World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள் :
ஐரோப்பா :
பிரித்தானியா Butler inquiry into Iraq intelligence: Blair prepares another whitewash ஈராக் புலனாய்விடம் பட்லர் விசாரணை: பிளேயரின் மற்றொரு கண்துடைப்பு தயாரிப்பு By Chris Marsden ஈராக் விவகாரம் குறித்த மோசடியை வெளியில் கொண்டுவந்த டாக்டர் டேவிட் கெல்லியின் மரணம் குறித்த ஹட்டனின் விசாரணை முடிந்த சில நாட்களிலேயே பிரிட்டிஷ் பிரதமர் பிளேயர் தனது அரசின் தவறுகளை மறைக்கும் மற்றுமொரு கண்துடைப்பு வேலையில் இறங்கிவிட்டார். ஈராக்கிடம் பேரழிவுக்கான ஆயுதங்கள் இருக்கின்றன என்று பொய் கூறி ஏமாற்றி பிளேயர் அரசாங்கம் எந்த தவறும் செய்யவில்லை, என்று தப்பிக்க வைத்த ஹட்டன் பிரபுவின் விசாரணை பரவலான எதிர்ப்பையும், வெறுப்பையும் எதிர் கொண்டுள்ளது. ஹட்டன், பிளேயரும் பாதுகாப்புதுறையினரும் ஈராக் தொடர்பாக தங்களுக்கென கிடைத்த தகவல்களின்படி அவற்றை நம்பிச் செயல்பட்டார்கள் என விசாரணையின் முடிவில் தெரிவித்து இருந்தார். மற்றும் ஆனால் கிடைத்த உளவுதகவல்கள் எவ்வகையானவை என்பது பற்றியும் மற்றும் இதைத்தொடர்ந்து இந்த தகவல் நிரூபிக்க முடியாமல் போனநிலைமை ஆகியவை தனது விசாரணை வரம்புக்குட்பட்டதல்ல என்றார். புஷ் நிர்வாகம் தங்களது புலனாய்வுத் துறையின் தோல்வி குறித்து விசாரணைக்குழு அமைக்கப்போவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்காவிட்டால் விஷயம் இத்தோடு முடிந்துவிட்டிருக்கும். ஏமாற்றுகரமான அடித்தளத்தில் ஈராக்கிற்கு எதிரான யுத்தத்திற்கு சென்றமை தொடர்பான எவ்விதமான விவாதத்திற்கும் ஹட்டனின் விசாரணை ''முற்றுப்புள்ளி'' வைத்துவிட்டது என்ற தனது கடுமையான நிலைப்பாட்டை பிளேயரால் தொடர்ந்து பாதுகாக்கமுடியாது. ஈராக்கின் பேரழிவுக்கான ஆயுதங்கள் தொடர்பான சாட்சியங்களுடன் அமெரிக்காவின் ஈராக் கண்காணிப்புக் குழுவின் (US Iraq Survey Group) முடிவுகளுக்காக உலகம் காத்திருக்க வேண்டும் என்று இதுவரையில் பிளேயர் வலியுறுத்திக்கூறிக்கொண்டிருந்தார். ஆனால் இந்தக் குழுவின் தலைவர் டேவிட் கே (David Kay) தன் பதவியை இராஜிநாமா செய்தது மட்டுமில்லாமல் ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகத் தாம் நம்பவில்லை என்பதையும் ஒப்புக்கொண்டதுடன் அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் டபுள்யூ புஷ் வேறுவழியில்லாமல் இது குறித்து நீதிவிசாரணை அறிவிக்க வேண்டிய கட்டாயத்துக்குள்ளானார். பிளேயரும் அவரைத் தொடர்ந்து அதேபோல செய்ய வேண்டியதாயிற்று. பிரதம மந்திரியும் புஷ்ஷை போலவே வெளிப்படையான போலித்தனம் மிகுந்த ஒரு அடிப்படை கருத்தை மையப்படுத்தி, அதாவது உலகிலேயே நீண்டகால பரந்த அனுபவங்கள் உள்ள M16- மற்றும் சி.ஐ.ஏ ஆகிய இரு புலனாய்வு நிறுவனங்களும், தங்களது புலனாய்வு விஷயங்களில் தவறு செய்துவிட்டனவா? என்பதைத்தான் விசாரிக்க அழைப்புவிட்டுள்ளார்கள். இரு தலைவர்களும் ஒப்புகொள்ள மறுக்கும் உண்மை என்னவென்றால் புலனாய்வுத்துறைகள் பொய் சொல்லியிருக்க வேண்டும் அல்லது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டபடி யுத்தம் ஆரம்பிப்பதற்கு தேர்ந்தெடுத்த தகவல்களை மட்டும் வழங்கி வந்திருக்கிறார்கள் என்பதுதான். பிளேயரின் தற்போதைய விசாரணை, ஹட்டனால் செய்யப்பட்ட விசாரணையை வெளிப்படையான ஜனநாயக நெறிகளுக்கு இயைந்த ஒரு உதாரணமாக விசாரணைகள் என்ற பெயரைக்ககூட பெற்றுத்தந்து விடும் போலிருக்கின்றது. பட்லரின் இந்த விசாரணையின் நடவடிக்கைகள் முழுவதும் இரகசியமாகவே நடக்கவிருப்பதுடன், இந்த முடிவுகள் குறித்த நியாயமான, முறையான விவாதங்களை தவிர்த்துக்கொள்வதற்காக பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிவதற்கு சற்று முன்னதாக ஜூலை மாத இறுதியில்தான் அது தன் முடிவுகளை வெளியிடும். இது மட்டுமல்ல குழு முக்கிய இரகசிய புலனாய்வுத் தகவல்களை எதையும் வெளியே தெரிவிக்காது. எந்த மாதிரியான விசாரணை நடந்தது என்பதும், விசாரணைக்குழுவின் முடிவுகள் எவ்வாறு அடையப்பெற்றது என்பதும் எவருக்கும் தெரியப்போவதில்லை. ஈராக்குடனான யுத்தத்திற்கு சென்றது தொடர்பான அரசியல் அடிப்படையிலான முடிவு பற்றிய விவாதம் எதுவும் தேவையில்லை என்று பிளேயர் பாராளுமன்றத்தில் உறுதியாக அறிவித்திருக்கிறார். ''போரில் ஈடுபட்டது சரியா, தவறா என்பது பற்றிய நீதி விசாரணை நடத்த வேண்டும் என்ற முடிவிற்கு நாம் வரமுடியாது. அதைப்பற்றி நாம்தான் முடிவு செய்ய வேண்டும். நாங்கள் அரசியல் வாதிகள். மேலும் அரசைப் பற்றி எந்த விமர்சனமும் தேவையில்லை. புலனாய்வுத்துறையின் தோல்விகள் குறித்துதான் விசாரணைக் குழு இருக்கப்போகிறது என்று கூறினார். பிளேயர், ''நன்னம்பிக்கையின் பேரில்தான் செயல்பட்டோம் என்பது ஹட்டன் விசாரணை முடிவு மூலம் நிரூபணம் ஆகியிருக்கிறது'' என்று அறிவித்தார். இந்த விசாரணைக்குழு விசாரிக்கப்போவது பற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருப்பது பின்வருவனவாகும்: * பேரழிவு ஆயுத திட்டங்களை வைத்திருக்கும் நாடுகள் தொடர்பாக கிடைத்துள்ள தகவல்களை விசாரிப்பதும், பூகோள ரீதியில் இம்மாதிரியான ஆயுதங்களின் வர்த்தகம், மேற்படி நாடுகளின் இது குறித்த வேலைதிட்டங்கள். * இதன் ஒரு பகுதியாக மார்ச் 2003ம் ஆண்டு வரையிலான புலனாய்வுத் தகவல்களின் துல்லியத்தன்மையை ஆய்வு செய்வது; மற்றும் புலனாய்வுத் துறையினரின் தகவல்களைத் திரட்டுவதிலோ, மதிப்பீடு செய்வதிலோ, யுத்தத்திற்கு செல்வதற்கு முன்பு அவற்றை ஆராய்வதிலோ ஏதேனும் குறைபாடுகள் இருந்தனவா என்பதை ஆராய்வது. இத் தகவல்களுக்கும் யுத்தம் முடிந்த ஈராக் கண்காணிப்புக் குழு கண்டறிந்த தகவல்களுக்குமிடையே இருந்த மாறுபாடுகள் ஆகியவற்றைக் குறித்து ஆராய்வது. * பிரச்சனைக்குரிய நாடுகளில் இயங்குவது தொடர்பான கடினங்களின் மத்தியில், பேரழிவு ஆயுதங்கள் தொடர்பான எதிர்கால புலனாய்விற்கு தகவல்களை எப்படித் திரட்டு, மதிப்பீடு செய்து பிரதமருக்கு அவை தொடர்பாக பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வகையான முறைகளில் குறைந்த பட்சம் ஒரு புது பிரச்சனை கிளம்பிவிடப்பட்டிருக்கிறது. இராணுவ ஆக்கிரமிப்பு செய்ய சாத்தியமான பட்டியலில், புஷ் அறிவித்த ''தீய அச்சில்'' ஈராக் தான் முதலாவதாக இருக்கின்றது. பேரழிவு ஆயுதங்கள் சம்பந்தமாக ''பிரச்சனைக்குரிய ஏனையநாடுகள்'' பற்றிய புலனாய்வுத் தகவல்கள் குறித்தும் குழு ஆராய வேண்டும் என்று கூறியிருப்பது, அரசாங்க தரப்பிற்கு ஈராக் மட்டும்தான் எதிர்காலத்தில் அரசியல் குற்றங்கள் புரியும் என்பதை உறுதிப்படுத்துகின்றது. இந்த அநியாயமான செய்கைக்கு ஒரு தெளிவான எடுத்துக்காட்டாக, இந்தக் குழு ஐந்து அரசியல்வாதிகள், மற்றும் உள்நாட்டு சேவை அதிகாரிகள் ஆகியோரை உள்ளடக்கி இருக்கும். இவர்கள் அனைவரும் பிரிட்டிஷ் இராணியின் ஆலோசனைக் குழுவில் இடம்பெறுவது, எந்த அளவுக்கு அரசின் ஆட்சியின் நம்பிக்கையை பெற்றவர்கள் என்பதை காட்டுகின்றது. குழுவின் தலைவர் பதவி புரோக்வெல் பட்லர் பிரபுவால் (Lord Butler) நிரப்பப்படும். இவர் இராணியிடமிருந்து சிறந்த சேவைக்கான 'சேர்' பட்டம் பெற்றவர். இரண்டு பிரதமருக்கும் தனிச் செயலராகவும், இப்போது இருக்கும் பிளேயர் உட்பட ஐந்து பிரதம மந்திரிகளின் காலத்தில் மந்திரிசபை செயலாளராக, அதாவது உள்நாட்டு சேவையின் தலைமைப் பதவியில் பணியாற்றியவர். 1998ல் அவர் ஓய்வுபெறும்வரை பிளேயரிடம் மேற்படி பதவியில் இருந்தார். அவருடன் 1994-1997 வரை பாதுகாப்புத்துறையின் தலைவராக இருந்த இங்கி பிரபு (Lord Inge) உம், பொதுப்புலனாய்வு மற்றும் பாதுகாப்புக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆன் டெய்லரும் (Ann Taylor), பொதுப்புலனாய்வு மற்றும் பாதுகாப்புக் குழுவின் தலைவரும், வட அயர்லாந்து தேர்வுக்குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய மைக்கல் மேட்ஸ் (Michael Mates) ஆகியோர் இக்குழுவில் இடம் பெறுகின்றனர். பொதுப்புலனாய்வு மற்றும் பாதுகாப்புக் குழுவின் அங்கத்தினர்கள் பிளேயருக்கு எந்த தொந்தரவும் கொடுக்கப் போவதில்லை. ஏனென்றால் பேரழிவு ஆயுதங்கள் தொடர்பான அதிகார மட்டத்திலான பொய்களில் இவர்கள் கழுத்துவரை சிக்கியுள்ளார்கள். பொதுப்புலனாய்வு மற்றும் பாதுகாப்புக் குழுவினால் விசாரிக்கப்பட்ட அடுத்த நாளான ஜூலை 17 இல் டேவிட் கெல்லி மரணம் அடைந்தார். அந்த விசாரணை அடிப்படையில் வெளியிடப்பட்ட செப்டம்பர் அறிக்கைதான் அரசு வேண்டுமென்றே புலனாய்வுத் தகவல்களைத் திரித்துக்கூறி ஈராக் யுத்ததிற்கு வழி கோலியது என்பதை எடுத்துக்காட்டியது. அத்துடன் ஈராக் பேரழிவு ஆயுதங்களை 45 நிமிடத்தில் போருக்கான தயாரிப்பில் வைக்க முடியும் என்ற தகவலை அதில் இணைத்ததையும் சரியென வாதாடியது. அதுமட்டுமில்லாமல் கிடைத்த புலனாய்வுத்துறையினரின் தகவல்கள் ஒரே ஒருவரிடம் பெறப்பட்டதாலும், இந்த தகவல் மிகுந்த அனுபவமும், மதிக்கத்தக்க திறமைகளும் உடைய புலனாய்வு ஏஜண்டுகள் மூலமாகப் பெறப்பட்டதாகவும் அதனால் அதை உதறித்தள்ளி விட முடியாது என்றும் தெரிவித்தது. ஆபிரிக்காவின் யுரேனியத்தை ஈராக் வாங்கியது என்ற பொய் குற்றச்சாட்டையும் தொடர்ந்து பாதுகாத்தது. பொதுப்புலனாய்வு மற்றும் பாதுகாப்புக் குழு 12 வருடத்திற்கு முந்திய அமெரிக்காவிலுள்ள மாணவனின் ஆராய்ச்சிக் கட்டுரையிலிருந்து திருடப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அமைந்த 2003 பெப்ரவரி ஆவணத்தில் இருந்த ''ஈராக்கினுள் ஆயுதங்கள் மறைப்பதற்கன கட்டமைப்பு ....புலனாய்வுத்துறையினரின் மேலதிக தகவல்'' என்ற ஆவணத்தையும் பொதுப்புலனாய்வு மற்றும் பாதுகாப்புக் குழு சரியாதுதான் என்று வாதிட்டது. அரசின் தவறுகள் குறித்து விசாரிப்பதில் பட்லர் செயல்பட்ட விதம் நியாயமாக விசாரிப்பவர் என்பதற்கான உதாரணமாக கொள்ளவே முடியாது. ஒருவேளை அவரது இந்த தன்மை தான் மறுபடியும் இன்னுமொரு விசாரணைக்கு தலைமை தாங்க அவர் அழைக்கப்பட்டிருப்பது காரணமாக இருக்கலாம். 1994ல் அப்போது பட்லர் வெறும் சேர் ரொபினாக (Sir Robin) இருந்தார். Jonathan Aitken என்கிற பழமைவாத ஆட்சியில் ஆயுதங்களுக்கான மந்திரியாக இருந்தவர் மீதான குற்றச்சாட்டிலிருந்து தப்புவித்தார். Guardian பத்திரிகையில் வெளியான தகவல்களின் படி Aitken, சவுதி அரசு குடும்பத்தாரிடமிருந்து இலஞ்சம் பெற்றுக்கொண்டதாக தகவல் வெளியானது. இது குறித்து Guardian பத்திரிகையின் ஆசிரியர் பீட்டர் ப்ரெஸ்டன் முறைப்படி மேற்படி தகவல் குறித்து புகார் செய்தார். இதற்கான பதிலில் பட்லர் தெரிவித்த 'புகழ்பெற்ற' குறிப்பு, இந்த பிரச்சனையின் அடிப்படையே ''அவரது சொல்லுக்கு எதிரான உங்களுடைய வார்த்தைகள்'' மட்டுமே என்று இருந்தது. இது மட்டுமின்றி இரகசியமாக வைக்கப்பட வேண்டிய கார்டியன் பத்திரிகையின் கடிதத்தை பட்லர் Aitken மே காண்பித்தார். இதே மாதிரியான ஒரு சேவையை இன்னொரு கன்சர்வேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான Neil Hamilton, ஹர்ராட்ஸ் நிறுவனங்களின் சொந்தக்காரர் Mohammed Al-Fayed இடமிருந்து இலஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டிலிருந்து தப்பிவித்தார். இவற்றையெல்லாம் விட மிகப்பெரிய அளவில் அவர் செய்திருக்கும் பணி 1992-1995ல் பிரிட்டன் இரகசியமாக ஈராக்கிற்கு ஆயுத விநியோகம் செய்தது தொடர்பான நீதி விசாரணை நீதிபதி சேர் ரிச்சார்ட் ஸ்கொட் (Sir Richard Scott) தலைமையில் நடைபெற்றபோது இதே பட்லர் அரசின் ஏமாற்று வேலையை ஆணித்தரமாக ஆதரித்து வாதம் செய்தார். ஸ்கொட்டின் விசாரணையானது அரசாங்கத்தின் பொய்மையையும் சதாம் ஹூசைனுக்கு எதிராக போலித்தனமான ஆத்திரக் கூச்சலும், அதைத் தொடர்ந்து 1991 இலும் மற்றும் தற்போதைய ஈராக் யுத்தத்தில் ஈடுபட்டதும் வெளிப்படுத்தப்பட்டது. இந்த விசாரணையானது மூன்று மாட்ரிக்ஸ் சேர்ச்சில் (Matrix Churchill) தொழிலதிபர்கள் மீதான வழக்கான ஈராக் பாரம்பரிய மற்றும் இரசாயன ஆட்டிலறி செல்களை தயாரிக்ககூடிய கம்ப்யூட்டர் மூலம் இயக்கப்படும் கடைசல் இயந்திரங்கள் (Lathes) விற்கப்பட்ட வழக்கு தோல்வியில் முடிந்ததால் ஏற்பட்ட விசாரணைக்குழுதான் ஸ்கொட் கமிஷன். அக்குழு மேற்படி சேர்ச்சில் தொழிலதிபர்கள் ஈராக்கிற்கான இந்த விற்பனை பேரம், மார்க்கரெட் தாட்சரின் அரசுக்கும் இரகசிய சேவையினருக்கும் தெரிந்தே நடந்தது என்பதை கண்டுபிடித்தது. 1980 மற்றும் 1990 களின் இடைப்பட்ட காலத்தில் பிரிட்டன் ஈராக்கிற்கு பல மில்லியன் பவுண்டகள் மதிப்புள்ள இரசாயன மற்றும் அணு ஆயுதங்கள் தயாரிப்பிற்குத் தேவைப்படும் பல பொருட்களை விற்று வந்திருக்கிறது. இதனுடன் பாரம்பரிய ஆயுத தளவாடங்களையும் சேர்த்தே விற்றிருக்கிறது. வைட் ஹாலில் இரகசியம் என்ற அடிப்டையில் உண்மைகள் அணுகப்படும் விதம் வெளிப்படும் விதத்தை ஸ்கொட் தெரிவித்து இருந்ததாவது, ''உங்களுக்கு எது நல்லது என்பது எங்களுக்குத் தெரியும்; உங்களுக்கு உண்மை தெரியவந்தால் அது உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம்; நீங்கள் எதிர்க்கலாம், ஆனால் மிகச்சரியானது என்பது எங்களுக்கு மட்டுமே தெரியும்''. இந்த விசாரணையின் போது மேற்குறிப்பிட்ட விஷயத்தை மெய்பிக்கிற பல அறிக்கைகளை சாட்சியங்களை விசாரணைக்குழு பதிவு செய்தது. பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த இயான் மக்டொனால்ட் தெரிவித்ததாவது, ''உண்மை என்பது மிகக் கடினமான கருத்தாக்கமாகும்'' ஆனால் அரசு ரீதியிலான பொய்மைக்கு வக்காலத்து வாங்குவதிலும் நியாயம் என்று வாதாடும் முறையிலும் பட்லரைப்போல யாரும் இருந்ததில்லை. 1996ல் அவரது சாட்சியத்தின்போது செய்தித்துறையினரை ''நமது அரசாங்க அமைப்பை'' ஒருதலைப்பட்சமான, திரித்தும் வெளியிடப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் மூலம் கேவலப்படுத்துகிறார்கள்'' என்று கடுமையாக தாக்கிப் பேசினார். இன்றும் சில சந்தர்பங்களில் அவர் கூறும்போது ''தகவல்களை மிகக் கவனமாகக் கையாள வேண்டும்.... அது மக்களை தவறாக நடத்த அனுமதிக்கக்கூடாது. நீங்கள் முழுத் தகவலையும் வழங்கத் தேவையில்லை'' என்றார். ''பாதி மட்டுமே தெரியும் காட்சியும் துல்லியமானதாகவும் இருக்க முடியும்'' என்று கூறி முடித்தார். இதுபோன்ற அதிகாரபூர்வ விசாரணைகளின் உண்மையான நோக்கம் பற்றி யாருக்காவது எள்ளளவாவது சந்தேகமிருந்தால் ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்திக் கொண்டாலே போதும். ஸ்கொட் அவர்களின் நியாயமான விசாரணை முடிவுகளை அடுத்து எவரும் இராஜிநாமா செய்யவில்லை அதுமட்டுமின்றி பட்லர் விசாரணைக்கான மாதிரியாக ஆர்ஜண்டினாவின் மால்வியன்/பாக்லாந்து மீது படையெடுத்தது பற்றி நடந்த 1982ல் லோர்ட் பிராங்கஸ் (Lord Franks) இன் விசாரணையை எடுத்துக் கூறப்பட்டிருக்கிறது. பிராங்க்ஸ் புலனாய்வுத்துறை மற்றும் வெளிவிவகாரத்துறையின் தோல்வி என்பதெல்லாம் ஒப்புக்கொள்ளத்தக்கதல்ல என்று தாட்சரின் அரசை விடுவித்தார். அத்துடன் Galtieri அரசாங்கத்தை அது விரும்புகிறார்போல தீவுகளின் மேல் படையெடுக்கலாம் என்று நம்பவைத்ததுடன், ஆர்ஜண்டினா அத்தீவுகளின் மேல் படையெடுக்கப்போவது பற்றி புலனாய்வுத்துறைக்கு ஏதும் தெரியாமல் இருந்தது ஆகியவை தவறுகள் அல்ல என்று பிராங்க்ஸ் தீர்ப்பில் கூறியிருகிறார். பட்லர் விசாரணை எந்த அளவுக்கு மோசடியானது என்பது, தாராளவாத ஜனநாயக கட்சியினர், ''அதனுடன் தங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் èறைப்பட்டுக்கொள்ளப் போவதில்லை'' என்று முடிவெடுத்ததன் மூலம் தெரியவந்துள்ளது. ஈராக்குடன் யுத்தம் புரிவதற்கான அரசியல் முடிவு குறித்து விசாரணை செய்யப்போவதில்லை என்ற அறிவிப்பை அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கு நேர்மாறாக சமீபத்தில் பிளேயருக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை அரசியல் ரீதியாக தமக்கு சாதகமாக உபயோகிக்க பலவீனமான ஒரு முயற்சி செய்த யுத்தத்திற்கு ஆதரவான பழமைவாத கட்சியினர் இந்த விசாரணைக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்கள் தொழிற்கட்சியுடன் ஒன்றுசேர்ந்து ஒரு ஐக்கிய முன்னணிபோல் ஒன்றுபட்டு இருப்பதாகக் காட்டிக்கொள்வதன் மூலம் ஈராக் யுத்தத்தினுள் தேவையற்ற முறையில் பிரிட்டனை இழுத்துவிட்டதற்காக எழுந்துள்ள யுத்த எதிர்ப்புக்களும் பொதுமக்களின் ஆத்திரமும் தங்களை பாதிக்காதவாறு பார்த்துக்கொள்ள முயற்சி செய்கின்றனர். |