:ஆசியா
Devastating tidal wave kills more than
13,000 in southern Asia
தெற்கு ஆசியாவில் பேரழிவு அலைக் கொந்தளிப்பு 13,000 உயிர்களைக் காவுகொண்டது
By Peter Symonds
27 December 2004
Back to screen version
மேற்கு சுமத்ராவின் கடற்கரையில் நேற்று நிகழ்ந்த நிலநடுக்கத்தினால் தூண்டுதலுற்ற சுனாமி
எனப்படும் பேரலைக் கொந்தளிப்பு, அண்மை நாடுகளின் கடற்கரைப் பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்திக் குறைந்தது
13,500 பேரின் உயிர்களையாவது எடுத்துள்ளது. இறப்புப்பட்டியல் தற்காலிகம்தான் என்றும், உதவி, மீட்புப் பணியாளர்கள்
அழிவுற்ற இடங்களில் காணாமற் போயிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களை சல்லடையிட்டுத் தேடும்போதும், ஒதுக்கமாக
உள்ள சிறுநகரங்கள், கிராமங்கள் இவற்றில் பணியைத் தொடரும்போதும், எண்ணிக்கை இன்னும் மிக அதிகமாக உயரும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் படுமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் இலங்கையின் கிழக்கு கடற்கரை,
தென்னிந்தியா மற்றும் நிலநடுக்கடத்தின் முதலில் தாக்குதலுக்குட்பட்ட இந்தோனேசியாவில், சுமத்ராவின் வடக்கு முனையில்
உள்ள (Aceh) ஆஷே மாநிலம் ஆகியவைதான். எந்த எச்சரிக்கையும்
இன்றி, 10 மீட்டர்கள் உயர அலைகள் முழு கிராமங்களைச் சூழ்ந்து கொண்டு, மீன்பிடிக்கும் படகுகளையும் மூழ்கடித்து சிறுகுழந்தைகள்,
முதியோர் உட்பட பலரையும் கடலுள் அடித்துச் சென்றன. இதில் மிகவும் பாதிப்பிற்குட்பட்டவர்கள், கடற்கரையோரத்தில்
பாதிப்பை எப்பொழுதும் எதிர்கொள்ளவேண்டிய நிலையில் உள்ள மிக மிக வறியவர்களான மீன்பிடிப்போரும், மற்றவர்களும்
ஆவர்.
சமதளத்திற்கும் கீழ்மட்டத்தில் இருக்கும் மாலத்தீவின் பகுதிகளும், அந்தமான் தீவுகளும் கடுமையான
தாக்குதலுக்கு ஆளாயின. விடுமுறைச் சுற்றுலாப் பகுதியான, புக்கெட் உட்பட, தாய்லாந்தின் பல கடற்கரையோரப் பகுதிகள்,
மற்றும் மலேசியா, பர்மாவும் மாபெரும் அலைகளால் மோதப்பட்டன. பங்களாதேஷில் குறைந்தது இருவராவது உயிரிழந்தனர்.
6,000 கிலோமீட்டர் மேற்கே தொலைவிலுள்ள கிழக்கு ஆபிரிக்கா வரை சுனாமியின் தாக்குதல் இருந்த, கென்யா,
சோமாலியா, தன்சானியா ஆகியவையும் பாதிப்பிற்கு உள்ளாயின.
அமெரிக்கப் புவியியல் அளவை அலுவலகத்தின் தேசிய நில அதிர்ச்சி மையம், இந்த அதிர்வின்
தன்மையை ரிக்டர் கோலில் 8.9 என்று மதிப்பிட்டுள்ளது; 1964க்குப் பிறகு மிக அதிகமானதும் 1900 ல் இருந்து
ஐந்தாவது பெரிய அளவுமாகவும் இது உள்ளது. முக்கிய அதிர்வு உள்ளூர் நேரத்தில் கைலை 7 மணிக்குச் சற்று முன்னராக
இருந்து இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு பின் அதிர்வுகளின் தொடர்ச்சி ஏற்பட்டது; அவற்றில் சிலவற்றை இயல்பான
நிலநடுக்கங்கள் என்றே கூறவியலும்.
உலகெங்கிலும் உள்ள நில அதிர்வுப் பதிவு மையங்கள் முழுவதிலும் இந்த அதிர்வுகள்
கிட்டத்தட்ட உடனடியாகப் பதிவாயின என்றாலும் இலங்கையோ அல்லது இந்தியாவோ சர்வதேச சுநாமி எச்சரிக்கை
முறையில் பங்கு கொண்டிருக்கவில்லை. இந்த அலை தெற்கு ஆசியாவை அடைய 90 நிமிஷங்கள் எடுத்துக் கொண்டன
என்றாலும், அதன் ஆபத்தைப் பற்றிய எச்சரிக்கை எவருக்கும் கொடுக்கப்படவில்லை என்பதோடு, வீடுகள் இழப்பு,
உணவு, குடிநீர் கூட இல்லாத தன்மையை மில்லியன் கணக்கான மக்களுக்கு ஏற்படுத்தி, பயிர்கள் அழிப்பு, வணிகங்கள்
அழிப்பு இவற்றுடன், மற்றும் பல்லாயிரக்கணக்கான உயிர்களையும் குடித்த இப்பெரும் சோக நிகழ்வை தவிர்ப்பதற்கு உரிய
நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
சர்வதேச எச்சரிக்கை முறை 1960களில், ஆழ்ந்த நீரில் மேற்புறத்தில் காணக்கூடிய
வகையில் சலனம் ஏற்படுத்தாமல் மிக வேகமாகப் பயணிக்கும் சுனாமிக்களின் போக்கு, வேகம் இவற்றைக் கணித்துக் கூற
உதவுவதற்காக நிறுவப்பட்டது. அதிர்வு அலைகள் தேக்க நிலைநீரை அடையும்போதுதான், அவை உயர்ந்து வெளிப்பட்டு,
தோற்றத்திற்குத் தென்படும்.
இந்திய வானிலை ஆராய்ச்சித்துறையில் (நில அதிர்வுப்பிரிவு) இயக்குனராக இருக்கும்
டாக்டர் ஆர்.எஸ்.தத்தாத்ரேயம், அவருடைய குழு நிலநடுக்கத்தைப் பற்றி அறிந்ததாகவும், ஆனால் அலைக்
கொந்தளிப்பு பற்றிக் முன்கணித்துக் கூற இயலவில்லை என்றும் Times
of India விற்கு தெரிவித்தார்: "அதிகாலையிலேயே, அவை (இந்தோனேசியாவில்)
தோன்றியவுடனேயே, எங்களுக்கு அறிகுறிகள் தென்பட்டன. ஆனால் எங்களால் அதை அளவை செய்து கூறமுடியவில்லை.
சுனாமி பற்றிய அளவை மதிப்பீடு செய்வதற்குப் போதுமான வசதிகள் எங்களிடம் இல்லை. ஏதோ ஒன்று எங்களைத்
தாக்கக்கூடும் என்று அறிந்தாலும், எந்த நேரத்தில், எந்த இடத்தில், எத்தகைய தீவிரத்தில் அது செயல்படும் என்று
எங்களால் கணிக்க இயலவில்லை."
இந்திய, இலங்கை அரசியல்வாதிகள் எச்சரிக்கை வழிமுறைபற்றிய கேள்விகளைப்
புறக்கணித்துள்ளனர்; நேற்றைய சுநாமி இந்தத் துணைக்கண்டத்தைத் தாக்குவது இதுவே முதல் தடைவையாகும். ஆனால்
ஆயிரக்கணக்கான உயிர்கள், உடனடியான எச்சரிக்கை மிகுந்த ஆபத்திற்குட்படக்கூடிய இடங்களுக்கு விடுக்கப்பட்டிருந்தால்
காப்பாற்றப் பட்டிருக்கக்கூடும் என்பதில் சந்தேகம் இல்லை. காலம் கடந்த பின்னர்தான், இந்திய அரசாங்கம் சுனாமி
எச்சரிக்கை வலைப்பின்னலில் சேருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளது.
இந்தச் செயலற்ற தன்மையின் விளைவுகள் பேரழிவைத்தான் தந்துள்ளன என்பது உறுதி.
இலங்கை
இந்நாட்டில் நிகழ்ந்துள்ள இயற்கைப் பேரழிவுகளின் நேற்றைய சுனாமித்தாக்குதல் மிகவும்
மோசமானதாகும். நள்ளிரவு நிலையின்படி, இலங்கை பாதுகாப்புத் துறை 2,484 மக்கள் உயிரிழந்துள்ளனர் என்று
உறுதிப்படுத்தியுள்ளனர்; ஆனால் அதிகாரபூர்வமற்ற மதிப்பீடுகள் இந்த எண்ணிக்கை 5,000 ஐ ஒட்டி இருக்கலாமென்று
கூறுகின்றன. மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகள் கிழக்கு கடலோரப் பகுதிகள் ஆகும்; இவற்றில் பெரும்பாலானவை நாட்டில்
நீண்ட 20 ஆண்டுகால உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளாகும். நேற்று மாலை வரையில், அதிகாரப்பூர்வ
இறப்புப் பட்டியல் 900 என்ற எண்ணிக்கை அம்பாறையிலும், மட்டக்களப்பில் 300, திரிகோணமலையில் 300 என்றும்
தெரிவிக்கின்றன.
அம்பாறையில் உள்ளூர் மக்கள் ஏராளமான கிராமங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டதால்
இறந்தோர் எண்ணிக்கை இன்னும் கூடுதலாக இருக்கும் என்று எச்சரித்துள்ளனர். சாய்ந்தமருதுவில் வாழும் ஹசீர் என்பவர்
இந்த எண்ணிக்கை 3,000 ல் இருந்து 4,000 வரை இருக்கலாம் என்று கூறுகிறார். சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்
தலைவரான ரவுப் ஹகீம் சாய்ந்தமருதுவில் மட்டும் 1,000 சடலங்கள் உள்ளன என்று கூறியுள்ளார். "எங்கு பார்த்தாலும்
சடலங்கள் காணப்படுகின்றன; இன்னும் அதிக சடலங்கள் காணப்படுவதாகத் தகவல்கள் வந்தவண்ணமுள்ளன" என்று அவர்
கூறினார்.
LTTE கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்
பகுதிகளில், எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை. இலங்கை இராணுவம்
LTTE தலைமையிடத்தின்
அருகேயுள்ள முல்லைத்தீவில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பர் என்று மதிப்பிட்டுள்ளது. ஆனால்
LTTE தளைத்தைக்
கொண்டுள்ள தமிழர் புணர்வாழ்வுக் கழகம் (Tamil
Rehabilitation Organisation-TRO), இந்த எண்ணிக்கை
முல்லைத்தீவு மாவட்டத்தில் 2,000 ஐயும் கடந்திருக்கும் என்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் மேலும் ஒரு 1,000
இருக்கும் என்றும் தெரிவிக்கிறது.
தீவின் தென்முனையில், காலியில் 866, மாத்தறையில் 250, வெலிகமவில் 160 என்று
இறந்தவர் பட்டியல் உள்ளது. மாத்தறையின் போலீஸ் தலைமை அதிகாரி விக்ரமரத்ன
Agence France Press
இடம் தெரிவித்தார்: "வாரந்திர ஞாயிறுகளில் நபைெறும் சந்தையில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.
அவர்களுக்கு என்ன ஆயிற்று என நாங்கள் கூறமுடியவில்லை. நீரில் ஏராளமான உடல்கள் மிதப்பதைப் பல மக்களும்
பார்த்துள்ளனர். நீரின் மட்டம் குறைந்துவருகிறது; ஆனால் கடல் நீர் குடிநீருடன் கலந்து விட்டதால் பெரும்
பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளோம்.
தென்புற விடுமுறைத் தலங்களுக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் விளையாட்டு அரங்குகளிலும்,
விருந்து விடுதிகளிலும் அடைக்கலம் கோரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அங்கு வசிக்கும் மக்களும், சுற்றுலாப்
பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் இருந்து விரைந்து வெளியேறுவதால் தலைநகர் கொழும்பிற்குச் செல்லும்
சாலைகள் அனைத்தும் நெரிசலுக்கு உட்பட்டுள்ளன. மேற்குக் கடலோரத்தில் இருந்தபோதிலும், கொழும்பு நகரமும்
பாதிப்பிற்கு உட்பட்டு, ஏராளமான கடலோரப்பகுதிகள் நீர்ப் பெருக்கத் தேக்கத்தில் முழுகியுள்ளன.
Daily Mirror
உடைய கூற்றின்படி, பெரும்பாலும் சிறுவர்களைக் கொண்ட 25 பேர் வடக்குப் புறநகரத்தில் பெரும் அலைகளினால்
அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். கொழும்புத் துறைமுகத்தில் பெரும் கப்பல்கள் நொறுக்கப்பட்ட நிலையில் இருப்பதோடு
ஒருபுறம் சாய்ந்தும் உள்ளன.
இப்பேரழிவின் பரப்பு இன்னும் துல்லியான முறையில் உறுதி செய்யப்படவில்லை. குறைந்தது
ஒரு மில்லியன் மக்கள், அதாவது மொத்த மக்கட்தொகையில் 5 சதவிகிதத்தினர் பாதிப்பிற்குட்பட்டிருக்கக்கூடும் என்று
அரசாங்கம் மதிப்பீடு செய்துள்ளது. பிரிட்டனில் இருந்து திரும்பிவந்து கொண்டிருக்கும் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா
"பேரழிவு நிலைத்தன்மை" ஒன்றைப் பிரகடனம் செய்துள்ளார்; இராணுவம் உதவிக்குச் செல்லுவதற்கு அனுமதித்து,
சர்வதேச உதவியையும் நாடியுள்ளார்.
சில பகுதிகளில் கொள்ளையடிப்பதை தடுக்கும் நோக்கத்துடன் போலீஸார் ஊரடங்கு
உத்தரவைப் பிறப்பித்துள்ளனர். ஆனால் பெரும்பாலான மக்கள் உறைவிடமும், அடிப்படைத் தேவைகளான உணவும், நல்ல
குடிநீரும் இல்லாமல் நோய்களுக்கு இரையாகும் அபாயத்தில் உள்ளனர். கொழும்பில்கூட கோபமுற்ற ஒரு நகரவாசி
Daily Mirror
இடம் சீற்றத்துடன் வினவினார்: "எங்களுக்குத் தண்ணீர் வேண்டும். எங்களுக்கு உணவு வேண்டும். தலைவர்கள் எங்கே
சென்றுள்ளனர்?"
இந்தியா
குறைந்தது 3,000 பேராவது தென்னிந்தியாவில் இறந்திருக்கக் கூடும்; தமிழ் நாட்டில்
குறைந்து 1,700 பேராவது மாண்டிருக்கக்கூடும். மாநிலத்தின் தலைநகரான சென்னையில், அதிகாரபூர்வ மடிந்தவர்
எண்ணிக்கை நேற்று 131 ஆக இருந்தது. இந்து பத்திரிக்கை விளக்கியது: "இங்குள்ள மூன்று பெரிய அரசாங்க
மருத்துவமுறைகள் கணக்கிலடங்கா வரிசை என்று கூறும் அளவிற்கு முடிவில்லாமல் இளவயது, மூப்பானவர்கள், ஆண்கள்,
பெண்கள், குழைந்தைகள் என்று சடலங்களைப் பெற்றன. இவர்கள் அனைவரும் மிகப்பெரிய அலைகள் கொந்தளிப்புக்கள்
பெரும் நிலப்பகுதி, வீடுகள், குடிசைகள் எனத் தாக்கியபோது அனைத்து உடைமைகளையும் இழந்தனர்; அலைக்
கொந்தளிப்பு கடற்கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களையும் அடித்துச்சென்றது."
கன்யாகுமரி மாவட்டத்தின் மீன்பிடிக்கும் கிராமங்களில் 400க்கும் மேற்பட்ட மீனவர்களும்
அவர்களுடைய குடும்பங்களும் உயிரிழந்தனர்.
நூற்றுக்கணக்கான மீன்பிடிக்கப் பயன்படுத்தப்படும் படகுகளும் அழிக்கப்பட்டு விட்டன அல்லது
அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. அசோசியேட் பிரஸ் அறிக்கை கூறுகிறது: "கடலூர் நகரத்தில் கடல் வெள்ளம்
பெருக்கெடுத்து ஒடி, நூற்றுக்கணக்கான கார்களைக் குப்புறத் தள்ளின, அவற்றில் பல வாகனங்கள் சாலைப் பிரிவுச்
சுவர்களில் தலைகீழாக நிற்கின்றன."
காக்கினாடா நகரத்தில் பி.ரமணன் மூர்த்தி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்:
"கணக்கிலடங்கா மீன்பிடிப்புப் படகுகள் அலைகளின்மீது மிதந்து, காகிதப்படகுகள் அலைக்கழிக்கப்படுவது போல்
அலையுண்டிருப்பதைக் கண்ணுற்று அதிர்ந்து போனேன். பல படகுகளும் கவிழ்க்கப்பட்டுவிட்டன; மீனவர்கள் அவற்றை விடாமல்
பற்றிக் கொண்டிருந்தனர். அவர்களும் கடலுள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதுபோல் ஒன்று நடக்கும் என்று நான்
கற்பனைகூடச் செய்து பார்க்கவில்லை."
ஆந்திரப் பிரதேசம், கேரளா, பாண்டிச்சேரி ஆகிய தென்மாநிலங்களும் கடுமையான
பாதிப்பிற்கு உள்ளாயின. அந்தமான், நிகோபர் தீவுகளில் உள்ள மக்களின் விதி பற்றித் தெளிவாகத் தெரியவில்லை.
தீவுகளில் சமதளத்திற்கும் குறைந்த பகுதிகள் சுமானியின் பாதையின் நேர் குறுக்கில் இருப்பதுடன், பின்விளைவு அதிர்வாலும்
தாக்கப்பட்டுள்ளன. போலீஸ் தலைமைத் தளபதி S.B.Deol
இந்தியச் செய்தி ஊடகத்திற்குக் கூறினார்: "நிலைமை கடுமையாக உள்ளது. இறந்தோர் எண்ணிக்கை குறைந்தது
ஆயிரமாகக்கூட இருக்கலாம்."
முந்தைய இயற்கைப் பேரழிவுகளில் இருந்ததைப் போலவே, இந்திய அரசாங்கம்
நலன்களைப் பற்றிய அக்கறை, மற்றும் உதவியளித்தல் இவற்றைப் பற்றிய அறிக்கைகளைக் கொடுத்துள்ளது. இந்திய
விமானப்படை உடனே அந்தமான் தீவுகளுக்கு அனுப்பப் பட்டது; அங்கு இதன் தளம் கடுமையான பாதிப்பிற்கு
ஆளாகியுள்ளது. இரண்டு கடற்படைக் கப்பல்களும் அங்கு அனுப்பப் பட்டுள்ளன. ஆனால் தென்னிந்தியாவில் வீடிழந்து துன்பப்
படுவோரின் துயரங்களைக் குறைப்பதற்காக அளிக்கப்பட்டுள்ள உதவி இதுவரை மிகவும் குறைவாகத்தான் உள்ளது. காலம்
கடந்த முறையில் கப்பல்களுக்கும், மீனவர்களுக்கும் கடல்கரையோரப் பகுதியை விட்டு 24 மணி நேரமாவது
நீங்கியிருக்கவேண்டும் என்ற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியா
இத்தகைய காட்சிதான் இந்தோனேசியாவிலும் வெளிப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ இறப்பு
எண்ணிக்கை 4,422 என்று ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனம் (ABC)
குறிப்பிட்டுள்ள போதிலும், எண்ணிக்கை உறுதியாக இன்னும் அதிகமாகத்தான் இருக்கும். பெரும்பாலான
பாதிப்பிற்குட்பட்டவர்கள் சுமத்ரா வடமுனையில் உள்ள Aceh
மாநிலத்தில் இருக்கின்றனர்; இப்பகுதிய மக்களுடைய எழுச்சியை அடக்கவும், மக்களை மிரட்டுவதற்கும் இராணுவ
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட இடங்களில் பெரிதான ஒன்றாகும்.
தலைநகரான பண்டா ஏஸ்ஸில், நில அதிர்வினாலும், அலைக் கொந்தளிப்பாலும் ஏற்பட்ட
பாதிப்பில் குறைந்தது 3,000 பேர் உயிரிழந்துள்ளனர். கடற்கரையோரப் பகுதியில் ஏராளமான கிராமங்கள் முழுமையாக
அழிக்கப்பட்டுவிட்டன. பெரும்பாலான தகவல்கள் பண்டா ஏஸ் பகுதியில் இருந்து கிழக்குக் கடலோரப் பகுதியில் இருந்தும்
வந்துள்ளன: "இதே பகுதியில் ஏராளமான கட்டடங்கள் சரிந்து விட்டதாகப் பரந்த முறையில் அறிக்கைகள் வந்துள்ளன;
ஆனால் கவலையளிக்கக் கூடிய வகையில் ஏஸ்ஸின் மேற்குக் கடலோரப் பகுதியில் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை;
இப்பகுதியோ நிலநடுக்கத்தின் மையத்தில் இருந்து 100 கிலோமீட்டருக்குள் உள்ளது; இங்கு இன்னும் கடுமையான முறையில்தான்
இழப்புக்கள் இருக்கக் கூடும்" என்று ABC தெரிவித்துள்ளது.
செய்தி ஊடகத்திற்கு நேற்று இரவு லெப்டினன்ட் கர்னல் பெல்யூனி தெரிவித்ததாவது: "உடல்களை
மீட்கும் பணிகளை நிறுத்திவிட்டோம்; காலையில்தான் முதல் வேலையாக அதை பழையபடி செய்வோம். இறந்தவர்
எண்ணிக்கை உயரக்கூடிய வாய்ப்பு உண்டு; ஏனெனில் பல சடலங்கள் இன்னும் மரங்களுக்கு இடையே சிக்கியுள்ளன." ராய்டர்ஸ்
தெரிவிக்கிறது: "தொலைக்காட்சிப் படங்கள் அதிர்ச்சிக்குட்பட்ட கிராம வாசிகள், கிராமப்பகுதிகளில் தங்களுடைய
உடைமைகளுடன் ஏஸ் பகுதி பேரழிவுப் பகுதிகளைக் கடந்து செல்லுகின்றனர். பஸ்களும், கார்களும் சாலையெங்கும் கவிழ்ந்து
கிடக்கின்றன; சில வாகனங்கள் பாதி தண்ணீரில் மூழ்கியுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் வீடிழந்துள்ளனர்.
ஜனாதிபதி சுசிலோ பாம்பாங் யூதோயோனா ஒரு தேசியப் பேரிழப்பைப் பிரகடனப்படுத்தியுள்ளதோடு,
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவதாகவும் உறுதிமொழி கொடுத்துள்ளார். ஆனால் அவருடைய நிர்வாகம் இந்த மாநிலத்தில்
இராணுவ ஆக்கிரமிப்பைக் கொண்டு, ஜனநாயக விரோதத் தடைகளைச் செய்து வரும் நிலையை அகற்றுவது பற்றி எந்தக்
குறிப்பையும் காணோம்; இதன் விளைவாக தேவைப்படுவோருக்கு உதவி அளிக்கும் பணிகள் தீவிரமாகப் பாதிக்கப்படும்.
இன்னும் பல தெற்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகளும் தீவிரமான பாதிப்பிற்கு உட்பட்டுள்ளன.
குறைந்தது 300 பேராவது தாய்லாந்தில் கொல்லப்பட்டுள்ளனர்; இதல் தென்புறத்தில் உள்ள, புக்கெட் போன்ற சுற்றுலாத்
தலங்களும் அடங்கும். ஆறு மாநிலங்களில் 1,300 பேருக்கும் மேலானோர் உயிரழந்துள்ளனர். "நாங்கள் பெரும் குழப்பத்தில்
உள்ளோம்" என்று நாட்டின் பேரழிவு நிவாரணத் துறையின் துணைத் தலைவரான
Somsak Sunwansujarit அப்பட்டமாக அறிவித்துள்ளார்.
மலேசியாவில், ஐந்து மீட்டர் உயர அலைகள் நாட்டின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளைத்
தாக்கியதில் குறைந்தது 53 பேராவது கொல்லப்பட்டும், மற்றும் ஒரு 34 பேர் காணாமலும் போயுள்ளனர்.
பர்மாவிலிருந்து வந்துள்ள துவக்கத் தகவல்கள் குறைந்து 10 பேராவது உயிரிழந்திருப்பர் என்கின்றன. மாலத்தீவின் அரசாங்கம்,
அலைக் கொந்தளிப்பு தீவுகளைத் தாக்கித் தலைநகரின் மூன்றில் இரு பகுதியை வெள்ளக்காடாகச் செய்துள்ள நிலையில்,
நெருக்கடி நிலைமையைப் பிரகடனம் செய்துள்ளது. இறந்தோர் எண்ணிக்கை அங்கு 15 ஆக உள்ளது.
இந்தப் பேரழிவு பற்றி பரந்த தகவல் கொடுக்கும் முறையில், சர்வதேச செய்தி
ஊடகங்களும் அரசியல்வாதிகளும், நிகழ்வைக் கொடூரமான ஆனால் தவிர்க்கமுடியாத துயரமான தன்மையுடையவை என்று தெரிவிக்கின்றனர்.
பூகம்பங்களைப் பற்றிக் கணித்தல் மிகக் கடினமானது என்றாலும், சரியான நேரத்தில் எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டு
அவசரகால உதவி, பொருள் அளிப்புக்கள் வழங்கப்பட்டிருந்தால், இந்தத் தற்போதைய பெருஞ்சோகத்தின் கொடூரத்தன்மை
கணிசமாகக் குறைக்கப்பட்டிருக்கலாம் என்பதில் ஐயமில்லை. |