World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா US Democratic primary votes reveal growing popular hostility to Bush அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் முதல்நிலை வாக்குப்பதிவில் புஷ்ஷிற்கு எதிரான விரோத உணர்வு வளர்வது வெளிப்படுகிறது By Patrick Martin ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் தகுதியை பெறுவதற்காக அமெரிக்காவில் பிப்பரவரி 3 ல் நடைபெற்ற முதல்நிலை தேர்தல்களில் மசாசூசெட்ஸ் (Massachusetts) மாகாணத்தைச் சேர்ந்த செனட்டர் ஜோன் கெர்ரி (John Kerry) ஏழு முதல்நிலை வாக்குகளில் ஐந்தில் வெற்றி பெற்றுள்ளார். செனட்டர் ஜோன் எட்வாட்ஸ் தென் கரோலினாவில் முதல்நிலை வாக்கில் வெற்றி பெற்றார். ஒக்கல்ஹாமா முதல்நிலையில் நடைபெற்ற மும்முனைப் போட்டியில் முன்னாள் தளபதி வெஸ்லி கிளார்க் மிகக்கடுமையாக போராடி வெற்றிபெற்றார். மிசூரி, நோர்த் டகோடா மற்றும் டெலவேர் ஆகிய இடங்களில் கெர்ரி 50 சதவிகித வாக்குகளையும், அரிசோனா மற்றும் நியூ மெக்ஸிகோவில் 40 சதவிகிதத்திற்கு மேற்பட்ட வாக்குகளையும் பெற்றுள்ளார். ஜனநாயகக்கட்சி நிர்வாகிகளும் மற்றும் பெருமளவில் தேர்தல் நிதி தருகின்றவர்ளும் அவரது தேர்தல் பிரச்சாரத்திற்கு பின்னால் அணி வகுத்து நிற்க ஆரம்பித்துள்ளனர். மற்றும் வெள்ளியன்று மிசூரி நாடாளுமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் ஜப்பார்டின் ஆதரவை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர், ஜனவரி 19 ல் அயோவா காக்கஸ் தேர்தலில் தோல்வியடைந்ததும் தேர்தல் போட்டியிலிருந்து விலகிக்கொண்டார். வெற்றிபெற்ற பிரதிநிதிகள் என்ற கணக்கின்படி பார்த்தால் மூன்றாவது வாரமாக தொடர்ந்து நடைபெற்றுவரும் முதல்நிலை தேர்தல்களில் திட்டவட்டமான முடிவு எதுவும் ஏற்படவில்லை. கெர்ரிக்கு தற்போது 261 பிரதிநிதிகள் மட்டுமே உள்ளனர். ஜனநாயகக்கட்சியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் நியமனம் பெறுவதற்கு கெர்ரிக்கு 2,162 பிரதிநிதிகள் தேவை. அதில் 12 சதவிதத்திற்கும் சற்று அதிகமான பிரதிநிதிகள்தான் அவர் வசம் உள்ளனர். வெர்மாண்ட் முன்னாள் கவர்னர் ஹோவார்டு டீனிற்கு 121 ம், எட்வாட்ஸ்க்கு 102 ம், மற்றும் கிளார்க்கிற்கு 81 பிரதிநிதிகளும் உள்ளனர். ஜனவரி நடுப்பகுதிவரை தேசிய அளவில் முன்னணியில் இருந்துவந்த டீன் நகைப்பிற்கு இடமளிக்கும் வகையில் 9 சதவிகித வாக்குகளையே பெற்றுள்ளார். செவ்வாயன்று வாக்களித்த மாகாணங்களில் மிக அதிகமான மக்கள் தொகை அடங்கிய மிசூரியில் அவருக்கு ஒரு பேராளர்கூட கிடைக்கவில்லை. மிகப்பெருமளவில் கருப்பர்களும், ஸ்பானியர்களும் நிறைந்துள்ள தென் கரோலினா மற்றும் அரிசோனா வாக்காளர்களிடையே கடுமையான திடீர்மாற்றம் உருவாகியுள்ளது. ஒரு மாதத்திற்கு முன்னர் அந்த இரண்டு மாகாணங்களிலும் வாக்குப்பதிவில் டீன் முன்னணியிலிருந்தார். ஆனால் செவ்வாயன்று தொலைக்காட்சி விளம்பரங்களுக்காக 1 மில்லியன் டாலர்களை செலவிட்ட பின்னர், அவர் தென் கரோலினாவில் 4 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளார். அரிசோனாவில், தொலைக்காட்சி விளம்பரங்களுக்காக 1.4 மில்லியன் டாலர்களை செலவிட்ட பின்னர் 14 சதவிகித வாக்குகளையும், 3 பிரதிநிதிகளையுமே அவரால் பெற முடிந்தது. எந்த மாநிலத்திலும் வெற்றி பெறாமல் கூட மார்ச் 2 ல் நடைபெறவிருக்கும் சூப்பர் செவ்வாய் போட்டிகளில் தாம் கலந்து கொள்ளமுடியும் என்று ஆரம்பத்தில் டீன் தெரிவித்தார். கலிஃபோர்னியா, நியூயோர்க், ஓஹியோ மற்றும் நான்கு நியூ இங்கிலாந்து மாகாணங்களில் இந்தப் போட்டிகள் நடக்கவிருக்கின்றன. அவரை ஆதரித்து நிற்கின்ற பிரதான தொழிற்சங்கங்களான AFSCME மற்றும் SEIU ஆகியவை அவரை உடனடியாக அழைத்து ஆலோசனைகள் கூறின. அதற்குப்பின்னர் அவர் பிப்ரவரி 17 ல் வின்கோன்சின் முதல்நிலை தேர்தலில் தான் வெற்றி பெறாவிட்டால் தேர்தல் களத்திலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார். கெர்ரியின் இதர இரண்டு பிரதான எதிரிகளான கிளார்க் மற்றும் எட்வாட்ஸ் இருவரும் தெற்கு மண்டல வேட்பாளர்கள் என்ற அளவிற்கு தங்களது நிலைப்பாட்டை இழந்தனர். கிளார்க் ஓக்கல்ஹாமாவிலும் எட்வர்ஸ் தென் கரோலினாவிலும் வெற்றி பெற்றனர். அடுத்து பிப்ரவரி 10 ல் வேர்ஜினியாவிலும் மற்றும் டென்னசியிலும் போட்டியிடப்போகின்றனர். மிச்சிகன், வாஷிங்டன், வின்கோசின் மற்றும் மைனே போன்ற வடக்கு மாகாணங்களில் இருவரில் எவரும் கெர்ரிக்கு ஆக்கப்பூர்வமான அறை கூவல் விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படவில்லை. தென் கரோலினா வாக்குப்பதிவை தொடர்ந்து ஊடகங்கள் எட்வாட்சை கெர்ரியின் முக்கிய எதிரி என்று உருவாக்குவதற்கு சில முயற்சிகளை மேற்கொண்டன. கெர்ரியின் ஒரே கணிசமான தோல்வி தென் கரோலினாவில்தான் ஏற்பட்டது. அங்கு எட்வாட்ஸ் 46 சதவிகித வாக்குகளையும் கெர்ரி 30 சதவிகித வாக்குகளையும் பெற்றனர். செவ்வாய்க் கிழமையன்று நடைபெறும் தேர்தலில் ஏழு மாகாணங்களிலும் தன்னால் பிரதிநிதிகளை வென்றெடுக்க முடியும் என்று எட்வர்ஸ் ஊகித்தபோதும், அதில் நான்கில் தோல்வியைடந்தார். அடுத்த போட்டிக்கான தலைவாசல் வாக்கான 15 சதவிகிததிற்கு குறைவான வாக்குகளையே அவர் பெற்றுள்ளார். ஜனநாயகக் கட்சித் தேர்தல் இயக்கத்தில் மிகத்தீவிரமான போர் ஆதரவு வேட்பாளரும், (Connecticut) கனக்டிக்கட்டைச் சேர்ந்தவருமான செனட்டர் ஜோசப் லைபர்மேன் இரவு போட்டியிலிருந்து விலகினார். அவருக்கு மோசமான தேர்தல் முடிவு ஏற்பட்டது. ஏழு மாகாணங்களில் பதிவான மொத்த வாக்குகளில் ஐந்து சதவிகிதத்திற்கு குறைவாகவே அவர் வாக்குகளைப் பெற்றுள்ளார். ஒரு பிரதிநிதிகளைக்கூட அவர் வென்றெடுக்கவில்லை. லைபர்மேனினின் வலதுசாரி தேர்தல் பிரச்சாரத்தின்போது, பில் கிளிண்டனின் ''மூன்றாம் வழி'' கொள்கைகளைத் தொடரப்போவதாக உறுதியளிக்கப்பட்டது. மற்றும் ஈராக் மீது ஆக்கிரமித்து, அந்தநாட்டை பிடித்துக்கொண்டதற்கு உற்சாகமான ஆதரவு தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு மக்களது ஆதரவு இல்லை. உதாரணமாக, டெலவர் (Delaware) பிராந்தியத்தில் லைபர்மேன் விரிவான தேர்தல் பிரச்சாரம் செய்தார். மாநிலத்தின் மூத்த ஜனநாயகக்கட்சி தலைவர்கள் அவரை ஆதரித்தனர். அப்படியிருந்தும் பதிவான வாக்குகளில் 11 சதவிகிதத்திற்கும் குறைவாகவே பெற்றார். அரிசோனாவில், அந்த மாகாணத்திலேயே அதிக அளவு விற்பனையாகும் அரிசோனா ரிபப்ளிக் என்ற செய்தி பத்திரிகை அவரை ஆதரித்தது. அப்படியிருந்தும் அவர் 7 சதவிகித வாக்குகளையே பெற்றார். பிரதிநிதிகள் எவரும் அவருக்கு கிடைக்கவில்லை. இதர ஜனநாயகக்கட்சி வேட்பாளர்கள் இதைவிட படுமோசமாக தோல்வியடைந்தனர். பாதிரியார் அல் சார்ப்டன் தென் கரோலினாவில் தனது முயற்சிகள் அனைத்தையும் இணைத்து இயக்கம் நடத்தினார். ஜனநாயகக்கட்சி முதல்நிலை வாக்காளர்களில் பாதிப்பேர் கருப்பு இனத்தவர்கள் இருந்தபோதும் பதிவான வாக்குகளில் பத்து சதிவிகிதமே அவருக்கு கிடைத்தது. பிரதிநிதிகள் எவரும் அவருக்கு கிடைக்கவில்லை. ஆறாவது நாடாளுமன்ற பகுதியில் கூட கருப்பர் இன வாக்காளர்கள் நிறைந்திருக்கின்ற பகுதியில் அவர் எட்வாட்ஸ் மற்றும் கெர்ரிக்கும் அடுத்து மிக பின்தங்கிய நிலையில் வாக்குகளைப் பெற்றார். அடுத்ததாக, எந்த முதல்நிலையிலும் டென்னிஸ் குஸ்னிக் ஒரு சதவீதத்திற்கு மேல் வாக்குகளை பெறவில்லை. காக்கஸில் சற்று அதிகமாக வாக்குகளை பெற்றாலும் அவரால் எந்த ஒரு பிரதிநிதிகளையும் வென்றெடுக்க முடியவில்லை. கோபமும், மாயைகளும் செவ்வாய் நடைபெற்ற வாக்குப்பதிவில் அயோவா மற்றும் நியூஹாம்ஷிரில் நிலவிய போக்கே நீடிப்பதாக அமைந்திருந்தது. பல மாநிலங்களில் வாக்காளர்கள் பெருமளவில் திரண்டிருந்தனர். அவர்கள் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டவர்களாகவும், மற்றும் பொருளாதாரத்தில் பாதுகாப்பற்ற நிலை, அமெரிக்கா மேற்கொண்ட ஈராக் போருக்கான எதிர்ப்பு ஆகியவற்றின் வெளிப்பாட்டைக் காட்டியிருந்தனர். பெரும்பாலான வாக்காளர்கள் புஷ் நிர்வாகத்திற்கு விரோதமானவர்களாக இருந்தனர். எவ்வாறாயினும், தற்பொழுது எதிர்க்கட்சி என்பது ஒரு மாயையாக அமைந்திருக்கின்றது. குடியரசுக்கட்சியின் வலதுசாரி கொள்கைகளுக்கு எதிராக, உண்மையான ஒரு மாற்றாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஜனநாயகக்கட்சி வேட்பாளர்கள் அமைவார்கள் என்று ஒரு மாயத் தோற்றம் உருவாகிவிட்டது. ஜனநாயகக் கட்சி முதல்நிலைத் தேர்தலில் தென் கரோலினா வாக்குப்பதிவு ஒரு சாதனையளவாகும். 2000 ம் ஆண்டுத் தேர்தலில், அரிசோனாவில் மொத்தம் முதல்நிலை வாக்குப்பதிவு இருமடங்காக அமைந்தது. இதில் மிக குறிப்பிடத்தக்க முடிவு ஒக்லகோமாவில் (Oklahoma) பதிவாயிற்று. ஜனநாயகக் கட்சி முதல்நிலை தேர்தலில் 300,000 பேர் வாக்களித்தனர். இதே மாநிலத்தில் 2000 ம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஜனநாயகக்கட்சி வேட்பாளர் அல்கோர் 470,000 வாக்குகளைப் பெற்றார். வாக்குப் பதிவிற்குப்பின் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகள் (Exit Polls) புஷ் நிர்வாகத்திற்கு எதிராக நிலவுகின்ற பரவலான கோபத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கினறது. புள்ளி விவரங்கள் மிக அப்பட்டமாக இருந்ததால் ஈராக் போரில் தீவிர ஆதரவாளராக செயல்பட்ட வாஷிங்டன் போஸ்ட் தனது வாக்குப்பதிவு போக்குகளை ஆய்வு செய்து வெளியிட்ட செய்திக்கு ''பெருகிவரும் புஷ்ஷிற்கு எதிரான உணர்வு ஜனநாயகக் கட்சியினரை தேர்தல் களத்திற்கு உந்தித் தள்ளுகின்றது'' என்று தலைப்பிட்டிருந்தது. போஸ்ட் கீழ்கண்டவாறு மேலும் எழுதியிருந்தது. ''ஜனநாயகக்கட்சியின் சார்பில் ஜனாதிபதிக்கான வேட்பாளர் தேர்வுப் போட்டி நேற்று தேசிய அளவில் நடைபெற்றது. அயோவாவிலும், நியூஹாம்ஷேரிலும் தேர்தலில் என்ன நடந்ததோ அதுதான் அமெரிக்காவின் ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை உண்மையென்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்தல்களில் வாக்காளர்கள் ஜனாதிபதி புஷ் மீது ஆழமான அதிருப்தி கொண்டிருக்கின்றனர். நவம்பரில் அவரை தோற்கடிப்பதுதான் தங்களது முக்கிய பிரச்சனையென்று வாக்காளர்கள் கருதுவதாக வாக்குபதிவிற்கு பிந்திய கருத்துக்கணிப்புக்கள் தெரிவிக்கின்றன'' டெலவேர், தென் கரோலினா, மிசூரி, ஒக்கலஹொமா மற்றும் அரிசோனா ஆகிய 5 முதல்நிலை தேர்தல் நடந்த மாகாணங்களில் வாக்குப் பதிவிற்கு பிந்திய கருத்துக்கணிப்பில் பங்கெடுத்துக் கொண்ட பத்து வாக்காளர்களில் எட்டுப் பேர் அமெரிக்க பொருளாதாரம் ''நல்ல நிலையிலில்லை'' அல்லது ''மோசமாக'' இருக்கிறது என்று கருத்துத் தெரிவித்துள்ளனர். காக்கஸ் தேர்தல் நடைபெற்ற நியூ மெக்சிகோ மற்றும் வடக்கு டக்கோட்டாவில் வாக்குப்பதிவிற்கு பிந்திய கருத்துக்கணிப்பு நடத்தப்படவில்லை. புஷ் பதவிக்கு வருவதற்கு முன்னர் இருந்ததைவிட தங்களது குடும்பங்களின் வாழ்க்கைத்தரம் கடந்த 4 ஆண்டுகளில் படுமோசமாகிவிட்டன என்று ஏறத்தாழ 50 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். டெலவேரில் வாக்குப்பதிவு செய்த ஜனநாயகக்கட்சி வாக்காளர்களில் பாதிக்கு மேற்பட்டோர் புஷ் நிர்வாகத்தின் மீது ''ஆத்திரம்'' கொண்டிருப்பதாக தெரிவித்தனர். அரிசோனா மற்றும் மிசூரியில் இப்படி ஆத்திரம் கொண்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைவாக இருந்தபோதிலும், ஒக்கல்ஹாமா மற்றும் தென்கரோலினா வாக்காளர்களில் மூன்றில் ஒரு பகுயினர் தாங்கள் ஆத்திரத்துடனிருப்பதாகத் தெரிவித்தனர். மற்றும் 40 முதல் 50 வீதமானவர்கள் புஷ் வெள்ளை மாளிகையில் இருப்பதில் அதிருப்தி கொண்டிருப்பதாக தெரிவித்தனர். டெலேவேரில் ஜனநாயகக் கட்சி முதல்நிலை தேர்தலில் வாக்களித்தவர்களில் 80 சதவிகிதத்திற்கு மேற்பட்டோர் ஈராக் மீது போர் தொடுப்பது என்ற புஷ் முடிவிற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். தெற்கு கரோலினாவில்தான் பல இராணுவத்தளங்கள் உள்ளன. அப்பகுதி வாக்காளர்களில் ஏறத்தாழ 75 சத வீதமானவர்கள் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். கறுப்பு வாக்காளர்களில் 80 சதவிகிதத்திற்கு மேற்பட்டோர் எதிர்ப்புத் தெரிவித்தனர். அரிசோனா மற்றும் மிசூரியில் வாக்களித்தவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். ஏறத்தாழ ஒக்கல்ஹாமாவில் 60 சதவிகிதம் பேர் எதிர்ப்புத் தெரிவித்தனர். பிப்பரவரி 3 வாக்குப்பதிவில் கலந்து கொண்ட மாகாணங்கள், பெரும்பாலும் கிராமங்களைக் கொண்டிருக்கின்ற, பொதுவாக அரசியலில் பழமைவாதத்தை கொண்டிருப்பவை என்று கருதப்படுகின்றன. இங்கு, வாக்குப்பதிவிற்கு பிந்திய கருத்துக்கணிப்பில் கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கை குறிப்பிடத்தக்கதாகும். (2000 தேர்தலில் புஷ் ஏழு மாகாணங்களில் ஐந்தில் முன்னணியில் நின்றார். நியூ மெக்சிகோவில் சிலநூறு வாக்கு வித்தியாசத்தில் தோற்றார்) இதில் தென் கரோலினா மற்றும் ஒக்கல்ஹோமாவில் ஈராக் போருக்கான எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இப்பகுதிகளை சார்ந்த குடும்பங்களில் ஒருவர் வீதம் இராணுவத்தில் பணியாற்றி வருபவர்கள் ஆவர். அல்லது முன்னாள் இராணுவத்தினராக உள்ளனர். இப்படிப்பட்ட குடும்பங்களை சார்ந்தவர்கள்தான் 70 சதவிகிதத்திற்கு மேற்பட்ட வாக்காளர்களாக இருக்கின்றனர். பிப்ரவரி 3 முதல்நிலை மற்றும் காக்கஸ் தேர்தல்கள் நடைபெற்ற நேரத்திலேயே ஜனாதிபதி தேர்தல் போட்டி பற்றிய பல புதிய தேசிய கருத்துக்கணிப்புக்கள் பிரசுரிக்கப்பட்டன. அவை கெர்ரி, புஷ்ஷை 53 க்கு 46 என்ற வேறுபாட்டில் மிக எளிதாக தோற்கடித்துவிடுவார் என்றும் இப்போதே தேர்தல் நடந்தால் இந்த முடிவுதான் ஏற்படும் என்றும் எடுத்துக்காட்டின. எட்வாட்ஸ் கூட புஷ்ஷை விட முந்திக்கொண்டுதான் இருக்கிறார் என்பதை தேசிய கருத்துக்கணிப்புக்கள் தெரிவித்தன. பெரும்பாலோர் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். புஷ்ஷை ஏற்றுக் கொள்பவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து 50 சதிவிகிதத்திற்கும் கீழே சென்றுவிட்டது. முதல்நிலையில் கலந்துகொண்ட வாக்காளர்கள் வாக்குப்பதிவிற்கு பிந்திய மதிப்பீடுகள் மற்றும் தேசிய அளவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புக்கள் ஆகியவை, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக புஷ் நிர்வாகத்தின் செல்வாக்கை திட்டமிட்டு அமெரிக்க ஊடகங்கள் வளர்த்த, புஷ்ஷை அரசியல் பராக்கிரமசாலியாகவும் மற்றும் அடிப்படை பிரச்சனைகளான போர் மற்றும் சமாதானத்தில் நிகரில்லா வலிமைபடைத்தவர் என்றும் சித்தரித்துக்காட்டியது பொய் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரத்தில் தொடக்க வாரங்களிலேயே பொதுமக்களது உண்மையான கருத்துக்கள் வெளிப்படத் தொடங்கியிருக்கின்றன. புஷ் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஜனாதிபதி, சட்டவிரோதமான ஜனாதிபதி என்று பொதுமக்களில் கணிசமான பகுதியினர் கருதுகின்றனர். பொதுமக்களது வாக்குப்பதிவில் தோல்விகண்ட அவரை உச்ச நீதிமன்றம் பதவியில் அமர்த்தியது. அப்படியிருந்தும் புஷ் தனது தீவிர வலதுசாரிக் கொள்கைகளுக்கு மிகப்பெரும்பாலான மக்களது கட்டளை கிடைத்துவிட்டதைப்போல் செயல்பட்டு வருகிறார். இந்த நாடகத்தை நாடாளுமன்ற ஜனநாயகக் கட்சிக்காரர்களும் தங்களது மண்டியிடும் போக்கால் நிலைநாட்டி வருகின்றனர். மற்றும் ஊடகங்கள் பாராட்டி வருகின்றன. குறிப்பாக செப்டம்பர் 11 பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர் ஊடகங்களின் துதிப்பாடும் போக்கு அதிகரித்து வருகிறது. ஆளும் செல்வந்ததட்டைச் சேர்ந்தவர் கெர்ரி புஷ்சை தோற்கடிப்பதற்கு தலைசிறந்த வாய்ப்புப் பெற்றிருப்பதாகக் கருதப்படுவதற்கு காரணம் அவரது கொள்கைகளோ அல்லது தனிப்பட்ட சிறப்புக்களோ அல்ல. அவர், அவரது பிரதான எதிரிகளான எட்வாட்ஸ், கிளார்க் மற்றும் வெர்மாண்ட் முன்னாள் கவர்னர் ஹவார்ட் டீனிலிருந்து எந்த வகையிலும் வேறுபட்டவர் அல்ல. ஆனால் வாக்குப்பதிவில் அவர் பெறுகின்ற வாக்குகள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு போவதற்கான காரணம், பல ஜனநாயகக் கட்சி முதல்நிலை வாக்காளர்கள் சுட்டிக்காட்டுவது என்னவென்றால், வியட்நாம் போரில் அவர் பல சாதனைகளை படைத்த முன்னாள் போர் வீரர் என்பதுதான் ஆகும். குடியரசுக் கட்சியினரின் அவதூறுப் பிரச்சார தந்திரம் இந்த வகையில் தோல்வியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈராக் கொள்கை தொடர்பாக எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தேசபக்தியில்லாதவர்கள் என்றும் சதாம் ஹூசைன் மற்றும் ஒசாமா பின்லேடனின் ஆதரவாளர்கள் என்றும் சித்தரிக்கும் வகையில் புஷ்ஷின் தேர்தல் பிரச்சார இயக்கம் நடக்கும். முதல்நிலை வாக்குப்பதிவில் தெளிவாகிவிட்ட மாயை எதுவாகயிருந்தாலும் அமெரிக்காவின் அரசியல் கட்டுக்கோப்பிற்கு எதிரான ஆயுதம் என்பதில் கெர்ரி நம்பகத்தன்மை உள்ளவர் அல்ல. அவர் முன்னாள் அமெரிக்கத் தூதரின் புதல்வர் ஆவர். சலுகைமிக்க தட்டில் வளர்ந்தவர். அமெரிக்காவிலேயே மிகப்பெரும் பணக்காரப் பெண்ணான தெரசா ஹியன்ஸ் கெர்ரியை (Teresa Heinz Kerry) திருமணம் செய்து கொண்டவர். அந்தப்பெண் 600 மில்லியன் டாலர் மதிப்புள்ள வர்த்தக நிறுவனத்திற்கு சொந்தக்காரர் ஆவர். அவரது 20 ஆண்டுகால அரசியல் அனுபவத்தில் வேறு எந்த செனட்டரையும்விட கெர்ரி மிகப்பெரும் பணக்காரர்களிடம் அதிக அளவிற்கு தேர்தல்நிதி பெற்றவர் என்று அவரது முதல்நிலை தேர்தல் எதிரிகள் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர். நியூ ஹம்ஷயரில் முதல் நிலை தேர்தல் தொடங்குவதற்கு முன்னர் அவரது தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. தனி நலன்கள் குறித்து மக்கள் செல்வாக்கை பெறுவதற்கான போலித் தாக்குதல்கள் ''வர்க்கப்போர்'' ஆகாது என்று கெர்ரி விளக்கம் தந்தார். லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் தந்திருக்கிற தகவலின்படி அவர் தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றும் போது ''நான் ஒரு முதலாளித்துவவாதி, சொத்தை உருவாக்க வேண்டும் என்பதை நம்புபவன். ஜனநாயகக் கட்சிக்காரராக இருந்துகொண்டு பணிகளை விரும்பும்போது அதை உருவாக்குபவர்களை வெறுக்க முடியாது. அப்படிப்பட்டவர் ஜனநாயகக்கட்சிக்காரராக இருக்க முடியாது. நல்ல தெளிவுபெற்ற முதலாளித்துவமும் உண்டு. கொள்ளைக் கும்பல் தலைவன் அடிப்படையிலான முதலாளித்துவமும் உண்டு. வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் பாதகம் ஏற்படுத்துகின்ற வகையில் ஜோர்ஜ் புஷ் சொத்துக்களை எப்படியாவது குவிக்க வேண்டும் என்ற ஒரு தத்துவத்தை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறார்'' என்று குறிப்பிட்டார். புஷ் நிர்வாகத்தின் கவலையற்ற, ஈவிரக்கமற்ற கொள்கைகள் மீது அதிகளவில் கவலை கொண்டுவரும் ஒரு அமெரிக்க நிர்வாகக்குழுவின் பிரிவை கெர்ரி பிரதிபலிக்கின்றார். வெளிநாட்டு இராணுவ நடவடிக்கைகள் மற்றும் உள்நாட்டில் மிகப்பெருமளவில் வளர்ந்துவரும் பட்ஜெட் பற்றாக்குறை ஆகியவை இரண்டும் அமெரிக்காவில் அரசியல் மற்றும் சமூக வெடிப்பை உருவாக்குகின்ற நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. ஈராக் போர் தொடர்பாக பொதுமக்கள் கொண்டிருக்கிற கோபம், நிறைய ஊதியம் கிடைக்கிற சிறப்புப்பணிகள் கிடைக்காத நிலை, ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையில் பெருகிவருகின்ற ஏற்றத்தாழ்வுகள் மற்றும் ஜனநாயக உரிமைகள்மீது புஷ் நிர்வாகம் தொடுத்து வருகின்ற தாக்குதல்கள் ஆகியவற்றின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள விரக்தி போன்றவற்றை இவர்கள் பயன்படுத்திக்கொண்டு வருகிறார்கள். இந்த உணர்வுகளை லாப முறைக்கு அச்சுறுத்தலாக அமையாத வழிகளில் திசைதிருப்பி விடுவதற்காக மட்டுமே இதை பயன்படுத்தி வருகிறார்கள். வெள்ளை மாளிகையில் புஷ்ஷிற்கு பதிலாக ஒரு ஜனநாயகக்கட்சிக்காரர் இடம்பெறுவதால் அமெரிக்க உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் குறிப்பிடத்தக்க எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. அத்தகைய நிர்வாக மாற்றத்திற்கு பின்னரும் ஈராக்கில் போர் நீடித்துக்கொண்டுதான் இருக்கும். 500 பில்லியன் டாலருக்கும் மேற்பட்ட பட்ஜெட் பற்றாக்குறை ஏற்படத்தான் செய்யும். மிகப் பிரமாண்டமான அளவில் அமெரிக்க வெளிவர்த்தக பற்றாக்குறை அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்புகளில்லாத தேக்கநிலை நீடிக்கும். மற்றும் சமூக நெருக்கடி மேலும் ஆழமாகும். வெளிநாட்டுக் கொள்கையில் கெர்ரி, டீன், எட்வாட்ஸ் மற்றும் கிளார்க் ஆகியோர் அமெரிக்கா மேற்கொண்டுள்ள ஈராக் ஆக்கிரமிப்பு, மற்றும் புஷ் இந்த ஆக்கிரமிப்பிற்கு ஏற்பாடு செய்தது குறித்து எத்தகைய கண்டனங்களை தெரிவித்து வந்தாலும், அவர்கள் அதனைத் தொடர்ந்து கடைப்பிடிக்க உறுதியளித்துள்ளனர். மிக விரிவான அடிப்படையில் சொல்வதென்றால் குடியரசுக்கட்சியினரைப் போல் ஜனநாயகக் கட்சிக்காரர்களும் புஷ் நிர்வாகத்தின் மூலோபாய குறிக்கோளின் அடிப்படையை அப்படியே தாங்கி நிற்கின்றனர். எதிர்காலத்தில் எந்த அச்சுறுத்தல் வந்தாலும் அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது தன்னிகரில்லா இராணுவ மேலாதிக்கத்தை நிலைநாட்ட முடிவு செய்திருக்கின்றது. ஆக கெர்ரி மற்றும் டீன் ஆகியோர்கள் ஈராக்கில் புஷ் கொள்கைகளுக்கு பகட்டு கண்டனம் தெரிவிப்பதுடன், வட கொரியா, ஈரான் மற்றும் சீனா தொடர்பாக மேலும் அதிக அளவில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதாக உறுதியளித்திருக்கின்றனர். நான்கு ஜனநாயகக்கட்சி வேட்பாளர்களும் வோல் ஸ்ட்ரீட்டிற்கு அதிக ''பொறுப்புணர்வுடன்'' வரிவிதிப்புக் கொள்கையை மேற்கொள்வதாக உறுதியளித்திருக்கின்றனர். இதன்பொருள் என்னவென்றால், புஷ்ஷின் பெரும் பட்ஜெட் பற்றாக்குறைகளை சரிக்கட்ட சமூக நலத்திட்டங்களின் செலவினங்களை வெட்டி அல்லது நுகர்வோர் வரிவிதிப்பு மற்றும் சம்பளப் பட்டியல் வரிவிதிப்பு ஆகியவற்றின் மூலம் தொழிலாள வர்க்கம் மீது சுமையை ஏற்றுவார்கள் என்பதாகும். இதில் டீன் முந்திக்கொண்டு கருத்துத் தெரிவித்துள்ளார். சுகாதார சேவைகளை விரிவாக்கும் போது அதற்காகும் செலவை உழைக்கும் மக்கள் ஏற்கவேண்டும். அதற்கு மாறாக ஆலோசனை சொல்பவர்களை டீன் கண்டித்துள்ளார். இந்த வேட்பாளர்கள் எவரும் ஜனநாயகக்கட்சி படிப்படியாக வலதுசாரிகளின் பக்கள் சாய்ந்து கொண்டு வருவதற்கு இடையூறாக இல்லை. இது பல தலைமுறைகளாக ஜனநாயகக் கட்சியில் உருவாகிக் கொண்டிருக்கிற மாற்றமாகும். நீண்ட பத்தாண்டுகாலமாக பார்க்கையில் ஜனநாயகக் கட்சிக்காரர்கள் சொத்துடைமை, மறு விநியோகம்பற்றிய எல்லாக் கருத்துக்களையும் கைவிட்டுவிட்டனர். அல்லது முக்கியத்துவம் வாய்ந்த சமூக சீர்திருத்தங்களைக்கூட கைவிட்டுவிட்டனர். உழைக்கும் மக்கள் அமெரிக்காவில் தற்போது நிலவுகின்ற அரசியல் முறையில் சிக்கிக் கொண்டிருக்கின்றனர். அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இரண்டு கட்சிகளுமே பணம்படைத்த செல்வந்த தட்டினரது கட்டுப்பாட்டிலுள்ளன. அமெரிக்க மக்களில் தலைமையிலுள்ளவர்கள், ஒன்று அல்லது இரண்டு சதவீதம் பேர் செல்வத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். அவர்கள் மிகப்பெருப்பாலான மக்களது வாழ்க்கை நிலைப்பாடுகளை தங்கள் கட்டளைகள் மூலம் முடிவு செய்கின்றனர் போர், சமூக பிற்போக்கு மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் என்பன ஒரு கட்சி அல்லது மற்றொரு கட்சி அல்லது முதலாளித்துவக் கட்சி ஆகியவற்றின் முடிவுகளால் உருவாகின்றது அல்ல. மாறாக, அது வரலாற்று ரீதியாக முதலாளித்துவ அமைப்பு முறையில் உருவான, தீர்க்க முடியாத நெருக்கடியால் உருவானவை ஆகும். தொழிலாள வர்க்கம் தங்களது ஜனநாயக உரிமைகளையும் மற்றும் வாழ்க்கைத் தரத்தையும் நிலைநாட்டி வேலைவாய்ப்புக்களை பேணிக்காத்து மற்றும் ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான கடுமையான போராட்டத்தை எப்போது நடத்த முடியுமென்றால், அவர்கள் இரண்டு கட்சி முறையிலிருந்து தங்களை முறித்துக்கொண்டு சோசலிச வேலைத்திட்டத்தை அடிப்படையாகக்கொண்ட, தங்களது சொந்த சுயாதீனமான அரசியல் கட்சியை உருவாக்கும் போதுதான் ஆகும். சோசலிச சமத்துவக் கட்சி இந்த உணர்வை ஏற்படுத்துவதற்காக, அதனை வளர்ப்பதற்காக 2004 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறது. அதன் மூலம் தொழிலாள வர்க்கத்தின் நலன்களைக் காப்பதற்காக, சமூகத்தை புரட்சிகரமாக மாற்றி அமைப்பதற்கான உழைக்கும் மக்கள் போராட்டத்தை சுதந்திரமான வெகுஜன அரசியல் இயக்கமாக மாற்றுகின்ற அடிப்படையாக இந்தத் தேர்தல் போட்டி அமையும். |