World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் Right wing-led rebellion convulses Haiti வலதுசாரி தலைமையிலான கிளர்ச்சிஎழுச்சி ஹைட்டியை அதிரவைக்கிறது By Richard Dufour கடந்த ஆண்டு இறுதியிலிருந்து நடைபெற்றுவரும் வன்முறை அரசியல் மோதல்களினால் ஆடிப்போயிருக்கும் ஹைட்டியில் இப்போது ஜோன் பேர்ட்ரான்ட் அரிஸ்டைட் இன் அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்திய கிளர்ச்சி எழுச்சியாக வெடித்திருக்கிறது. பெப்ரவரி-5-ம் தேதி ஏராளமான ஆயுதமேந்தியவர்கள் கொனய்வஸ் என்ற இடத்தை கைப்பற்றினார்கள். இந்த நகரத்தில் 2,00,000-பேர் வசிக்கின்றனர். தலைநகரமான போர்ட் -அயு-பிரின்சிற்கு வடமேற்கில் 70 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கேப்-ஹைய்ட்டியன் (Cap-Haïtien) க்கு சரக்குகள் செல்வதற்கான முக்கிய பாதையில் இந்த நகரம் அமைந்துள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் மேயர் இல்லத்திற்கு தீ வைத்துவிட்டு, அந்த நகரின் முக்கியமான போலீஸ் நிலையத்தை தாக்கி அங்கு மிக்குறைவான ஆயுத பலத்துடன் இருந்த போலீஸ்காரர்களை விரட்டிவிட்டு காவல் நிலையத்தையும் தீ வைத்து கொளுத்தினர். அதன்பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் அரிஸ்டைட் பதவி விலகும் வரை இவ்வகையான போராட்டம் தொடரும் என்று கூறினர். இதற்குப்பின் இதே மாதிரியான கிளர்ச்சி இந் நகருக்கு பக்கத்தில் உள்ள சென்ட் மார்க்கிலும் நடந்திருக்கிறது. பெப்ரவரி 12-தேதிவரையில் கொனய்வ்ஸ் பிராந்தியத்தில் உள்ள ஒரு டஜன் நகரங்களுக்கு இந்தக் கிளர்ச்சி பரவியிருக்கிறது மற்றும் நாட்டின் தென்மேற்குப் பகுதியும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அரசாங்கம் நாட்டின் நான்காவது பெரிய நகரமான கொனய்வ்ஸ்ஸை மீட்க எடுத்த நடவடிக்கைகள், ஞாயிறன்று தோல்வியில் முடிந்தன. ஆனால் அரிஸ்டைட்டின் ஆதரவுக் குடிப்படைக் குழுக்களின் உதவியுடன் அரசாங்கப்படைகள் பதில் தாக்குதல் நடத்தி சென்ட் மார்க் உள்ளிட்ட மூன்று நகரங்களை மீண்டும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தன. செவ்வாயன்று முதன்முறையாக நாட்டின் வடக்குப்பகுதியில் சண்டை வெடித்தது. கிளர்ச்சிக்காரர்கள் சிறிது நேரத்தில் டோன்டொன் என்ற இடத்தின் காவல் நிலையத்தைக் கைப்பற்றினர், இது கேப்- ஹைய்டியனுக்கு புறநகர் பகுதியில் உள்ளது. இதுவரையில் 5000-பேர்கள் அடங்கிய வலுவான தேசிய போலீஸ் படையின் பாதுகாப்பில் இருக்கும் போர்ட் -ஓ- பிரின்ஸ் நகரம் கிளர்ச்சி எழுச்சியினால் பாதிக்கப்படவில்லை. ஆனால் பல வாரங்களாக இந்த இடம் அரசாங்கத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் ஆர்ப்பாட்டங்கள் பல நடந்து கொண்டே இருக்கும் இடமாக விளங்குகிறது. இந்த ஆர்ப்பாட்டங்கள் பல மோதல்களுக்கு வழிவகுத்து அதில் 12-பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சியினர் வரும் வியாழனன்று மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கின்றனர். இதை அவர்கள் ஏற்கனவே கலங்கி, பலவீனமாக இருக்கிற அரிஸ்டைடின் அரசாங்கத்துக்கு ''இறுதி அடியாக'' இருக்கப் போகிறது என்று வர்ணித்துள்ளனர். கொனய்வ்ஸ் இன் கிளர்ச்சிக் குழுவானது பத்திரிகைகளில் கிரிமினல் கும்பல் என்று வர்ணிக்கப்படுகிறது. இவர்கள் நகர குடிசைப்பகுதிகைளச் சேர்ந்தவர்கள் மற்றும் மிகச் சமீபகாலம் வரையிலும் இது அரிஸ்டைட் மற்றும் அவரது லாவலாஸ் கட்சியின் ஆதரவைப்பெற்று இருந்தது. ஆனால் வாஷிங்டன் போஸ்ட் இதழில் குறிப்பிட்ட விஷயமானது ''இந்த காலாட்படையினை வழிநடத்தி செல்லும் முன்னணியினர், 1994-ல் அரிஸ்டைட் பதவிக்கு வந்தபோது கலைக்கப்பட்ட ஹைட்டிய இராணுவத்தின் முன்னாள் உறுப்பினர் மற்றும் அவரை எதிர்த்த துணை இராணுவப்படை குழுவின் வீரர்களாக இருந்தவர்களால் தலைமை தாங்கப்படுவதாகத் தெரிகிறது''. போஸ்ட் குறிப்பிடும் துணை இராணுவப்படைக் குழுவானது FRAPH என்று அறியப்படுகிற ஒரு குழுவாகும். 1991-ல் முதல் தடவையாக அரிஸ்டைட்டை பதவியில் இருந்து இறக்கிவிட்டு ஆட்சிக்கு வந்த இராணுவக்குழு மூன்றுவருடங்கள் ஆட்சி செய்தது. அப்போது அரிஸ்டைட்டின் ஆதரவாளர்களைக் குறிவைத்து தாக்கி அழிப்பதற்கு உருவாக்கப்பட்ட கொலைப்படைதான் FRAPH. அந்த சமயத்தில் அரிஸ்டைட், டுவாலியரின் சர்வாதிகாரத்தை எதிர்த்ததாலும் சமூக சீர்திருத்தம் முதலியவைகளைக் கொண்டுவருவதாக உறுதியளித்ததாலும் மக்களிடையே பரவலான ஆதரவைப் பெற்றவராக இருந்தார். 1994- ல் இந்த விஷயத்தில் அமெரிக்க கடற்படையின் நிலப்படைப்பிரிவு தலையிட்டு அரிஸ்டைட்டை மறுபடியும் பதவியில் அமர்த்தியது. அப்போது அவர்கள் செய்த முதல்காரியம் FRAPH- ன் தலைமையகத்தை தாக்கி ஆயிரக்கணக்கான ஆவணங்களைப் கைப்பற்றியதுதான். இதுநாள் வரையிலும் அந்த ஆவணங்களை ஹைட்டியின் நிர்வாகத்திடம் அமெரிக்க அரசாங்கம் தரவில்லை, அதுமட்டுமின்றி FRAPH-ன் ஸ்தாபக தலைவர் இம்மானுவேல் கான்ஸ்டன்ட்டை ஹைட்டிக்கு திரும்ப ஒப்படைக்கவில்லை. இவர் நியூயோார்கில் வசித்துவருகிறார், அவரே ஒப்புக்கொண்ட விஷயம் என்னவென்றால் அவர் அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ-யின் உளவாளி என்பதுதான். ஆரம்பத்தில் எதிர்கட்சியின் அரசியல் தலைவர்கள் - தொழிலதிபர்களின் வேறுபட்ட குழு, அரிஸ்டைட்டின் முன்னாள் ஆதரவாளர்கள், முன்னாள் டுவாலியரிஸ்ட்டுகள் மற்றும் 1991-ம் ஆண்டு நடந்த ஆட்சிக் கவிழ்ப்பின் ஆதரவாளர்கள் ஆகியோர் அடங்கிய இவர்கள் கொனாய்வ்சின் எழுச்சியைக் கண்டிக்க மறுத்தனர். ஆனால் ஐ.நா-வானது ஹைட்டியில் மக்கள் மிகப்பெரிய அழுத்தத்தில் இருக்கிறார்கள் என்கிற எச்சரிக்கையும் அமெரிக்க பத்திரிகைகளின் தலையங்கங்கள் ஹைட்டி கொஞ்சம் கொஞ்சமான உள்நாட்டுப் போரை நோக்கிப் போய்கொண்டிருப்பதால் மிகப்பெரிய அளவில் ஹைட்டியிலிருந்து அகதிகள் இடம்பெயரக்கூடும் என்றும் அச்சத்தை வெளிப்படுத்தி இருந்தன. இதனால் வேறு வழியில்லாமல் எதிர்கட்சியினர் நடந்த வன்முறைகளைக் கண்டித்து அதற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று விலகிக் கொண்டனர். அவர்களுடைய நோக்கம் என்னவோ, மாறாமல் இருக்கிறது. சமூகத்தில் அடக்கமுடியாத கலவரங்களை, குழப்பநிலையினை உருவாக்கி வாஷிங்டன் தனது பொருளாதார அரசியல் மற்றும் இராணுவ பலத்தை உபயோகித்து 2006-ல் பதவிக்காலம் முடியும் அரிஸ்டைட்டை இப்போதே பதவியில் இருந்து இறக்கும் என்று எதிர்பார்க்கின்றனர். கொத்தடிமைகள் போன்ற சூழலில் தனது நிறுவனங்களை நடத்தி வருபவரும் முக்கியமான இரு எதிர்கட்சிகளில் ஒன்றின் தலைவருமான ஆண்டிரீ அபெய்ட் (André Apaid) பின்வருமாறு அறிவித்து இருக்கிறார்: ''நாங்கள் இன்றும் வன்முறைகளற்ற வழியில்தான் நடந்து கொண்டு வருகிறோம். ஆனால் சர்வதேச சமூகம் இப்போதைய நிலைமைக்கு அரிஸ்டைட்தான் காரணம் என்று எவ்வளவு சீக்கிரம் புரிந்து கொள்கிறதோ, அவ்வளவு விரைவில் மாற்றத்துக்கான சமாதான வழிப்பாதையில் செல்லும் வழிமுறைகளை உருவாக்க முடியும். இதில் எந்த அளவுக்கு தாமதம் ஆகிறதோ அந்த அளவுக்கு அமெரிக்காவும் உலகமும் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்." புஷ் நிர்வாகத்தைப் பொறுத்தவரை ஹைட்டியின் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபருக்கு எதிரான கிளர்ச்சி எழுச்சிக்கான அதனுடைய எதிர்ப்பு மிகவும் குறைவாகத்தான் இருந்தது. திங்களன்று உள்துறையின் செயலர் ரிச்சார்ட் பெளச்சர் "ஹைட்டியில் சமீபத்தில் நடந்துவரும் வன்முறைகளை அமெரிக்க ஐக்கிய அரசுகள் வன்மையாகக் கண்டிக்கிறது," என்றார் ஆனால் தேந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை கவிழ்ப்பதற்கான ஒரு முயற்சியை அமெரிக்கா கண்டித்த விதம் எப்படி இருந்தது என்றால் வெறும் சம்பிரதாய முறையில் ''ஹைட்டியர்கள் சட்டத்துக்கு உட்பட்டு நடக்குமாறு அமெரிக்கா அவர்களைக் கேட்டுக்கொள்கிறது'' என்பது மட்டுமே இருந்தது. அரிஸ்டைடின் அரசாங்கம் "பல சமயங்களில் வன்முறைக்கு காரணமாக இருந்திருக்கிறது'' என்று தெரிவித்து பெளச்சர் அவரது கடுமையான விமர்சனங்களை அரிஸ்டைட் அரசாங்கத்தைக் குறித்துத்தான் தெரிவித்தார். அடுத்த நாள் ஒரு நிருபர் நேரடியாக ''அமெரிக்க அரசாங்கம் அரிஸ்டைட் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று விரும்புகிறதா? என்ற கேள்வியைக் கேட்டார். அதற்கான பதிலாக பெளச்சர், ''ஒரு அரசியல் தீர்வை அடைவதற்கு ஹைட்டி அரசாங்கம் ஆளப்படும் விதத்தில் மற்றும் பாதுகாப்பு பராமரிக்கும் முறை எப்படி அமைய வேண்டும் என்பதில் முழுமாற்றங்கள் நடப்பது தேவைப்படும் என நாம் உணர்கிறோம்" என்றார். எப்படி இருந்தாலும், இது வரையிலும் ஹைட்டியின் அரசாங்கத்தில் ''ஆட்சி மாற்றம்'' வேண்டும் என்று இதுவரையில் புஷ் நிர்வாகத்தினர் அழைப்பு விடுக்கவில்லை. அது விரும்புகிற நிலையின்படி எதிர்கட்சிகளில் உள்ள முக்கியமான நபர்கள் அரசியல் பங்கு வகிக்கவேண்டும். நடைபெறவிருக்கும் புதிய தேர்தல்கள் முடிவு வெளிவரும் வரை இம்மாதிரியான ஏற்பாடு தொடரவேண்டும். இதைத்தவிர போலீஸ் மற்றும் மற்றைய அரசு எந்திரம் மறுஒழுங்கு செய்யப்பட வேண்டும். இந்த விஷயத்தைப் பொறுத்தமட்டில் 15-கரிபியன் அரசாங்கங்களை உறுப்புநாடுகளாகக் கொண்ட CARICOM என்ற கூட்டமைப்பு அரிஸ்டைட் மற்றும் எதிர்க்கட்சி பிரிவினரிடையில் ஒற்றுமை உண்டாக்கும் முயற்சிகளை அமெரிக்கா ஆதரித்து வருகிறது. அமெரிக்காவின் குடியரசுக் கட்சியினர் அரிஸ்டைடின் எதிர்ப்பாளர்களோடு நீண்டகாலத் தொடர்பைக் கொண்டிருக்கிறார்கள். ஈராக் விவகாரத்தில் புஷ் நிர்வாகம் மூழ்கி இருக்கும் இந்த நிலையில், உள்நாட்டில் தேர்தல் வருடமான இந்தக் காலட்டத்தில் இவர்களின் வெகுஜன ஆதரவு மிகவும் கிழே போயிருக்கும் நிலையில், ஏற்கனவே பொருளாதார பிரச்சனைகளில் சிக்கிக்கொண்டிருக்கும் கரிபியப் பிராந்தியத்தில் ஹைட்டி ஸ்திரத்தன்மையின்மையின் மையமாய் இருப்பதைக் குறித்து ஒருவித அதிருப்தி நிலவுகிறது. (அண்மை வாரங்களில் கரிபியத் தீவான ஹிஸ்பானியோலாவை -டொமினிக்கன் குடியரசும் ஹைட்டியும் பகிர்ந்து கொண்டிருக்கின்றன. இந்தக் குடியரசு சமீபத்திய வாரங்களில் மிகப்பெரிய சமூகப் பொருளாதார பிரச்சனைகளுக்கான பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.) வழக்கம்போல் அமெரிக்க பாதுகாப்புச் செயலரான டொனால்ட் ரம்ஸ்பீல்ட் தான் இந்த பிரச்சனைக்குறித்த அமெரிக்க நிலைப்பாட்டை பட்டவர்த்தனமாக கூறினார். செவ்வாயன்று இது பற்றிக் குறிப்பிடுகையில், ''ஹைட்டியில் இருக்கும் நிலை இப்போது ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகிறது. இந்த நிலை அபாயக்கட்டத்தைத் தாண்டாது என்று அனைவரும் நம்புகிறோம். அங்கே என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து எந்த திட்டமும் எங்களிடமில்லை'' என்றார். அரிஸ்டைட் அரசியல் சட்டத்திற்கு விதிமுறைகளுக்கு எதிரான முறையில் வெளியேற்றப்பட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தாததற்கு இரண்டாவது முக்கிய காரணம் எதிர்க்கட்சியில் இருப்பவர்களிடையே ஒற்றுமை இல்லை மற்றும் அவர்கள் பொதுமக்களின் முறைமையான அங்கீகாரம் ஏதும் இல்லாதவர்கள். அதுவுமின்றி எளிதில் தூண்டிவிடப்படக் கூடியவர்களாக இருக்கிறார்கள். அரிஸ்டைடின் வலதுசாரி கொள்கைகளும், IMF சொன்னபடி எல்லாம் நாட்டை நடத்துவதில் இருவரும் இவரது லாவலாஸ் கட்சியும் முன்னணியில் இருக்கின்றன. போலீஸ் அடக்குமுறை மற்றும் குழுவாரி சண்டைகள் மற்றும் வன்முறைகள் ஆகியவற்றின் மீது அதிகமாக சார்ந்து இருத்தல், டுவாலிரிஸ்ட் பாணியில் இனங்களைத் தூண்டி விடக்கூடிய அறிக்கைகள் ஆகியவை மக்கள் மத்தியில் பெருமளவிற்கு ஆதரவை இழக்கக் காரணமாக இருக்கின்றன என்பது பற்றி சந்தேகம் ஏதும் இல்லைதான். ஆனாலும் இதுவரையில் எதிர்ப்பாளர்களுக்கான பெரும் ஆதரவு ஹைட்டியின் பாரம்பரிய அரசியல் மற்றும் பொருளாதார செல்வந்த தட்டு மற்றும் நொந்து போயிருக்கிற மத்தியதர வர்க்கத்தினரிடமிருந்தும்தான் கிடைக்கிறது. எதிர்க்கட்சியில் உள்ள பல பலவீனங்கள் குறித்து அதன் சொந்த தலைமையிலுள்ள சக்திகளுக்கே நன்கு தெரிந்து இருக்கிறது. ஹைட்டியின் பாதுகாப்புக்கான தேசிய ஸ்தாபனம் என்ற எதிர்கட்சியின் தலைவரான வெஸ்லீ மக்ஸிமிலியனின் கருத்துப்படி ''அனைவருக்கும் ஒரே நோக்கம் மட்டுமே இருக்கிறது; அனைவருக்கும் அரிஸ்டைடைக் குறித்து சலித்துப் போயுள்ளனர். ஆனால் அவர்கள் ஒருவேளை இன்றைக்கு ஜெயித்தால் அனைவரும் துண்டுதுண்டாக சிதறிவிடுவார்கள் அதன்பின் இப்போது இருப்பதைவிடவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு இருப்போம்'' என்கிறார். ஹைட்டியில் நிலைமை கட்டுக்கடங்காமல் போய்கொண்டு இருக்கும் இந்த சமயத்தில், புஷ் நிர்வாகத்தினர் தங்களது நிலைப்பாட்டை மாற்றி, அமெரிக்கப் படைகளை அனுப்புவது உட்பட தீவு நாட்டில் தலையிட முடிவு செய்யலாம். ஆனால் இதுவரையில் இருக்கும் நிலவரப்படி ஹைட்டியன் மக்களின் துன்பத்தைத் குறித்தான வாஷிங்டன் மற்றும் வோல் ஸ்ட்ரீட்டின் அலட்சியமும் ஒரு விதமான வெறுப்பின் வெளிப்பாடுமே தொடர்ந்து இருந்து வருகின்றன. ஹைட்டியில் அரசியல் நெருக்கடி மேலும் அதிகாமகிக் கொண்டு வரும் வேலையில், அமெரிக்க அரசாங்கம் ஹைட்டியன் அகதிகள் உலகத்தின் பெரும் பணக்கார நாட்டிற்குள் நுழைந்து விடாதபடிக்கு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2003- முழுவதிலும் சுமார் 1500- ஹைட்டியன்கள் அமெரிக்க கடற்காவல்படையினரால் மறிக்கப்பட்டனர். அமெரிக்க அரசுத்துறை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே குவாண்டனாமோ இராணுவ தளத்தில் அகதிகளுக்கான ஒரு தடுப்புக்காவல் முகாமைத் தயார்ப்படுத்தி வருகிறது, அதுவும் 50,000-படுக்கைகள் கொண்ட முகாம் ஆகும். அடிப்படை உரிமை தஞ்சம் கோரி வரக்கூடிய அகதிகளை வேறுவிதமாக நடத்த அதற்கான சட்டங்களை நியாயப்படுத்தலை வழங்க, மோசடித்தனமாக வன்முறை திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. கடந்த டிசம்பர் மாதத்தில் அரசுத்துறை ஒரு உண்மை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி ஹைட்டியன் அகதிகள் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தக் கூடியவர்கள் என்று கூறப்பட்டு இருக்கிறது. ஆனால் இதற்கான அடிப்படையாக மிகச்சிறு விளக்கம் கூட இதனுடன் அளிக்கப்படவில்லை. இதற்கு முன்பாக, மியாமி ஹெரால்ட் என்ற பத்திரிகை ''நமது அமெரிக்க தூதரக அதிகாரிகள் அமெரிக்க அட்டர்னி ஜெனரல் ஜோன் ஆஷ்கிராப்ட்டின் கூற்றான பாக்கிஸ்தானியர்கள், பாலஸ்தீனியர்கள் மற்றும் ஏனையோர் ஹைட்டியை முக்கிய மையமாக வைத்து அதன் மூலம் அமெரிக்காவிற்குள் நுழைய முயற்சிக்கின்றனர் என்பதைக் கேட்டு இது எவ்வாறு முடியும்? என்பது குறித்து 'தங்களின் தலையை பிய்த்துக் கொண்டிருக்கின்றனர்' " என்று செய்தி வெளியிட்டது. |