World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மருத்துவமும் சுகாதாரமும்

Asian bird flu threatens to trigger worldwide epidemic

ஆசிய பறவை விஷக்காய்ச்சல் உலக ரீதியாக தொற்று வியாதியாக பரவும் அச்சுறுத்தல்

By John Roberts
6 February 2004

Use this version to print | Send this link by email | Email the author

பறவை இன்புளுயென்ஸா (influenza) என்றும் கோழி விஷக்காய்ச்சல் என்றும் கூறப்படும் நோய் பல ஆசிய நாடுகளில் தோன்றி பிரதான சர்வதேச சுகாதார நெருக்கடியாக உருவாகிக் கொண்டிருக்கிறது. இது, மனிதர்களுக்கும் பொருளாதாரக் கட்டுக்கோப்பிற்கும் பேரழிவை உருவாக்கும் வல்லமை கொண்டதாக அமைந்திருக்கிறது. இந்த நோய் தொடர்பான முழுவிவரங்கள் இன்றும் நிலைநாட்டப்படவில்லை என்றாலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலை, அரசாங்கம் மேற்கொள்ளும் மூடிமறைக்கும் முறைகள் சர்வதேச அளவில் நிலவும் கண்காணிப்புக் குறைவுகள் மற்றும் உடனடி நடவடிக்கையின்மை ஆகியவை அனைத்துமே இந்த நோய் தோன்றியதிலும் பரவியதிலும் பங்கு வகிக்கின்றன.

உலக சுகாதார அமைப்பிற்கு (WHO) வியட்நாம் ஜனவரியில் ஆரம்பத்தில் தகவல் தந்தது. ஜனவரி 27 ல் WHO வெளியிட்ட அறிக்கையில், வியட்நாமில் எட்டு பேருக்கு கோழிக்காய்ச்சல் நோய் கண்டிருப்பதாகவும், மற்றும் 9 பேருக்கு அந்த நோய்க்குறி ''இருக்கலாம்'' என்றும் இதர 36 பேர் குறித்து மருத்துவ ஆய்வுகள் நடந்தன என்றும் தெரிவிக்கப்பட்டது. அப்போது சாவு எண்ணிக்கை 6 இருந்து, இப்போது 10 ஆக உயர்ந்துவிட்டது. வியட்நாமின் 64 மாகாணங்களில் 28 ல் இந்த தொற்று நோய் பரவியுள்ளது. அரசாங்கம் தந்திருக்கும் புள்ளி விவரங்களின்படி 740,000 கோழிகள் மடிந்துவிட்டன. ஏறத்தாழ முன்று மில்லியன் கோழிகள் கொல்லப்பட்டுவிட்டன.

கோழிகளிடையே இந்த நோய் தோன்றி இருப்பது வியட்நாம், தைவான், தாய்லாந்து, தென்கொரியா, ஜப்பான், கம்போடியா, லாவோஸ், இந்தோனேசியா, பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளில் தற்போது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. தாய்லாந்தில் மிகக்கடுமையான நிலவரம் என்னவென்றால் துவக்கத்தில் அரசாங்கம் அந்த நோய் இல்லை என்று அறிவித்தது. தற்போது தாய்லாந்தில் ஐந்து பேர் மாண்டிருக்கின்றனர். இதன் மூலம் மண்டல சாவு எண்ணிக்கை 16 ஆக உயர்ந்திருக்கிறது. இறந்தவர்களில் மிகப்பெரும்பாலோர் குழந்தைகள் ஆவர். தாய்லாந்தில் உள்ள 76 மாகாணங்களில் 25 ல் நோய் பரவியுள்ளதாக இப்போது அதிகாரிகள் ஒப்புக்கொண்டிருக்கின்றனர். இதுவரை 10 மில்லியனுக்கு மேற்பட்ட கோழிகள் கொல்லப்பட்டுவிட்டன.

பாதிக்கப்பட்ட நாடுகளில் உடனடியாக இந்த நோயினால் ஏற்றுமதிகளில் தாக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஆசியாவிலேயே மிகப்பெரும் அளவிற்கு கோழிகளை ஏற்றுமதி செய்துவரும் தாய்லாந்து, ஜப்பான் ஐரோப்பிய ஒன்றிய மற்றும் இதர நாடுகள் விதித்துள்ள இறக்குமதி தடைகளால் பாதிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தின் ஏற்றுமதிகளில் பாதி ஜப்பானுக்கு செல்கிறது. சென்ற ஆண்டு மதிப்பு 1.25 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்த நோய் தோன்றியதால் தாய்லாந்தின் மிகப்பெரிய வேளாண்மை வர்த்தகமான Charoen Pokphand போன்றவை மட்டுமல்ல தாய்லாந்து முழுவதிலும் உள்ள சிறிய விவசாயிகள் பலர் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

விவசாயிகள் தங்களது கோழிகளை இழந்ததால் மட்டுமே பொருளாதார பாதிப்பிற்கு இலக்காகவில்லை. அத்துடன் அவர்களது குடும்பங்களைச் சார்ந்தவர்களும் நோய்க்கு இலக்காகிற ஆபத்து ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களது கோழிப்பண்ணைகளுக்கு அருகிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் பழைய வேளாண்மை முறைகளையே கடைப்பிடித்து வருகிறார்கள். கால்நடை மருத்துவ சேவைகளும் அவர்களது வீடுகளுக்கு அருகாமையில் கிடைப்பதில்லை. வியட்நாமில் வடக்கு ஹா நம் மாகாணத்தில் ஒரு தாயும் அவரது இளம் மகளும் அந்த நோயினால் முதலில் இறந்துள்ளனர்.

மனித மற்றும் பொருளாதார இழப்புக்கள் ஏற்கெனவே கணிசமான அளவிற்குள்ளது. ஆனால் சுகாதார அதிகாரிகள் வேறொரு வகையில் கவலையடைந்துள்ளனர். இந்த நோயின் புதுவகைக் கிருமி மனிதர்களிடையே பரவுவதற்கான ஆபத்து அதிகரித்திருக்கிறது. பாதிக்கப்பட்ட கோழிகளின் எச்சங்களைத் தொட்டால் அல்லது பட்டால் மனிதர்களுக்கு நோய் பரவும் ஆபத்து உள்ளது. இந்த நோய் நீண்டகாலம் நீடித்திருக்குமானால், மனிதர்கள் பாதிப்பும் பெருகும். அவற்றின் விளைவாக நேரடியாக மனிதர்களுக்கிடையில் பரவுகின்ற ஆபத்தும் அதிகரித்துவிடும். இப்படி பூகோள அளவில் இந்த நோய் பரவி விடுமானால் அதன் மூலம் மில்லியன் கணக்கில் மக்கள் இறக்கின்ற நிலை ஏற்பட்டுவிடும்.

கோழிக்காய்ச்சல் என்று தற்போது அழைக்கப்பட்டுவரும் நோய்க்கிருமி 1997 ல் முதல் தடவையாக ஹாங்கொங்கில் உள்ள மக்களுக்கு H5NI என்ற உருவில் தோன்றியது. அதன் கொடூரத்தன்மை சாவு எண்ணிக்கையில் எதிரொலித்தது. 18 பேருக்கு நோய்கண்டதாக உறுதிப்படுத்தப்பட்டதில் ஆறு பேர் மாண்டனர். இந்த நோயைக் கட்டுப்படுத்தவும், புதுவகை நோய்க்கிருமி பரவி விடாது தடுக்கவும் ஹாங்கொங் அதிகாரிகள் ஏறத்தாழ 1.5 மில்லியன் கோழிகளை மூன்றே நாட்களில் கொன்றுவிட்டனர்.

தற்போது ஏற்பட்டுள்ள நோய் ஒரு சிறிய எல்லைக்குள் மட்டும் அடங்கிவிட்டது அல்ல. தற்போது பல நாடுகளில் பல பகுதிகளில் இந்தநோய் பரவியுள்ளது. போக்குவரத்து, தகவல்தொடர்பு, கால்நடை மருத்துவ வசதிகள் மிகக்குறைவாக உள்ள பல பகுதிகளில் இந்நோய் பரவியுள்ளது. இதன் விளைவாக புதுவகை நோய்க்கிருமி பல மடங்காக பெருகும் ஆபத்து கணிசமாக அதிகரித்துள்ளது. நோய்கண்ட தனது சகோதரனுக்குச் சிகிச்சையளித்துவந்த இரண்டு வியட்நாம் சகோதரிகள் மாண்டது குறித்து மருத்துவத்துறை ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதுதான் மனிதர்களுக்கிடையில் பரவிய முதல் நோய் என்பதால் விரிவான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. புதுவகை ஆட்கொல்லி நோய்க்கிருமியை ஒழித்துக்கட்டும் ஊசிமருந்தைத் தயாரிக்க குறைந்தபட்சம் 4 மாதங்களாகும். அத்துடன், இந்த ஊசிமருந்தை தயாரித்து விநியோகிக்க நீண்டகாலமாகும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை செய்திருக்கின்றனர்.

அரசாங்க மூடிமறைப்பு

இந்த விஷக்காய்ச்சல் எங்கே தோன்றியது? மிக விரைவாக பல நாடுகளில் பரவ முடிந்த முக்கியத்துவத்தை புரிந்து கொள்வதில் சுகாதார அதிகாரிகள் இன்னமும் முயன்று கொண்டிருக்கின்றனர். வர்த்தக நலன்களைக் காப்பதற்காக குறிப்பாக தாய்லாந்திலும், இந்தோனேஷியாவிலும் அரசாங்கங்கள் நோய் தோன்றியதை மூடிமறைத்தன. இது மருத்துவ விசாரணைகளுக்கு இடையூறாக அமைந்துவிட்டது. இதில் ஏற்பட்ட தாமதத்தினால் பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் எச்சரிக்கை செய்ய முடியவில்லை. உடனடியாக கோழிகளை அழித்துவிடாத காரணத்தினால் இந்தநோய் மேலும் பரவிவிட்டது.

ஜனவரி 23 வரை பறவை விஷக்காய்ச்சல் பரவியதை ஒப்புக்கொள்ள மறுத்துவந்த தாய்லாந்து பிரதமர் தாக்சின் சினாவத்திராவை (Thaksin Shinawatra) தாய்லாந்தில் பரவலாகக் கண்டனம் செய்து வருகின்றனர். நவம்பரிலிருந்தே தாய்லாந்தில் பறவை நோய் நிலவுவதாக விலங்கினங்கள் தொடர்பான சுகாதார தேசிய இன்ஸ்டியூட் நம்பியதாக தாய்லாந்து செனட்டில் நிமிட் ராய்வனதம் (Nimit Traiwanatham) கூறினார். இருந்தபோதிலும் அரசாங்கம் அந்தத் தகவலை மூடிமறைத்துவிட்டது. கோழிகளுக்கு ''வயிற்றுப்போக்கு'' ஏற்பட்டதால் 850,000 கோழிகள் கொல்லப்பட்டதாகவே அதிகாரிகள் அறிவித்தனர்.

பலியானவர்களில் ஒருவரது தந்தை, தன்மகன் சாவிற்கு அரசாங்கமே காரணம் என்று குற்றம் சாட்டினார். சிரிராஜ் (Siriraj) மருத்துவமனை மருத்துவர்கள் தன்மகன் பறவை ஃபுளுவினால் இறந்ததாக உறுதிப்படுத்தியதாகவும், அதுபற்றி எதுவும் கூறவேண்டாமெனத் தன்னை அவர்கள் கேட்டுக்கொண்டதாகவும், மேலும் இதுபற்றி கருத்துத் தெரிவிக்க தங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் தம்மிடம் கூறியதாக பலியானவரது தாயார் (Chongrak Boonwanuj) தெரிவித்தார். ''அரசாங்கம் அறிந்திருந்தும் அதை ஏன் பொதுமக்களுக்குத் தெரிவிக்கவில்லை? அப்படிச் செய்திருந்தால் எங்களை நாங்களே தற்காத்துக்கொள்ள முடியுமல்லவா?'' என்று இறந்தவரது தந்தை (Chamnan) கேட்டார்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளால் நாட்டின் கோழி ஏற்றுமதியாளர்கள் குறிப்பாக மிகப்பெரிய, (Charoen Pokphand Group) மற்றும் தாய்லாந்தில் ''CP" என்று அழைக்கப்படும் நிறுவனம் குறுகிய காலத்தில் லாட்டரி பரிசுபோல் லாபம் சம்பாதிக்க முடிந்திருக்கிறது. கோழிவிலை தொன்னிற்கு 1700 முதல் 1800 அமெரிக்க டாலர்களிலிருந்து 2400 அமெரிக்க டாலர்களாக திடீரென உயர்ந்தது. CP க்கும் அரசாங்கத்திற்கும் இடையே நிலவும் நெருக்கமான உறவை நுகர்வோர் குழுக்கள் சுட்டிக்காட்டின. CP நிறுவனரும், தலைவருமான டானின் சேரவனோ (Dhanin Chearavanout) என்பவரின் மருமகன்தான் வர்த்தக அமைச்சர் வாட்னா மூன்சூக் (Wattana Muangsook) என்பவராவர்.

Far Easfern Economic Review தனது ஜனவரி 29 வெளியீட்டில் CP நிர்வாகத் துணைத்தலைவர் சராசின் விரபால் (Sarasin Viraphal) என்பவர், ''தாய்லாந்தில் பறவை விஷக்காய்ச்சல் என்பதற்கான சான்று எதுவும் இன்னும் கிடைக்கவில்லை. இந்தக் கதை முடிவில் நாம் வெற்றியாளர்களாகவே வருவோம் தோல்வி காணமாட்டோம்'' என்று கூறியதாக இப்பத்திரிகை தெரிவித்திருந்தது. அதே பத்திரிகையில் பிப்ரவரி 5 ம் பதிப்பில் இவரது பேட்டியும் வெளிவந்தது. இப்பேட்டியில், தமது கம்பெனிக்கும், தாய்லாந்து கால்நடை அதிகாரிகளுக்கும் நவம்பரிலேயே நாக்கோன் சவான் (Nakorn Sawan) என்ற மாகாணத்தில் பறவை விஷக்காய்ச்சல் ஏற்பட்டது தெரியும் என்று ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் சராசின்னுக்கு ஏற்பட்டது. இது ''உள்ளூர் நோய்தான்'' என்றும் ''கட்டுப்படுத்தி'' விடமுடியும் என்றும் அதிகாரிகள் நினைத்ததாவும் அவர் கூறினார்.

இந்தோனேஷியாவில், கால்நடை அபிவிருத்தித் துறையின் பொது இயக்குநர் சோப்ஜன் சுடர்ஜட் (Sofjan Sudardjat) கடந்த 24 ஜனவரி அன்று அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்களின் வழி நின்று, பறவைக் காய்ச்சல் மரபுக்கூறு H5N1 இந்தோனேஷியாவில் இல்லை என்று வலியுறுத்தினார். மில்லியன் கணக்கில் கோழிகள் மடிந்தது என்பது நியூ காசில் (New Castle) நோயினாலே தவிர, இது மனிதர்களுக்குப் பரவாது என்றும் அரசாங்கம் கூறிற்று.

ஆவணி கடைசியில் பறவைக்காய்ச்சல் ஜாவாவில் உருவாகி ஆகஸ்ட் கடைசியில் நாடுமுழுவதும் பரவிவிட்டது என்று ஜனவரி 25 ல் சுடர்ஜட் கூறினார். அவரது கருத்து கால்நடை மருத்துவர்கள் கூற்றை உறுதிப்படுத்துகிறது. அரசாங்கத்திற்கு நவம்பரிலேயே தகவல் கிடைத்திருந்தும், கோழிப்பண்ணைக்காரர்கள், அந்தத் தொழில் பிரதிநிதிகளோடு சேர்ந்துகொண்டு அரசாங்கமும் அந்த நோய் பரவியதையே மறுத்துவிட்டது.

அந்த நோய் கண்டிருப்பதை ஒப்பக்கொண்ட பின்னரும், நாட்டின் கோழிகளை பெருமளவில் கொல்வதற்கு இந்தோனேஷிய அதிகாரிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஜனவரி 28 ல் பாங்கொக்கில் நடந்த ஆசிய நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்தேச ஏஜென்சிகள் மாநாட்டில் கலந்து கொண்ட விவசாய அதிகாரி ட்ரீ அக்கோசோ, (Tri Akoso) கோழிகளைக் கட்டாயம் கொன்றுவிட வேண்டுமென்பது நடைமுறைக்கு ஏற்றதல்ல என்று குறிப்பிட்டார்.

உலக சுகாதார அமைப்பின் தலைமை நோய்க கிருமிகள் ஆய்வாளர் குளூஸ் ஸ்ரோர் (Klaus Stohr) ஜெனிவாவில் ஜனவரி 23 ல் பேட்டியளித்தபோது ''இந்த நோய் சர்வதேச பரிணாமம் பெறுவதற்குள் கட்டுப்படுத்துவதற்கான சாளரம் இங்கு உருவாகியுள்ளது. தாய்லாந்து மற்றும் இந்தோனேஷிய அரசாங்கங்கள் எடுத்த நடவடிக்கைகளால் அதன் எல்லை சுருங்கிவிட்டது'' என்று குறிப்பிட்டார்.

போதுமான வளங்கள் இல்லை

இந்த நோயைக் கட்டுப்படுத்துவதில் அது பரவியுள்ள நாடுகளிலும் சர்வதேச அளவிலும் போதுமான வளங்கள் இல்லாததால் உலக சுகாதார அமைப்பின் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. கோடிக்கணக்கான விவசாயிகள் தங்களது பிழைப்பிற்காக கோழிவளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். அருகருகே கோழிப்பண்ணைகளோடும், தொலைதூரங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். மேற்கு நாடுகளில் கோழிப்பண்ணைத் தொழில் பெரிய நிறுவனங்களின் கரத்தில் குவிந்துள்ளது. ஆசிய நாடுகளில் பரவலாக கோழிப்பண்ணைகள் அமைந்திருப்பதால் ஏதாவதொரு நோய் ஏற்பட்டால் அதைக் கட்டுப்படுத்துவது மிகப்பெரும் பிரச்சனையாகி விடுகிறது.

இந்த நோய் ஏற்பட்ட இடங்களிலும் கோழிப்பண்ணைகளில் குஞ்சு பொரிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்குத் தேவையான நோய்த்தடுப்பு உடைகள் மற்றும் ஊசி மருத்துகள் கிடைக்கவில்லை. எனவே உலக சுகாதார அமைப்பு மேற்கு நாடுகளின் உதவியை நாடி வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இத்தகைய தடுப்பு ஊசி போட்டுக்கொள்ளாமல், தகுந்த பாதுகாப்பு உடுப்புகள் இல்லாமல் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஆபத்து என்ற எச்சரிக்கையும் செய்யப்பட்டிருக்கிறது. அத்துடன் கோழி இறக்குமதிக்கும் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கோரிக்கைக்கு முன்னணி தொழில்வள நாடுகள் உற்சாகமான ஒத்துழைப்புத்தர முன்வரவில்லை. கோழி இறக்குமதி தடைசெய்யப்பட்டிருக்கிறது. சில நிதியமைப்புக்கள் பின்தங்கிய நாடுகளில் ஏற்பட்டுள்ள நோயைக்கட்டுப்படுத்துவதில் தகுந்த உதவியைத் தரச் சம்மதம் தெரிவித்துள்ளன. உலக சுகாதார அமைப்பு போன்றவையும் கூட பற்றாக்குறையான வளத்தைக் கொண்டிருக்கின்றன.

நியூயோர்க் டைம்ஸ்சிற்கு பேட்டியளித்த உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி விக் தோம்சன் (Wick Thompson) ''பல கால்நடை நோய்கள் மனிதர்களுக்குப் பரவுவது தொடர்பானதைக் கண்கானிக்கும் பூகோள பொது சுகாதார வலைப்பின்னலில் பெரும் ஓட்டைகள் இருக்கின்றன. மூன்றாம் உலக நாடுகளில் விலங்கு நோய்களில் எவ்வளவு ஆக்க இழப்பு அக்கறைகளைக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுவது தேவையானதாகும். உலக சுகாதார அமைப்பு சில நோய்கள் பற்றி ஆய்வு நடத்தி வருகிறது'' என்று கூறியுள்ளார்.

''விலங்கின நோய்க் கிரிமிகளைக் கண்காணிக்க பல நடவடிக்கைகள் தேவை என நிபுணர்கள் கூறுகின்றனர். சிறந்த ஆய்வுக்கூட வசதிகள் செலவு குறைந்த சோதனைகள் சர்தேச அளவில் தகவல்கள் பரிமாற்றம் அவசியமென்று'' மேலும் அந்தப் பத்திரிகை வலியுறுத்தியுள்ளது.

அரசாங்கங்கள் மூடிமறைத்தது, தேவையான கண்காணிப்பு மற்றும் ஆய்வு வசதிகள் இல்லாதது ஆகியவற்றால் ஏற்கெனவே பல உயிர்கள் பலியாகிவிட்டன. பல சிறிய விவசாயிகளின் வாழ்வு சீர்குலைந்துவிட்டது. உலக ரீதியாக தொற்று நோயாக வெடிக்கும் ஆபத்தும் உருவாகியுள்ளது. நேற்று ஒரு நிபுணர் சார்ஸ் (SARS) நோயைவிட இது 1,000 மடங்குகள் கொடூரமான நோயாக ஆகிவிடும் என்று எச்சரித்தார்