World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Israel: Sharon refuses to resign in face of corruption allegations

இஸ்ரேல்: ஊழல் குற்றச்சாட்டுக்கு முகங்கொடுத்தும் பதவி விலக ஷரோன் மறுப்பு

By Jean Shaoul and David Cohen
27 January 2004

Back to screen version

சொத்துக்கள் விற்பனையாளரும், ஷரோனின் ஆளும் லிக்குட் கட்சி அரசியல் தரகருமான டேவிட் அப்பல் (David Appel) மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்தும் இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷரோன் பதவி விலக மறுத்துவிட்டார். ஆனால் ஷரோன் இந்தக் குற்றச்சாட்டுக்களை சமாளிக்க தீர்மானிது, வழக்கத்திற்கு மாறாக ஷரோன் இரண்டு பத்திரிகைகளுக்கு தொலைபேசி மூலம் தனிப்பட்ட அறிக்கையை பிரசுரிக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார்.

Yedioth Aharonoth பத்திரிகைக்கு அவர் ''நான் உங்களை தொலைபேசியில் அழைப்பதற்கு காரணம் எந்தத் தவறும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான். நான் பதவி விலகப் போவதில்லை. இதை நான் வலியுறுத்துகிறேன். நான் பதவி விலகப்போவதில்லை''. என்று ஷரோன் குறிப்பிட்டார்.

Ma'ariv பத்திரிகைக்கு ஷரோன் ''நான் கவனம் செலுத்திக் கொண்டு இருக்கவில்லை (கிரேக்க தீவு தொடர்பான புலனாய்வில்) காலையிலிருந்து இரவு வரை நான் பரபரப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். புலன் விசாரணையில் இருக்கும் பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதற்கு நேரத்தை ஒதுக்க நான் உத்தேசிக்கவில்லை. நான் பல பிரச்சனைகளில் கவனம் செலுத்தி வருகிறேன்'' என கூறினார்.

Jerusalem Post இதுபற்றி எழுதியிருப்பதாவது: ''ஷரோன், அவரது மகன் கிலாட் மற்றும் தொழிற்துறை, வர்த்தக, வேலை வாய்ப்பு அமைச்சர் எகுட் ஒல்மர்ட் ஆகியோருக்கு லஞ்சம் கொடுத்ததாக வர்த்தகர் டேவிட் ஏப்பல் மீதான குற்றச்சாட்டிற்கு பதிலளிக்க முனையவில்லை என்று அவரது பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். குற்றச்சாட்டு அறிவிக்கப்பட்ட பின்னர் ஷரோன் தனது நிகழ்ச்சி நிரலை மாற்றிக் கொள்ளவில்லை. பிரதமர் அலுவலகத்தில் வழக்கம் போல் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதை பொது மக்களுக்கு தெளிவாக உணர்த்தி வருகிறார். அவர் மீது குற்றம் சாட்டப்படும் சாத்தியக் கூறுகள் பற்றி அவர் கவலைப்படவில்லை என்று அவரது உதவியாளர்கள் தெரிவித்தனர். மற்றும் தனது பதவியிலிருந்து விலகுகின்ற உத்தேசம் எதுவும் அவருக்கு இல்லை.''

இந்த குற்றச்சாட்டு பட்டியல் பெரு வர்த்தகர்களுக்கும் இஸ்ரேல் அரசியல் நிர்வாகத்திற்குமிடையில் நிலவுகின்ற களங்கம்மிக்க உறவுகளை சித்தரித்துக் காட்டுகின்றது. ஷரோன் தமது கட்சியில் தலைமைப் பொறுப்பை பிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஷரோனுக்கு 100,000 டொலர்களையும், அவரது மகன் நிர்வாகத்திலுள்ள நிகேவ் என்னுமிடத்திலுள்ள சைக்கமோர் ரான்ச் தோட்டத்திற்கு (Sycamore Ranch estate) 580,000 டொலர்களை வழங்கியதாகவும் அப்பல் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுப் பட்டியலில் விபரம் தரப்பட்டிருக்கிறது.

ஷரோனின் புதல்வர் கிலாடிற்கு அந்த வர்த்தகர் 7,00,000 டொலர்களை வழங்கியதாகவும் மற்றும் ஆஜியன் தீவில் ஒரு சூதாட்ட விடுதியையும், சுற்றுலா வளாகத்தையும் கட்டுவதற்கு அவரது தந்தை கிரேக்க அரசாங்கத்திடம் பேசி ஏற்பாடுச்செய்து, திட்ட அனுமதி கிடைத்துவிட்டால் மேலும் 3 மில்லியன் டொலர்களைத் தருவதாகவும் மற்றும் மாதம் பல்லாயிரக்கணக்கான டொலர்களை ஊதியமாக தருவதாகவும் அவர்மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அந்தப் பணியை செய்வதற்குரிய கல்வித் தகுதியோ, அல்லது அனுபவமோ ஷரோனின் புதல்வருக்கு இல்லை என்பது அப்பலுக்கு தெரியும், கிரேக்க தீவுத்திட்டம் தொடர்ந்து செயல்படாது என்று தெளிவாகத் தெரிந்து கொண்ட பின்னரும் பணம் தொடர்ந்து கிலாட் ஷரோனுக்கு வந்துகெண்டே இருந்தது என்று குற்றச்சாட்டு பட்டியல் தெரிவிக்கிறது.

அந்த நேரத்தில் இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சராக இருந்த ஷரோன் அப்பல் சார்பில் கிரேக்க அரசாங்கத்திடம் பேசி தனது செல்வாக்கை பயன்படுத்தியதாகவும், அந்த நேரத்தில் ஜெருசலத்தின் மேயராக இருந்த இன்றைய துணை பிரதமர் மற்றும் வர்த்தகம் தொழில் வேலைவாய்ப்பு அமைச்சர் எகுட் ஒல்மர்ட் கிரேக்க அரசாங்கத்திடம் இஸ்ரேல் வர்த்தகர் சார்பில் பரிந்துரைத்ததாகவும், குற்றச்சாட்டு பட்டியலில் விபரம் தரப்பட்டிருக்கின்றது. அதே நேரத்தில் ஷரோனுக்கு அவரது கட்சி தலைமைப் பொறுப்பை ஏற்கச் செய்வதற்கான உதவிகளையும், தொண்டர்களையும் தந்து உதவுவதாக வர்த்தகர் உறுதியளித்திருந்தார். அப்போது ஷரோனின் போட்டியாளரான ஒல்மட்டிற்கு அதேபோன்ற உறுதி மொழிகளை தந்திருந்தார்.

இரண்டு அரசியல்வாதிகளுக்கும் அப்பல் லஞ்சம் கொடுத்ததற்கு காரணம் அவர்கள் இருவரும் இஸ்ரேலுக்கு வந்த கிரேக்க அரசியல்வாதிகளின் முக்கியமான தூதுக்குழுக்களுக்கு உரிய வரவேற்பு வழங்குவது அவசியம் என்பதற்காகத்தான். எதென்ஸ் மேயருக்கு ஆய்மெர்ட் அலுவலகத்தில் வரவேற்பு தரப்பட்டது. அந்த வரவேற்பில் ஷரோனும் அவரது புதல்வரும் கலந்து கொண்டனர் கிரேக்க வெளியுறவு துணை அமைச்சர் இஸ்ரேலில் அதிகாரபூர்வமாக சுற்றுப்பயணம் செய்வதற்கு ஷரோனின் வெளியுறவு அமைச்சகம் தான் முன்னின்று ஏற்பாடுகளை செய்தது. அப்பல் தனது விற்பனையை சிறப்பாக நடத்தவேண்டும் என்பதற்காகவே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுப் பட்டியல் தெரிவிக்கிறது.

கிரேக்க தீவு பேரம் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்று ஷரோன் இதற்கு முன்னர் பகிரங்கமாக அறிவித்ததற்கு முரணாக, குற்றச்சாட்டுப் பட்டியலில் ஷரோன் புதல்வர் பெயர் சேர்க்கப்பட்டிருக்கிறது.

Ha'aretz பத்திரிகை இது பற்றி எழுதியிருப்பதாவது: ''லிக்குட் கட்சி தலைமைக்கு 1999ல் ஷரோன் முயற்சிகளை மேற்கொண்ட காலத்தில் மூன்று இணையான வழிகளில் அப்பல்-ஷரோன் உறவு ஓடிக்கொண்டிருந்ததாக குற்றச்சாட்டுப் பட்டியல் தெரிவிக்கிறது. கிரேக்க தீவு விவகாரம் நடைபெற்றபோது வெளியுறவு அமைச்சராக இருந்த ஷரோன் தனது செல்வாக்கை முக்கிய கிரேக்க அரசாங்க அதிகாரிகளை தொடர்பு கொள்வதற்கு பயன்படுத்தினார். அதன் மூலம் அவரது மகத்தான தீவு சூதாட்ட விடுதிக்கு ஒப்புதலை பெற்றுத்தந்துவிட முடியும் என்று நம்பினார். மேலும் அப்பலின் பல்வேறு காணி வியாபார பேரங்களில் ஷரோனின் குடும்பம் லாட் பகுதியில் ஈடுபட்டதற்கு காரணம் அந்த நேரத்தில் மண்டலங்களை பிரிக்கும் சட்டத்தில் ஏற்படுத்தப்படும் மாற்றம் மூலம் மில்லியன் கணக்கான டொலர் மதிப்புள்ள விவசாய நிலங்களை, அப்பல் பல நூறு மில்லியன் டொலர் மதிப்புள்ள வர்த்தக மற்றும் குடியிருப்பு சொத்துக்களாக மாற்றிவிட முடியும் என்பதாலாகும்''.

அந்த Ha'aretz' தலையங்கம் ''இந்தக் குற்றச்சாட்டு ஆவணங்கள் அரசாங்க அதிகாரத்திலுள்ள பிரமுகர்கள் மற்றும் அரசியல் கட்சிகளில் செல்வாக்குள்ள தலைவர்கள் இவர்களோடு பணம் படைத்த பிரமுகர்கள் கொண்டிருந்த பல்வேறு வர்த்தக அரசியல் தொடர்புகளில் சிக்கலுள்ள பிரச்சனைக்குரிய தொடர்புகளை விளக்குகிறது. இஸ்ரேலின் வெளிநாட்டு அமைச்சகம் மூலமாக, தலைநகரின் நகரசபை வெளிநாட்டு அரசாங்கத்திற்கும் அதன் முதலீட்டிற்கும் மற்றும் தனியார் வர்த்தக முதலீட்டிற்கு உதவுகின்ற வகையில் இஸ்ரேலின் வெளிநாட்டு உறவுகளின் கவலையளிக்கும் நிலைமையையும் காட்டுகின்றது'' என விமர்சித்துள்ளது.

இந்த வழக்கில் ஷரோன் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்வதற்கு போதுமான சாட்சியம் உள்ளது என்று தற்போதைய சட்டமா அதிபர் எட்னா அர்பல் அறிவித்தார். இன்னும் சில நாட்களுக்குள் ஷரோனை மேலும் விசாரிப்பதற்கு தாம் கட்டளையிடப் போவதாகவும் அவர் அறிவித்தார். போலீஸ் குற்றவியல் புலன்விசாரணை துறையைச் சார்ந்த தளபதி மோஷி மிஸாரகி, அப்பல் தொடர்பான ஷரோனுக்கு எதிரான குற்றம் மிக வலுவானது சில வாரங்களில் புலன்விசாரனை பூர்த்தியாகிவிடும் என்று அறிவித்தார்.

இருப்பினும், ஷரோன் மீது வழக்கு தொடர்வதற்கான இறுதி முடிவை அடுத்த சட்டமா அதிபராக வரவுள்ள தற்போதைய துணை சட்டமா அதிபராக பணியாற்றிவரும் மெனாச்சம் மஜாஜ் எடுப்பார். அவர் ஷரோன் மீது குற்றம்சாட்டுவதற்கு முடிவு செய்துவிட்டால் விசாரணை முடிவு வரும்வரை அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகியாக வேண்டும். இஸ்ரேலில் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்படும் முதலாவது பிரதமராக இவர்தான் இருப்பார்.

ஷரோன் தனது தேர்தல் பிரச்சாரத்திற்காக நிதி திரட்டியது மற்றும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாகவும் விசாரணைகள் நடைபெற்றுவருகின்றன. ஊழல் தடுப்பு விசாரணை அதிகாரிகள் சென்ற அக்டோபரில் அவரிடம் ஏழு மணிநேரம் விசாரணை நடத்தினர். ஒரு தென்னாபிரிக்க வர்த்தகரிடம் அவர் வாங்கியிருந்த 1.5 மில்லியன் டொலர் கடனை அடைப்பதற்காக தேர்தல் பிரச்சாரத்தில் சட்ட விரோதமாக வசூலிக்கப்பட்ட பணத்தைக் கொண்டு திருப்பிச் செலுத்தியதாக இந்த விசாரணை நடைபெற்றது. ஆனால் அவர் தெளிவில்லாமலும் விசாரணைக்கு உதவாத முறையிலும் பதில்களை கூறியிருந்தார்.

இஸ்ரேலுக்குள் அரசியல் பிரதிபலிப்பு

ஷரோனின் லிக்குட் கட்சியில் பிளவுகள் நிறைந்திருக்கின்றன. அத்துடன் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அவரது அமைச்சரவை சகாக்கள கருத்து எதுவும் கூறவில்லை. அவரது பிரதான போட்டியாளரான நிதியமைச்சர், பென்ஞ்யாமின் நேட்டன்யாகு மற்றும் வெளியுறவு அமைச்சர் சில்வன் ஷலோம் ஆகியோர் பகிரங்கமாக விமர்சனம் எதையும் செய்வதற்கு மறுத்துவிட்டனர். ஏனெனில் அவர்கள் தாங்களே தலைமைப் பொறுப்பிற்கு வரமுயன்று கொண்டிருக்கின்றனர். லிக்குட் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் கிடியோன் சார் பதவி விலகும் பிரதமரின் இடத்தில் மற்றொரு பிரதமரை நியமிப்பது தொடர்பான நடைமுறைகளை உருவாக்குவதற்கு சட்ட முன் வரைவு ஒன்றை தயாரித்திருக்கிறார்

நீதித்துறை அமைச்சரும் தாராளவாத பொருளாதார கொள்கை கொண்ட சின்னுய் கட்சி (Shinnui party) தலைவருமான யோசப் லப்பிட், தொலைக்காட்சி காமராக்கள் முன் தலைகாட்ட தயாராக இல்லை. அதற்கு பதிலாக அவரது பேச்சாளர் ஒரு அறிக்கை வெளியிட்டார். ''பிரதமர் ஷரோன் அல்லது அமைச்சர் ஒல்மர்ட் மீது குற்றச் சாட்டு தாக்கல் செய்யப்படுமானால் அவர்கள் தேவையான முடிவுகளை எடுத்தாக வேண்டும். டேவிட் அப்பல், ஷரோன் அல்லது ஒல்மர்டிற்கு லஞ்சம் கொடுத்ததாக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டு அவர்கள் இருவருக்கும் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை'' என்று குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு வழக்குகளில் லஞ்சம் கொடுத்ததாக பலர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருக்கிறது ஆனால் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குகள் தாக்கல் செய்யபடவில்லை என்று லாபிட் வலியுறுத்தியுள்ளார்.

ஒழுங்கற்றும் நம்பிக்கையற்றும் பிளவுபட்டு இருக்கும் தொழிற்கட்சியின் மூத்த தலைவரான சிமோன் பெரஸ், ஷரோன் பதவி விலகவேண்டும் என்று கோரவில்லை. அவரிடமிருந்து விளக்கம் மட்டுமே கோரியிருக்கிறார். அப்பலுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களின் அடிப்படை தொடர்பாக ஷரோன் பொதுமக்களுக்கு விளக்கம் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

''இது எனக்கு மிகவும் எளிதான நேரமல்ல'' அரிக் [ஷரோன்] இன் நண்பராக ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் இருந்து வருகிறேன். இந்த நட்பை நான் மறுக்கவில்லை. நாங்கள் இருவரும் அரசியலில் எதிரிகளாக இருந்தாலும் தனிப்பட்ட முறையில் எதிரிகளல்ல. இஸ்ரேல் கடினமான காலத்தில் உள்ளது. பிரதமர் பொதுமக்களுக்கு தமது கருத்தை கூற வேண்டியது தேவையாகும்''. என்று பெரஸ் கூறினார்.

ஆனால் சில தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஷரோன் பதவி விலக வேண்டும் என்று கோரினர். ''இது மிகவும் வருந்தத்தக்கது படு பயங்கரமானது, ஆனால் இதுதான் 2004 இஸ்ரேலின் உண்மையான நிலவரம். தொலைக்காட்சியில் நாடகம் நடத்துபவர்கள் இருக்கிறார்கள், மற்றும் இஸ்ரேலிலும் நாடகம் நடத்துபவர்கள் இருக்கிறார்கள்'' என்று தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான ஓப்ஹிர் பைன்ஸ்-பாஸ் கருத்து தெரிவித்தார். அவர் கட்சியின் பொது செயலாளராக இரண்டாண்டுகள் பணியாற்றியவர்.

தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நிதியமைச்சருமான ஆப்ரஹாம் ஷோஹாட் ஷரோன் பதவி விலக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ''முந்திய சம்பவங்களை கருத்தில் கொண்டு அவர் ஏற்கனவே பதவி விலகியிருக்கவேண்டும். அவர் நிலவரத்தை மாசு படுத்திக்கொண்டிருக்கிறார்'' என்று வலியுறுத்தினார்.

சமூக ஜனநாயக மீரட் கட்சி முன்னாள் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான யோசி சையத் ஷரோன் பிரதமராக நீடிப்பதால் ஆபத்துக்கள் ஏற்படும் என்று சுட்டிக்காட்டியுள்ளார். குற்ற புலன் விசாரணைகள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் அவருக்கு மிகப்பெரும் நிர்பந்தத்தை கொடுத்து வருகின்றன. ''அவர் இராணுவ அல்லது அரசியல் அதிரடி நடவடிக்கைகள் மூலம் நாட்டிற்கே சிக்கலை உண்டாக்கிவிடுவார். நம்மை ஒரு சிறிய போரில் சிக்கவைத்து விடுவார்''. என்று அவர் எச்சரித்தார்.

முன்னாள் நீதித்துறை அமைச்சரும், பத்தாண்டுகள் தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மற்றும் தற்போது யஹாடு (Yahad) என்கிற புதிய கட்சியின் தலைமை பொறுப்பிற்காக முயன்றுவரும் யோஷி பேலின் தொழிற்கட்சியில் பிரிந்த இடதுசாரிகளையும் மீரட் கட்சியையும் இணைத்து அவர் ஒரு புதிய கட்சியை உருவாக்க முயன்று வருகிறார். அவர் ஷரோனை கண்டித்தார். அவர் பத்திரிகை நிருபர்களுக்கு பேட்டியளிக்காமல் அவரே இரண்டு பத்திரிகைகளை அழைத்து தனது விளக்கத்தை தந்தது கண்டிக்கத்தக்கது. அவர் மேலும் ஷரோன் அமைதியாக இருப்பது ''வழக்கத்திற்கு மாறானது'' என்ற கூறினார்.

இன்றைய பிரதமரை ''பேய்'' என்று கூறியதுடன், ''இனி ஷரோனுக்கு பின்னைய சகாப்தம் ஆரம்பித்துவிட்டது'' என்று பேலின் கருத்துத் தெரிவித்தார்.

''இப்போதிலிருந்து இனி தொடர்ந்து தன்னைக்காப்பாற்றிக் கொள்ள மட்டுமே பிரதம மந்திரி முயல்வார். ஒவ்வொரு அரசியல் நிகழ்ச்சியும், அடுத்து பதவிக்கு வருவதின் பகுதியாகவே அர்த்தப்படும்'' என்று பேலின் குறிப்பிபட்டார்.

Ha'aretz பத்திரிகை நடத்திய ஆய்வின்படி இஸ்ரேலின் பொதுமக்களில் 64 சதவீதம் பேர் குற்றம் சார்ந்த நடவடிக்கைகளில் ஷரோன் சம்மந்தப்பட்டிருப்பதாகவே தோன்றுவதாக கருத்துத் தெரிவித்துள்ளனர். எனவே அவர் பதவி விலகவேண்டும் என்றும் கோரியுள்ளனர். ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கேட்கப்பட்டது இந்த கேள்விக்கு பதிலளித்த 68 சதவீதம் பேர் அவர் அப்பாவி என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் எனக்கு ஒன்றும் தெரியாது, எதையும் பார்க்கவில்லை. எதையும் கேட்கவில்லை என்று கூறுவதை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த கோரும் என தொழிற்கட்சி எதிர்பார்க்கப்படுகிறது. அதில் அக்கட்சி வெற்றி பெறும் என்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.

அரசியலில் நிச்சயமற்ற நிலையின் காரணமாக டெல் அவிவ் பங்கு சந்தையில் பங்குகள் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்தது.

ஆட்சி நெருக்கடி

லஞ்சத்திற்காகவும் ஊழலுக்காகவும் விசாரிக்கப்படும் முதலாவது பிரதமர் ஷரோன் மட்டுமல்ல. அவருக்கு முந்தைய பிரதமர்களான எகுட் பராக், பென்யாமின் நெட்டன்யாகு, யிட்சாக் ராபின் ஆகியோர் மீதும் ஊழல் விசாரணைகள் நடைபெற்றன. ஆனால் விசாரணைக்கான குற்றச்சாட்டுக்கள் எதுவும் அவர்கள் மீது தாக்கல் செய்யப்படவில்லை. ஷரோன் பதவியில் இருக்கும்போதே அத்தகைய குற்றச்சாட்டை சந்திக்கின்ற வாய்ப்பு உருவாகியிருப்பது இஸ்ரேல் ஆளும் செல்வந்த தட்டிற்குள் நிலவிவருகின்ற, பெருகிவரும் குழுப்பிளவுகளை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது.

ஆனால் ஷரோன் ஒரு தனி நிகழ்வல்ல. சர்வதேச அளவில் அதிகரித்துவரும் ஊழல் குற்றச்சாட்டுக்கு இலக்காகி வரும் அரசியல்வாதிகள் குழுவில் ஒருவர்தான் ஷரோன். இது அரசியல் ஆட்சியில் ஏற்பட்டுள்ள விரிவான சர்வதேச அளவிலான நெருக்கடியை பிரதிபலிக்கன்றது.

எதிர்கட்சிகளின் உடைவின் காரணமாக தற்காலிகமாகவாவது அவர் இந்தக் குற்றச்சாட்டுக்களிலிருந்து சமாளிக்க முடிகிறது. சியோனிச அரசாங்கத்தினால் ஷரோனுக்கு மாற்று எதனையும் வழங்கு முடியாதிருப்பதுடன், இது ஏற்கனவே இஸ்ரேல் சமுதாயத்திற்குள் பெருகிவருகின்ற அரசியல் மற்றும் சமூக பிளவுகள் அதிகரிக்க செய்வதுடன், அரசியல் அமைப்பினுள் உருவாகியுள்ள பிளவுகளை இன்னும் மோசமடையச்செய்யும்.

லிக்குட் கூட்டணி அரசாங்கம் நேட்டன்யாகு தலைமையில் அமையுமானால், அது ஷரோன் அரசாங்கத்தை விட மேலும் தீவிர வலதுசாரி போக்கிலேயே சென்று கொண்டிருக்கும். இதன் மூலம் பாலஸ்தீன மக்கள் மீதான இரத்தக்களறி ஒடுக்குமுறை மூலம் ஒடுக்குவதாலும் மற்றும் நேட்டன் யாகு தலைமையில் நடைபெற்ற அரசாங்கத்தின் பொருளாதார சிக்கன நடவடிக்கைளாலும் இஸ்ரேலின் பரந்தபிரிவினரின் எதிர்ப்பையும் அந்நியப்படுதலையும் இன்னும் ஆழமாக்கும்.

தொழிற்கட்சி மற்றும் அதன் பெயரளவிற்கு இடதுசாரி மனப்பான்மை கொண்ட அதிலிருந்து பிரிந்து சென்ற குழுக்களும், தீவிர வலதுசாரி ஆளும் கூட்டணிக்கு ஒன்றுபட்ட மாற்று எதிரணியை உருவாக்க முடியாதளவிற்கு குழப்பமான நிலையில் உள்ளனர். அவர்களால் தீவிர வலதுசாரி கூட்டரசுக்கு எதிராக அதன் இராணுவவாதத்திற்கோ அல்லது முதலாளித்து சார்பான கொள்கைகளுக்கு எதிராக வலுவான எதிர்ப்பை காட்டமுடியாது.

மேலும் ஷரோன் தொடர்ந்து அமெரிக்காவின் ஆதரவை பெற்று வருவது அவர் மிகுந்த இறுமாப்போடு இயங்குவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. ஒரு போர்குற்றவாளி இஸ்ரேலில் ஆட்சி செய்வதும், ஊழலில் மூழ்கிவிட்ட அவருக்கு தெளிவான மாற்று தலைவர் இல்லாததும் சியோனிச நாடு எந்த அளவிற்கு தீர்க்கமுடியாத தொத்து நோய்க்கு இலக்காகியுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது. ஆனால், இஸ்ரேலின் முக்கிய நிதியுதவியாளரான அமெரிக்காவிலும் இதே நிலைமைதான் எதிரொலிக்கின்றது.

உதாரணமாக, ஜனாதிபதி புஷ் தனது மத்திய கிழக்கிற்கான ''சாலை வரைபட'' திட்ட தோல்வியை தனது நாட்டுமக்களுக்கான செய்தியில் குறிப்பிடாதமை, அமெரிக்கா பாலஸ்தீன இஸ்ரேல் சமாதான உடன்பாட்டில் அக்கறை இழந்துள்ளதையே எடுத்துக்காட்டுவதாக பரவலாக கருதப்படுகின்றது. இவ்வுடன்பாடு அரபு நாடுகளின் தலைவர்களும் பிரிட்டன் பிரதமர் டோனி பிளேயரும் ஈராக் மீது அமெரிக்கா தொடுத்த போரை ஆதரிக்கவேண்டும் என்பதற்கான சாக்குபோக்காக முன்வைக்கப்பட்டது. இது தற்போது பாலஸ்தீன மக்கள் தொடர்பாக ஷரோன் சுயமான நடவடிக்கை எடுக்க சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதையே மீண்டும் எடுத்துக்காட்டுகின்றது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved