World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்France: Despite conviction, former prime minister Juppé to keep posts பிரான்ஸ்: நீதிமன்றம் தண்டித்திருந்தும், முன்னாள் பிரதம மந்திரி ஜூப்பே தனது பதவிகளில் நீடிக்கிறார் By Antoine Lerougetel 1995 முதல் 1997 வரை பிரான்சின் பிரதமராகயிருந்த, மற்றும் ஜனாதிபதி ஜாக் சிராக்கின் வாரிசாக தேர்ந்தெடுக்கப்பட்ட அலன் ஜூப்பேக்கு, அண்மையில் 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பதுடன் மற்றும் 10 ஆண்டகளுக்கு பொதுப்பணியாற்றும் தகுதியும் மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவர் பிப்ரவரி 3 ல் தனது தற்போதைய பதவிகளில் தொடர்ந்து நீடிக்கப்போவதாக அறிவித்தார். TF1 தொலைக்காட்சி அலைவரிசைக்கு அவர் பேட்டியளித்த போது, தான் நாடாளுமன்ற உறுப்பினராக, போர்தோ(Bordeaux) மேயராக மற்றும் ஆளுங்கட்சியான UMP யின் தலைவராக நீடிக்கப்போவதாகவும், தனது மேல் முறையீடு விசாரணையில் இருக்கும் காலம் வரை இப்படி பதவியில் நீடித்திருக்கப் போவதாகவும் கோடிட்டுக் காட்டியுள்ளார். தான் ஏற்கெனவே கொடுத்திருந்த உறுதி மொழிகளுக்கு புறம்பாக ஜூப்பே நடந்து கொண்டிருக்கிறார். தண்டிக்கப்பட்டால் உடனடியாக பொது வாழ்விலிருந்து ஓய்வுப் பெற்றுக்கொள்வதாக அறிவித்திருந்த அவர், குற்றம்புரிந்தார் என்று தீர்ப்பளிக்கப்பட்டதும் உடனடியாக மேல் முறையீடு செய்து நான்கு நாட்களுக்குப்பின் தனது முடிவை அறிவிப்பதாக குறிப்பிட்டார். இந்த நான்கு நாட்களிலும் திட்டமிட்டு பிரச்சாரம் நடத்திய சிராக், இழிவுபடுத்தப்பட்டுள்ள முன்னாள் பிரதமரை நீதித்துறைக்கு எதிராக திருப்பிவிட்டார். மற்றும் தனக்கு ஏற்பட்டுள்ள இழிபெயரை துச்சமாக மதித்து புறக்கணிக்க வேண்டுமென்று ஆலோசனையையும் கூறினார். 2007 ஆம் ஆண்டில் சிராக்கின் ஜனாதிபதி பதவிக்காலம் முடிவடையும்போது அவருக்கு ஜனாதிபதி என்ற முறையிலிருந்து வரும் சட்டப்பூர்வமான பாதுகாப்பு காலாவதி ஆகிவிடும். அந்த நேரத்தில் சிராக் மீதும் இத்தகைய வழக்கு விசாரணைகள் நடைபெறலாம் என்ற அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கிறது. ஆதலால், UMP ஆனது நீதிமன்றத்தின் தீர்ப்பையும், அந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளையும் அவதூறு செய்கிற இயக்கத்தை முடுக்கிவிட்டிருக்கிறது. இப்படி நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும் இழிவுபடுத்துவதற்கு வானொலி, தொலைக்காட்சி என்பன தமது எல்லையற்ற நேரத்தை ஒதுக்கியிருக்கின்றன. ஜூப்பேயின் குற்றங்களை நினைவில் வைத்துக்கொள்வது முக்கியமான பயனுள்ள செயலாகும். ஏனென்றால் மிகப்பெரும்பாலான ஊடக கலந்துரையாடல்களில் தீர்ப்பின் ''கொடூரத்தைத்தான்'' விவாதித்துக் கொண்டிருக்கிறார்களே தவிர, அவர் புரிந்த தவறுகள் குறித்து எதுவும் விவாதத்திலில்லை. ஒரு அப்பாவி மனிதர் தண்டிக்கப்பட்டுவிட்டார் என்பது போன்ற கருத்து உருவாகும் வகையில் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன. உண்மையிலேயே ஜூப்பே திருடினார் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். மற்றும் அவர் திருடியது மட்டுமல்ல பாரிஸ் துணை மேயராக பணியாற்ற வேண்டுமென்று ''இறையாண்மை கொண்ட மக்கள்'' ஒப்படைத்த பொறுப்பையே களவாடியிருக்கிறார். முன்னாள் பிரதமர் இதனை மறுக்கவில்லை. TF1 பத்திரிகையாளர் பற்றிக் புவார் டாவருக்கு (Patrick, Poivre d'Arvor) அளித்த பேட்டியில், ஜூப்பே தவறுசெய்துவிட்டதாக ஒப்புக்கொண்டிருக்கிறார். ''அது மிகப்பெரிய தவறுதான்'' என்றும் அப்படியிருந்தாலும் தன்னைப் பழிவாங்குவதற்காக நீதித்துறையில் அளவிற்கதிகமாக ஆர்வமுள்ளவர்கள் கொடூரமாகத் தண்டித்துவிட்டார்களென்று குறிப்பிட்டார். இந்தப் பேட்டியை ஒப்பிட்டு பார்க்கையில், நீதிமன்றத்தில் அவர் ஆஜரான போது ஜூப்பேயின் தோற்றம் மிகுந்த இறுமாப்புக் கொண்டதாக காணப்பட்டது. பாரிஸ் சம்பளப் பட்டியலில் இடம்பெற்றிருந்த போலி ஊழியர்கள் பற்றி தனக்கு எதுவுமே தெரியாதென்று திட்டவட்டமாக அறிவித்தார். அவரது முன்னாள் அலுவலக தலைமை அதிகாரியான ஈவ் காபனா (Yves Cabana) அளித்த சாட்சியத்தை திட்டவட்டமாக மறுத்தார். ஆனால் சிராக்கினுடைய கட்சியின் பழைய பெயரான RPR, போலியான ஊழியர்களை பயன்படுத்திக்கொண்டதை அனைவரும் அறிவார்கள். ''திரு காபனாவின் கருத்தை நான் பகிர்ந்து கொள்ளவில்லை. நான் பதவியேற்றுக்கொண்ட போது எவரும் இதை என் கவனத்திற்கு கொண்டுவரவில்லை'' என்று குறிப்பிட்டார். பாரீஸ் மக்களிடமிருந்து ஜூப்பே திருடினார் லூ மொண்ட் (Le Monde) பத்திரிகை பிப்ரவரி 4 ல் தந்திருக்கும் தகவல் பின்வருமாறு; ''பதவியை தனிப்பட்ட லாபத்திற்காக சட்ட விரோதமாக, முறைகேடாக பயன்படுத்திக்கொண்டாரென்று ஜூப்பே தண்டிக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் 1990 முதல் மே 1995 வரை நந்தேர் (Nanterre) நீதிபதிகள், அவர் புரிந்த தவறுகளை மிக எளிதாக விளக்கியுள்ளனர். நகரத்தின் ஊழியர்கள் தொடர்பான செலவினங்களை கண்காணிக்கும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. பாரீஸ் நகர ஆண்டு பட்ஜெட் வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட நேரத்தில் அவர் தாக்கல் செய்த விவரத்தில் 7 பேருக்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரும் தொகையிலான ஊதிய விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அந்த 7 பேரும் RPR ல் பணியாற்றியவர்கள் என்ற உண்மையை அவர் அறிந்திருந்தார்'' என்று குறிப்பிட்டுள்ளது. ''இதை வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், பாரீஸ் நகரத்து வரிசெலுத்துவோர் அறிந்துகொள்ளாமலேயே பல ஆண்டுகள் RPR ன் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கியிருக்கிறார்கள். தற்போது பாரீஸ் நகர மேயராக பணியாற்றி வரும் பேட்ரான் டேலனோ (Bertrand Delanoe) கூறியுள்ளபடி, 'ஒரு மாஃபியாக் கும்பல் நகரத்தைக் கைப்பற்றிக்கொண்டதுடன், கற்பனையான ஊழியர்களின் பெயரைச் சேர்த்து உள்ளாட்சி அரசாங்க நிதியை இக் கும்பல் கைப்பற்றிக்கொண்டுள்ளது. நகரசபை இலாக்காக்களின் மதிப்பீட்டின்படி 1.2 மில்லியன் யூரோக்கள் (1.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) இழக்கப்பட்டுள்ளது. அத்தகைய நடவடிக்கைகளுக்காக ஜூப்பேயுடன் சேர்த்து மற்றும் இதர RPR தலைவர்கள் மீதும் விசாரணை நடைபெற வேண்டும்'' என்று மேலும் லூ மொண்ட் தொடர்ந்து எழுதியியுள்ளது. அத்துடன் டேலனோ, பணத்தை திரும்ப செலுத்திவிட வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருக்கிறார். இதை ஊடகங்கள் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. TF1 பேட்டியில் கூட இந்தக் கேள்வியை அவர்கள் எழுப்பவில்லை. நீதித்துறையில் நிர்வாகத்தின் தலையீடு குறிப்பாக, மூத்த நீதிபதியான கேத்தரின் பியர்ஸை (Catherine Pierce) குறிவைத்து UMP தாக்குதல் நடத்தி வருகிறது. தனது அலுவலகத்திலும், தனது குழுவின் நீதிமன்ற அலுவலங்களிலும் அத்துமீறி நுழைகிறார்கள், தொலைபேசிகளை ஒட்டுக்கேட்கிறார்கள், கம்பியூட்டர்களில் மோசடி செய்கிறார்கள் என்று இந்த நீதிபதி கூறுகிறார். அவருக்கு அச்சுறுத்தல் கடிதமும் வந்திருக்கிறது. இந்தப் புகார்களைப் பற்றி UMP கட்சி அதிகமாக அலட்டிக்கொள்ளவில்லை. அதே நேரத்தில் இத்தீர்ப்பு நிர்ப்பந்த அடிப்படையில் ரத்து செய்யப்படலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. நீதிபதி பியர்ஸிற்கு கொடுக்கப்பட்டுவரும் தொந்தரவுகள் குறித்து புலன் விசாரணைக்கு ஏற்கெனவே நீதிபதிகள் சங்கம் CSM (Higher Magistrates' Council) கட்டளையிட்டிருக்கிறது. சிராக்கும் தனது சொந்த ''புலன் விசாரணைக் குழுவை'' நியமித்திருக்கிறார். நாடாளுமன்றத் தலைவரும் மூத்த UMP தலைவருமான ஜோன் லூயிஸ் டேப்ரே (Jean-Louis Debré) நாடாளுமன்ற விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். CSM ஐ தவிர்த்துவிட்டு நிர்வாக கமிஷனை நியமிக்க முடிவு செய்திருக்கும் சிராக்கின் முடிவிற்கெதிராக பல நீதிபதிகள் போராட்டத்தில் இறங்கி கண்டனம் தெரிவித்ததாக பிப்ரவரி 4 ம் திகதி லிபிரேசன் பத்திரிகை தகவல் தந்துள்ளது. CSM அமைப்பு ஒன்றுதான் அதன் உறுப்பினர்களது உரிமையை காத்து நிற்கும் அதிகாரம் படைத்த அமைப்பாகும். சோசலிஸ்ட் கட்சி மற்றும் (PS) வலதுசாரி UDF ம் நாடாளுமன்ற விசாரணையில் பங்கெடுத்துக் கொள்ள மறுத்துவிட்டன. UMP உறுப்பினர்கள் மட்டுமே விசாரணையை நடத்தப்போகிறார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அந்த விசாரணைக் கமிஷனுக்கு சட்டபூர்வமான அங்கீகாரம் எதுவுமில்லாததால் நீதிபதிகளே சிராக்கினுடைய விசாரணைக் கமிஷன் முன் ஆஜராகமாட்டார்கள் என்று பேசப்படுகிறது. ''ஏற்கெனவே இந்தப்பிரச்சனை CSM கையில் இருக்கிறது. நவம்பர் 25 அன்றே குடியரசின் ஜனாதிபதி, நீதிபதிகளுக்கு சீர்குலைவு விளைவிக்கும் முயற்சியில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார்'' என்று இந்தப் பத்திரிகை நீதிபதிகளை சுட்டிக்காட்டி தகவல் தந்திருக்கிறது. ''ஜனாதிபதி நீதி நிர்வாகத்தின் சுதந்திரத்திற்கு உத்திரவாதம் அளிப்பவர் என்றிருக்கும்போது, அவரே நீதிமன்றங்களில் தண்டிக்கப்பட்ட ஒருவர் மீது தனக்கு நம்பிகையிருப்பதாக அறிவித்திருப்பது எங்களில் சிலருக்கு அதிர்ச்சி தருவதாக அமைந்திருக்கிறது. ஜனநாயகமானது நீதி நிர்வாகத்திற்கும், அரசு நிர்வாகத்திற்குமிடையில் அதிகாரங்கள் பிரிக்கப்பட்டிருக்கும் அடிப்படைக் கொள்கையைக் கொண்டதாகும். இனி உண்மையிலேயே ஜனநாயக தோற்றமும் இல்லாத நிலைதான் ஏற்படும்'' என்று நீதிபதிகள் மேலும் குறிப்பிட்டார்கள். UMP கட்சியானது அதிகார அமைப்பிலிருந்து பிரிந்திருக்கும் -- அரசாங்க அதிகாரம் -- நீதி நிர்வாகத்தின் ஜனாநாயக அடிப்படைகளுக்கும், சுதந்திரத்திற்கெதிராகவும் மிகக்கடுமையான தாக்குதலைத் தொடுத்திருக்கிறது. இந்தத் தாக்குதலின் அளவை இக்கட்சி உறுப்பினர்கள் எழுப்புகிற கூக்குரல்களிலிருந்து புரிந்து கொள்ளலாம். நாடாளுமன்ற துணைத் தலைவரான எரிக் ராகுல் (Eric Raoul) இந்த தீர்ப்புக் குறித்து ''அளவிற்கதிகமானது, கற்பனையானது, அகங்காரமானது'' என்று வர்ணித்திருக்கிறார். செனட்சபையில் UMP குழுவின் தலைவர் ஜோசலின் டு ரொகான் (Josselin de Rohan) தனது ஆத்திரத்தை வெளிப்படுத்துகிற வகையில் ''இவ்வளவு அந்தஸ்துள்ள ஒருவரை கிரிமினல் என்று முத்திரை குத்துவதா! '' என்று கேட்டிருக்கிறார். கீழ் சபையில் UMP குழுவின் தலைவரான ஜாக் பரோ (Jacques Barrot) இந்தத் தீர்ப்பு குறிப்பாக ''கொடூரமானதென்றும் அவரது கண்ணியத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலென்றும்'' குறிப்பிட்டுள்ளார். பிப்ரவரி 2 ம் திகதி சிராக் பகிரங்கமாக ஜூப்பேயின் ''தலைசிறந்த குணங்களை'' பிரகடனப்படுத்தியதுடன், அவரது ''நேர்மை'' குறித்து தனிமைப்படுத்தி பாராட்டினார். பிராந்திய விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் பாற்றிச் டேவட்ஜான் (Patrich Devedjian) ஜூப்பேக்கு அதிக ''நியாயமான மதிப்பீடு'' கிடைத்திருக்கவேண்டும் என்றும், அவர் அரசியலில் இருந்து விலகுவதில்லை என்று முடிவு செய்திருப்பது அவர் ''பொறுப்பாக நடந்து கொள்வதை'' காட்டுகிறதென்றும் குறிப்பிட்டார். சிராக்கிற்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரித்த நீதிபதி எரிக் ஹால்பன் (Eric Halphen) உயர்ந்த பதவியிலுள்ள அரசியல் தலைவர்களை புலன்விசாரணை செய்யும்போது எத்தகைய தொந்தரவுகளுக்கு இலக்காக வேண்டிவரும் என்பதை அறிந்தவராவர். அவர் பிப்ரவரி 2 ல் பிரெஞ்சு தொலைக்காட்சி 2 க்கு அளித்த பேட்டியில், ஜூப்பேயின் பாரீஸ்டர் நண்பரான டேவட்ஜான் - க்கு ஒரு எச்சரிக்கை விடுத்தார். தீர்ப்பளித்த நீதிபதியின் நேர்மையை அவதூறு செய்கிற வகையில் குற்றம் சாட்டினால், அப்படி குற்றம் சாட்டுபவர்களுக்கு 6 மாத சிதைத்தண்டனை விதிக்கவேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். பெர்லுஸ்கோனி பாணியில் பிரெஞ்சு அரசாங்கம் பிரான்சில் அரசு நிர்வாகத்திற்கும், நீதித்துறைக்குமிடையே பெருகிக்கொண்டுவரும் உள்நாட்டுப் போர் இத்தாலியின் நிலவரத்தை போன்ற தோற்றத்தை தருவதற்கு தொடக்கமாகும். அங்கு நீதிபதிகள் மாஃபியா கும்பலுக்கும் ஊழல் அரசியல்வாதிகளுக்கும் எதிராக சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட தீர்ப்பை வழங்கும்போது, நேர்மையான நீதிபதிகளுக்கு தொந்தரவுகள் தரப்பட்டே வருகின்றன. நிர்வாகத்தின் மத்திய இடது ஒலிபெருக்கியான லூ மொண்ட் மற்றும் (சோசலிஸ்ட் அதிகாரத்துவத்திற்கு நெருக்கமான) லிபிரேசன் ஆகிய இரண்டு பத்திரிகைகளும் பிப்ரவரி 4 ல் வெளியிட்ட தலையங்கங்கள் நீதித்துறையை ஆதரிப்பதாக இருந்தன. பிரெஞ்சு அரசாங்க கட்டுக்கோப்பின் நம்பகத்தன்மையும், நிரந்தரத்தன்மையும் மிகுந்த நெருக்கடிக்குள்ளாகியிருப்பதாக அவை அஞ்சுகின்றன. (ஐரோப்பாவிற்குள்ளேயும் மற்றும் அமெரிக்காவுடன் உருவாகியுள்ள மோதல்கள் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகின்றது. உள்நாட்டில் சிக்கன நடவடிக்கைகளால் உருவாகியுள்ள சமூக நெருக்கடிகளாலும் நிர்பந்தம் தோன்றியிருக்கிறது) தற்போது நீதி நிர்வாகத்தின் மீது நடத்தப்பட்டுவரும் இன்றைய தாக்குதல்களால் சட்டத்தின் கட்டுக்கோப்பு சீர்குலையும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக இந்த இரண்டு பத்திரிகைகளும் கூறியுள்ளன. ''இந்த வழக்குகள் பிரான்ஸ் ஜனநாயக முறையில் இன்னும் முதிர்ச்சியடையாத நாடு என்பதைக் காட்டுகின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற பிரதிநிதிகள் நீதித்துறை சுதந்திரமானதென்ற கருத்தை உள்ளத்தளவில் ஏற்றுக்கொள்ளுகிற பக்குவத்தைப் பெறவில்லை'' என்று ஒரு மூத்த நீதிபதியின் விமர்சனங்களை மேற்கோள்காட்டி லூ மொன்ட் எழுதியியுள்ளது. இந்த வார்த்தைகள் ஒரு இடதுசாரி தீவிரவாதி கூறினவையல்ல. மாறாக, மிதவாதிகள் பெரும்பான்மையினராக இருக்கின்ற, நீதிபதிகள் ஒன்றியத் தலைவரான டோமினிக் பாரல்லா (Dominique Barella) கூறிய வார்த்தைகளாகும். ஜூப்பே தண்டிக்கப்பட்ட நாளில் பெரும்பாலான பிரெஞ்சு வலதுசாரி சிந்தனையாளர்கள் தெரிவித்த அசாதாரணமான கருத்துக்களை நிதானமாக சுருங்கக் கூறியிருப்பதுதான் இந்த நீதிபதியின் கருத்தாகும். இத்தாலி பிரதமர் பெர்லுஸ்கோனி கடைப்பிடிக்கும் நடைமுறைபாணியில் பிரான்ஸின் அரசில் வாழ்வும் மாற்றப்பட்டு வருகிறது என்பதை சுட்டிக்காட்டுகிற வகையில் ''பெர்லுஸ்கோனி மயமாகிறது'' என்ற சொல்லை லிபரேசன் பத்திரிகை பயன்படுத்தியிருக்கிறது. ''இந்த பணம் குவிக்கும் நபர்களை சிராக் கொண்டுவர விரும்புகிறார்...... ஒரு நம்பிக்கை இழந்த போராட்டத்தில் தனது அதிர்ஷ்டத்தை சோதித்துப்பார்க்க சிராக் விரும்புகிறார்......ஜூப்பே விடயத்தில் சாக்குப் போக்கானது, சிராக்கின் பெர்லுஸ்கோனிமயமாக்கம், ஐந்தாண்டு ஜனாதிபதி பதவிக்காலத்திற்கு ஒரு திருப்புமுனையாக இருக்கப் போகின்றது.. இதில் பயன்பெறப்போவது தீவிர வலதுசாரிகளே தவிர சட்டத்தின் ஆட்சியல்ல'' (l'état de droit) என்று மேலும் இப்பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. இங்கே லிபிரேசன் பத்திரிகையானது, 1789 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரெஞ்சுப் புரட்சிக் காலத்தில் எழுப்பப்பட்ட மகத்தான கேள்விகளுக்கு பின்னோக்கி இட்டுச்செல்வதை சுட்டிக்காட்டுகிறது. பிரான்ஸ் ஒரு நவீன முதலாளித்துவ சமுதாயமாக வளர வேண்டுமென்பதற்காக மூன்றாவது அங்கமென்று கருதப்பட்ட பிரிவினரின் சலுகைகள் அப்போது ஒழித்துக்கட்டப்பட்டன. மன்னர்தான் சட்டங்களுக்கெல்லாம் மேலானவர் என்ற தான்தோன்றித்தனமான உரிமை ஒழித்துக்கட்டப்பட்டு நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் சட்டத்தின் சன்னிதானத்தில் சமமானவர்கள் என்ற நிலை உருவாக்கப்பட்டது. உலகப் புகழ்பெற்ற முழக்கமான ''சுதந்திரம்'' ''சமத்துவம்'' ''சகோதரத்துவம்'' என்பதில் சமத்துவமென்பது சட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். ஆனால் ''சட்டத்தின் முன் அனைவரும் சமம்'' என்பது பெயரளவிற்குத்தான் நிலைநாட்டப்பட்டு வந்திருக்கிறது. பணக்காரர்களுக்கொரு நீதியும் இதர மக்களுக்கொரு நீதியும் என்ற நடைமுறை இதற்குமுன் எப்போதுமே அறைகூவலுக்கு இலக்காகவில்லை. காப்பரேட் மற்றும் ஆளும் செல்வந்த தட்டினரின் அரசியல் சேவகர்களான சிராக் மற்றும் ஜூப்பே போன்றவர்கள் மிகப்பெரும் அளவில் செல்வத்தை குவித்துக்கொண்டு வருகின்றனர். அதற்கு மாறாக பெரும்பாலான மக்களிடையே வறுமை வளர்ந்துகொண்டு வருவதானது, அப்பட்டமான சட்ட மீறலின் வெளிப்பாடாகும். பெர்லுஸ்கோனியைப்போல் சிராக் தனது காப்பரேட் நண்பர்களுக்காக சட்டத்தை வளைத்து கொடுக்கச் செய்கிறார். பிரான்சிலேயே மிகப்பெரும் பணக்காரர்களுள் ஒருவரான பிரான்சுவா பினோ (François Pinault) சார்பில் கலிபோர்னியா மாகாணத்தின் Executive-Life மோசடியில் பிரெஞ்சு அரசாங்கம் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை வழங்க சில மாதங்களுக்கு முன்னர்தான் சிராக் முடிவு செய்தார். பினோ, சிராக்கின் நெருக்கமான நண்பராக இருப்பதுடன், Executine-Life நிறுவனத்தை வாங்க தனது முதலீட்டுக் கம்பெனியான Arternis மூலம் சட்டவிரோதமான மோசடி முறையில் நடைபெற்ற பங்கு பேரத்தில் கலந்து கொண்டார். ''சட்டம் ஒழுங்கின் ஒட்டுமொத்த வடிவமென்று கூறப்படும் உரிமை, குற்றச்செயல்களை கண்டு உறுதியாக நிற்கின்ற அதிகாரம் ஆகியவற்றிற்கு மாறாக நீதி வழங்குவதில் பல்வேறு அளவுகோல்களை மேற்கொள்ளலாம் என்ற கருத்திற்கு இடம் கொடுப்பது சரிதான் என்ற கருத்தை UMP உருவாக்கி கொண்டிருக்கிறது. சாதாரண குற்றவாளி மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கின்ற சட்டம், குற்றம் செய்தார்களென்று கண்டுபிடிக்கப்பட்ட RPR கட்சியை சேர்ந்தவர்கள் மீது மென்மையாக சகித்துக்கொள்கிறது. இது திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள இரட்டை அளவுகோலாகும்'' என்று ஜூப்பேயை காப்பாற்றுவதற்காக UMP மேற்கொண்டுள்ள கிளர்ச்சி தொடர்பாக லிபிரேசன் பத்திரிகை எச்சரிக்கை செய்துள்ளது. தனது மேல் முறையீட்டை நியாயப்படுத்தும் வகையில் ஜூப்பே தனது TF1 பேட்டியில் கூறியுள்ள கருத்துக்களைப் பற்றி லூ மொன்ட் அல்லது லிபிரேசன் தலையங்கங்கள் எதுவும் கருத்துக் கூறவில்லை. ''கடந்த 20 ஆண்டுகளாக நிதி திரட்டுவதில் எல்லாக் கட்சிகளுக்குமே சங்கடங்கள் இருந்தன. எல்லாக் கட்சிகளுமே இதுபோன்று செய்திருக்கின்றன. பலர் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். பல தொழிற்சங்கங்கள் சரியாகவோ அல்லது தவறாகவோ கற்பனையான ஊழியர்கள் பெயர் அடங்கிய பட்டியல்களை வைத்திருக்கின்றன. எல்லாத் தொழிற்சங்கங்களும் தண்டிக்கப்படவில்லை..... அங்குதான் இது இருக்கிறது. என்னைப் பிடித்துக்கொண்டார்கள். சட்டம் மற்ற குடிமக்களைப்போன்று எனக்கும் செயல்படுத்தப்படவேண்டும். இந்தத் தீர்ப்பு சற்று மிதமிஞ்சியது என்று சொல்வதற்காவது எனக்கு அனுமதி கொடுக்கவேண்டும்'' என ஜூப்பே குறிப்பிட்டார். போலி ஊழியர்கள் பெயரில் வாங்கிய சம்பளத்தை திரும்ப தந்துவிட வேண்டுமென்று டேலனோ (Delonoe) கேட்டுக் கொண்டார். ''பொதுப்பணத்தை மாஃபியா கும்பலுக்காக மோசடி செய்யும்'' முறைபற்றி பேசினார். அப்போது அவர் ''UMP கட்சி RPR லிருந்து தொடர்ந்து வருகின்ற அமைப்பு என்பதால் UMP களவாடிய பணத்தை பாரீஸ் மக்களுக்குத் மீண்டும் ஒப்படைப்பதுதான் சரியான நடவடிக்கையென்று நான் நினைக்கிறேன்'' என்று அறிவித்தார். அதற்கு பதிலளித்த பாரீஸ் UMP தலைவர் குளூட் கோஸ்கன் (Claude Goasquen) ''RPR நடைமுறை வருவதற்கு முன்னர் சோசலிஸ்ட் கட்சி நடைமுறை இருந்தது. அதன் ஒரு பகுதியாக இருந்தவர்தான் டேலனோ என்பதை அவர் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்'' என்று கூறினார். Urba வழக்கில் வர்த்தக செல்வாக்கிலிருந்து பயனடைந்தார் என்பதற்காக 1996 ல் ரென்னிலுள்ள (Rennes) மேல்முறையீட்டு நீதிமன்றம் சோசலிஸ்ட் கட்சி முன்னாள் பொருளாளர் ஹென்றி இம்மானுவேலுக்கு (Henri Emmanuelli) 18 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கியதை நினைவுபடுத்தி பிப்ரவரி 2 ம் திகதி லிபிரேசன் பத்திரிகையில் அலன் ஒப்ரே (Alain Auffray) என்பவர் கட்டுரை எழுதியிருந்தார். இந்த நேரத்தில் சோசலிசக் கட்சியின் தலைவராக இருந்த லியோனல் ஜோஸ்பன், இந்தத் தீர்ப்பை ''பழிவாங்கும் முடிவு'' என்று வர்ணித்தபோது அன்றைய RPR நீதித்துறை அமைச்சர் ஜாக் டவ்பான் விடுத்த எச்சரிக்கையில், சட்டப்படி வழங்கப்படும் தீர்ப்புகளை ஆட்சேபிப்பவர்கள் ''சட்டத்தை சிதைப்பவர்கள்'' என்று எச்சரித்தார். இந்த வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களின் ''சமுதாய பங்களிப்பை'' கருத்தில் கொண்டு பார்க்கும்போது, இந்தத் தீர்ப்பின் கடுமையை புரிந்து கொள்ள முடிகிறது என்று பாட்ரிக் டேவிட்டியான் கருத்துத் தெரிவித்தார். அந்த நேரத்தில் ஜனாதிபதி சிராக்கிற்கு இன்றைய சோசலிசக் கட்சியின் தலைவர் பிரான்சுவா ஹாலண்ட் சமிக்கை காட்டியபோதும், இம்மானுவேல் சார்பில் செய்யப்பட்ட முறையீடு தோல்வியடைந்ததும் உடனடியாக அவர் பதவியிலிருந்து விலகினார். பொதுப்பணத்தை திருடியதாக பிடிபட்டவர்களுக்கு கருணைகாட்ட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிற இத்தட்டுக்களின் பாசாங்குகள் மற்றும் இதற்கு செய்தி ஊடகங்களின் உடந்தைப்போக்குகள் ஆகியவற்றிற்கு எதிர்கட்சியென்று சொல்லிக்கொள்ளுகிற சோசலிசக் கட்சியிடமிருந்து கடுமையான எதிர்ப்பு எதுவும் இல்லை. இவை யாவற்றையும், வேலையிழந்து சிக்கித்தவிக்கும் 200,000 மக்கள், ஆட்சியிலுள்ள ஜூப்பேயும் அவரது நண்பர்களும் தங்களது சலுகைகளையெல்லாம் ரத்து செய்துவிட்டார்கள் என்பதை தெரிந்து கொள்ளாமலில்லை. மேலும், தங்களது பென்ஷன் உரிமைகள் குறைக்கப்படும் நிலையில் உள்ள மில்லியன்கணக்கான தொழிலாளர்களுக்கும் இது தெரியும். |