WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
The Scott Peterson case: a new American tragedy
ஸ்கொட் பீட்டர்சன் வழக்கு : ஒரு புதிய அமெரிக்க பெருந்துயரம்
By David Walsh
11 December 2004
Back to screen version
தற்காலத்திய அமெரிக்க யதார்த்தம் பற்றி சில நேரங்களில் நாம் உண்மையிலேயே
பெரும்பீதியடைய வேண்டியிருக்கிறது. இதனால் நம்பிக்கையீனத்தில் ஆழ்ந்துவிடுவோம் என்றோ, இயலாநிலையில் கைகளை
உயர்த்தி நிற்போம் என்ற கருத்தோ அல்ல. தங்கள் நாட்டின் காட்டுமிராண்டித்தனம், வறுமை, "அதிதீவிர பின்தங்கிய
நிலை" ஆகியவை பற்றி வேறு ஒரு காலகட்டத்தில் ரஷ்ய சோசலிஸ்டுகள் தொடர்ந்து பலமுறை விவரித்துள்ளனர்; இதனால்
அவர்கள் இந்தப் பெரும் சோகம் நிரம்பிய உண்மை நிலையை சமூகப் புரட்சியின் மூலம் கடந்துவிடலாம் என்ற முயற்சியை
சிறிதும் கைவிட்டுவிடவில்லை. இன்று அமெரிக்கா அதன் காட்டுமிராண்டித்தனத்தை, அதன் வறுமையை கொண்டுள்ளதுடன்,
உடலியல் மற்றும் ஆன்மிகத்தின் மிக தீவிரமான, கிட்டத்தட்ட பெருந்தீமை புரையோடியுள்ள சமூகப் பிற்போக்குத்தனத்தையும்
கொண்டுள்ளது.
கலிஃபோர்னியாவில் உள்ள ரெட்வுட் சிட்டியில் நடைபெற்ற ஸ்கொட் பீட்டர்ஸன் கொலைவழக்கு
இத்தன்மையைப் பற்றி மிகக் கூடுதலாகவே சான்றினை கொடுத்துள்ளது. டிசம்பர் 2002ல் தங்கள் வீட்டில் தன்னுடைய 27
வயது கர்ப்பிணி மனைவி லேசியைக் கொலை செய்து அவள் உடலை சான் பிரான்சிஸ்கோ வளைகுடாவில் வீசியெறிந்து விட்டதாக
விசாரணை நடத்தப்பட்டு அதில் குற்றவாளி என நான்கு வாரங்களுக்கும் முன் தீர்ப்பு கொடுக்கப்பட்டது. பீட்டர்சனுக்கு
மரண தண்டனை கொடுக்கலாமா அல்லது சிறையில் ஆயுள்தண்டனையை அனுபவிக்கவேண்டுமா என்று நடுவர்கள்
(Jurors) தீர்மானிக்க
இருப்பது (பின்னர் நீதிபதி இறுதியாக முடிப்பார்) மிகுந்த கொடூரத்தனமும் பீதிதரும் நிலையும் உள்ள வழக்கின் கடைசிப்
பகுதியாகும். நூற்றுக்கணக்கான செய்தியாளர்கள் இவ்விடத்தில் முடிவை பற்றி அறிந்து கொள்ள குவிக்கப்பட்டுள்ளனர்.
பீட்டர்சனுக்கு மரணதண்டனை கொடுக்கவேண்டும் என்று ஜூரர்கள் முடிவெடுத்தால், செய்தி ஊடகம் அதை மிக நவீன முறையில்
உடனடித் தொடர்பு முறையில் (பல நேரமும் பெரும் களிப்புடன்கூட) அறிவிக்கும்; அத்தகைய முடிவு இருண்ட மத்தியகாலத்திற்கு
பொருத்தமானதாக இருக்கும்.
வழக்கு விசாரணையில் இறுதிப்பகுதியில் தன்னுடைய வாதத்தில் அரசாங்க வக்கீல் டேவிட் ஹாரிஸ்,
பீட்டர்சன்னை "மிகக் கொடூரமான அரக்கன்", "மோசமான அரக்கர்களிலும் மோசமானவர்" என்று சித்தரித்தார்.
திரு ஹாரிஸ் சற்று கவனத்துடன் இருக்கவேண்டும். இவருடைய கூற்றுக்களை எவரேனும் உற்றுக் கவனிக்கக் கூடும். "மோசமானவர்களில்
மோசமானவர்?" இது ஒரு 32 வயது உரம், மற்றும் பாசனமுறை பற்றிய விற்பனைப் பிரதிநிதியை பற்றி மிகக் கடினமான
விவரணம் போல் தோன்றுகிறது; குறிப்பாக கடந்த 18 மாதங்களுக்கு மேலான காலத்தில் 100,000 க்கும் மேற்பட்ட
சாதாரண மக்களின் மரணத்திற்கு காரணமாக உள்ள ஓர் இராணுவத்தைக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில் இத்தகைய கருத்து
வெளிவருவது வியப்பே ஆகும். ஈராக்கியர்களுடைய குற்றம், அவர்கள் இயற்கை வளங்கள் நிறைந்துள்ள ஒரு நாட்டில்
வாழ்ந்து வருகிறார்கள் என்பதுதான். பீட்டர்சன் ஒரு கொடூரமான கொலையை செய்ததற்காக குற்றஞ்சாட்டப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளார்,
ஆனால் பாரிய படுகொலை செய்ததற்கு பொறுப்பிருக்கும் ஒரு ரம்ஸ்பெல்ட், ஒரு புஷ் அல்லது ஒரு செனி போன்றவர்கள்
உள்ள அதே அணியில் அவர் இல்லை.
ஹாரிஸ் கூறினார்: "இது ஒரு கடினமான தேர்வுதான்
[மரண தண்டனை],
ஆனால் இதுதான் சரியான முடிவு. எவ்வித இரக்கம் காட்டாத, கருணையில்லாத ஒரு கொடூரமான முறையில் தன்னுடைய
குடும்பத்தையே நடத்தும் நபர் ஒருவர் மரணதண்டனைக்கு தக்கவராகிறார்."
அரசு தரப்பு வழக்கறிஞர் கூடுதலாகவே எதிர்ப்பை காட்டுகிறார். மற்றொரு மனிதரை
மரணத்திக்குட்படுத்தும் எண்ணம் இவருக்கும், இன்னும் கணக்கிலடங்காமல் சட்டத்தை நிலைநிறுத்தும் அதிகாரிகளான, அரசு
வழக்கறிஞர்கள், அமெரிக்கா முழுவதிலும் உள்ள அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இயற்கையாகவே வருகிறது என்பதை
தெளிவாக உணர முடிகிறது;
இதில் டெக்சாசின் பழைய கவர்னரும் தற்பொழுது வெள்ளை மாளிகையின் தலைவரும்
அடங்குகிறார்.
ஸ்கொட் பீட்டர்சன் மிக நிதானத்துடன் இரக்கமின்றி தன்னுடைய மனைவியைக் கொலை
செய்திருக்கலாம்; ஆனால் அவருடைய நடவடிக்கைகள் கொடுமையானதும், அரசாங்க உதவியுடனும் இந்த நாடு பெற்றுள்ள
மரணத்துடனும் அழிவுடன் ஒப்பிடும்போது அவர் செயல் மங்கிவிடுகிறது. "இரக்கம் காட்டாதீர்கள், நடந்த செயல்
இதயத்தன்மை அற்றது, மிக மிகக் கொடூரமானது". இச்சொற்கள் அவரையும் அவருடைய நாட்டின் நடவடிக்கையையும்
பற்றிக் கூறப்படுகின்றன என்று கூட அறியாத ஹாரிஸ் ஒரு குறும்பார்வைகொண்ட, அறியாமையில் உள்ளவராவார்.
குற்றவாளி பாதுகாப்புத்தரப்பு வக்கீலான மார்க் ஜெராகோஸ், பீட்டர்சனுடைய உயிர்
காப்பாற்றபட வேண்டும் என்ற முறையீட்டில் சற்று வேறுவிதமான, மனிதாபிமானக் கருத்தை ஒலித்தார். "அனைத்து இந்த
இறப்புக்கள், அனைத்து இந்த கொலைகள்'' அரசு உங்கள் அடிப்படையில் ஏதோ நீங்கள் தாக்குதல்கள்
நடத்துகிறவர்கள்போல் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறது; ஏதோ நீங்கள் கொலைசெய்தலை
புனிதப்படுத்துபவர்கள் போலக் கருதி இன்னும் மரணங்கள் தேவை எனக் கூறுகிறது. இன்னொரு மரணத்தினால் எந்தப்
பயனும் இல்லை."
ஜெராகோஸும் மற்றும் பிற குற்றவாளியின் வக்கீல்கள் தண்டனை வழங்கும் பகுதியில் தங்கள்
வாதங்களை சரியாகக் கொண்டனரா? இந்தக் கட்டுரையாளர் சட்டவல்லுனர் என்று கூறிக்கொள்ள விரும்பவில்லை; ஆனால்
ஸ்கொட் பீட்டர்சன் இந்தக் கொடிய கொலையை செய்ததாகவே வைத்துக் கொண்டாலும் அவருடைய வழக்கிலும்
அதேபோன்று எழுந்துள்ள மற்ற வழக்குகளிலும் சில வினாக்கள் எழுகின்றன.
வழக்கு விசாரணையின்போது, தன்னுடைய கருவுற்றிருந்த மனைவியை தன் கழுத்தை
சுற்றியிருந்த ஆல்பட்ரோஸ் பறவை போலப் பீட்டர் கருதினார் என்றும், "சுதந்திரமாக" இருப்பதற்கு அவர் பெரும்
வேட்கை கொண்டார் என்றும், பல பெண்களிடம் பழகுவதற்கு பெருந்தடையாக லாசி இருந்தாரென்றும் (இவர் மனைவி
காணாமற்போன நேரத்தில் வேறு ஒரு பெண்ணிடம் தொடர்பு கொண்டிருந்தார்), நிதிநிலைமையை பொறுத்தவரையில்
பாதுகாப்பு இல்லாமல் இருந்தாரென்றும், இவர் மனைவின் பெயரில் இருந்த 250,000 டொலர் காப்புறுதி பணத்தை
எடுத்துக் கொள்ள ஆர்வம் மிகுந்தவராகக் காணப்பட்டார் என்பதும் தெரிவிக்கப்பட்டது. குற்றவழக்கை நடத்திய அரசு
தரப்பு வக்கீல்கள், இவருடைய மனைவியின் Land Rover
காரை மனைவி காணாமற்போன பின்னர் விற்றுவிட்டு அப்பணத்தைக் கொண்டு ஒரு புதிய வண்டியை வாங்கியதாகவும்,
தம்பதியினரின் வீட்டை விற்பதற்கு விவரங்களை ஒரு நிலமுகவரிடம் கொடுத்திருந்ததாகவும் கூறுகின்றனர். இவர்
அனைத்தையும் திறமையாக திரித்துக்கூறக்கூடிய இரட்டை வாழ்க்கை நடத்தும் நபர் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இவை அனைத்துமே உண்மையாக இருக்கலாம், ஆனால், "இத்தகைய ஒரு பெரும்
பொறுப்பற்ற, மனித உயிரைப் பற்றிய கொடும்தன்மை, ஒரு தனி நபரிடம் எவ்வாறு வெளிப்பட்டது?
என்ற கேள்விக்கு இது விடை கொடுக்கவில்லை. புறநிலை உண்மையை ஆராயவேண்டும் என்று கருத்தில்லாத சமய
வெறித்தன்மை கொண்ட ஆணுக்கோ, பெண்ணுக்கோ இவை அனைத்தும் நோயுற்றமனிதனின் தீயதன்மைகள் என்று
காரணப்படுத்திக் கூறி சமாதானம் பெற இயலும்.
ஓரளவு வசதியுடைய பின்னணியில் வந்துள்ள ஓர் இளைஞர், சாதாரணமாக எந்த உடல்
அல்லது உள்ளப்பாதிப்பையோ ஒரு குழந்தைப் பருவத்தில் கொண்டிராதவர், வன்முறை அல்லது பிறரை துன்புறுத்தி சுகம்
காணும் (Sadistic)
போக்கை வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் கொண்டிராதவர்--- ஆர்வத்துடன் கோல்ப் விளையாடுபவர்,
பொழுதுபோக்கிற்கு மீன் பிடிப்பவர், சராசரி அமெரிக்க மத்தியதர வர்க்கத்தினர் என்று பெரும்பாலும்
வரையறுக்கப்பட்டுள்ளவர்--- திடீரென்று தன்னுடைய மனைவியையும் இன்னும் பிறக்காத குழுந்தையையும்
கொலைசெய்யவேண்டும் என்ற முடிவை ஏன் கொண்டார்?
இந்த வழக்கை பொறுத்தவரையில், கொலை என்பதை தவிர, மற்றும் பல மன உளைச்சல்
தரும் கூறுபாடுகளும் உள்ளன. பீட்டர்சனுக்கும் அவருடைய காதலி அம்பெர் ப்ரேக்கும் (இத்தருணத்தில் இவர்
போலீசாருடன் ஒத்துழைத்து வந்தார்) 2003 ஜனவரி தொடக்கத்தில் நடந்த தொலைப்பேசி உரையாடல்களின்
பதிப்பு--- அதுவும் மனைவி இறப்பதற்குச் சில நாட்கள் முன்பு நடந்தது--- மிகவும் பிரச்சனைக்குரிய வரிகளாக
உள்ளன. தொலைப்பேசி உரையாடல்கள் பெரும் அதிர்ச்சி திகைப்பை தருகின்றன. மிக அசாதாரண நிலைமையில் இந்த
உரையாடல் நடைபெற்றது என்பதை அறியாதவர்களுக்கு இவற்றின் மிகச்சாதாரண தன்மையும் பொருளற்ற தன்மையும்தான்
புலப்படும். உண்மையில் பீட்டர்சன் தன்னுடைய மனைவியை இரண்டு வாரங்களுக்கு முன்பு கொலைசெய்தார் என்ற குற்றச்
சாட்டு உண்மை என்று கொண்டால், எதைப்பற்றியும் புலம்பும் அவருடைய தகமையில் ஒரு மனக்கோளாற்றின் கூறுபாடுதான்
உள்ளது.
இதில் சூழ்ச்சித்தனம் வேறு ஒன்றும் உள்ளது: தன்னுடைய வாழ்வை மற்றவர்கள் போலன்றி
வேறுவிதமாக பீட்டர்சன் கருதினார். பொதுவாக ஒப்புமையில் சலுகைகள் நிறைந்த சூழ்நிலையில் வளர்ந்து, ஒரு
கவலையற்ற வாழ்க்கை போக்கை அனுபவித்து, அரசு வக்கீல் கூறியபடி "ஆதர்ச தம்பதிகளாக அமெரிக்க கனவில்,
ஒருவரையொருவர் பெரும் காதலுடன் அனுபவித்தவர்கள்" என்று அவருடைய நண்பர்களும் குடும்ப நண்பர்களும் இவர்களைப்
பற்றிப் பொதுவான கருத்தை விவரித்துள்ளனர். ஆனால் இதற்கு மாறாக பீட்டர்சன் பிரேயிடம்
Jack Kerouac
உடைய புத்தககங்களில் ஒன்று "மனத்தளவில் என்னை ஈர்த்துள்ளது, ஏனெனில் எனக்கு அத்தகைய பொறுப்புக்களில் இருந்து
நீண்டகால சுதந்திரம் என்பதே இருந்ததில்லை". இது பீட்டர்சனுடைய சுயநலத்தையும், பக்குவமற்ற தன்மையையும்
காட்டக்கூடும்; ஆனால் தான் மிகப்பெரிய, பளுவான, பொறுத்துக் கொள்ளமுடியாத அழுத்தத்தை பெற்றிருந்தார்
போன்ற கருத்தை பீட்டர்சன் தெரிவிப்பதை உணரமுடியும்.
எப்படியிருந்த போதிலும், மனித உளவியல் மற்றும் செயற்பாடுகளை ஒழுங்கமைக்க உதவும்
பரந்த சக்திகள் பற்றி தக்க விசாரணையை மேற்கொள்ளாமல் இத்தகைய குற்றத்தை பற்றி விளங்கிக்கொள்வது மிகக்
கடினமாதும், உண்மையில் சாத்தியமுமில்லை.
அதிகார வட்டங்களிலோ அல்லது செய்தி ஊடகங்களிலோ அத்தகைய விசாரணைக்கு எவரும்
அக்கறை கொண்டிருக்கவில்லை. அப்படிப் பேசினால் அது உடனடியாக அமெரிக்க வாழ்வில் உள்ள இருண்ட, இழிந்த
தன்மைகளைப் பெரிதும் தவிர்க்கமுடியாமல் வெளிப்படுத்திவிடும். பொதுமக்களிடையே கூட, மேம்போக்கான நிலையைவிட
ஆழ்ந்து ஆராயும் குணநலன் ஒரு சிலரிடம்தான் உள்ளது என்பதும் மனவருத்தத்தைத் தருகிறது. பல அமெரிக்கர்களும் "அவன்
துப்பாக்கி விசையை இழுத்தான்", "அவள் போதை மருந்தை அருந்தினாள்", "அவர்கள் மதுக்கடையைக்
கொள்ளையடித்தனர்" என்ற ஒருவரிச் சொற்றொடர்களுடன் திருப்தி அடைந்து விடுகின்றனர். குடியரசுக்கட்சியை சேர்ந்த
முன்னாள் செனட் உறுப்பினர் பொப் டோல் தன்னுடைய கட்சியிலேயே இருக்கும் நவீன-பாசிச தளத்தோடு இயைந்து
நிற்கும் கருத்துடன் "குற்றத்தின் வேர் குற்றவாளிகள்தான்" என்ற கருத்துடன் இணக்கம் தெரிவிப்பதற்கு ஒப்பாகத்தான்
இருக்கும்.
அமெரிக்காவில் வாராவாரம் அதிக எண்ணிக்கையில் பெருகி வரும் ஒவ்வொரு புதிய
கொடுமைக்கும் பின்னர் (உதாரணம்; டிசம்பர் 8-ம் தேதி ஒகியோவிலுள்ள கொலம்பஸில் ஒரு நடன நிகழ்ச்சியின்போது
நிகழ்ந்த கோரமான துப்பாக்கச் சண்டை கொலைகள்), அதிகாரிகள் எந்த இயலாதவனையோ சிறைக்குத் தள்ளி
செல்லுகின்றனர்: அவன் அல்லது அவள் பின்னர் உயிரோடு இருந்தால் "தனி மனிதர் பொறுப்பு" பற்றி அறிவுரை
கூறுகின்றனர். ஒவ்வொரு தனி நிகழ்வும் தனிச் சிதைவுதான் இவற்றில் இருந்து பொதுவிதிகளை இயற்ற முடியாது. இந்த
வெற்றுத்தனம் நிறைந்த, மிருகத்தனமான அணுகுமுறை அமெரிக்க தனிநபர் வாதத்தின் மோசமான பகுதிக்குத்தான்
அழைப்பை விடுகிறது.
லேசி பீட்டர்சனுடைய குடும்பத்தினர் உட்பட பலரும் குற்றவாளிக்கு மரணதண்டனை வேண்டும்
என்று கூக்குரலிடுகின்றனர். அவர்களுடைய சீற்றம் புரிந்து கொள்ளக் கூடியதே, ஆனால் குருதி சிந்தப்பட வேண்டும் என்ற
கூக்கூரலிடுவதும் கெளரவமற்ற செயல்தான். பழிதீர்த்துக் கொள்ளுவதில் அவர்கள் அமைதியைக் காணுவது கடினம்தான்.
இவ்வழக்கில் தொடர்புடைய ஒவ்வொருவரும் அமெரிக்க வாழ்வின் ஊழலாலும், காட்டுமிராண்டித்தனத்தாலும்
தண்டிக்கப்பட்டவர்களேயாவர்.
தன்னுடைய கட்சிக்காரருடைய உயிருக்காக மன்றாடும் வக்கீல் ஒருவர் இத்தகைய பெரும்
விளம்பரத்திற்குட்டபட்ட வழக்கில், பொதுவாக உயர்சிந்தனை என்ற கருத்தால் சூழப்பட்டுள்ள நிலைமையில், ஜூரர்கள்
எந்த அளவிற்குப் பெரும் மன அழுத்தத்தில் இருப்பர் என்பதைக் கருத்திற்கொண்டு பலவகையான அணுகுமுறைகளையும்
கொள்ளுவார். ஆனால் மிகப் பரந்த பிரச்சினைகளப் பற்றியும் வினாக்களை இந்தக் கொலை எழுப்புகிறது என்று எவ்வாறு
ஜூரர்கள் உணர்ந்துகொள்ள முடியும்? மனித உயிரைப் பற்றி பீட்டர்சன் காட்டிய பொறுப்பற்ற தன்மை, சமூக அந்தஸ்து
மற்றும் பாலியிலில் வெற்றி பற்றி அவர் கொண்டிருந்த வெளிப்படையான தீவிர ஆர்வம், தன்னுடைய தடைகளை உடனடியாக
அகற்றுவதற்குக் கொலைகூடச் செய்யத் தயாராக அவர் கொண்டிருந்த விருப்பம் அனைத்துமே ஒரு தனிநபரின்
தோல்வியைவிடக் கூடுதலான கருத்தைத்தான் தெரிவிக்கின்றன.
இந்த வேதனைதரும் மற்றும் சிக்கல்கள் நிறந்துள்ள வினாக்கள் பற்றி அறிவதற்கு குற்றஞ்
சாட்டப்பட்டவரின் வக்கீல் இரண்டு புகழ்பெற்ற கொலை வழக்குகளை பற்றிக் குறிப்பிட்டிருக்கலாம்; ஒன்று கட்டுக்கதை
(நிஜமான சம்பவத்தால் உந்துதல் பெற்று எழுதப்பட்டிருந்தாலும் கூட) ஆகும். இந்த வழக்குகளைப் பற்றி நாம் இங்கு
முழுமையாக எழுத இயலாது; ஆனால் அமெரிக்க மற்றும் உலக மக்களின் நனவில் அவை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட
வேண்டும் என்பதற்காக அவற்றைப் பற்றிக் கூறுகிறோம்.
லியோபோல்டும், லோயெப்பும்
முதல் வழக்கு 19 வயதாகியிருந்த நாதன் லியோபொல்ட் (Leopold)
ஜுனியரையும், 18 வயதான ரிச்சர்ட் லோவெப்பையும் (Loeb)
பற்றியது; 1924ம் ஆண்டு இவர்கள் சிக்காகோ நகரத்தில் ஒரு
சிறிய பையனை, ஒரு தேர்ந்த குற்றத்தை நடத்துவதற்காக மட்டுமே, அதில் பெறும் "உச்சக்கட்ட உணர்விற்காகவே"
(Thrills)
கொன்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்களின் குற்றத்தை பற்றி இந்த வழக்கில் எந்த
சந்தேகத்திற்கும் இடமில்லை. போலீஸ் விசாரணையிலேயே, இரண்டு சிறுவர்களும் தாங்கள் கொலைசெய்ததை ஒத்துக்
கொண்டனர். மக்களின் மிகப் பின்தங்கிய தட்டுக்களை எதிரொலித்து செய்தி ஊடகம் இவர்களை விரைவில் மரணதண்டனைக்கு
உட்படுத்த வேண்டும் என்று கோரியது.
புகழ்பெற்ற வக்கீலான கிளாரென்ஸ் டாரோ, லியோபோல்ட் மற்றும் லோயெப்பிற்காக
வாதாட இசைந்தார். தன்னுடைய கட்சிக்காரர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர் என்பதை அறிந்தும், அவர்களுடைய
அறிவுஜீவித திறன்கள், சலுகை பெற்ற பின்னணி இவற்றைக் கருத்திற் கொண்டும் (வெளிப்படையாக அவர்கள் உளவியல்
சமசீரற்றவர்கள் என்றிருந்தும்), மனநோய்ப்பாதிப்பு என்ற மன்றாடல் வெற்றிபெறுவதற்கு வாய்ப்பைக் கொடுக்காது
என்பதை அவர் உணந்தார். அவர்கள் குற்றவாளிகளே என்று அவர் வாதாடினார். ஆனால் இவ்விருவரையும்
மரணதண்டனையில் இருந்து காப்பாற்றி ஆயுள் தண்டனை வழங்குவதற்கு நீதிபதியைத் தன்னால் நம்பவைக்கமுடியும் என்ற
தன்னம்பிக்கையை அவர் கொண்டிருந்து அதன்படி நடந்து கொண்டார்.
மரண தண்டனையை கடுமையாக எதிர்ப்பவரான டாரோ மூன்று நாட்களில் கிட்டத்தட்ட 12
மணி நேரம் வாதிட்டார்.(Click here forimportant
excerpts of Darrow's statement).
"உலகில் காரணமின்றி எந்தச் செயலும் நடப்பதில்லை" என்று டாரோ வாதிட்டார்;
சிறுவர்கள் சமூக நடைமுறைக்கேற்ப நடக்க இயலாததையும், மன நோயையும் வலியுறுத்திப்பேசினார். "இக்குற்றம்
பக்குவப்பட்டிராத, மனநோய்ப்பாதிப்பிற்குட்டபட்ட சிறுவர்களின் அறிவற்ற செயல்" என்று அவர் அறிவித்தார். மேலும்,
"ஒரு சிறுவன் அல்லது மனிதனை உருவாக்கும் எண்ணிலடங்கா நிகழ்ச்சிப்போக்கில், எங்கோ, ஏதோ ஒரு தவறு
நடந்துள்ளது; இதையொட்டி இந்த துரதிருஷ்டவசமான சிறுவர்கள் இங்கு வெறுக்கப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டு,
சமுதாயத்தில் இருந்து ஒதுக்கப்பட்டு, சமூகம் முழுவதும் இவர்கள் இரத்தத்தை சிந்தவேண்டும் என்ற கூக்குரலுக்கு இடையே
அமர்ந்துள்ளனர்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அரசாங்க வழக்குதொடுனர்துறையை அதன் கொடுமைக்காக பெரிதும் அவர் சாடினார்.
"மக்கள் விரும்புகிறார்கள் என்றால் எதையும் குப்பைத்தொட்டியில் தூர எறிந்துவிடலாம் என்று இத்துறை கருதுகிறது; எங்கு
ஓர் அரங்கம் அமைக்கப்பட்டு, உரத்த குரலில் வாதிடும் வக்கில்கள் சட்டத்தின் புனிதத்தன்மை பற்றிப் பேசுகின்றனரோ,
அதாவது மக்களை கொல்லலாம் என்று கருத்துரை பேசுகின்றனரோ, அவர்களைப் பொறுத்தவரை தூக்கிலிடுவதற்கு
கோருவதை நியாயப்படுத்த எதுவுமே போதுமானதாக உள்ளது.''
மரண தண்டனையை கண்டித்த டாரோ கூறினார்: "மேன்மை தங்கிய நீதிபதி அவர்களே,
அதைப்பற்றிப் பேசுவதற்குக் கூட நான் வெட்கப்படுகிறேன். நாம் 20ம் நூற்றாண்டில்தான் இருக்கிறோமா என்று என்னால்
கற்பனை செய்துகூட பார்க்கமுடியவில்லை. ஆயினும் கூட மனிதர்கள் பலர் எந்த செயலுக்கு, எந்த முயற்சிக்கு, எந்த
பயிற்சிக்காக செய்யப்பட்டதற்கு நீங்கள் இந்தச் சிறுவர்களை தூக்கிலடவேண்டும் என்று தீவிரமாகக் கூறுகின்றனர்."
மாநில துணை வக்கீல் ஜோசப் சாவேஜுடைய உறுதிகேட்கும் வாதங்களுக்கு டாரோவின்
விடையிறுப்பு எத்தன்மையான புத்திசாலிதனத்தையும், மனிதத் தன்மையும், இன்று நினைத்தும் பார்க்கமுடியாத அளவிற்கு
இருந்தது! நீதிபதியிடம் அவர் தெரிவித்தார்: "என்னுடைய நண்பர் சாவேஜுக்கு என்னுடைய வயது அல்லது உங்களுடைய
வயதுகூட வரும்போது, இந்த நீதிமன்றத்திற்கு ஆற்றிய வழக்குரையை பெரும் பீதியில் நினைத்துப் பார்ப்பார்." இவ்வாறு
அவர் முன்கூட்டியே கூறினார். தன்னுடைய சுருக்க உரையின் மற்றொரு பகுதியில் அவர் குறிப்பிட்டார்: "மிஸ்டர் சாவேஜ்
வாதிட்டபோது நான் பெரிதும் வியந்தேன்
நான் அவரை விமர்சிக்கவில்லை
அவர் இளைமையும் துடிப்பும் நிறைந்துள்ளார். ஆனால் அவர் ஏதேனும்
படித்திருக்கிறாரா? எதையும் சிந்தித்திருக்கிறாரா? குற்றவியல் அல்லது தத்துவங்களைப் படித்த எவரேனும், விஞ்ஞானம்
படித்த மனிதர் எவரேனும், தன்னைப்பற்றி தெரிந்த எவரும் இத்தனை தைரியத்துடன், உத்தரவாதத்துடன் இவர் பேசுவது
போல் பேச இயலுமா?"
"லியோபோல்ட், லோவெப் ஆகியோரைத் தூக்கிலிட்டால் உலகிலுள்ள மக்கள்
சிறந்தவர்களாவோ அல்லது மோசமானவர்களாகவோ மாறிவிடுவரா? மக்களுடைய அறிவிற்கு, குறைந்தது அவர்கள்
பெற்றுள்ள அறிவிற்கு, நான் இக்கேள்வியைக் கேட்கிறேன். உணர்வு இருக்கும் பட்சத்தில், அவர்களுடைய உணர்வின் முன்
இக்கேள்வியை முன்வைக்கிறேன்: இத்தூக்கிலிடும் செயல் மனிதனுடைய இதயத்தை மிருதுப்படுத்துமா அல்லது இதயங்களை
கடினமாக்குமா? இதனால் எத்தனை பேர் உணர்ச்சியற்று கொடியவர்களாகப் போவர்? எத்தனை மனிதர்கள் விரிவாகப்
படிப்பதில் களிப்புக் கொள்ளவர்; மனிதக் கஷ்டங்களை படித்து இன்புற வேண்டுமானால், அதனால் நல்லது கெட்டது என்ற
பாதிப்பிற்கு உட்படாமல் இயலாது. மேன்மை தங்கிய நீதிபதி அவர்களே, கொடுமை கொடுமையைத்தான் வளர்க்கும்
என்று நான் வாதிடவும் வேண்டுமா? வெறுப்பு வெறுப்பைத்தான் தோற்றுவிக்கும், ஏற்கனவே கடினமாக உள்ள ஒரு மனித
இதயத்தை ஏதேனும் ஒரு வழியில் இளகச் செய்யவேண்டும் என்றால், தீமையையும் வெறுப்பையும் அவற்றுடன் தொடர்புடைய
அனைத்தையும் அழிக்க வேண்டும் என்றால், அது தர்ம சிந்தனை, அன்பு, புரிந்துகொள்ளுதல் இவற்றைக் கையாள்வதின்
மூலம்தான் முடியும்" என்று நீதிமன்றத்திடம் இறுதி உரையாக டாரோ முடித்தார்.
இறுதியில் லியோபோல்டும் லோவெப்பும் மரண தண்டனையில் இருந்து தப்பினர்; இதையும்
விட முக்கியமாக, ஒரு தலைமுறையின் மிக முன்னேறிய பிரிவினர் முழுவதும் ஒரு பெருந்தன்மை குணத்தைப் பயிலும்
வாய்ப்பைப் பெற்றனர்; அதற்கு நீண்டகால விளைவுகள் உள்ளன.
ஒரு அமெரிக்க துயரம்
ஓராண்டு கடந்த பின்னர், கலைப்படைப்பினால்தான் முடியும் என்ற நிலையில் இந்த
வினாக்களை இன்னும் பரந்து, ஆழ்ந்து பரிசீலனை செய்த ஒரு நாவல்
(Novel) வெளிவந்தது.
Theodore Dreiser
எழுதிய ஒரு அமெரிக்க பெருந்துயரம். டிரைய்செருடைய அரிய
படைப்பான நாவலை பொறுத்தவரையில் அது இவ்வினாக்களின் சிக்கல்களை ஆராய்ந்த நேர்த்தி பற்றி சிறந்த முறையில்
எழுவதுகூடக் கடினமானதாகும். அமெரிக்க வாழ்வின் சமுதாய-உளப்பாங்கைப்பற்றிய உட்காட்சி வேண்டும் என்ற ஆர்வம்
உடையவர்களுக்கு, இந்நூலைப் படிப்பது மிகவும் உயர்ந்த, ஏற்புடைத்த செயலாகும்.
தன்னுடைய நாவலுக்கு தளமாக நியூயோர்க் மேலைப்பகுதியில் 1906ம் நடந்த ஓர்
உண்மைக் கொலையை டிரைசெர் எடுத்துக் கொண்டார். செஸ்டர் கில்லெட் என்பவர் தன்னுடைய கருவுற்றிருந்த
தோழியான கிரேஸ் பிரெளனைக் கொன்றார்; இப்பெண் அவருடைய சமூக வெற்றிப்பாதையில் ஒரு தடுப்பாக இருந்ததாக
அவர் கருதினார். நாவலாசிரியர் இந்த வழக்கின் விவரங்களைப் பற்றி அறிந்து வியப்புற்றார்; ஏனெனில் அமெரிக்காவில்
தனி மனிதன் என்ற பெயரில், செல்வமும் வெற்றியும்தான் அனைத்தும் என்ற எண்ணத்தில் ஒரு புதிய சமூக மாதிரி
(Social Type)
உருவாகிவிட்டது என்ற அவருடைய கருத்தையே இந்தக் கொலைவிவரங்கள் தெரிவித்தன.
கற்பனையுரையில் கிளைட் கிரிப்பித்சும் ரோபெர்டா ஆல்டெனும் பிறக்கிறார்கள். ஒரு
கழுத்துப்பட்டை தயாரிக்கும் ஆலை ஒன்றின் உரிமையாளருடைய ஏழை உறவினராக கிளைட் இருந்தார். ஆலையில் ஒரு
சாதாரண மேற்பார்வையாளராக அவர் வேலையில் சேருகிறார்; ரோபர்டா அவருக்குக் கீழே பணிபுரிகிறார்.
அவர்களுக்கிடையே உறவு மலர்ந்து அவள் கருவுருகிறாள்.
இதற்கிடையில், தங்கம் இழையோடும் செல்வக்களிப்பு, சொகுசு வாழ்க்கை இவற்றின்
நடுவில் உள்ள சோண்ட்ரா பிஞ்சலே என்னும் மிக அழகிய பெருங்குடிப் பெண்ணை கிளைட் காண்கிறார். சோண்ட்ராவுடனான
உறவு, அதை ஒட்டிய அனைத்து உட்குறிப்புக்களையும் தான் அடைய முடியும் என்று கிளைடிற்குத் தோன்றுகிறது. அதற்கு
ரோபர்ட்டாவும், இன்னும் பிறக்காத குழந்தையும்தான் தடையாக உள்ளன. ரோபர்ட்டாவை ஆள் அரவமற்ற ஏரி
ஒன்றிற்கு வரவழைத்து அங்கு அவளை நீரில் மூழ்கடித்துவிடுவதற்கு திட்டமிடுகிறார். ஆனால் தற்செயலாக அவள் படகிலிருந்து
விழுந்து விடும்போது, அவளைக் காப்பாற்றுவதற்கு கிளைட் எந்த முயற்சியையும் கொள்ளவில்லை.
நாவலின் கடைசிப்பகுதி சட்ட முறையில் உள்ள இரக்கமற்ற தன்மை, அறவழி, உடல்வழி
அழிப்பு ஆகியவற்றை ஆசிரியர் சாடுகிறார்.
டிரைய்செருடைய நூல் மிகப் பீதியைக் கொடுக்கும் உட்காட்சியை அளிக்கிறது. இந்த நூலுக்கு
அவர் ஏன் ஓர் அமெரிக்கப் பெருந்துயரம் என்று பெயரிட்டார்? இதற்கு ஆசிரியர் விடையிறுக்கிறார்: "நான் இதை ஓர்
அமெரிக்கப் பெருந்துயரம் என்று அழைத்த காரணம், உலகில் வேறெங்கும் இவ்வாறு நடைபெற முடியாது என்பதால்தான்".
"கிளைட் கிரிப்பித்ஸ் போலத்தான் நான்" என்று "பலரும் எனக்கு கடிதம் எழுதியுள்ளனர்." என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஸ்கொட் மற்றும் லேசி பீட்டர்சனுடைய "பெருந்துயரத்தை" பற்றி எவர் எழுதப் போகின்றனர்?
நமக்குத் தெரிந்த வரையில் எவரும் எழுதப்போவதில்லை. அமெரிக்காவில் இன்று டிரைய்செர்கள் இல்லை; அவரை ஒத்து
இருப்பவர்களும் இல்லை; கன்சாசில் 1959ம் ஆண்டு இரக்கமற்ற கொலை ஏற்பட்ட பின்னர் அதில் இருந்த சமுதாயத்தின்
புரையோடிய போக்குகளை காண முற்பட்ட Truman
Capote கூட இன்று நம்மிடையே இல்லை.
செல்வம், வெற்றி, புகழ் ஈட்டுதல் வேண்டும் என்ற நினைப்பிலேயே மூழ்கியிருப்பது வாய்ப்புக்கள்
நிறைந்த நாடு, தனிநபர்வாத உரிமையை மதிக்கும் நாடு என்று கூறப்படும் அமெரிக்காவில் உள்ளது போல் உலகத்தில் வேறு
எந்தப் பகுதியிலும் இல்லை. கிரிபித்துக்களும் அவரைப் போன்ற பலரும், (நிஜ வாழ்வில் ஸ்கொட் பீட்டர்சன்
போன்றோர்) அமெரிக்கக் கனவு (American Dream)
என்ற வழிபாட்டிற்கு அடிமையாக உள்ளனர். கிரிப்பித் தன்னுடைய காதலியைக் கொல்கிறார்; அவ்வாறு செய்யாவிடின் அவர்
சமுதாயப் பார்வையில் செல்வச் செழிப்பு, "சரியான வகை" நபர்களுடைய தொடர்பு என்று ஒளிவீசும், பிரகாசமான
வாழ்க்கைக்கு வெளியே நிற்க நேரிடும் என்பதாலாகும்.
இக்கட்டுரையாளர் சில ஆண்டுகளுக்குமுன் எழுதியது போல்: "கிரிபித்ஸ்களடுயை செயல்கள்
சமுதாயத்தின் தரங்களுக்கு ஏற்ப முற்றிலும் தர்க்கரீதியாகத்தான் உள்ளன. அவருடைய கனவு உலகத்திற்கு தடையாக,
மீண்டும் இளவயதில் அவர் இருந்திருந்த சோகமான வாழ்க்கைக்கு தள்ளப்படக்கூடிய நிலையை ஏற்படுத்தியிருக்கும், அவருடைய
கழுத்தைச் சுற்றி ஒரு பெரும் பாறாங்கல் போல் உள்ள ரோபர்ட்டாவை அகற்றாவிட்டால், அவர் எவ்வாறு அதனை அடைய
முடியும்?
டிரேய்சரின் அரிய படைப்பு எழுதப்பட்டு எண்பது ஆண்டுகளுக்கும் பின்னர், நாம் எங்கு
இருக்கிறோம்? இந்தப் போக்குகளும், சமுதாய மாதிரிகளும் அமெரிக்கத் தோற்றத்தில் இருந்து மறைந்து விட்டனவா?
இக்கேள்வியைக் கேட்பதே அதற்கு விடையிறுப்பது போலாகும்.
இந்தப் போக்குகள் இன்னும் தெளிவான முறையில் வெளிப்பட்டுள்ளன; இந்த சமுக மாதிரிகள்
இன்னும் பரவலாக, ஒருவேளை இன்னும் ஆபத்தான முறையிலும்கூட உலவுகின்றன. எண்பது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததைவிட
மிகக் குறைவான மனிதத் தன்மை, குறைவான நாகரிகம், குறைவாகவே புரிந்துகொள்ளும் தன்மை உள்ளதாக அமெரிக்கா
எவ்வாறு இருக்கமுடியும்? என ஒருவர் கேட்டலாம். இந்த வினா ஒரு தேசிய அளவில் உணர்வுத்தேடலை ஏற்படுத்த
தூண்டினால், சிலவேளை பீட்டர்சனின் பெருந்துயரம் முற்றிலும் வீணாகப் போகாது. |