World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா "Bush's WMD probe is a fraud," says SEP presidential candidate "பேரழிவு ஆயுதங்கள்தொடர்பான புஷ்ஷின் நீதி விசாரணை" அறிவிப்பு ஒரு மோசடி என்கிறார் சோசலிச சமத்துவக் கட்சியின் அமெரிக்க ஜனாதிபதிக்கான வேட்பாளர் 3 February 2004 பேரழிவு ஆயுதங்கள் தொடர்பான அமெரிக்க நிர்வாகத்தின் கூற்று தொடர்பான புலனாய்வுத்துறையின் தோல்விகள் எனக் கூறப்படுபவை குறித்து "சுதந்திரமான இரு தரப்பு விசாரணைக்கமிஷன்" அமைக்கப்படும் என்று திங்களன்று அதிபர் புஷ், அறிவித்ததற்கு பதிலாக சோசலிச சமத்துவக் கட்சியின் அமெரிக்க ஜனாதிபதிக்கான வேட்பாளர் பில்வான் ஒகென்னால் பின்வரும் அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது இது இணையத்திலிருந்து இறக்கம் செய்வதற்கும் விநியோகிப்பதற்கும் பிடிஎப் கோப்பில் இருக்கிறது. ஈராக்கின் பேரழிவு ஆயுதங்கள் குறித்து "புலனாய்வுத்துறை தவறுகள்", குறித்து விசாரிக்க சுதந்திரமான நீதி விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என்ற புஷ்ஷின் அறிவிப்பு அமெரிக்க மக்களின் அறிவுத்திறனை அவமதிக்கும் செயலாகும். 900-மில்லியன் டாலர்கள் மற்றும் 1400 ஆயுத வேட்டைக்காரர்களுடன் தலைமை தாங்கி வழிநடத்திய ஒன்பது மாதங்கள் தொடர்ந்த தேடலுக்குப் பின்னர், டேவிட் கே (David Kay), கடந்த வாரம் அது போன்ற ஆயுதங்களின் சுவடு கூட இல்லை என அறிவித்தது மட்டுமல்லாமல் அவரது மதிப்பீட்டின் படி அது போன்ற எந்தவிதமான ஆயுதங்கள் அமெரிக்கப் படையெடுப்புக்கு முன்னர் கூட இருந்ததிருக்க முடியாது என்பதை உணர்த்தினார். இதற்கு பதில் சொல்லும் விதத்தில், ஜனநாயகக் கட்சியினரின் மறைமுக ஆதரவுடன் புஷ் நிர்வாகம் தேர்ந்தெடுத்த குழு ஒன்றின் மூலம் ஈராக் ஆயுதங்கள் என கூறப்படுவன குறித்து அமெரிக்க புலனாய்வுத்துறை முகவாண்மையினரால் செய்யப்பட்ட "மிகை மதிப்பீடுகள்" அல்லது "குறைபாடுகள்" என்று பல்வேறுவிதமாக விவரிக்கப்பட்டுவருவதைக் குறித்து விசாரணை செய்ய தயாராக இருப்பதாக அறிவித்தது. விஷயத்தை இப்படி அமைத்ததன் மூலம், விசாரிப்புக்கு உள்ளாக வேண்டிய விஷயங்கள் குறித்து நிர்வாகம் கமிஷனின் முடிவு எப்படி இருக்க வேண்டும் என்பதை விசாரணை ஏதும் ஆரம்பிப்பதற்கு முன்பே உணர்த்தியிருக்கிறது. ஈராக்கிய பேரழிவு ஆயுதங்கள் குறித்தான தவறான அறிக்கைகள் உணர்ச்சிப் பசப்புடைய புலனாய்வாக இருந்தது என்று கருத காரணங்கள் ஏதுமில்லை. மாறாக வெள்ளை மாளிகையின் முடிவுக்கு ஒத்துப்போகும் வகையில் புலனாய்வுத்துறையின் பணிகள் அமைந்திருந்தன. இது புலனாய்வுத்துறையினரின் தவறான கணிப்புகள் அல்லது மிகைப்படுத்தல்கள் ஆகியவற்றைப் பற்றி விஷயம் அல்ல. ஈராக் பேரழிவை உண்டாக்கக்கூடிய இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களை பெருமளவில் வைத்திருப்பதாகவும் அணு ஆயுதங்களை எந்த நேரமும் பெற்று விடும் நிலையில் இருப்பதாகவும் அதற்கான மறுக்க முடியாத ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் நிர்வாகமானது திரும்பத்திரும்ப கூறிவந்தது. உயர் அதிகாரிள் இந்த ஆயுதங்கள் துல்லியமாய் எங்கே இருக்கின்றன என்பதும் தெரியும் என்றும் வலியுறுத்தி வந்திருக்கின்றனர். இப்போது போர் ஆரம்பித்து ஒருவருடம் முடியப்போகும் இந்தத் தறுவாயில், அவர்கள் அத்தகைய ஆயுதம் சம்பந்தமான சிறு குப்பை கூட ஈராக் முழுமையும் தேடியும் கிடைக்கவில்லை என்பதை ஒப்புக் கொள்ளும் கட்டாயத்தில் உள்ளனர். அங்கே எந்தொரு ஆயுதங்களும் கிடைக்கவில்லை என்றால், போர் தொடங்குவதற்கு முன்னர் ஐக்கிய நாடுகளின் ஆய்வு அதிகாரிகள் உறுதி அளித்த, ஏதோஒன்று இருந்தற்கான தடயமும் ஆரம்பத்தில் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. இதிலிருந்து கிடைக்கும் மறுக்க முடியாத உண்மை என்னவென்றால் அமெரிக்க மக்களை போரில் இழுத்துவிடுவதற்கான ஒரு சாக்கை அரசாங்கம் உற்பத்தி செய்தது என்பதாகும். அமெரிக்க மக்களை தேவையற்ற இந்த யுத்தத்திற்கு இட்டுச் சென்றதன் மூலம் ஈராக்கிலுள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். குறைந்தது 525- அமெரிக்க இராணுவத்தினர் தங்களது உயிரை இழந்திருக்கின்றனர் மற்றும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு மேல் காயமடைந்துள்ளனர். உண்மையில் சுதந்திரமான விசாரணைக்கமிஷன் என்றால் இதுதான் ஆரம்ப விசாரணைக்குரியதாக இருக்க வேண்டும். அத்தகைய குழுவின் முன் இருக்கவேண்டிய கேள்விகள் என்னவாக இருக்க வேண்டும்: சட்டத்திற்குப் புறம்பான ஒரு யுத்தத்தை நிகழ்த்துவதற்காக அமெரிக்கா மற்றும் உலக மக்களுக்கு பொய் கூறியதற்கு யார் பொறுப்பு? பேரழிவு ஆயுதங்கள் பற்றிய பொய்களின் பின்னே மறைந்து கிடப்பது யாருடைய நலன்கள்? யார் லாபமடைய இந்த யுத்தம் நடாத்தப்பட்டது? இதை செய்து விட்டு நிர்வாகம் இதன் பொறுப்பிலிருந்து எப்படி எளிதாக விடுபட அனுமதிக்கப்பட்டது? இந்தப் பிரச்சினை புலனாய்வுத் துறையினரின் தோல்விகள் அல்ல, மாறாக அமெரிக்க ஜனநாயகத்தின் பெரும் தோல்வியாகும், செய்தி ஊடகம் மற்றும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அரசியல் வாதிகள் உள்பட அரசியல் அமைப்பின் ஒவ்வொரு பகுதியையும் குறிப்பாகச் சுட்டுகிறது. நிர்வாகத்தினரும் அதன் சார்பில் பேசுபவர்களும் இப்போது சொல்லும் காரணங்கள் என்னவென்றால் தவறான புலனாய்வுத்துறை தகவல்களினால் ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருக்கிறது மற்றும் அதனால் நிச்சயமான உடனடி ஆபத்தும் இருக்கிறது என நம்பியதாகவும் அனைவரும் முட்டாளாக்கப்பட்டு விட்டதாகவும் கூறுகிறார்கள். ஆனாலும் மில்லியன் கணக்கில் பொதுமக்கள் அமெரிக்காவிலும், கோடிக்கணக்கில் உலகம் முழுவதும் உள்ள மக்களும் அரசாங்கத்தின் பொய்களை நிராகரித்து வீதிகளில் அணிவகுத்தார்கள். சோசலிச சமத்துவக் கட்சி போர் ஆரம்பிப்பதற்கும் முன்னால் அரசாங்கத்தின் கூற்றுக்களை மறுத்து இருக்கின்றது. ஈராக்குடனான போருக்கு காரணம் ஈராக்கிய பேரழிவு ஆயுதம் அல்ல; ஆனால் அமெரிக்காவின் பெரு நிறுவனங்களின் நெடுநாளைய உந்துதலான உலகின் இரண்டாவது பெரிய எண்ணெய் சேர்மஇருப்பு வளத்தை தங்களது ஆளுமையின் கீழ் கொண்டுவர வேண்டும் மற்றும் அமெரிக்க இராணுவப்படைகளை மத்திய கிழக்கு நாடுகளின் மையத்தில் இருத்துவதின் மூலம் எதிர்கால போட்டியாளர்கள் மீதாக மூலோபாய சாதக நிலைமையை ஈட்டிக் கொள்ளவும்தான் இந்த யுத்தம் என்பதை எங்கள் கட்சி அப்போதே விளக்கி இருக்கிறது. "சுதந்திரமான" கமிஷன் என்று புஷ்ஷினால் முன்மொழியப்படும் இந்த விசாரணைக் கமிஷன் கண்துடைப்பு செய்வதற்காக மிக கவனமாக வடிவமைக்கப்படும். அரசியல் ரீதியிலும் முன்னாள் புலனாய்வுத் துறையினரில் நம்பிக்கைக்கு உகந்தவர்களையும் தேர்ந்தெடுப்பார்கள். விரும்பியபடி முடிவுகளை அளிக்க, நம்பிக்கைக்குரிய முன்னாள் புலனாய்வுத்துறை அதிகாரிகள் மற்றும் அரசியற் குதிரைகள் கொண்ட லாயத்திலிருந்து அதன் ஒவ்வொரு உறுப்பினர்களையும் புஷ் பொறுக்கி எடுப்பார். இதையும் மீறி ஒருவேளை கமிஷன் நிர்வாகம் பற்றி விமர்சனங்களுடன் தீர்ப்பு தந்தால் அக் குறைந்த பட்ச ஆபத்திற்கு எதிரான உத்திரவாதமாக, அது அதன் முடிவுகளை நவம்பர் தேர்தல் முடியும் வரைக்கும் வெளியிடாது. உண்மை என்னவென்றால், இரு பிரதான கட்சிகளின் காரியாளர்களை அடிப்படையாகக் கொண்டு நிஜமாகவே சுதந்திரமான கமிஷன் அமைக்கப்பட முடியாது. ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியினர் ஆகிய இருவரும் இந்த விஷயத்தில் ஒத்த கருத்து உடையவர்கள்தாம். புஷ்ஷின் தேர்வுக்கு முன் இருந்த கிளிண்டன் நிர்வாகமும் பேரழிவு ஆயுதங்கள் குறித்தான மோசடித்தனமான புலனாய்வு தகவலை பயன்படுத்தி இல்லாத ஒன்றை 'இல்லை' என்று நிரூபிக்க' பாக்தாதை கோரியது- ஈராக்கை குண்டுவீசித் தாக்கி ஈராக்கை பட்டினி போட்டு பணியவைக்கும் கொள்கையை நியாயப்படுத்த இதனைப் பயன்படுத்தியது. காங்கிரசில் உள்ள ஜனநாயகக் கட்சியினரும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியில் நிற்கும் அதன் அனைத்து முன்னணி போட்டியாளர்களும் இப்போது -வேண்டுமென்றே கணக்கிடப்பட்ட சதிச்செயல் குறித்து அல்ல- "புலனாய்வுத்துறையின் தோல்விகள்" குறித்து விசாரணை செய்யும் விசாரணைக் கமிஷன் மோசடிக்கு ஒப்புக்கொண்டு உடன் செல்கின்றனர், ஏனெனில் அவர்கள் சமரசம் செய்து கொள்கின்றனர் மற்றும் புஷ்ஷைப் போலவே அவர்களுக்கும் மேற்பூச்சு தேவைப்படுகிறது. புஷ் நிர்வாகம் அமெரிக்க மக்களை எவ்வாறு ஈராக்கில் போருக்குள் இழுத்தது என்பதை ஒரு உண்மையான சுதந்திரமான கமிஷன் விசாரணை செய்ய வேண்டும் என்றால், பெரு முதலாளிகளின் இரு கட்சிகளுக்குமான எதிர்ப்பில் சுதந்திரமான உழைக்கும் மக்களின் பரந்த அரசியல் இயக்கத்தின் விளைவாகவே அது சாத்தியமாகும். சோசலிச சமத்துவக் கட்சி, அவ்வகையான ஒரு இயக்கம் உருவாக அரசியல் அடித்தளம் இடத்தான் 2004- ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றது. நானும் எனது இணை வேட்பாளருமாகிய ஜிம் லோரன்ஸும் மற்றும் அதேபோல சோசலிச சமத்துவக் கட்சியின் ஏனைய வேட்பாளர்களும் இரண்டு பெரும் கட்சிகளின் மற்றும் செய்தி ஊடகத்தின் ஈராக்கில் போர் தொடர்பான விஷயத்தில் அவர்களுடைய போலித்தனம், பொய்கள் ஆகியவற்றை தோலுரித்துக்காட்ட ஓய்வில்லாமல் போராடுவோம். ஈராக்கிலிருந்து அனைத்து அமெரிக்கப் படைகளையும் நிபந்தனை அற்றவகையில் வாபஸ்பெறுவதற்கான கோரிக்கைகளை தொடர்ந்து எழுப்புவோம், மற்றும் ஆக்கிரமிப்பு போரை தொடுக்க சதிசெய்ததற்கு -மற்றும் அதன் விளைவாக, ஈராக்கிய மக்கள் மீது அதேபோல கீழ்மட்ட அணிகளில் உள்ள அமெரிக்க படையினர் மீதாக கட்டாயமாக சுமத்தப்பட்ட ஆழமான துன்பங்களுக்கு- பொறுப்பானவர்கள் போர்க்குற்றங்களுக்கு பதில் சொல்ல வைக்கப்பட வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை தொடர்ந்து எழுப்புவோம். |