WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு :
ஈராக்
Irbil suicide bombings aggravate tensions in northern Iraq
வடக்கு ஈராக்கில் கொந்தளிப்பை பெருக்கிவிட்ட இர்பில் தற்கொலைக் குண்டு வெடிப்புக்கள்
By James Conachy
5 February 2004
Use this version to
print |
Send this link by email |
Email the author
ஈராக்கின் வடக்கு நகரான இர்பிலில் அமெரிக்க ஆக்கிரமிப்பை ஆதரித்து நிற்கும் இரண்டு
முக்கிய குர்துக்கள் கட்சிகளின் கூட்டத்தில், சென்ற ஞாயிறன்று ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்
தாக்குதல்களில் கடுமையான உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. குர்துஸ்தான் ஜனநாயகக் கட்சி (KDP)
மற்றும் குர்துஸ்தான் தேசபக்த யூனியனைச் (PUK)
சேர்ந்த பிராந்தியத் தலைவர்கள் உட்பட குறைந்த பட்சம் 101
பேர்கள் பலியானார்கள். மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். மேலும் பல உடல்கள் இடிபாடுகளுக்கிடையிலிருந்து
மீட்கப்பட்டு வருவதால், கடுமையான காயமடைந்தவர்கள் மடிந்து கொண்டிருப்பதால் சாவு எண்ணிக்கை 140 ஆகக்கூட
உயரலாம்.
இந்த தாக்குதல்கள் கவனமாகத் திட்டமிட்டு நடந்ததைக் கோடிட்டுக் காட்டுகின்றன.
KDP
மற்றும் PUK
ஈது அல் அதா (Edi al-Adha)
கொண்டாட்டத்தையொட்டி இர்பிலில் தங்கள் அலுவலகங்களைத் திறந்தன.
நூற்றுக்கணக்கான மக்கள் அந்தக் கட்டடங்களில் குவிந்து விட்டனர். குண்டுதாரிகள், தங்களது உடலைச் சுற்றி
சக்தியுள்ள வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு முஸ்லீம் மத போதகர் வேடத்தில் உள்ளே நுழைந்து குர்து தலைவர்களுக்கு
அருகில் சென்று, காலை 10-45 மணிக்கு குண்டுகளை வெடிக்க வைத்தனர். கார்க் குண்டுகள்
வெடிப்பதைத் தடுப்பதற்காக பாதுகாப்புக்கள் முடுக்கிவிடப்பட்டிருந்தபோதிலும், ஒரே நேரத்தில் இக்குண்டுகள்
வெடித்தன.
PUK போராளியொருவர் பிரிட்டனின்
''கார்டியன்'' செய்திப்பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறினார். ''நான் பல போர்க்களங்களில் போர்
புரிந்திருக்கிறேன். இதைப்போன்று நான் எதையும் கண்டதில்லை. எல்லாமே அழிந்துவிட்டன. கைவிரல்கள், கால்கள்,
சிதைந்துவிட்ட முகத்தின் பாகங்கள் எல்லாப் பக்கங்களிலும் சிதறிக்கிடந்தன'' என்றார். முன்னாள் அமெரிக்கத் இராஜதந்திரியும்,
தற்போது இர்பிவில் இருப்பவருமான பீட்டர் கல்பிரத் (Peter Galbraith)
''உடல்கள் சிதறிக் கிடக்கின்றன. அவற்றை சேகரிப்பதற்கு அவர்கள் முயன்று வருகிறார்கள். அமெரிக்கா
தொடுத்துள்ள போரில் மிகப்பெரும் நண்பர்களில் ஒரு அமைப்பாக செயல்பட்டுவரும் குர்து ஜனநாயகக் கட்சிக்கு
இது மிகப்பெரிய அழிவை, அதிர்ச்சியைத் தருகின்ற சம்பவமாகும்'' என்று ராய்ட்டர் செய்தி ஸ்தாபனத்திற்கு அளித்த
பேட்டியில் குறிப்பிட்டார்.
KDP நடத்தி வருகின்ற இர்பில் மாகாண
அரசாங்கத்தின் துணைப் பிரதமராக பணியாற்றி வந்த சமி அப்துல் ரஹ்மான் என்பவர் கொல்லப்பட்டவர்களில்
ஒருவராவர். குறைந்த பட்சம் இதர இரண்டு அமைச்சர்கள் மற்றும் KDP
யின் கவர்னர், துணை கவர்னர், மற்றும் இர்பில் போலீஸ் தலைமை அதிகாரி ஆகியோர் இத்தாக்குதலில்
பலியாகிவிட்டனர். PUK ன் பேஸ்மேர்கா (Peshmerga)
படையின் தளபதி மற்றொரு குண்டுவெடிப்பில் பலியானார். அதே போன்று இதர 5 முன்னணி PUK
தலைவர்களும் பலியாயினர்.
குர்தீஸ் அமைப்புக்களும் அமெரிக்காவும் இந்த குண்டு வெடிப்பிற்கு ஒஸாமா
பின்லேடனின் அல்கொய்தா அமைப்பும் குர்திஸ் இஸ்லாமிய அடைப்படைவாத குழுவான அன்ஸார் அல் இஸ்லாமும்
காரணமென்று குற்றம்சாட்டியுள்ளன. அன்ஸார் அல் இஸ்லாம் அமைப்பை சார்ந்த உறுப்பினர்கள் இந்த
தாக்குதல்களை நடத்துவதற்கு உள்நோக்கத்தோடு செயல்பட்டிருப்பதற்கு அடிப்படை காரணம் உள்ளது. சென்ற
மார்ச் மாதம் அமெரிக்க ஆக்கிரமிப்பு நடந்த போது ஈராக்-ஈரான் எல்லையில் அமைந்திருந்த அன்ஸர் அல்
இஸ்லாம் தளங்களில் அமெரிக்க விமானப்படை விமானங்களும், விமானந்தாங்கிக் கப்பல் மற்றும் ஏவுகணைகளும்
தாக்குதல் நடத்தின. அந்த நேரத்தில் PUK
படையைச் சோர்ந்தவர்கள் 15 கிராமங்களிலிருந்து அந்த அமைப்பை
வெளியேற்றுவதற்காக ரத்தக் கிளறி தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்.
இந்தக் குண்டுவெடிப்புக்களை யார் நடத்தியிருந்தாலும், ஈராக் மீது அமெரிக்கா
ஆக்கிரமித்த நேரத்தில் நடத்தப்பட்ட குண்டுவீச்சு தாக்குதல்கள் தொடர்பாக ஈராக்கில் நிலவுகின்ற ஆழமான
எதிர்ப்புணர்வை எதிரொலிப்பதாக அமைந்திருக்கின்றது. தற்போது
KDP மற்றும்
PUK கட்டுப்பாட்டில் இன்றைக்கு இருக்கின்ற பகுதிகளிலும்
இத்தகைய தாக்குதல்களை அமெரிக்கா நடத்தியது. அமெரிக்கா ஆக்கிரமிப்பு செய்திருப்பதை ஆதரிப்பவர்கள்
அல்லது அமெரிக்கா ஈராக்கில் அமைத்திருக்கும் நிர்வாகக் குழுவில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் ஆகியோருக்கு
எதிராக மற்றும் அமெரிக்காவை ஆதிரிக்கின்ற கட்சிகளுக்கு எதிராக ஈராக் முழுவதிலும் தாக்குதல்கள் அதிகரித்துக்
கொண்டிருக்கின்றன. சென்ற மாதம்தான் ஈராக் கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டம் பாக்தாத்தில் நடைபெற்றது. இக்கட்சி
பொம்மையாட்சியின் ஓர் அங்கமாக இருக்கின்றது. அந்தக் கூட்டத்திலும் குண்டுவீச்சு தாக்குதல் நடந்தது.
KDP மற்றும் PUK
அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகொண்டிருப்பதில் நீண்ட வரலாறு
படைத்தவை. 1990 கள் முழுவதிலும், அமெரிக்கா விதித்த வடக்கு ஈராக் பகுதியில் பறப்பதற்கான
(No fly zone) கட்டுப்பாடுகளை பயன்படுத்தி, மூன்று மாகாணங்களில்
குர்து இனமக்கள் மிகப்பெருமளவில் வாழ்வதை அடிப்படையாகக் கொண்டு தங்களது மேலாதிக்கத்தை நிலைநாட்டிக்
கொண்டன. அந்தப் பகுதிகள் ஆதிக்கப் போட்டி போர்க்களமாக மாற்றப்பட்டன. இரண்டு கட்சிகளுமே ஒன்றோடு
ஒன்று மோதிக்கொண்டு தங்களது மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதில் போராடின. ஐ.நா-ஈராக் மீது விதித்த
பொருளாதார தடைகளின் விளைவாக எண்ணெய் மற்றும் சரக்குகளின் இலாபம்தரும் வர்த்தகம் வளர்ந்தது. அதை
கட்டுப்படுத்தவதிலும் தங்களது ஆதிக்கத்தில் அதனைக் கொண்டு வருவதிலும் இரண்டு கட்சிகளுமே சண்டையிட்டு வந்தன.
KDP மற்றும் PUK
ஆகிய இரண்டு அமைப்புக்களுக்கும் அமெரிக்கா நிதியுதவியையும் போர்ப் பயிற்சியையும் அமெரிக்க நாடாளுமன்றத்தில்
1998 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஈராக் விடுதலை சட்டத்தின் கீழ் வழங்கி வந்தது. இப்படிப்பட்ட புதிய
வாய்ப்புக்களை உணர்ந்து இரண்டு கட்சிகளுமே தங்களது வேறுபாடுகளை கைவிட்டு ஈராக் மீது அமெரிக்க
ஆக்கிரமிப்பிற்கு தயாராகும்போது சமரசத்திற்கு வந்துவிட்டன. சென்ற மார்ச் மற்றும் ஏப்ரலில் ஆக்கிரமிப்பு
படையெடுப்பின்போது, அமெரிக்க சிறப்புப்படைகள் மற்றும் பாராசூட் படையினருடன் வடக்குப் பகுதியில்
KDP மற்றும் PUK
படையினர் இணைந்து சண்டையிட்டார்கள் மற்றும் பாக்தாத்திற்குள் அமெரிக்க துருப்புக்களுடன் இணைந்து
நுழைந்தார்கள். இரண்டு கட்சிகளுமே உடனடியாக அமெரிக்கா நியமித்த இடைக்கால அரசாங்கத்தில் சேர்த்துக்
கொள்ளப்பட்டன. அத்துடன், அந்த இரு கட்சிகளின் இராணுவத்தினர்களிடம் இருக்கும் ஆயுதங்களை கைவிடச்
செய்வதற்கு அமெரிக்க இராணுவம் எந்தவிதமான முயற்சியும் செய்யவில்லை.
ஹூசேனின் பாத்திச ஆட்சி வீழ்ந்ததும், குர்தீஸ் கட்சிகள் வடக்குப் பகுதியில் தங்களது
கட்டுப்பாட்டை நிலைநாட்ட வேண்டுமென்று வலியுறுத்த தொடங்கினர். அதுதான் தங்களுக்கு தரப்படவேண்டிய வெகுமதி
என்றும் கோரின. குர்தீஸ் கட்சிகள் புதிய ஈராக்கின் அரசியல் சட்டம் கூட்டாட்சி அடிப்படையில் அமைய வேண்டும்
என்றும், தங்களது கட்டுபாட்டிலுள்ள மாகாணங்கள் தன்னாட்சியுரிமை கொண்டவை என்று விளக்கம் தரவேண்டும்
என்றும், தன்னாட்சியுரிமை கொண்ட குர்தீஸ் மண்டலம் உருவாக்கப்படவேண்டும் என்றும் கோரி வருகின்றன.
இர்பில் நகரத்தில் குண்டுவெடிப்புக்கள் நடைபெற்றதைத் தொடர்ந்து
KDP மற்றும்
PUK
ஆகியன, குர்தீஸ் தன்னாட்சி கோரிக்கையில் இரண்டு அமைப்புக்களுமே இணைந்து பணியாற்ற வேண்டிய அவசியத்தை
உருவாக்கியிருப்பதாக அறிவித்தனர். குர்திஸ் கட்சிகள் வடக்கில் ஒரே மண்டல அரசாங்கத்தை உருவாக்கி அடுத்த
ஆண்டு தேர்தல்களை நடத்துவதற்கு திட்டமிட்டு நடவடிக்கைகள் முடுக்கி விட்டிருக்கின்றன. தெற்கு மாகாணங்களில்
என்ன நடக்கிறது? என்பதைப்பற்றி தங்களுக்கு கவலையில்லையென்றும் அறிவித்துள்ளன.
இர்பில் நகரத்தில் மாணவர்களுக்காக நடத்தப்பட்ட இறுதி ஊர்வலங்கள்,
தொழுகைகள், மற்றும் பேரணிகளில் ஆவேசமான உணர்வுகள் வெளிப்பட்டன. குர்தீஸ் தன்னாட்சியுரிமை மட்டுமல்ல,
ஈராக்கிலிருந்து முழுமையான சுதந்திரம் வேண்டும், பக்கத்து நாடுகளிலுள்ள குர்து இனமக்களை ஒன்று சேர்த்து
''அகண்ட குர்தீஸ்தானை'' அமைக்கவேண்டும் என்ற அளவிற்குக்கூட ஆவேசக் குரல்கள் எழுப்பப்பட்டன.
கார்டீயனுக்கு குர்து இனத்தவர் ஒருவர் பேட்டியளித்தபோது ''தற்போது நாம் நமது உரிமைகளை வலியுறுத்த
வேண்டும். நாங்கள் கூட்டாட்சி அடிப்படையை விரும்புகிறோம். ஆனால் எங்களது நோக்கம் அதற்கும்
அப்பாற்பட்டதாகும். இதர நாடுகளிலுள்ள குர்து இன மக்களோடும் நாம் ஒன்று சேரவேண்டும். அரபு மக்கள்
எப்படி அரபு தாயகம் பற்றி பேசுகிறார்களோ அதே அடிப்படையில் நாம் ஒன்றுசேர வேண்டும்'' என்று
குறிப்பிட்டார்.
குர்து மக்களின் கோரிக்கையானது, புஷ் நிர்வாகத்திற்கு இருதலைக்கொள்ளி
போன்றதொரு சங்கடத்தை உருவாக்கியுள்ளது. அந்தக் கோரிக்கைகளை புஷ் நிர்வாகம் ஏற்றுக்கொள்ள மறுத்தால்
ஈராக்கில் அமெரிக்க படைகளுக்கு எதிராக நிலவும் எதிர்ப்பு உணர்வுகளின் புதிய களம் ஒன்றிற்கு வழிவகுத்ததாக
ஆகிவிடும். கோரிக்கையை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளுமானால் ஈராக்கின் இதர பகுதிகளில் அமெரிக்கப்படைகளுக்கு
எதிர்ப்பு தீவிரமாகும் மற்றும் அந்த மண்டலத்திலுள்ள இதர அரசாங்கங்கள் எதிரிகளாகிவிடும்.
கிர்குக் பகுதியிலுள்ள அரபு மற்றும் துருக்குமானி சமுதாயங்கள் தங்களது
பகுதி குர்தீஸ் கட்டுப்பாட்டில் வந்துவிடுமானால் இன ஒதுக்கல் அடிப்படையில் தங்களை விரட்டி விடுவார்கள் என்று
அஞ்சுகிறார்கள். ஜனவரி 27 ல் அரபு இன மக்களின் தலைவர்கள் கிர்குக் நகரில் குர்தீஸ் கோரிக்கைகளுக்கு
எதிராக கண்டனப்பேரணி நடத்தினர். ஒரு இனக்குழுவின் ஷேக் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும்போது, கிர்குக்கை
விட்டு அரபு மக்களை நாங்கள் விரட்டிவிட முடியாது. ஏனென்றால் இந்த நகரம் எல்லோருக்கும் சொந்தமானது.
ஈராக்கை துண்டாட விரும்புகின்ற குர்தீஸ் கட்சிகளின் அறிக்கைகளை நாங்கள் கண்டிக்கிறோம்'' என்று கூறினார்.
''கூட்டாட்சி தத்துவ அடிப்படை கிர்குக்கில் உள்நாட்டுப் போருக்கு தூபம் போட்டுவிடும்'' என்று மற்றொருவர்
அறிவித்தார்.
ஈராக்கின் அரபு மாகாணங்களில் வாழ்கின்ற ஷியா மற்றும் சன்னி பிரமுகர்களில் குறிப்பிடத்தக்க
சக்திகள் கருதுவது என்னவென்றால், ஈராக் இனங்கள் அடிப்படையில் யூகோஸ்லாவியா பாணியில் சிதைவதற்கான
முதல் அடிதான் குர்தீஸ் கோரிக்கைகள் என்பதாகும். வடக்கு எண்ணெய் வயல்களிலிருந்து ஈராக்கின் மொத்த எண்ணெய்யில்
40 சதவிகிதம் வருவாய் கிடைக்கின்றது. பாக்தாத்திலுள்ள மத்திய அரசாங்கத்திற்கு சேர வேண்டிய இந்த வருவாய்
தன்னாட்சி உரிமை கொண்ட குர்தீஸ் அரசாங்கத்திற்கு கிடைப்பதை அவர்கள் விரும்பவில்லை. ஷியாக்களின் முக்கிய
மதத் தலைவரான அலி-அல்- உசைனி அல்-ஸிஸ்தானி ஈராக்கின் இடைக்கால அரசாங்கம் உத்தேசித்துள்ள கூட்டாட்சி
அடிப்படையிலான ஆலோசனைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். ஷியாக்கள் அத்தகைய ஆலோசனை எதுவாகயிருந்தாலும்
அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். குர்தீஸ் அமைப்பு அல்லாத எந்தக் கட்சியும், அமைப்பும் கிர்குக் குர்தீஸ்
கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை.
ஈராக்கின் பக்கத்து நாடுகளான சிரியா, மற்றும் ஈரான் ஆகியவை ஈராக்கின் குர்துகளுக்கு
தன்னாட்சியுரிமை வழங்கப்பட்டால் அதன் மூலம் அகண்ட குர்தீஸ்தான் உணர்வுகள் தங்களது சொந்த நாடுகளில்
வாழ்கின்ற கணிசமான குர்தீஸ் சிறுபான்மையினரிடம் உருவாகலாம் என்று கருதுகின்றனர். மற்றும் தங்களது தேசிய
ஒருமைப்பாட்டிற்கு நீண்டகால அடிப்படையில் அச்சுறுத்தலாக அமைந்து விடும் என்றும் கருதுகின்றன. குறிப்பாக
துருக்கி ஆட்சி கலவரம் அடைந்துள்ளது. குர்தீஸ் தனிநாடு கோரி குர்தீஸ்தான் தொழிலாளர் கட்சி (PKK)
10 ஆண்டுகளாக நடத்திவந்த ஆயுதம் தாங்கிய போராட்டத்தை
ஒடுக்குவதற்காக துருக்கி மிகக்கொடூரமான ஒடுக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டது.
துருக்கி-ஈராக் எல்லையில் 5,000
PKK யின் படைகள்
தலைமறைவாக இருப்பதாக நம்பப்படுகிறது. இதுவரை துருக்கி
PKK யின்
படைகளை தாக்குவதற்கு தனது படைகளை அனுப்பக்கூடாது என்று அமெரிக்கா தடுத்து வந்திருக்கிறது. ஏனென்றால்
தனக்கு ஆதரவாக ஈராக்கில் இயங்கிக் கொண்டுள்ள குர்தீஸ் இராணுவம், துருக்கி இராணுவத்துடன் போராடுவதற்கு
சென்றுவிடுவார்கள் என்று அமெரிக்கா கருதுகிறது. அதே நேரத்தில் ஈராக்கின் தெற்கு பகுதிகளில் தனது
படைகளுக்கு எதிர்ப்பு அதிகரித்துக் கொண்டு வருவதால்
PKK விற்கு எதிராக அமெரிக்கா தனது சொந்த நடவடிக்கை
எதையும் எடுக்கவில்லை.
அமெரிக்கா தற்போது பல்வேறு சமரசத் தீர்வுகளை திணிப்பதற்கு முயன்று
வருகின்றது. அதன்மூலம் பல்வேறு குழுக்கள் மற்றும் அவர்களின் நலன்களுக்கு ஏமாற்றமே ஏற்படும். அடிப்படையாக
புகைந்து கொண்டுள்ள கொந்தளிப்புக்கள் அதிகரிக்கும். மற்றும் அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகளுக்கு எதிரான
உணர்வுகள்தான் அதிகமாகும் என்று எல்லா வகையான சமிக்கைகளும் உருவாகியுள்ளன.
ஜனவரி 28 ல் குண்டு வெடிப்பிற்கு முதல் நாள் ஈராக் ஆக்கிரமிப்புப் படைகளின்
தலைமை அதிகாரியான போல் பிரம்மர் (Paul
Brermer) ஈராக்கை பயங்கரவாத பூமியாக
PKK பயன்படுத்திக்
கொள்வதை அமெரிக்கா தடுத்து நிறுத்த தொடங்கும் என்று அறிவித்தார்.
PKK படைகளை
வேட்டையாடுவதில் அமெரிக்கப்படைகள் ஈடுபடுத்தப்படுவதைத் தவிர்க்க முடியாது என்றும் ஒரு அமெரிக்க அதிகாரி
தெரிவித்தார். இந்த அறிவிப்பை துருக்கி அரசாங்கம் வரவேற்றுள்ளது.
PKK விற்கு எதிரான முயற்சி வடக்கு ஈராக்கிற்கு
கட்டுப்படுத்தப்பட்ட தன்னாட்சி வழங்கப்படுவதற்கு துருக்கி தெரிவித்துவரும் எதிர்ப்பை தணிக்கும் நோக்கில் அமைந்ததாகும்.
ஈராக்கின் குர்து மக்கள் தங்களது நலன்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுவிட்டதாக கருதுவதற்கான அடையாளங்கள்
உடனடியாகத் தோன்றின. குர்து அரசியல்வாதியான முகமது உதுமான் ''அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்திருப்பது
துருக்கியை திருப்திப்படுத்துவதற்குத்தான்'' என்று பைனான்சியல் டைம்ஸிற்கு தெரிவித்தார்.
கிர்குக் தங்களது கட்டுப்பாடில்லாத அளவிற்கு மட்டப்படுத்தப்பட்ட தன்னாட்சி உரிமை
வழங்கும் புதிய அரசியல் சட்டத்திற்கு சம்மதிக்குமாறு அமெரிக்கா
KDP மற்றும்
PUK அமைப்புக்களை மிரட்டி வருகிறது. இதனைக்கண்டு குர்தீஸ் தேசியவாதிகளில்
தீவிரமானவர்கள் அமெரிக்கா தங்களுக்கு மிகப்பெருமளவில் துரோகம் செய்துவிட்டதாக கருதுவது அதிகரித்து வருகிறது.
கிர்குக்கின் எதிர்காலம் பற்றி சென்ற சனிக்கிழமை பாக்தாத்தில் தொடக்ககட்ட அரசியல் சட்ட விவாதம் நடைபெற்றது.
''குர்தீஸ் அதிகாரிகள் எல்லை தொடர்பான சமரசத்திற்கு உடன்படுவதாக கூறப்பட்டாலும் இன்னும் ஈராக்கின்
எண்ணெய் வருவாயை பகிர்ந்து கொள்வது குறித்து விவாதித்து கொண்டிருக்கிறார்கள்'' என்று வாஷிங்டன் போஸ்ட்
பிப்ரவரி 1 ல் செய்தி வெளியிட்டது.
இர்பில் குண்டு வெடிப்புக்களை தொடர்ந்து
KDP மற்றும்
PUK ஆகியவை எந்தவிதமான சமரசத்திற்கும் இடம் கொடுக்கக்கூடாது
என்ற நிர்பந்தத்திற்கு இலக்காகும். இந்தப் படுகொலைகளைப் பார்த்த அமெரிக்காவின் முன்னாள்
குரோசியா தூதர் பீட்டர் கல்பிரத், நியூயோர்க் டைம்ஸில் தலையங்கப் பகுதியில் எழுதியுள்ள தலையங்க சிறுகுறிப்பில்
''குண்டு வெடிப்புக்கள் அவர்களது அரசியல் உறவுகள் நிலைப்பாட்டை மிகக்கடுமையாக மாற்றிவிடும் தன்மை கொண்டதாகும்.
குர்து இனமக்கள் தங்களது சொந்த இராணுவம், உள்ளூர் போலீஸ் பாதுகாப்பு சேவைகள் ஆகியவற்றை நம்பியே
வாழவேண்டிய சூழ்நிலை பெருகி வருவதாக அவர்கள் கருதுகின்றனர். ஏனென்றால் தெற்கிலிருந்து அவர்களுக்கு
வருகின்ற ஆபத்துக்களிலிருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள அத்தகைய தனி ஏற்பாடுகள் சிறந்தது என்று கருதுகின்ற
நிலை ஏற்பட்டுவிட்டது'' என்று எழுதியிருக்கிறார்.
அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது சொந்த நலன்களை கருத்தில் கொண்டு மத்திய கிழக்கை
சீரமைக்க மேற்கொண்ட முயற்சி, எதிரும் புதிருமான சக்திகள் என்கின்ற குளவிக்கூட்டில் கல்லெறிந்தது போன்ற நிகழ்ச்சியாக
அமைந்துவிட்டது.
Top of page |