WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
What price an American empire?
Niall Ferguson, Colossus: The Rise and Fall of the
American Empire, Penguin Press, 2004, ISBN 0-713-99615-3
அமெரிக்க பேரரசே உன் மதிப்பு என்ன?
நயல் பெர்கூசன்: கலாசஸ் : அமெரிக்கப் பேரரசின் எழுச்சியும், வீழ்ச்சியும். பெங்குயின்
பதிப்பகம், 2004, ISBN 0-713-99615-3
By Ann Talbot
7 December 2004
Back to screen
version
இது ஒரு மூன்று-கட்டுரைகள் தொடரின் முதற்பகுதியாகும்.
ஒரு முறை இ.எச்.கார், டோரிக்கள் உட்பட அனைத்து பிரிட்டஷ் வரலாற்றாசிரியர்களுமே
பழைமைவாத கட்சிக்கு எதிரானவர்கள்தான் என்று குறிப்பிட்டார்; ஆனால் இது நயல் பெர்கூசனுக்குப் பொருந்தாது. இவர்
ஜேர்மனியில் ஆராய்ச்சி மாணவராக இருந்தபோதே கொன்ராட் பிளாக்கின்
Daily Telegraph
இற்கு எழுதுவதில் ஈர்ப்புகொண்டு தாட்சரிச முறையில் தன்னுடைய டோரிக் கருத்துக்களை வளர்த்துக் கொண்டவராவார்.
இன்று மிக அதிகமாக நூல்கள் எழுதியுள்ள வரலாற்று ஆசிரியர்களில் ஒருவராகவும் அவர் உள்ளார்.
Empire: How Britain Made the Modern World
(2003), The Cash Nexus: Money and Politics in Modern History
1700-2000 (2002), The House of Rothschild: Money's Prophets,
1798-1848 (2003), The House of Rothschild, 1849-1998 (2002), The PIty
of War: Explaining World War I (1999),
Virtual Histories: Alternative
and Counterfactuals (1997) என்ற
நூல்களைத் தொடர்ந்து, சமீபத்தில் Colossus,
A Study of American Imperialism என்பதை வெளியிட்டுள்ளார்.
இந்த நூல்கள் அனைத்துமே கதவை திறந்துவைக்க பயன்படும் தடுப்பை போன்றவைதான்.
பெர்கூசன் தற்பொழுது நியூயோர்க் பல்கலைக்கழகத்தில்
Stern Business School
இல் ஹெர்ஸோக் நிதி வரலாற்றுப் பேராசிரியராகவும், ஆக்ஸ்போர்ட் ஜீசஸ் கல்லூரியில் மூத்த ஆராய்ச்சியாளராகவும்,
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஹூவர் அமைப்பில் மூத்த ஆராய்ச்சியாளராகவும் உள்ளபோதிலும் அவருடைய
நூல்களைப் பற்றிய தொடர்புடைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் அவருடைய செய்தித்தாள் கட்டுரைகளினாலுமே
கூடுதலாக அறியப்பட்டுள்ளார். ஈராக் போர் தொடங்கியலிருந்து அவர் அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கை பற்றித்
தன்னுடைய கருத்தைத் தொடர்ந்து கூறிவரும் பண்டிதராக மாறியுள்ளார்.
Colossus வரலாற்றை
நோக்கித் தலையசைத்தாலும், வரலாற்றைப் பற்றிய பெர்கூசனுடைய விளக்கங்களின் பார்வையில் தற்காலத்திய அமெரிக்க
கொள்கைகளை எடுத்துரைக்கும் புத்தகமாக உள்ளது. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் புஷ் நிர்வாகம் மேற்கொண்டுள்ள
கொள்கைகளை பற்றித் தீவிரமான குறைபாட்டை பெர்கூசன் காண்கிறார். இதனால் ஈராக் போரை அவர் எதிர்க்கிறார்
என்று பொருள் கொண்டுவிடக் கூடாது. இதற்கு முற்றிலும் அவர் ஆதரவைத்தான் கொடுத்துள்ளார். அவருடைய
எதிர்ப்பிற்குக் காரணம் புஷ்ஷின் தலைமையின்கீழ் அமெரிக்க போதுமான ஆக்கிரோஷத்தை கொள்ளவில்லை என்பதுதான்.
பெருகி வரும் அமெரிக்கக் கடன்களைப் பற்றி புஷ் அசட்டை செய்துவருகிறார் என்பதை பற்றி பெர்கூசன் பெருங்கவலையை
காட்டியுள்ளார். அமெரிக்காவின் கடன் பளுவைவிட பிரேசிலின் கடன்பளு குறைவாகத்தான் உள்ளது என்று அவர்
சுட்டிக்காட்டியிருக்கிறார். இது ஒரு எழுச்சி பெற்று வரும் சந்தை என்றால் சர்வதேச நாணய நிதியம் (IMF)
இதற்குள் தலையீடு செய்திருக்கும். எந்த பேரரசும் இதற்கு முன் இப்படிப்பட்ட நிலையில் இருந்ததில்லை; ஆனால்
அமெரிக்கா ஆசிய வங்கிகளால் முட்டுக் கொடுக்கவேண்டிய நிலையிலுள்ளது. ஏனெனில் அந்நாடுகள் தங்கள் நாணயம்
டொலருக்கெதிராக மிகைமதிப்பீடு அடைவதை தடுக்கும் பொருட்டு அமெரிக்கக் கருவூலப் பத்திரங்களை வாங்கும்
கட்டாயத்திற்கு உட்பட்டுள்ளன. தற்போதுள்ள இந்த உறவுமுறை முடிவிற்கு வரக் கூடும் என்று பெர்கூசன்
எதிர்பார்ப்பதுடன், அத்தகைய மாற்றம் அமெரிக்கா பொதுநலச் சார்புடைய வரவுசெலவுத் திட்டம் பற்றிய
கவலையினால் தூண்டப்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார். "வெளிநாட்டு மூலதனத்தின் மீது அமெரிக்கா தங்கியுள்ள தன்மை
மிக உயரத்தில் உள்ள கயிற்றின்மீது நடக்கும் வித்தைக்கு ஒப்பானது ஆகும்" என்று அவர் கூறுகிறார்.
அமெரிக்காவில் உள்ள பெரும் பிரச்சினை அதன் மக்கள் "தேசியப் பாதுகாப்பைவிடச்
சமுதாயப் பாதுகாப்பை அதிகம் விரும்புவதுதான்" என்று பெர்கூசன் குறைகூறியுள்ளார். அவருடைய பார்வையில் இந்நாடு
மிக அதிக முறையில் புதிய ஏற்பாட்டுக் காலத்தில் இருந்து நடைமுறையில் இருக்கும் கொள்கைகளின் சுமையில் ஆழ்ந்துள்ளது.
பொதுநலச் செலவினம், குறிப்பாக மருத்துவ வசதிக்காகச் செலவிடப்படும் தொகையைக் கணிசமாகக் குறைத்துக் கட்டுப்படுத்த
புஷ் போதுமானவற்றைச் செய்யாததுதான் அவருடைய நிதியத்தோல்விக்குக் காரணம் என்று பெர்கூசன் கருதுகிறார். "அதிகாரபூர்வ
அறிவிப்பு இல்லாத அமெரிக்கப் பேரரசின் சரிவும், வீழ்ச்சியும் வாசலில் உள்ள பயங்கரவாதியினரால் ஏற்படாது என்றும்
அவற்றிற்கு ஆதரவு கொடுத்துவரும் போக்கிரி நாடுகளாலும் அல்ல என்றும் சமூகநல அரசாங்கம் என்ற பெயரில் உள்நாட்டு
ஆட்சி கடைப்பிடித்து வரும் நிதிநெருக்கடியினால்தான்" என்று அவர்
Colossus
இல் கூறுகிறார். ஓர் ஏகாதிபத்திய சக்தியாக அமெரிக்கா வெற்றிபெற வேண்டும் என்றால், அரசாங்கம் சமூகநலச் செலவினங்களை
ஆக்கிரோஷத்துடன் குறைக்கவேண்டும் என்று அவர் வாதிட்டுள்ளார்.
இவரைப் பொறுத்தவரையில் ஈராக்கின் மீது நடத்தப்பட்ட தூண்டுதலற்ற படையெடுப்பு ஒரு
பிரச்சினை அல்ல. ஈராக்கிற்கும் அல் கொய்தாவிற்கும் இடையே எந்தத் தொடர்பும் கிடையாது என்பதை இவர்
ஒப்புக்கொள்ளுகிறார். ஆனால் போருக்கான காரணத்தைப் பொறுத்தவரையில், அத்தகைய தொடர்பு உண்டு என்ற
ஆலோசனையில்லாமலேயே போர் தொடக்கப்பட்டிருக்கலாம் என்று இவர் வாதிடுகிறார். கூட்டணிப்படையினர்
பேரழிவுக்குரிய ஆயுதங்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளில் தோல்வியுற்றமை "சதாமை விட இது மடைத்தனமானது" என்று
விடையிறுத்து எழுதியுள்ளார்.
புஷ், ரம்ஸ்பெல்ட் மற்றும் பலரும் அமெரிக்கா ஒரு பேரரசு அல்ல என்றும் ஈராக்கில்
தொடர்ந்து இருக்கத் தயாராக இல்லை என்று பலமுறையும் இவர்கள் கூறுவதைத்தான் பெர்கூசன் குறை என்று கூறுகிறார்.
"மற்ற பேரரசுகளை ஏற்படுத்துபவர்கள் தாங்கள் எவ்வாறு ஆயிரம் ஆண்டுகள் ஆளுமைக்குட்படுத்தப்பட்ட மக்கள்மீது
ஆதிக்கம் செலுத்தியுள்ளோம் என்று பேரவாக்கொண்டு கூறுகின்றனர். இதுதான் வரலாற்றின் ஆயிரம் நாட்கள் நிலைத்த
முதல் பேரரசாக இருக்கலாம் " என்று அவர் எழுதியுள்ளார்.
உண்மையில், ஆயிரம் ஆண்டுகள் என்பது சீனப் பேரரசிற்கும், ரோமானியர்களுக்கும் கூட
குறுகிய காலம் எனத் தோன்றலாம்; பிரிட்டிஷார் தங்களுடைய பேரரசை சூரியன் மறையாத பேரரசு என்று
வர்ணித்தனர். வெளிப்படையாக ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கக் கூடிய பேரரசு வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறிய
ஒரே ஒரு பேரசை நிறுவிய குழு நாஜிக்கள்தான். ஒரு பாதுகாப்பற்ற நாட்டின்மீது வன்முறையான வகையில் அமெரிக்கா
படையெடுத்திருப்பதைப் பார்க்கும்போதும், அதன் நகரங்களில் குண்டுவீச்சுக்களை நடத்தியிருப்பதைக் காணும்போதும்,
அதன் மக்களை படுகொலை செய்து, அதன் கட்டமைப்புக்களையும் அழித்திருப்பதைப் பார்க்கையில், பெர்கூசன்
ஏற்றுக்கொள்ள கூடியதைவிட நாஜிக்களுடன் அதன் ஒப்புமை இன்னும் கூடுதலாக நெருக்கமாக உள்ளது.
அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கை ஒரு நீண்டகால அர்ப்பணிப்பை கொண்டிருக்கவில்லை
என்றும் தன்னையே கட்டுப்படுத்துதிக்கொள்ளும் தன்மையைக் கொண்டிருந்தது என்பதும் கொரியா, வியட்நாம் ஆகியற்றில்
இருந்து தெளிவாகிறது என்று பெர்கூசன் கூறுகிறார். சீன நகரங்களின் மீது அணுகுண்டுகளை வீச வேண்டும் என்று தளபதி
மக்ஆர்தர் தெரிவித்திருந்த ஆலோசனையை ஜனாதிபதி ட்ரூமன் ஏற்றிருக்கவேண்டும் என்று பெர்கூசன் வாதிடுகிறார்.
"1951ம் ஆண்டு அமெரிக்கா இராணுவத் திறனையும், பொது மக்கள் ஆதரவையும் கருத்திற் கொண்டு மாவோவிச சீனா
மீது இராணுவத் தாக்குதலை நடத்தி ஒரு முடிவிற்கு வந்திருக்கலாம். அணுவாயுதப் போட்டியில் அமெரிக்கா பெற்றிருந்த
மிகப்பெரிய பாய்ச்சலுக்கான வாய்ப்பை, மற்ற ஏகாதிபத்திய நாடுகள் தமக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை
கைவிட்டிருக்காது" என்று இவர் குறிப்பிடுகிறார்.
மக்ஆர்தர் ஏற்கனவே வடகொரிய எல்லையில் இருந்த யாலூ நதிப்புறம் முன்னேறிய வகையில்,
சீனா போரில் நுழைவதற்குத் தூண்டும் வகையில் நடந்து கொண்டார் என்பதை பெர்கூசன் புறக்கணித்துள்ளார். அந்த நேரத்தில்
சீனா அமெரிக்காவுடன் இராஜதந்திர உறவைக் கொண்டிருக்கவில்லை; மாவோ கொரியாவின் மீதான அமெரிக்கப் படையெடுப்பு
சீனாவின் மீதான முழுத்தாக்குதலுக்கு ஒரு முன்னோடி என்றுதான் கருதியிருந்தார். எனவே இத்தாக்குதலை சீன மண்ணில்
இல்லாது கொரிய மண்ணில் சந்திக்கும் முயற்சியை அவர் ஈடுபட்டிருந்தார். அந்தத் தூண்டுதல் இல்லாவிட்டால் சீனா, கொரியப்
போரில் தலையீடு செய்திருக்க முடியுமா என்பது ஐயப்பாட்டிற்கு உரியதுதான்; ஏனெனில் அப்பொழுதுதான் அது பெரும்
பலவீனமுற்றிருந்த உள்நாட்டுப் போரிலிருந்து வெளிப்பட்டிருந்தது. இந்தச் சூழ்நிலையில் வாஷிங்டனுடன் நல்ல நட்புறவை
நிறுவிக் கொள்ளுவதற்குத்தான் மாவோ தயாராக இருந்திருப்பார். ஆனால் சீன-சோவியத் உறவுகள் மிகவும் இறுக்கமாக
இருந்த நிலையில், இரு நாடுகளும் நட்பு ஒப்பந்தம், ஒன்றுக்கொன்று உதவுதல் என்று பெப்ரவரி 1950ல்
கையெழுத்திட்டிருந்தபோதிலும் அந்த ஒப்பந்தத்தின் பிரிவுகள் சீனாவைவிட, சோவியத் ஒன்றியத்திற்குச் சாதகமாக இருந்தன.
முற்றிலும் ஏகாதிபத்திய முறையில்கூட சீனாவை ஓர் அமெரிக்க நண்பு நாடாகச் சோவியத் ஒன்றியத்தின் கிழக்கு எல்லையில்
கொண்டிருக்கக்கூடியது கொரியப் போர் என்ற பேரழிவை விட திறமையான செயலாகத்தான் இருந்திருக்கும். இது நடந்து
இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் ரிச்சர்ட் நிக்சனின் தலைமையின் கீழான அமெரிக்க நிர்வாகம் சீனாவுடன்
நல்லுறவை வளர்த்து நிலைநிறுத்திக் கொள்ள முடிந்தது.
அமெரிக்கா தயக்கத்துடன்தான் இராணுவத் தீரச்செயல்களில் ஈடுபட்டது என்ற சித்திரத்தை
பெர்கூசன் தீட்டும்போது, மற்ற இடங்களில் உள்ள வரலாற்றுச் சான்றுகள் சீன அல்லது ரஷ்ய ஆக்கிரோஷ
நடவடிக்கைகளைவிட அமெரிக்க நடவடிக்கைகள்தாம் கொரியப் போருக்குக் காரணமாக இருந்தன எனக் காட்டியுள்ளன.
மக்ஆர்தரின் தூண்டிவிடும் நடவடிக்கைகள் தேசியப் பாதுகாப்புக் குழுவின் சிந்தனைக்கு ஏற்றவாறுதான் இருந்தன; அது
சோவியத் ஒன்றியத்தை யூரேசிய நிலப்பகுதியில் இராணுவ ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் சக்தியாகத்தான் சித்தரித்திருந்தது.
அமெரிக்க ஆட்சி வட்டத்தில் ஒரு பிரிவே அதிகரித்தளவில் சோவியத் ஒன்றியத்தைத் தடுத்தும் முயற்சி தேவை எனக்
கருதியது; ஆனால் இதை ஒட்டி விரைவில் ஆயுத வளர்ச்சி ஏற்படுத்தப்படவேண்டும் என்றும் சமூகநலச் செலவினங்கள்
தவிர்க்கப்பட்டு, இராணுவச் செலவு பாரியளவில் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் இருந்தது. அத்திட்டம் அரசியல்
முறையில் நடைமுறைப்படுத்தப்படமுடியாமல் 1950 ஜூன் 25 வரை இருந்தது. அப்பொழுது வட கொரியா
தென்கொரியா மீது படையெடுத்தது. வெளிவிவகார அமைச்சராக அப்பொழுது இருந்த டீன் ஆக்கீசன் "கொரியா வந்து
நம்மைக் காப்பாற்றியது" என்று பின்னர் குறிப்பிட்டார்.
இச் சூழ்நிலையை தோற்றிவிக்கும் முயற்சிகளில் ஆக்கீசன் ஒரு பங்கை
கொண்டிருந்திருக்கலாம்; ஏனெனில் இவர் ஜனவரி 1950ல் நிகழ்த்திய உரையில் விஷேடமாக தெற்கு கொரியாவின்
பெயரை, அமெரிக்காவின் இராணுவப் பாதுகாப்பிற்குட்பட்ட வரம்பிற்குள் கொண்டுவரவேண்டும் எனக்கூறிய நாடுகளின்
பட்டியலில் சேர்த்திருந்தார். வட கொரியத் தலைவர் கிம்II
சுங், ஸ்ராலினை சந்தித்து கொரியத் தீபகற்பம் மீண்டும் ஒற்றுமைப்படுத்தப்படவேண்டும் என்பதற்கு உதவியைக்
கேட்டபோது, ஸ்ராலின் இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு ஏதும் கொடுக்கக் காரணம் இல்லை என்றுதான் கருதினார். அவர்
கிம்மிற்கு அனுமதி கொடுத்தார். ஆனால் ஒரு நிபந்தனையும் விதித்தார்: "இச்செயலில் உங்கள் பல் உடைபட்டால், நான்
ஒரு சுண்டுவிரலைக் கூட உயர்த்தி ஆதரவிற்கு வரமாட்டேன்."
சோவியத் ஒன்றியம் சில இராணுவத் தளவாடங்களையும் இராணுவ ஆலோசகர்களையும்
அனுப்பியிருந்தபோதிலும், வட கொரியா, தென் கொரியா மீது படையெடுத்தது ஒரு சோவியத் சதியல்ல; ஒரு மிகச்
சிறிய அளவிலான போராக இருந்திருக்கவேண்டியது அமெரிக்க செப்டம்பர் மாதம்
Inchon இல்
தரையிறங்கியதைதை தொடர்ந்து பெரிதாயிற்று. இந்த இடத்தில் ஒவ்வொரு உயர்நிலைப் பள்ளி மாணவருக்கும்
பட்டப்படிப்பிற்கு முன்னுள்ளவருக்கும் தெரிந்துள்ள, நன்கு ஆராய்ச்சி செய்து வெளிவந்துள்ள விஷயத்தை நுழைப்பதற்கு
மன்னிப்பை நான் கோரினாலும், பேராசிரியர் பெர்கூசன் சான்றை மிகத் தீவிமான முறையில் திரித்துக் கூறுகிறார்.
கொரியப் போரினால் ஐரோப்பாவில் மீண்டும் இராணுவ மயமாக்கலுக்கும் பனியுத்த
நிலைமையை தீவிரப்படுத்தியும் இருக்கும். ஆனால் மக்ஆர்தர் சீன நகரங்களை அணுவாயுதங்கள் மூலம் தாக்கியிருந்தால் அது
மூன்றாம் உலகப் போரை ஆரம்பித்திருக்கும். சோவியத் ஒன்றியம் 1949ம் ஆண்டு தன்னுடைய முதல் அணுவாயுதச்
சோதனையில் வெற்றியைக் கண்டது; சீனாவின் மீதான அணுவாயுத தாக்குதலை தனக்கெதிரான நிச்சயமாக
அச்சுறுத்தலாகவே கருதியிருக்கும். அமெரிக்க நகரங்களை நோக்கி தன் அணுவாயுதங்களை செலுத்தும் திறன் அதற்கு
அப்பொழுது இல்லாவிட்டாலும், பெரும்பாலான ஐரோப்பிய நகரங்களை எந்த இடர்பாடும் இல்லாமல் அழித்திருக்கும்.
இந்தக் கொரியப்போர் பற்றிய நிகழ்வுகளை ஆராய்ந்தது பயனுடையதே; ஏனெனில் தன்னுடைய திட்டத்தை மக்ஆர்தர்
செயல்படுத்தியிருந்தால் ஐரோப்பாவும், பிரிட்டனும் ஒரு பெரும் அணுத் தாக்குதலுக்கு உட்பட்டிருந்த பாழ்பட்ட
நிலங்களாகி, தன்னுடைய நூல்களை எழுதுவதற்கு பெர்கூசன் இருந்திருக்க மாட்டார்.
அனைத்து முக்கிய ஐரோப்பிய நகரங்களும் பேரழிவில் ஆழ்ந்திருக்கக் கூடும் என்ற சிறிய
பிரச்சினையினால் மக்ஆர்தர் புகழ்பாடுவதில் இருந்து பெர்கூசன் திசை திரும்பவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியின்
சிவில் அதிகாரத்திற்கு இராணுவ சக்தியை பணிந்திருந்த நிலையை எதிர்த்த மக்கார்தரின் திறனை அவர்
குறிப்பிடத்தக்கவகையில் பாராட்டுகிறார். தேசிய சட்ட மன்றத்தில் எதிர்க்கட்சியில் இருந்த குடியரசுக் கட்சித்
தலைவருக்கு மக்ஆர்தர் வெளிப்படையாக கொரியாவுடன் போரை நிறுத்திக் கொள்ளுதல், மற்றும் சீனாவின்மீது குண்டுவீச்சு
நடத்துதல் கூடாது என்ற உத்தியோகபூர்வ கொள்கைகளை பகிரங்கமாக எதிர்த்து எழுதியதற்காக அவரைப் பதவியில்
இருந்து ட்ரூமன் நீக்கிவிட்டார். மக்ஆர்தர் எழுதிய கடிதம் ஏப்ரல் 1951ல் வெளிவந்து அவரை நீக்கிவிடுவதை தவிர வேறு
விருப்பம் இல்லை என்று ட்ரூமனுக்கு உணர்த்தியது. தன்னுடைய நாட்குறிப்பில் ட்ரூமன் எழுதியிருந்ததுபோல் "இது முற்றிலும்
கீழ்ப்படியாத தன்மையைத்தான் வெளிப்படுத்தியது"; மேலும் ஒரு மக்கள் தலைவர் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட
ஜனாதிபதிக்கு போர்க்காலத்தில் கூட எதிர்ப்புத் தெரிவிக்கும் அதிகாரம் தளபதிக்குக் கிடையாது என்ற கொள்கைக்கு
நேரடியான சவாலாகவும் இருந்தது.
இதைப் பற்றிப் பெர்கூசன் தெரிவிக்கிறார்: "இவ்வாறு செய்த முறையில், ஜனாதிபதி அதிகாரம்,
குடியரசு அரசில் அமைப்பு மக்ஆர்தரின் அறைகூவலுக்கு எதிராக நிலைநிறுத்திய வகையில் ட்ரூமன் மக்களுடைய விருப்பத்திற்கு
எதிராக நடந்து கொண்டார் என்பதை விந்தையானது".
ட்ரூமனுடைய செல்வாக்கு உண்மையில் இக்காலக்கட்டத்தில் குறைந்துதான் போயிற்று.
கருத்துக் கணிப்புக்களில் முப்பது சதவிகிதத்திற்கும் குறைவாகப் போயின. ஆனால் அவருக்கு எதிராக பிரச்சாரத்தை முடுக்கிவிட்டவர்கள்
எவர்கள் என்பதையும் நாம் கவனத்திற்கெடுக்கவேண்டும். செனட் உறுப்பினரான ஜோசப் மக்கார்தி, முழுமையாக
மக்ஆர்தருக்கு ஆதரவைக் கொடுத்து ஜனாதிபதி பெரிய குற்ற விசாரணைக்கு
(Impeachment) உட்படுத்தப்படவேண்டும்
என்றும் கூறினார். ட்ரூமனுக்கு எதிராக மக்கள் ஆதரவு மக்ஆர்தருக்கு இருந்ததற்குக் காரணம் இது மக்கார்த்தியின்
பெருந்தீமை பயத்த கம்யூனிஸ்ட் எதிர்ப்பு என்ற பிரச்சாரத்தை ஒட்டியிருந்ததுதான். அப்பிரச்சாரம் ஒவ்வொரு
தாராளவாத ஜனநாயகவாதியையும் ஒரு கம்யூனிஸ்டாக சித்தரித்துக்காட்டி, ட்ருமனுக்கு நெருங்கிய கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள்
இருந்தனர் என்ற கருத்தையும் திரித்துக் கூறிய வகையில் இருந்தது.
ஒரு திறைமையான ஏகாதிபத்திய சக்தியாக நடந்து கொள்ளவேண்டும் என்றால் அமெரிக்க
அரசியல் உயராட்சிக் குழு 1950 இல் அமெரிக்க அரசியலமைப்பைத் தூக்கி எறிந்துவிட்டு ஒருவிதமான இராணுவ ஆட்சியைக்
கொண்டு வந்திருக்கவேண்டும் என்ற கருத்தை பெர்கூசன் தெரிவிக்கிறார். ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யு புஷ் தன்னைத்
தொடர்ந்து "தலைமைத் தளபதி" என்று அழைத்துக் கொள்ளும் நிலையில், இது ஒரு கொள்கை அறிக்கையே ஒழிய வரலாறு
ஆகாது. தன்னுடைய சமீபத்திய தேர்தல் பிரச்சாரத்தில்கூட ஜோன் கெர்ரி ஜனாதிபதிப் பதவியை பற்றி இதேபோன்ற
கருத்தைத்தான் தெரிவித்து, தன்னுடைய வியட்நாம் இராணுவ அனுபவத்தினால் தன்னைக் கூடுதலான திறமையுள்ள தலைவர்
என்றும் பெருமைப்படுத்தி உயர்த்திக்கொண்டார். பெர்கூசன் புஷ்ஷிற்கு எதிராக கெர்ரிக்கு ஆதரவு கொடுத்தார்; இதில்
இருந்து நமக்கு எத்தகைய வலதுசாரி முனனோக்கில் அவருக்கு அந்த எண்ணம் இருந்தது என்பது புலனாவது மட்டுமில்லாமல்
கொரியப்போரைப் பற்றி இவர் கூறுவதில் இருந்து அவருடைய முன்னோக்கு எப்படி இருந்தது என்பதும் தெரியவருகிறது.
ஜனாதிபதித் தேர்தலில் பிரசாரத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள இராணுவவாதத்தினை
கொரியப் போர் காலகட்டம்வரை தொடர்ந்து செல்லலாம். அதற்கு முன்பு அமெரிக்கா சமாதான காலத்தில் ஒரு
பெரிய இராணுவப்படையையோ, பாதுகாப்பிற்கான பெரிய துறையையோ, ஆயுதங்களுக்கான பெரும் வரவுசெலவு
திட்டங்களையோ வைத்திருந்ததில்லை. நிரந்தர படைகள் ஜனநாயகத்திற்கும் ஒரு நல்ல வரவு-செலவு திட்டத்திற்கும் ஒரு
இழிவு என்றுதான் கருதப்பட்டன. கொரியப் போர் பனிப்போருக்கு வித்திட்டு அமெரிக்க அரசியல் வாழ்வில்
இராணுவமயமாக்கலை வளர்த்துவிட்டது. இது நாளடைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் இராணுவத் தலைவர்களை விட
உயர்நிலையில் உள்ளவர்கள் என்ற நாட்டின் நிறுவகக்கொள்கைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்திவிட்டது. ட்ரூமன்-மக்ஆர்தர்
மோதலில் பெர்கூசன் காட்டியுள்ள கண்ணோட்டம்
Colosssus
இல் உள்ள ஒரு பொது அரசியல் பார்வையைச் சுட்டிக் காட்டுகிறது; இது பெரும் சிதைவிற்குட்பட்டுள்ள வரலாற்றுப்
பிரதிபலிப்புக்களை உள்ளடக்கி உள்ளது. பெர்கூசனுடைய புத்தகத்தின் முழுத் தலைப்பு: கலாசஸ்:
அமெரிக்க பேரரசின் மதிப்பு (Colossus:
The Price of America's Empire). இந்த மதிப்பு
தொடர்பான கேள்வியும் மிகத் தெளிவாகத்தான் உள்ளது; அதாவது ஜனநாயகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தல்
என்பதேயாகும் அது.
தொடரும்..... |