World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka sends troops to back US-installed regime in Haiti

ஹைட்டியில் அமெரிக்கா நிறுவிய ஆட்சிக்கு முண்டுகொடுக்க இலங்கை துருப்புக்களை அனுப்புகிறது

By Sarath Kumara
25 November 2004

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை அரசாங்கம் அமெரிக்காவால் நிறுவப்பட்ட பிரதமர் கெராட் டலோடூவின் (Gérard Latortue) அரசாங்கத்துக்கு முண்டுகொடுப்பதன் பேரில் 700 க்கும் மேற்பட்ட துருப்புக்களை கரிபியன் நாடான ஹைட்டிக்கு அனுப்பியுள்ளது. இலங்கை அரசாங்கம் கடல்கடந்து துருப்புக்களை நிறுத்துவது இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் இதுவே முதல் தடவையாகும்.

முதலாம், இரண்டாம் உலகப் போர்களின் போது இலங்கையில் இருந்த பிரித்தானிய காலனித்துவ அரசாங்கம், இத்தகைய ஏகாதிபத்திய உள்முரண்பாடுகளில் துப்பாக்கி ரவைகளாக பயன்படுத்த ஆயிரக்கணக்கான "சுதேசிய சிப்பாய்களை" மத்திய கிழக்குக்கும் மற்றும் உலகின் ஏனைய பாகங்களுக்கும் அனுப்பியது. ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் இந்தத் தீர்மானம் ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்வதற்காக எடுக்கப்பட்டதாகவே தோன்றுகிறது.

இலங்கை படைகள் பெயரளவிலான ஐ.நா சமாதான தூதுக்குழுவின் ஒரு அங்கமாக விளங்கும் அதேவேளை, இந்த நடவடிக்கையின் நோக்கம் அமெரிக்காவின் நலன்களே என்பது வெளிப்படையானதாகும். ஹைட்டியின் தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதி ஜீன் பெட்ரண்ட் அரிஸ்டைட் (Jean-Bertrand Aristide), கலைக்கப்பட்ட ஹைட்டி இராணுவத்தின் முன்னால் அதிகாரிகளின் ஆயுத கிளர்ச்சியினாலும் வாஷிங்டன் மற்றும் அதன் கூட்டாளிகளின் அழுத்தங்களினாலும் நாட்டை விட்டு வெளியேறத் தள்ளப்பட்டார். உண்மையில் அது அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்ட ஒரு சதியாகும்.

அமெரிக்கத் தலைமையில் பல்லாயிரக்கணக்கான துருப்புக்கள் தீவுக்கு அணுப்பப்பட்டிருப்பது "சட்டத்தையும் ஒழுங்கையும்" நிலைநாட்டுவதற்கன்றி, அமெரிக்க சார்பு ஆட்சி நிறுவப்படுதவதனை உறுதி செய்தவற்கேயாகும். அமெரிக்க படைகள் நிலைகொண்டுள்ள போதிலும், ஹைட்டியின் முன்னைய சர்வாதிகாரிகளுடன் சேர்ந்து ஆயுதபாணி குண்டர்களும் முன்னாள் இராணுவத்தினரும், குறிப்பாக பிரதான நகரங்களின் சேரிப்புறங்களில் அரிஸ்டைட் ஆதரவாளர்கள் மீது இரத்தம் தோய்ந்த தாக்குதலைத் தொடர்ந்தும் மேற்கொள்கின்றனர்.

கடந்த மாதம், "ஸ்திரநிலைமையை நிறுவும்" பிரேசில் தலைமையிலான ஐ.நா படைகளின் ஒரு அங்கமாக இலங்கை துருப்புக்கள் ஹைட்டி சென்றுள்ள போதிலும் கூட, அறிஸ்டைட் ஆதரவாளர்களுக்கு எதிராக ஒரு புதிய வன்செயல் அலை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. செப்டெம்பர் 30 இலிருந்து குறைந்த பட்சம் 80 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். கத்தோலிக்க தேவாலயத்தின் அமைதிக்கும் நீதிக்குமான குழுவின் தலைவரான வணக்கத்துக்குரிய ஜீன் ஹசென்ஸ், புதிய ஆட்சியை விமர்சித்து கருத்துத் தெரிவிக்கையில்; "மனித உரிமைகள் காலடியில் போட்டு நசுக்கப்படுகின்றன," என்றார். எனினும் இத்தாக்குதலுக்கு பொறுப்பான வலதுசாரி குண்டர்களை நிராயுதபாணிகளாக்க ஐ.நா படைகள் எதுவும் செய்யவில்லை.

இலங்கை படைகள் அங்கு தங்கியிருப்பதானது, அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகள் ஒரு வரையறையை எட்டாதுள்ள ஈராக் உட்பட உலகின் ஏனைய பாகங்களுக்கும் அமெரிக்க துருப்புக்களை அனுப்பிவைக்க உதவியுள்ளது. இலங்கை படையினர் ஹைட்டியில் தரையிறங்கிய அதே சமயம், அமெரிக்க இராணுவம் பலூஜாவிற்கு எதிரான முற்றுமுழுதான தாக்குதலை தீவிரப்படுத்தியது. இந்தத் தாக்குதலில் நகரின் பெரும்பகுதி சட்டவிரோதமாக அழிக்கப்பட்டுள்ளதுடன் ஆயிரக்கணக்கான போராளிகளும் பொதுமக்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் சுதந்திர முன்னணி அரசாங்கம், ஏனைய நாடுகளில் உள்ள தனது சமகால அரசாங்கங்களைப் போல், உள்நாட்டு எதிர்ப்புக்கு அஞ்சி ஈராக்கிற்கு படைகளை அனுப்பும் அமெரிக்க வேண்டுகோளை நிராகரித்தது. கடந்த செப்டெம்பரில் ஐ.நா வில் உரையாற்றிய ஜனாதிபதி சந்திராக குமாரதுங்க, அமெரிக்க ஆக்கிரமிப்பையிட்டு பட்டும் படாமலும் விமர்சித்தார். ஈராக்கிய வன்முறைகள் மற்றும் அவலங்களையிட்டு தான் கவலையடைந்திருப்பதாக அவர் பிரகடனம் செய்தார். அதன் பின்னர் நடந்த ஒரு ஊடகவியலாளர் மாநாட்டில், தனது அரசாங்கம் "யுத்தத்தை ஒரு தீர்வாக நம்பாத காரணத்தால் ஈராக்கிற்கு துருப்புக்களை அனுப்ப மறுத்ததாக" தெரிவித்தார்.

இலங்கையில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள், தீவின் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக கொடூரமான யுத்தத்தை முன்னெடுத்தன என்ற உண்மையை ஒரு கணம் தள்ளிவைத்தாலும், குமாரதுங்கவின் கருத்துக்கள் மோசடியானவையாகும். ஹைட்டிக்கு துருப்புக்களை அனுப்புவதன் மூலம் சுதந்திர முன்னணி அரசாங்கம் மறைமுகமாக ஈராக்கில் அமெரிக்க இராணுவத்தின் கரங்களை பலப்படுத்தியுள்ளதுடன், அதன் மூலம் புஷ் நிர்வாகத்திற்கு தனது விசுவாசத்தை நிரூபித்துள்ளது.

இதற்கு பிரதியுபகாரமாக சுதந்திர முன்னணி அரசாங்கமும் மற்றும் முழு அரசியல் நிறுவனமும், தமிழீழ விடுதலைப் புலிகளை கொழும்பு அரசாங்கத்தின் நிபந்தனைகளுக்கு இணங்க பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டுவர அமெரிக்காவின் ஆதரவை திரட்டிக்கொள்ள முயற்சிக்கின்றன. அது தோல்வியில் முடிந்து, தீவு மறுபடியும் உள்நாட்டு யுத்தத்தில் வீழ்ந்தால் விடுதலைப் புலி கெரில்லாக்களை தோற்கடிக்க இலங்கை அமெரிக்காவிடம் இராணுவ உதவியை எதிர்பார்க்கும்.

ஏப்பிரலில் பதவிக்கு வந்த பின்னர்,. மே மாதம் வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் அமெரிக்க விஜயத்தை மேற்கொண்டதுடன் புஷ் நிர்வாகத்தின் "பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு" முழு மனதுடன் ஆதரவு தெரிவித்தார். கொழும்பு இந்தப் பதாகையின் கீழ் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மீதான வாஷிங்டனின் நவ காலனித்துவ ஆக்கிரமிப்புக்கு குறிப்பறிந்து ஆதரவளிப்பது மட்டுமன்றி, உள்நாட்டில் தமிழ் சிறுபான்மையினர் மீதான தனது சொந்த "பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு" அமெரிக்காவின் ஆதரவை எதிர்பார்க்கின்றது.

கடந்த சில மாதங்களாக, சுதந்திர முன்னணி அமெரிக்க இராணுவத்துடனான நெருங்கிய உறவுக்கு ஊக்கமளித்து வருவதுடன் பல அமெரிக்க அலுவலர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். "அமைதிகாக்கும்" நடவடிக்கையில் வாஷிங்டனுக்கு உதவுவதற்கான பரந்த திட்டங்களின் ஒரு அம்சமாக, இலங்கை சமாதான ஆதரவு நடவடிக்கை பயிற்சி நிலையம் என்ற ஒரு நிறுவனம் கடந்த ஜூனில் ஸ்தாபிக்கப்பட்டது. அமெரிக்க பசுபிக் கட்டளை நிலையம் ஏற்கனவே தனது முதலாவது பயிற்சித் தொடரை முன்னெடுத்துவருகின்றது. இதில் 64 இலங்கை சிப்பாய்களும் பங்களாதேஷ், மொங்கோலியா மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த 180 சிப்பாய்களும் அடங்குவர்.

எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) எப்பொழுதும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விசுவாசமான ஆதரவாளராகும். ஆனால் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இதற்கு முன்னர் வெகுஜனங்களின் காலனித்துவ விரோத உணர்வுகளை சுரண்டிக்கொள்வதற்கு மட்டுமே ஏகாதிபத்திய விரோத நிலைப்பாட்டை தழுவிக்கொண்டிருந்தன. 1960 மற்றும் 1970களில் குமாரதுங்கவின் சொந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க) அணிசேரா இயக்கத்தில் முதன்மைப் பாத்திரம் வகித்தது.

ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சியாலும் மற்றும் 1964ல் குமாரதுங்கவின் தாயாரான ஸ்ரீமா பண்டாரநாயக்க தலைமையிலான முதலாளித்துவ அரசாங்கத்தில் சேர்ந்து தனது முன்னைய ட்ரொட்ஸ்கிச கொள்கைகளை காட்டிக் கொடுத்த லங்கா சமசமாஜக் கட்சியாலும் (ல.ச.ச.க), ஸ்ரீ.ல.சு.க க்கு இடதுசாரி நற்சாட்சிப் பத்திரங்கள் வழங்கப்பட்டன. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியுடன் இந்த இரு கட்சிகளும் தனது ஏகாதிபத்திய விரோத வாய்வீச்சுக்களை துரிதமாக கைவிட்டன. இன்னமும் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்ட் கட்சியும் ல.ச.ச.க வும், அரசாங்கம் ஹைட்டிக்கு துருப்புக்களை அனுப்பியது பற்றி ஒரு முணுமணுப்பு விமர்சனத்தைக் கூட வெளியிடவில்லை.

சுதந்திர முன்னணியின் பெரும் பங்காளியான மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி), அரசாங்கம் அமெரிக்காவுடன் கொண்டுள்ள உறவு பற்றியும் ஹைட்டிக்கு துருப்புக்கள் அனுப்பப்பட்டதையிட்டும் திட்டமிட்டு மெளனம் காக்கின்றது. 1960 மற்றும் 1970 களில் பண்டாரநாயக்க அரசாங்கத்துடன் கூட்டுச் சேர்ந்தமைக்காக ல.ச.ச.க வை கண்டனம் செய்த ஜே.வி.பி, கஸ்றோவாதம், மா ஓ வாதம் மற்றும் பிற்போக்கு சிங்கள இனவாதம் ஆகியவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட கலவையை அடிப்படையாகக் கொண்டதாகும். சர்வதேச ஊடகங்களில் அடிக்கடி மார்க்சிஸ்டுகள் என தவறாக விபரிக்கப்படும் ஜே.வி.பி, வெற்று ஏகாதிபத்திய விரோத வாய்வீச்சுக்களுக்கு நீண்டகாலமாக பெயர்பெற்றதாகும். அத்துடன் கடந்த ஆண்டு ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு முன்னதாக கொழும்பில் நடந்த போர் எதிர்ப்பு போராட்டங்களிலும் கூட அது பங்குபற்றியது.

தற்போது முதற் தடவையாக ஆட்சிக்கு வந்துள்ள ஜே.வி.பி, புஷ் நிர்வாகம் பற்றிய எந்தவொரு விமர்சனத்தையும் கைவிட்டுள்ளது. சிங்கள பேரினவாதத்தின் புகழ்பெற்ற ஆதரவாளரான ஜே.வி.பி, விடுதலைப் புலிகளுக்கு எந்தவொரு சலுகையும் வழங்கப்படுவதை கடுமையாக எதிர்க்கின்றது. இதன் விளைவாக, ஜே.வி.பி "ரடிகல்வாதிகள்" இலங்கை துருப்புக்களை ஹைட்டிக்கு அனுப்புவதன் மூலம் ஈராக்கில் வாஷிங்டனின் குற்றங்களுக்கு ஆதரவளிக்க முற்றிலும் தயாராக உள்ளனர் --அதுவரையில் விடுதலைப் புலிகளுடன் கொடுக்கல் வாங்கல் செய்வதற்கு கொழும்பு அரசாங்கத்திற்கு வாஷிங்டன் உதவியளிக்கும்.

ஹைட்டிய தூதுக்குழுவை ஜே.வி.பி ஆதரிப்பதற்கு ஒரு மேலதிக காரணமும் உண்டு. சீனாவில் மூர்க்கமான முதலாளித்துவ சுரண்டலை குருட்டுப் பார்வையில் காணும் ஜே.வி.பி, அந்நாட்டின் வங்குரோத்து ஸ்டாலினிச அதிகாரத்துவத்தை முன்றாம் உலகில் முன்மாதிரியாகக் கொள்ளவேண்டிய ஒரு சோசலிச மாதிரி (மொடல்) என புகழ்கின்றது. ஜே.வி.பி தலைவர்கள் குறைந்த பட்சம் ஆண்டுக்கொரு முறையாவது தமது சமகால "சோசலிஸ்டுகளை" கெளரவிப்பதற்காகவும், அதற்கு பிரதியுபகாரமாக தமது சகோதரக் கட்சியின் உத்தியோகபூர்வ வாழ்த்துக்களையும் பெறுவதற்காக பெய்ஜிங்கிற்கு விஜயம் செய்துவருகின்றனர்.

எவ்வாறெனினும், இலங்கையைப் போல் சீன அதிகாரத்துவமும், வாஷிங்டனுடன் நல்லெண்ணத்தை ஏற்படுத்திக் கொள்ள ஹைட்டியில் உள்ள ஐ.நா தூதுக்குழு வசதியான வழியமைக்கும் என முடிவுசெய்துள்ளது. ஈராக்கிற்கு துருப்புக்களை அனுப்புவதால் ஏற்படும் அரசியல் ஆபத்துக்களை எதிர்கொள்ளத் தயங்கும் பெய்ஜிங், கலவரம் அடக்குவதில் விசேட பயிற்சி பெற்ற 125 பொலிஸாரை ஹைட்டிக்கு அனுப்பிவைத்துள்ளது. சீனாவின் பொதுப் பாதுகாப்புக்கான பிரதி அமைச்சர் மெங் ஹொங்விய்: "இது உலக சமாதானத்தை பேணிக் காக்க எமது நாடு வழங்கும் உதவியாகும். சீனா உலகின் பிரதான பொறுப்புவாய்ந்த நாடுகளில் ஒன்று என்றவகையில் இத்தகையை பங்கினை வழங்கியே ஆகவேண்டும்" என தேசியத் தொலைக்காட்சியில் சிடுமூஞ்சித்தனமாகப் பிரகடனம் செய்தார்.

கொழும்பும் சீனாவும் நெருப்புடன் விளையாடுகின்றன. இந்த அரசாங்கங்கள் புஷ் நிர்வாகத்துக்கு தாம் அடிபணிந்து கிடப்பதை மூடிமறைப்பதற்காக தந்திரோபாயங்களை நாட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன என்ற உண்மை, அமெரிக்க இராணுவவாதத்துக்கு எதிராக குறிப்பாக ஈராக்கில் நிலவும் பரந்த எதிர்ப்பின் அறிகுறியாகும். கூடிய விரைவிலோ அல்லது பின்னரோ அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராக சாதாரண உழைக்கும் மக்கள் மத்தியில் நிலவும் எதிர்ப்பு, இத்தகைய ஏகாதிபத்திய குற்றங்களுக்கு உதவிபுரியும் ஆளும் கும்பல்களுக்கு எதிராக வெடிக்கவுள்ளது.

Top of page