WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
ஜேர்மனி
German foreign policy targets Africa
ஆபிரிக்காவை குறிவைக்கும் ஜேர்மன் வெளியுறவுக்கொள்கை
By Andreas Reiss
7 February 2004
Use this version
to print |
Send this link by email |
Email the author
ஜேர்மன் அதிபர் ஹெகார்ட் ஷுரோடர் அண்மையில் ஆபிரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது
அவரோடு சென்றவர்கள் பட்டியல் ஜேர்மனியின் வர்த்தக விவர கையேடு போன்று நீண்டுகொண்டு போகிறது.
Daimler Chrysler
ஐ சேர்ந்த
Jürgen Schrempp, Lufthansa வை சேர்ந்த
Wolfgang Mayrhuber, Beiersdorf
ஐ சேர்ந்த
Rolf Kunisch
மற்றும் கொமர்ஸ் வங்கித் தலைமை Martin
Kohlhaussen நிர்வாகி ஆகியோர் அந்தப் பட்டியலில்
இடம்மெற்றிருந்தனர். ஷுரோடருடன் அவரது எத்தியோப்பியா, கென்யா, கானா மற்றும் தென்னாபிரிக்க பயணத்தில்
மொத்தம் 23 வர்த்தக நிறுவன தலைர்கள் பயணம் செய்தனர்.
இந்த பேராளர் குழு திட்டவட்டமான பொருளாதார நலன்களை அடிப்படையாகக்கொண்டு
அவற்றில் பின்னிப்பிணைந்து உருவாக்கப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே ஆபிரிக்க
கண்டத்தில் பெரிய சக்திகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. ஜேர்மனி அதில் புறக்கணிக்கப்படுவதை
விரும்பவில்லை. பொருளாதார முயற்சிகள் இராணுவ மறைமுக தலையீட்டோடு வருகின்றன. ஜேர்மனி, பிரான்சு
மற்றும் பிரிட்டன் ஆகியவை அதே நோக்கோடு அவர்களது முறைகேடான இயல்புகளுக்கேற்ப நடவடிக்கைகளை எடுத்து
வருகின்றன. ஐரோப்பிய நாடுகளின் ஆட்சேபனைகளையும் மீறி, அமெரிக்கா ஈராக்கில் தன்னை நிலைநாட்டிக்
கொண்டிருப்பதால் ஐரோப்பிய ஒன்றியம் தற்போது உருவாக்கிக்கொண்டுள்ள இராணுவ அதிரடிப்படைகள் தலையிடுவதற்கு
ஏற்ற பகுதியாக ஆபிரிக்கா மாறிவிட்டது. ஆபிரிக்க கண்டத்தின் அரசியல் சூழ்நிலைகளை மதிப்பீடு செய்யும்
நோக்கில் ஷுரோடர் சுற்றுப்பணயம் அமைந்திருக்கிறது.
ஷுரோடர் பயணத்தில் தங்கிய இடங்கள்
ஷ்ரோடர் முதலில் எதியோப்பியாவிற்கு பிரதமர்
Zenawi ஐ உம்,
ஆபிரிக்க ஒன்றியத்தின் பிரதிநிதிகளையும் சந்திப்பதற்காக சென்றார். எதியோப்பியா தலைநகரில்தான் இந்த
தலைமை அலுவலகங்கள் உள்ளன. அங்கு உரையாற்றும்போது ஷ்ரோடர் ''நேர்மையான கூட்டாளிகள்''
நடைமுறையை பின்பற்றுவதாக உறுதியளித்தார். ''இது நிச்சயமாக ஒரு தார்மீக பிரச்சனையாகும். அதே நேரத்தில்
பொருளாதார மற்றும் அரசியல் நிலைகளுக்கும் ஏற்புடைய பிரச்னையாகவும் இது அமைந்திருக்கிறது. அயல்நாடுகளில்
ஒற்றுமையின்மையும் மோதல்களும் நீடிக்கின்றவரை ஐரோப்பா சுதந்திரமான வாழ முடியாது'' என்று ஷ்ரோடர்
வலியுறுத்திக் கூறினார்.
சுற்றுப்பயணம் ஆரம்பமாவதற்கு முன்னர் ஜேர்மன் அரசாங்க வட்டாரங்களிலிருந்து
இதேபோன்ற அறிக்கைகள் வந்தன. ஆபிரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு பயங்கரவாத உருவத்தில் வன்முறையும்,
ஸ்திரமின்மையும் பரவக்கூடும் என்ற கூற்றின் அடிப்படையில் ஆபிரிக்க விவகாரங்களில் மிகவும் மூர்க்கத்தனமான
அரசியல் மாற்றம் இராணுவ தலையீடுகளை நியாப்படுத்தி விடமுடியும்.
எத்தியோப்பியாவிற்கு அடுத்து, அதிபர் கென்யாவிற்கு சென்றார். இந்த ஆண்டு
ஆரம்பத்திலிருந்து அந்த நாட்டில் Mwai Kibaki
இன் தலைமையில் ''வானவில் கூட்டணி'' அரசாண்டு வருகிறது.
ஊழலை எதிர்த்து போரிடுகிறோர் என்ற முழக்கத்தின் கீழ் அந்நாட்டு அரசாங்கம் மேற்கத்திய பெரிய சக்திகளோடு
ஒத்துழைத்து வருகிறது. கிபாகி அரசாங்கம் ஊழலுக்கு எதிராக பிரச்சாரத்தை நடத்தி வருவதை குறிப்பிட்டு
ஷ்ரோடர் பாராட்டினார். மற்றும் நாட்டில் அமைதியையும் மற்றும் சுற்றுப்புற மண்டலத்தில் அமைதியையும் நிலை
நாட்டியதற்காகவும் பாராட்டு தெரிவித்தார்.
ஜேர்மனியின் அபிவிருத்தி உதவித்தொகை இரட்டிப்பாக்கப்பட்டு 50 மில்லியன்
யூரோக்கள் வரை வழங்கப்படுமென உறுதியளித்தார். கென்யா நாட்டின் மக்கள் தொகையை கணக்கில்
எடுத்துக்கொண்டு பார்த்தால் தலைக்கு இரண்டு யூரோக்களுக்கும் குறைவான தொகைதான் உதவியாகக் கிடைக்கும்.
இது கடலில் ஒரு துளி நீர் போன்றதுதான். குடிதண்ணீர் மற்றும் மின்சக்தி வழங்குதல் போன்ற துறைகளில்
உள்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துவதற்கும் விவசாயத்தில் தனியாரை ஊக்குவிப்பதற்கும், போலீசாருக்கு
பயிற்சியளிப்பதற்கும் இந்தத் தொகை வழங்கப்படும். இந்த வகையில் ஜேர்மனியின் நிபுணர்கள் ஒத்துழைப்பு
எதிர்பார்க்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையில் புலனாய்வு சேவைகளிலும் கூடுதலான ஒத்துழைப்பு
எதிர்பார்க்கப்படுகிறது.
இவைதவிர ஷ்ரோடர் ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU)
வர்த்தக தடைகளை குறைப்பதற்கு தலையிடுவதாக உறுதியளித்திருக்கிறார். சிறிதுகாலமாக வழங்கிவரும் விவசாய
மானியத்தொகைகளை வெட்டிவிட வேண்டுமென்று வளரும் நாடுகளிடம் கோரிக்கை விடப்பட்டுவருகின்றது. இது
ஐரோப்பிய ஒன்றியத்தின் சொந்த விவசாய நலன்களின்பேரில் விடப்பட்ட கோரிக்கையாகும். இம்மானியம் இரத்து
செய்யப்பட்டுவிட்டால் ஆபிரிக்க நாடுகள் தங்களது உற்பத்திப்பொருட்களை மேற்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய
இயலாது.
ஆபிரிக்காவின் சார்பில் ஷ்ரோடர் தலையிட்டு அத்தகைய தடைக்கற்களை நீக்குவது
மனிதநேய அடிப்படையினால் மட்டுமல்ல. முதலாவது, ஐரோப்பிய விவசாயிகளுக்கும் வழங்கப்படும் மானியத்தொகை
குறைக்கப்படுவதற்கு இது ஒரு வழியாக அமையும். இரண்டாவதாக அத்தகைய நடவடிக்கைகள் வெளிநாடுகளில்
தொழில்துறை உற்பத்தி முறைகளை மாற்றியமைப்பதற்கு வழிசெய்யும். ஐரோப்பிய வர்த்தக கட்டுப்பாடுகள்,
ஆபிரிக்காவில் செயல்பட்டுவரும் மேற்கத்திய நிறுவனங்களையும் பாதிக்கிறது. ஆபிரிக்காவில் இயங்கும் மேற்கத்திய
நிறுவனங்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு மறு இறக்குமதிக்காக பொருட்களை தயாரிக்கின்றன.
தென்னாபிரிக்காவில் ஷ்ரோடர் அந்நாட்டு ஜனாதிபதி
Thabo Mbekiஐ
சந்தித்தார். பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் ஷ்ரோடர் இரு அரசாங்கங்களுக்குமிடையே உருவாகியுள்ள விரிவான
உடன்பாடுகளை வலியுறுத்தினார். ''கருத்து வேறுபாடுகளை ஆராய்ந்தோம் கருத்து வேறுபாடுகள் எதுவுமில்லை
என்று உறுதிசெய்து கொண்டோம்'' என்று குறிப்பிட்டார்.
உண்மையிலேயே ஜிம்பாப்வே தொடர்பாக இரு நாடுகளின் அணுகுமுறைகளுக்கிடையே
வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. நீண்டகாலமாக ஐரோப்பிய ஒன்றியம், ஜனாதிபதி ரொபேர்ட்
முகாபேக்கு பதிலாக வேறொரு அரசாங்கத்தை மேற்கு நாடுகளோடு ஒத்துழைக்கும் அரசாங்கத்தை நிறுவவேண்டும்
என்று வலியுறுத்தி வருகிறது. 2002 ஆரம்பத்தில், ஐரோப்பிய ஒன்றியம் ஜிம்பாப்வே மீது இராஜதந்திர
தொடர்புகளுக்கு தடைவிதித்ததுடன் நிதியுதவியை முடக்கிவைத்தது. ஆனால் தென்னாபிரிக்கா தொடர்ந்து முகாபேக்கு
ஆதரவு காட்டிவருகிறது.
ஷ்ரோடருக்கும், Mbeki
இற்கும் இடையில் பேச்சுவார்தை ஆரம்பமாவததிற்கு முதல்நாள்
தென்னாப்பிரிக்க செய்திப்பத்திரிகை This Day
கீழ்கண்டவாறு விமர்சனம் எழுதியிருந்தது: ''பேச்சு வார்த்தையில்
ஜனாதிபதி Thabo Mbeki
ரொபேர்ட் முகாபேயை கண்டிப்பார். ஜிம்பாப்வே மனித உரிமைகளை மீறுவதாக கண்டனம் செய்வதற்கு மிக
எளிதான இலக்காகும். ஏனென்றால் அந்நாட்டில் ஜேர்மனிக்கு எந்தவிதமான வர்த்தக நலன்களுமில்லை. சீனாவிற்கு
அண்மையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஷ்ரோடர் அந்நாட்டு ஜேர்மன் வர்த்தக நலன்களோடு பங்காளியாக
இருப்பதால் மனித உரிமைகள் மீறல்பற்றி எதுவும் பேசவில்லை''.
ஆபிரிக்காவில் கடைசியாக ஷ்ரோடர் சென்ற நாடு கானா. அங்கு ஆபிரிக்க
''அமைதிகாப்பு'' இராணுவத்திற்கு பயிற்சியளிக்கப்பட்டு வரும் ''கோபி அன்னான் பயிற்சி நிலையத்திற்கு''
சென்று பார்வையிட்டார். இங்கு பயற்சி முடிந்ததும் இந்தப்படைகள் ஆபிரிக்கா கண்டத்தில் மோதல்களை
தணிப்பதற்கு தலையிடும். ஜேர்மன் அரசாங்கமும் ஜேர்மன் ஆயுதப்படைகளும் இந்தப் பயிற்சி நிலையத்திற்கு
கணிசமான ஆதரவு தந்திருக்கின்றன. மேலும் இந்த முகாமிற்கு 2.15 மில்லியன் யூரோக்கள் நிதியாக
வழங்கியுள்ளது.
ஆபிரிக்காவில் ஒழுங்கை ஏற்படுத்தும் ஒரு சக்தியாக கானா வளர்வதற்கு இந்தப்
பயிற்சி முகாம் கணிசமான பங்களிப்பு செய்திருக்கிறது. 1960 முதல் ஐக்கிய நாடுகள் சபை தலையீடு
ஒவ்வொன்றிலும் அந்நாடு தனது இராணுவத்தினை தந்திருக்கிறது. ஆபிரிக்க கண்டத்தில் தங்களது செல்வாக்கை
வளர்த்துக் கொள்ளவேண்டுமென்ற முயற்சியில் ஈடுபட்டுள்ள நாடுகளுக்கெல்லாம் கானா முக்கியமான பங்குதாரராக
விளங்கி வருகிறது.
வல்லரசுகளின் கண் பார்வையில்
சிறிதுகாலமாக ஆபிரிக்காவில் குறிப்பிடத்தக்க அக்கறை எடுத்துக்கொள்வதை
ஜேர்மனியின் வெளியுறவுக்கொள்கை எடுத்துக்காட்டுகிறது. வெளியுறவு அமைச்சர் ஜொஸ்கா பிஷ்ஷரின் (Joschka
Fischer) ''சிந்தனையில் அந்தக் கண்டம் அதிகளவிற்கு
இடம்பிடித்துக்கொண்டிருப்பதாக'' செய்தி பத்திரிகையான
Der Spiegel
கருத்துத் தெரிவித்துள்ளது. ''நமது கவனத்திலிருந்து ஆபிரிக்கா
தப்பிச்சென்றுவிட விட்டுவிடக்கூடாது'' என்று பசுமை கட்சி தலைவர் சர்வதேச தலையீடுகளுக்கான ஜேர்மன்
இராணுவ தலைமையகத்திற்கு சென்றிருந்தபோது கருத்துத்தெரிவித்தார்.
2001 நவம்பரில் ஜேர்மன் ஜனாதிபதி ஆபிரிக்க சுற்றுப்பயணத்திற்கு திட்டமிடப்பட்டது.
ஆனால் ஆப்கானிஸ்தான் போரில் ஜேர்மன் இராணுவம் தலையிட்டதை தொடர்ந்து அந்தச் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டது.
சென்ற கோடைக்கால்தில் பிரான்ஸ் தலைமையில் கொங்கோ ஜனநாயக குடியரசில் (DRC)
நடைபெற்ற இராணுவ தலையீட்டிற்கு ஜேர்மனி தனது 20 இராணுவத்தினரை வழங்கியது. ஐரோப்பிய ஒன்றியம் முதலாவதாக
மேற்கொண்ட கூட்டுஇராணுவ நடவடிக்கை அதுதான். அதற்குப்பின்னர் சென்ற ஆண்டு அக்டோபரில்
ஜொஸ்கா பிஷ்ஷர் தென்னாபிரிக்கா மற்றும் நமீபியாவில்
சுற்றப்பயணம் மேற்கொண்டார்.
ஆனால் ஜேர்மனி மட்டுமே அக்கறையுள்ள பங்குதாரர் அல்ல. இதர வல்லரசுகளும்
அண்மையில் ஆபிரிக்காவில் தங்களது இராஜதந்திர மற்றும் இராணுவ நடவடிக்கைகளை அதிகரித்துள்ளன.
கொங்கோவில் தலையிட்டதுடன், பிரான்சு தனது முன்னாள் காலனியான ஐவரிகோஸ்டிற்கும் படைகளை அனுப்பியது.
அமெரிக்காவிற்கு போட்டியாக ஆபிரிக்காவில் ஐரோப்பிய நாடுகள் நடவடிக்கைகளில்
இறங்கியுள்ளன. 1997ல் பிரான்சின் ஆதரவுபெற்ற ஸயரில் (Zaire-
தற்போதைய கொங்கோ ஜனநாயக குடியரசு-DRC)
மொபுட்டு அரசாங்கத்தை கவிழ்ப்பதில் அமெரிக்கா முக்கிய பங்களிப்பு செய்திருக்கிறது. கிளர்ச்சித்தலைவர்
லோரன்ட் கபிலாவின் இராணுவத்திற்கு CIA
ஏஜெண்டுகள் ஆயுதங்களை வழங்கினார்கள் பயிற்சியையும் தந்தார்கள். 2003ல் வாஷிங்டன் பல ஆண்டுகளாக
இரத்தக் களரி உள்நாட்டுப்போரில் சிதைத்து கிடக்கும் லைபிரியாவிற்கு தனது படைகளை அனுப்பியது. சென்ற ஆண்டு
ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யு.
புஷ் ஆபிரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டது அந்தக் கண்டத்தில் அமெரிக்காவின் நலன்களை
பெருக்குவதற்காகத்தான்.
நீண்டகாலம் ''மறக்கப்பட்டுவிட்ட கண்டம்'' என்று கருத்தப்பட்ட ஆபிரிக்காவில் வல்லரசுகளின்
நோக்கம் என்னவென்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த கண்டத்தில் ஏராளமான மூலப்பொருட்கள் உள்ளதுடன்,
வளருகின்ற வாய்ப்புள்ள உள்நாட்டு சந்தைகளும் நிறைய உள்ளதுடன், உற்பத்தி செலவினங்கள் மிக குறைவாக உள்ளன.
ஈராக் மீதான போரைத்தொடர்ந்து நைஜீரியா மற்றும் கொங்கோ போன்ற பெருமளவில் எண்ணெய் வளமிக்க
ஆபிரிக்க நாடுகள் ஐரோப்பியர்கள் கவனத்தில் புதிய முக்கியத்துவம் பெற்றன.
ஜேர்மனியின் வர்த்தக நலன்கள்
சென்ற ஆண்டு ஆபிரிக்காவுடன் ஜேர்மனியின் வர்த்தகம் மொத்தம் 23 பில்லியன்
யூரோக்கள் அளவிற்கு இருந்தது. இது நீண்ட காலமாக நிலவிவரும் வர்த்தக போக்குகளை நிலைநாட்டுவதற்காக
அமைந்துள்ளது. 450 ஜேர்மன் நிறுவனங்களில் 7,000 க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறார்கள். குறிப்பாக
இரசாயன தொழில்கள், மோட்டார் வாகனங்கள், மின்சார மற்றும் பொறியியல் தொழில்கள் 2.6 பில்லியன்
யூரோக்கள் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றன. கென்யாவும் ஜேர்மனியின் உற்பத்திப் பொருட்களுக்கு எதிர்கால
சந்தையாகவும், ஜேர்மனி தொழில்களுக்கு அடித்தளமாகவும் கருதப்படுகிறது.
கென்யாவுடன் ''சலுகைமிக்க கூட்டாளிகள்'' வகையிலான உறவுகளை வளர்ப்பது
குறித்து ஷ்ரோடர் பேசினார். அந்த நாடு ஆபிரிக்க மண்டலத்திலேயே அமைதியை நிலைநாட்டுவதில் முன்மாதிரியாக
உள்ளதெனக் கருதப்படுகிறது. ஆனால் அண்மையில் நடைபெற்ற குண்டுவீச்சுத் தாக்குதல்கள் 1998ல் நைரோபியிலுள்ள
அமெரிக்க தூதரகத்தின் மீது குண்டு வீசப்பட்டது, 2002ல் பல்வேறு விடுமுறைக்கால விடுதிகளில் குண்டுவீச்சுத்
தாக்குதல்கள் நடந்தன. இவை அந்த நாட்டின் சிறப்பை சீர்குலைத்துவிட்டன. அந்த நாட்டில் குழப்பம் எதுவும்
ஏற்பட்டுவிடாமல் தவிர்பதற்காக போலிசாருக்கும், புலனாய்வு சேவைகளுக்கும் இடையே ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
பிரிட்டனுக்கு அடுத்து, இந்து மாகாசமுத்திரத்தில் உள்ள இந்த நாட்டில் மிக
பெருமளவில் ஜேர்மனி முதலீடு செய்துள்ளது. 2001ல் கென்யாவிற்குள் ஜேர்மனி நேரடி முதிலீடுகள் 150 மில்லியன்
டொலர்களுக்கு மேல் வந்திருக்கின்றன. பல ஆண்டுகளாக கென்யா இலாபம் தரும் உற்பத்திதளமாக அமைவதற்கு
முயன்று வருகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்காக அரசாங்கம் நடத்தும் ஆலோசனை அமைப்புக்கள்
செயல்படுவதுடன் ஏற்றுமதி செய்முறை வளாகம் 22 அமைக்கப்பட்டுள்ளன இவற்றில் வர்த்தகத்திற்கு கணிசமான
ஊக்குவிப்புக்கள் தரப்படுகின்றன. நுகர்வோர் வரிவிதிப்பிலிருந்து விலக்குகள் தரப்படுகின்றன (VAT)
மற்றும் பூர்வாங்க பொருட்களுக்கு விதிக்கப்படும் வரிகளுக்கும் விலக்கு தரப்படுகிறது. நிர்வாகங்களுக்கு
விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் மிகக்குறைவு.
ஆபிரிக்காவிலேயே மிகப்பெரிய பொருளாதார அரசு தென்னாபிரிக்கா, ஜேர்மன்
நிறுவனங்களுக்கு மற்ற நாடுகளை விட முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக
Daimler Chrysler
ஆபிரிக்காவில் தீவிரமாக இயங்கி வருகிற நிறுவனம். இங்கு உற்பத்தியாகும் பொருட்கள் ஆசிய நாடுகளுக்கும்
ஆஸ்திரேலியாவிற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. எவ்வாறிருந்தபோதிலும் இன ஒதுக்கீடு கைவிடப்பட்ட பின்னர்
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன.
ஷ்ரோடரின் தூதுக்குழுவில் இடம் பெற்றிருந்த தென்னாபிரிக்காவில் 16 கம்பெனிகளை
கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் தொழிலதிபரான
Claus E.Daun இன் நிறுவனங்களில் 14,000 ஊழியர்கள்
பணியாற்றி வருகின்றனர். அவர் இந்தத் தூதுக்குழுவில் இடம்பெறுவது தொடர்பான ஏற்பாடுகள் நடைபெற்றுக்
கொண்டிருக்கும் போது Frankfurter
Rundschau பத்திரிகைக்கு தந்த பேட்டியில் அவர்
கருத்துக்கள் மிகுந்த தெளிவாக அமைந்திருக்கின்றன. அவர் சீனாவைவிட்டு தென்னாபிரிக்காவில் ஏன்
தயாரித்துவருகிறார் என்று கேட்கப்பட்டது அதற்கு Daun
அளித்த பதில் ''ஜேர்மனிக்கே மீண்டும் இறக்குமதி செய்வதற்கு
தயாரிப்பதாக இருந்தால் சீனாவிற்கும் செல்ல வேண்டும். தற்போது நிலவுகின்ற ஊதிய செலவீனங்களை
கணக்கிட்டால் தென்னாபிரிக்கா சீனாவோடு போட்டியிட முடியாது. ஆனால் உள்ளூர் சந்தைக்கு சில பொருட்களைத்
தயாரிக்கும் போது தென்னாபிரிக்காத்தான் சரியான இடம். இங்கு நாற்பத்தி ஐந்து மில்லியன் மக்கள் வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள். இவர்களில் 80 சதவிகிதம் பேர் எதிர்காலத்தில் நுகர்வோராக உருவாகும்
வாய்ப்புள்வர்கள், அவர்களிடம் பணம் இருக்கும் நேரத்தில் வாங்குவதற்கு தயாராகிவிடுவார்கள். டிசம்பர் மாதம்
15 முதல் 20 சதவீத உற்பத்தி விகிதம் பெருகியுள்ளது''. என்றார்.
Daun தனது பேட்டியில் மேலும் ஆபிரிக்க
தேசிய காங்கிரசை (ANC) பாராட்டினார். ஒரு காலத்தில்
அந்தக் கட்சி சோசலிசத்தை தனது பொருளாதாரக் கொள்கையாக அறிவித்திருந்தது ''ஆபிரிக்க தேசிய
காங்கிரஸ் எவ்வளவு விரைவாகத் தனது பழைய கருத்துக்களை குப்பைக்கூடையில் தூக்கி போட்டுவிட்டு
பூகோளமயத்தை தழுவிக்கொண்டது என்பதை பார்ப்பது மிக சுவையான ஒன்று. குறிப்பாக நெல்சன் மண்டேலாவை
எடுத்துக்கொள்வோம். சோசலிசக் கருத்துக்கள் வெறும் வரலாற்றுக்குரியவை என்பதை அவர் உடனடியாக புரிந்து
கொண்டார். இது மிகவும் வியக்கத்தகும் புதிராகும். தென்னாபிரிக்காவில் பொருளாதார கொள்கை இதற்கு
முன்பிருந்த இன ஒதுக்கீடு அரசாங்கத்தைவிட கம்யூனிஸ்டுக்கள் நிர்வாகத்தில் சிறப்பாகவே இயங்கி வருகின்றன.
ஜேர்மனியில் சமூக ஜனநாயக கட்சி நலன்புரி அரசு என்று கூறப்படுவதை இல்லாது செய்துவிட வேண்டும்'' என்று
Daun விளக்கிவிட்டு அதற்குபின்னர் ''இந்த பொருளாதாரத்தின்
உந்துசக்தியை பற்றி'' பேசினார். அதற்கான காரணத்தையும்
விளக்கினார். ''மிகப்பெருபாலான மக்களுக்கு எழுந்து இயங்குவதை தவிர (எப்படியாவது பிழைப்பதைத்தவிர)
வேறுவழியில்லை'' என்று விளக்கினார்.
தொழிற்சங்கங்களின் பங்களிப்புப்பற்றி கேட்கப்பட்டபோது அவர் பதிலளித்தார்.
''ஆம். அவர்கள் அடிக்கடி சீனா வகைப்பட்ட நிலவரத்தை விரும்பவில்லை என்று சொல்லுகிறார்கள் அதற்கு
பதிலாக நான் சொல்வது சீனாவிலிருந்து முழுமையாக 100 சதவிகிதம் இறக்குமதி செய்வதற்கு பதிலாக பாதி
சம்பளத்தில் உள்நாட்டில் தயாரிப்பதில் நல்லதல்லவா? அரை சம்பளத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு பாதி ஊதியம்
கிடைக்கிறது. அதைப்பயன்படுத்தி அவர்கள் தங்களது திறைமைகளை வளர்த்துக்கொள்ள முடியும்.''
ஜேர்மன் நிறுவனமான சீமன்ஸ் (Siemens)
தனது வர்த்தக நலன்களை தென்னாபிரிக்காவில் விரிவுபடுத்துவதற்கு தலையிட்டு வருகிறது. அந்த நிறுவனம்
தென்னாபிரிக்க கம்பெனி ஒன்றோடு கூட்டுச்சேர்ந்து கொங்கோ ஜனநாயக குடியரசில் அணை ஒன்றை கட்டுவதில்
சம்மந்தப்பட்டிருக்கிறது. அங்கு கிடைக்கும் மின்சாரத்தை தென்னாபிரிக்காவிற்கு விற்பதற்கு திட்டமிட்டிருக்கிறது.
இராணுவத்திட்டங்கள்
பொருளாதார மற்றும் இராஜதந்திர உறவுகொள்ளுதலுடன், ஐரோப்பிய நாடுகள்
ஆபிரிக்க கண்டத்தில் தங்களது இராணுவத் தலையீடுகளையும் அதிகரித்துக் கொண்டு வருகின்றன.
Der Spiegel பத்திரிகையின்
தகவலின்படி பிரான்சு ஜனாதிபதி சிராக் மற்றும் பிரிட்டன் பிரதமர் பிளேயர் ஆகியோர் பல மாதங்களாக
செய்துவரும் கிளர்ச்சி ''ஐரோப்பிய ஒன்றியம் மிகவும் வலுவான அடிப்படையில் பிளவுபட்டு நிற்கும் பிராந்தியங்களில்
தலையிடவேண்டும் தேவைப்படுகிற காலத்தில் ஐரோப்பிய படைகளையும் அனுப்ப வேண்டும் என்பதுதான் ஆபிரிக்காவில்
கூட்டு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக் கொள்கையை சோதனைக்கு உட்படுத்த வேண்டும் குறிப்பாக பிரான்சின்
தொடர்பை பயன்படுத்தி ஐரோப்பா அமெரிக்கா அளவிற்கு சர்வதேச இராணுவ பங்களிப்பை செய்வதில் உயர்ந்து
நிற்க வேண்டும். இந்த வகையில் மத்திய கிழக்கைப்போல் அல்லாமல் மிகப்பெரும்பாலான மோதல்களை சிறிய
படைகளைக் கொண்டே கட்டுப்படுத்திவிடக்கூடிய ஆபிரிக்கா தலைசிறந்த உலக மண்டலம்''
அந்த பத்திரிகைச் செய்தியின்படி, முன்னாள் எதிரிநாடுகள் பிரஸ்சல்ஸில் ஏற்கனவே
ஐரோப்பிய ஒன்றியத்தின் படைகள் ஆபிரிக்காவில் தலையிடுவதற்கு எதிர்காலத் திட்டத்தைத் தீட்டியுள்ளன,
சாத்தியமான இலக்குகள் புருண்டி, ஐவரிகோஸ்ட் கினியா, சியர்ரா லியோன், சூடான் மற்றும்
ஜிம்பாப்வே ஆகியவையாகும். ஐரோப்பிய ஒன்றிய தலையீட்டு படைக்கு 60,000 பேரினை அணி திரட்டத்
திட்டமிட்டிருக்கிறார்கள் அதில் 18,000 துருப்புக்களை ஜேர்மனி வழங்கும்.
இந்த அம்சத்தில் ஜேர்மன் வெளியுறவு அமைச்சகத்திலும் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்திலும்
உடன்பாடு ஏற்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. உள்நாட்டில் எதிர்ப்பு உருவாகக்கூடும் என்று கருதப்படுவதால்
பால்கன் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டதைப் போல் ஒரு சமயத்தில் ஒரே தலையீடு நடவடிக்கைத்தான் மேற்கொள்ளப்படும்.
முதலில் மனிதநேய உதவி என்ற அடிப்படையில் மருத்துவக் குழுக்கள் அனுப்பப்படும் அதற்குப் பின்னர் பார்வையாளர்கள்,
இராணுவ அதிகாரிகள் சிறப்பு நிபுணர்கள் செல்வர் இறுதியாக அவர்களது பாதுகாப்பிற்காக சிறிய துருப்புக்கள்
குழுக்கள் அனுப்பப்படும் இறுதியாக பெரும் போர்பிரிவுகள் அனுப்பப்படும்.
புதிதாக உசுப்பிவிட்டிருக்கும் இராணுவ திட்டங்களுக்கு வரலாற்று அடிப்படையில் நியாயம்
கற்பிக்கும் பணி வழக்கப்படி பசுமை கட்சித்தலைவர் ஜொஸ்கா பிஷ்ஷருக்கு தரப்பட்டிருக்கிறது. பால்கனில் ஜேர்மன்
இனப்படுகொலையின் பாரம்பரியம் கொசவோ மக்கள் இனபடுகொலை மற்றும் பெல்கிரேடு குண்டு வீச்சுக்களை தடுக்க
ஜேர்மனி கடைமைப்பட்டிருந்தது. இன்று 1884-85 பேர்லின் மாநாட்டு முன்மாதிரியாக சுட்டிக்காட்டப்படுகிறது.
அந்த நேரத்தில் பேர்லினில் ஜேர்மன் ஜனாதிபதி ஓட்டோ வொன் பிஸ்மார்க் தலையீட்டில் பிரான்சு மற்றும் இங்கிலாந்து
ஆகியவை தங்களுக்குள் ஆபிரிக்க கண்டத்தின் பெரும்பகுதியை பங்கீடு செய்து கொண்டன. தற்போது காலனி ஆதிக்கத்தின்
இரத்தக்களரி பாரம்பரியம் என்று வரும்போது ஐரோப்பிய நாடுகள் இணைந்து நிற்க வேண்டியது அவசியம்.
''இதை இரண்டு காலனி நாடுகளுக்கு விட்டுவிடமுடியாது'' என்று ஜேர்மன் அமைச்சரவைக் கூட்டத்தில்
ஜொஸ்கா பிஷ்ஷர்
உளறித்தள்ளினார்.
இந்த வரலாற்றுப் பின்னணியை வெளிப்படையாக விளக்குவதென்றால் 19ம் நூற்றாண்டில்
ஆபிரிக்க கண்டம் மீண்டும் பிரிக்கப்பட்ட நேரத்தில் அதில் கலந்து கொண்ட ஜேர்மனி வெறுங்கையோடு திரும்பியது
என்றே சொல்லவேண்டும். ஏனெனில் அப்போது ஜேர்மனிக்கு கிடைத்தது கமரூனும் தற்போது நபீபியா என அழைக்கப்படும்
எல்லையும்தான். ஆனால் தற்போது 21ம் நூற்றாண்டில் ஜேர்மனி தனக்குரிய சரியான பங்கை கோருகிறது.
Top of page |