World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஸ்பெயின்

Thousands march in Barcelona for legalisation of immigrant workers

பார்சிலோனாவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சட்டபூர்வமாக அங்கீகரிக்கக்கோரி ஆயிரக்கணக்கனோர் ஆர்ப்பாட்டம்

By Paul Stuart
10 February 2004

Back to screen version

ஜனவரி 31-ல் 10,000-மக்கள் பார்சிலோனா தெருக்களில் மோசமான அன்னியர் சட்டத்தை (Ley de Extranjeria) ரத்து செய்யக்கோரி கட்டலோனியாவிலுள்ள புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கூட்டணி அரசாங்கத்தில் முறையிடுவதற்காக அணிவகுப்பு நடத்தினர். வலதுசாரி பாப்புலர் கட்சி (PP) அரசாங்கம் இந்த சட்டத்தை ஜனவரி 2001-ல் நிறைவேற்றியது.

அந்நியர்கள் சட்டம் குடியேறியோருக்கு அடிப்படை உரிமைகளை மறுக்கிறது. அவர்கள் அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களில் சேர முடியாது அல்லது வேலை நிறுத்தம் செய்யவோ, அல்லது அரசாங்க எதிர்ப்புக்களிலோ கலந்து கொள்ளவோ முடியாது. பதிவு செய்யப்படாத ஏராளமான ஆபிரிக்க, ஆசிய, லத்தீன் அமெரிக்க மற்றும் ஸ்பெயின் நாடுகளைச் சார்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இந்த எதிர்ப்பில் கலந்து கொண்டனர்.

ஐரோப்பா முழுவதிலும் பல்வேறு அமைப்புக்கள் ஐரோப்பிய சமூக மாமன்றம் மற்றும் எல்லை இலா அமைப்பு ஆகியவற்றின் கீழ் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சட்டபூர்வ அங்கீகார நடவடிக்கை கோரி நடந்த ஒரு நாள் ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக இப்பேரணி நடைபெற்றது. 50 பகுதிகளில் பல்வேறுபட்ட 11 நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

ஸ்பெயின் தேசிய புள்ளிவிவர அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படி மக்கள் தொகையில் 6.2 சதவிகிதம் புலம்பெய்ர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் பெரும்பாலோர் தென் அமெரிக்கா மற்றும் ஈக்குவடார் பகுதிகளிலிருந்து வந்தவர்கள்.

ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டவர்கள் ''போர் வேண்டாம்'', ''எல்லைகள் வேண்டாம்'', ''பட்டேராஸ்களில் சாக வேண்டாம்'' (ஜிப்ரால்டர் நீரிணையை தொடர்ச்சியாகக் கடக்கும் பட்டேரார் எனப்படுபவை சிறுபடகுகள், இவை அடிக்கடி கடலில் மூழ்கி சாவுகள் நடைபெற்று விடுகின்றன), ''எல்லோருக்கும் வேலை வேண்டும்'', ''அனுமதிச்சீட்டு வேண்டும்'', ''மனிதர்கள் எவரும் சட்டவிரோதமானவர்கள் அல்லர்'' என்பது போன்ற பல்வேறு முழக்கங்களை பேரணியில் கலந்து கொண்டவர்கள் எழுப்பினர். புதிய கட்டலோனியா அரசாங்கம் புதிய குடியேற்ற எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக போராட வேண்டும், எல்லா மக்களது சம உரிமைகளுக்காக போராட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. "பதிவு செய்யப்படாத" பல புலம்பெயர்ந்தோர் கண்டனப்பேரணிகளில் அவர்களே முன்வந்து கலந்து கொண்டனர். இப்படி செய்வது அந்நியர் சட்டப்படி சட்ட விரோதமான நடவடிக்கையாகும், இது ஸ்பெயின் நாட்டு அரசியலில் புதிய இயல்நிகழ்ச்சி ஆகும் என்பதை LaVanguardia குறிப்பிட்டிருக்கிறது.

ஸ்பெயின் நாட்டில் குடியேறியிருப்பதாகக் கருதப்படும் 850,000 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரில் கட்டலோனியாவில் மட்டும் 200,000 பேர் வாழ்ந்து கொண்டிருப்பதாக எண்ணுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு சட்டபூர்வமான அங்கீகாரம் தர வேண்டுமென்று கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர். ஸ்பெயினின் ஐந்து வெளிநாட்டினர் காவல் கட்டுப்பாட்டு முகாம்களை மூடிவிடுமாறு கோரியுள்ளனர் மற்றும் அவர்களுக்கு குடியிருப்பதற்கான உரிமை வழங்க வேண்டும், சிவில் உரிமைகள் எப்படியிருந்தாலும் பணியாற்றுவதற்கான அனுமதி பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் மற்றும் பெற்றோர்களில்லாமல் வருகின்ற குழந்தைகளை வெளியேற்றுகின்ற காட்டு மிராண்டித்தனத்தை கைவிட வேண்டும் என்று கோரினர்.

இந்தப் பேரணிக்கு பல சிறிய தொழிற்சங்கங்களும், இடதுசாரி அரசியல் கட்சிகளும், (FAVB) அமைப்பும் மற்ற குடியேறுவதற்கான அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்ததாக La Vanguardia தெரிவித்துள்ளது. பிரதான தொழிற்சங்கங்களான CC OO (Workers Commissions) மற்றும் UGT ஆகியவை இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஏனெனில் ஆர்ப்பாட்டக்காரர்களின் முன்னோக்கை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று அந்தப் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

பாப்புலர் கட்சி அரசாங்கம் புலம்பெயர்தலை நெறிமுறைப்படுத்துவது அவசியமென்று கருதினாலும் ஸ்பெயின் நாட்டு மக்களுக்கு இணையான உரிமைகளை வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. வெளிநாட்டவர் தொடர்பான சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது பிரதமர் ஜோஸ் மரியா அஸ்னார் ''சட்டபூர்வமாகவும் மற்றும் சட்டவிரோதமாகவும் குடியேறியவர்களுக்கு சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பது நினைத்துக்கூடப் பார்க்க முடியாதது'' என்று குறிப்பிட்டார்.

ஸ்பெயினில் குடியேறும் பெரும்பாலோர் தனது பாப்புலர் கட்சிக்கு எதிரான அரசியல் கட்சிகளை ஆதரிக்கக் கூடுமென்பதை அஸ்னார் அறிந்திருக்கிறார். பொலிவியா நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் வாழ்கின்ற பகுதிகளில் போலீசார் தொடர்ந்து பல்வேறு அதிரடி சோதனைகளை நடத்தியதில் கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் போலீஸ் காவலில் இருக்கும்போது, போலீசார் அவர்களிடம் திடீர் சோதனைகள் இடதுசாரி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிராகவே நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்திருக்கின்றனர்.

கட்டலோனியாவில் புலம்பெயர்ந்தவர்கள் நடத்திய 2-வது கண்டனப் பேரணி அலை இது. பார்சிலோனாவில் 2001-ஜனவரியில் 400 ஆசிய நாடுகளைச் சேர்ந்த புகலிடம் கோரியோர், பல கிறிஸ்தவ தேவாலயங்களில் புகுந்து கொண்டனர் மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ள வெளிநாட்டவர்க்கு எதிரான சட்டத்தின் கீழ் தாங்கள் பலவந்தமாக வெளியேற்றப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். குடியிருப்பு பத்திரங்கள் அல்லது வேலைக்கான அனுமதி பெறாத எவரையும் 48-மணி நேரத்திற்குள் மேல்முறையீட்டிற்கு வழியில்லாமல் ஸ்பெயினிலிருந்து வெளியேற்ற புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டது. இந்த பிராந்தியத்தில் உள்ள தொழிலாளர்களின் ஆதரவை அவர்கள் பரந்த அளவில் பெற்றனர்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved