாரஃப் ஆட்சியை விமர்சித்து எழுதுகின்ற நாளிதழுமான
Dawn- உடைய அண்மைய தலையங்கத்தில்,
பாகிஸ்தான் ஆளும் தட்டிற்குள் நடக்கின்ற பதவிப்போட்டி மக்களது ஆவேசம் வெடித்துக் கிளம்புவதற்கு வழிவகுத்துவிடுமோ
என்ற அச்சத்தை தெரிவித்திருக்கிறது. MMA- அல்லது
A.R.D விடுத்துள்ள அச்சுறுத்தல் பற்றி முஷாரஃப் ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் கிளர்ச்சி செய்யக்
கூடும் என்பது பற்றி Dawn கீழ்க்கண்ட எச்சரிக்கையை
விடுத்திருக்கிறது: ''இந்த நெருக்கடியை நீறுபூத்த நெருப்புப்போல் புகைய விடுவது குறுகிய நோக்கம் கொண்ட
நடவடிக்கையாக அமைந்துவிடும்......... புதிய ஆபத்துக்கள் எழக்கூடும் ஏனென்றால் பொருளாதார மற்றும்
சமுதாய பிரச்சனைகள் தொடர்பாக மக்களிடையே நிலவுகின்ற அதிருப்தி
M.M.A- எதிர்ப்போடு கலந்துவிடக்கூடும். கிளர்ச்சி
தொடங்கிவிட்டதென்றால் சம்பவங்களின் போக்கு எவ்வாறு அமையும் என்று மதிப்பிட முடியாது. குறிப்பாக அரசியல்
கட்சிகள் பொதுமக்களோடும், அவர்களது பிரச்சனைகளோடும் தங்களுக்கு இருந்த தொடர்புகளை துண்டித்துக்
கொண்டிருக்கிறார்கள் என்ற கண்ணோட்டத்தில் ஆகும்.''
Top of page
|