WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள் :
ஐரோப்பா
:
பிரித்தானியா
Hutton Inquiry: British media warns of a whitewash too far
ஹட்டன் விசாரணை: கண்துடைப்பு எல்லையை மீறிச்செல்வதாக பிரித்தானிய செய்தி
ஊடகங்கள் எச்சரிக்கை
By Julie Hyland
30 January 2004
Use this version
to print |
Send this link by email |
Email the author
ஈராக் செய்திகளை வெளிக்கொணர முதல் காரணமாக இருந்த டாக்டர் டேவிட்
கெல்லியின் மரணத்திற்கு காரணமான நிகழ்வுகளுக்கும், பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயருக்கும் சம்பந்தம் ஏதும்
இல்லை என ஹட்டன் அறிக்கை தெரிவித்துள்ளபோது, ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் போருக்கு தயார் நிலையில்
இருப்பதாக தான் கூறியதை பொய் என சொல்லிவந்த அனைவரும் தத்தம் பதவிகளில் இருந்து ராஜினாமா செய்ய
வேண்டும் என்றும், தானும் தனது அரசாங்கமும் இதில் எந்தத் தவறும் செய்யவில்லை என்பது மெய்பிக்கப்பட்டுள்ளது
என பிளேயர் வலியுறுத்தியுள்ளார். ஆனாலும் ஹட்டினின் மூடிமறைப்பு உண்மையில் சட்டபூர்வ அங்கீகாரம் பெற
முடியாதளவு மோசமானது என்றும், பிளேயரின் இந்த வெற்றிக்களிப்பு நிதானப்பட வேண்டும் என்பதுதான் பிரிட்டிஷ்
பத்திரிகைகளின் ஒருங்கிணைந்த அபிப்பிராயமாக உள்ளது.
இண்டிபென்டன் என்ற பத்திரிகை ''பிளேயரின் இந்த வெற்றிக் கூச்சல் தவறானது,
நடுநிலையற்ற ஹட்டன் அறிக்கை ஈராக்குடன் போர் புரிய வேண்டும் என்ற பிளேயரின் முடிவை எந்த விதத்திலும் நியாயப்படுத்தவில்லை''
என்று எச்சரித்துள்ளது. அதே போல பினான்சியல் டைம்ஸின் கருத்துப்படி ''தனித்துவம் பெற்ற ஆயுத கண்கானிப்பாளரின்
தற்கொலையில் ஆரம்பித்த பிரச்சனைக்குரிய வாதங்கள் ஹட்டன் அறிக்கையின் மூலம் முடிவிற்கு வராது. திரு. கெல்லியின்
வெளியேற்றத்தில் அரசின் பங்கு மற்றும் பொறுப்பிலிருந்து மிக எளிதாக நழுவுகிறது. புலனாய்வு அமைப்புகளின் உபயோகம்
குறித்த கேள்விகள் ஹட்டனின் விசாரணை எல்லைக்கு அப்பாற்பட்டவை'' என குறிப்பட்டது.
'கார்டியன்' பத்திரிகையின் கட்டுரையாளர் ஜோனாதன் ப்ரீட்லாண்ட் ''ஹட்டனின்
விசாரணை West End (நாடக
அரங்குகள் இருக்கும் இடம்) படைப்புகளில் ஒன்றாக இருக்குமானால் அதன் பெயர் கண்துடைப்பு என்பதாகத்தான்
இருக்க முடியும்.'' என்று கூறுகிறார். மிரர் பத்திரிகையில் பெளல் ரெளட்லெட்ஜ் ''ஒரு மனிதன் தற்கொலை
செய்ய காரணமாகி வானம்வரை நாற்றமெடுக்க வைத்த உயர்மட்டத்தின் தவறுகளை ஹட்டனின் உறுதிப்பட்ட
கண்துடைப்பு காட்டுகின்றது.'' என எழுதியிருந்தார்.
Daily Telegraph
குறிப்பிட்டிருப்பதாவது. ''ஹட்டன் அறிக்கையில் எடுத்துக்காட்டப்பட்டிருக்கும் அரசாங்கத்தின் செயல்பாடுகளில் உள்ள
ஒழுங்குத் தன்மைக்கும் அந்தசமயத்தில் நிதர்சனமாக நடந்து கொண்டிருந்த விசாரணைகளின் சாட்சிகள் மூலம் நாம்
அறிந்தவற்றிற்கும் இடையில் சம்பந்தமே இல்லாமல் இருக்கிறது.''
ரூபர்ட் மூர்டொக்கின் டைம்ஸ் மற்றும் சன் பத்திரிகைகள்
மட்டும்தான் விசாரணையின் முடிவுகள் குறித்து சுயதிருப்தியில் கொக்கரித்தன. ''யாராலும் விரும்பப்படாத பணியை
ஹட்டன் பாராட்டத் தகுந்த வகையில் செய்து வந்திருக்கிறார். இதன் மூலம் மிகப்பெரிய மக்கள் சேவையை
செய்திருக்கிறார்.'' என்று குறிப்பிட்டிருந்தன.
செய்தித்துறைத்துறை இந்த விஷயத்தில் ஏன் இவ்வளவு கவனம் செலுத்தவேண்டும்? அரசு
சம்பந்தப்பட்ட பெரும் ஊழலை ஒரு நீதிபதியானவர் கண்துடைப்பு செய்வது இது ஒன்றும் முதன் முறை அல்லவே?
1963ல் ப்ரோப்யூமோ (Profumo)
விவகாரத்தை குறித்து விசாரித்த லோர்ட் டென்னிஸ்கின் (Lord
Denning) அறிக்கையிலிருந்து, 1981ம் ஆண்டில் நடந்த
பிரிக்ஸ்டன் கலவரம் குறித்து லோர்ட் ஸ்கார்மன் (Lord
Scarman) விசாரணை வரையில் திரும்பத்திரும்ப பிரிட்டனின்
ஆளும் வர்க்கம் தங்களது தவறுகளை மறைக்க தனது சட்ட இலாகா சகாக்களை நம்பியிருந்திருந்தது.
மேலும், சட்ட நெறிகளுக்குப் புறம்பான போரில் நாட்டை ஈடுபடுத்துவதற்கு
பிளேயர் உபயோகித்த மோசடியான நியாயப்படுத்தல்களுக்காக அவர் தண்டனை அடைவார் என்று செய்தித்துறையினர்
ஒருவரும் உண்மையில் நம்பவில்லை. ஹட்டனின் விசாரணை வரம்புகள், ஆரம்பத்திலேயே மிகவும் கட்டுப்படுத்தப்பட்டது
மட்டுமல்ல, அவ்வகையான கட்டுப்பாடுகள் இல்லாமல் போயிருந்தால் அரசின் ஒவ்வொரு துறையும் மிகப்பெரிய பிரச்சனைகளை
சந்தித்து இருக்கும். அரசு, புலனாய்வுத் துறைகள், பழைமைவாத எதிர்கட்சியினர் ஏறக்குறைய அனைத்து தொடர்பு
சாதனங்களும் சேர்த்து பிரதமரின் போர்க் கோரிக்ககைக்குப் பின்னே நின்றார்கள்.
ஆனால் லோர்ட் ஹட்டனின் விசாரணை ஆகக்குறைந்தது சிலவகை தெளிவுபடுத்தலைகளை
வழங்கும் நோக்கங்களைக் கொண்டதாக இருந்தது. அரசுத்துறைகளில் பலவற்றில் கிளம்பியிருந்த உட்பூசல்களை
தீர்க்கும் வடிகாலாகவும், அதே சமயத்தில் ஈராக் யுத்தத்தைப் பற்றி மக்களின் கவனங்களையும்
நேர்மையான முறையில் கணக்கில் எடுத்துக் கொண்டு அதை அரசு ஏற்றுக்கொண்டது போன்ற தோற்றநிலையை
உருவாக்கவும் இந்த விசாரணை உத்தரவிடப்பட்டது.
கடந்த காலங்களில் இதுபோன்ற சமயங்களில் மக்களின் கண்களில் மண்ணைத்தூவும் அதே
நேரத்தில் தங்களது 'பாரமட்சமற்ற' நிலையைக் காண்பிப்பதற்காக அரசின் மீதோ அல்லது அதன் பிரதிநிதிகளின்
மீதோ ஓரளவிற்கு குற்றமும் காணப்படும்.
இதே மாதிரியான எத்தனிப்பு ஹட்டன் விசாரணையின் போது அதிகமாகவே
தேவைப்பட்டது. அரசாங்கம், புலனாய்வுத்துறைகள் மற்றும் பி.பி.சி ஆகியோரிடையே ஏற்பட்ட கருத்து
வேறுபாடுகள் பிரச்சனைகள் மிகவும் பெரிதாகி அனைவருக்கும் தெரியும்படியாக வெளிவந்துவிட்டது. இன்னொரு
முக்கிய காரணம் இந்த பிரச்சனைகள் பரந்த பொதுமக்களால் தொடர்ந்து கவனிப்புக்கு உள்ளாகியது. ஈராக்கிற்கு
எதிரான போரை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கானவர்கள், ஈராக்கில் பேரழிவிற்குரிய
ஆயுதங்களை காரணம் காட்டிய பிளேயரின் பொய்யான கூற்றுக்கு அவர் ஏதாவதொரு விதத்தில் பதிலளிக்க வேண்டிய
கட்டாயத்துக்கு உட்படுவார் என்று அவர்கள் நம்பினார்கள்.
ஹட்டன் விராசணை சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர் மீதும் நடந்த தவறுகளுக்கு
அவர்கள் அனைவரும் ஓரளவிற்குப் பொறுப்பானவர்களே என்று கூறும் அதே நேரத்தில் யார் மீதும் குற்றம்
சுமத்தமுடியாதபடிக்கு கமிஷனின் முடிவு இருக்கும் என்று ஏற்கனவே தெரிந்த விஷயம்தான். மக்கள் தொடர்பு சாதனங்கள்
யூகித்தப்படி பி.பி.சி உம் அதன் நிருபர் ஆண்ட்ரூ ஜில்லிகனும் (கிஸீபீக்ஷீமீஷ் நிவீறீறீவீரீணீஸீ) வெளியிட்ட செய்திகளில்
தவறுகள் இருந்ததாக விமர்சனத்துக்குள்ளாயினர். அரசாங்கத்தைப் பொறுத்தவரை புலனாய்வுத்துறையினர்கள் ஈராக்
அழிவு ஆயுதங்கள் பற்றிய தகவல்களை வேண்டுமென்றே மாற்றியமைத்து பெரிதுபடுத்தினார்கள் என்ற தகவலை அடுத்து
வெளியேறிய கெல்லியின் ராஜிநாமா விவகாரத்தை சரியாகக் கையாளவில்லை எனவும் ஹட்டன் அறிக்கை தெரிவிக்கிறது.
ஆண்ட்ரூ ஜில்லிகன் ஙி.ஙி.சி இன் 'பலிகடா' வாக ஆக்கப்படலாம். அரசின் சார்பில் கேம்ப்பெல் அல்லது
பாதுகாப்புத்துறை செயலர் ஜொவ் ஹூன் ஆகியோர் இதே கதிக்கு உள்ளாகலாம். இவற்றையும், பிரிட்டிஷ் மீடியா
எதிர்பார்ந்திருந்தது.
ஈராக்குடனான யுத்தத்திற்கு அரசின் சார்பில் சொல்லப்பட்ட பல பொய்களும்
முரண்பாடான நிலைப்பாடுகள் ஆகியவை மக்கள் மத்தியில் புரிந்து கொள்ளப்பட்ட நிலையில்,
CIA இன் ஆதரவு
பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுதக் கண்காணிப்பாளர்களின் தலைவரான டேவிட் கே (David
Kay) பேரழிவு ஆயுதங்கள் எதுவும் ஈராக்கிடம் இல்லை என்று
ஒப்புக்கொண்ட பின்னரும் ஹட்டனின் மறைக்க இயலாத கண்துடைப்பு வேலை அரசுக்கு பயன்படப்போவதில்லை.
இதனால் அரசு குறித்து நம்பிக்கை இன்மையும் மற்றும் ஆத்திரமும் பல மடங்கு அதிகரிக்கும்.
'மிரர்' பத்திரிகையின் ரெளட்லட்ஜ் எழுதிய கட்டுரையில் இது பற்றி அவர்
குறிப்பிடும்போது, ''இது போன்ற நம்ப இயலாத போலித்தனமான நீதி விசாரணை வாக்காளர்கள் மத்தியில்
வெறுப்பைத்தான் தோற்றுவிக்கும்''.
இதைப்பற்றி கார்டியன் பத்திரிகையில் வெளியான வாசகர் கடிதத்தில் ஒரு வாசகர்
சரியான உதாரணத்துடன்; 'அதிக அனுபவமில்லாத பூச்சுத் தொழிலாளியைக் கேட்டாலே ஒரு விஷயத்தை
தெளிவாகச் சொல்லுவார்.'' எந்தவிதமான மேல்பூச்சும் கவனமாக மெல்லிதாக அடித்தால் பல வருடங்கள்
தங்கும். முகவும் தடிப்பான மேற்பூச்சு மிக விரைவில் உதிர்ந்து விழுந்துவிடும்'' என குறிப்பிட்டுள்ளார்.
செய்தித்துறையின் கவலை, அரசியல் பூச்சுவேலையில் அரைகுறையானதும்
மோசமானதுமான ஹட்டனின் கடமை நீதி விசாரணையில் அடிப்படை நோக்கத்தையே அர்த்தமற்றதாக்கி விட்டது
என்பதாகும்.
ஹட்டனின் நீதி விசாரணை முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில் எண்ணற்ற
முரண்பாடுகளில் குறிப்பிடத்தக்க பல விஷயங்கள் தனித்துத் தெரிகின்றன.
* அரசாங்கத்தின் மீது கூறக்கூடிய மோசமான
குற்றம், அரசு தன்வசம் இருந்த புலனாய்வுத்துறை அறிக்கையை வேண்டுமென்றே ''திரித்து'', யுத்தத்தில் ஈடுபட
வேண்டும் என்கிற பிரதமரின் ஆர்வத்திற்கு கூட்டுப் புலனாய்வு கமிட்டியின் தலைவரான ஜோன் ஸ்கேர்லட்டை (John
Scarlett) ''தன்னையறியாமலே'' வசப்படுத்தியது என்பதாகத்தான்
இருக்கும் என ஹட்டன் தெரிவித்தார். இக்குழுதான் செப்டம்பர் 2000 இல் வெளியிடப்பட்ட பத்திரத்திற்கு
காரணமானது. ஆனால் அவர் காம்பலால் தலைமை தாங்கப்பட்ட அவ்வறிக்கை வெளியிடப்பட்ட Joint
Intelligence Committee (JIC) இன் கூட்டத்தில்
''தன்னையறியாமலே'' வழங்கப்பட்டது என்பதை விளங்கப்படுத்தவில்லை. அந்த அறிக்கை முன்னைய பாராளுமன்ற
விசாரணைகளில் விஷேடமாக விமர்சிக்கப்பட்டது. அத்துடன் இவ்வார்த்தை பயன்படுத்தப்படவேண்டும் என பல
ஈ-மெயில்களும் உத்தரவுகளும் இலக்கம் 10 (பிரதமர் இல்லம்) இல் இருந்து Joint
Intelligence Committee இற்கு வழங்கப்பட்டது என்பது உண்மை.
* அரசுக்கும், பாதுகாப்புத் துறையினருக்கும்
ஈராக் நேஷனல் அலையன்ஸ் என்ற ஒரே ஒரு பிரிவிடமிருந்து கிடைத்த தகவலான ''ஈராக்கில் இருக்கும் பேரழிவு
ஆயுதங்களை 45 நிமிட நேரத்தில் போருக்கான தயார் நிலையில் வைக்க முடியும்'' (இந்தக் கூற்றை ஈராக் நேஷனல்
அலையன்ஸ் இப்போது 'மோசடி'என்று வர்ணித்திருக்கிறது) என்பதை மட்டும் வைத்துக் கொண்டு போருக்கு செல்லலாம்
என்ற முடிவு எடுக்கலாம் என்றால் செப்டம்பர் பத்திரம் தொடர்பாக உளவுத்துறையினரிடையே பிரச்சனை இருந்தது
என்பதற்கான ஒரேயொரு ''உறுதிப்படுத்தப்படாத'' ஆதாரத்தில் (கெல்லி)
தங்கியிருந்ததற்கு BBC ஏன்
பொறுப்பெடுக்கவேண்டும் என்பதை ஹட்டன் விளங்கப்படுத்தவில்லை.
* விசாரணையின் போது புலனாய்வுத்துறை
அதிகாரி டாக்டர் பிரைன் ஜோன்ஸ் (Dr. Bryan Jones)
கூறியிருப்பதாவது ''அறிக்கையில் இருந்த தகவலான ஈராக் பேரழிவு ஆயுத்ஙகளை 45நிமிடங்களில் தயார் நிலையில்
வைக்க முடியும் என்ற விஷயம் டெளனிங் தெரு 10 ஆம் எண் இல் இயங்குபவர்கள் கொடுத்த வற்புறுத்தல்
காரணமாக மிகவும் பெரிதுபடுத்தப்பட்டது''. இது ஜில்லிகனின் முக்கிய குற்றச்சாட்டுடன் இது
ஒத்திருக்கிறது. விசாரணையின்போது இன்னொரு முக்கிய விஷயம் வெளிப்பட்டது. அதுவும் ஸ்கார்லெட்டின்
வாயிலிருந்தே...... '' ஈராக் 45 நிமிட அவகாசத்தில் தயார் நிலையில் வைக்க முடியும் என்று
சொல்லப்பட்ட ஆயுதங்கள் நேரடி சண்டையின்போது பயன்படுத்தப்படும் ஆயுதங்களே தவிர, உலகின் பாதுகாப்பிற்கு
ஆபத்தாக இருக்கலாம் என நகைப்பிற்கிடமாக கூறப்பட்ட தொலைதூரம் சென்று தாக்கக்கூடிய பெரும் ஆயுதங்கள்
அல்ல'' என்ற உண்மை வெளிப்பட்டது. ஆனால் ஹட்டன் யுத்தத்தை நியாயப்படுத்தும் அனைத்து விஷயங்களை
கையாண்டது போலவே இந்த விஷயத்திலும் நடந்து கொண்டார். ''இருவித ஆயுதப்பிரிவுகள் குறித்து வேறுபாடுகளை
ஆராய்வது, விசாரணைக்குழுவின் வரம்புக்கு உட்பட்டது அல்ல'' என்று கூறினார்.
* யுத்தம் குறித்தான அரசின் அணுகுமுறை,
நடத்தை, ஆகியவற்றைப்பற்றி மேலும் விசாரிக்க வேண்டும் என்று குழுவின் அறிக்கையில் எங்கும் குறிப்பிடாதது
மட்டுமின்றி அவ்வாறான விசாரணை எங்கும் நடத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை'' என்றும் ஹட்டன் குறிப்பிட்டு
இருக்கிறார். மேலும், பிரிட்டிஷ் அரசின் கூற்றுக்கள், செயல்பாடுகள், ஆகியவை குறித்து செய்திஸ்தாபனங்கள்
உண்மை அறிவதற்கான புலனாய்வுகூட அம்மாதிரியான குற்றச்சாட்டுக்கள், அரசியல்வாதிகள் உள்ளடங்கலானோரின்
கெளரவத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருக்கக் கூடாது'' என குறிப்பிட்டுள்ளது.
குழுவின் இந்த கருத்து பேச்சு சுதந்திரத்தின் மீதான அடிப்படை தாக்குதல் என்று
அர்த்தப்படுவதாக அடையாளம் காணப்பட்டு பல பத்திரிகையாளர்கள் மத்தியில் கவலையடையச் செய்திருக்கிறது.
ஹட்டனின் விசாரணையின் வெளிப்பாடு ஒரு தனிப்பட்ட விடயமல்ல. மாறாக , அவரின்
அறிக்கை உருவாக்கவுள்ள பகிரங்க எதிர்ப்புடனான அவரின் வெளிப்படையான வித்தியாசமானது, அரசியலமைப்பினுள்
உள்ள மிகவும் அடிப்படையான போக்கு தொடர்பாக ஒரு தூய காத்திரமான தொழிலை அவரால் செய்யமுடியாது
என்பதையே காட்டுகின்றது.
ஹட்டனின் ஒரு தலைப்பட்டசமான தன்மைக்கான காரணம், அவரது பழைமைவாத
மற்றும் அரசமைப்புடன் சார்ந்த தன்மையுடன் தொடர்புபடுத்தி பல விமர்சகர்கள் விளங்கப்படுத்த முனையலாம்.
நீண்டகாலமாக மூத்த அல்ஸ்டர் நீதிபதியாக பணியாற்றிய ஹட்டன் சந்தேகமில்லாமல் பிரிட்டிஷ் முதலாளித்துவத்தின்
பாதுகாவலராவார். ஆனால் இதே வர்ணணைக்கு பொருந்தாத எந்த நீதிபதியையும் இருக்கமுடியாது.
மாறாக இது அந்த பணிக்கான அடிப்டைத் தேவைப் பண்புகளாக இவை இருக்கின்றன.
அரசும் அனைத்து அதிகார அமைப்புகளும் உள்ளுக்குள்ளே அழுகி, ஊழல்மயமாக காட்சியளிக்கின்றன.
பொய்கள், ஏமாற்றுவேலை, அதிகார துஷ்பிரயோகம், அச்சுறுத்தல்கள் மூலமே அரசு பாதுகாக்கப்படுகிறது. ஏதாவதொரு
மோசடி, ஊழல் நடந்தபின் அதன் ஒரு பகுதியை மட்டும் சற்றே வெளிப்படுத்தி மற்றவற்றை மூடி மறைப்பது கடந்த
காலத்திற்குரியதாகி விட்டது. வர்க்க ரீதியிலான முரண்பாடுகளை சமூகசீர்திருத்தங்கள் மூலம் தொழிலாள வர்க்கத்திற்கு
சில சலுகைகளை வழங்குவது மூலம் சமாதானப்படுத்தும் நிலைமை சாத்தியமாக இருக்கும்வரை இவ்வாறான அரசாங்க
நடைமுறைகளை செய்யக்கூடியதாக இருந்தது.
சுதந்திர சந்தையை புகழ்ந்துபாடி அத்துடன் இணைந்த முன்னெதிர்பாராதளவிலான
சமூக துருவப்படுத்தலை உருவாக்கியதால் அவ்வாறான ஒரு வேலைதிட்டத்தை முற்றுமுழுதாக முதலாளித்துவம் நிராகரித்துவிட்டது.
இதன் விளைவாக பிரிட்டனின் அரசியல் பொதுமக்களின் கவலைகள், அபிலாஷைகள் ஆகியவற்றை விட்டு வெகுதூரம்
விலகி மிகப்பெரும் செல்வந்தர்கள் மற்றும் வசதிபடைத்த தட்டுகளை பாதுகாக்கும் அரசியலாகிவிட்டது. இதனால்
அர்த்தமுள்ள ஜனநாயக நெறிமுறைகள், அதன் செயல்பாடுகள் குறித்து எந்த வகையிலும் பேசக்கூட முடியாத நிலை
ஏற்பட்டு இருக்கிறது.
See Also :
பிரிட்டன்: ஹட்டன் விசாரணையின்
படிப்பினைகள்
ஹட்டன் விசாரணை: ஈராக்கியப் பேரழிவு ஆயுதங்கள் பற்றிய பிளேயர் அரசாங்கத்தின் பொய்கள் வெளிப்படுகின்றன
ஹட்டன் விசாரணை : பிரிட்டிஷ் உளவுத்துறை தலைவரின் சாட்சியம் ஈராக்கியப் போரைப்பற்றிய பொய்களை
அம்பலப்படுத்துகிறது
ஹட்டன் விசாரணை: டாக்டர் கெல்லியும் வெளிவிவகாரகுழுவும் எவ்வாறு அரசாங்கத்தால் பயன்படுத்தப்பட்டனர்
பிரிட்டன்: ஹட்டன் விசாரணையின்
அடிப்படையிலமைந்த அரசியல் பிரச்சனைகள்
Top of page |