World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Paris and Berlin consider military intervention in Iraq

ஈராக்கில் இராணுவம் தலையிட பாரீஸ் - பேர்லின் பரிசீலனை

By Peter Schwarz
28 January 2004

Use this version to print | Send this link by email | Email the author

சென்ற ஆண்டு ஈராக் போருக்கு எதிராக குரல் கொடுத்த பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி அரசாங்கங்கள் மிக அண்மையில் வாஷிங்டனுடன் சமரசம் செய்து கொள்வதற்கான சமிக்கைகளை தெளிவாக அனுப்பிக்கொண்டிருக்கின்றன. இதற்கிடையில், அமெரிக்கா பிடித்துக் கொண்ட நாட்டைக் கட்டுப்படுத்துவதற்கு தங்களது படைகளை பயன்படுத்துவதை அவ்விரு நாடுகளும் இனி தவிர்த்துக்கொள்ளவிரும்பவில்லை என்பதையும் வெளிப்படுத்தியுள்ளன.

ஜனவரி மத்தியில் குடியரசுத் தலைவர் ஜாக் சிராக்கின் நெருக்கமான நண்பரான பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் மிசேல் அலியோ மேரி (Michèle Alliot-Marie), தனது அமெரிக்க சகா டொனால்ட் ரம்ஸ்பெல்டையும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கொண்டலிசா ரைசையும் வாஷிங்டனில் முதல் தடவையாகச் சந்தித்துப் பேசினார். அந்தக் கூட்டம் முடிந்ததும், "அமெரிக்காவிற்கும், பிரான்சிற்கும் இடையில் பதட்டங்களிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட உண்மையிலேயே உறுதிப்பாடு ஏற்பட்டுள்ளது" என அலியோ மேரி கருத்துத் தெரிவித்தார்.

இதற்கிடையில், சிராக்கிற்கு நெருக்கமான வட்டாரங்கள், புதியதொரு அத்தியாயம் ஆரம்பித்து இருப்பதாகவும் இறுதியாக இது மிகவும் உறுதியான பிரெஞ்சுத் தலையீட்டிற்கு வழி செய்யும் என்றும் கருத்து தெரிவித்தன. இந்தக் கோடை காலத்தில், வாஷிங்டன் நியமித்த இடைக்கால அரசாங்கத்திற்கு ஈராக்கின் இறையாண்மையை சம்பிரதாய முறையில் மாற்றித் தரப்படுவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதால், ஈராக்கில் இராணுவத் தலையீடு இல்லை என்ற தனது முந்திய நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்க இப்போது ஒரு வாய்ப்பு உருவாகி இருப்பதாக பாரிஸ் கருதுகிறது. ஈராக்கிற்கு அதிகார மாற்ற திட்டம் செயல்படுவதற்கு முன்னர், ஜூன் மாதம் நான்கு சர்வதேச உச்சி மாநாடு, அமெரிக்க ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு, நேட்டோ (NATO) உச்சி மாநாடு, நோர்மண்டியில் நேச நாட்டுப் படைகள் களமிறங்கிய 60ஆவது ஆண்டு விழா ஆகியவற்றில் உயர் மட்டத்தில் தக்க உடன்பாடுகளை உருவாக்கிக் கொள்ள முடியும்.

ஜனாதிபதி சிராக்கின் பேச்சாளர் ஒருவர், அமெரிக்கா தலைமையில் ஈராக்கை பிடித்துக் கொண்டிருக்கும் படைகள் இன்னும் "ஆக்கிரமிப்புப் படைகள்" என்றே கருதப்படுவதால், அமெரிக்கா தலைமையில் இயங்கும் படை அணிகளில் பிரான்ஸ் நாட்டுப் படைகள் பங்கெடுத்துக் கொள்ள இயலாது என வலியுறுத்தினார். ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரபூர்வமான ஒப்புதலோடு, நேட்டோ படைகள் என்ற கட்டுக்கோப்பிற்குள் பிரெஞ்சு படைகளை அனுப்புவதற்குரிய வாய்ப்பு ஆராயப்பட்டு வருவதுடன், பகிரங்கமாகவும் விவாதிக்கப்படுகிறது. பிரான்சின் தினசரி Le Monde, ஜாக் சிராக்கிற்கு நெருக்கமான வட்டாரத்தை மேற்கோள்காட்டி, "இறையாண்மை கொண்ட ஈராக் அரசாங்கம், ஒருநாள் தன்நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காக ஐ.நா வின் பக்கம் திரும்பி அமைதிபாதுகாப்பு படையை அனுப்புமாறு கோரக்கூடும். அந்த நேரத்தில் பிரெஞ்சு படைகள் ஈடுபடுவதை விலக்கி விட முடியாது" என்று எழுதியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தற்போது நடைமுறையில் உள்ளது போன்றதொரு ஏற்பாட்டைச் செய்யும் கருத்தை பிரான்சு உலாவ விட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானில், போர் ஆரம்பிப்பதற்கான முயற்சியை அமெரிக்கா மேற்கொண்டு ஆட்சியைக் கவிழ்த்தது. பின்னர், தற்போது ஹமீத் கார்சாய் தலைமையில் நடைபெற்று வரும் அமெரிக்காவின் பொம்மை ஆட்சியின் பாதுகாப்புப் படைப் பொறுப்பை ஏற்ற ''சர்வதேச பாதுகாப்பு உதவிப் படைகள்'' (Isaf) கட்டுப்பாட்டை நேட்டோ ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்தவகையில், ஈராக் இடைக்கால நிர்வாகக் கவுன்சிலைச் சேர்ந்த தூதுக்குழு டிசம்பரில் ஐரோப்பிய சுற்றுப் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. அந்த தூதுக்குழுவினர், பாரிஸில் மிக உயர்ந்த மட்டத்தில் பேச்சு வார்த்தைகளை நடத்தினர். சிராக் அவர்களைத் தனிப்பட்ட முறையில் வரவேற்றார். இடைக்கால நிர்வாகம் தனது முழு அதிகாரத்திற்கும் அமெரிக்காவையே சார்ந்திருக்கிறது. ஈராக் மக்கள் எவரும் ஆதரிக்கவில்லை என்று தெரிந்த பின்னரும், அந்த தூதுக் குழுவிற்கு மதிப்பு தரப்பட்டிருக்கிறது. "வரும் மாதங்களில், இந்தத் தூதுக் குழுவில் வந்தவர்கள், முக்கியமான நபர்களாக மாறுவர் என எங்களுக்கு நாங்களே கூறிக் கொண்டோம்" என்று ஜனாதிபதியின் ஆலோசகர் ஒருவர் சமாதானம் கூறினார். தூதுக் குழுவினருடன் ஒரு உடன்பாடும் கருத்து ஒற்றுமையும் ஏற்பட்டது. "இடைக்கால ஏற்பாடுகளில் ஐ.நா முக்கிய பங்களிப்புச் செய்ய வேண்டும் என்பதே அந்த உடன்பாடு" என்று Le Monde எழுதியது.

பிரான்ஸின் சமாதான அணுகுமுறைக்கான சமிக்கை டிசம்பர் மாதம் ஏற்கனவே காட்டப்பட்டு விட்டது. அப்போது, அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் பேக்கர், ஜனாதிபதி புஷ் சார்பில் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வந்தார். ஈராக்கின் கடன்கள் குறைக்கப்படுமென்று அப்போது அவருக்கு பாரிஸ் உறுதியளித்தது. புளோரிடாவில் 7 முன்னணி தொழில் வள நாடுகளின் மாநாடு பெப்ரவரி ஆரம்பத்தில் நடைபெறவிருக்கிறது. அப்போது ஈராக் கடன்கள் பற்றிய பிரச்சனை முடிவு செய்யப்பட்டுவிடும்.

தனது வெளிநாட்டுக் கொள்கையை பிரான்சுடன் நெருக்கமாக ஒருங்கிணைத்து செயல்படுத்திவரும் ஜேர்மனியும் ஈராக் பட்ட கடன்களை குறைத்துக் கொள்வதற்கு இணங்கியுள்ளது. பேர்லினிலும் ஆக்கிரமிக்கப்பட்ட மத்திய கிழக்கு நாட்டில் ஜேர்மனியின் இராணுவ பங்களிப்பு பற்றி விவாதிக்கப்பட்டிருக்கிறது. பாரிசை போன்று பேர்லினும் ஆரம்பத்தில் இராணுவ பங்களிப்பு செய்ய மறுத்ததை நியாயப்படுத்தியுள்ளது. அப்போது இராணுவத்தை அனுப்ப முடியாது என, அறிவித்தது சரிதான் என்று கூறிய பேர்லின், ஐ.நா விற்கு வலுவான பங்களிப்பு இருக்க வேண்டும் மற்றும் ஐ.நா கட்டளை அங்கீகரிக்கப்பட்ட பின்னர் நேட்டோ படைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறிப்பிட்டுள்ளது. ஜேர்மன் படைகளின் மனிதநேய உதவிக்கு உறுதியளிக்கப்பட்டது. இது இறுதியில் இராணுவ பங்களிப்பிலேயே முடிவடையும்.

"நேட்டோ - ஈராக்கிற்கு படைகளை அனுப்புவதென முடிவு செய்யுமானால், அதற்கு குறுக்கே தான் நிற்கப்போவதில்லை" என்று, ஜனவரி மத்தியில் நடைபெற்ற நாடாளுமன்ற வெளிவிவகார குழுக் கூட்டத்தில் அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடர் கூறியதாக Die Welt பத்திரிகை செய்தி வெளியிட்டது. நேட்டோ அணியில் ஜேர்மன் அதிகாரிகளும் இடம் பெற்றிருப்பதால் ஜேர்மன் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுவது இயல்பாகவே இடம்பெறும் என இராணுவ விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஜேர்மன் விமான இராணுவமனையான Med-Evac ஈராக்கிற்கு அனுப்பப்படும் என்றும் அந்தக் கூட்டத்தில் ஹெகார்ட் ஷ்ரோடர் தெரிவித்தார். அதற்குப் பின்னர், தொலைக் காட்சி பேட்டியொன்றில், "ஈராக் இடைக்கால அரசாங்கம் உதவி கோருமானால், அதை மறுக்க முடியாது. எடுத்துக்காட்டாக, பயங்கரவாத தாக்குதல்களில் காயமடைவோரை ஏற்றிச் செல்வது போன்ற பணிகளில் ஜேர்மன் மருத்துவப் பிரிவினர் ஈடுபடுவர்" என ஷ்ரோடர் தெரிவித்தார்.

ஈராக்கிற்கு மருத்துவப் பிரிவுகளை அனுப்புவது என்றால், ஈராக்கில் ஜேர்மன் இராணுவத்தினர் தீவிரமாகப் பணியாற்றுவர் என்பதுடன், மேலும், ஜேர்மன் துருப்புக்களை ஈராக்கிற்கு அனுப்புவதற்கு அதுவே சாக்குப் போக்காக அமையும். Die Welt ஒரு மூத்த நேட்டோ பிரதிநிதியின் பேட்டியை வெளியிட்டிருக்கிறது. "விமான மருத்துவமனை என்பது, இராணுவப் பாதுகாப்பு இல்லாமல் செயல்படும் என்பது கற்பனை கூட செய்து பார்க்க முடியாததாகும். எந்த அரசாங்கமும் அவ்வாறு செய்துவிட முடியாது" என கூறி இருக்கிறார். "அதிபர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் நாம் காண்பது முதல்அடியை எடுத்து வைப்பதுதான். மீதி தொடர்ந்து வரும்" என்று அந்த பத்திரிகை எழுதியுள்ளது.

இதற்கு முன்னரும் இதுபோன்ற ''மனித நேய'' பணிகள் மூலம் ஜேர்மன் இராணுவம் பெரும் எடுப்பில் தலையிட்டிருக்கிறது. மருத்துவக் குழுக்கள் முதலில் செல்லும், அவர்களது பாதுகாப்பிற்காக, ஆயுதப்படைப் பிரிவுகள் தொடரும். பொதுமக்கள் இராணுவத்தை சகித்துக் கொள்ள பழகிவிடுவதுடன், எஞ்சிய எல்லாத் தடைகளும் நீங்கிவிடும்.

பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியின் நோக்கங்கள்

துருப்புக்களை அனுப்புவது என்ற பரிசீலனை, ஈராக் தொடர்பாக, பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் கொள்கையின் நோக்கங்களை அம்பலப்படுத்துவதாக அமைந்துள்ளது. போருக்கு எதிராக மில்லியன் கணக்கான மக்கள் சென்ற குளிர் காலத்தில் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் இதர நாடுகளில் கண்டன ஆர்ப்பாட்டங்களை கொள்கை உறுதிப்பாட்டுடன் நடத்தினர். ஆனால் ஷ்ரோடரும், சிராக்கும் ஆரம்பத்திலிருந்தே மத்திய கிழக்கில் தங்களது சொந்த பொருளாதார நலனை மட்டுமே கருத்தில் கொண்டே செயல்பட்டு வந்திருக்கின்றனர். ஆரம்பத்தில் அவர்கள் போருக்கு எதிர்ப்பு தெரிவித்தது வெறும் தந்திரோபாய அடிப்படையில்தான்.

புஷ் நிர்வாகம் ஈராக்கை படை கொண்டு முறியடிப்பது என்று உறுதியோடு நின்றது. சர்வதேச சட்டத்தையும் மற்றும் சகல சர்வதேச அமைப்புக்களையும் புறக்கணித்து அமெரிக்கா நடவடிக்கையில் இறங்கியது. இது பாரிசையும், பேர்லினையும் பயங்கர உணர்வில் தள்ளிவிட்டது.

உலகிலேயே மிகப் பரவலான எண்ணெய் வளம், ஒருதலைப்பட்சமாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வந்துவிடுமானால், நீண்டகாலம் தங்கள் நலன்களைத் தொடர்ந்து பேணிக் காத்து வந்த பிராந்தியத்திலிருந்து மத்திய கிழக்கு கடுமையாகப் பாதிக்கப்படும் மற்றும் வெளியேற்றப்படுகின்ற நிலை ஏற்பட்டுவிடும் என ஐரோப்பிய நாடுகள் நியாயமாகவே அஞ்சுகின்ற நிலை தோன்றியது. குழப்பமான மத்திய கிழக்கு, கொந்தளிப்பில் மூழ்கிவிடும் என்றும் அஞ்சினர். அமெரிக்காவிற்கும், ஈராக் போருக்கும் எதிராக ஒரு கூட்டணி உருவாக்கப்பட்டதற்கு இதுவே காரணமாகும்.

ஆரம்பத்திலிருந்தே, இந்த முயற்சியில் அரைகுறை மனதோடு இரு அரசுகளுமே ஈடுபட்டன. எந்த அரசும் வாஷிங்டனை முழுவதுமாக பகைத்துக்கொள்ள விரும்பவில்லை. ஐ.நா பாதுகாப்பு சபையில் ஜேர்மன் அரசாங்கம் போரை எதிர்த்தது. ஷ்ரோடர் ஜேர்மனியிலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை மூடிவிடவில்லை அல்லது அமெரிக்க போர் விமானங்கள் ஜேர்மன் வான் வெளியில் நடமாடுவதைத் தடுக்கவும் இல்லை. அப்படி ஏதாவது தடுப்பு நடவடிக்கை எடுத்திருப்பாரானால், அமெரிக்காவின் போர் முன்னேற்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும். போர் எதிர்ப்பு இயக்கத்தில் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள எந்தச் சூழ்நிலையிலும் ஜேர்மனி விரும்பவில்லை. ஏனெனில் போர் எதிர்ப்பு இயக்கம் சமுதாயத்தின் பரந்த பிரிவினரை உள்ளடக்கியது. எனவே தனது சொந்த சமூக கொள்கைகளுக்கு விரோதமாக அது திரும்பிவிடக் கூடும். எனவே போருக்கான காரணங்கள் (எண்ணெய், அதிகாரம்) மற்றும் போரின்தன்மை (ஆக்கிரமிப்புப் போர், சர்வதேச சட்டத்திற்குப் புறம்பாக நடத்தப்பட்டது) குறித்து ஜேர்மன் அரசாங்கம் விளக்கவே இல்லை.

பாக்தாத் வீழ்ச்சியடைந்ததும், தங்களது எதிர்ப்பைக் கைவிட்டு, ஈராக்கைப் பிடித்துக் கொண்டதை ஆதரிக்கும் ஐ.நா தீர்மானத்திற்கு ஆதரவாக பேர்லினும், பாரீசும் வாக்களித்தன. இராஜதந்திர முயற்சிகள் மூலம் போரைத் தடுத்து நிறுத்த முடியாத காரணத்தினால், வெளிநாட்டுக் கொள்கை பிரச்சனைகளில் இரண்டு நாடுகளையும் வாஷிங்டன், தனக்குள்ள ஐரோப்பிய செல்வாக்கின் மூலம் தனிமைப்படுத்தி விட்டது. பின்னர் புஷ் உடன் ஒரு ஏற்பாட்டைச் செய்து கொள்ள அவர்கள் முன்வந்தனர்.

எவ்வாறிருந்தபோதிலும், அமெரிக்காவின் கொள்கைக்கு இவ்வாறு அடிபணிந்துபோனது, ஈராக் போருக்கு முந்திய பதட்டங்கள் நீங்கிவிட்டதாக பொருளாகாது. உலகை மீண்டும் கூறு போடவும், மூலப்பொருட்களையும், சந்தைகளையும் கட்டுப்படுத்தவும், மூலோபாய செல்வாக்கை நிலைநாட்டவும் ஆரம்பிக்கப்பட்ட ஈராக்கிய போர் புதிய கூர்மையான மோதல்களையும் தவிர்க்கமுடியாதபடி முன்கொண்டுவந்துள்ளது. ஈராக் போருக்கு பதிலளிக்கின்ற வகையில் ஜேர்மனியும், பிரான்சும் தங்களது இராணுவ வலிமையைப் பெருக்கிக் கொண்டன. நீக்குப் போக்குள்ள இராஜதந்திர கொள்கைகளைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தன.

1990 இரு ஜேர்மனிகளும் இணைக்கப்பட்ட நேரத்தில் ஜேர்மன் இராணுவம் முற்றிலும் தற்காப்பு படையாகவே இயங்கியது. தற்போது நேட்டோ எல்லைக்கு அப்பால் 7,000 ஜேர்மன் துருப்புக்கள் செயல்பட்டுக் கொண்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் ஸ்ருக் அண்மையில் அறிவித்துள்ள சீர்திருத்தங்களின் படி, இது போன்ற பணிகளுக்கு எதிர்காலத்தில் ஜேர்மனியின் 2,50,000 வலிமையான இராணுவத்தினரில் 100,000 பேர் இதுபோன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுவர். உலகம் முழுவதிலும் குறுகிய முன்னறிவிப்பில் "தலையீடு மற்றும் உறுதிப்படுத்தும் படையாக'' இயங்குவதற்கு தயாராக இருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

ஜேர்மன் படைகளின் பணியாற்றும் எல்லைவரையறையில் ஆபிரிக்க கண்டத்தையும் சேர்த்து கொள்வதில் அதிபர் ஷ்ரோடரும் வெளியுறவு அமைச்சர் ஜொஸ்கா பிஷ்ஷரும் அண்மைக் காலத்தில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். சென்ற வாரம் ஷ்ரோடர் எத்தியோப்பியா, கென்யா, தென் ஆபிரிக்கா, கானா நாடுகளில் சுற்றுப் பயணம் செய்தார். வார செய்திப் பத்திரிகை Der Spiegel இற்கு அவர் "ஆபிரிக்கா மீது ஐரோப்பியர்களாகிய நாங்கள் அக்கறை கொண்டிருக்கிறோம். ஜேர்மனியர்களாகிய நாங்கள் நேரடியாக அக்கறை கொண்டிருக்கிறோம்'' என்று தனது பேட்டியில் கூறி இருந்தார். பிஷ்ஷர் வரலாற்று அடிப்படையில் ஜேர்மன் கொள்கையை நியாயப்படுத்தினார். ஆபிரிக்க கண்டத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுகள், வேறு காரணங்களுடன், பிரிட்டன், பிரான்சின் காலனித்துவ கொள்கையின் விளைவாகும் என Der Spiegel பத்திரிகை அவரது பேட்டியை வெளியிட்டிருக்கிறது. தற்போது இந்த இரத்தக்களரி பாரம்பரியத்தை கருத்தில் கொண்டு ஐரோப்பியர்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். "ஆபிரிக்க கண்டம் இரண்டு காலனித்துவ சக்திகளுக்கிடையில் சிக்கிக் கொள்ள விட்டுவிடக் கூடாது" என்று பிஷ்ஷர் கூறியுள்ளார்.

புருஸ்ஸல்சில், பிரதமர் டோனி பிளேயரும், ஆபிரிக்காவில் கூட்டு ஐரோப்பிய தலையீட்டை ஆதரிக்கும் ஜனாதிபதி சிராக்கும் தலையீடு செய்ய சாத்தியமான ஆபிரிக்க பட்டியலை தந்திருக்கின்றனர். புருண்டி, ஐவரி கோஸ்ட், ஜெனிவா, சியரா லியோன், சூடான் மற்றும் ஜிம்பாப்வே அப்பட்டியலில் வருகிறது.

Top of page