WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Socialist Equality Party announces US presidential campaign
Support the Socialist Equality Party in 2004
சோசலிச சமத்துவக் கட்சி அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கலந்துகொள்கின்றது
2004ல் சோசலிச சமத்துவக் கட்சியை ஆதரிக்கவும்
ஜனாதிபதி பதவிக்கு பில் வான் ஓகென்
துணை ஜனாதிபதி பதவிக்கு ஜிம் லோரன்ஸ்
Statement by the Socialist Equality Party
27 January 2004
Back to screen
version |
Volunteer for the
campaign & donate
2004ம் ஆண்டு அமெரிக்க தேர்தல்களில், ஒரு சுயாதீனமான சோசலிச வேட்பாளரை நிறுத்திப்
பிரச்சாரம் செய்யும் திட்டத்தில், சோசலிச சமத்துவக் கட்சியானது, உலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர்கள்
மற்றும் அதன் ஆதரவாளர்கள் அனைவரையும் பங்கேற்குமாறு அழைக்கிறது.
உழைக்கும் மக்களுடைய நலன்களை பாதுகாத்திடவும் போர் மற்றும் சமூக தாக்குதல்களை
எதிர்க்கவும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலை எதிர்க்கவும், சோசலிச சமத்துவக் கட்சியானது ஜனநாயக மற்றும்
சோசலிச வேலைத் திட்டத்தை முன்வைக்கிறது. அது ஜனாதிபதி பதவிக்கு பில் வான் ஓகென்-ம், துணை ஜனாதிபதி பதவிக்கு
ஜிம் லோரன்சையும் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது. 54 வயது நிரம்பிய பில் வான் ஓகென், உலக சோசலிச வலைத்
தளத்திற்கான முழுநேர எழுத்தாளர் ஆவார். இவர் நியூயோர்க் நகரில் வசித்து வருகிறார். 65 வயது ஆன ஜிம்
லோரன்சோ, ஓர் ஓய்வுபெற்ற மோட்டார் தொழிலாளி ஆவார்; இவர் ஜெனரல் மோட்டார்ஸின் டேற்றன், ஒகையோ
ஆலைகளில் 30 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். United Auto
Workers Local 696 ன் உறுப்பினரான இவர் தேசிய சட்ட மன்றத்திற்கான
(Congress) சோசலிச வேட்பாளராக இருந்திருக்கிறார்.
சோசலிச சமத்துவக் கட்சி எந்த அளவிற்குத் தேசியச் சட்டமன்றத் தேர்தல்களில்
வேட்பாளர்களை நிறுத்த முடியுமோ, அந்த அளவிற்கு நிறுத்த முயற்சி செய்யும்.
சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரம், அமெரிக்காவிலிருக்கும் உழைக்கும்
மக்களுக்கு மட்டும் அல்லாமல், சர்வதேச அளவிலும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இதுகாறும் இல்லாத அளவிற்கு
அமெரிக்க இராணுவவாதம் வெடிப்புப் பெற்றுள்ள நிலையின் பின்னணியிலும், உலகில் மற்ற பகுதிகளில் இருக்கும் அரசாங்கங்களுக்கு
ஒரு முன்மாதிரியாக இருக்கும் வகையில் அமெரிக்க தொழிலாளர்களின் நிலைமைகள் மற்றும் உரிமைகள் மீதான தாக்குதல்களின்
பின்னணியில் இத்தேர்தல் நடைபெறுகிறது.
புஷ் நிர்வாகமானது அமெரிக்க
கொள்கையில் ஒரு புதிய ஆபத்தான திருப்பத்தை பிரதிபலிக்கிறது என்றுதான் அமெரிக்காவிலும் உலகம் முழுவதிலும் உள்ள
மில்லியன் கணக்கான மக்கள் உணர்ந்துள்ளனர். எதிர்த்துப் போராடுவதற்கு அவர்கள் வழிவகைகளைத் தேடிவருகின்றனர்.
ஜனநாயக மற்றும் குடியரசுக்கட்சி வேட்பாளர்களின் கூச்சலிலும், ஒருவர்மீது ஒருவர் சேற்றைவாரி வீசிக்கொள்ளுவதிலும்
அவர்கள் அவற்றைக் காணப்போவதில்லை. இந்தப் பிரச்சாரங்களில் நூற்றுக் கணக்கான மில்லியன்கள் கணக்கில் டாலர்கள்
இறைக்கப்படுகின்றன; ஆனால், சமூக, அரசியல் நெருக்கடிகள் எவ்வாறு நாட்டை இறுக்கிப்பிடித்திருக்கின்றன என்பது
பற்றிய ஆழ்ந்த அக்கறை கொண்ட மற்றும் நேர்மையான விவாதங்கள் அங்கு நடைபெறுவதில்லை.
இந்தப் பிரச்சாரத்தை தொடக்குவதில் சோசலிச சமத்துவக் கட்சியானது முற்றிலும்
உண்மையான நடைமுறையைத்தான் கொண்டுள்ளது. இப்பொழுதுள்ள நிலைமையில் எங்களுடைய வேட்பாளர்களுக்கு மிகக்
குறைந்த வாக்குகள்தான் கிடைக்கும் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். ஆனால் எங்களுடைய நோக்கம்,
அமெரிக்காவிற்குள்ளும், சர்வதேச அளவிலும் அரசியல் விவாதத்தின் தரத்தை உயர்த்துவதே ஆகும்; இறுகப்பிடித்துள்ள
வலதுசாரி முதலாளித்துவ அரசியலை உடைத்து, நடைமுறையிலுள்ள அரசியல் கட்சிகள், செய்தி ஊடகங்கள் இவற்றின்
உணர்ச்சிப் பேச்சுக்களுக்கும் பொய்களுக்கும் ஒரு சோசலிச மாற்றை முன்வைப்பது ஆகும். எங்கள் பிரச்சாரம்
வாக்குகளைப் பற்றியது அல்ல. அது கருத்தியல்களையும், கொள்கைகளையும் பற்றியது ஆகும்.
சோசலிச சமத்துவக் கட்சி இந்தத் தேர்தல்களை, சமூக, அரசியல் நெருக்கடிபற்றிய
ஆழ்ந்த விவாதத்தை வளர்ப்பதற்கு ஒரு வாய்ப்பாக பயன்படுத்தும் மற்றும் அமெரிக்க சமுதாயத்தின் ஒரு புரட்சிகரமான
மாற்றத்திற்காக ஒரு பெரும் மக்கள் இயக்கத்தை கட்டி அமைப்பதற்குத் தேவையான வேலைத்திட்ட அடித்தளங்களை
அமைக்கும்.
சோசலிச சமத்துவக் கட்சி இந்தப் பிரச்சாரத்தை வெறும் தேசிய அளவில் அல்லாது
சர்வதேச அளவில் நடத்த விரும்புகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம் கடைப்பிடிக்கும் கொள்கைகளினால் ஆழமாக மற்றும்
அழிவுகரமாக பாதிப்பிற்குட்டுள்ள, உலகம் முழுவதும் இருக்கின்ற அடக்கப்பட்டுள்ள, பெரும் எண்ணிக்கையிலான உழைக்கும்
மக்களின் நலன்களைப் எங்கள் பிரச்சாரம் பிரதிநிதித்துவம் செய்யவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
அமெரிக்காவின் உலகளாவிய தாக்கம் காரணமாக, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள
மக்களும் இத்தேர்தலில் கலந்து கொள்வது முற்றுமுழுதாக பொருத்தமானதாகும். இது இதுவரையில் சாத்தியமில்லாது
இருப்பதால், சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர்கள் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் மத்தியிலும் மற்றும்
உலகம் முழுவதும் உள்ள அதன் வர்க்க சகோதரர், சகோதரியர்கள் மத்தியிலும் ஒரு சர்வதேச ஒன்றிணைப்பிற்கான
உணர்வினை அபிவிருத்தி செய்வதற்காக இத்தேர்தலை பயன்படுத்துவர்.
சர்வதேச ஐக்கியத்திற்கான இந்தப் போராட்டத்தை எங்களுடைய பிரச்சாரத்தின் மிகவும்
முக்கியமான பணியாக நாங்கள் கருதுகிறோம். சகலவிதமான பேரினவாதத்தையும் மற்றும் மத, இன அல்லது தேசிய
அடையாளத்தை அடித்தளமாக கொண்டு பிற்போக்குவாதத்திற்கு அழைப்புவிடுவதையும் எதிர்ப்பது ஏகாதிபத்தியத்திற்கு
எதிரான உண்மையான உலகந்தழுவிய இயக்கத்தை ஊக்குவிக்கும் முயற்சிக்கு இன்றியமையாதது ஆகும்.
அத்தகைய மாற்றீடு தேவையென உணர்பவர்கள் அனைவருக்கும் நாங்கள் கூற
விரும்புவதாவது: இன்றே சோசலிச சமத்துவ கட்சியுடன் தொடர்பு கொள்ளுங்கள், எங்கள் வேட்பாளர்களை, உங்கள்
மாநிலத்தில் வாக்குச் சீட்டில் இடம்பெறச் செய்வதற்கு ஏதுவாக கையெழுத்து இடுங்கள், உங்களுடைய தேசிய சட்டமன்றத்
தொகுதியிலும் ஒரு சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளரை நிறுத்துவதற்கு உடன்படுவதன் மூலம் சோசலிச சமத்துவக்
கட்சியின் பிரச்சாரத்தின் கொள்கைகளுக்காக பாடுபடுங்கள்!
நெருக்கடிக்கான அடிப்படைக் காரணங்கள்
புஷ்ஷை ஆட்சியிலிருந்து அகற்றி விடுவதன்மூலம் உழைக்கும் மக்களை எதிர்கொண்டுள்ள
பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவிடும் என்று நம்புவது ஒரு பிரமை ஆகும். இறுதிஆய்வில், புஷ் நிர்வாகம், சமூக
பொருளாதார நெருக்கடிக்கு முற்போக்கான, பகுத்தறிவுடன் கூடிய விடை இல்லாத அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டின்
நம்பிக்கை இழந்த, நோக்கு நிலை தவறிய, மூர்க்கத்தனத்தின் அரசியல் வெளிப்பாடு ஆகும். புஷ்ஷும் அவருடைய
சகாக்களும் இந்த செல்வந்தத் தட்டிற்குள்ளே உள்ள மிகத் தீய, பிற்போக்கான, ஏன் குற்றஞ்சார்ந்த சக்திகளைப்
பிரதிநிதித்துவப் படுத்துகின்றனர் என்பதில் சந்தேகமில்லை. ஜனநாயகக் கட்சி வெற்றிபெற்றாலும், தேர்தல் பிரச்சார
வாக்குறுதிகள் வெகுவிரைவில் தேர்தல் உணர்ச்சிப் பேச்சில் இயங்கும் கீழ்த்தர நடைமுறை என்பது அம்பலப்படும். ஒரு
புதிய ஜனநாயகக் கட்சி ஜனாதிபதியும், பெருவர்த்தக நலன்களுக்கு அடிபணிந்து நின்று, அதே உலக ஆதிக்க ஏகாதிபத்திய
மூலோபாயத்தைத்தான் தொடர்ந்து கடைப்பிடிக்கும்.
அமெரிக்க கொள்கையில் அடிப்படையான, முன்னேற்றகரமான திருப்பம் என்பது வெறுமனே
ஆட்சி புரியும் தனிநபர்களில் ஏற்படும் மாற்றம் அல்ல, மாறாக அமெரிக்க மக்கள்மீது பெருவர்த்தக நலன்கள், பெரும்
அளவில் அளவில் தனியார் செல்வம், இலாப அமைப்புமுறை இவை அனைத்தாலும் செய்யப்படும் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி
வைக்கும் ஒரு சமூக புரட்சிதான் தேவையாகும்.
அத்தகைய ஒரு தீவிர மாறுதலுக்கான தேவை, அமெரிக்க முதலாளித்துவத்தின் நெருக்கடியின்
தன்மையிலும் ஆழத்திலும் இருந்து ஊற்றெடுக்கிறது; இதன் காரணங்களாவன:
1.தேசிய- அரசு முறை சிதையத் தொடங்கியுள்ளது: உலகப் பொருளாதாரம்
இதுகாறும் இல்லாத அளவிற்கு ஒருங்கிணைந்தும் ஒன்றை ஒன்று சார்ந்திருத்தலும் -பூகோளமயமாக்கல் என அழைக்கப்படும்
நிகழ்வுப்போக்கு- முதலாளித்துவம் சார்ந்திருக்கும் தேசிய-அரசு அமைப்பு முறையுடன் இயைந்து இருக்கமுடியாது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வன்முறைவெடிப்பு, புஷ் நிர்வாகத்தின் முன்கூட்டிய போர் என்ற கொள்கை விளக்கம் மூலம்
வெளிப்பட்டுள்ளது, உலகப் பொருளாதாரத்திற்கும் தேசிய-அரசுக்கும் இடையிலான முரண்பாட்டை, ஒரு நாட்டின்,
அமெரிக்காவின், மேலாதிக்கத்ததை ஏனைய நாடுகளின்மீது நிறுவும் முயற்சியின் மூலம் தீர்த்துவைக்கும் தணியா முயற்சியைப்
பிரதிநிதித்துவம் செய்கிறது.
2. இலாபநோக்கிற்கான உந்துதலும்
அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை சுரண்டுதலும்: தொழிலாள வர்க்கத்தின் சமூக அந்தஸ்த்தில்
ஏற்பட்ட உலக ரீதியான வீழ்ச்சியானது, மலிவான விலையில் மூலப்பொருட்களுக்காகவும், குறைந்த கூலிகளுக்காவும்
பூகோளம் முழுதும் தேடி அலையும், நாடுகடந்த நிறுவனங்களின் தோற்றத்தோடு பிணைந்துள்ளது. தொழில் நுட்பத்தில்
ஏற்படும் முன்னேற்றங்கள், வேலைகள் மிகக்குறைந்த ஊதியங்களைக் கொண்டுள்ள மற்றும் மிகவும் ஈவிரக்கமற்ற சுரண்டுதல்
மட்டங்கள் உள்ள இடங்கள் உயர்ந்த இலாப வீதத்தை சாத்தியமாக்குகிறதோ, அந்த இடங்களில் வேலை வாய்ப்புக்களுக்கு
பயன்படுத்தப்படுகின்றன. இந்த கசப்பான பூகோள முதலாளித்துவ அபிவிருத்தி நிகழ்ச்சிப்போக்கின் அமெரிக்க
தொழிலாளர்கள் மீதான நேரடித் தாக்கம் வேலை இழப்புக்களும் ஊதியங்களில் ஏற்றபட்ட சரிவும் ஆகும்.
உற்பத்திமுறையின் அதிகரித்த அளவிலான பூகோள தன்மை, ஒரு சாத்தியமான
முற்போக்கான வளர்ச்சியை உள்ளடக்கியுள்ளது. அது உலகம் முழுவதும் வறுமையை அகற்றவும், வாழ்க்கைத் தரத்தை
உயர்த்தவும், மனிதனுடைய உற்பத்தி சக்திகளை பகுத்தறிவுபூர்வமாக விரிவாக்குவதற்கும் ஒருங்கிணைப்பதற்குமான
சாத்தியத்தைத் திறந்துவிடுகிறது. ஆனால் தொழில்துறை, நிதி இவற்றின் முதலாளித்துவ தனிச்சொத்துடைமையின்
கட்டமைப்பிற்குள்ளே, பூகோளமயமாக்கலானது தொழிலாள வர்க்கத்திற்கு எதிரானதாக ஆகிறது.
பழைய தொழிலாளர் அமைப்புக்களின் நோக்குநிலை (தகவமைவு) - தேசிய தொழிலை
காத்தல் மற்றும் தேசிய தொழிலாளரின் சந்தையை காத்திடல் போன்றவை, பூகோளரீதியாக ஒருங்கிணைந்த உற்பத்தி
மற்றும் இதுகாறும் இல்லாத அளவு மூலதன நகர்வு ஆகியவற்றால் கீழறுக்கப்படுட்ள்ளது. அமெரிக்காவில் உள்ள
AFL-CIO உள்பட,
இந்த அதிகாரத்துவ எந்திரங்களுடைய பாத்திரமானது தொழிலாளர்களுக்கு சலுகை வழங்குவதற்காக
வேலைகொடுப்போருக்கும் அரசாங்கத்திற்கும் அழுத்தம் கொடுப்பதிலிருந்து, மூலதனத்தை ஈர்ப்பதற்காக
வேலைகொடுப்போருக்கு சலுகை வழங்குவதற்கு தொழிலாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக மாறியுள்ளது. தேசிய
வேலைத் திட்டத்தின் நலன்களுடன் இரண்டற கலந்துள்ள, இந்த அமைப்புக்கள், அடிப்படையிலேயே பிற்போக்கான
பங்கைத்தான் ஆற்ற முடியும்.
தங்களுடைய வேலைகள், ஊதியங்கள், வேலைநிலைமைகள் இவற்றைக் காப்பாற்றிக்கொள்ள,
அமெரிக்கத் தொழிலாளர்கள், அனைத்துவிதமான பொருளாதார தேசியவாதம் மற்றும் பாதுகாப்புவாதம் இவற்றை
நிராகரிக்கவேண்டும்; இவை அவர்களை அவர்களுடைய பெருவர்த்தக முதலாளிகளுக்கு பணிந்து நடக்கச் செய்வதோடு
அவர்களையும் மற்ற நாடுகளில் உள்ள அவர்களுடைய உழைக்கும் வர்க்க சகோதர, சகோதரிகளிடமிருந்து பிரித்தும்
வைக்கிறது- மேலும் நாடுகடந்த நிறுவனங்களின் பூகோள மூலோபாயத்திற்கு எதிராக தங்களின் சொந்த பூகோள
மூலோபாயத்தை வைக்க வேண்டும். தொழிலாளர்கள் தங்களின் வேலைகள் மற்றும் வாழ்க்கைத் தரத்தைப்
பாதுகாப்பதற்கான தங்களின் போராட்டங்களை சர்வதேச ரீதியாக போராடும் தொழிலாளர்களின் போராட்டத்துடன்
ஒருங்கிணைக்க அவர்கள் நனவுபூர்வமாக கட்டாயம் முயற்சிக்க வேண்டும், அனைத்து நாடுகளிலும் இருக்கும்
தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு, ஒரு பொதுவான முதாலாளித்துவ எதிர்ப்பு மற்றும் சோசலிச வேலைத்
திட்டத்தின் அடிப்படையில் போராட வேண்டும்.
3. சமூக சமத்துவமற்ற நிலையின் வளர்ச்சி: உலகத்தின் 5.5 பில்லியன்
மக்கட்தொகையில் பெரும்பான்மையானவர்களுடைய நலன்கள், இலாப உந்துதலுக்கு கீழ்ப்படுத்தப்பட்டுள்ளன, இந்த இலாப
உந்துதல் சமூகத்தின் மிகமிகச் சிறிய அளவிலானோரின் நலன்களை பெருக்கிக் கொள்ளத்தான் பயன்டுகிறது. கடந்த இருபது
ஆண்டுகளான சமூக சமத்துவமின்மையின் மிக அதிக அளவிலான அதிகரிப்பு முதலாளித்துவத்தின் விரும்பத்தகாத இயல்புகளில்
ஒன்று மட்டும் அல்ல. மாறாக, அமெரிக்காவிலும் மற்றும் அபிவிருத்தியடைந்த முதலாளித்துவ நாடுகளின் அதிக
பணக்காரராக இருக்கும் உயர்மட்டத்தின் 1 சதவிகிதத்தினரிடம் பாரியளவிலான அளவு செல்வக் குவிப்பு, ஒட்டுமொத்த
சமூக பொருளாதார முறையையும் சிறப்பான முறையில் செயலாற்ற விடாமல் செய்வதில் ஒரு பிரதாரன காரணி ஆகும்.
வேலைகள், சுகாதார நலன், கல்வி, வீட்டு வசதி ஆகிய எந்த அளவு தீவிரமாக
பிரச்சினைகளாக இருந்தாலும், சமூக நெருக்கடிகளுக்களை தீர்த்துவைக்க திட்டமிடப்படும் முடிவுகள் ஏற்கப்படுவதும்,
மறுக்கப்படுவதும், எந்த அளவிற்கு செல்வந்தர்களின் தனிச் சொத்துரிமையை அவை தாக்காமல் இருக்கும் என்ற
அடிப்படையில் முடிவு எடுக்கப்படுகிறது. அனைத்து, அரசியல், சமூக, பொருளாதார பிரச்சினைகளைத் தீர்க்கும் முடிவுகள்
எல்லாமே, பின்வரும் சூத்திரத்தின் அடிப்படையில்தான் இருக்கும்: செல்வந்தரின் செல்வக் கொழிப்பைப் பெருக்கும்
முடிவுகள் அனைத்தும் நல்லவையே. தனிப்பட்டோர் செல்வக் குவிப்பிற்கு எவையெல்லாம் தடையாக இருக்கின்றனவோ,
அவை தீயவை, முடிந்தால் அவை சட்டவிரோதமாக்கப்பட வேண்டும் என்பதாகும்.
4. முதலாளித்துவத்தின் அராஜகம்: ஒரு சிக்கல் வாய்ந்த பெரும் சமூகத்தினால்
தோன்றியுள்ள விரிவடைந்து வரும் சமுதாயத்தேவைகள் அனைத்தும், உற்பத்தி சக்திகளின் தனிச் சொத்துடைமை மற்றும்
தடையற்ற தனியார் செல்வக் குவிப்புமுறை இவற்றின் கட்டமைப்பிற்குள், நிறைவேற்றப்பட முடியாதவை ஆகும்.
மனிதகுலத்தின் உற்பத்தி சக்திகள், தொழில்நுட்பம் இவை விஞ்ஞான ரீதியாகவும், சமுதாய நோக்கிலும்
பயன்படுத்தப்படவேண்டியதற்கான தேவை -இது இல்லாததால் மனித நாகரிகம் உயிர்பிழைத்திருப்பதையே அச்சுறுத்துகின்ற
நிலையில்- நனவான முறையில் இலாப நோக்கை, மனிதாபிமான, ஜனநாயகபூர்வமான மற்றும் அறிவார்ந்த சமூக
திட்டமிடலுக்கு கீழ்ப்படுத்தும் வரலாற்றுப் பணியை முன்வைக்கிறது -அதாவது, முதலாளித்துவத்தை அகற்றி அதனிடத்தில்
சோசலிசத்தை இடம்பெறச் செய்வதாகும்.
இந்தப் போராட்டத்தை வழிநடத்திச் சென்று, சோசலிசத்தின் அரசியல் மற்றும்
பொருளாதார அடித்தளங்களை நிறுவக்கூடிய ஆற்றல் படைத்த சமூக சக்தி தொழிலாள வர்க்கம்தான். இன்றைய
மிகப்பெரிய மக்கட்திரள் நிறைந்த, உலகமயமாக்கப்பட்ட சமுதாயத்தில், தொழிலாள வர்க்கம் மிக அதிகமான
வறுமையில் வாடும் தொழிலாளர்களையும் விட அல்லது தொழிற்சாலையில் பணி புரிபவர்கள் என்பதையும் விட பரந்த
தட்டுகளை அணைத்து நிற்கிறது. வெள்ளைக் காலர் வேலைபுரிபவர்கள், கல்லூரிப்படிப்பு முடித்த தொழில் வினைஞர்கள்,
கலை, பண்பாட்டு புலத்தில் பணிபுரிபவர்கள், சுருக்கமாகக் கூறினால் எவரெல்லாம் ஊதியக் காசோலையை நம்பித்தான்
வாழவேண்டியிருக்கின்றனரோ, அவர்கள் எல்லாரும் தொழிலாள வர்க்கத்தின் பகுதியினரே ஆவர். ஆசிய, இலத்தின்
அமெரிக்க, ஆபிரிக்க கண்டங்களின் பழைய குடியேற்றங்களில், நூற்றுக் கணக்கான மில்லியன் விவசாயிகள் நகரத்திற்குள்
கொண்டுவரப்பட்டு ஆலைகளிலும், மாடாய் உழைப்பதற்கு, பாரிய நாடுகடந்த நிறுவனங்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்டு-
தொழிலாள வர்க்கத்தின் அணிகளை எண்ணிக்கை ரீதியாக பரந்த அளவில் விரிவடையச்செய்திருக்கிறது மற்றும் உலகப்
பொருளாதாரத்தில் அதன் சமூக எடையை அதிகரித்திருக்கிறது.
இந்த பில்லியன்கணக்கிலான ஊதியம் சம்பாதிப்பவர்கள், அதேபோல சிறிய மற்றும் நடுத்தர
அளவிலான வர்த்தகர்கள் அனைவருமே, மகத்தான முறையில் தொழில்துறை மற்றும் நிதிமூலதனத்தைக் கட்டுப்படுத்தும்
மிகச்சிறிய செல்வந்தத் தட்டின் தயவில்தான் இருக்கின்றனர். நாம் "பங்குதாரர் ஜனநாயகத்தில்" வாழ்ந்து
கொண்டிருகிறோம் என்பது மோசடியான கூற்று ஆகும். முந்தைய காலகட்டத்தில், முன்னேற்றகரமான சீர்திருத்தங்கள்
உத்தியோகபூர்வ அரசியலின் முறைமையான பகுதியாகக் கருதப்பட்ட பொழுது, உற்பத்தி சக்திகளை ஏகபோக உரிமைக்கு
உட்படுத்திக் கொள்ளுததல் ஜனநாயக முறைக்கு விரோதமாக கருதப்பட்டதுடன், பாரிய கூட்டுநிறுவனங்களையும், சிறு
எண்ணிக்கையானோர் சொத்துக்களை குவிப்பதையும் உடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் இத்தகைய
கொள்கைகள் அனைத்து வகைப்பட்ட அதிகாரபூர்வமான முதலாளித்துவ அரசியல்வாதிகளாலும் நீண்டகாலமாகவே
கைவிடப்பட்டு விட்டன.
ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் கீழ், பொருளாதார வாழ்க்கையை பாரிய பரந்துபட்ட
மக்களுடைய நலன்களுக்கு ஏற்ற முறையில் மறு ஒழுங்குசெய்ய வேண்டிய பொறுப்பு தொழிலாள வர்க்கத்திடம்
வந்திருக்கிறது. இதற்கு முன் கட்டாயத்தேவையாக இருப்பது, நிதித்துறை, தொலைத்தொடர்புத்துறை, தகவல் தொழில்
நுட்பம், மருந்துத்துறை, மின்சார, போக்குவரத்து அல்லது அமெரிக்கா அல்லது உலகெங்கிலும் உள்ள மக்கள்
எதிர்கொள்ளும் வாழ்வைப் பாதிக்கும் பொருளாதார வாழ்வின் எந்தத் துறையாயினும் சரி, அவற்றின் மீதான
பெருந்திரளான மூலதனக் குவிப்பின் மீது ஜனநாயக ரீதியான மற்றும் பொதுக் கட்டுப்பாட்டினை நிறுவுவதாகும்.
2004 ம் ஆண்டின் தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சி, ஒரு புதிய பெரும் மக்கள்
அரசியல் இயக்கத்தின் மூலம், பிற்போக்கான மற்றும் திவாலாகிவிட்ட பெருநிறுவன அமெரிக்க கட்சிகளுக்கு ஒரு சோசலிச
மாற்றீட்டை முன்வைக்கும் வகையில் தலையீடு செய்கிறது. இந்த இயக்கத்தின் இலக்கு, முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல்
மேலாதிக்கத்திற்கு கட்டாயம் முற்றுப்புள்ளி வைப்பதாக இருக்கவேண்டும் என்பதும், ஒரு தொழிலாள வர்க்கத்தின்
அரசாங்கத்தை நிறுவவேண்டும் என்பதும் ஆகும்; இத்தகைய அரசாங்கம் உழைக்கும் மக்களுடைய பொருளாதார மற்றும்
சமூக நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் என்பதுடன், அவர்களின் வாழ்க்கையை பாதிக்கும் முடிவுகள் மீதாக அவர்களின்
ஜனநாயகக் கட்டுப்பாட்டை பரந்த அளவில் விஸ்தரிக்கும். தொழிலாள வர்க்கத்தின் மீதான ஜனநாயக மற்றும் குடியரசுக்
கட்சிகளின் செல்வாக்கை உடைக்க நாங்கள் விரும்புகிறோம். எங்களுடைய பிரச்சாரத்தின் இலக்கு, அமெரிக்க
தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதும் கல்வியூட்டுவதும் ஒரு வர்க்க நனவான மற்றும் அரசியல் ரீதியாய் ஒரு
சுயாதீனமான சக்தியாக மாற்றுவதும் ஆகும்.
அமெரிக்க ஏகாதிபத்தியமும் போரும்
2004 ம் ஆண்டுத் தேர்தல் பிரச்சாரம், அமெரிக்க இராணுவவாதத்தின் வெடிப்பால்
மேலாதிக்கம் செய்யப்படுகிறது. வெள்ளை மாளிகையில் புஷ் நுழைந்ததிலிருந்தே அமெரிக்கா, ஆப்கானிஸ்தானையும்,
ஈராக்கையும் தாக்கி ஆக்கிரமித்துள்ளது, சிரியா, ஈரான், வடகொரியா ஆகிய நாடுகள்மீது வருங்காலத்தில்
தாக்குதல்கள் நடத்த இலக்கு வைத்துள்ளது; இதைத்தவிர, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், கஜக்கஸ்தான், ஜோர்ஜியா,
லைபீரியா, கொலம்பியா அகிய நாடுகளில் படைகளை நிறுத்திவைத்துள்ளதோடு, விமானங்களையும், மற்றய
போர்த்தளவாடங்களையும் நிறுத்திவைத்திருக்கிறது.
அமெரிக்கப் போர் உந்துதலின் பண்பானது ஏகாதிபத்திய மற்றும் நவகாலனித்துவத்தையும்
கொண்டுள்ளது. சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம் பொறிந்த பின்னர், அமெரிக்க ஆளும் செல்வந்தத் தட்டு
அதன் உலக மேலாதிக்கத்தை திறமையுடன் தடை செய்ய எந்த சக்தியும் இல்லை என்ற நம்பிக்கை கொண்டிருக்கிறது.
அதனது நோக்கம், அதன் போட்டி அரசுகள் போதிய பலமடைந்து அமெரிக்காவிற்கு சவால் விடுமுன் அமெரிக்க
கட்டுப்பாட்டிலுள்ள நாடுகடந்த நிறுவனங்களின் நலன்களை பாதுகாப்பதாகும். 2001, செப்டம்பர் 11, பயங்கரவாத
தாக்குதல்களுக்கு பாதுகாப்பு பதில் நடவடிக்கை என அமெரிக்க இராணுவவாதத்தின் வெடிப்பை புஷ்ஷும் அமெரிக்க
செய்தி ஊடகமும் காட்டிக்கொள்ள முற்பட்டாலும், புஷ்ஷின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் தீவிர வலதுசாரிப்பிரிவு,
1990கள் முழுவதுமே அத்தகைய கொள்கையைக் கடைபிடிக்கவேண்டும் என்று கூறிவந்துள்ளது. செப்டம்பர் 11
தாக்குதல்கள், முன்னரே திட்டமிடப்பட்டிருந்த வென்று கைப்பற்றுதல் என்ற முன்நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு ஒரு
சாக்குப்போக்கைத்தான் கொடுத்துள்ளன.
அமெரிக்கா, ஈராக்கை வெற்றி கொண்டதின் உண்மையான நோக்கங்கள் மூன்று ஆகும்:
உலகத்திலேயே இரண்டாம் மிகப்பெரிய எண்ணெய் வளங்களுக்கு வழிகளை பெறுதல்; மத்திய கிழக்குப் பகுதியின் நடுவில்
அமெரிக்க படைகளை நிறுத்திவைத்தல், அதன் மூலம் வர இருக்கக்கூடிய போட்டியாளர்கள் எல்லோரையும் விட,
இணையற்ற பூகோள-அரசியல் நலன்களை பெறுதல்; உள்நாட்டில் பெருகி வரும் சமூக அதிருப்தியை, வெளிநாட்டுப் பக்கம்
திசைதிருப்புதல் ஆகும்.
முதலாளித்துவப் பொருளாதாரத்திற்கும் போருக்கும் ஒன்றுடன் ஒன்று பிரியமுடியாத
தொடர்பு உள்ளது: பெரிய முதலாளித்துவ சக்திகள் அனைத்துமே, மிகக் கடுமையான முறையில் சந்தைகளுக்காகவும்,
இலாபங்களுக்காகவும், மலிவான கூலி உழைப்பிற்காகவும், மலிவான விலையில் மூலப்பொருட்களுக்காகவும், அதிகரித்த
அளவில் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இறுதி ஆய்வுகளில், சர்வதேச தொழிலாள வர்க்கம் ஒரு புரட்சிகர
சக்தியாக தலையீடு செய்து, ஏகாதிபத்தியம் ஒட்டுமொத்தத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்காவிடில், பெரிய வல்லரசுகளுக்கு
இடையே பூகோள மோதல் என்பது தவிர்க்க இயலாது.
"பயங்கரவாதத்திற்கு" எதிரான போராட்டம் என்ற பெயரில் ஆப்கானிஸ்தானிலும்
ஈராக்கிலும், தன்னுடைய குற்றஞ் சார்ந்த செயல்தன்மையை மறைக்க புஷ் நிர்வாகம் முயன்றுள்ளது. இன்றைய
"பயங்கரவாதி" அல்லது "கொடுங்கோலன்" என்பது அநேகமாக நேற்றைய நண்பன்தான் என்பதை இந்த நிர்வாகம்
மறைக்கப்பார்க்கிறது; இந்த வகையினத்தில், சதாம் ஹுசைன் மட்டும் அடங்கவில்லை; ஒசாமா பின் லேடன்,
ஸ்லொபோடன் மிலோசவிக், மானுவல் நோரிகா மற்றும் அமெரிக்க இராணுவ நடவடிக்கையின் இலக்காகக் கடந்த
இருபது ஆண்டுகளாக இருப்பவர்கள் அனைவருமே இதில் அடங்குவர்.
பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு ஒரேவழி, அது தோன்றியதற்கான காரணத்தை
அழிப்பதுதான்: அமெரிக்க இராணுவ, அரசியல், பொருளாதார ஆதிக்கம் மத்திய கிழக்கில் இருப்பதற்கு முற்றுப்புள்ளி
வைத்தல், அனைத்து அமெரிக்க இராணுவப் படைகளையும் திரும்பப் பெறுதல், இயற்கை வளங்களைக் கட்டுப்படுத்துதல்
உள்பட, அந்தப் பகுதியிலிருக்கும் மக்கள் தங்களுடைய அரசியலை தாங்களே தேர்ந்தெடுக்கும் முறையில் தடையின்றி
விட்டுவிடுதல் ஆகியனவாகும். மத்திய கிழக்கு பூசலுக்கு இதுதான் ஜனநாயக முறையிலான அடிப்படை முன்நிபந்தனை ஆகும்;
இது யூதர்கள், அராபியர்கள், குர்துகள், மற்றும் அந்தப் பிராந்தியத்தில் இருக்கும் பல மக்கள் பிரிவினர் ஒன்றாக
அமைதியுடன் வாழ வழிவகை செய்யும்.
சோசலிச சமத்துவக் கட்சி, அனைத்து அமெரிக்கப் படைகளையும், ஈரான்,
ஆப்கானிஸ்தான், முழு மத்திய கிழக்கு, மத்திய ஆசியப் பகுதிகளிலிருந்து உடனடியாகத் திருப்பப் பெறவேண்டும் என்று
கோருகிறது. ஆப்கானிஸ்தான், ஈராக் இவற்றின் மீது படையெடுக்கவேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்பட்டவர்களான,
புஷ், செனி, ரம்ஸ்பெல்டிருந்து கீழ்மட்டம் வரை, அனைவரும் போர்க்குற்றங்களுக்காக விசாரணைக்கு
உட்படுத்தப்படவேண்டும் என்று அழைப்பு விடுகின்றோம். பென்டகன் போர் இயந்திரத்தைக் கலைக்க வேண்டும் என்றும்,
அனைத்துப் பேரழிவு ஆயுதங்களையும் அகற்றிவிடவேண்டும் என்றும், அனைத்திற்கும் மேலாக இது அமெரிக்காவிலும் ஏனைய
ஏகாதிபத்திய நாடுகளிலும் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் அழைப்பு விடுகின்றோம்.
சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒற்றுமையின் அடிப்படையில் அமையும் ஒரு சோசலிச
வெளியுறவு கொள்கைகையை நாங்கள் முன்வைக்கிறோம். தொழிற்துறையில் முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகளின்
வளங்களும், தொழில்நுட்பமும், "மூன்றாம் உலக" மக்களை அடக்கவோ, சுரண்டவோ, அழித்துவிடவோ
பயன்படுத்தப்படக்கூடாது, மாறாக எல்லா உழைக்கும் மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை கெளரவமான தரத்திற்கு
உயர்த்திடவும், வரலாற்றிலேயே முதன் முறையாக, உலகரீதியாக, உண்மையான சமூக சமத்துவத்தை ஏற்படுத்தப்
பயன்படுத்தப்படவேண்டும்.
ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்
அதன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கையில், புஷ் நிர்வாகம், செப்டம்பர் 11
ஐ, முன்னரே தயாரித்து வைக்கப்பட்டிருந்த பரந்த அளவிலான நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு ஒரு சாக்காக
பயன்படுத்தியுள்ளது. "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற பெயரில், அமெரிக்க தேசபக்த சட்டம் போன்ற
இருதரப்பு சார்ந்த மசோதா மூலம், அது, குற்றம் நிரூபிக்கப்படும்வரை ஒருவரை நிரபராதி எனக் கருதும் அடிப்படை
அரசியலமைப்பு பாதுகாப்புக்களான, ஹாபியஸ் கார்ப்பஸ் (Habeas
corpus) எனப்படும் ஆட்கொணர்வு உரிமை (ஒருவர் கைது செய்யப்பட்டுத் தகவல் தெரியாவிட்டால் அவரை
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அரசைக் கட்டாயப்படுத்துதல்), வழக்கறிஞரை அமர்த்திக்க கொள்ளும் உரிமை, மற்றும்
விரைவான மற்றும் பகிரங்க விசாரணை ஆகியவற்றை தகர்த்துவிட்டது.
அமெரிக்காவில் ஒரு போலீஸ் அரசிற்கான உள்கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது:
உள்நாட்டு பாதுகாப்புத்துறை, பென்டகனுடைய வட ஆணையகம் என்னும் துறை, அனைத்து அமெரிக்க கண்டத்தில் உள்ள
இராணுவ சக்திகளையும் மையப்படுத்தி வைத்துக்கொண்டுள்ளது; குவாண்டநாமோ வளைகுடா, கியூபாவில் ஒரு கொடுஞ்சிறை
முகாமையும் ஏற்படுத்தியுள்ளது. ஜோஸ் படில்லா, யாசீர் ஆம்தி ஆகியோரை கைது செய்து காவலில் வைத்திருப்பது
பற்றிய சட்ட வாதங்களில், புஷ் நிர்வாகம், முழு அமெரிக்க நாடும் ஒரு போர் பகுதி போன்றது என்றும், ஜனாதிபதி
ஒரு இராணுவ சர்வாதிகாரி போல் நடத்து கொள்ளுவதற்கு அதிகாரம் பெற்றவர் என்றும், எந்த அமெரிக்க
குடிமகனையும் நீதிமன்ற பரிசீலனைக்கு உட்படாமல் சிறைபிடித்து வைக்கும் உரிமையைப் பெற்றவர் என்றும்
பிரகடனப்படுத்தியுள்ளது.
இத்தகைய ஜனநாயக உரிமைகள் மீதான முன்கண்டிராத இத்தாக்குதல்கள், ஜோர்ஜ்
டபுள்யூ. புஷ் அல்லது தலைமை வழக்கறிஞர் ஜோன் ஆஷ்கிராப்ட்டின் தனிப்பட்ட ஆளுமைத்திறனுடைய முடிவு அல்ல. இது
மிகப்பெரிய அளவில் கடந்த 30 ஆண்டுகளில் அமெரிக்காவில் வளர்ந்துள்ள மாபெரும் சமூக சமத்துவமற்ற நிலையின் உபரி
விளைவே ஆகும்.
மிக அதிக செல்வக் குவிப்பும், கொழிப்பும் உடைய ஒரு சிறு குழு ஆட்சிக்கும், தங்களை
செலவுகளைச் சரிக்கட்டமுடியாமல் திணறும் பெரும்பாலான தொழிலாள வர்க்கம் மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கும்
இடையில் சமுதாயமானது ஆழமாகப் பிளவுண்டு இருக்கிறது. மிகக் கடினமான முறையில் சமூக அழுத்தங்கள் இருப்பது
ஜனநாயக முறையிலான ஆட்சியைப் பராமரித்தலை இயலாததாக்கிவிட்டது. இறுதிப் பகுப்பாய்வில், ஜனநாயக உரிமைகளின்
மீதான தாக்குதல்கள் என்பது, தன்னுடைய பரந்த செல்வத்தை, பெரும்பாலான மக்களின் சமூக தேவைகளுக்கு எதிராகப்
பாதுகாத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடும் நிதிரீதியான செல்வந்த தட்டின் பாதுகாப்பு இயங்குமுறையை பிரதிநிதித்துவம்
செய்கிறது.
சர்வாதிகாரத்தின் அச்சுறுத்தல் என்பது நீண்டகால வரலாற்று நிகழ்ச்சிப்போக்குகளின்
உச்சக் கட்டமாக இருக்கிறது. இரண்டாம் உலகப் போரின் முடிவின் பின்னர் இருந்து, ஜனநாயக உரிமைகள்மீது மறுபடியும்
தாக்குதல்கள் நடத்தப்பட்ட வண்ணம் இருந்து வருகின்றன: 1950களில் மெக்கார்த்தியிசம், 1960களில்
FBI, CIA இவற்றின் உள்நாட்டு உளவு பார்த்தல்கள்,
1970களில் வாட்டர்கேட் ஊழல், 1980களில் ஈரான்-கான்ட்ரா நடவடிக்கைகள் ஆகியன. கிளிண்டன் நிர்வாகத்தின்
ஜனநாயகக் கட்சியின் நிர்வாகம் தொலைநோக்குள்ள ஜனநாயகத்திற்கு விரோதமான பல நடவடிக்கைகளை எடுத்தது.
அமெரிக்க தேசபக்த சட்டத்தின் பல கூறுபாடுகள் கிளிண்டனுடைய 1996ம் ஆண்டு பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில்
முன்னரே இடம் பெற்றிருந்தன; இது கூடுதலான மரணதண்டனைகள், இரகசிய நீதிமன்றங்கள், பெருமளவு நாடுகடத்தல்கள்
ஆகியவற்றிற்கு இடமளித்தது.
முந்தைய காலகட்டத்தில், வாட்டர்கேட் நெருக்கடி போன்ற சமயத்தில்கூட, அரசியல்
அமைப்பு முறையை மதிப்புக்குறைக்கும் வகையில் ஏதேனும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் அவற்றிற்கு ஆளும் வர்க்கத்தின்
பிரிவுகள் சிலவற்றிலிருந்தே குறிப்பிடத்தக்க எதிர்ப்புக்கள் இருந்தன. ஆனால் இப்பொழுதோ இத்தாக்குதல்கள் அதிகமாகி
கூடுதலான விளைவுகளக் கொடுக்கக் கூடிய நிலையில், ஆளும் செல்வந்தத் தட்டிற்கும், தொழிலாள வர்க்கத்திற்கும்
இடையே உள்ள நிதிரீதியான இடைவெளி அதிகமாக இருப்பதால், தாக்குதல்களைப் பற்றிய எதிர்ப்பு தொடர்ந்து
பலவீனமடைந்தே வருகிறது. இறுதியில் பதவி நீக்க விசாரணையில் போய் முடிந்த போலி விசாரணைகள் மூலம் கிளிண்டன்
நிர்வாகத்தை நிலையற்றதாக்கியதற்கு குறிப்பிடத்தக்க எதிர்ப்பு அங்கு இல்லாதிருந்தது. 2000ம் ஆண்டுத் தேர்தல்,
மக்களைத் தன்வயப்படுத்தியிருந்த செய்தி ஊடகத்தின் ஒத்துழைப்புடனும் ஜனநாயகக் கட்சியின் அடிபணிதலுடனும்
திருடப்பட்டதானது, ஆளும் செல்வந்தத்தட்டின் எந்தப் பிரிவும், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்குத் தீவிர
அக்கறை கொண்ட முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்பதை விளக்கிக் காட்டியது.
வார்த்தையின் முழுப் பொருளிலும், அமெரிக்க ஆளும் செல்வந்தத்தட்டின் உள்ளே உள்ள ஒரு
குற்றஞ்சார்ந்த பிரிவானது, அதிகாரத்திற்கு வந்துள்ளது என்பதை புஷ் நிர்வாகம் பிரதிநிதித்துவம் செய்கிறது. இது ஒரு
தேர்ந்தெடுக்கப்படாத அரசாங்கம் ஆகும்; இது உச்ச நீதிமன்றத்தால், மக்கள் பெரும்பான்மை வாக்கை
இழந்தாலும்கூட, பதவியில் இருத்தப்பட்ட அரசாங்கமாகும். ஒரு அதி- வலதுசாரி செயற்பட்டியலுக்கான எல்லாவிதமான
நியாயப்படுத்தலாக, செப்டம்பர் 11 பயங்கர நிகழ்ச்சிகளை பயன்படுத்திக்கொண்டு, அரசியல் ஆத்திரமூட்டல்
வழிமுறைகள் மூலம் இது ஆட்சியை நடத்தி வருகிறது. அதேநேரத்தில் அன்று என்ன நிகழ்ந்தது என்பது பற்றிய தீவிர
விசாரணை முயற்சியை அது தடுத்து வருகிறது; ஏன் அமெரிக்க உளவுத்துறை அமைப்புக்கள் தெரிந்திருந்த பயங்கரவாதிகளை
தடையின்றிச் செயல்பட அனுமதித்தன, ஏன் அமெரிக்க இராணுவம் நான்கு விமானங்களை அடுத்தடுத்து ஒரே நேரத்தில்
கடத்தப்பட்ட போது ஒன்றும் செய்யவில்லை, ஏன் புஷ் நிர்வாகமானது ஒரு தாக்குதலைப்பற்றிய முன்கூட்டிய
எச்சரிக்கைகளை அசட்டை செய்தது போன்ற கேள்விகளுக்கான விசாரணையை தடுத்து வருகிறது.
தன்னுடைய அரசியல் உயிர் தப்பிக்கும் முயற்சியை "பயங்கரவாதத்தின் மீதான போர்"
என்ற புனித அருள்வெளிப்பாடு மீதாக பணயம் வைக்கும் புஷ்ஷின் முடிவானது, அமெரிக்க மக்களுக்கு மிகத்தீமையான
விளைவுகளைக் கொண்டுள்ளது. மக்களின் எத்தகைய கட்டற்ற உணர்ச்சி வெளிப்பாடு இருந்தாலும் சரி, புஷ் நிர்வாகம் சுய
விருப்பத்துடன் அதிகாரத்திலிருந்து இறங்கிவிடும் என்று கருதுவதற்குக் காரணம் ஏதும் இல்லை. 2004 பிரச்சாரத்தின்
போதே, புஷ்ஷின் தேர்தல் வெற்றி வாய்ப்புக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், இந்த நிர்வாகம் ஒரு புதிய, பெரும்
பேரழிவை தரக்கூடிய பயங்கரவாதத் தாக்குதலை அனுமதிக்கும் அல்லது அதை நடத்த மறைமுகமாக ஏற்பாடு செய்யும்
உண்மையான அபாயம் இருக்கிறது. அமெரிக்கச் செய்தி ஊடகத்தில் ஏற்கனவே அப்படிப்பட்ட அபாயம் இருக்கிறது
எனக்கூறும் குறிப்புக்கள் வந்துள்ளன; நவம்பர் 2 தேர்தல்கள் ஒத்திவைக்கப் படலாம், அல்லது தள்ளிவைக்கப்பட்டு
விடலாம் அல்லது இராணுவச் சட்டத்தின் கண்காணிப்பில் நடைபெறக் கூடும்.
ஜனநாயக உரிமைகளும் சோசலிசத்திற்கான போராட்டமும்
ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு கடந்தகாலத்தில் மிகவும் பாடுபட்டு
வென்றெடுத்த முற்போக்கான சீர்திருத்தங்களை திரும்ப சுருட்டிக் கொள்ளும், மற்றும் மிகுந்த பிற்போக்கான அரசியல்
மற்றும் சமூக சக்திகளைத் தூண்டிவிடும் புஷ் நிர்வாகத்தின் முயற்சிகளுக்கு எதிராக ஒரு எதிர்த்தாக்குதல் தேவைப்படுகிறது.
சோசலிச சமத்துவக் கட்சி, கடந்த காலத்தில் பாடுபட்டு பெற்ற ஜனநாயக மற்றும் சமூக வெற்றிகளை - குடியுரிமை,
வாக்குரிமை, அனைவருக்கும் கல்வி, முதியோருக்கு சுகாதாரப்பாதுகாப்பு, அதேபோல, குடியுரிமைளைக் காப்பதில்
அரசியலமைப்பு உத்தரவாதம் அளிப்பதைப் பாதுகாப்பதிலும் தளரா முயற்சியை மேற்கொண்டுள்ளது.
சோசலிச சமத்துவக் கட்சி அனைவருக்கும் சம உரிமைகள் வேண்டும் என்று கோருவதுடன்,
வேலை கொடுப்பது, வீட்டு வசதி, கல்வி அளிப்பது அல்லது எப்பிரிவாயினும் அவற்றில் இனம், தேசிய பின்னணி, மதம்,
பால் வேறுபாடு அல்லது பால் அடிப்படையில் தனிமுன்னுரிமை காட்டுதல் இவற்றை எதிர்க்கிறது. மகளிர் விரும்பும் போது
எந்தத் தடையும் இல்லாமல் கருவை கலைத்துக் கொள்ளும் பெண்களின் தடையற்ற உரிமையைப் பாதுகாக்கிறது, ஓரினத்
திருமண உரிமையை ஆதரிக்கிறது.
ஆனால் ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு, குடியுரிமை, அரசியலமைப்பு நெறிகள் இவற்றின்
மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்தும் எதிர்மறை பணியோடு மட்டுமே வரம்பிற்குட்படுத்திவிடக் கூடாது. ஜனநாயக
உரிமைகள் என்ற கருத்துப் படிவமே, குறுகிய வரம்பான சட்டத்தின் முன்னிலையில் அனைவரும் சமம், முறையான நெறிவகை
என்ற கருத்து, இவற்றிற்கு அப்பால் விரிவு செய்யப்பட வேண்டும். அது பரந்த மக்களை கொண்டுள்ள உழைக்கும்
மக்களுடைய வாழ்வின் சமூக யதார்த்தங்களை கட்டாயமாக சூழ்ந்து அறிந்து நன்மையளிக்கவேண்டும்.
ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பு என்பது தனியார் செல்வக் குவிப்பை
கெட்டிப்படுத்துவதற்கு எதிரான போராட்டத்திலிருந்து பிரிக்க இயலாதது ஆகும். பொருளாதார சமத்துவமின்மை, சமூக
சமத்துவமின்மை ஆகியவை எங்கும் பரவிக் கலந்திருக்கும் ஒரு சமுதாயத்தில் சட்டத்தின் முன் சமமான உரிமை என்ற
கருத்துரு, அடிப்படையிலேயே பாசாங்கு நிறைந்தது ஆகும். ஒரு சிறு நிதி ஆதிக்க உயர்குழு ஆட்சி மக்களுக்கு வேலை
கிடைக்குமா, அதற்கு எவ்வளவு ஊதியம் கொடுக்கப்படும், வேலையின் நிபந்தனைகள் எவை என்பது போன்ற அன்றாட
வாழ்வின் மிக முக்கியமான பிரச்சினைகளைத் தன் விருப்பப்படி தீர்க்கும் என்று இருக்கும் பொழுது, ஒவ்வொரு இரண்டு
அல்லது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்குப்போடும் உரிமை இருப்பது பொருளற்றது ஆகும்.
ஜனநாயகம் ஓர் ஆழ்ந்த சமூக உள்ளடக்கமாகப் பரிணமித்து, பெரும்பாலான மக்கள்
தங்கள் நேரத்தையும், முயற்சியையும் செலவழிக்கும் வேலைதளத்தை ஜனநாயக மயப்படுத்தலுடன் தொடங்கவேண்டும்.
தொழிற்துறை ஜனநாயகம் என்பது தங்கள் வேலைநேர வாழ்க்கையில் உண்மையான கட்டுப்பாட்டை உழைக்கும் மக்கள்
கொள்ளும்போது ஏற்படுகிறது. பணி நிலைமைகளை பாதிக்கும் முடிவுகள், பாதுகாப்பு, சம்பளங்கள், வேலைக்கு
அமர்த்துவது, வேலைநேரம் ஆகியவை கட்டாயம் ஜனநாயக முறைப்படி, தொழிலாளர்களால் உறுதி செய்யப்படுதலுக்கு
கீழ்ப்படுத்தப்பட வேண்டும். வர்த்தக முடிவுகள் முற்றிலும் அனைவரும் அறியும் வகையில் எடுக்கப்படவேண்டும் என்பதோடு,
பெருநிறுவன தலைமை என்பது, எல்லா தொழிலாளர்களாலும் ஜனநாயக வாக்கால் ஒப்புதல் கொடுக்கப்படவேண்டும்.
இறுதி ஆய்வுகளில், ஜனநாயகத்தின் பாதுகாப்பும் விரிவடைதலும், சோசலிசத்திற்கான
போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாய் அணிதிரட்டலில் தங்கியுள்ளது.
அமெரிக்க சமூகத்தின் நெருக்கடி
2004ம் ஆண்டில் அமெரிக்கா, முன் எப்பொழுதையும் விட இல்லாத அளவிற்கு,
பொருளாதார வழியில் மிகக் கூர்மையாக துருவமுனைப்பட்டுள்ளது. செல்வந்தர்கள், பெரும் செல்வந்தர்களாகி விட்டனர்,
ஏழைகள் பரம ஏழைகளாகிவிட்டனர். இந்தப் பிளவு கூடுதலான அளவிற்கு விரிவாகி கொண்டுபோகின்றது என்பதுடன்,
ஒருகாலத்தில் தங்களை நடுத்தர வர்க்க குடும்பங்கள் என்று கருதியவை, இப்பொழுது பொருளாதாரப் பாதுகாப்பை
இழந்து உறுதியான கீழ்நோக்கிய அழுத்தத்தை தங்களுடைய வாழ்க்கை தரங்களில் உணர்கின்றனர்.
உயர்மட்டத்தில் இருக்கும் ஒரு சதவிகிதத்தினர் அமெரிக்க சமூகத்தின் மொத்த செல்வத்தில்
40 சதவிகிதத்தை உடைமையாகக் கொண்டுள்ளனர்; இதைத்தவிர பங்குகள், பத்திரங்கள் போன்ற நிதி சொத்துக்களில்
அவர்கள் 80 சதவிகிதத்திற்கும் மேலாக உடைமைகளைக் கொண்டுள்ளதோடு, அந்த பங்கு திடமாக வளர்ந்தே வருகிறது.
ஒரு சதவிகிதத்தினரிலும் உயர்மட்ட பத்தில் ஒரு பங்கினர், 129,000 பணக்காரக் குடும்பங்கள், 2002ம் ஆண்டு 505
பில்லியன் டாலர்களை மொத்த வருமானத்தை கொண்டு, சராசரியாக 4 மில்லியன் டாலர்களை ஒவ்வொரு குடும்பமும்
கொண்டிருந்தது. அதேநேரத்தில் ஊதியம் பெறும் மொத்த தொழிலாளர்களில் கால்பங்கினர் ஒரு மணிக்கு 8.70
டாலர்களுக்கும் குறைவாக, அதாவது ஒரு முழுநேரத் தொழிலாளர் அதிகாரபூர்வமான வறுமைக் கோட்டிற்கும் கீழான
ஊதியத்தைத்தான் சம்பாதிக்கின்றனர்.
வேலைகள்: ஒன்பது மில்லியன் தொழிலாளர்களுக்கும் மேலாக அதிகாரபூர்வமாக
வேலையில்லாமல் இருக்கின்றனர்; மற்றும் 5 மில்லியன் பேர் "ஊக்கமற்றவர்கள்"
என்று வகைப்படுத்தப்பட்டு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை; மற்றும் 25 மில்லியன் மக்கள் பகுதிநேர
பணியாளர்களாகக் கருதப்பட்டு பொதுவாக குறைந்த ஊதியமும், தக்க நலன்களும் இல்லாமல் பணிபுரிந்து வருகின்றனர்.
ஜனவரி 2001ல் புஷ் வெள்ளை மாளிகையில் நுழைந்ததிலிருந்து 2.5 மில்லியன் உற்பத்தித்துறை வேலைகள்
(Manufacturing Jobs) துடைத்து அழிக்கப்பட்டு
விட்டன. புஷ்தான், பெரும் பொருளாதார மந்த நிலையின் போது ஹேர்பேர்ட் ஹூவருக்கு பின், தன்னுடைய நான்கு
ஆண்டு பதவிக்காலத்தில் மிக அதிக அளவு நிகர வேலை குறைப்பைக் காணும் ஜனாதிபதியாவார்.
வாழ்க்கைத் தரங்கள்: 2002ம் ஆண்டில் சராசரி குடும்ப வருமானம் 2.2
சதவிகிதம் குறைந்தது; இதில் நடு மேற்குப் பகுதியில் (3.7 சதவிகிதம்) உற்பத்தித்துறையில் மிக அதிகமான வேலை
இழப்புக்கள் ஏற்பட்டதை அடுத்துக் காணப்பட்டது. உண்மை ஊதிய விகிதம் தேக்கம் அடைந்து நின்றது அல்லது கடந்த 30
ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்து விட்டது. இதேகாலத்தில் 1973 லிருந்து, சராசரி ஆண் தொழிலாளியின்
ஊதியத்தைவிட, வீட்டு அடகு வைப்பு 70 மடங்கு அதிகரித்திருக்கிறது. அமெரிக்கத் தொழிலாளர்கள் கூடுதலான நேரம்
உழைத்துத்தான் செலவை சரிக்கட்ட சம்பாதிக்கவேண்டியுள்ளது. சராசரி முழுநேரப் பணியாளரின் உழைக்கும் மணிகள் ஆண்டு
ஒன்றுக்கு 1973ல் 1,720 லிருந்து 1998ல் 1898 ஆக உயர்ந்துள்ளது; இது 178 மணிநேரம் அதிகமாகும்; அதாவது
ஆண்டு ஒன்றுக்கு நான்கு கூடுதலான வாரங்களை விட அதிகம் என்பதற்கு சமமாகும்.
பொருளாதாரப் பாதுகாப்பின்மை: தொழிலாள வர்க்க மற்றும் நடுத்தர வர்க்க
அமெரிக்கர்களின் முக்கிய நிதிச்சுமையான நுகர்பொருள் கடன், 1946ம் ஆண்டு வருமானத்தில் 22 சதவிகிதமாக
இருந்தது, இன்று வருமானத்தில் 110 சதவிகிதமாக படர்ந்துவளர்ந்து விட்டது. 1989 லிருந்து 2001 வரையிலான
காலத்தில் மொத்தக் கடன் அட்டை (Credit Card)
மூலமான கடன் மூன்று மடங்கு அதிகரித்து, குடும்பத்தின் சராசரி கடன் 53 சதவிகிதம் உயர்ந்துவிட்டது. கடந்த 4
ஆண்டுகளில் மட்டும், வீட்டு செலவுக் கடன் 6.5 டிரில்லியன் டாலர்களிலிருந்து, 8.7 டிரில்லியன் டாலர்களாக உயர்ந்து
விட்டது; இந்த உயர்வு, மத்திய தரக் குடும்பங்களை தங்கள் வீடுகளின் மீது கூடுதலான கடன் வாங்கி, நெருக்கும்
செலவினங்களை சமாளிப்பதனால் ஏற்பட்டதாகும்.
ஏழ்மை: விஞ்ஞானம், தொழில்நுட்பம், தொழிலாளர் உற்பத்தித்திறன் இவற்றில்
மாபெரும் வளர்ச்சி ஏற்பட்டுள்ள போதிலும்கூட, பட்டினி, வீடின்மை, வறுமை இவற்றை எதிர்கொள்ளும் அமெரிக்கர்களின்
எண்ணிக்கை இரண்டாம் உலகப்போர் முடிந்ததிலிருந்து பார்க்கும்போது மற்ற எந்த காலத்தையும்விட இப்பொழுது
அதிகமாக உள்ளது. வறுமையில் வாடும் மக்கள் எண்ணிக்கை 2002ல் மட்டும் 1.3 மில்லியன் அளவில் உயர்ந்து 35
மில்லியனாயிற்று. நகரங்களும், அறக்கட்டளைகளும், மிக அதிக கோரிக்கைகள் அவசர உணவு, புகலிடம் ஆகியவற்றிற்கு
வருகின்றன எனத் தெரிவிக்கும்பொழுது, ஏழைகளுக்கான அரசாங்க நலத்திட்டங்கள் கடுமையான குறைப்பிற்கு
உட்படுத்தப்பட்டுள்ளன.
சுகாதாரப் பாதுகாப்பு: 43 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள்,
சுகாதாரக் காப்பு (Health Insurance) இல்லாமல்
வாழ்ந்து வருகின்றனர்; பல பத்து மில்லியன் கணக்கானவர்கள் சுகாதார பாதுகாப்புச் செலவினங்கள் மிக உயர்ந்த
அளவிற்குச் சென்றிருப்பதால், அதிலும் குறிப்பாக மருந்துகளுடைய விலை பெருகிவிட்ட நிலையில் அவதியுறுகிறார்கள்.
பெரும்பாலான தொழிலாள வர்க்கக் குடும்பங்களில் தற்காலிக பணிநிறுத்தம் என்பது வருமான இழப்பு மட்டும் இல்லாமல்,
சுகாதாரப் பாதுகாப்பு நிதி இழப்பையும் ஏற்படுத்துகிறது. 2002-03 காலகட்டத்தில், கிட்டத்தட்ட மூன்றில் இரு பங்கு
மாநிலங்கள் ஏழைகளுக்கு வழங்கப்பட்ட மருத்துவ உதவித் தொகையை குறைத்துவிட்டன, அல்லது அது பெறுவதற்கான
வாய்ப்புக்களை குறைத்து விட்டன; இது கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்களை உள்ளடக்கும், பெரும்பாலனவர்கள் குழந்தைகள்
என்பது கருத்தில் கொள்ளப்படவேண்டும்.
ஓய்வு காலப் பாதுகாப்பு: முதியோரில் பத்து மில்லியன்கள் அளவிலானோர்,
கெளரவமான ஓய்வுக் கால உரிமைக்கு அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளனர்; ஏனெனில் பெருநிறுவனங்கள், ஓய்வூதிய
நிதியை கொள்ளை அடிக்கின்றன, 401 (k) கணக்குகள்
மதிப்பில் தொய்ந்து விடுகின்றன; வோல்ஸ்ட்ரீட்டும், புஷ்
நிர்வாகமும் சமூகப் பாதுகாப்பை தனியார் மயமாக்குதலுக்கு இலக்காக்கி வருகின்றன. மருத்துவ வசதி "சீர்திருத்த"
மசோதா என தேசிய சட்டமன்றம் இயற்றி, புஷ் கடந்த ஆண்டு கையெழுத்திட்டமை முதியோரின் சுகாதார
பாதுகாப்புக்களுக்கு உறுதி அளித்து வந்த திட்டங்களை அழிப்பதில் மற்றும் தனியார்மயமாக்குவதில் முதல்படியாக
இருக்கிறது.
èTMM: அமெரிக்க இளைஞரில் 30 சதவிகிதத்தினர், 2000 ஆண்டு உயர்நிலைப்
பள்ளிக் கல்வியை முடிக்கும் முன்னரே பள்ளியை விட்டு நீங்கி விட்டனர் என புள்ளிவிவரம் கூறுகிறது; 1996ல் இது 26
சதவிகிதமாக இருந்தது. ஆயிரக்கணக்கான பள்ளிக் கட்டிடங்கள் இடிநது விழும் ஆபத்தில் இருக்கின்றன. "எந்தக்
குழந்தையும் பின் தங்கிவிடக்கூடாது" என்ற புஷ்ஷின் வேலைதிட்டம், தேசிய சட்டமன்றத்தில் இரு கட்சிகளாலும் ஏற்கப்பட்டு
2001ல் சட்டமானது, பொதுக் கல்விமுறையை அழிப்பதற்கான திட்டமிட்ட முயற்சி என்பதுடன் ஆயிரக் கணக்கில் பொதுக்
கல்வி நிலையங்களை மூடவும் நிர்பந்தித்து வருகின்றது. கல்விக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டிருப்பதுடன், நிதி உதவி
குறைக்கப்பட்டு விட்டதை எதிர்கொள்கையில் கல்லூரிக் கல்வி என்பது, நடுத்தர வருமான குடும்பங்களுக்குக் கூட கிடைக்க
இயலா நிலை அதிகரித்த அளவில் ஏற்பட்டுள்ளது.
சமூக உள்கட்டமைப்பு: அமெரிக்க சாலைகள், பாலங்கள், பொதுப் போக்குவரத்து
வசதிகள், குடிநீர், வடிகால் நீர் முறைகள், மற்றய சமூக உள்கட்டமைப்புக்கள் சிதைந்து கொண்டிருக்கின்றன; இதற்குக்
காரணம் வரவு செலவுத் திட்டத்தில் அவற்றிற்கான பராமரிப்புச் செலவு குறைக்கப்பட்டு, பணக்கார உயர்சிறு தட்டினர்
குறிப்பிடத்தக்க வகையில் சமூக நலன்களில் முதலீடு செய்ய மறுக்கின்றனர். மாநில அரசாங்கங்களில் இந்த நெருக்கடியின்
தீவிரம் பெரிதும் ஏற்பட்டு, நடப்பு நிதி ஆண்டில் அவை கிட்டத்தட்ட 80 பில்லியன் டாலர்கள் பற்றாக்குறையைச்
சந்திக்கவேண்டியிருக்கின்றன. மாநில அரசாங்கங்கள் உதவித் தொகைக் குறைப்பை, நூலகங்களை மூடுவது, சிறைக்
கைதிகளின் உணவுத் தரத்தைக் குறைப்பது போன்ற நிலைகளில் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. வடகிழக்கு, மத்திய
மேற்குப் பகுதிகளில் 2003 ஆகஸ்டு மின்சார இருட்டடிப்பு நிரூபித்துக் காட்டியது போல், ஒவ்வொரு காலாண்டும்
இலாபத்தைப் பெருக்கிக் காட்டவேண்டும் என்ற வோல்ஸ்ட்ரீட் அழுத்தத்தால், தனியார்மயமாக்கப்பட்ட பயன்பாட்டுத்
துறைகள், பராமரிப்புத் தொகைக்குத் தேவையான மூலதனத்தை குறைத்துவிடுகின்றன.
சிறைகள்: 2000ம் ஆண்டில் 2.1 மில்லியனுக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் சிறையில்
இருந்தனர்; இந்த எண்ணிக்கை 1980ம் ஆண்டை விட நான்கு மடங்கு அதிகமாகும். தொழில்துறையில் முன்னேற்றமடைந்த
மற்ற எந்த நாட்டையும் விட அமெரிக்கா தன் மக்கட்தொகையில் கூடுதலான விகிதத்தினரைச் சிறையில் வைத்துள்ளது;
உலகில் காட்டுமிராண்டித்தனமாக பின்பற்றப்படும் மரணதண்டனை கொடுக்கும் வெகு சிலநாடுகளில் அமெரிக்காவும்
ஒன்றாகும். 1980ம் ஆண்டிலிருந்து 2000 ஆண்டு வரை, சிறையிலிருக்கும் கறுப்பினத்தைச் சார்ந்தவர்கள் எண்ணிக்கை
143,000 லிருந்து 792,000 ஆக உயர்ந்திருக்கிறது. இன்று கல்லூரிக்கு செல்பவர்களைவிட அதிகமான எண்ணிக்கையில்
கறுப்பர்கள் சிறையில் இருக்கிறார்கள்.
இளைஞர்களுடைய நிலைமை: 16லிருந்து 24 வயது வரை, கிட்டத்தட்ட 5.5
மில்லியன் இளஞர்கள் பள்ளிக்கு செல்லாமலும் வேலையின்றியும் இருக்கின்றனர்; இவர்கள் அடிப்படையில் அமெரிக்க
சமூகத்தால் கைவிடப்பட்டவர்களே ஆவர். கிட்டத்தட்ட 1.3 மில்லியன் வீட்டைவிட்டு ஓடிவந்து விட்ட அல்லது வீடில்லாத
சிறுவர்கள் அமெரிக்க தெருக்களில் வாழ்ந்து வருகின்றனர்; இவர்களில் ஏறத்தாழ 5,000 பேர் ஒவ்வொரு ஆண்டும்
தாக்குதல்கள், நோய்கள் அல்லது தற்கொலையில் இறந்து போகின்றனர். 1990 களின் இளஞ்சிறுவர்களின் எண்ணிக்கை
சிறையில் 74 சதவிகிதம் உயர்ந்து விட்டது; இது சிறுவர் குற்றங்கள் என்பவை குறைந்துவிட்டபோதிலும் உள்ள நிலையாகும்.
கிட்டத்தட்ட 4 மில்லியன் குழந்தைகள் மனநோயால் வாடுகின்றனர்; தக்க மனநல சிகிச்சையை கருத்திற்கொண்டு,
பல்லாயிரக் கணக்கான பெற்றோர்கள் தங்கள் பொறுப்பிலிருந்து அரசாங்கப் பொறுப்பிற்கு குழந்தைகளை
விடவேண்டியதாக இருக்கிறது.
புஷ் நிர்வாகத்தின் கொள்கைகள் பொருளாதார சமத்துவமற்ற நிலையை அதிகரித்து,
முக்கியமான பொதுநலப் பணிகளை பணமின்றி முடக்கிவிட்டன. 2001 வரவு செலவு திட்டத்தில் 1.35 டிரில்லியன்
டாலர்கள் வரி வெட்டின் பெரும் பகுதியும், 2003 ஆண்டு இரண்டாம் சுற்று வெட்டுக்களும் மக்கட்தொகையின் உயர்மட்ட
ஒரு சதவிகிதத்தினரின் நன்மைக்குச் சென்றது. இதற்கிடையில், உள்நாட்டு சமூக தேவைகளுக்கான உண்மையான கூட்டாட்சிச்
செலவு பெரிதும் குறைக்கப்பட்டுவிட்டன.
அமெரிக்க பெருநிறுவனங்களின் உயர்ந்த தட்டுக்கள் குற்றஞ்சார்ந்தவை, மோசடி இவற்றில்
வல்லமை பெற்றுத் திகழ்பவையாக உள்ளன. நூற்றுக்கணக்கான தலைமை நிர்வாக அதிகாரிகள்
(CEO) தங்களுடைய நிறுவனங்களையே கொள்ளையடித்து,
தனிப்பட்ட முறையில் நூற்றுக்கணக்கான மில்லியன்கள், ஏன் சிலசமயம் பில்லியன்கள்கூட சொத்துக்குவிப்பு செய்துள்ளனர்;
அதேநேரத்தில் அதன் சிறு பங்குதாரர்களும் தொழிலாளர்களும் அவற்றுடன் தொடர்புகொண்டதற்கான விலையை கொடுக்க
நேர்ந்துள்ளது. குற்றஞ்சார்ந்த பெருநிறுவனங்களிலேயே, என்ரோன் நிறுவனம் மிக அதிகமாக அவப்பெயர்பெற்றது,
மற்றும் புஷ் குடும்பத்திற்கு அது மிகநெருக்கமானது. அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய முறையில் பெருநிறுவனங்கள்
திவாலான கணக்கில் பத்தில் ஒன்பது, புஷ் ஜனாதிபதி பதவிக்கு வந்தபின் நடைபெற்றவை ஆகும். நூற்றுக்கணக்கான
பில்லியன் டாலர் கணக்கில் நிதிகள் சூறையாடப்பட்டுள்ளன அல்லது அழிவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், விசாரணை
செய்து சிறைக்கு அனுப்புவது ஒரு புறம் இருக்க, மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் உயரதிகாரிகள் கைதே
செய்யப்பட்டுள்ளனர்.
இங்கு சம்பந்தப்பட்டுள்ளது நேர்வழியிலிருந்து விலகுதல் அல்ல, மாறாக ஒரு சமூக
நோய்க்குறி ஆகும்: அமெரிக்க பெருநிறுவன செல்வந்த தட்டு குற்றமயமாதல் ஆகும். இந்த நிகழ்ச்சிப்போக்கின்
புறநிலையான மூலவளம், அமெரிக்க முதலாளித்துவத்தின் நீண்டகால நெருக்கடியில் இருக்கிறது; இது இலாப விகிதங்கள்
கடுமையாகக் குறையத் தொடங்கிய காலத்திலிருந்து, அதுவும் 1970 களில் உற்பத்தித்துறையில் அவ்வாறு ஏற்பட்டதிலிருந்து
ஆரம்பமாகிறது. இதற்கு விடை காணும் வகையில் ஆளும் வர்க்கமானது தொழிலாள வர்க்கத்தை 1980கள் முழுவதும்
தாக்குதலுக்கு உட்படுத்தியதின்மூலம், வேலைகளை குறைத்தல், ஊதியங்களை குறைத்தல், தொழிற்சங்கங்களை தகர்த்தல்,
பெருநிறுவனங்களுக்கு வரிக்குறைப்புக்கள் அளித்தல், செல்வந்தர்களுக்கான வரிகளை குறைத்தல், பெருவர்த்தகங்கள் மீதான
கட்டுப்பாடுகளை தூக்கி எறிதல் ஆகியவை மூலம் பதில் கொடுத்தது. பழைய தொழிலாளர் அமைப்புக்கள் பொறிந்த
அளவில், ஆளும் செல்வந்த தட்டினர், தனியார் செல்வக் குவிப்பிற்காக தாங்கள் அனைத்து சமூக, அரசியல், ஏன்
தார்மிக தடைகளிலிருந்து கூட விடுபட்டுவிட்டதாக கருத தலைப்பட்டனர். ஆயினும், இந்த நடவடிக்கைகளினாலும், உழைப்பு
நிகழ்ச்சிப்போக்கிலிருந்து கறந்து எடுக்கப்படும் இலாபத்தின் வீதத்தை குறைத்து இயக்கும் இயற்பாங்குடையதான
முதலாளித்துவ உற்பத்தி முறையின் கீழே இருக்கும் முரண்பாடுகளை கடந்து வர முடியவில்லை. 1990களில், பெருநிறுவன
அமெரிக்கா நேரடி மோசடி முறைகளில் ஈடுபட, மிகப் பெரிய அளவில் முயன்றது; "தவறான கணக்குகள்" எழுதி
இலாபங்களை உயர்த்திக் காட்டுதல், இதையொட்டி பங்குகளின் விலையை ஏற்றுதல், தலைமை நிர்வாக அதிகாரிகளின்
வருமானங்களை உயர்த்துதல் ஆகியவை செய்யப்பட்டன.
தொழிலாள வர்க்கத்தை பாதுகாக்க ஒரு சோசலிச வேலைத்திட்டம்
அமெரிக்க மற்றும் உலகப் பொருளாதாரத்தை தொழிலாள வர்க்கத்தின் நலன்களை
கருத்தில் கொண்டு மறுஒழுங்கு செய்வதை நோக்கமாக கொண்ட ஒரு வேலைத் திட்டத்தை சோசலிச சமத்துவக் கட்சி
முன்னெடுக்கிறது. தற்போதைய முதலாளித்துவ அமைப்பில், தொழில், நிதிய அமைப்புக்களின் பரந்த இருப்புக்கள்
அனைத்தும் தனிப்பட்டோரின் உடைமையாக இருக்கின்றன மற்றும் தனிப்பட்டோரால் கட்டுப்படுத்தப்படுகின்றன, இம்முறை
பொருளாதாரத்தின் மீதான பொது உடைமை மற்றும் ஜனநாயகக் கட்டுப்பாடு இவற்றை உடைய ஒரு சோசலிச
அமைப்பால் கட்டாயம் மாற்றப்படவேண்டும். இலாபத்தை உருவாக்கும் மற்றும் பரந்த தனிநபர் செல்வ திரட்சியை
அல்லாமல், மனித தேவைகளை நிறைவு செய்வதையே ஒழுங்கமைக்கும் கொள்கையாக உடைய ஒரு பொருளாதார
அமைப்பை உருவாக்குவதைத்தான் நாம் ஆதரிக்கிறோம்.
உழைக்கும் மக்களின் பரந்த ஜனத்திரளின் நலன்களின் பேரில் பொருளாதார வாழ்வை
மறுஒழுங்கமைப்பதற்கான பொருளாதார அடித்தளத்தை நிறுவுவதற்கு, 10 பில்லியன் டாலர்கள் அல்லது அதற்குமேல்
மதிப்பு உடைய அனைத்து வகைப்பட்ட தனியாருக்குச் சொந்தமான தொழில் மற்றும் உற்பத்தித் தொழில்துறை
பெருநிறுவனங்களை, சிறு பங்குதாரர்களுக்கு முழு நஷ்ட ஈட்டுடனும் பெரிய அளவிலான பங்குதாரர்களுக்கான நஷ்டஈட்டு
விதிமுறைகள் பகிரங்கமாக பேசி எடுக்கப்படும் அடிப்படையில், அவற்றை பொதுவில் உடைமையான நிறுவனங்களாக
மாற்றுவதை நாம் ஆதரிக்கிறோம். சோசலிச சமத்துவக் கட்சி அனைத்து பெரிய வங்கிகள், காப்பீட்டுக் கழகங்கள்
ஆகியவையும் கூட தேசியமயமாக்கப்படவேண்டும் என்ற திட்டத்தை முன்வைக்கின்றது. மேலும், சோசலிச சமத்துவக் கட்சி
மின்விசை போன்ற ஆற்றல் தொழிலும் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்றும் அனைத்து இயற்கை வளங்களும் பொது
உடைமை மற்றும் பொதுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவேண்டும் என்றும் வாதிடுகிறது.
இந்த வகையில் அமெரிக்கப் பொருளாதாரம் மறுஒழுங்கு செய்யப்பட்டால், தொழிலாள
வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்தை குறிப்பிடத்தக்க வகையில் உயர்த்துவதற்கான வேலைத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கு
மாபெரும் வளங்களை கிடைக்கக் கூடியதாகச் செய்யும்.
தற்போது வேலையில் இல்லாமல், ஆனால் வேலை செய்யக் கூடிய திறன் உடையவராக
இருக்கும் அனைவருக்கும் வேலைவாய்ப்பை உத்தரவாதம் செய்யும் வகையில் பொதுப்பணித்துறை வேலைகள் கொண்ட
மாபெரும் ஒரு வேலைத் திட்டத்திற்காக அழைப்பு விடுகின்றோம். மில்லியன் கணக்கில் உள்ள உழைக்கும் அமெரிக்கரின்
வருமான மட்டம் உயர்வதற்கான அவசரத் தேவையானது, உறுதியளிக்கப்பட்ட கூட்டாட்சி நிதியத்தின் மூலம்,
பணவீக்கத்திற்கு ஏற்ற குறியீட்டெண் விகிதத்துடன் இணைந்த, ஆண்டு வருமானத்தை ஏற்படுத்துவதன் மூலம் கட்டாயம்
கவனிக்கப்பட வேண்டும்.
இலவச, உயர்தர பொதுக் கல்வி மற்றும் அனைவருக்கும் இவவச உயர் கல்வி
கிடைப்பதற்கான வழிவகை இரண்டும் தேவையென்று, நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்; அனைவருக்கும், விரிவான
மருத்துவ பராமரிப்பு, அரசு-மானிய உதவியுடன் கூடிய, வசதியான மற்றும் அனைவராலும் இயலக்கூடிய வீடுகளை கட்டல்;
தொழிற்சங்கத்தில் சேரவும் தொழிற்சங்கங்களை ஜனநாயக ரீதியாக கட்டுப்படுத்தவும் ஒரு உத்தரவாதமுள்ள உரிமை,
தொழிற்சங்கங்களை உடைக்கும் தந்திரோபாயங்களை மற்றும் சம்பள வெட்டை சட்டவிரோதம் என அறிவித்தல்;
குடியுரிமை உட்பட, சட்டபூர்வமாயினும் சரி அல்லது "சட்ட விரோதமாக" ஆயினும் சரி, குடியேறியுள்ள தொழிலாளர்கள்
அனைவருக்கும் முழு ஜனநாயக உரிமைகள் வழங்குதல்; அனைத்து உழைக்கும் மக்களுக்கும் கெளரவமான ஒரு வருமானத்தை
தரும் ஓய்வூதிய பாதுகாப்பு; சிறிய, நடுத்தர வியாபாரங்களுக்கு அரசாங்க ஆதரவு ஆகியவற்றுக்காக நாங்கள் அழைப்பு
விடுக்கின்றோம்.
சமூக சமத்துவத்தை முன்னிலைப்படுத்தும் ஸ்தூலமான நடவடிக்கைகளின் அடிப்படையில் மட்டுமே
இங்கே விவரிக்கப்பட்ட சமூக உரிமைகள் அடையப்பட முடியும். வரிவிதிப்புக் கொள்கையில் இப்பொழுதுள்ள நிலையை
தலைகீழாக மாற்றி அமைக்கப்படவேண்டும்: அதாவது பொதுமக்களை கொள்ளையடித்து மில்லியனர்களையும்
பெருவர்த்தகத்தையும் மேலும் செல்வ குவிப்பிற்கு வழி செய்யும் சாதனமாக இருப்பதிலிருந்து, வரிவிதிப்பில் வரும்
செல்வத்தை தீவிரமுன்னேற்றமானமுறையில் மறுவிநியோகம் செய்வதற்கான சாதனமாக அது ஆக வேண்டும். ரோனால்ட்
றேகன், மூத்த ஜோர்ஜ் புஷ், ஜோர்ஜ் டபுள்யூ புஷ் ஆகிய ஜனாதிபதிகள் செல்வந்தர்களுக்கு வரிவிலக்கு கொடுத்தமை
யாவும் நீக்கப்படவேண்டும்; செல்வத்தின் மீதான நேரடிவரிகளான எஸ்டேட் வரிகள் போன்றவை மீண்டும்
கொண்டுவரப்படல் வேண்டும், பெருநிறுவனங்கள் மிகச் சிறு அளவே இலாபத்தில் வரி செலுத்த அனுமதிக்கும் வகையில்
கணக்குமுறையிலான தகிடுதத்தங்கள் மற்றும் சட்டத்திலுள்ள ஓட்டைகள் போன்றவை அகற்றப்படவேண்டும். பரந்த
பெரும்பான்மையான மக்களுக்கு வரிச்சுமை குறைக்கப்பட்டு, அதிக வருமானம், செல்வக் குவிப்பு இருப்பவர்மீது கூடுதலான
வரி விதிக்கப்பட வேண்டும்.
1990 களில் நடைபெற்ற ஊகவாணிப
நடவடிக்கைகள் மற்றும் தொழிலாளர்கள், சிறு பங்குதாரர்கள் நஷ்டமுற பெருநிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகளால்
பெருநிறுவன வளங்கள் குற்றஞ்சார்ந்த முறையில் அபகரிக்கப்பட்டமை பற்றி விசாரணை நடத்தப்படவேண்டும். திருடப்பட்ட
பணம் மீட்கப்பட்டு சமூக நலப்பணிகளுக்காகவும், தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும்
பயன்படுத்தப்படவேண்டும்.
சொத்து உரிமைகள் சமூக உரிமைகளுக்கு கீழ்ப்படுத்தப்படவேண்டும். இதன் பொருள்
எல்லாவற்றையும் தேசியமயமாக்க வேண்டும் என்பதோ, ஏற்கனவே பகாசுரக் கம்பனிகள் மற்றும் வங்கிகளால்
பாதிக்கப்பட்டுள்ள சிறிய அல்லது நடுத்தர வணிகங்கள் அகற்றப்படவேண்டும் என்பதோ அல்ல. திட்டமிட்டு பொருளாதாரம்
செயல்படுத்தப்பட்டால், அவை நியாயமான ஊதியங்களையும் வேலைநிலைமைகளையும் வழங்கும் வரையில், அத்தகைய
வணிகங்களுக்கு தேவையான கடன் வசதிகளையும், மிக உறுதியான சந்தை நிலைமைகளையும் தயாராய் கிடைக்கச்செய்யும்.
சோசலிச சமத்துவக் கட்சி, உழைக்கும் மக்களுக்கு முழு அளவில் கலை, பண்பாடு
பற்றியவற்றை முழுமையாய் கிடைக்கச்செய்யும் நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கின்றது. தன்னுடைய புதிய
கருத்துக்களினாலும், வலுவான ஜனநாயக மற்றும் மானுடம் சார்ந்த வகைகளினால், அனைவரையும் ஈர்க்கும் தன்மையை
அமெரிக்க பண்பாடு பெற்றிருந்தது, ஒருசமயம் உலக அதிசயங்களில் ஒன்றாகவும் இருந்தது. ஏனைய
துறைகளைப்போலவே, பண்பாட்டை இலாபநோக்கிற்கு கீழ்ப்படியச் செய்தமை மிகப்பெரிய சீரழிவிற்குத்தான்
வழிவகுத்துள்ளது.
மக்கள் பண்பாடு, கலைகளுக்குக் கொடுக்கப்பட்டு வந்த உதவித்தொகைகளை
நிறுத்தியதாலும், கலைப்படைப்புக்களில் வலதுசாரிக் கருத்துக்களின் தாக்குதலினாலும் பெரிதும் பாதிப்பிற்கு
உள்ளாகியிருக்கிறது. அருங்காட்சியகங்கள், இசைக் குழுக்கள், நாடகங்கள், பொதுத் தொலைக் காட்சி மற்றும்
வானொலி ஆகியவற்றிற்கு அரசாங்க மானியங்கள் உள்ளீடாக அகற்றப்பட்டுள்ளன. கலை மற்றும் இசைக் கல்வி
பெரும்பாலான பொதுப் பள்ளிகளிலிருந்து கடுமையாய் குறைக்கப்பட்டுள்ளன அல்லது ஒரேயடியாய் அகற்றப்பட்டு விட்டன.
நூலக நேரங்களும் சேவைகளும் குறைக்கப்பட்டு விட்டன. இத்தகைய பணத்துக்காய் வேலைசெய்யும் மற்றும் பண்பற்ற
அணுகுமுறையால் அறிவார்ந்த மற்றும் ஒழுக்கநெறி சார்ந்த சமூக அமைப்பிற்கு ஏற்பட்ட பாதிப்பின் அளவை நிர்ணயிப்பது
கடினமாகும். ஆயினும், இராணுவவாதத்தை, மிருகத்தனத்தை புகழ்தல் மற்றும் தற்பெருமை பாராட்டுதல் இவற்றிற்கும்
முந்தைய தலைமுறைகளின் கலைத்துவ மற்றும் பண்பாட்டு மரபியத்திற்கு குரோதம் காட்டுதலுக்கும் சர்ச்சைக்கில்லாத
தொடர்பு உண்டு.
மக்கட்தொகையின் ஒவ்வொரு பிரிவினருக்கும் இசை, நடனம், நாடகம் மற்றும் கலை
முதலியவை இலவசமாகவோ அல்லது மிகக்குறைந்த கட்டணத்திற்கோ கிடைக்கச்செய்வதை உறுதிப்படுத்துவதற்கு கலைகளின்
வளர்ச்சிக்கும், புதிய பள்ளிகள் தோற்றுவிக்கவும், கல்வி மையங்களுக்கும் ஏராளமாகப் பணம் அளிக்கவேண்டுமென
சோசலிச சமத்துவ கட்சி கோருகின்றது. கலைகளுக்காக உதவித்தொகை, மானியத்தொகை வழங்குதல் பறிய முடிவு
அரசியல்வாதிகளிடம் விடப்படாமல், கலைஞர்கள், இசைஞர்கள் மற்றும் பண்பாட்டுத்துறை தொழிலாளர்கள் கொண்ட
குழுவினரின் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட வேண்டும்.
பண்பாட்டு உரிமையுடன், செய்தி ஊடகத்தின் சுதந்திரமும், அரசியல் கருத்து வெளியீட்டு
சுதந்திரமும் பெரும் மதிப்புக்குறைவிற்கு ஆளாகி இருக்கின்றன. பெருநிறுவனக் கட்டுப்பாட்டிற்குள் இயங்கும் செய்தி ஊடகம்,
அரசாங்கத்திற்கும், பெருவர்த்தகத்திற்கும் ஒரு பிரச்சார சேவையாக மிக வருந்தத்தக்க பங்கை ஆற்றியுள்ளன.
ஒலிபரப்பு வலைப்பின்னல்கள் மற்றும் பெரிய செய்தித்தாள்கள் ஆகியவை கையளவே ஆன பெருநிறுவனங்களினால் அதிகரித்த
அளவில் ஏகபோகத்திற்கு ஆளாகி, முன்பு அரசாங்க நடவடிக்கைகளையும் பெருவர்த்தக செல்வந்தத் தட்டின்
செயல்களையும் விமர்சித்து வெளியிட்ட, பெருமையுடன் சமூகத்தில் "நான்காம் பிரிவு" என்று கூறிக்கொண்ட பெயரை வெகு
காலத்திற்கு முன்னரே சரணாகதி அடையச் செய்து விட்டன. நன்கு தகவல் அறியப்பட்ட மக்கள்தான் ஜனநாயக ஆட்சியின்
அடிப்படை ஆக்கக் கூறு என்ற ஒரு முதுமொழியில் உண்மை உள்ளது. ஆனால் செய்தி ஊடக நிறுவனங்களின் நலமிலாப்
போக்கினால் வழங்கப்படும் கடைந்தெடுத்த பொய்களும் திட்டமிட்ட தவறான செய்திகளும், ஜனநாயக உரிமைகளையே
தகர்ப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன.
"சுதந்திரமான செய்தி ஊடகம்"
என்ற பெயரை, பெருஞ்செல்வத்தை கொண்டு செய்தி தாள்களையும்,
காற்று அலைகளையும் சொந்தமாக்கும் மற்றும் கட்டுப்படுத்தும், மக்கள் எதை காணவேண்டும் என தீர்மானம்
செய்வதையும், பொதுமக்கள் மனத்தை பிற்போக்கான மற்றும் மேம்பாடற்ற தப்பெண்ணங்களால் மாசுபடுத்தும்
தீங்குசெய்பவர்களின் திறமையுடன் சமப்படுத்துவதை சோசலிச சமத்துவக் கட்சி நிராகரிக்கின்றது. செய்தி ஊடக
ஏகபோகங்களை உடைத்து அவற்றை எதிர் கருத்துக்களின் கண்ணோட்டத்திற்கு உத்திரவாதம் தரும் ஜனநாயக ரீதியாய்
அணுகக்கூடியதாய், பொதுமக்களின் உடைமையாயும் மற்றும் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழும் வைக்கப்பட வேண்டும்.
பூமியின் வரம்பிற்குட்பட்ட வளங்களை பகுத்தறிவுபூர்வமாய் அபிவிருத்தி செய்வதற்கு ஒரு
சோசலிச பொருளாதார வேலைத்திட்டத்தினால்தான் உறுதி வழங்க முடியும். அனைத்து மனித செயற்பாடுகளையும்
இலாபம் மற்றும் தனிச் சொத்துக் குவிப்புக்கான உந்துதலுக்கு கீழ்ப்படிய செய்வதினால் சுற்றுப்புறச்சூழல் பேரழிவினை
கட்டவிழ்த்துவிடும் அச்சுறுத்தலை கொண்டுள்ளது. மக்கள் சமூகத்தின் அதிகரித்த அளவிலான சிக்கலான தேவைகளினால்
முன்வைக்கப்படும் இந்த அல்லது அந்தப் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு இலாப அமைப்பு முறையின் இயலாமையானது
மனிதகுலம் தப்பித்து உயிர்வாழ்வதற்கே ஓர் அச்சுறுத்தலாக இருக்கின்றது. சோசலிசப் பொருளாதார திட்டமிடுதல்,
பூமியின் சுற்றுப்புறத்தை பாதுகாப்பதில் உண்மையான பூகோள ஒத்துழைப்பிற்கான நிலைமைகளை உருவாக்கும்.
நாம் இங்கே விவாதித்த சமூக உரிமைகள் எதுவுமே, அவற்றை பெறப் போராடும்
உழைக்கும் மக்களின் மிகப்பரந்த, சக்திவாய்ந்த இயக்கம் தோன்றாமல் அடையப் பெறமுடியாதவை ஆகும். அத்தகைய
இயக்கம் ஒன்றை அடிமட்டத்திலிருந்து அமைப்பதற்கு, சோசலிச சமத்துவக் கட்சியானது, தொழிலாளர்கள், மாணவர்கள்,
இளைஞர்கள், தேர்ச்சி பெற்ற சொந்த வேலையில் இருப்போர் இவர்களையெல்லாம் முன்வருமாறும் சிறந்த உலகத்தை
அமைப்பதற்கான போராட்டத்தில் இணையுமாறும் அழைப்பு விடுத்து, 2004 தேர்தல்களை பயன்படுத்திக் கொள்ள
விருப்பம் கொண்டுள்ளது.
ஜனநாயகக் கட்சியிலிருந்து முறித்துக்கொள்ள
அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின், மைய வரலாற்றறுப் பிரச்சினை, முதலாளித்துவ
வர்க்க கட்சிகளிலிருந்து முறித்துக் கொண்டு, அதன் சொந்த பரந்த அளவிலான சுயாதீனமான கட்சியை நிறுவுவதற்கு
இயலாமையாக இருந்து வருகிறது. நடைமுறையில் இருக்கும் இரு கட்சி முறையானது, விருப்பத்தேர்வு என்ற பெயரில்
பிரமையைத்தான் கொடுக்கிறது. தங்களுக்குள் என்ன கருத்துவேறுபாடு இருந்த போதிலும் கூட, ஜனநாயகக் கட்சியினர்,
மற்றும் குடியரசுக் கட்சியினர் இருவருமே அமெரிக்க முதலாளித்துவத்தின் சமூக கட்டமைப்பை: வாழ்க்கையின் அனைத்து
அம்சங்களும் தனியார் செல்வத்தாலும் இலாபத்திற்கான உற்பத்தியாலும் மேலாதிக்கம் செய்யப்படலை ஏற்பதோடு அதை
பாதுகாக்கின்றன.
கடினமான சமூக மற்றும் சட்ட தடைகள் இருந்தபோதிலும், உழைக்கும் மக்கள் வாக்குப்
போடும் உரிமையை பெற்று அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாலும், அவர்களை பொறுத்த வரையில் எந்த
மாற்றத்திற்கும் அவர்கள் வாக்குப் போட இயலாது; அரசாங்கத்தின் கொள்கைகள்மீது சக்திமிக்க வகையில் செல்வாக்கு
செலுத்த முடியாது. அவையனைத்தும், பொருளாதார செல்வந்த தட்டின் உள்ளேயுள்ள போட்டிப் பிரிவுகளின்
(கன்னைகளின்) போட்டியிடும் நலன்களால் முற்றிலும் தீர்மானிக்கப்படும். தொழிலாள வர்க்கம் நடைமுறையில், அரசியல்
ரீதியாய் வாக்களிக்கும் உரிமை இன்றி இருக்கின்றது.
அமெரிக்காவில் முந்தைய பரந்த சமூக இயக்கங்களின் பிரதான பலவீனம்,
சான்றாக,
1890 களின் மக்கள் எழுச்சி, முதல் உலகப் போருக்கு முன்
IWW உடைய போர்க்குணமிக்க தொழிற்சங்க போராட்டங்கள், 1930களின் மகத்தான தொழிலாளர்
எழுச்சி, 1960களின் குடியுரிமை மற்றும் போர் எதிர்ப்பு இயக்கங்கள் இவை அனைத்துமே, ஜனநாயகக் கட்சியின்
அரசியல் ஆதிக்கத்திலிருந்து உழைக்கும் மக்களை விடுவிப்பதில் வெற்றியடையவில்லை. இதன் விளைவாக தொழிலாள
வர்க்கம், ஏதாவதொரு சமூக கெடுதலின் தீவிரத்தை குறைப்பதற்கான போராட்டத்துடன் மட்டுப்படுத்திக் கொள்ள
முடிந்தது. பெருநிறுவன அமைப்புக்களுக்கு எதிராக, மக்களின் தேவைகளுக்கு சேவை செய்வதற்கு அமெரிக்க சமூகத்தை
முறையாக மறு ஒழுங்கு செய்தலை அரசியல் செயல்பட்டியலில் அதனால் வைக்க முடியவில்லை.
பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் போன்ற ஜனநாயகக் கட்சியின் தொலைநோக்கு உடைய
தலைவர்கள், இலாப அமைப்பை ஒட்டுமொத்தமாக காப்பாற்றும் பொருட்டு முதலாளித்துவத்தின் மிகத் தீமையான
கூறுபாடுகளை தணிக்க முயற்சி செய்தனர். அவருடைய புதிய பொருளாதார செயற்பாட்டுக் கொள்கைகள், அவற்றை
ஒட்டி 1960 களில் லிண்டன் ஜோன்சன் இன் கீழ் இயற்றப்பட்ட சமூக நடவடிக்கைகள், ஜனநாயகக் கட்சியை,
தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் உதவியுடன் அமெரிக்க முதலாளித்துவத்திற்கான எந்தவித நேரடி சவாலையும் தடுப்பதற்கு
வகை செய்தது.
ஆயினும், கடந்த 30 ஆண்டுகளில், அமெரிக்க முதலாளித்துவத்தின் பூகோள பொருளாதார
நிலையில் ஏற்பட்ட வீழ்ச்சியானது, பெரு வர்த்தக கட்சிகள் இரண்டையும் தீவிரமாக வலது புறம் நோக்கி
இடம்பெயர்தலை உருவாக்கியுள்ளது. குடியரசுக் கட்சியினர் வெளிப்படையாக சமூக பிற்போக்கு கொள்கைகளின் ஒரு
செயற்பட்டியலை தழுவி, கடந்த காலத்தில் கொடுக்கப்பட்டுள்ள சமூக சீர்திருத்தங்கள் அனைத்தும் அழிக்கப்படவேண்டும்
என்று கூறுகின்றனர். ஜனநாயகக் கட்சியினரோ தாராண்மை சமூக சீர்திருத்தத்தின் எந்த விதமான கொள்கைகளையும்
கைவிட்டுவிட்டு, வார்த்தைகளில் இல்லாவிட்டாலும் செயலில், குடியரசுக் கட்சியினரின் வர்க்க மற்றும் போர்
கொள்கைகளுக்கு ஏற்ப தங்களையே மாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
1960களின் கடைசியில் முக்கியமான சமூக சீர்திருத்தங்கள் சட்டப்படி அமுல்படுத்தப்பட்டதை
அடுத்து, அமெரிக்காவில் ஒரு தலைமுறை முழுவதும் முதிர்ந்த மனநிலைக்கு வந்துள்ளனர். முதலாளித்துவ அமைப்பால் சமூக
துன்பங்களை அகற்றமுடியும் என்றதன் அடிப்படையில் ஜோன்சன் "வறுமையின் மீதான போர்" என்ற கருத்தை
பிரகடனப்படுத்தி கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று அமெரிக்க முதலாளித்துவம் முன்னெப்போதும் இல்லாத
அளவு செல்வம் கொழித்து நிற்பதுடன், கூடுதலான மக்கள் 1965ல் இருந்ததை விடவும் அதிகமாக வறுமையில் வாழ்ந்து
கொண்டிருக்கின்றனர்.
கிளின்டன் நிர்வாகத்தின் நிலைச்சான்று, ஜனநாயகக் கட்சியின் "தாராண்மைவாத" திவாலை
விளக்கிக் காட்டுகின்றது. இன்றைய புஷ் நிர்வாகத்தின் பல பிற்போக்கான கொள்கைகளுக்கான அடிப்படையை கிளின்டன்
அமைத்துக் கொடுத்தார்: உறுதிகூறப்பட்டிருந்த சுகாதார பராமரிப்பு சீர்திருத்தத்தை கைவிட்டமை, சமூக
நலன்களுக்கான அமைப்பை அறவே அகற்றியமை, ஜனநாயக உரிமைகளை தாக்கியமை, சோமாலியா, ஹைத்தி,
பொஸ்னியா, கோசோவோ, சூடான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் ஆகியவற்றில் இராணுவ குறுக்கீடுகளை செய்தது
மற்றும் தாக்கியமை ஆகியனவாகும். பில் மற்றும் ஹில்லேரி கிளின்டன் இருவருமே, ஈராக்கின் மீது படையெடுத்து அதை
ஆக்கிரமிக்கும் புஷ்ஷின் முடிவை ஆதரித்துள்ளதோடு, இருவருமே அந்த நாட்டிலிருந்து அமெரிக்கா படைகளை திரும்பப்
பெறுவதை எதிர்க்கின்றனர்.
குடியரசுக் கட்சியின் வலது சாரியினரால் அமெரிக்க அரசாங்கம் கட்டுப்படுத்தப்படுவதற்கு
ஜனநாயகக் கட்சியினர் கதவைத் திறந்து விட்டதுடன், மிக வலதுசாரி அரசியல் செயல்பாட்டுக்காரர்கள், நீதிபதிகள்,
தனித்த வழக்குரைஞர் கென்னத் ஸ்டார் ஆகியோரால் பதவி நீக்க விசாரணை சதித்திட்டத்துக்கு எதிராக அக்கறை
கொண்ட போராட்டம் எதையும் நடத்த மறுத்தது. இந்த உறுதிகுலைக்கும் பிரச்சாரத்தைத் தொடர்ந்து, 2000ம் ஆண்டு
ஜனாதிபதி தேர்தலை குடியரசுக் கட்சியினர், உச்ச நீதிமன்றத்தின் தலையீடு மூலம் கடத்தி, தேர்ந்தெடுக்கப்படாத
ஜனாதிபதியை ஆட்சியில் இருத்தியமைக்கு, ஜனநாயகக் கட்சியினர் சரணாகதி அடைந்தனர்.
உத்தியோகபூர்வ அமெரிக்க அரசியலின் வலதுசாரி வரைபாதையில் ஒரு மேலதிக
கட்டத்தை, 2004ம் ஆண்டு பிரச்சாரம் குறிக்கிறது. குடியரசுக் கட்சியில் அமெரிக்க பெருநிறுவன செல்வந்த தட்டின்
தடையற்ற மற்றும் கொள்ளைப் போக்குடைய பிரிவுகளின் தூய வெளிப்பாட்டை ஒருவர் காண்பார். தங்களுக்கு பொது
மக்களிடையே அடிப்படை ஆதரவை திரட்டுவதற்காக, நடுத்தர வர்க்கத்தின் மிகப் பின்தங்கிய மற்றும் பிற்போக்கு
சக்திகளான கிறிஸ்தவ வலதுசாரி, இன வெறியாளர், ஒட்டுமொத்த பாசிஸ்ட்டுகள் ஆகியோரை அணிதிரட்ட அவர்கள்
விரும்புகின்றனர். இந்த சக்திகளின் பொது இலக்கு, பெருநிறுவனம் இலாபம் சம்பாதிப்பதன் மீதான மற்றும் உழைக்கும்
மக்களை சுரண்டுவதன் மீதான அனைத்துவகை தடைகளையும் அகற்றுவது என்பதேயாகும். தொழிற்சங்கங்களைப்
பொறுத்தவரையில், அவற்றுக்கு ஆதாயம் கிடைக்கும் வரை அவை வைக்கும் நிபந்தனைகள்; சுற்றுப்புற, சுகாதார,
பாதுகாப்பு விதிமுறைகள்; வர்த்தக வருமானம், வாரிசு முறையில் வந்த சொத்துக்கள், இவற்றின் மீது வரிவிதித்தல்;
அதிக வருமானத்திற்கு முன்னேற்றகரமான அதிக வரி; எட்டு-மணி நேர வேலை
; சிறுவர்களை வேலையில் வைக்க கட்டுப்பாடுகள் இதுபோன்றவை அகற்றப்படவேண்டும் என இலக்கு
வைக்கப்பட்டன.
ஜனநாயகக் கட்சியானது அதன் வேட்பாளர்கள், மக்கள் நலனுக்காக வாதிடுபவர்கள் என
பலநேரம் பறைசாற்றிக் கொள்ளும் தன்மை இருந்தபோதிலும்கூட, அக்கட்சியானது, அமெரிக்க முதலாளித்துவத்தின் இரண்டு
முக்கிய அரசியல் ஸ்தாபனங்களில் ஒன்றாகத்தான் இருக்கின்றது. அது நிதி ஆதிக்க ஒருசிலவர் ஆட்சியின் நலன்களுக்கு சேவை
செய்கின்றது; சூழ்நிலைகள் கட்டாயப்படுத்தினால் ஜோர்ஜ் புஷ்ஷிற்குப் பதிலாக, பெரு நிறுவன நலன்களுக்காக அவர்கள்
விரும்புபவரை வெள்ளை மாளிகையில் இருத்தவும் தயாராக இருக்கின்றது. ஆரம்ப கட்டத்திலிருந்து, இறுதி வாக்கெடுப்பு
நாள் வரை முழுத் தேர்தல் நிகழ்ச்சிப்போக்கும் பெரு நிதி, மற்றும் செய்தி ஊடகத்தால் மேலாதிக்கம்
செய்யப்படுகின்றது; பல வேட்பாளர்களையும் தங்கள் விருப்பத்திற்கேற்ப நடக்கவைத்து, அவர்களுக்கு உருக்கொடுத்து
மக்கள் மத்தியில் அவர்களை பற்றிய கருத்தை உருவாக்குவது இவை இரண்டின் செயல்கள் ஆகும். இறுதி ஆய்வுகளில், யார்
ஜனாதிபதி என தேர்ந்தெடுப்பது, மக்களுடைய ஜனநாயக விருப்பினைக்காட்டிலும், ஆளும் செல்வந்த தட்டிற்குள்ளே உள்ள
ஒத்த கருத்தையே பிரதிபலிக்கும்.
ஜனநாயகக் கட்சி தலைமைக்குள்ளே இருக்கும் மோதல்கள், எவ்வளவு கடுமையாகவும்
கசப்பாகவும் இருந்தாலும், அடிப்படையில் அவை தந்திரோபாயம் பற்றியவை: சமூக எதிர்ப்பின் எழுச்சியை முடிந்தால்
வராமல் தவிர்க்கவும், அத்தைகைய நிலை வந்தால் அதை முற்றிலும் அகற்றவும், அல்லது அதை கட்டுப்படுத்தி,
முதலாளித்துவ அமைப்பு ஒட்டு மொத்தத்திற்கும் அச்சுறுத்தல் தராத வழிகளினூடாக திசைதிருப்புவதற்கு, ஜனநாயகக்
கட்சியை எவ்வளவு சிறப்பான நிலையில் வைத்திருப்பது என்பதாகும். புஷ்ஷுடன் அவர்களுக்கு எத்தகைய கருத்து வேறுபாடு
இருந்தாலும், ஆளும் வர்க்கத்தின் மிக அடிப்படையான நலன்களில் ஜனநாயகக் கட்சியின் முக்கிய வேட்பாளர்கள்,
குடியரசுக் கட்சியின் தலைமையுடன் தோள்கொடுத்தே நிற்பர். அதனால்தான் ஈராக் போரை எதிர்ப்பதாக
கூறுபவர்களும், அமெரிக்க ஆக்கிரமிப்பை பராமரிக்க வேண்டும் என்றும், ஈராக்கிய கொரில்லா போராளிகளின்
எதிர்ப்பை நசுக்கும் வரையில், அங்கு படைகள் இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
ஜனநாயகக் கட்சியின் இடது பிரிவு, அரை- ஜனரஞ்சகவாத (மக்களைத்
திருப்திபடுத்தவேண்டும் என்ற) ஒரு சிறிய கன்னை உள்ளது; இவர்களில் சிலர் ஜனநாயகக் கட்சிக்குள்ளேயே
பணியாற்றுபவர்கள் (Dennis Kucinich, Al Sharpton
இவர்களுடைய தேர்தல் பிரச்சாரங்கள் இதற்கு சான்று), வேறு சிலர் பசுமைக் கட்சியை அல்லது தனித்து நிற்கும்
வேட்பாளரான Ralph Nader-ஐ (2000 தேர்தலில்
பசுமைக் கட்சி வேட்பாளராக நின்றவர்) ஆதரிப்பர். இந்த சக்திகள் ஜனநாயகக் கட்சிக்கு "இடது" தூண்போல்
செயல்பட்டு, பொதுவாகவே முதலாளித்துவ அரசியலுக்கு இடது போல் காட்டிக்கொள்வதோடு மக்களிடையே,
ஜனநாயகக் கட்சியை தேவையானால் முற்றிலும் இடதுபுறம் தள்ளப்பட முடியும் அல்லது முற்போக்கு அரசியல் மற்றும் சமூக
சீர்திருத்தங்களின் ஒரு கருவியாகவும் கூட மாற்றப்படக்கூடியது என்ற பிரமையை முன்னிலைப்படுத்த சேவை செய்கின்றனர்.
இவர்கள் இலபமுறையைக் காத்திடவே முயல்வர்; Kucinich
ஐப் பொறுத்தவரையில், தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் மற்றும் அமெரிக்க வணிகத்தின் மிகப் பிற்போக்கான,
போட்டியற்ற பிரிவுகளின் பொருளாதார தேசியவாதத்தை பகிரங்கமாகவே அரவணைக்கிறார்.
சோசலிச சமத்துவக் கட்சி, ஷார்ப்டனின் இனவாத அரசியலை முன்தள்ளுவதை முற்றிலும்
எதிர்க்கிறது; இது அடிப்படையில் உழைக்கும் மக்களின் நலன்களுக்குப் புறம்பானது என்பது மட்டுமல்லாமல்,
முதலாளித்துவத்திற்கு எதிரான பரந்த சர்வதேச மக்கள் இயக்கத்தைக் கட்டி எழுப்புவதற்கான தேவைக்கு
எதிரிடையானதாகும். அரசியலில் இன அடிப்படையில் தொகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம் என்று கூறுபவர்கள்,
குறுகிய, சிறப்புச் சலுகைகள் மிகுந்த சமூக தட்டுக்களைத்தான் பிரதிபலிக்கிறார்கள், அவர்கள் கறுப்பர்கள்
மத்தியிலாயினும், இலத்தீன் அமெரிக்கர் மத்தியிலாயினும் ஏனைய இனக் குழுவினர் மத்தியிலாயினும் சரி, அவர்கள்
அதிகாரங்களுக்கும் அவற்றை ஒட்டிய சலுகைகளுக்கும் பின்னால் அலைபவர்களே ஆவர். எங்கள் கட்சி இத்தகைய
அனைத்துவகை இனங்காட்டல் அரசியலை எதிர்த்து, அனைத்து உழைக்கும் மக்களின் ஐக்கியத்திற்கும் ஒருங்கிணைப்பிற்குமான
ஆதரவில் உறுதியாக நிற்கின்றது.
பசுமைக் கட்சியை பொறுத்தவரையில், அரசியலில் அவர்கள் ஒரு பிற்போக்கான
பங்கைத்தான் கொண்டுள்ளனர்; தொழிலாள வர்க்கத்தின் அடிப்படையில் சோசலிச இயக்கம் வளர்ச்சி பெறுவதற்கு
எதிராக, ஒரு மூன்றாவது முதலாளித்துவக் கட்சியின் உருவாக்கத்திற்கு ஆதரவாக பாடுபட்டுக் கொண்டிருக்கின்றது.
ஜேர்மனியில் பசுமைக் கட்சியின் வரலாறு காண்பித்துள்ளதுபோல், முதலாளித்துவ அரசியலில் ஒருமுறை தங்களின்
செல்வாக்கை சாதிக்க தொடங்கியதும் அவர்கள் விரைவாகவே தங்களின் ஆரம்ப கால தீவிரத்தை கைவிட்டுவிடுவர்.
ஜேர்மனிய பசுமைக் கட்சியினரில் முன்பு சமாதானவாதிகளாக இருந்தவர்கள், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர்
முதன்முதலாக ஜேர்மன் படையினர் வெளிநாட்டிற்கு அனுப்பப்பட வழி வகுத்துள்ளனர். பசுமைக் கட்சி வேட்பாளரான
பீட்டர் காமெஜொ, கலிஃபோர்னியாவில் வலதுசாரியினர் ஆர்வத்துடன் கொண்டுவந்த கவர்னரை திருப்பியழைத்தல்
தேர்தலில் மறைமுகமாக ஜனநாயகக் கட்சியின் முக்கிய வேட்பாளரான குருஸ் பஸ்டமன்டேக்கு ஆதரவு வாக்கை தர
முன்வந்தார்.
2004ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில், இடது பற்றிப் பேசும் இந்த அரசியல் வாதிகள்,
பெரு வர்த்தக கட்சி இரண்டிலிருந்தும் சுதந்திரமாக தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை நிலைநாட்டுவது
பற்றிய முக்கிய பிரச்சினையை தள்ளிவைத்துவிடுவார்கள். இவர்கள் புஷ்ஷிற்கு எதிரான மக்கள் எதிர்ப்பை, ஜனநாயகக்
கட்சியின் ஆரம்ப போட்டிகளில் வெற்றி பெறும் வேட்பாளருக்கு ஆதரவாக திசைதிருப்பிவிடுவர். இவர்கள் அனைவருமே,
ஏதோ புஷ் ஒருவர்தான் அமெரிக்க முதலாளித்துவத்தின் ஆயுதம் போலவும், ஆளும் தட்டின் மற்ற பல கருவிகளில் அவரும்
ஒருவர் என்பதைக் காட்டிலும், "புஷ்ஷைத் தவிர எவரும் சரி" என்ற நிலைக்கு ஆதரவு கொடுக்கின்றனர்.
இத்தகைய "அதைவிடக் குறைந்த கெடுதல்" என்ற வகையிலான அரசியல் அனைத்தும்
உண்மையில் தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு முட்டுச் சந்தாகும். ஏகாதிபத்திய போருக்கும் சமூக பிற்போக்கிற்கும்
எதிரான போராட்டத்தில் குறுக்கு வழி ஏதும் கிடையாது. ஒரு சுதந்திரமான, வெகுஜன சோசலிசக் கட்சியை
அமைத்திடல் இப்பொழுது இன்றியமையாத கட்டாயம் ஆகும். இந்த போராட்டத்திற்கான ஒரு கட்டமைப்பை வழங்கவும்
ஒருமுகப்படுத்தவும் சோசலிச சமத்துவக் கட்சி 2004ம் ஆண்டுத் தேர்தலில் பங்கு கொள்ளுகிறது.
சோசலிசமும் அமெரிக்க தொழிலாள வர்க்கமும்
சோசலிச சமத்துவக் கட்சி சர்வதேச சோசலிச இயக்கத்தின் மாபெரும் மரபுகளை
அடிப்படையாகக் கொண்ட கட்சியாகும். சமத்துவம், மனித ஒற்றுமை, கூட்டுறவு, இல்லாமை மற்றும் ஒடுக்குமுறையிலிருந்து
மனிதகுலத்தை சடரீதியாகவும் ஆன்மரீதியாகவும் விடுவித்தல் இவற்றிற்காக சோசலிசம் பாடுபடுகிறது. சோசலிசத்தின்
முதல் பணி, வறுமையை அகற்றுவது ஆகும்; மனிதனுடைய உற்பத்தி சக்திகளின் பிரம்மாண்டமான வளர்ச்சி, விஞ்ஞானம்
மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி இவற்றில் ஏற்பட்டுள்ள மகத்தான முன்னேற்றத்தை கணக்கில் கொண்டால், இந்த இலக்கு
முற்றிலும் அடையக்கூடியதே ஆகும். மனித சமூகத்தின் பரந்த மக்களுடைய வாழ்க்கை தரங்களை உயர்த்தி, முழுமையான
சமத்துவத்திற்கான நிலைமைகளை தோற்றுவிக்கவும் சோசலிசம் பாடுபடுகிறது.
ஆனால் மனிதன் ரொட்டியால் (பாண்) மட்டுமே வாழவில்லை; உடனடியான
சடத்தேவைகளை பூர்த்தி செய்வதோடு, அது மிக முக்கியமானதாக இருந்தபோதிலும், சோசலிசத்தின் முன்னோக்கு
அத்தோடு நின்று விடவில்லை. அந்த சாதனை, பண்பாடு, விஞ்ஞானம் மற்றும் தனிப்பட்ட ஆண்கள், பெண்களின் அறிவார்ந்த
மற்றும் ஒழுக்கநெறி மேன்மை மாபெரும் அளவில் பூத்துக் குலுங்குவதற்கான அடித்தளங்களை அமைக்கும். உற்பத்தி
சக்திகளின் சமூக உடைமை, சர்வதேச திட்டமிடல் மற்றும் ஒத்துழைப்பு உள்ள உலகில், மக்களுடைய திறமைகள்,
ஆர்வங்கள் மற்றும் இயல்திறன்களின் சாத்தியமான முழுவளர்ச்சியையும் சோசலிசம் எதிர்பார்க்கிறது, மற்றும் மக்கள்
பங்கேற்பு, ஜனநாயக ரீதியான கட்டுப்பாடு இவற்றின் பரந்த அளவிலான விஸ்தரிப்பு பொருளாதார பாதுகாப்பின்மையின்
அரைபடும் செயலிழந்த நிலையிலிருந்தும் நாயை-நாய் அடித்துத் தின்னும் போட்டியின் மனிதநேயமற்ற பாதிப்பிலிருந்தும்
மனிதனை மீண்டுவரக் கூடியவனாக ஆக்கும்.
கார்ல் மார்க்ஸ் வருகையுடன், சோசலிசம் ஓர் விஞ்ஞானமானது. 1917 அக்டோபர்
புரட்சியோடு அது, முதலாளித்துவத்தை தூக்கியெறிந்து முதலாவது தொழிலாளர் அரசை -சோவியத் ஒன்றியத்தை-
ஸ்தாபித்ததன் மூலம் ஒரு பரந்த மக்கள் இயக்கத்தின் வேலைத் திட்டமானது.
சமூக சமத்துவத்திற்கான, தொழிலாள வர்க்கத்தின் ஒரு பரந்த சர்வதேச
போராட்டத்தின் பகுதியாக ரஷ்ய புரட்சி விளங்கியது. அமெரிக்க தொழிலாளர்களின் ஒவ்வொரு முக்கியமான
முன்னேற்றமும், நாள் ஒன்றுக்கு எட்டு மணிநேர வேலையிலிருந்து, குழந்தை உழைப்புச் சட்டங்கள், அனைவருக்கும்
பொதுவான பொதுக்கல்வி, மிகப்பெரிய அளவில் தொழில் துறையில் சங்கங்கள் நிறுவப்படல், தெற்கே ஜிம் க்ரோவின்
(Jim Crow) பிரிவினை கருத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது
வரையில், அனைத்தும் சோசலிச எண்ணம் கொண்ட போராளிகளால் தலைமை தாங்கப்பட்டதாகும்.
பல மகத்தான உயர்சிந்தனைகள் போலவே, சோசலிசமும் தவறாகப் பயன்படுத்தப்பட்டு,
காட்டிக் கொடுக்கவும் பட்டது. சோவியத் ஒன்றியத்தில் ஜோசப் ஸ்ராலின் கீழ் எழுந்த ஓர் அதிகாரத்துவத்தால் அது
காட்டிக் கொடுக்கப்பட்டது. ஸ்ராலினிசம், ரஷ்ய புரட்சியின் சர்வதேசிய மரபுரிமையின் மற்றும் அனைவருக்கும் சம
உரிமைக்கு போராடுவதன் தொடர்ச்சியாக இருக்கவில்லை. அத்தகைய கருத்துக்கு எதிரான தேசியவாத எதிர்ச்செயலாக
இருந்தது. ஸ்ராலினிச அதிகாரத்துவம் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகத்தை நசுக்கியது, சர்வாதிகார ஆட்சியை
திணித்தது, உண்மையான மார்க்சிஸ்டுகளை கொன்றழித்தது மற்றும் உலகெங்கிலும் படர்ந்திருந்த தொழிலாள வர்க்கத்தின்
புரட்சிகர போராட்டங்களை நிலைகுலையச் செய்தது - இவை எல்லாவற்றையும் "சோசலிசம்" எனும் பெயரில்
செய்தது. ரஷ்ய புரட்சியும் சோசலிசமும் ஸ்ராலினிஸ்டுகளால் காட்டிக் கொடுக்கப்பட்டது, கிரெம்ளின் அதிகாரத்துவம்
சர்வதேச ஏகாதிபத்தியத்துடன் நேரடியாக ஒத்துழைத்து சோவியத் ஒன்றியத்தை உடைத்ததிலும், 1990 களின்
ஆரம்பத்தில் முதலாளித்துவத்தை மீட்டதிலும் உச்சக் கட்டத்தை அடைந்தது.
அமெரிக்காவில், தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள் தொழிற்சங்கங்களுக்குள்ளேயே
வளர்ச்சி கண்ட அதிகாரத்துவத்தால் காட்டிக் கொடுக்கப்பட்டது. அதிகாரத்துவம், முதலாளித்துவ அமைப்பை
பாதுகாத்ததோடு, பிரதானமாக ஜனநாயகக் கட்சியுடனான அதன் கூட்டின் மூலமாக, அமெரிக்க பெரு வர்த்தகத்திற்கு
தொழிலாளர்களை அரசியல் ரீதியாய் அடிபணியச் செய்தது. AFL-CIO
-ன் காட்டிக்கொடுப்பு, தொழிற்சங்கங்கள் தங்களை பெருநிறுவன நிர்வாக மேலாண்மையுடன்
அடையளப்படுத்திக்கொள்வதற்கு இட்டுச்சென்றது, மற்றும் தொழிலாள வர்க்கத்தை பாதுகாப்பதற்கு பதிலாக அவர்களை
அடக்கும் கருவிகளாக அவர்கள் மாற்றம்பெற வழிவகுத்தது.
எங்கள் இயக்கம் இந்த அதிகாரத்துவத்திற்கான எதிர்ப்பில், சோசலிசத்திற்காகப்
போராடிய, சிறந்த மிகவும் துணிவுள்ள மற்றும் தொலைநோக்கு கொண்ட தொழிலாள வர்க்கத்தின் பிரதிநிதிகளின்
மரபுரிமை செல்வத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. இந்த மரபின் மிகப்பெரிய பண்புருவாக விளங்கியவர், ரஷ்ய
புரட்சியின் தலைவராக விளங்கியவரும், ஸ்ராலினிசத்தின் காட்டிக்கொடுப்புக்களுக்கு எதிரான போராட்டத்தை
வழிநடத்தியவரும் 1938ல் நான்காம் அகிலத்தை - சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியாக நிறுவியதன் மூலம்
சர்வதேச தொழிலாளர் இயக்கத்தின் மறுபிறப்பிற்கு அடிப்படையை அமைத்தவருமான லியோன் ட்ரொட்ஸ்கியாவார்.
சோசலிசத்திற்காக அமெரிக்கா மாபெரும் போராளிகளையும் தோற்றுவித்துள்ளது; இந்த
ஆடவரும் பெண்டிரும் தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் போராடி, தொழிலாள வர்க்கத்தின் விடுதலைக்காக தங்கள்
வாழ்வை அர்ப்பணித்தவர்கள் ஆவர். அவர்களுள் Big Bill Haywood,
Eugene Debs, James Cannon போன்ற பெரும் தலைவர்களும் அடங்குவர். அமெரிக்க
தொழிலாளர்கள் தங்களின் ஜனநாயக உரிமைகளையும் வேலை நிலைமைகளையும் பாதுகாப்பதற்கு இன்று போராட்டத்தை
ஒழுங்கமைக்கும் பொருட்டு, இந்த அரிய, அவர்கள் விட்டுச் சென்ற சோசலிச மரபியத்தை தமதாக்கிக் கொள்ள
வேண்டும்.
அமெரிக்க ஐக்கிய அரசுகளில் இருப்பது போல் வேறு எந்த ஒரு நாட்டிலும்
ஆளும்வர்க்கமானது சோசலிசத்திற்கு எதிராக கடுமையான, இடைவிடாத பிரச்சாரத்தை செய்வதில்லை. பிறப்பிலிருந்தே,
ஒவ்வொரு அமெரிக்கரும் கடுமையான சோசலிச எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு ஆட்படவேண்டிய நிலை இருக்கின்றது.
தொழிலாளர்கள், நிலைமை ஏன் இவ்வாறு இருக்கிறது என்று தங்களைத்தாங்களே கேட்க வேண்டும். எதற்காக அவர்கள்
அச்சப்படவேண்டும்? எல்லா தொழில்துறை நாடுகளைக் காட்டிலும், அமெரிக்காவில்தான் சமூகத் தேவைகளுக்கு எதிராக
இலாபமும், தனியார் சொத்துக் குவிப்பும் உயர்த்துவது மிகவும் வலியதாக்கப்படுகிறது, இங்குதான் மூலதனம்,
உழைப்பின்மீது மிகவும் ஈவிரக்கமற்ற முறையில் தன் ஆட்சியை செலுத்துவதோடு, செல்வக் குவிப்பின் ஒருங்குகுவித்தலானது
மிகவும் அப்பட்டமான முறையிலும் மிகவும் கீழ்த்தரமான முறையிலும் நடைபோடுகிறது என்ற வெறும்
நிகழ்வுப்பொருத்தத்தினாலா?
சமூகத்தின் நலன்கள், தனிப்பட்டோரின் செல்வக் குவிப்பைவிட அதிக முன்னுரிமை
பெறவேண்டும் என்ற உள்ளுணர்வு உடையவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, 2004ம் ஆண்டு தேர்தல்களில் சோசலிச
சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்திற்கு ஆதரவு தரவேண்டும்.
சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து, 2004ம் ஆண்டுத் தேர்தல் பிரச்சாரத்தை
முன்னெடுங்கள்
எங்கள் ஆதரவாளர்கள் அனைவரையும் அதேபோல் அரசியல் ஆய்விற்காக உலக சோசலிச
வலைத் தளத்தை ஆவலுடன் பார்வையிடும் அனைவரையும் அத்தோடு பெரு வர்த்தக கட்சிகளுக்கு ஒரு சோசலிச மாற்றீடு
வேண்டுமென கருதுபவர்கள் அனைவரையும் சோசலிச சமத்துவக் கட்சியின் 2004 தேர்தல் பிரச்சாரத்தில்
செயலூக்கத்துடன் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம்.
இதன் அர்த்தம் ஆரம்பக் கட்டத்தில், எமது வேட்பாளர்களை வாக்குச் சீட்டில் இடம்பெறச்செய்யும் முயற்சியில் இணைய
வேண்டும் என்பதாகும்.
இதுவே ஒரு தீவிரமான சவால் ஆகும். அமெரிக்காவை போல், வேறு எந்த முதலாளித்துவம்
முன்னேற்றம் அடைந்துள்ள நாட்டிலும் ஒரு சுயாதீனமான தொழிலாள வர்க்க கட்சி, ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையாகிய
தேர்தலில் நிற்கும் உரிமையைப் பெறுவதில் அந்த அளவு கஷ்டங்களைக் காண்பதில்லை. பில் வான் ஓகென் மற்றும் ஜிம்
லோரன்சை அனைத்து, 50 மாநிலங்களிலும், வாக்குச்சீட்டில் இடம்பெறச் செய்வதற்கு 750,000 பதிவு பெற்ற
வாக்காளர்களிடம் கையெழுத்து பெறுவது தேவையாகும் (150,000 கையெழுத்துக்கள் கலிபோர்னியாவில் மட்டும்),
அதேபோல பல பல்லாயிரக்கணக்கான டாலர்கள் பதிவுக் கட்டணத்திற்கும், சட்டச் செலவுகளுக்கும் எடுத்துவைக்கவேண்டும்.
இதைத்தவிர, அமெரிக்க செனட் மன்றத்திற்கும், தேசிய சட்டமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்கும் சோசலிச சமத்துவக்
கட்சி வேட்பாளர்களை நிறுத்துவது அடுத்த பெரிய பணியாகும். அது அடிமட்டத்தில் அரசியல் இயக்கத்தை வளர்த்து பரந்த
அளவில் மக்களை, அதாவது, தொழிலாளர்கள், சிறப்பு பயிற்சிபெற்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள், இளைஞர்கள்
இவர்களை திரட்டுவதுடன், தேர்தலுக்குப் பின்னும் தொடர்ந்த பணிகளில் ஈடுபட்டு, தொழிலாள வர்க்கத்தின் பரந்த சோசலிச
கட்சியை கட்டி எழுப்புவதற்கான அஸ்திவாரத்தை அமைக்க வேண்டும்.
நாங்கள் இந்த சவாலை, எங்கள் ஆதரவாளர்கள் முன் வைக்கின்றோம்: சோசலிச சமத்துவக்
கட்சியின் பிரச்சாரத்தை விளம்பரப்படுத்தும் முயற்சியில் எங்களுடன் இணையுங்கள்; அதன் வேட்பாளர்களுக்கு ஆதரவை
வென்றெடுங்கள், எத்தனை மாநிலங்களில் முடியுமோ அத்தனை மாநிலங்களிலும் அவர்களை வாக்குச்சீட்டில் இடம்பெற செய்யுங்கள்.
அதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள். நீங்களே சோசலிச சமத்துவக் கட்சியின் சார்பில் தேசிய சட்ட மன்றத்தில்
உறுப்பினராக போட்டியிட முடிவு எடுங்கள். சோசலிச சமத்துவக் கட்சியை, உழைக்கும் மக்களின் ஒரு புதிய அரசியல்
கட்சியாகக் கட்டி எழுப்ப உதவுங்கள்.
இந்த முயற்சியை ஆரம்பிப்பதற்கு, சோசலிச சமத்துவக் கட்சியானது ஒரு தேசிய
மாநாட்டை, மிச்சிகன், அன் ஆர்பரில், 2004 மார்ச் 13-14ம் தேதிகளில் நடாத்த உள்ளது. இந்த மாநாடு சோசலிச
சமத்துவக் கட்சியின் அரசியல் வேலைத்திட்டத்தை விவாதிப்பதுடன், பிரச்சாரத்தில் கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகளையும்
விவாதிக்கும். நாடுதழுவிய முயற்சியாக, பில் வான் ஓகென் மற்றும் ஜிம் லோரென்ஸ் இருவரையும் வாக்குச் சீட்டில்
இடம்பெறச் செய்ய தேசிய அளவிலான முயற்சியை தொடங்குவதோடு உழைக்கும் மக்களையும், இளைஞர்களையும் ஒரு
கடற்கரைப்பகுதியிலிருந்து மற்றோரு கடற்கரைப்பகுதிவரை ஆர்வத்துடன் அரசியல் ரீதியாய் அணிதிரட்டுவதற்கான திட்டங்களை
வரைந்து, தேசிய சட்டமன்ற இடங்களுக்கான சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரங்களுக்கும் ஒழுங்கு செய்யும்.
சோசலிச சமத்துவக் கட்சியானது இந்த பிரச்சாரத்தில் கலந்து கொள்ளவிழைவோர் அனைவரையும்,
அன் ஆர்பர் மாநாட்டிற்கு அழைப்பதுடன், தொழிலாள வர்க்கத்தின் புதிய அரசியல் கட்சி ஒன்றை கட்டி எழுப்புதற்கான
முயற்சியில் பங்கு பெறுமாறு அழைக்கின்றது.
|