WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
:
இலங்கை
Socialist Equality Party condemns Sri Lankan president's dictatorial
actions
சோசலிச சமத்துவக் கட்சி இலங்கை ஜனாதிபதியின் சர்வாதிகார நடவடிக்கைகளை கண்டனம்
செய்கின்றது
By the Socialist Equality Party
19 February 2004
Use this
version to print |
Send this link by email |
Email the author
சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க), இலங்கை ஜனாதிபதி சந்திரிகா
குமாரதுங்க பெப்ரவரி 7 அன்று பாராளுமன்றத்தை கலைக்கவும் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய
தேசிய முன்னணி (ஐ.தே.மு) கூட்டு அரசாங்கத்தை பதவிவிலக்கவும் தன்னிச்சையாகவும் ஜனநாயக விரோதமான
முறையிலும் எடுத்த முடிவை வன்மையாகக் கண்டனம் செய்கின்றது. அவரது நடவடிக்கைகள் சுதந்திரத்திற்குப் பின்னரான
இலங்கையின் வரலாற்றில் இடம்பெற்றிராததும் ஒரு அரசியலமைப்பு சதிக்கு சமனானதுமாகும்.
பாராளுமன்றத்தில் இன்னமும் பெரும்பான்மையைக் கொண்டுள்ள மற்றும் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட
அரசாங்கத்தை திடீரென பதவி விலக்குவதன் மூலம் ஜனாதிபதி ஒரு அரசியல் பொறிக்குள் சிக்கியுள்ளார். இங்கு
மீண்டும் திரும்ப வழியில்லை. ஏப்பிரல் 2 தேர்தலின் பெறுபேறுகள் என்னவாக இருந்தாலும், உண்மையான அதிகாரம்
இப்போது ஜனாதிபதியிடமே உள்ளது. அவர் அரச அதிகாரத்தின் பிரதான நெம்புகோல்களின் மொத்தத்தையும் தனது
சொந்தக் கைகளில் வைத்திருப்பதோடு, அதன் மூலம் ஒரு சர்வாதிகார வடிவிலான ஆளுமைக்கான அடித்தளத்தை
ஸ்தாபிக்கின்றார்.
ஜனாதிபதி, இராணுவம் மற்றும் அவரது புதிய பங்காளியான சிங்களப் பேரினவாத
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) ஆகிய இரண்டு தீர்க்கமான முண்டுகோலின் ஆதாரங்களில் நேரடியாகத்
தங்கியிருக்கின்றார். பின்னணியில் இருக்கும் அதேவேளை, இராணுவ உயர்மட்டத்தினர் மேலும் மேலும் வெளிப்படையாகவும்
மற்றும் நேரடியாகவும் கட்சிசார்பான அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுமாறு வேண்டுமென்றே அழைப்புவிடுக்கின்றனர்.
அதேசமயம், தேசாபிமான வெறியில் ஊக்குவிக்கப்பட்ட ஜே.வி.பி யில் உள்ள சக்திகள், விசேடமாக தொழிலாள
வர்க்கத்தின் பக்கத்திலிருந்து எழும் அரசாங்கத்திற்கு எதிரான எந்தவொரு விரோதத்திற்கும் எதிரான அதிரடிப் படைகளாகப்
பயன்படுத்தப்படுவர்.
கடந்த மூன்று மாதங்களிலான எல்லா சம்பவங்களும் இதே தெளிவான இலக்கையே
சுட்டிக்காட்டுகின்றன. நவம்பர் 4 அன்று, இராணுவ உயர்மட்டத்தினர் மற்றும் ஜே.வி.பி யின் ஊக்குவிப்பின் பேரில்,
குமாரதுங்க பாதுகாப்பு, உள்துறை மற்றும் ஊடக அமைச்சுக்களின் கட்டுப்பாட்டை அபகரித்ததோடு, பாராளுமன்றத்தையும்
ஒத்திவைத்துடன் நாட்டின் கொடுமையான அவசரகால சட்டங்களையும் தட்டியெழுப்ப முனைந்தார். அவர் இந்த அசாதாரணமான
நடவடிக்கைகளை, பிரதமர் விக்கிரமசிங்க தமிழீழ விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளில்
"நாட்டின் தேசியப் பாதுகாப்பை கீழறுக்கின்றார்" என குற்றம் சாட்டுவதன் மூலம் நியாயப்படுத்தினார்.
பெரு வர்த்தகர்கள் மற்றும் பெரும் வல்லரசுகளின் அழுத்தங்களின் கீழ் குமாரதுங்க
ஒரு அடி பின்செல்லத் தள்ளப்பட்டார். அவசரகால நிலைமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கவில்லை;
பாராளுமன்றம் வரவுசெலவுத் திட்டத்தை அமுல்செய்வதற்காக சுருக்கமாக மீண்டும் கூடியது. ஆனால் குமாரதுங்கவுக்கும்
விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான நீண்ட பேச்சுவார்த்தைகள் எந்தவொரு தீர்வுக்குமான சமிக்ஞைகளுமின்றி வீழ்ச்சிகண்ட
அதே சமயம், கொழும்பு அரசாங்கத்தின் இயக்கங்கள் கடந்த மூன்று மாதங்களாக முழுமையாகவே முடங்கிப்போயின.
அமைச்சுக்களின் கட்டுப்பாட்டை அபகரித்ததன் மூலம், குமாரதுங்க அதிகளவில் அவரது
கட்டுப்பாட்டுக்கு வெளியில் சென்றுகொண்டிருக்கும் அரசியல் சக்திகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளார். அவரது சொந்தக்
கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் (ஸ்ரீ.ல.சு.க) உள்ள குறிப்பிடத்தக்க பகுதியினர், வீழ்ச்சிகண்டுவரும்
கட்சியின் ஆதரவை தூக்கிநிறுத்துவதற்காக ஜே.வி.பி உடனான ஒரு கூட்டணியை அமைக்கக் கோரினர். ஜனவரி 20
கைச்சாத்திடப்பட்ட ஜே.வி.பி-ஸ்ரீ.ல.சு.க உடன்படிக்கை, ஐ.தே.மு அரசாங்கத்தை மோசடியானது எனவும்,
பொருளாதாரத்தை கீழறுப்பதாகவும் விடுதலைப் புலிகளுக்கு நாட்டைக் காட்டிக்கொடுப்பதாகவும் கண்டனம் செய்தது.
குமாரதுங்க இறுதியாக, அவரது புதிய பங்காளிகளின் ஊக்குவிப்பின் பேரில், புதிய கூட்டணி தேர்தல் அதிகாரிகளால்
உத்தியோகபூர்வமாக பதிவுசெய்யப்பட்ட மறுதினமான, பெப்ரவரி 7 அன்று அரசாங்கத்தை பதவி விலக்கினார்.
அப்போதிருந்து குமாரதுங்க, விக்கிரமசிங்கவுக்கோ அல்லது அவரது அமைச்சர்கள்
எவருக்குமோ அறிவிக்காமல் அரச விவகாரங்களில் மேலும் மேலும் தலையீடு செய்தார். பாராளுமன்றத்தை கலைப்பதற்கு
சற்று முன்னர், அவர் தமக்கு மிகவும் நெருக்கமான இருவருக்கு பிரதான அமைச்சு பதவிகளை வழங்கினார். சில
நாட்களின் பின்னர், ஜனாதிபதி 39 பிரதி அமைச்சர்களை பதவி விலக்கியதோடு காபந்து அரசாங்கத்தின் அமைச்சரவை
15 ஆகக் குறைக்கப்படும் என அறிவித்தார். அவ்வாறு செய்வதன் மூலம், "தேசிய நலன்களுக்கு" அவசியமில்லாதவை
என அவர் கருதும் எந்தவொரு தீர்மானத்தையும் நசுக்கித்தள்ள அவர் தயாராகின்றார் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.
குமாரதுங்க கடந்த ஞாயிறன்று முதல் முறையாக பகிரங்கமாக உரையாற்றியபோது,
அவர் சிறந்த நோக்கங்களுக்காகவே செயற்பட்டதாக பிரகடனப்படுத்தினார். அதிகாரங்களை அபகரித்த எல்லா
சர்வாதிகாரிகளையும் போலவே, அவரும் மோசடியான மற்றும் துரோக அரசாங்கத்தை பதவி விலக்குவதை தவிர
வேறெந்த பதிலீடும் தனக்கு இருக்கவில்லை என சுட்டிக்காட்டினார். தேர்தல் முடிவடைந்ததும், ஜனாதிபதி தாம்
பரந்த நிர்வாக அதிகாரங்களை கைவிடுவது மட்டுமல்லாமல் தூக்கிவீசுவதாகவும் வாக்குறுதியளித்தார். வலதுசாரி
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) அரசாங்கத்தால் 1978ல் நிறுவப்பட்ட "சர்வாதிகார" நிரைவேற்றதிகார
ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்வதாக குமாரதுங்கவும் அவரது ஸ்ரீ.ல.சு.க வும் 1994ல் ஆட்சிக்கு வருவதற்கு
முன்னர் மீண்டும் மீண்டும் அளித்த வாக்குறுதிகள் போலியானவையாகும்.
இந்த சம்பவங்களுக்கு இரக்கமற்ற தர்க்கங்கள் உள்ளன. விடுதலைப் புலிகளுடனான பெயரளவிலான
சமாதான முன்னெடுப்புகள் சம்பந்தமாக அரசியல் நிறுவனத்திற்குள் தீர்க்கப்படமுடியாத ஆழமான பிளவுகள்
இருந்துகொண்டுள்ளன. அதே சமயம், விக்கிரமசிங்கவின் கீழும், முன்னைய குமாரதுங்க அரசாங்கத்தாலும் நடைமுறைப்படுத்தப்பட்ட
சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையிலான திறந்த பொருளாதார திட்டத்தின் சமூக தாக்கங்களுக்கு எதிராக
வேலைநிறுத்த மற்றும் ஆர்ப்பாட்ட அலைகள் அதிகரித்து வருகின்றன. குமாரதுங்க, மிகவும் கூர்மையடைந்து வரும்
அரசியல் மற்றும் சமூக பதட்ட நிலைமைகளின் உந்து சக்தியின் அதிகரிப்பின் நிமித்தம் ஒரு பொனபாட்டிச --இறுதி
ஆய்வில், இராணுவத்திலும் அரச எந்திரத்திலும் நேரடியாகத் தங்கியிருக்கும் ஒரு சர்வாதிகாரி-- பாத்திரத்தை
ஆற்ற முன்வந்துள்ளார்.
உண்மையில், அரசாங்கத்தை பதவி விலக்குவதற்கான குமாரதுங்கவின் தீர்மானம், ஆளும்
வட்டாரங்களில் இருந்து மட்டுமன்றி வெளியேற்றப்பட்டவர்களிடம் இருந்தும் கூட எதிர்ப்பைத் தூண்டவில்லை. ஜனாதிபதியின்
நடவடிக்கைகளைப் பற்றிய மெளனவிமர்சனம் செய்த அதேவேளை, அரசாங்கத்தைப் பதவி விலக்கியதையிட்டு விக்கிரமசிங்கவும்
அவரது அமைச்சர்களும் உடனடியாக எந்தவொரு சட்டரீதியிலான அல்லது அரசியல் ரீதியிலான சவால்களையும் விடுக்கவில்லை.
இதேபோல் ஊடகங்களும் பெரு வர்த்தகர்களும் இந்த வழியிலேயே விழுந்தனர். இந்த உடன்பாடுகள் பாராளுமன்ற
ஜனநாயக நடைமுறைகள் செயல் இழக்கப்பட்டு, பாராளுமன்றத்திற்கு அப்பாற்பட்ட விதிமுறைகள் கோரப்படுவதை
ஆளும் வர்க்கம் அதிகரித்தளவில் அங்கீகரிப்பதை வெளிப்படுத்துகிறது.
ஆளும் வர்க்கத்தில் உள்ள பிளவுகளைப் பிரதிபலிக்கும் வகையில், பல கருத்தாளர்கள்
அதிகாரத்தை பெறவும் மற்றும் "நாட்டைக் காக்கவும்" ஒரு சக்திவாய்ந்த தலைவருக்கு வெளிப்படையாகவே
அழைப்புவிடுக்கின்றனர். வலதுசாரி ஐலன்ட் செய்தித்தாள் சில சந்தர்ப்பங்களில் இந்த விவகாரத்தில்
ஆணித்தரமாயுள்ளது. நவம்பர் 17 அன்று, "தேவை: ஒரு மூன்றாவது சக்தி" என்ற தலைப்பிலான அதன் ஆசிரியர்
தலையங்கம், நாட்டின் தலைமைத்துவ பலவீனத்தையிட்டு புலம்புவதுடன், தேர்தலையிட்டும், ஜே.வி.பி யின்
வளர்ச்சிகண்டுவரும் செல்வாக்குக்கு எதிராகவும் எச்சரிக்கை செய்யும் அதேவேளை, பின்னர் "ஜனாதிபதி மற்றும்
பிரதமரும் தமது மனதை மாற்றவேண்டும் மற்றும் செயற்படவேண்டும், அல்லது அதிகாரத்தின் கடிவாளத்தை
கையளிக்க வேண்டும் எனக் கூறும் வகையில் ஒரு மூன்றாவது சக்திக்காக" அழைப்புவிடுப்பதன் மூலம் முடிவுசெய்கிறது.
குமாரதுங்க அரசாங்கத்தை பதவி விலக்கி ஒரு நாள் கடந்த பின்னர், பின்
முகாமைத்துவ பட்டமளிக்கும் நிறுவனத்தின் (Post
Graduate Institute of Management) பேராசிரியர்
குணபால நாணயக்கார தனது வியாபார சபைக்கு இதே செய்தியையே தெளிவாக வெளியிட்டார். "அரசியல் வரலாற்றின்
படி எந்தவொரு நாட்டிலும் ஒரே ஒரு தலைவரே இருந்துவந்தார் என்பது எனக்குத் தெரியும். ஜேர்மனி ஹிட்லரைத்
தலைவராகக் கொண்டிருந்தது. அமெரிக்கா ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்சை தலைவராகக் கொண்டிருக்கின்றது. ஏனைய
பல நாடுகளும் ஒவ்வொரு தலைவரைக் கொண்டிருந்தன. அவர்கள் ஒரு தலைமைத்துவத்தை வழங்கினார்கள் மற்றும்
அந்த தலைமைத்துவம் மிகவும் தெளிவானது," என அவர் பிரகடனம் செய்தார்.
குறிப்பிடத்தக்கவகையில் குமாரதுங்கவின் புதிய நடவடிக்கைகள் சம்பந்தமான அமெரிக்காவின்
பிரதிபலிப்புகள் மிகவும் தாழ்ந்ததாக இருந்து வருகின்றது. கடந்த நவம்பரில் அமெரிக்க ஜனாதிபதி புஷ் குறிப்பாகவும்
வெளிப்படையாகவும் அப்போது வாஷிங்டனில் தங்கியிருந்த விக்கிரமசிங்கவை ஆதரித்தார். திரைக்குப் பின்னால் அமெரிக்காவும்
அதன் நண்பனான இந்தியாவும் குமாரதுங்கவை பின்வாங்கச் செய்வதற்காக பலமான அழுத்தங்களை திணித்தன.
எவ்வாறெனினும், ஐ.தே.மு அரசாங்கம் பதவி விலக்கப்பட்டதை அடுத்து இத்தகைய முயற்சிகள் பகிரங்கமாகவோ
அல்லது தனிப்பட்டமுறையிலோ மேற்கொள்ளப்படவில்லை. கடந்த வாரம் ஒரு சுருக்கமான அறிக்கையை வெளியிட்ட
அமெரிக்க தூதரகம், "அமெரிக்கா இலங்கை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் எந்தவொரு அரசாங்கத்தோடும்
நெருக்கமாக செயற்படும்" என சுட்டிக்காட்டியிருந்தது. இந்த உடனடி மாற்றமானது புஷ் நிர்வாகம் தனது இலக்கு
நிறைவேறும் வரை, எந்தவொரு வழிமுறையையும் அங்கீகரிப்பதுடன் கொழும்பில் உள்ள எந்தவொரு அரசாங்கத்தையும்
ஆதரிக்கத் தயாராகிக்கொண்டிருப்பதற்கான அறிகுறியே ஆகும்.
தற்போதைய நெருக்கடியானது, கடந்த காலங்களில் தொழிலாள வர்க்கம்
தலைமைத்துவத்திற்காக காத்திருந்த லங்கா சமசமாஜக் கட்சி (ல.ச.ச.க), கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களின்
முழுமையான வங்குரோத்தை அம்பலப்படுத்தியுள்ளது. எந்தவொரு பாரம்பரிய தொழிலாளர் அமைப்புகளும் குமாரதுங்கவின்
சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக குறைந்தபட்ச எதிர்ப்பையும் காட்டவில்லை. ல.ச.ச.க வும் கம்யூனிஸ்ட்
கட்சியும் தனது ஆரம்ப எதிர்ப்புகளை விரைவில் கைவிட்டு ஜே.வி.பி உடனான ஸ்ரீ.ல.சு.க கூட்டணியில்
இணைந்துகொண்டன. ஜே.வி.பி பதினைந்து வருடங்களுக்கு முன்னர், இந்தக் கட்சிகளின் தலைவர்களையும் உறுப்பினர்களையும்
துப்பாக்கியால் சுட்டுத்தள்ளியது.
அடிப்படை முரண்பாடுகள்
இலங்கையிலான அரசியல் நெருக்கடியை குறுகிய, தனிப்பட்ட மற்றும் கட்சி
எதிரிகளுக்கிடையிலான சிறிய மாற்றமாக குறைத்து மதிப்பிட முடியாது. அதற்கும்மேலாக, இலங்கை
முதலாளித்துவத்தை அதனது அடிப்படைத் தகவமைவில் விரைவான மற்றும் பரந்த வாய்ப்புகள் உள்ள
ஒழுங்குபடுத்தல்களை மேற்கொள்ளத் தள்ளும் பூகோள பொருளாதார மற்றும் அரசியல் போக்குகளின்
விசேடமானதும் தீவிரமானதுமான வெளிப்பாடாகும். "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற போர்வையின்
கீழ், பரந்தளவில் விரிவாக்கப்பட்ட மற்றும் துரிதப்படுத்தப்பட்ட பூகோள மேலாதிக்கத்துக்கான அமெரிக்க
ஏகாதிபத்தியத்தின் திருப்பமானது, ஸ்திரமற்ற நிலைமையைத் தோற்றுவிக்கும் பிரதான காரணியாக இருந்து
வருகின்றது.
ஆப்கானிஸ்தான் புஷ் நிர்வாகத்தின் ஆக்கிரமிப்பிற்கான முதலாவது இலக்காக இருந்தது
தற்செயலானதல்ல. அந்த நாடு மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய எண்ணெய் வள பிராந்தியங்களில் மிகவும்
சமீபத்தில் உள்ள நாடாக இருப்பதால் மட்டுமன்றி, கடந்த இரண்டு தசாப்தங்களாக வாஷிங்டனுக்கு சிறந்த
பொருளாதார மற்றும் மூலோபாய முக்கியத்துவம் கொண்டதாக கருதப்பட்டுவந்த இந்தியத் துணைக்கண்டத்தின் ஒரு
பகுதியாகவும் அது உள்ளது. பெருந்திரளான அமெரிக்கக் கூட்டுத்தாபனங்கள், மென்னிய அபிவிருத்திக்கும் மற்றும்
விஞ்ஞான பரிசோதனைகளுக்கும் தொலைதொடர்பு இயக்க மையங்களில் இருந்து விஸ்தரிக்கப்படும் சேவைகளை வழங்குவதற்காக,
அதன் பரந்த மலிவான, பயிற்றப்பட்ட உழைப்பு களஞ்சியத்தில் முன்னேற்றம் காண்பதற்காக இந்தியாவின் நுழைவாயிலுக்கு
பாதையமைத்துக் கொண்டிருக்கின்றன.
தசாப்த காலங்களாக இந்தப் பிராந்தியத்தை புறக்கணித்து வந்த அமெரிக்கா, இப்போது
சாத்தியமான ஸ்திரமற்ற நிலைமையை ஏற்படுத்தும் காரணிகள், விசேடமாக இலங்கையிலும் மற்றும் காஷ்மீரிலுமான
நீண்டகால மோதல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும் என வலியுறுத்துகிறது. இந்தச் செய்தி கொழும்பிலும்
அழுத்தத்தை ஏற்படுத்தாமல் இல்லை. இலங்கை பொருளாதார தேக்கநிலை மற்றும் கைநழுவிய சந்தர்ப்பங்களால்
அதிகரித்தளவில் ஏமாற்றமடைந்த வியாபாரிகளின் செல்வாக்கான பகுதியினர், பல வருடங்களாகவே உள்நாட்டு
யுத்தத்திற்கு முடிவுகட்டுமாறு நெருக்கிவருகின்றனர். ஆப்கானிஸ்தான் மீதான தலையீட்டை அடுத்து,
பொறிந்துபோயிருந்த "சமாதான முன்னெடுப்புகளை" மீண்டும் தொடங்குவதற்கு குமாரதுங்க இலாயக்கற்றவர்
என்பது நிரூபிக்கப்பட்டவுடன், அவரது பாராளுமன்றப் பெரும்பான்மை கீழறுக்கப்பட்டு புதிய பொதுத் தேர்தல்கள்
நடத்தப்பட்டன. 2001 டிசம்பரில் ஆட்சிக்கு வந்த விக்கிரமசிங்க, உடனடியாக விடுதலைப் புலிகளுடன் ஒரு யுத்த
நிறுத்த உடன்படிக்கையை கைச்சாத்திட்டதுடன் யுத்தத்திற்கு நிரந்தர முடிவுகாணும் நோக்கிலான பேச்சுவார்த்தைகளை
ஆரம்பித்தார்.
அனைத்துக் கட்சிகளும், இந்த "சமாதான முன்னெடுப்புகள்" சமாதானம் பற்றியதல்ல,
மாறாக தொழிலாள வர்க்கத்தை முறையாக சுரண்டுவதன் பேரில் தீவை ஒரு மலிவு உழைப்பு மேடையாக மாற்றுவதற்கான
சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் கும்பல்களுக்கிடையிலான ஒரு அதிகாரப் பகிர்வு ஒழுங்கை தக்கவைத்துக்கொள்வதாகும்
என்பதையிட்டு அக்கறையுடன் உள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகள், தொழிலாள வர்க்கத்தின் உரிமைகளைப்
பாதுகாக்கப்பதிலும் ஜனநாயக உரிமைகளை மதிப்பதிலும், அதன் சம அந்தஸ்தினரான கொழும்பை விட சிறந்ததாக
இருக்க முடியாது. நவம்பர் 1 வெளியிடப்பட்ட அதன் இடைக்கால நிர்வாக சபைக்கான திட்டங்கள், கொழும்புடன்
சேர்ந்து தீவின் வடக்குக் கிழக்கில் தனது சொந்த எதேச்சதிகார ஆட்சியை அமுல்படுத்துவதற்கான ஒரு திட்ட
வரைவேயாகும்.
எவ்வாறெனினும், விடுதலைப் புலிகளுடனான கொடுக்கல் வாங்கல்கள் கொழும்பில்
தற்போதுள்ள அரசியல் நிறுவனத்தை ஆழமான ஸ்திரமற்ற நிலைமைக்குள் தள்ளியுள்ளது. 1948ல்
உத்தியோகபூர்வமாக சுதந்திரம் பெற்றது முதல், எல்லாப் பிரதானக் கட்சிகளும், தொழிலாள வர்க்கத்தை
பிளவுபடுத்தவும், விசேடமாக கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் தேர்தலுக்கான ஆதரவு அடித்தளத்தை
உருவாக்கவும், தமிழர் விரோத பேரினவாதத்தை தனது அடிப்படை அரசியல் உபகரணமாக நம்பியிருந்தன.
குமாரதுங்கவின் ஸ்ரீ.ல.சு.க, "சிங்களம் மட்டும்" தேசிய மொழி என்ற அதி பாரபட்சமான கொள்கையின் மூலம்,
1956ல் முதல் முறையாக ஆட்சிக்கு வந்தமையானது, குறிப்பாக சிங்களத் தீவிரவாதிகளின் அழுத்தத்திற்கு
இடமளித்தது.
எவ்வாறெனினும், 1940 மற்றும் 1950களில் முதலாளித்துவ வர்க்கம் ல.ச.ச.க
வின் எதிர்ப்புகளுக்கு முகம் கொடுத்தது. ட்ரொட்ஸ்கிசத்தை அடிப்படையாகக் கொண்ட ல.ச.ச.க, தொழிலாள
வர்க்கத்தின் மத்தியில் ஆழமாக வேரூன்றி இருந்ததுடன், முதலாளித்துவத்தை நிர்மூலமாக்க தொழிலாள வர்க்கத்தை
வர்க்க அடிப்படையில் ஐக்கியப்படுத்தப் போராடியது. ஆனால், ஒரு நீண்டகால அரசியல் பின்வாங்கல்களின்
பின்னர், 1964ல் ல.ச.ச.க அனைத்துலக சோசலிச அடிப்படைகளை முழுமையாக காட்டிக்கொடுத்த
அதேவேளை, குமாரதுங்கவின் தாயாரான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஸ்ரீ.ல.சு.க அரசாங்கத்துடன்
இணைந்து கொண்டது. தமிழ் சிங்கள தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் போராட்டத்தை கைவிட்டு வெளிப்படையாகவே
ஸ்ரீ.ல.சு.க வின் சிங்களப் பேரினவாதத்தை தழுவிக்கொண்ட ல.ச.ச.க வின் நடவடிக்கையானது, சவால்செய்யப்படாத
இனவாத அரசியலின் ஆதிக்கத்திற்கு வழிவகுத்ததுடன் வடக்கில் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளும், தெற்கில்
ஜே.வி.பி யும் தோன்றுவதற்கும் வழிவகுத்தது.
1970-77 இரண்டாவது பண்டாரநாயக்க அரசின் ஒரு பகுதியான ல.ச.ச.க,
சிங்களத்தை மட்டும் அரச கருமமொழியாகவும் மற்றும் பெளத்தத்தை அரச மதமாகவும் ஆக்கிய, ஜனநாயக
விரோத பிரிவுகளடங்கிய புதிய அரசியலமைப்புக்கும், தமிழர்களுக்கு நேரடி எதிரான பாரபட்ச கொள்கைகளுக்கும்
நேரடி பொறுப்பாளியாகும். தமிழ் முதலாளித்துவ அரசியல்வாதிகளும் இதற்கு நிச்சயமான பொறுப்பாளிகளாக
இருக்கும் அதேவேளை, யுத்தத்திற்கு வழி வகுத்தது, பண்டாரநாயக்க அரசாங்கத்தினதும் மற்றும் அதைத்
தொடர்ந்து வந்த ஜே.ஆர். ஜயவர்தனவின் ஐ.தே.க அரசாங்கத்தினதும் கொள்கைகளே ஆகும். அதன் திறந்த
பொருளாதார நடவடிக்கைகளுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்புக்கு மத்தியில், 1983ல் ஐ.தே.க
தனது குண்டர்களை தமிழர் விரோத படுகொலைகளை செய்வதற்காக கட்டவிழ்த்து விட்டமை நாட்டை ஆயுத
மோதலுக்கு இட்டுச் சென்றது.
ஐ.தே.மு மற்றும் ஸ்ரீ.ல.சு.க வும் முன்னெடுத்த 20 வருடகால யுத்தமானது,
60,000க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிகொண்டதுடன், இலட்சக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்தனர். ஆனால்,
பெரு வர்த்தகர்கள் தொழிலாள வர்க்கத்தினை இனவாத அடிப்படையில் பிளவுபடுத்துவதற்காக யுத்தத்தை
ஆதரித்தபோதிலும், அது பொருளாதாரத்தை சீர்குலைத்ததோடு உருவெடுத்துவரும் பூகோள உற்பத்தி
முன்னெடுப்புகளில் இருந்து இலங்கையை ஓரம் கட்டியது. இலங்கையை பிராந்தியத்தின் பூகோள நடவடிக்கையின்
தளமாக நிறுவுவதாயின், யுத்தத்திற்கு முடிவுகட்டப்பட வேண்டும் என்பது கொழும்பில் உள்ள பெரும் கம்பனித்
தலைமைகளுக்கு மிகவும் வெளிப்படையானதாகும்.
எவ்வாறெனினும், பொருளாதார தர்க்கவியலால் வலியுறுத்தப்பட்டுள்ளது என்னவெனில்,
கடந்த அரை நூற்றாண்டு காலமாக அரசியல் நிறுவனத்தின் முழு வேலைசெய்யும் வழிமுறையும் கூர்மையான
முரண்பாட்டில் உள்ளது என்பதாகும். இனவாத அரசியலானது இலங்கை அரசின் கொள்கைக்கான அடித்தளத்தை
நிர்மாணித்துள்ளதுடன், சக்திமிக்க ஆழமான நலன்களையும் உருவாக்கிவிட்டுள்ளது. விடுதலைப் புலிகளுடன் சமரசத்தை
அடைவதற்காக மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும், தமது தொழில் அந்தஸ்த்து மற்றும் இலாபத்தை
யுத்தத்துடன் இணைத்துக்கொண்டுள்ள மற்றும் சமூகக் கொந்தளிப்பினை இனவாத பாதையில் திருப்பிவிட எப்போதும்
தயாராக இருப்பவர்களின் எதிர்ப்பை தானாகவே சம்பாத்தித்துக்கொள்ளும்.
ஏப்பிரல் 2 தேர்தல்கள் வெட்கக் கேடானதாகும். மொத்தத்தில் அது ஒன்றையும்
தீர்த்து வைக்கப்போவதில்லை. கடந்த காலத்தில் ஸ்ரீ.ல.சு.க மற்றும் ஐ.தே.க வுக்கும் இடையில் வாக்காளர்கள்
கொண்டிருந்த "தெரிவானது" குமாரதுங்கவின் நடவடிக்கைகளால் அர்த்தமற்றதாக்கப்பட்டது. எந்தக் கட்சியோ
அல்லது கட்சிகளின் கூட்டோ வெற்றிபெற்றாலும், அவர் தன்னுடைய வேலைத் திட்டத்தை அமுல்படுத்துமாறு வலியுறுத்துவார்
என்பதை மிக மிக தெளிவாகக் காட்டியுள்ளார். ஐ.தே.மு மீண்டும் அதிகாரத்திற்குத் திரும்பினாலும் சரி, அல்லது
ஜே.வி.பி-ஸ்ரீ.ல.சு.க கூட்டணி வெற்றிபெற்றாலும் சரி, இரு பதிலீடுகளும் மேலும் அரசியல் ஸ்திரமற்ற நிலைமைக்கு
விரைவில் வழிவகுப்பதுடன் குமாரதுங்கவை நேரடியாக அதிகாரக் கடிவாளத்தை கையிலெடுக்கத் தள்ளும்.
அரசியல் ஆபத்து
இந்த நிலையில் தொழிலாள வர்க்கம் பாரிய அரசியல் ஆபத்தினை
எதிர்நோக்குகிறது. உழைக்கும் மக்கள் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திற்கும் அதன் கொள்கைக்கும்
நியாயமான முறையில் எதிரானவர்கள். விக்கிரமசிங்கவின் ஐ.தே.மு சமாதானத்தையும் வளமான வாழ்வையும்
உருவாக்குவதாக உறுதியளித்து 2001ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றபோதிலும், அதற்கு பதிலாக அது
நடைமுறைப்படுத்திய கொடூரமான பொருளாதார மறுசீரமைப்பினால் பரந்தளவிலான தொழிலாள வர்க்கத்
தட்டினர், விவசாயிகள் மற்றும் இளைஞர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும்
இடையிலான இடைவெளி தொடர்ந்தும் அதிகரிக்கவுள்ளது. அரசாங்கத்தினுடைய சொந்த "புத்துயிர் பெறும்
இலங்கை" எனும் ஆவணத்தின்படி, 45 சதவீதமான குடும்பங்கள் ஒரு நாளைக்கு 2 அமெரிக்க டொலர்களை விட
குறைவான வருமானத்தில் வாழத்தள்ளப்பட்டுள்ளனர்.
ஆனால் அரசாங்கம் வெளியேற்றப்பட்ட முறையையிட்டு தொழிலாள வர்க்கம் அலட்சியமாக
இருக்க முடியாது. தொழிலாள வர்க்கம் அதிகாரத்திற்கு செல்வதற்கான அதன் சுயாதீனமான வேலைத்திட்டம் மற்றும்
மூலோபாயம் இன்மையால், அது ஏனைய எதிர் வர்க்க சக்திகளுக்கு பலியாகின்றது. குமாரதுங்க நேரடியான
சர்வாதிகார ஆட்சியை இயக்குவதன் பேரில், எல்லா நுட்பங்களையும் இயக்குவதற்காக விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு
எதிரான பரந்த எதிர்ப்பினை சுரண்டிக் கொண்டுள்ளார். அவர் அரச எந்திரங்கள் மீதான தனது பிடியை முறையாக
இறுக்கியுள்ளார்: அவர் இராணுவம், பொலிஸ் மற்றும் நீதித் துறையிலான உயர் பதவிகளில் தனக்கு நம்பிக்கையானவர்களைப்
புகுத்தியும் பராமரித்தும் வருகின்றார். அதேசமயம், தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக தகவமைவற்ற குட்டி முதலாளித்துவ
சக்திகளை அணிதிரட்டுவதற்கான கருவியாக ஜே.வி.பி யை பட்டியலில் சேர்த்துக் கொண்டுள்ளார்.
பரந்த அதிருப்திக்கு எரியும் கம்பியாக ஜே.வி.பி யை மீண்டும் உருவாக்குவதற்கு ஆளும்
கும்பலில் உள்ள சக்திகளால் பெரும் முயற்சிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. ஜே.வி.பி யின் மீது நம்பிக்கை வைப்பவர்கள்
தமது தலையை சுருக்கில் மாட்டிக்கொள்கிறார்கள் என சோ.ச.க வெளிப்படையாக எச்சரிக்கின்றது. ஜே.வி.பி
யால் சாதாரண மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது. அதனுடைய எல்லா வாக்குறுதிகள்
மற்றும் அதன் கடந்தகால சோசலிச வாய்வீச்சுக்களும் அது வெளிப்படையாக பாதுகாக்க உறுதி பூண்டிருக்கும் முதலாளித்துவ
அமைப்புக்கு பொருத்தமற்றதாகும். அது எழுப்பியுள்ள எதிர்பார்ப்புகள் மற்றும் அபிலாசைகளை திருப்திப்படுத்த
முடியாத ஜே.வி.பி, தவிர்க்கமுடியாத வகையில் தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்பி, நாட்டின் பரந்த
தேவைக்காக தொழிலாள வர்க்கத்தின் தேவைகள் கீழ்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தும்.
அதை எதிர்க்கும் எவரும் 1980களின் பிற்பகுதியில் ஜே.வி.பி பின்பற்றிய அதே கொடூரமான
பாணியில் கையாளப்படுவார். அக்காலகட்டத்தில் ஜே.வி.பி உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக
மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சியான இந்திய-இலங்கை உடன்படிக்கைக்கு எதிராக ஒரு படுகொலைப் பிரச்சாரத்தில்
ஈடுபட்டிருந்தது. அதனுடைய பேரினவாத பிரச்சாரத்திற்கு ஆதரவுதர மறுத்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள்,
தொழிற்சங்க அலுவலர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் ஜே.வி.பி யின் தாக்குதல் படையால் கொடூரமாக சுட்டுக்
கொல்லப்பட்டனர். ஜே.வி.பி தொழிலாள வர்க்கத்தை அச்சுறுத்தும் அதனுடைய தேவையை நிறைவேற்றிய பின்னர்,
விரைவாக ஜே.வி.பி யின் பக்கம் திரும்பிய ஐ.தே.க அரசாங்கம் அதன் முக்கிய தலைவர்களை கொலை செய்தது.
தீவின் தென் பகுதியில் ஒரு பயங்கர ஆட்சியை கட்டவிழ்த்துவிட்ட அரச பாதுகாப்பு படைகள், சமூக கொந்தளிப்பிற்கான
எந்தவொரு அறிகுறியையும் நசுக்கும் முயற்சியில் சுமார் 60,000 கிராமப்புற இளைஞர்களை கொலை செய்தனர்.
1994ல் குமாரதுங்க ஜனாதிபதித் தேர்தலில் வென்றபோது, ஜே.வி.பி யை மீண்டும்
சட்டரீதியானதாக்கினார். கடந்த தசாப்தத்தில் ஜே.வி.பி தலைவர்கள் பெரு வர்த்தகர்களால் உபசரிக்கப்பட்டதோடு,
தொடர்புசாதனங்களால் உத்தியோகபூர்வமான அரசியலின் ஒரு சட்ட ரீதியான பகுதியாக தூக்கிநிறுத்தப்பட்டனர்.
கட்சி அதனுடைய நிலையை மாற்றிக்கொண்டுள்ளது என்ற மாயத் தோற்றத்தை கொடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
எவ்வாறெனினும் ஜே.வி.பி அது 1980களில் இருந்த இடத்திலேயே இருக்கிறது --அது எந்த வழியிலாவது
"நாட்டைக் காக்க வேண்டும்" எனத் தீர்மானித்துள்ள ஏனைய சிங்களத் தீவிரவாதிகள் மற்றும் பெளத்த உயர்மட்டத்தினரின்
மிகவும் பிற்போக்கான பகுதியினருடன் சேர்ந்து, கடந்த வருடம் ஒரு மிகவும் ஸ்திரமற்ற பாசிச அமைப்பான தேசப்பற்று
தேசிய இயக்கத்தை ஸ்தாபித்தது.
பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் எதிர்கொண்டுள்ள சமாதானத்துக்கான
சாத்தியம், முறையான வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் போன்ற எரியும் பிரச்சினைகளுக்கு
எந்த முதலாளித்துவ எதிர் பிரிவினரிடமும் எந்தவொரு தீர்வும் கிடையாது. எனவேதான், அவர்கள் நாட்டின் அழிவுகரமான
உள்நாட்டு யுத்தத்தை உருவாக்கிய பிரிவினையான இனவாத அரசியலை பிரதிநிதித்துவம் செய்கின்றனர். அதனுடைய
சொந்தக் கொள்கையால் உருவாக்கப்பட்ட முரண்பாடுகளை தீர்க்க முற்றிலும் இலாயக்கற்றுள்ள ஆளும் வர்க்கம்,
இப்போது வெளிப்படையான சர்வாதிகார வழிமுறைகளூடாக, எல்லவற்றுக்கும் மேலாக உழைக்கும் மக்களை இலக்காகக்
கொண்டு பாராளுமன்ற ஜனநாயக பண்புகளை முழுமையாகத் தூக்கிவீசும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றது.
தற்போதைய அரசியல் சமூக நெருக்கடிகளை முன்னேற்றமான அடிப்படையில் தீர்க்கவல்ல
ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கமே ஆகும். ஆனால் அது எல்லா முதலாளித்துவ பிரிவுகளில் இருந்தும் தனது
அரசியல் சுயாதீனத்தை நிறுவி, சில செல்வந்தர்களின் இலாபத்துக்காக அன்றி, பெரும்பான்மையானவர்களின் தேவைகளையும்
அபிலாசைகளையும் நிவர்த்தி செய்யும் வகையில் சமுதாயத்தை மீளமைக்கும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில்
நகர்ப்புற, கிராமப்புற மக்களை தமக்குப் பின்னால் அணிதிரட்டல் வேண்டும்.
இதுவே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கை கிளையான சோசலிச
சமத்துவக் கட்சியும், அதன் சர்வதேச வெளியீடான உலக சோசலிச வலைத் தளமும் அபிவிருத்தி செய்யும்
வேலைத் திட்டமாகும். எல்லாவகையான பேரினவாதத்தையும் உறுதியாக எதிர்ப்பதுடன், தமிழ், சிங்கள மற்றும்
முஸ்லிம் மக்களின் ஜனநாய உரிமைகளைப் பாதுகாப்பதோடு, உள்நாட்டு யுத்தத்திற்கு எதிரான கொள்கைரீதியானதும்
உறுதியானதுமான நிலைப்பாட்டை எடுத்துள்ள ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சியும், அதன் முன்னோடியான
புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமுமே ஆகும்.
சோ.ச.க, எல்லாவகையிலான வகுப்புவாதம் மற்றும் இனவாத்தை முழுமையாக நிராகரிக்குமாறு
சகல தொழிலாளர்களுக்கும் அழைப்புவிடுகிறது. அனைவரினதும் ஜனாநயக உரிமைகளை சமரசமற்று பாதுகாப்பதுடன்,
தனது சுயாதீனமான அரசியல் வேலைத் திட்டத்தை விரிவுபடுத்துவதன் மூலம், தொழிலாள வர்க்கம் இலங்கையில்
மட்டுமன்றி பிராந்தியம் பூராவும் ஒடுக்கப்பட்ட மக்களை ஆகர்ஷிக்கும் வல்லமை மிக்கதாக முன்வருவதன் ஊடாக,
இந்திய உபகண்டத்திலும், அனைத்துலகிலும் சமுதாயத்தை சோசலிச அடிப்படையில் மாற்றியமைப்பதன் ஒரு பாகமாக,
ஸ்ரீலங்கா-ஈழம் ஐக்கிய சோசலிச குடியரசை நிறுவுவதற்கான அடிப்படையை ஸ்தாபிக்கும்.
See Also :
இலங்கையின்
அரசியலமைப்பு சதி ஜே.வி.பி யை அரசியல் முக்கியத்துவத்தை நோக்கித் தள்ளியுள்ளது
இலங்கை ஜனாதிபதி அரசாங்கத்தை
பதவிவிலக்கியதை அடுத்து மெளனம் சாதிக்கிறார்.
இலங்கை
ஜனாதிபதி அரசியல் சதியில் அரசாங்கத்தை விலக்கினார்
ஜே.வி.பி-ஸ்ரீ.ல.சு.க
கூட்டணி இலங்கையின் அரசியல் பதட்டநிலையை அதிகரிக்கச்செய்கின்றது
Top of page |