World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan president dismisses government in constitutional coup

இலங்கை ஜனாதிபதி அரசியல் சதியில் அரசாங்கத்தை விலக்கினார்

By K. Ratnayake
9 February 200
4

Back to screen version

இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க சனிக்கிழமை பின்னிரவு பாராளுமன்றத்தை கலைக்கவும் குறித்த காலத்திற்கு நான்கு வருடங்களுக்கு முன்னதாகவே புதிய தேர்தலுக்கு அழைப்பு விடுக்கவும் தனது எதேச்சதிகார நிர்வாக அதிகாரங்களைப் பயன்படுத்தியமை ஒரு அரசியலமைப்பு சதிக்கு சமமானதாகும். அவ்வாறு செய்ததன் மூலம், அவர் ஐக்கிய தேசிய முன்னணி (ஐ.தே.மு) அரசாங்கம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருந்தபோதிலும் அதை விளைபயனுள்ள வகையில் அதிகாரத்தில் இருந்து நீக்கினார். வேட்புமனுக்கள் பெப்பிரவரி 17 முதல் 23ம் திகதி வரை தாக்கல் செய்யப்படவுள்ளதுடன், நான்கு வருடத்திற்கும் குறைவான காலத்திற்குள் ஒரு மூன்றாவது தேர்தல் ஏப்பரல் 2ம் திகதி இடம்பெற உள்ளது.

குமாரதுங்கவின் அறிவித்தலானது, நவம்பர் 4 அன்று தொடங்கப்பட்ட ஒரு தொடர்ச்சியான ஜனநாயக விரோத நடவடிக்கைகளின் உச்சகட்டமாகும். அன்றைய தினம் அவர், பாதுகாப்பு, உள்துறை மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்களின் அதிகாரங்களை அபகரித்ததோடு பாராளுமன்றத்தையும் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து, அவசரகால நிலையை அமுல்படுத்தவும் நடவடிக்கை எடுத்தார். ஜனாதிபதி, பெரும் வல்லரசுகளின், குறிப்பாக வாஷிங்டனின் அழுத்தங்களின் கீழ் பினவாங்க தள்ளப்பட்ட அதேவேளை, அவர் அமைச்சுக்களை மீண்டும் கையளிக்க மறுத்ததோடு தமிழீழ விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளின் மூலம் நாட்டைக் காட்டிக்கொடுப்பதாக பிரதமர் ரணில் விக்கரமசிங்கவை தொடர்ச்சியாக குற்றம்சாட்டினார்.

இது, ஒரு நிரந்தரமான ஸ்தம்பித நிலையில், கொழும்பு அரசாங்கத்தின் பணிகளுடனான ஒரு விட்டுக்கொடுப்பற்ற நிலையை பெறுபேறாகத் தந்தது. ஒருதலைப்பட்சமாக அரசாங்கத்தை பதவிவிலக்குவதன் மூலம், அண்மையில் அவரது சொந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் (ஸ்ரீ.ல.சு.க) சிங்கள தீவிரவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணிக்கும் (ஜே.வி.பி) இடையில் அமைக்கப்பட்ட கூட்டணி தேர்தலில் வெற்றிபெற்று முட்டுக்கட்டையை தகர்க்கும் என குமாரதுங்க நம்புகின்றார். எவ்வாறெனினும், அத்தகைய தேர்தல் முடிவுகள் விடுதலைப் புலிகளுடனான தற்போதைய யுத்த நிறுத்தத்தை உடனடியாக முறிப்பதுடன் நாட்டை மீண்டும் ஒரு உள்நாட்டு யுத்தத்திற்குள் தள்ளும்.

குமாரதுங்கவின் தீர்மானத்தின் ஜனநாயக விரோத பண்பானது, அது முன்னெடுக்கப்பட்ட விதத்தின் மூலம் கோடிட்டுக்காட்டுப்பட்டது. அவர் பாராளுமன்ற ஜனநாயகத்தின் தரத்தையே தகர்த்துவிட்டார். ஐ.தே.மு அரசாங்கம் பூரண பெரும்பான்மையைக் கொண்டுள்ள இச்சபையில், ஒரு நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டு அது நிறைவேற்றப்படவிருந்தது. அதற்குப் பதிலாக அவர், தனது நடவடிக்கைகள் பற்றி விக்கிரமசிங்கவுக்குக் கூட அறிவிக்காமல் ஜனாதிபதி சாசனத்தின் மூலம் பின்னிரவில் அரசாங்கத்தை பதவி விலக்கினார்.

ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாக, அவரது அரசியல் உயர் மட்ட பரிந்துரையாளர்களான லக்ஷ்மன் கதிர்காமர் மற்றும் டீ.எம். ஜயரத்ன ஆகிய இருவரையும், முறையே தகவல்துறை மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சராகவும், அஞ்சல் மற்றும் ஊடக அமைச்சராகவும் நியமித்தார். பதில் அமைச்சரவை குறைந்தபட்சம் 15 அமைச்சர்களை கொண்டதாக குறைக்கப்படும் எனவும் அவர் விக்கிரமசிங்கவுக்கு அறிவித்திருந்தார். இந்த நடவடிக்கை மூலம் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்களில் பாதிபேர் பதவி விலக்கப்படுவர். இந்த முடிவானது அவர் உத்தியோகபூர்வமாக பதவிவகிக்கும் கண்காணிப்பு நிர்வாகத்தின் கைகளைப் பலப்படுத்தும். இதன் விளைவாக, நாடு மிகவும் ஸ்திரமற்ற தேர்தல் பிரச்சாரத்துக்குள் நுழையும் அதேவேளை, அரச எந்திரத்தின் பிரதான நெம்புகோல்கள் அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் பங்கிடப்படும்.

இன்னமும் பகிரங்கமாக தெளிவுபடுத்தப்படாத குமாரதுங்கவின் நடவடிக்கைகள், ஜனநாயக வழக்கத்தை அவமதிக்கும் புகைச்சலாகும். ஜனாதிபதி, பெப்பிரவரி 4 அன்று தனது சுநத்திரத் தின உரையில், அரசாங்கத்தை பதவி விலக்கவுள்ளதற்கான சமிக்ஞைகள் எதையும் காட்டவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை, மூன்று மாதகால இக்கட்டான நிலைக்கு முடிவுகட்டுவதன் பேரில், பிரதமரின் பிரதிநிதியான மலிக் சமரவிக்கிரமவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, ஜனாதிபதி தனது அலுவலரான மனோ தித்தவலவை கூட அனுப்பிவைத்திருந்தார்.

ஜனாதிபதியின் தீர்மானமானது, ஜே.வி.பி உடனான கூட்டனி தொடர்பாக அவரது சொந்த கட்சியினுள்ளும் அதனது பொதுஜன ஐக்கிய முன்னணி பங்காளிகள் மத்தியிலும் பதட்டநிலைமைகளை அதிகரிக்கச் செய்யும். லங்கா சமசமாஜக் கட்சி (ல.ச.ச.க), இந்த முன்நகர்வுகளை விமர்சித்து கடந்த வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. "அவர்களது குறுகிய மற்றும் இன நலன்களின் பேரில் தனிமையில் செயற்படுவதோடு, ஜனாதிபதி முன்யோசனையின்றி பாராளுமன்றத்தை கலைக்கவுள்ளார்" என அது குறிப்பிட்டுள்ளது. ல.ச.ச.க அதற்குப் பதிலாக இடைநிறுத்தப்பட்டுள்ள சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக ஐ.தே.மு மற்றும் பொதுஜன முன்னணிக்கிடையிலான ஒரு கொடுக்கல் வாங்கலுக்கு அழைப்பு விடுக்கின்றது.

புதிய தேர்தலுக்கு அழைப்புவிடுப்பதன் மூலம், குமாரதுங்க கடந்த நவம்பரில் அவரது நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்த இராணுவ உயர் மட்டத்தினர் மற்றும் ஜே.வி.பி போன்ற அரசியல் சக்திகளுடன் மேலும் நெருக்கமாக அணிதிரள தள்ளப்படுவார். இந்த இரு சாராரும் பெயரளவிலான சமாதான முன்னெடுப்புகளையும் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு சலுகைகள் வழங்கப்படுவதையும் கடுமையாக எதிர்க்கின்றனர். இந்தத் தேர்தல் ஜே.வி.பி க்கு சாதகமானதாக அமைவதோடு, இரு பிரதான கட்சிகள் மீது வளர்ச்சி கண்டுவரும் அதிருப்தியையும் சாதகமானதாக அது பயன்படுத்திக்கொள்ளும். மிக மிக முக்கியத்துவமான முறையில், இந்த பிரச்சாரத்தில் சிங்களப் பேரினவாதமும் வன்முறையும் நிச்சயமாக செல்வாக்கு செலுத்தும்.

ஸ்ரீ.ல.சு.க-ஜே.வி.பி கூட்டணி, அரசாங்கத்தின் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தோற்றுவித்த வேலைநிறுத்த அலையும் தொழிலாளர்கள், சிறு விவசாயிகள் மற்றும் மாணவர்களின் எதிர்ப்புகளும் உருவாக்கிவிட்டுள்ள அதிருப்தி மற்றும் எதிர்ப்புகளுக்கு அழைப்புவிடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. எவ்வாறெனினும், அதே சமயம், இந்த கூட்டணி, வாழ்க்கை நிலைமையை முன்னேற்றுவதற்கான அதன் வாக்குறுதிகளை இட்டு நிரப்ப இலாயக்கற்றுள்ளதோடு இனவாத அரசியலையே நாடிச்செல்லத் தள்ளப்பட்டுள்ளது. அதன் பிரச்சாரம் விடுதலைப் புலிகளுக்கு நாட்டைக் காட்டிக்கொடுப்பதாகவும் "நாட்டை பிளவுபடுத்துவதற்கான" நிலைமைகளை உருவாக்குவதாகவும் விக்கிரமசிங்கவை கண்டனம் செய்வதுடன் ஆரம்பிக்கிறது.

ஆளும் வட்டாரங்களின் எதிர்ப்பு

வியாபாரத் துறையின் செல்வாக்கான பகுதியினர் ஸ்ரீ.ல.சு.க-ஜே.வி.பி கூட்டணியை வெளிப்படையாக எதிர்த்ததோடு குமாரதுங்கவை ஒரு புதிய தேர்தலுக்கு அழைப்புவிடுக்க வேண்டாம் என மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டனர். வர்த்தகத் தலைவர்கள், பிரச்சாரத்தின் ஸ்திரமற்ற நிலைமை பற்றி மட்டுமல்லாமல், ஸ்ரீ.ல.சு.க-ஜே.வி.பி கூட்டணி அரசாங்கமானது சமாதான முன்னெடுப்புகளுக்கு முடிவுகட்டுவதோடு மீண்டும் யுத்தத்திற்கு திரும்பும் எனவும் அச்சம் கொண்டுள்ளனர். 2002 முற்பகுதியில் யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதை அடுத்து, கொழும்பில் முதலீட்டு எதிர்பார்ப்புகளும் வர்த்தக நடவடிக்கைகளும் ஒரு பெரும் முன்னேற்றத்தைக் கண்டன. கடந்த நவம்பரில் அரசாங்கத்திற்கு எதிரான குமாரதுங்கவின் நடவடிக்கைகளை அடுத்து, இந்த முன்னேற்றம் சடுதியாக தடைப்பட்டது.

இலங்கையின் வர்த்தக மற்றும் கைத்தொழில் சபைகளின் ஒரு குடை அமைப்பான வர்த்தக கூட்டமைப்பு, ஒரு சமரசத்துக்காக அழைப்புவிடுக்கும் ஒரு தொகை பிரேரணைகளை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடந்த வாரம் முன்வைத்தது. யுத்த நிறுத்தத்தை பேணவும் விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளை தொடர்வதற்காவும், ஜனாதிபதியிடம் உள்ள பாதுகாப்பு அமைச்சுக்கும் பிரதமர் கொண்டுள்ள அதிகாரங்களுக்கும் இடையில் ஒரு "பொது வேலைத்திட்டத்தின்" மூலம் செயற்படுவதற்கான ஒரு வருட செயல்முறை ஒழுங்குகளும் இவற்றில் அடங்கும். கடந்த வெள்ளிக்கிழமை வியாபாரத் தலைவர்கள் பிரதமரையும் சந்தித்தனர்.

குமாரதுங்கவின் கட்டுப்பாட்டில் உள்ள அரசுக்கு சொந்தமான செய்திப்பத்திரிகைகள், தொலைகாட்சி மற்றும் வானொலியின் ஆட்சேபனைகளுடன், வெகுஜன ஊடகங்கள் ஜனாதிபதியின் முடிவை கூர்மையாக விமர்சித்தன. சண்டே டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம், ஜனாதிபதியின் நடவடிக்கைகள் "சர்வாதிகாரத்திற்கு சமமானதாகும்" என பிரகடனப்படுத்தியுள்ளது. கடந்த காலத்தில் ஜே.வி.பி யை விடுதலைப் புலிகளுக்கான எதிர் சக்தியாக பரிந்துரைத்த த ஐலண்ட் பத்திரிகையும் இந்த தீர்மானத்தை பலமான வார்த்தைகளால் கண்டனம் செய்துள்ளது. அதன் ஆசிரியர் தலையங்கம், தற்போதைய அரசியல் நெருக்கடிக்கான பதில் "முன்னர் இருமுறை நாட்டுக்கு துன்பத்தை கொணர்ந்த கடமைதவறிய அதி மத அபிமானிகளின் ஒரு பகுதியினரை கொண்டுவருவதல்ல" என குறிப்பிட்டுள்ளது.

ஜே.வி.பி யின் சாதனைகளைப் பொறுத்தவரையில் 1980களில் அதன் நடவடிக்கைகள் நினைவிற்கு வருகின்றன. இந்தக் கட்சி, இந்திய இலங்கை உடன்படிக்கையின் மூலம் உள்நாட்டு யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவரும் முயற்சிகளை கண்டனம் செய்ததோடு, தனது "தேசப்பற்று" பிரச்சாரத்தை ஆதரிக்க மறுத்த அரசியல் கட்சிகள் தொழிற்சங்கங்கள் மீது ஆயுதம் தாங்கிய குண்டர் கும்பல்களை கட்டவிழ்த்துவிட்டது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், தொழிற்சங்க அலுவலர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ஏனையவர்களும் இத்தகைய பாசிசத் தாக்குதல்களால் கொல்லப்பட்டனர்.

பிராந்தியத்தில் தமது சொந்த மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களை முன்னெடுப்பதன் பேரில், இலங்கையின் உள்நாட்டு யுத்தத்திற்கு முடிவுகட்டக் கோரும் பெரும் வல்லரசுகளும், அரசியல் நெருக்கடிக்கு முடிவுகட்டுமாறு வலியுறுத்தி வந்துள்ளன. பெப்பிரவரி 5ம் திகதிய டெயிலி மிரர் பத்திரிகை, ஜப்பானிய விசேட தூதுவர் யசூஷி அகாஷி மற்றும் அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் ரிச்சட் ஆமிடேஜ் ஆகியோர், "சமாதானப் பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்தை" துரிதப்படுதுவதற்காக "உடனடி நடவடிக்கைகளுக்கு" அழைப்பு விடுத்திருந்ததாக அறிவித்திருந்தது. இந்த இருவரும் கடந்த செவ்வாய்க்கிழமை டோக்கியோவில் உள்ள அமெரிக்க தூதர் இல்லத்தில் கலந்துரையாடலுக்காக சந்தித்தனர்.

பெரும் வல்லரசுகளின் எதிர்ப்பையிட்டு கலவரமடைந்த குமாரதுங்க, கடந்த காலத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான தனத ஆதரவை அவர்களுக்கு உறுதிப்படுத்த முயற்சித்தார். ஆனால் ஜே.வி.பி உடனான அவரது அரசியல் உபாயங்கள், ஒரு நிச்சயமில்லாத சமநிலையை பேணும் அவரின் நடவடிக்கையை வேகமாக முடிவுக்கு கொண்டுவந்தது. ஒரு பக்கம் பெரும் வல்லரசுகளுக்கு சமாதான முன்னெடுப்புகள் பற்றிய விசுவாசத்தை உறுதிப்படுத்தும் அதேவேளை, மறுபக்கம் ஜே.வி.பி யுடனும் ஏனைய சிங்களத் தீவிரவாதிகளுடனும் சேர்ந்து அதை ஒரு காட்டிக்கொடுப்பாக கண்டனம் செய்வதன் மூலம் அவரால் தொடர முடியாது.

அரசாங்கம் குமாரதுங்கவின் நடவடிக்கைகளை விமர்சிக்காததோடு தேர்தலுக்கு தயார்செய்துகொண்டிருக்கிறது. தாய்லாந்துக்கான விஜயத்தை ரத்துச் செய்த விக்கிரமசிங்க, ஒரு "தற்காலிகப் பிரதமராக" இருந்தகொண்டு அத்தகைய பிரதிநிதித்துவத்துக்கு அவரால் தலைமை வகிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். ஐ.தே.மு பேச்சாளரான மலிக் சமரவிக்கிரம, "சமாதானத்தைக் கொண்டுவரவும்" மற்றும் "பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும்" "இன்னுமொருமுறை மக்கள் எங்களுக்கு ஆதரவளிப்பார்கள் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்" என ரொய்ட்டருக்குத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் மோதலின் மையமானது ஒரு அடக்கமுடியாத முரண்பாடாகும். அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக, இலங்கை ஆளும் வர்க்கம் தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்தவும் அதன் சொந்த அரசியல் ஆதரவுத் தளத்தை தூக்கி நிறுத்தவும் தமிழர் விரோத இனவாதத்தை தொடர்ச்சியாக சுரண்டிவந்துள்ளது. ஸ்ரீ.ல.சு.க, விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) ஆகிய இரு பிரதான கட்சிகளும் சிங்களப் பேரினவாதத்தில் மூழ்கிப்போயுள்ளதோடு, குறைந்த பட்சம் 60,000 உயிர்களைப் பலிகொண்ட நாட்டின் 20 வருடகால உள்நாட்டுப் போரைத் தோற்றுவித்தமைக்குப் பொறுப்பாளிகளும் ஆவர்.

யுத்தத்தை ஆதரித்த பெரு வர்த்தகர்களின் செல்வாக்கானப் பகுதியினர், இப்போது அதை ஒரு பொருளாதார அழிவாகக் கருதுகின்றனர். இந்த மோதலானது, நாட்டின் உட்கட்டமைப்பை சீரழித்துள்ளதோடு, நிதி அமைப்பை தாங்கமுடியாத நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. மிகவும் அடிப்படையான விதத்தில், பிராந்தியமானது குறிப்பாக இந்தியா பூகோள உற்பத்தி முன்னெடுப்புகளுக்குள் மிக நெருக்கமாக உள்வாங்கப்படும் அதே வேளை, இது இலங்கையை மிகவும் ஓரங்கட்டியுள்ளது. எவ்வாறெனினும், பொருளாதாரவாதிகள் சமாதானத்தின் தேவையை வலியுறுத்திய போதிலும், இரு தசாப்தகால யுத்தமானது அதன் தொடர்ச்சியால் இலாபம் பெற்ற இராணுவம், அரச அதிகாரத்துவம், பெளத்த பெரும் தலைவர்கள் மற்றும் பிரதான அரசியல் கட்சிகளுக்கு ஆழமான நலன்களை உருவாக்கிவிட்டுள்ளது.

குமாரதுங்கவின் முடிவானது ஒரு சாதாரண தனிப்பட்ட நபரின் ஒழுக்கம் தவறய செயல் அல்ல, ஆனால் 50 வருடகாலமாக, இலங்கை ஆளும் வர்க்கம் பின்பற்றிவந்த பாராளுமன்ற கூட்டு வழிமுறைகள் மற்றும் திட்டமிடல் ஆகியவை ஒரு முடிவிற்கு வந்துள்ளதை வெளிப்படுத்துகிறது. இன்றைய பொருளாதார மற்றும் சமூக பதட்டநிலைமைகளின் மத்தியில் தனது ஆளுமையை தூக்கி நிறுத்துவதற்காக முதலாளித்துவம் வெளிப்படையாகவே சர்வாதிகார வழிமுறைகளுக்கு அடிபணியத் தள்ளப்பட்டுள்ளது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved