World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

Sudan: Khartoum escalates civil war offensive

சூடான்: கார்ட்டோம் உள்நாட்டுப்போர் தாக்குதலை முடுக்கி விடுகின்றது

By Brian Smith
16 February 2004

Back to screen version

நாட்டின் மேற்கத்திய மாகாணங்களில் சூடான் அரசாங்கம் தனது தாக்குதல் நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கிறது. கார்ட்டூம் ஆட்சி ''ஒரு உள்ளூர் பாதுகாப்பு பிரச்சனையென்று'' வர்ணிக்கும் நடவடிக்கைகளில் குடிப்படைக் குழுக்கள், அரசாங்க துருப்புக்கள் மற்றும் போர் விமானங்கள் ஆதரவோடு டர்புரில் உள்ள கிராமங்களில் குண்டுவீசி தாக்கி மக்களை பயமுறுத்தி அந்த மண்ணிலிருந்து அவர்களை விரட்டிக் கொண்டிருக்கின்றது.

ஆயிரக்கணக்கான மக்கள் மாண்டுவிட்டார்கள். 10-லட்சம் பேர்வரை இந்த சண்டையினால் உள்நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்ந்து சிதறிவிட்டனர். 1,20,000-க்கு மேற்பட்ட மக்கள் எல்லையைக்கடந்து பக்கத்திலுள்ள சாட் எல்லைக்குள் புகுந்திருக்கின்றனர், சண்டையிலிருந்து தப்பிப்பதற்காக, டர்புர் மண்டலத்தோடு மொழி மற்றும் கலாச்சார தொடர்புகளுள்ள பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்றுவிட்டனர். அங்குள்ள அகதிகள் முகாம்கள் நிரம்பி வழிகின்றன மற்றும் நிதி உதவி முகவாண்மைகள் கடுமையான நெருக்கடி ஏற்பட்டு வருவதாக அச்சம் தெரிவித்துள்ளன.

பாதுகாப்பு காரணங்களுக்காக எல்லைப்பகுதிகளிலிருந்து அகதிகளை ஐ.நா. அப்புறப்படுத்த தொடங்கியுள்ளது. அகதிகளில் 40-சதவீதம் பேர் குழந்தைகளென்றும், பருவமடைந்தவர்களில் 75 சதவீதம் பேர் பெண்களென்றும் மதிப்பிடப்பட்டிருக்கிறது. உலக உணவு வேலைதிட்ட அதிகாரியான கிஸ்டியானா பென்டியாமி (Christiane Benthiaume) "மனிதநேய நெருக்கடியின் அனைத்து அம்சங்களுமே நிலவுவதாக குறிப்பிட்டுள்ளார் -உடனடியாக உதவிகள் கிடைக்கவில்லை, தேவையான உணவு அல்லது குடிதண்ணீர் கிடைக்கவில்லை மிகுந்த அதிர்ச்சியூட்டும் வகையில் அமைந்திருக்கிறதென்று'' கருத்து தெரிவித்துள்ளார்.

சூடானின் டர்புர் மண்டலம் அராபிய மற்றும் கருப்பர் இன ஆபிரிக்காவையும், பிரிக்கின்ற பகுதியில் அமைந்திருக்கிறது. இந்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பாரம்பரியமாகவே ஆடு, மாடுகளை மேய்ப்பவர்களாகவே பணியாற்றி வருகின்ற காரணத்தினால் நிலத்திற்கும் அதன் வளங்களுக்கும் நீண்டகாலமாக தகராறுகள் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. புதிய மேய்ச்சல் நிலத்தை தேடுகின்ற பொது இனத்தகராறுகள் ஏற்படுவது வாடிக்கையாகும். அரபு குடிப்படைக் குழுவான Janjaweed அமைப்பை சூடான் அரசாங்கம், சூடான் விடுதலை இராணுவத்திற்கு (SLA) மற்றும் நீதி மற்றும் சமத்துவ இயக்கம் (JEM) ஆகியவற்றிற்கு எதிராக நடத்திவரும் போரில் பயன்படுத்தி வருகிறது. டார்புர் மக்களுக்கு எதிராக Janjaweed போராளிகள் நடத்தி வந்த தாக்குதல்களுக்கு எதிராக மேற்கண்ட இரு அமைப்புக்களும் உருவாக்கப்பட்டன.

SLA- விற்கும் JEM- மிற்கும் எதிராக சண்டை புரிவதாக வெளிப்படையாக காட்டிக்கொண்டாலும், பல்வேறு அறிக்கையின்படி கார்டோம் அரசாங்கம் திட்டமிட்டு குடிமக்கள் மீது குண்டு தாக்குதல் பிரச்சாரம் நடத்தி வருகிறது. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட்டுவந்த தாக்குதல்களை இப்போது ஒரு நாளக்கு 15 முதல் 25 கிராமங்கள் வரை நடைபெற்றுவருகின்றன. Janjaweed போராளிகளுக்கு பெரும்பாலும் சூறையாடப்படும் பொருட்களில் பங்களிக்கப்படுகிறது, நிலங்களைத் திருடிக்கொள்கிறார்கள். கால்நடைகளைக் கைப்பற்றிக்கொண்டு கிராமங்களை தீவைத்துக் கொளுத்தி தரைமட்டமாக்கி விடுகிறார்கள். இந்தத் தாக்குதல் இனஅழிப்பு போன்று காணப்படுவதாக சர்வதேச பொதுமன்னிப்பு அமைப்பு கவலை தெரிவித்திருக்கிறது.

தப்பி ஓடிக்கொண்டிருப்பவர்களை அரசாங்கப்படைகள் எல்லைவரை விரட்டிச்சென்று அதற்கப்பால் விட்டுவிட்டுத் திரும்புகின்றன. எல்லையைக்கடந்து விட்டவர்களைக்கூட சூடான் விமானப்படைகள் குண்டுவீசி தாக்கி வருவதாக பல்வேறு செய்திகள் வந்திருக்கின்றன. சாட் நாட்டு எல்லைக்குள்ளேயும் ''குண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன.'' சூடான் இராணுவம் அண்மையில் எல்லைப்பகுதியிலுள்ள டின் நகரத்தை பிடித்துக்கொண்டது. சாட் நாட்டு ஜனாதிபதி இதிரிஸ் தேபி தன்னுடைய பக்கத்து நாடான பிரமாண்டமான சூடான் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்காமல் மிதமாகவே பரபரப்பில்லாமல் கருத்து தெரிவித்துள்ளார். சூடான் நெருக்கடியைத் தீர்த்துவைப்பதில் சமரசம் செய்துவைக்கின்ற நடுவராக தனது பங்களிப்பை மீண்டும் தருவதற்கு அவர் விரும்புகிறார்.

டின் நகரத்தின் சூடான் பகுதியை கிளர்ச்சி படைகளிடமிருந்து பிடித்துக்கொண்டதை அரசாங்க வானொலி சூடான் மக்களுக்கு இராணுவம் தந்திருக்கிற Eid al-Adha பரிசு என்று வர்ணித்திருக்கிறது.

சூடானுக்கு தென் பகுதியில் தற்போது சமசரப்பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அரசாங்க நிர்வாகத்திற்கிடையிலான அபிவிருத்தி அமைப்பு (IGAD) இந்த பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. சூடான் மக்கள் விடுதலை இராணுவத்திற்கும் (SPLA) அரசாங்கத்திற்குமிடையே சமாதான உடன்படிக்கையை இறுதியாக்குவதற்கும் செல்வத்தை பகிர்ந்து கொள்வதற்கான உடன்பாடு காண்பதற்காகவும் இந்த பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அரசாங்க தலைமை சமரச பேச்சுவார்த்தை அதிகாரி மெக்காவிற்கு ஹஜ் பயணம் மேற்கொண்டதால் ஜனவரி 26-ல் இருந்து பெப்ரவரி 17-வரை பேச்சு வார்தைகள் தள்ளிவைக்கப்பட்டன.

பெரும்பாலும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்களின் செல்வாக்கினால்தான் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன, அந்நாடுகளில் உள்ள அரசாங்கங்கள் தம்மை சூடானின் மிகப்பெரும் எண்ணெய்வளத்தை பயன்படுத்திக் கொள்ள விரும்பும் பெரிய கம்பெனிகள் நிர்பந்தம் கொடுத்து வருகின்றன.

தெற்கு எல்லைப்பகுதி மண்டலமான Upper Nile பகுதியில் மீண்டும் மோதல்கள் ஏற்பட்டதால் பேச்சுவார்த்தகைள் ஓரளவிற்கு ஆபத்திற்குள்ளாயின அந்த மோதல்களில் 50-பேர் மாண்டதாக தகவல் வந்திருக்கின்றன. சமரச பேச்சுவார்த்தையில் சேர்க்கப்படவேண்டிய மீதமுள்ள பிரச்சனைகளில் கார்ட்டோமில் ஷரியத் சட்டம் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா என்பது குறித்தும் அமைச்சரவை பதவிகள் ஒதுக்கீடு மற்றும் Upper Nile பகுதி உட்பட மூன்று எல்லை மண்டலங்களில் மக்கள் அடர்த்தி எந்தளவிற்கு இருக்க வேண்டும் என்பதும் அடங்கும். சமாதான உடன்படிக்கை உருவான பின்னர் கணிசமான அளவிற்கு ஐ.நா-வின் அமைதிகாப்புப்படை சூடானில் அமைதியை நிலை நாட்டுவதற்கும் எண்ணெய் கம்பெனிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் பணியாற்றும்.

சூடானுக்கு மேற்கு பகுதியில் தற்போது நடைபெற்று வருகின்ற சண்டைகள் பகுதி அளவில் ஏறத்தாழ தெற்குப்பகுதியின் பேச்சுவார்த்தைகளில் பூர்த்தியாகிவிட்ட உடன்படிக்கையின் தாக்கமாகும். SLA மற்றும் JEM ஆகிய இரண்டு அமைப்புக்களுமே SPLA-வுடன் உருவாகும் அதேமாதிரியான பேரத்தில் -செல்வத்தை பகிர்ந்து கொள்வது மற்றும் கார்டோமுடன் சுயாட்சி பகிர்வு பற்றிய கலைந்துரையாடல்- தங்களை ஈடுபடுத்திக்கொள்ள விரும்புகின்றன. சண்டை நிறுத்தப் பேச்சுவார்த்தைகளை சர்வதேச மத்தியஸ்தத்துடன் புதுப்பிக்க இரண்டும் விரும்புகின்றன. குறிப்பாக சுயாட்சி பிரச்சனையில் அரசாங்கம் பேச்சு வார்த்தை நடத்த மறுத்துக்கொண்டு வருகிறது.

தெற்கு சூடானில் 35 குடிப்படை இராணுவக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த ஒவ்வொரு அமைப்பும் தனக்குரிய பங்கு கிடைக்கவேண்டுமென்று விரும்புகின்றன. இல்லையென்றால் சமாதானமே விரும்பத்தகாத நோக்கமென்று கருதுகின்றன. அந்தக்குழுக்கள் தங்களுக்கு சாதகமான நிலைப்பாடுகளையே விரும்புகின்றன. JEM-யைச்சேர்ந்த அபுபெக்கர் ஹமீத் நூர், ''சூடானில் விளிம்பு நிலையிலுள்ள பகுதிகளை விட்டுவிட்டு தென்பகுதியோடு சமாதானம் செய்துகொள்வோமானால் அமைதி திரும்பாது'' என்று எச்சரித்திருக்கிறார்.

சர்வதேச நெருக்கடி தொடர்பான குழுவின் அதிகாரியான டேவிட் மோசர்ஸ்கி, சர்வதேச சமூகம் தலையிட்டு தடுத்து நிறுத்தினால் தவிர, "டார்புர் இன அழிப்பு பயங்கரத்தில் மேலும் மூழ்கிவிடும் ஆபத்து ஏற்படக்கூடும்'' என்று எச்சரித்திருக்கிறார். அவர் கார்டோம் மேற்கு சூடானில் தாக்குதல் நடத்த தேர்ந்தெடுத்திருக்கும் நேரத்தை சுட்டிக்காட்டியுள்ளார். SPLA-உடன் தென்பகுதியில் உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திடுவதற்கு முன் மேற்குப்பகுயில் தோன்றியுள்ள எதிர்ப்பை நசுக்குவதற்கு அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள தென்பகுதி சமாதான பேரத்தின் சட்டப்பாதுகாப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள பார்க்கிறது என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

''டார்புரில் கிளர்ச்சியை நசுக்குவதற்கு அரசாங்கம் முயன்று வருகிறது'' என்று மோஜர்ஸ்கி கூறினார். "IGAD- மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு முன்னர் அல்லது குறைந்த பட்சம் IGAD- வுடன் சமாதானம் உருவாகும் முன்னர் அந்த கிளர்ச்சியை நசுக்கி விட அரசாங்கம் விரும்புகிறது. சர்வதேச சமுதாயத்தின் முக்கிய நடிகர்களான அமெரிக்கா, பிரிட்டன் முதலிய நாடுகள் அரசாங்கத்திற்கு டார்புர் தொடர்பாக மிதமிஞ்சிய நெருக்கடிகளை கொடுப்பதற்கு விரும்பாமல் கவலையோடு இருக்கின்றன, அப்படி அளவிற்கு அதிகமான நெருக்கடி கொடுத்தால் நிலவரம் தலைகீழாக மாறிவிடும் என்று அஞ்சுகின்றன'' என்றும் கூறியுள்ளார்.

தென்பகுதி சமாதான பேரத்தை ''அப்படியே மேற்குப்பகுதிக்கும் மாற்றிவிட முடியுமென்று'' SLA- யை அமெரிக்கா உற்சாகப்படுத்தி வருகிறது. ஆனால் சூடான் வெளியுறவு அமைச்சர் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.

அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் சூடான் முன்னுரிமையை பெற்று வருகிறது. புதிய சூடானில் புஷ் நிர்வாகம் தனது ஆதரவாளரான SPLA- தலைவர் ஜோன் கராங்கை துணை ஜனாதிபதியாக ஆக்குவதற்கு திட்டமிட்டிருக்கிறது. ''கராங்களை சூடான் துணை ஜனாதிபதியாக நியமிப்பது சூடான் எண்ணெய் வளத்தை எப்படிப் பகிர்ந்து கொள்வது என்பதில் உருவாக்கப்பட்டுள்ள ஏற்பாட்டின் ஒரு பகுதியாகும்'' என்று DEBKAfile கூறியிருக்கிறது.

சூடான் ஜனாதிபதிக்கும் அமெரிக்காவிற்கும் இடையே உள்ளதாக கருதப்படும் இரகசிய நிபந்தனையொன்று கராங்கிற்கு தெரியுமென்று நம்பப்படுகிறது. சூடானில் ஷரியாவை அராசாங்க மற்றும் அரசியலமைப்பிலிருந்து நீக்கிவிடுவது என்பதுதான். அந்த இரகசிய நிபந்தனை இது ஒரு தீவிர முஸ்லீம் நாட்டை மதச்சார்பற்ற ஜனநாயகமாக மாற்றுவதற்கு அமெரிக்கா மேற்கொண்டுள்ள முயற்சி என்று ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்க மத வலதுசாரிகள் நீட்டிமுழக்கி வாக்குகளை பெறுவதற்கு பயன்படுத்திக்கொள்ளப் போகிறார்கள் என்று DEBKAfile கருதுகிறது. புஷ் நிர்வாகம் ஆபிரிக்க விவகாரங்களில் அக்கறை செலுத்துவது, அமெரிக்க குடிமக்களாகவுள்ள ஆபிரிக்க இனத்தவர்களின் வாக்குகளை பெறுவதற்காகவும் ஆகும்.

ஈராக் தொடர்பாக புஷ் நிர்வாகம் மேற்கொண்டுள்ள வெளிநாட்டுக்கொள்கை அம்பலத்திற்கு வரும்போது, நவம்பரில் நடக்கும் ஜனாதிபதி தேர்தலில் வெளிநாடுகளில் அமெரிக்கா பெற்றுள்ள வெற்றி கதைகளை பறைசாற்றுவதற்காகவும் சூடானில் சமரசத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். புஷ் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுவதற்கு முன்னர் சூடான் சமரசபேரத்தை அறிவிக்கமுடியுமென்று நம்பினார். இருபது ஆண்டுகளாக சூடானில் நடைபெற்றுக் கொண்டுள்ள உள்நாட்டுப் போருக்கு முற்றுப்புள்ளி வைத்த சாதனையை பறைசாற்ற விரும்பினார், ஆனால் அவ்வாறு செய்ய முடியவில்லை.

DEBKAfile தனது செய்தியில் சூடான் தலைவர்களுக்கு சிறப்பான வரவேற்பளிக்க திட்டமிடப்பட்டிருப்பதாக விளக்கியுள்ளது. ஆபிரிக்காவில் மகத்தான சாதனைபுரிந்த அமெரிக்க ஜனாதிபதியின் சிறப்புக்களை சித்தரிக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளுள் சூடான் தலைவர்களுக்கு அளிக்கப்படும் வரவேற்புக்களும் ஒரு பகுதியாக அமையும். இறுதியாக வசந்தகாலத்தில் ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

''1993-ல் வெள்ளை மாளிகையில் யிட்ஸாக் ராபின், ஷிமோன் பெரஸ் மற்றும் யாசிர் அரஃபாத்திற்கிடையே கையெழுத்தான கொள்கை பிரகடனத்தைவிட மிகுந்த சிறப்பு மிக்கதாக இந்த விழா அமைந்திருக்கும் இது ஒரு 'ஆபிரிக்க கேம்ப்டேவிட்டாக' அமையும். இதில் தோல்வி ஏற்படாது.'' என்று ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி கருத்துத்தெரிவித்தார்.

அந்த நிகழ்ச்சி நிரலில் வெள்ளை மாளிகையில் இன்னொரு சடங்கும் நடக்கும். சூடானின் ஜனாதிபதி பஷீர் தனது நாட்டின் ''கடந்தகால இருண்ட வரலாற்றில் அமெரிக்காவிற்கு அடிமைகளை ஏற்றுமதி செய்வதற்கும் அவர்களை ஏற்றிச்செல்வதற்கும் அரபு நாட்டு ஒட்டகங்களை பயன்படுத்தி உலகம் முழுவதிலுமிருந்து அடிமைகளை அமெரிக்காவிற்கு கொண்டுவரப்பட்டதையும் நினைவு கூறி பகட்டாரவாரத்துடன் அதனைத் துறப்பதாக பொய் ஆணையிடும்'' நிகழ்ச்சியை பஷீர் நிகழ்த்துவார்.

சூடானுடன் லிபியாவையும் தனது தேர்தல் நோக்கங்களுக்காக புஷ் பயன்படுத்திக் கொள்ள உத்தேசித்திருக்கிறார். ஜூன் மாதம் கார்டோமிற்கும் திரிபோலிக்கும் புஷ் வரவிருக்கிறார். இந்த நாடுகளிலெல்லாம் புஷ் நிர்வாகத்தின் நடவடிக்கைகளால் உருவாகியுள்ள அரசியல் மற்றும் இராணுவ மாற்றங்களை சிறப்பித்துக்காட்டுவதாக இந்த சுற்றுப்பயணம் அமையும். துருக்கிக்கும், மொராக்கோவிற்கும் பயணம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லிபியாவின் எண்ணெய் தொழிலைச் சீரமைப்பது குறித்து அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அரசாங்கங்கள் திரிபோலியில் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கின்றன. இந்த வசந்தகால வாக்கில் லிபியாவில் எண்ணெய் முதலீடுகளுக்கு அமெரிக்கா விதித்துள்ள தடை நீக்கப்படுமென்று செய்திகள் கூறுகின்றன.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved