World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா : இலங்கைSri Lankan reaction to Bush victory: a declaration of dependence புஷ்ஷின் வெற்றிக்கு இலங்கையின் பிரதிபலிப்பு: சார்ந்திருந்தலுக்கான பிரகடனம் By Nanda Wickramasinghe அமெரிக்க ஜனாதிபதியாக மீள்தேர்வு செய்யப்பட்ட ஜோர்ஜ் புஷ்ஷிற்கு இலங்கை அரசியல் ஸ்தாபனங்கள் அனுப்பியுள்ள தொடர்ச்சியான வாழ்த்துச் செய்திகள், அத்தகைய சந்தர்ப்பங்களுக்காக வழமையாக அனுப்பிவைக்கப்படும் இராஜதந்திர வாழ்த்துக்களுக்கும் அப்பால் சென்றுள்ளன. இந்த அடிமைத்தனமான வெளிப்படுத்தல்கள், பெயரளவிலான மூன்றாம் உலக நாடுகளின் ஆளும் வர்க்கங்களின் கோழைத்தனமான நிலைப்பாட்டையே பிரதிபலிக்கின்றன. அமெரிக்காவின் நிர்வாணமான இராணுவ ஆக்கிரமிப்பின் முன்னிலையில், ஒவ்வொருவரும் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளின் தலைவிதியை புறக்கணிக்க முனையும் அதே வேளை, "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை" தமது சொந்த தேவைகளுக்காக சுரண்டிக்கொள்கின்றார்கள். ஜனாதிபதி குமாரதுங்க, புஷ்ஷிற்கு அணுப்பிய வாழ்த்துச் செய்தியில், "முன் என்றுமில்லாத தேர்தல் முடிவுகள், உங்கள் கொள்கையிலும் உங்கள் தலைமைத்துவத்திலும் அமெரிக்க மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கின்றது", என உணர்ச்சிகரமான முறையில் பிரகடனம் செய்தார். புஷ்ஷின் முதலாவது ஆட்சியில் இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுபற்றி குறிப்பிடும்போது, எம் சாராருக்கும் இடையிலான உறவு வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு மற்றும் பொது நலன்களின், சிறப்பாக பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் அரசியல் பிரச்சினைகளிலும் நெருங்கிய கூட்டுறவை அடிப்படையாகக் கொண்ட, ஒரு பலமான பங்களிப்பை நோக்கிய புத்திக் கூர்மையான இயக்கத்துக்கு சாட்சியாக இருக்கின்றது," என அவர் மேலும் தெரிவித்தார். இலங்கையின் சூழ்நிலைப்படி, "பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம்" என்பது, நாட்டின் 20 வருடகால உள்நாட்டு யுத்தத்திற்கு பேச்சுவார்த்தை மூலமான தீர்வை அடைவதற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளை அவர்களின் தனித் தமிழ் அரசுக்கான கோரிக்கையை கைவிடச் செய்வதற்குமான வாஷிங்டனின் மிரட்டல் முயற்சிகளை மறைமுகமாக மேற்கோள் காட்டுவதாகும். "இன மோதலுக்கு முடிவுகட்டுவதற்கான எந்தவொரு பேச்சுவார்த்தை மூலமான தீர்விலும், இலங்கையின் ஒருமைப்பாடும் இறைமையும் காப்பதில் தங்களுடைய மாண்புமிகு அரசாங்கம் எடுத்த கொள்கை ரீதியான நிலைப்பாட்டுக்கு இலங்கை அரசாங்கத்தினதும் மக்களதும் பெரும் பாராட்டுக்கள் உரித்தாகட்டும்", என மேலும் அவர் தெரிவித்தார். அவருடைய பிரதம மந்திரி மகிந்த ராஜபக்ஷ, புஷ் பற்றி பெருமளவில் புகழ்ந்து தள்ளியுள்ளார். "பயங்கரவாதத்தின் பிடிக்குள் அகப்பட்டிருக்கும் நாடுகளுக்கு நீங்கள் நம்பிக்கையை ஊட்டியுள்ளீர்கள். இரண்டாவது முறையாகவும் நீங்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருப்பதன் மூலம், என்றாவது ஒருநாள் நேர்மை, அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்புணர்வும் சகல தடைகளை வெற்றிகொள்ளும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளீர்கள்," என அவர் புகழ்ந்துள்ளார். "சமாதானத்தின் நிமித்தமும் பயங்கரவாதத்தை துடைத்துக் கட்டுவதிலும் உறுதியான நிலைப்பாட்டுடன் இருப்பதன் மூலம் நீங்கள் உலகம் பூராகவும் ஒரு வரலாற்றையே உருவாக்கியுள்ளீர்கள். குமாரதுங்காவோ, ராஜபக்ஷவோ, ஏற்கனவே ஈராக்கையும் ஆப்கானிஸ்தானையும் நவகாலனித்துவ அடிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள, உலக மேலாதிக்கத்திற்காக அமெரிக்க ஏகாதிபத்தியம் மேற்கொள்ளும் ஒரு கொடூரமான நடவடிக்கையான "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின்" உண்மைத் தன்மை பற்றி எதையும் குறிப்பிடவில்லை. இவர்களின் அடிமைத்தனமான பாராட்டுக்கள், அமெரிக்க இராணுவம் ஈராக்கில் பலூஜா நகரை தரைமட்டமாக்கியிருக்கும் நிலையிலேயே வெளியிடப்பட்டுள்ளன. நவீன யுத்த காலத்தில் பலூஜா மீதான இந்தத் தாக்குதல் நடவடிக்கை, ஆக்கிரமிப்புக்குள்ளான ஐரோப்பாவில் நாசிகள் இழைத்த மிகக் கொடூரமான குற்றங்களுக்கு சமமானதாகும். செப்டம்பரில் குமாரதுங்க ஐக்கிய நாடுகள் சபையில் பேசும்போது, ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பை உறுதியாக கண்டிக்காத போதிலும் ஒரு கடுமையற்ற விமர்சன குரலை வெளிப்படுத்தினார். "ஈராக்கில் வன்முறை, ஸ்திரமற்றநிலை, உயிரிழப்புக்கள் மற்றும் மனித அவலங்களையிட்டு நாம் மிகவும் வேதனையடைகின்றோம்," என பிரகடனம் செய்த அவர்: "வன்முறையை முடிவுக்கு கொண்டுவரவும் ஸ்திரநிலைமையையும் சமாதானத்தையும் உருவாக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மட்டும் போதாது," என எச்சரிக்கை செய்தார். ஆயினும், புஷ்ஷின் மீள் தேர்வுக்கு பின்னர், இலங்கை ஆளும் வர்க்கம் வாஷிங்டனுடன் "இணைப்பை ஏற்படுத்திக்கொள்வதிலேயே" சகலதும் தங்கியுள்ளது என்பதை விளங்கிக் கொண்டுள்ள அளவில் இத்தகைய மிகக் குறைந்தபட்ச விமர்சனங்களைக் கூட அனுமதிக்க முடியாதுள்ளது. எதிர்க் கட்சியான ஐக்கிய தேசிய முன்னணியும் அதே அடிமைத்தனமான அணுகுமுறையையே மேற்கொண்டது. எதிர்க் கட்சி தலைவரான ரணில் விக்கிரம சிங்க புஷ்ஷிற்கு அனுப்பிய செய்தியில்: நான் பிரதமராக இருந்த காலத்தில் நாங்கள் ஏற்படுத்திக்கொண்ட உறவை நான் பெரிதும் மதிக்கின்றேன். (இலங்கையில்) வெற்றிகரமான யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்திக்கொள்ள சர்வதேச சமூகத்தை ஒன்றுசேர்க்க முடிந்தது உங்களது தடுமாற்றமற்ற தனிப்பட்ட ஊக்குவிப்பின் பெறுபேறேயாகும். அதன் மூலம் பல சவால்கள் இருந்த போதிலும் எனது நாட்டில் சமாதான முன்னெடுப்புகளுக்கான அத்திவாரத்தை அமைத்தோம். ஜனநாயக கருத்துக்களிலும் மற்றும் தத்துவத்திலும் நம்பிக்கை கொண்டுள்ளவர்களுக்கு மிகவும் உறுதியான ஒரு உலகை உருவாக்கும் உங்கள் குறிக்கோளை எதிர்வரும் நான்கு ஆண்டுகளில் அடைய உங்களுக்கும் உங்கள் தலைமையின் கீழான அமெரிக்காவிற்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஐக்கிய தேசிய முன்னணியின் (ஐ.தே.மு) பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க), 1940ம் ஆண்டு அது ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்தே அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கின்றது. கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் ரணில் விக்கிரமசிங்க பேசும்போது, ஐக்கிய நாடுகள் சபையிலான பிளவுகள் காரணமாக புஷ் நிர்வாகத்திற்கு வேறு பதிலீடுகள் இருக்கவில்லை என குறிப்பிட்டதன் மூலம் ஈராக் மீதான அமெரிக்காவின் சட்ட விரோதமான ஆக்கிரமிப்பை வெளிப்படையாகவே ஆதரித்தார். ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து வேறுபட்ட விதத்தில், ஆளும் கூட்டணியின் முதன்மைப் பங்காளியான குமாரதுங்கவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க), கடந்த காலத்தில் மக்கள் ஆதரவை திரட்டுவதற்காக ஏகாதிபத்திய விரோத மற்றும் மக்கள்சார்ந்த வாய்வீச்சுக்களை பயன்படுத்தியது. சந்திரிகாவின் தாயாரும் முன்னாள் பிரதமருமான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, 1960 மற்றும் 1970 களில் அணிசேரா இயக்கத்தில் குறிப்பிடத்தக்க பாத்திரம் வகித்தார். இலங்கையிலும் மற்றும் மூன்றாம் உலக நாடுகளிலும் உள்ள ஆளும் வர்க்கங்கள் ஸ்ராலினிச ஆட்சிக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் இடையில் சமநிலையில் இருக்கும் இயலுமையை சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியும் குளிர் யுத்த ஒழுங்கு முறையின் வீழ்ச்சியும் முடிவுக்கு வந்தது. 1990களில் ஸ்ரீ.ல.சு.க தனது ஏகாதிபத்திய விரோத நிலைப்பாட்டை கைவிட்டது. இன்று ஐ.தே.கட்சிக்கும் ஸ்ரீ.ல.சு.க விற்கும் இடையில் எந்தவொரு பிரதான விடயங்களிலும், சிறப்பாக அமெரிக்காவுடன் நெருங்கிய உறவு வைத்திருக்க வேண்டிய தேவை சம்பந்தமாக வேறுபாடு கிடையாது. ஆளும் சுதந்திர முன்னணியின் அடுத்த பிரதான கட்சி மக்கள் விடுதலை முன்னணியாகும் (ஜே.வி.பி). இக்கட்சி சிங்களப் பேரினவாதம் மற்றும் மக்கள் நலன்சார்ந்த வாய்வீச்சுக்களின் கலவையையும், சோசலிச வாய்வீச்சுக்களையும் கூட அடிப்படையாகக் கொண்டது. ஈராக்கிற்கு எதிரான ஆக்கிரமிப்புக்கு முன்னர் வரையறுக்கப்பட்ட யுத்த விரோத ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்த ஜே.வி.பி, அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பையும் கைவிட்டது. இப்பொழுது முதல் முறையாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜே.வி.பி, புஷ்ஷையும் அவரது "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தையும்" குமாரதுங்க புகழ்வதை அவர்கள் சந்தேகமின்றி எதிர்க்கவில்லை. தேர்தலுக்கு சற்று முன்னதாக அக்டோபர் 31 பிரசுரிக்கப்பட்ட 'சண்டே டைம்ஸ்' பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம், புஷ் நிர்வாகம் சம்பந்தமான அரசியல் ஸ்தாபனத்தின் நிலைப்பாட்டை சுருக்கிக் கூறியிருந்தது. புதிய சுதந்திர முன்னணி அரசாங்கம், "அமெரிக்க விரோத கோசம் எழுப்புவது ஒரு விடயம், அமெரிக்கா இல்லாமல் பொருளாதாரத்தை உயர்த்துவது வேறு விடயம் என்பதை விரைவாக உணர்ந்துகொண்டுள்ளது" என்பதை குறிப்பிட்ட பின்னர்: "ஜனாதிபதி புஷ்ஷின் அடிக்கடி நடைபெறும் பயங்கரவாதத்திற்கு எதிரான இரக்கமற்ற, மூர்க்கத்தனமான, விசேடமாக ஈராக் மீதான யுத்தமானது, எங்களது சொந்த பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் சாதகமான தாக்கத்தை கொண்டிருந்தது," எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. வேறு வார்த்தைகளில் சொன்னால், பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டுவருவற்காக, விடுதலைப் புலிகளுக்கு அழுத்தம் கொடுப்பதில் வாஷிங்டனின் உதவியை உறுதிப்படுத்திக்கொள்வதன் பேரில், ஈராக்கில் புஷ்ஷின் குற்றவியல் நடவடிக்கைகளை ஆதரிப்பது அவசியம் என்பதை இலங்கை ஆளும் வர்க்கம் புரிந்துகொண்டுள்ளது என்பதேயாகும். கொழும்பின் சொந்த "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தமானது," நாட்டின் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக வேரூன்றியுள்ள பாகுபாட்டுக்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்குவதில் இரண்டு தசாப்த கால இரத்தக்களரி வரலாற்றைக் கொண்டுள்ளது. ஆளும் கும்பலின் ஒரு பகுதியினர் இப்பொழுது இந்த மோதலை முடிவுக்கு கொண்டுவர விரும்புவது, இந்த மோதல், தீவை பூகோள உற்பத்தி முன்னெடுப்புகளுடன் ஒருங்கிணைக்கும் மற்றும் அதிகரித்தளவில் இந்தியாவுக்குள் பெருக்கெடுக்கும் வெளிநாட்டு முதலீடுகளில் பயனடையும் அவர்களின் குறிக்கோள்களுக்கு தடையாக இருப்பதாலேயாகும். இரு தசாப்தங்களுள் அதிக காலம் அமெரிக்கா இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தை புறக்கணித்து வந்துள்ளது. இப்பொழுது அமெரிக்கா தனது பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை கொண்டிருக்கும் இந்திய உபகண்டத்தில், இந்த மோதல் ஒரு ஆபத்தான ஸ்திரமற்ற நிலையை உண்டுபண்ணும் வல்லமையைக் கொண்டுள்ளதால் வாஷிங்டன் அதை முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்கின்றது. புஷ் நிர்வாகம் யுத்தத்திற்கு பேச்சுவார்த்தை மூலமான தீர்வை உத்தியோகபூர்வமாக வலியிறுத்தும் அதே வேளை, விடுதலைப் புலிகளை தனது பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு தொடர்ச்சியாக மறுத்து வருகின்றது. இந்த அச்சுறுத்தல் மிகவும் தெளிவானது: அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு இணங்காவிடில், வாஷிங்டன் விடுதலைப் புலிகளுடனும் ஏனைய பயங்கரவாத அமைப்புக்களைப்போல் நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டாது. இலங்கை ஸ்தாபனத்தின் ஒரு பகுதியினர், "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை" முன்னெடுப்பதில் புஷ் நிர்வாகத்தின் ஈவு இரக்கமற்ற தன்மை காரணமாக அதை வழுவின்றி ஆதரிக்கின்றனர். கொழும்பின் நிபந்தனைகளுக்கேற்ப விடுதலைப் புலிகளை சமாதான பேச்சுவார்த்தைக்கு கொண்டுவர அவர்களை குண்டாந்தடியால் தாக்குவதில் கெர்ரியிலும் பார்க்க புஷ் மிகவும் சக்தி வாய்ந்தவராவதுடன், மீண்டும் யுத்தம் ஆரம்பிக்கும் பட்சத்தில் கூடுதலான இராணுவ உதவியும் கிடைக்கக் கூடும் என அவர்கள் கணக்கிடுகின்றனர். புஷ் நிர்வாகத்தின் கீழ், அமெரிக்க உயர்மட்ட இராணுவ அலுவலர்களும் மற்றும் இராணுவ ஆலோசனைக் குழுவினரும் கொழும்புக்கு தொடர்ச்சியாக விஜயம் செய்தார்கள். வலதுசாரி ஐலண்ட் செய்தித்தாள், அமெரிக்க தேர்தலுக்கு மறுநாள் ஆசிரியர் தலையங்கத்தில்: "இந்த நாட்டில் பயங்கரவாதப் பிரச்சினை தொடங்கியதிலிருந்து, ஜனாதிபதி புஷ்ஷைத் தவிர வேறு எந்தவொரு உலகத் தலைவரும் பயங்கரவாதத்திற்கு எதிராக முன்வராத பட்சத்தில் அவர் இந்த நாட்டின் நலன்களை சிறந்த முறையில் பாதுகாப்பார். அவரும் துணை இராஜாங்க செயலாளர் றிச்சாட் ஆர்மிடேஜ் போன்ற அவரது அலுவலர்களும்: வெளிநாட்டு பயங்கரவாத பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகளை நீக்க வேண்டுமானால், சொல்லிலும் செயலிலும் அது பயங்கரவாதத்தை கைவிட வேண்டும், என விடுதலைப் புலிகளுக்கு திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். இது விடுதலைப் புலிகளின் தொடர்ச்சியான பயங்கரவாத நடவடிக்கைகளையிட்டு மெத்தனமான இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வளைந்துகொடுக்கும் போக்கில் இருந்து வேறுபட்டதாகும்," என விவாதித்துள்ளது. விடுதலைப் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளை, தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான பயங்கரவாத ஆளுமையை நியாயப்படுத்துவதற்காகவும், தமிழ் மக்கள் அனுபவிக்கும் அவலங்களின் உண்மைகளை மறுப்பதற்கும் நீண்டகாலமாக பயன்படுத்தி வருகின்ற இந்நாட்டின் ஆளும் பிரபுக்களதும் மற்றும் ஐலண்ட் பத்திரிகையினதும் கருத்து, சர்வதேச சட்டம் மற்றும் ஜனநாயக உரிமைகளை அலட்சியம் செய்யும் புஷ்ஷின் போக்குடன் பொருந்துகிறது. புஷ் நிர்வாகம் அதனது குவான்ரனமோ குடா தடுப்பு முகாமை அமைக்கும் முன்னதாகவே, இலங்கை அரசு ஆயிரக்கணக்கான தமிழ் "பயங்கரவாத சந்தேக நபர்களை" கொடூரமாக தடுத்து வைத்தும் சித்திரவதை செய்தும் உள்ளது. "அறிமுகமான பிசாசு விரும்பத்தக்கது" என நுட்பமாக தலைப்பட்டிருந்த ஐலண்ட் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம், கருத்தைப் புரிந்துகொள்ளக் கூடிய ஒரு குறிப்பையும் உள்ளடக்கியிருந்தது. புஷ் நிர்வாகத்தின் அசட்டுத்தனமான கொள்கைகள் இலங்கை முதலாளித்துவத்தின் உடனடியான நோக்கங்களுடன் ஒத்திருந்த போதிலும், "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்" இந்திய உபகண்டத்திலும் சர்வதேச ரீதியிலும் ஸ்திரமற்ற நிலைமையை உருவாக்கும் ஒரு ஆபத்தான காரணி என்ற பீதி இல்லாமல் இல்லை. "இதுவரையில் இருந்த அமெரிக்க ஜனாதிபதிகளில் புஷ் பொதுமக்களால் மிகவும் விரும்பப்படாதவர்" எனக் குறிப்பிட்ட இந்தப் பத்திரிகை, "ஒரு உலகரீதியான மாதிரி கருத்துக்கணிப்புக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 77 வீதமானவர்கள் புஷ்ஷை விட கெர்ரியையே விரும்புகின்றனர் என சுட்டிக்காட்டியது. பூகோள பொலிஸ்காரனாக பெரிய பொல்லுடன் செயற்படும் ஆக்கிரமிப்பு கொள்கைகளை கொண்ட ஜனாதிபதி புஷ், இலங்கை மக்களதும் வெறுப்புக்குள்ளானவர்" என வெளிப்படுத்தியிருந்தது. ஆயினும், எத்தகைய ஆபத்து வந்தாலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு அதன் இச்சையைப் பூர்த்தி செய்யும் தரகராக இருப்பதை விட வேறு தெரிவு கிடையாது என்பதையிட்டு கொழும்பில் உள்ள ஆளும் கும்பல் நன்கு விழிப்புடன் உள்ளது. அமெரிக்காவுடனான "கூட்டுறவு" பற்றிய குமாரதுங்கவின் வாய்வீச்சுக்கள் என்னவாக இருந்தாலும், பொருளாதாரம், அரசியல் மற்றும் இராணுவம் போன்ற எல்லா துறைகளிலும் அடிமைத்தனமான முறையில் கீழ்ப்படிதலே இவர்களுக்கிடையிலான உண்மையான உறவாகும். பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்கள் இந்நாட்டை விட்டு வெளியேறி அரை நூற்றாண்டு கடந்த பின்னரும், புஷ் முன்னிலையில் ஜனாதிபதி மண்டியிடுவதானது மிகவும் சக்திவாய்ந்த ஏகாதிபத்தியத்திடம் தங்கியிருப்பதற்கான பிரகடனமாகும். |