World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கைSri Lankan political crisis heightens tensions in Jaffna இலங்கை அரசியல் நெருக்கடி யாழ்ப்பாணத்தில் பதட்ட நிலைமைகளை அதிகரிக்கின்றது By Sri Haran இலங்கை நகரமான யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவமானது, கொழும்பில் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கும் ஐக்கிய தேசிய முன்னணி (ஐ.தே.மு) அரசாங்கத்துக்கும் இடையிலான அரசியல் விட்டுக்கொடுப்பற்ற நிலைமையின் பெறுபேறாக தீவின் வடக்கில் அபிவிருத்தி கண்டுவரும் கூர்மையான பதட்டநிலைமைகளை சுட்டிக்காட்டுகிறது. நவம்பர் 9 அன்று, 16 வயது வாலிபனான செல்வராசா விஜயகுமார் யாழ்ப்பாணம் பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பான ஈழ நாதம் செய்தித்தாள் பிரதிகளை விற்றுக்கொண்டிருந்தான். மாலை சுமார் 5.45 மணியளவில், அருகில் உள்ள காவலரணில் சேவையில் இருந்த மூன்று துருப்பினர் அவனை அணுகி, பத்திரிகையை விற்க வேண்டாம் எனக் கூறினர். தொடர்ந்து வந்த வாக்குவாதங்களில் விஜயகுமாரும் இன்னுமொருவரும் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். விஜயகுமார் உலக சோசலிச வலைத் தள பத்திரிகையாளருடன் உரையாற்றும் போது, பத்திரிகையின் முன் பக்கத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் புகைப்படத்தைக் கண்ட பாதுகாப்புப் படையினர் தன்னை விசாரித்ததாக தெரிவித்தார். "அவர்கள் என்னை நிலையத்திலிருந்து சிறிது தூரம் கொண்டு சென்று விடுதலைப் புலிகளின் பத்திரிகையை அங்கு விற்க வேண்டாம் எனக் கூறினர். அவர்கள் என்னை விசாரித்ததோடு அச்சுறுத்தவும் செய்தனர். ஒரு சிப்பாய் துப்பாக்கியால் என்னை இலக்கு வைத்தான். நான் கையை உயர்த்தி சுடவேண்டாம் என சொன்னேன், ஆனால் அவன் சுட்டுவிட்டான். துப்பாக்கிச் சூடு என் கையில் பட்டது. நான் அங்கிருந்து ஓடிவிட்டேன்," என அவர் தெரிவித்தார். அருகில் பஸ்சுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்த 27 வயது பஸ் நடத்துனரான திருநாவுகரசு திருச்செல்வம் கடும் காயங்களுக்கு உள்ளானார். துப்பாக்கிச் சூடு அவரது வயிற்றைத் தாக்கியிருந்ததோடு, அவர் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். நடந்தவற்றை பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்கள் உடனடியாக அங்கு கூடினர். அவர்கள் இலங்கை கண்காணிப்புக் குழு அலுவலர்கள் அங்கு வரும் வரையும் படையினரை தடுத்து வைத்திருக்க முயன்றனர். படையினரும் பொலிசாரும் மூவரையும் விடுவித்துக் கொள்ளவும் கூட்டத்தைக் கலைக்கவும் ஆகாயத்தை நோக்கி சுட்டதோடு பொல்லுகளையும் தடிகளையும் பிரயோகித்தனர். (இலங்கை கண்காணிப்புக் குழுவானது இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கண்காணிக்கும் ஒரு சர்வதேச குழுவாகும்.) இராணுவத்தின் செயற்பாடுகள் பற்றிய செய்தி பரந்த எதிர்ப்பை தூண்டியது. சம்பவம் தொடர்பாக கொழும்பு பத்திரிகைகளில் வெளியாகியிருந்த செய்திகளையிட்டும் மக்கள் கொதிப்படைந்திருந்தனர். பத்திரிகை வியாபாரி பாதுகாப்பு அரணுக்குள் கைக்குண்டு ஒன்றை வீச முயன்றதாலேயே துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றதாக அவை குற்றம்சாட்டியிருந்தன. எந்தவொரு சுயாதீன சாட்சியமும் வழங்கப்பட்டிருக்கவில்லை. பத்திரிகை விற்பதே தனது குடும்ப வருமானத்துக்கான ஒரே வழி என விஜயகுமார் உலக சோசலிச வலைத் தளத்திற்கு தெரிவித்தார். "நான் ஒரு பத்திரிகை விற்றால் ஒரு ரூபாய் இலாபமாகப் பெறுவேன். நாளொன்றுக்கு எனது வருமானம் 100 அல்லது 150 ரூபாய்களாகும் (1 அமெரிக்க டொலர்). சில சந்தர்ப்பங்களில் அதை விட குறைவாகவும் இருக்கும்," என அவர் குறிப்பிட்டார். இந்த வருமானத்தில் தனது தந்தை உட்பட ஆறு பேர் அடங்கிய குடும்பத்தை கொண்டு நடத்த வேண்டும். மூன்று மாதங்களுக்கு முன்னர் இராணுவத்துக்கு நெருக்கமான ஒரு தமிழ் குழுவான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் கூட தன்னை அச்சுறுத்தியதாக அவர் தெரிவித்தார். துப்பாக்கிச் சூட்டை அடுத்து வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம் டிசம்பர் 11 அன்று யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதுமான எதிர்ப்புக்கு அழைப்பு விடுத்தது. அன்றைய தினம் எல்லா கடைகளும் மூடப்பட்டிருந்ததோடு வாடகை வாகனங்கள் உட்பட போக்குவரத்து சேவையும் முற்றாக நிறுத்தப்பட்டிருந்தது. க.பொ.த. சதாரண தரம் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு போக்குவரத்துகள் வழங்கப்பட்டிருந்தன. இந்த சம்பவமானது, நவம்பர் 4 அன்று பாதுகாப்பு, உள்துறை மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்களை குமாரதுங்க அபகரித்துக் கொண்டதிலிருந்து, இலங்கைப் பாதுகாப்புப் படை யாழ்ப்பாணத்திலும் வடக்கின் ஏனைய பகுதிகளிலும் மிகவும் ஆத்திரமூட்டல் நிலைப்பாட்டில் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு அதிகளவிலான சலுகைகளை வழங்குவதாகவும் தேசிய பாதுகாப்பை ஆபத்துக்குள்ளாக்குவதாகவும் ஜனாதிபதி குற்றம் சாட்டினார். குமாரதுங்கவை அரசாங்கத்துக்கு எதிராக செயற்பட வைத்த காரணிகளில் பெயரளவிலான சமாதான முன்னெடுப்புகளுக்கு இராணுவ உயர் மட்ட பிரிவினரின் எதிர்ப்பும் ஒன்றாகும். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவமல்ல. நவம்பர் நடுப்பகுதியில், ஒரு தமிழ் பத்திரிகையாளரான வேலுப்பிள்ளை தவச்செல்வனை ஆனையிறவுக்கு அருகில் உள்ள முகமாலை இராணுவ பரிசோதனை நிலையத்தில் ஒரு மணித்தியாலத்துக்கும் அதிகமாக நிறுத்தி வைத்திருந்ததோடு, அவரது கட்டுரைகளில் இராணுவத்தை விமர்சிப்பதற்காக அவரை அச்சுறுத்தினர். நவம்பர் 26 விடுதலைப் புலிகளின் "மாவீரர் தினக்" கூட்டங்களுக்கு முன்னதாக, பல இடங்களில் அதற்கான ஏற்பாட்டு நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினரும் பொலிசாரும் தடங்கலை ஏற்படுத்தினர். அலங்காரங்களை இடித்துத் தள்ளியதோடு முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு தமது வாகனங்களில் உள்ள கொடிகளை அகற்றுமாறு கட்டளையிட்டனர். தமிழீழ மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இராணுவம் அவர்களது அலுவலகத்துக்குள் நுளைந்து சட்ட விரோதமாக தேடுதல் நடத்தியதோடு இரண்டு மாணவர்களையும் தாக்கியதாக தெரிவித்துள்ளது. டிசம்பர் முற்பகுதியில், ஐ.தே.மு அமைச்சரான டி.மகேஸ்வரனுக்கும் அவரது பாதுகாவலர்களுக்கும் ஒரு இந்துக் கோவிலும் கடற்கரைப் பகுதியும் உள்ள கீரிமலைக்கு செல்ல இராணுவம் அனுமதியளிக்கவில்லை என அவர் முறைப்பாடு செய்திருந்தார். அவர் தனது வீட்டுக்கு முன்னால் ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்தபோது, ஆயுதம் தரித்த பொலிசாரும் இராணுவத்தினரும் நின்று பார்த்துக்கொண்டிருந்தனர். 2002 பெப்பிரவரியில் யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர், பாதுகாப்பு படையினர் முழு வெகுஜனங்களையும் அச்சுறுத்துவதன் பேரில் சாதாரண தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை தொடர்ச்சியாக அவமதித்து வந்தனர். நாட்டின் கொடூரமான அவசரகால சட்டத்தின் கீழ் நூற்றுக்கணக்கான கண்மூடித்தனமான கைது நடவடிக்கைகள் இடம்பெற்றன. யுத்த நிறுத்தம் இந்த ஒடுக்குமுறையான நிலைகளில் இருந்து கொஞ்சம் விடுதலை கொடுத்திருந்தது. ஆனால் இப்போது குமாரதுங்க பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சுக்களின் கட்டுப்பாட்டை தன்வசம் கொண்டிருப்பதால், இராணுவத்தினரும் பொலிசாரும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக உணர்கின்றனர் என்பது தெளிவு. |