World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக்

Political lessons of the US and Australian elections

அமெரிக்க, ஆஸ்திரேலிய தேர்தல்களின் அரசியல் படிப்பினைகள்

By Nick Beams
10 December 2004

Use this version to print | Send this link by email | Email the author

டிசம்பர் 7ம் தேதி சிட்னியில் ஒரு பொதுக்கூட்டத்தில் ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியச் செயலாளரும், உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவில் ஒருவருமான நிக் பீம்ஸ் ஆற்றிய உரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு அரசியல் அமைப்பு முறைகளுக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருப்பினும், ஆஸ்திரேலிய கூட்டமைப்புத் தேர்தல் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்களின் முடிவுகளை கவனிக்கும்போது, சில பொதுவான அம்சங்கள் வியப்பளிப்பனவாய் இருக்கின்றன. இரு நாடுகளிலும் தேர்தல் முடிவு ஒரே வினாவுடன்தான் எதிர்கொள்ளப்பட்டது: எப்படி இது நிகழ்ந்திருக்கக் கூடும்?

மில்லியன்கணக்கான மக்களுக்கு தேர்தல் முடிவு உண்மையிலேயே அதிர்ச்சியளித்தது. பொய் மற்றும் பொய்மைப்படுத்தல்களின் அடிப்படையில் சட்டவிரோதமான போரை முன்னின்று நடத்தியபோதும், புஷ்ஷும் ஹோவர்ட்டும் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டனர். அது மட்டுமின்றி முன்னைவிடக் கூடுதலான பெரும்பான்மையையும் அவர்கள் பெற்றுள்ளனர். அவர்கள் மீண்டும் பதவிக்கு வந்துவிட்டனர் என்பது மட்டும் அதிர்ச்சி தரவில்லை. அரசியல் வழிமுறை தேவையான திருத்தத்தைக் கொண்டுவர இயலாத நிலையில் உள்ளது என்பதை நிரூபித்திருந்தது என்ற ஆழ்ந்த கவலையின் பிரதிபலிப்பை இது கொண்டுள்ளது. இந்நிகழ்வு, இதுவரை வரலாற்றிலேயே மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்கள் என்று கருதப்பட்டிருந்த, பெப்ரவரி 2003ல் ஈராக்கிய போருக்கு எதிராக மில்லியன் கணக்கான மக்களின் உலகெங்கிலும் நிகழ்ந்த ஆர்ப்பாட்டங்களின் அனுபவங்களை மீண்டும் ஓர் உயர்ந்த மட்டத்தில், அவர்களது அந்த ஆர்ப்பாட்டங்கள் தங்களது அரசாங்கங்கள் மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதையும் திட்டமிட்டபடி போர் நடத்தப்பட்டதையும் மீண்டும் கண்டுகொள்ளவைத்துள்ளது.

தேர்தலுக்கு முன்பு ஹோவர்ட், மற்றும் புஷ் அரசாங்கங்கள் சட்ட நெறிக்குட்பட்டுத்தான் அமைக்கப்பட்டனவா என்பது பற்றிய கருத்து நிலவியிருந்தது. அமெரிக்காவில் 2000 தேர்தல் பலராலும் ஒரு எதிர்பாராத வழமைக்குமாறான வெற்றியெனவும், இது தேர்தல் வழிமுறையால் சரி செய்யப்பட்டுவிடும் என்றும் கருதப்பட்டது. 2000 தேர்தலில் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் புஷ் தேர்ந்தெடுக்கப்படவில்லை; புளோரிடாவில் வாக்குகள் சரியான முறையில் எண்ணப்பட்டிருந்தால் தேர்தல் குழுவின் வாக்குகளை அவர் பெற்றிருக்கமுடியாது. அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை; மக்களுடைய ஜனநாயக உரிமைகளைக் கவர்ந்து கொண்டு விட்டிருந்த நாட்டின் தலைமை நீதிமன்றத்தால் அவர் தெரிந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

அந்த அளவு வலிமையைக் கொண்டிராவிடினும், ஹோவர்ட் அரசாங்கம் மீண்டும் 2001 தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டபோது இதேபோன்ற உணர்வுகள்தான் இருந்தன. தேர்தலுக்கு முன்பு, ஹோவர்ட் இடர்பாடுகளுக்கு இடையே இருந்து, தேர்தலிலும் பெரிதும் பின்தங்கிய நிலையில்தான் இருந்தார். ஆனால் ஆகஸ்ட் மாதம் Tampa கப்பலும் மற்றும் அதில் இருந்த மீட்கப்பட்டிருந்த அகதிகளும் ஆஸ்திரேலிய கடற்பகுதி எல்லைக்குள் நுழைந்தனர்; அத்துடன் குழந்தைகள் கப்பலின் மேல் தளத்தில் இருந்து வீசியெறியப்பட்டனர் என்று கூறப்பட்ட பொய்களின் உதவியுடன், ஹோவர்ட் தஞ்சம் கோருவோருக்கு எதிரான பெரும் தீய பிரச்சாரத்தை நன்கு முடுக்கி விட்டார். செப்டம்பர் 11 நிகழ்வுகளினால் உந்துதல் பெற்ற அவர், பின்னர் "எல்லைப் பாதுகாப்பு" பற்றிய அச்சங்களை தூண்டிவிட்டு பதவியை இரண்டே மாதங்களில் வெற்றி கண்டார். 2004 தேர்தலில் பலரும் 2001 தேர்தல்களின் அநியாயங்கள் திருத்தப்பட்டுவிடும் என்று நினைத்தனர். இதற்கு மாறாக ஹோவார்ட் தனக்குக் கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொண்டுள்ளார்.

இந்த முடிவுகள் எங்ஙனம் விளக்கப்பட இருக்கின்றன? ஆஸ்திரேலியாவில் வலதுசாரி செய்தி ஊடக வர்ணனையாளர்கள் இதற்கு தயரான விடை ஒன்றை வைத்திருந்தனர்: ஈராக் போரைப் பொறுத்தவரையில் ஹோவார்டுக்கு இருந்த எதிர்ப்பு, வசதியான புறநகர்ப்பகுதிகளில் வாழ்ந்து வரும் மருத்துவர்களின் மனைவிமார் போன்ற "கலாச்சார செல்வந்ததட்டினரிடம்" மட்டும் எல்லைக்குட்பட்டிருந்தது, அதேவேளை "சாதாரண ஆஸ்திரேலியர்கள்'' ஹோவார்டின் பழமைவாத போக்கை கவர்ச்சிகரமெனக் கண்டதுடன், அரசாங்கம் மாறினால் பொருளாதார விளைவுகள் என்ன ஆகுமோ என்ற அச்சத்தையும் கொண்டிருந்தனர் என்பதே அது. மற்றொரு பக்கத்து கண்ணோட்டம் அடிப்படையில் மாறுபட்டிருக்கவில்லை; வாக்காளர்களை புகழ்வதற்கு பதிலாக, அவர்களை அது கண்டனத்திற்கு உட்படுத்தியது. Sydney Morning Herald-ல் எழுதும் அலன் ராம்சே -ன் கருத்துப்படி, இந்த முடிவு "திரித்தலுக்குட்பட்டிருந்த சிறுபான்மை இடம்கொடுக்கும் மடத்தனத்தின்" விளைவு ஆகும்.

அமெரிக்காவின் "இடதுகளிலிருந்தும்", புஷ்ஷின் மறுதேர்தல் பற்றி, இதேபோன்ற கருத்துக்கள்தாம் வெளிவந்தன. தாராளவாத-இடது இதழான Nation இல் கதா போலிட் என்ற கட்டுரையாளர் தேர்தல் முடிவுற்ற மூன்று நாட்குளுக்குப் பின் "துயரப்படு" என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் ஜோன் கெர்ரியைப் பற்றி எத்தகைய ''கடும் விமர்சனங்களையும்'' புறக்கணித்தார், "அவர் ஒரு நல்ல வேட்பாளர்தான்" என்று வலியுறுத்தி எழுதினார். மக்கள்தான் பழிகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். "தேசியவாதம், முன்-கூட்டிய ஆத்திரமூட்டல் இல்லாத போர், நீதியல்ல கட்டளை, 'சித்திரவதை செய்வதன் மூலம் பாதுகாப்பு', மகளிர் மற்றும் ஓரினச் சேர்க்கையுடையோர் மீதான தாக்குதல், செல்வம் பெற்றோருக்கும் பெற்றிராதவருக்கும் இடையே பெரும் பிளவு, விருப்பமுடைய திருச்சபைகளுக்கு அரசாங்கம் வாரிவழங்குதல், என்னுடைய வழி உயர்வழி என்ற கருத்துடைய ஜனாதிபதி" என்ற கருத்துக்களுக்குத்தான் இம்முறை மக்கள் விரும்பி வாக்களித்தனர் என்று இந்த அம்மையார் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

அமெரிக்கத் தேர்தல் முடிந்தவுடன் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புக்கள் "மதிப்புகள்" என்று அழைக்கப்பட்டிருந்த கருத்துக்களே வாக்காளர்களின்' விருப்பங்களை நிர்ணயிப்பதில் முக்கியமான பங்கைக் கொண்டிருந்தன எனக் காட்டியுள்ளன. புஷ்ஷின் வெற்றி மற்றும் குடியரசுக் கட்சி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தேர்தல்களில் கொண்டுள்ள ஆதிக்கம் இவற்றிற்குக் காரணமாக சமய அடிப்படைவாதத்தின் பங்கு மீது கவனம் இப்பொழுது செலுத்தப்படுகிறது.

அண்மையில் வெளியிடப்பட்டுள்ள What's the Matter with America? என்ற புத்தகத்தில், தோமஸ் பிராங்க் இன்றைய அரசியல் திகைப்பை பரிசோதிக்கிறார்: அமெரிக்க சமுதாயத்தில் மிக வறிய, ஒடுக்கப்பட்ட பிரிவுகள் தொடர்ச்சியாக பெருகிய முறையில் தங்கள் வாக்குகளை குடியரசுக் கட்சிக்கு அளித்துள்ள உண்மை ஐயத்திற்கிடமற்றது என்பதே அது. தன்னுடைய மாநிலமான கன்சாஸ் நிலைமையை பரிசீலித்த பிராங்க், சுதந்திர சந்தை வேலைதிட்டங்களினால் விளைந்துள்ள பொருளாதார பேரழிவினால் ஏற்பட்டுள்ள கோபம், விரக்தி, விரோதப்போக்கு, ஆகியவை "தாராளவாத செல்வந்த தட்டினருக்கு" விரோதமாக திருப்பப்பட்டுள்ளது என்று விவரிக்கிறார். தனிநபர் வருமானம் மிகக்குறைவாக உள்ள பகுதிகள், மிகக் குறைந்த வீட்டு வசதியே பெரும்பாலும் உள்ள பகுதிகள் ஆகியவை தொடர்ந்து மிகப் பழமைவாத அரசியல்வாதிகளுக்குத்தான் வலுவான ஆதரவைக் கொடுக்கிறார்கள் என அறிவிக்கப்படுகிறது. சமூக வர்க்கம் தொடர்பான புவியியல் வரைபடம் தலைகீழாக மாற்றப்பட்டுள்ளது.

"இந்த அனைத்து அமெரிக்க செயலற்ற தன்மையைப் பற்றி சற்று ஆராய்வோம். நெறிமுறை தளர்வானது, தனியார்மயமாக்கல், தடையற்ற பொருளாதார வாழ்க்கை என்று றேகன்-புஷ் ஆகியோர் கொண்டுவந்த சட்டங்களை ஒட்டி அரசு வியத்தகு முறையில் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கிராமப்புறங்களில் மக்கள் வெளியேறுகின்றனர், இதன் சிறுநகரங்கள் சிதைந்துவருகின்றன, பெருநகரங்கள் தேக்கநிலையில் உள்ளன; இதன் பெருஞ்செல்வம் படைத்த சிறு பிரிவினர், தொலைவிலிருந்து இயக்கும் தங்களுடைய பாதுகாப்பிற்குட்பட்ட கதவுகளுக்குள் ஒளிருகின்றனர். அரசே எழுச்சியில் வெடிக்கிறது... ஆனால் இந்த கிளர்ச்சியாளர்கள் என்ன கோருகின்றனர்? தங்கள் மீதும் தங்கள் அண்டை வீட்டார் மீதும் பெரும் அழிவை கொண்டுவந்துள்ள முதல் நடவடிக்கைகளையே அவர்கள் மீண்டும் கூடுதலாக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இது கன்சாஸில் மட்டும் காணப்படும் புதிர் அல்ல; அமெரிக்கா முழுவதிலும் நிறைந்துள்ள புதிராகும்; இந்த வரலாற்று திருப்பமானது அனைத்தையும் சாத்தியமாக்கியுள்ளது"என்று தோமஸ் கூறியுள்ளார் [What's the Matter with America? p.76]

சமய அடிப்படைவாதத்தின் எழுச்சி, மற்றும் கருக்கலைப்பு, ஓரினச் சேர்க்கை, துப்பாக்கி கட்டுப்பாடு இப்பிரச்சினைகளின் அடிப்படையில் குடியரசுக் கட்சி தன்னுடைய ஆதரவுத் தளத்தை அணிதிரட்டுவதற்கான திறமை, அக்கட்சியினரின் வெற்றியில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர்கள் வெற்றிக்கு இது மட்டும் விளக்கமாகிவிடாது. இந்நிகழ்வைப்பற்றி ஆராய்கையில் இதன் சமூக-பொருளாதார வேர்கள் யாவை என்ற உடனடி வினாத்தான் எழுகின்றது? பொருளாதார பாதுகாப்பின்மை, சமத்துவமின்மை, சமூக பதட்டங்கள் ஆகியவற்றின் வளர்ச்சி சமய உணர்வுகளின் வளர்ச்சி என்ற வடிவமைப்பைக் கொண்டு, "தாராளவாதம்" என்று கூறப்படும் மதிப்புகள் மீது கடுமையான கலாச்சாரரீதியான பின்னடைவைக் கொடுத்துள்ளது. குடியரசுக் கட்சியினர் விடுத்திருந்த வேண்டுகோளை ஏன் ஜனநாயகக் கட்சியினர் தக்க முறையில் எதிர்கொள்ளவில்லை? சமய சக்தியின் போலித் தோற்றத்திற்கு ஆதாரம் என்ன; இதை ஏன் எதிர்த்து நிற்க முடியவில்லை? வேறுவிதமாகக் கூறினால், குடியரசுக் கட்சியினரின் வெற்றிக்கு சமய உணர்வும், அதை அணிதிரட்டிய குடியரசுக் கட்சியினரின் திறனும்தான் காரணம் என்பது, புஷ் வெற்றிக்கு ஒரு விளக்கமாக அமையாது, அதை வெறுமனே வேறுவிதமாக விவரிப்பதுபோலத்தான் ஆகிவிடும்.

ஆஸ்திரேலிய தேர்தல்களில் நிகழ்வுகள் வேறுவித மாற்றங்களைக் கொண்டிருந்த போதிலும், இதேபோன்ற கேள்விகள்தான் எழுந்தன. தாராளவாத கட்சியினருக்கு, வீட்டுவசதிக்குக் கூடுதலான வட்டி கொடுத்து வாழும் மக்கள் நிறைந்த புறநகர்ப்பகுதிகளில் வாக்குகள் அதிகமாகக் கிடைத்தன. வீட்டை அடகு வைந்திருந்தவர்கள் சதவிகிதம் அதிகமாக இருந்த இடங்களில் எல்லாம் தாராளவாதிகள் பக்கம் வாக்குகள் சாய்ந்தன. தொழிற்கட்சிக்கு வாக்கு அளித்தால் கூடுலான வட்டி கொடுக்கவேண்டியிருக்கும் என்ற அச்சுறுத்தும் வகையிலான பிரச்சாரத்தை தாராளவாதிகள் தங்கள் தளமாகக் கொண்டிருந்தனர். தாராளவாதிகளின் நடவடிக்கைகளினால் பொருளாதாரச் செழிப்பு கொண்டுவரப்பட்டதற்கு பெரிதும் பாராட்டிய, ஹோவர்டின் பிரச்சாரம் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையில் உள்ள பொருளாதார பாதுகாப்பின்மையை நன்கு சுரண்டிக் கொண்டது.

இந்த அச்சங்களின் ஆதராத்தை கடன் பற்றிய புள்ளிவிவரங்களில் காணமுடியும். வீட்டுக்கடன்கள் 2002க்கு முந்தைய ஐந்து ஆண்டுகளில் ஆண்டு ஒன்றிற்கு 15.4 வீதம் உயர்ந்திருந்தது; 2003ல் இது 20 சதவிகிதத்திற்கும் கூடுதலாயிற்று. 1993ம் ஆண்டு வீட்டுக்கடன்கள் மொத்த வருமானத்தில் 56 சதவிகிதமாக இருந்தது. 2003ஐ ஒட்டி இது இருமடங்கிற்கும் மேலாக 125 சதவிகிதமாயிற்று. 1980 களின் கடைசியில் இருந்த 17 சதவிகிதம், மற்றும் அதற்குக் கூடுதலான அளவு என்பதில் இருந்து வட்டிவிகிதங்கள் குறைந்துவிட்டன. ஆனால் வீட்டு விலை அதிகரிப்பை அடுத்து வீடு வாங்குபவர்கள் முன்னைவிடக் கூடுதலான வகையில் கடனில் ஆழ்ந்துள்ளனர்; சிறிதளவு வட்டி விகித உயர்வுகூட பெரும்தாக்கத்தை அவர்களுக்கு ஏற்படுத்தும்.

புறநகர்ப்பகுதிகளில் பல தொழிலாள வர்க்க குடும்பங்களின் தத்தளிக்கும் நிலை தாராளவாதிகளின் அச்சுறுத்தும் வகையிலான பிரச்சாரத்திற்கு சடரீதியான காரணங்களை கோடிட்டுகாட்டியது. ஆனால் இந்தப் பயமும், உறுதியற்ற தன்மையும் ஹோவர்ட் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்கு என்ற முறையில் மாற்றப்பட்டதற்கு தக்க விளக்கம் அளிப்பதாக இல்லை. சொல்லப்போனால் இந்த நிலைமையினால் அரசாங்கத்திற்கு எதிராக பாரியளவு வாக்களித்திருக்க வேண்டும், ஏனெனில் அதன் கொள்கைகள்தான் உழைக்கும் மக்கள் ஒரே இரவில் திவாலாகிவிடும் நிலைக்கு தள்ளப்படக்கூடிய சூழ்நிலையைத் தோற்றுவித்திருந்தன.

தொழிற்கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சியினரின் கொள்கைகள்

வேறுவிதமாகக் கூறினால், அமெரிக்க, ஆஸ்திரேலிய தேர்தல் முடிவுகளைப் பரிசீலிக்கும்போது, தேர்தல் பிரச்சாரத்தின்போது ஜனநாயகக் கட்சியினர், தொழிற் கட்சியினர் இருவரும் மேற்கொண்டிருந்த கொள்கைகளை ஆராய்வதோடு, பரந்த வெகுஜனங்களின் அரசியல் நனவு மற்றும் புரிதல் இவற்றை வடிவமைத்த நீண்ட கால வரலாற்று நிகழ்ச்சிப்போக்கையும் நாம் ஆராய்தல் வேண்டும்.

அமெரிக்க பிரச்சாரத்தில், ஜனாயகவாதிகள் அமெரிக்க மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது என்பது ஒரு புறம் இருக்க, அவற்றைச் சிந்திக்கும் கொள்கையைக்கூட முன்வைக்கவில்லை. குடியரசுக் கட்சியனர் கெர்ரியை ஒரு தோல்வியடைபவர் எனத்தாக்கினர்; இதில் ஒரு நயம் இருந்தது; ஏனெனில் ஜனநாயகக் கட்சிக்குள்ளேயே ஓர் அடிப்படை முரண்பாடு நிறைந்திருந்தது. எல்லாவற்றையும் விட சாதாரண மக்களின் நலன்களுக்கான அழைப்பை விட்டாலும் கூட, அனைத்திற்கும் மேலான முறையில் அமெரிக்க பெருவணிக நலன்களைக் காத்திடுவதற்கு அர்ப்பணித்துள்ள கட்சியாகும் இது. இவ்வாறு ஈராக்கிய போரைப் பற்றி விமர்சனங்கள் கூறிய போதிலும்கூட, போருக்குச் செல்வதற்கான காரணம் முற்றிலும் ஏமாற்றுத்தனமானது என்ற உண்மை வெளிவந்துள்ளபோதிலும், கெர்ரி, புஷ் போருக்குச் செல்வதற்கு அதிகாரம் வழங்கிய வாக்கை மாற்றிக் கொள்ள மாட்டேன் என்றுதான் கூறினார். "பயங்கரவாதத்தின் மீதான போருக்கு" அவர் ஆதரவளிப்பதாகவும் அதற்காக ஆகும் செலவினங்களுக்கு ஆதரவு கண்டிப்பாகத் தரத்தயாராக இருந்ததாகவும், அதே நேரத்தில் சமூக வேலைத்திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள் அவற்றைப் பயன்படுத்துபவர்கள் தேவைக்கேற்ப செலவு செய்து பெற வேண்டும் என்ற முறையில் இருக்கவேண்டும் என்றும் கூறினார்.

குடியரசுக் கட்சியினரின் தேர்தல் மூலோபாயம், தங்கள் தளத்தை அணிதிரட்டிப் பெருக்குவதில் காட்டப்பட்டது --அதாவது "மதிப்புகள்" என்ற அழைப்பிற்கு ஆர்வத்துடன் இணக்கம் காட்டும் பரந்த பிரிவுகளை தன்பால் ஈர்ப்பது என்பதே ஆகும் அது. ஆனால் அத்தகைய தளம் எவ்வாறு ஏற்பட்டிருந்தது? இங்கு இருபதாம் நூற்றாண்டின் கடைசி தசாப்தங்களின் அனுபவங்களை ஆராய்வது மிக முக்கியமானது ஆகும்.

இக்கால கட்டத்தின் மிக முக்கிய தன்மை ஒருகாலத்தில் தொழிலாளர் இயக்கம் என்று அழைக்கப்பட்ட இயக்கத்தின் முற்றுமுழுதான உடைவேயாகும். இதன் விளைவு மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் தங்களை எதிர்கொள்ளும் சமூக, அரசியல் பிரச்சினைகளுக்கும், தங்கள் நலன்களை ஒரு வர்க்க அடிப்படையில் பாதுகாக்க அமைப்பு இல்லாமற் போய்விட்டது என்று பொருள்படும். அவர்களுடைய வாழ்வில் பெருகி வரும் துன்பங்களினால் ஏற்பட்டுள்ள சமூக பதட்டங்களுக்கு முற்போக்கான வடிகால் கிடைப்பது அரிதாகிவிட்டது, இதையொட்டி அவர்கள் சமய நற்செய்தியாளர்களுடைய கூட்டங்கள், வலதுசாரி வானொலி, தொலைக்காட்சி பண்டிதர்களின் உரைகள் ஆகியவற்றிற்கு செவிமடுத்து இணங்கக் கூடிய ஒரு நிலை ஏற்பட்டு விட்டது.

அமெரிக்கத் தேர்தல்கள் பற்றி WSWS ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த் நிலைமையச் சுருக்கிக் கீழ்க்கண்ட முறையில் தெரிவித்தார்:

வேலைகள் ஏதும் இன்றி, பல தலைமுறைகளின் போராட்டத்தில் வர்க்க நனவைத் தக்க வைத்திருந்த ஆழமாய் வேர்விட்ட சமூக உணர்வுகளில் இருந்தும் துண்டிக்கப்பட்டு, அவர்களை கைவிட்டுவிட்ட தொழிற்சங்கத்தில் இருந்தும் அந்நியப்படுத்தப்பட்டுவிட்ட நிலையில், நேற்றைய போர்குணமுடைய தொழிலாளர்கள், நன்கு பயிற்சி பெற்று, உரத்த குரலில் கூவக்கூடிய நற்செய்தி வழங்கும் எவங்கலிக்கல் தொழிற்பிரிவின் செய்திகளுக்கு செவிமடுக்க ஆர்வம் கொண்டதில் வியப்பில்லை. ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த தொழிலாளர் இயக்கத்தின் திரட்டிற்கு முற்றிலும் புறத்தே வளர்ந்தும், வர்க்கப் போராட்டத்தின் மரபுகளைப் பற்றிய உணர்வே தெரியாமலும் வளர்ந்துள்ள, இத்தகைய தொழிலார்களின் குழந்தைகளுக்கு வர்க்க நனவை வளர்த்துக்கொள்ளுவதில் தடைகள் நிறையவே உள்ளன. இந்த உலகிலும், அவர்களுடைய வாழ்க்கைக்காலத்திலும் ஒரு கூடுதலான சிறந்த முறையிலும், மனிதாபிமானத்துடனும் கூடிய சமுதாயத்தையும், தற்கால சமூகம் பற்றிய ஒரு விமர்சனரீதியான பார்வையை வளர்ப்பதற்கும் எந்த ஆதாரத்தில் இருந்து தேவையான தகவல்களையும் விளக்கங்களையும் அவர்கள் பெறுவது இயலும்? இப்பொழுதுள்ள அரசியல் கட்சிகளிடம் இருந்தோ, குட்டைபோல் கலங்கியுள்ள செய்தி ஊடகங்களில் இருந்தோ நிச்சயமாக அதைப் பெற இயலாது.

ஆஸ்திரேலியாவில், ஹோவர்டின் வெற்றி ஆஸ்திரேலிய தொழிற்கட்சிக்கு கிடைத்த வாக்கு வரலாற்றிலேயே மிகக் குறைவான 38 சதவிகிதத்திற்கும் கீழே போயிற்று. இந்த முடிவு ஓர் தனித்த வழமைக்குமாறான ஒன்றல்ல; மாறாய் கடந்த 15 ஆண்டுகளில் வெளிவந்துள்ள போக்கின் தொடர்ச்சி ஆகும். பிரேசரின் தலைமையில் இருந்த தாராளவாதிகளை தோற்கடித்து ஹாக் அரசாங்கம் அதிகாரத்தைக் கைப்பற்றி இருபது ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. 1930களுக்கு பிறகு மிக அதிக அளவில் காணப்பட்டிருந்த பெருமந்த நிலைக்கு தொழிலாள வர்க்கத்தின் அரசியல் இயக்கம் விடையறுத்ததின் விளைவாகத்தான் அந்தத் தேர்தல் முடிவு இருந்தது. பலவித வழிகளிலும், 1983ல் முன்கூட்டிய தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட உடனேயே, முடிவு இவ்வாறுதான் இருக்கும் என்று ஊகிக்கப்பட்டுவிட்டது. தொழிற் கட்சி அநேகமாக பாதிக்கும் மேலான தொடக்க வாக்குகளுடன் அதிகாரத்திற்கு அனுப்பப்பட்டது. இப்பொழுது தொழிற் கட்சிக்கு கிடைத்துள்ள வாக்கு மூன்றில் ஒன்று என்ற கணக்கில் இருந்து அதே தரத்தில்தான் 1993 தேர்தலில் இருந்து உள்ளது.

1980களின் கடைசிப் பகுதியிலேயே வெளிப்படையாக வந்துவிட்ட இத்தகைய வரலாற்று வகைச் சரிவு முதன்முதலில் தெளிவாகிவிட்டது. ஹாக்-கீட்டிங் தொழிற் கட்சி அரசாங்கம், தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் இணைந்து, சுதந்திர சந்தை முறைக்கேற்ற சூழ்நிலையை உருவாக்கும் வகையில் நெறிப்படுத்துதல் பாரியளவில் செல்வம் தொழிலாளரிடம் இருந்து முதலாளிகளுக்கு செல்வது போன்றவற்றை கடைப்பிடிக்க தலைப்பட்டு தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமை, வசதிகள் இவற்றின் மீது முடிவில்லா தாக்குதல்களை நடத்தும் வகையில் செயற்பாடுகளை மேற்கொண்டது. இதைக் கொண்டுவருவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன: தொழிற்சங்க அதிகாரத்துவம் நீதிமன்றங்களுடனும் போலீசுடனும் கூட்டுசேர்ந்து கட்டிட தொழிலாளர்கள் கூட்டமைப்பை தகர்ப்பதற்கு ஒத்துழைத்த்து, உருக்கு தொழிற்சங்கங்களில் புதிய ஏற்பாட்டினை எதிர்க்கும் திறனுடையவர்கள் அனைவரும் தொழிற்சங்க பிரதிநிதிகளால் வெளியேற்றப்பட்டனர்; குவீன்ஸ்லாந்தில் மின்சாரத்துறை தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்; ஆகாய விமானிகளின் போராட்டம் இராணுவத்தைக் கொண்டு முறியடிக்கப்பட்டது. ஒரு மாற்றீட்டை முன் வைக்கும் வகையில், சமூக ரீதியான-முற்போக்கு முன்னோக்கை முன்வைக்கும் வகையில் தொழிற் கட்சியும் தொழிற்சங்கங்களும் ஒரு சக்தியாக இயங்கத் தவறிவிட்டதால், ஹோவர்டின் பிரசாரத்திற்கு தொழிலாள வர்க்கத்தில் இருந்து பரந்த பிரிவினர் ஈர்க்கப்படுகின்றனர் என்பதில் வியப்பு ஏதும் இல்லை. பழைய வேலைத்திட்டமான சீர்திருத்தவாதம் முற்றிலும் தகர்க்கப்பட்டுவிட்டது அல்லது சரிந்துவிட்டது என்று கூறலாம்.

அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் ஜனநாயக் கட்சியினரும், தொழிற் கட்சியினரும் தங்கள் தேர்தலில் தோல்வியில் இருந்து இதேபோன்ற முடிவுகளைத்தான் கொண்டுள்ளனர். பிரச்சாரத்தில் மையமாக கொள்கைகளையும் வேலைதிட்டங்களையும் முன்வைக்காமல் கலாச்சாரத்தையும் குணநலன்களையும் கொண்டுவரவேண்டும் என்று ஜனநாயகக் கட்சியினர் முடிவு எடுத்துள்ளனர். அறிவிற்குப் பொருந்தாத சமய உணர்வுகள் அமெரிக்க அரசியல் வாழ்வில் எவ்வாறு இத்தகைய ஆதிக்கம் செலுத்தும் பங்கைக் கொண்டுள்ளது என்பது பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக இல்லை.

தொழிற் கட்சியின் தேர்தல் முடிவுகளைப் பற்றிய பிந்தைய ஆய்வுகள் பற்றிய கருத்து அக் கட்சி சுதந்திர சந்தைச் சீர்திருத்தம் பற்றிய எந்தவிதமான இருமனப் போக்கையும் கைவிடவேண்டும் மற்றும் ஹாக் மற்றும் கீட்டிங் அரசாங்கங்கங்களின் கீழ் தொடக்கிவைக்கப்பட்ட கொள்கைகளை அரவணைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். ஏற்கனவே இந்தக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டுவிட்டது; ஏனெனில் தொழிற் கட்சி ஹோவார்ட் அரசாங்கத்தின் சட்டமியற்றும் திட்டத்திற்கு அனைத்து எதிர்ப்புக்களையும் கைவிட்டுவிட்டது.

நவம்பர் 19ம் தேதி நிகழ்த்திய உரையொன்றில், தொழிற் கட்சியின் தலைவரான மார்க் லாதம் "தொழிலாளர் இயக்கத்தின் பொருளாதார நோக்கம், அதன் நெறிப்பாடு" இவற்றைப் புதிய அடிப்படையில் கொள்ளவேண்டும் என்ற அழைப்பைக் கொடுத்தார். "ஒரு புதிய மத்தியதர வர்க்கம், அது கொண்டிருக்கவேண்டிய ஏராளமான ஒப்பந்தக்காரர்கள், ஆலோசனைக் குழுவினர், உரிமம் பெற்று நிறுவனம் நடத்துவோர், தொழில் முயலுவோர்'' என்ற பட்டாளம் ஒரு திருப்பத்தைக் காணவேண்டும் என்றும் அவர் கூறினார். "மக்கள் மிகப்பெரிய, அதிகார ஏணியுடைய அமைப்புக்களின் தளைகளில் இருந்து விடுபட்டு தங்களுடைய பொருளாதார வருங்கலாத்திற்கு தாங்களே முகவர்களாக இருக்கவேண்டும்." என்றும் அவர் கூறியுள்ளார்.

உண்மையில் நிகழ்ந்தது இதற்கு எதிராகத்தான் உள்ளது: உலகம் முழுவதும் உழைக்கும் மக்களுடைய வாழ்வு, தாங்கள் கட்டுப்படுத்தமுடியாத பெருவங்கிகள், பன்னாட்டு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் போன்ற மிகப்பெரிய பொருளாதார சக்திகளின் ஆதிக்கத்தில் இதுகாறும் இல்லாத அளவிற்கு ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ளது. முதலாளி-தொழிலாளி என்ற உறவில் இருந்து விடுபட்டுள்ள இந்தப் புதிய "தொழில் முயலுவோர்" வந்துள்ளது, லாதெமின் கூற்றின்படி பெருநிறுவனங்கள் செலவினங்களை குறைக்கும் வழிவகைகளை கையாண்டதின் விளைவு ஆகும். தொழிலாள வர்க்கத்தின் சமூகச்சேர்க்கையும் மாறிவிட்டது; அது முதலாளித்துவத்தின் வரலாற்று முழுப்பகுதிகளிலும் மாறித்தான் இருக்கிறது. லாதெமின் முன்னோக்கில் குறிப்பிடத்தக்கது, சமுதாயத்தை எவ்விதத்திலும் மாற்றி அமைக்கவேண்டும் என்ற கருத்து முற்றிலும் கைவிடப்பட்டுவிட்டது என்பதுதான். அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியினர் கடவுளை கண்டுபிடிக்கும் முயற்சியில் உள்ளனர் என்றால், ஆஸ்திரேலியாவில் தொழிற் கட்சியினர் மார்கரெட் தாட்சருடைய தத்துவத்தை கண்டுபிடித்து சமூகம் என்று ஒன்றும் இல்லை என்றும் தனிமனிதன்தான் உள்ளான் என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

குறைந்த தீமை

இரண்டு தேர்தல்களிலுமே, அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும், அனைத்து தீவிரவாத இடது கட்சிகள் மற்றும் எதிர்ப்புக் குழுக்களும் இணைந்து "குறைந்த தீமை" என்ற பதாகையின் கீழ் எதிர்ப்பணியாக செயல்பட்டதற்கு மாறாக சோசலிச சமத்துவக் கட்சி, தன் எதிர்ப்பு தலையீட்டை ஏற்படுத்திக் கொண்டது. இடது குழு இணைப்பின் எதிர்ப்புக்கள், கெர்ரி, ஜனநாயகவாதிகள், லாதெம் மற்றும் தொழிற் கட்சியின் குறைகள் எத்தன்மையாக இருந்தாலும் இறுதிப்பகுப்பாய்வில் அவை புஷ் அல்லது ஹோவர்ட் பதவிக்கு வருவதோடு ஒப்பிடும்போது "குறைந்த தீமை"யைப் பிரதிபலிக்கிறது என்ற கருத்தை அவை கொண்டிருந்தன.

புஷ் அல்லது ஹோவர்ட் பதவிக்கு வருவதல்ல மிகப்பெரிய ஆபத்து என்றும் தொழிலாள வர்க்கம் தனக்கென சுயாதீனமான முன்னோக்கையும் வேலைத்திட்டத்தையும் அபிவிருத்தி செய்வதில் தோல்வியைக் கண்டிருப்பதுதான் பெரும் ஆபத்து என்றும் நாங்கள் விளக்கினோம். தொழிலாள வர்க்கத்திற்காக ஒரு சோசலிச இயக்கத்தை அபிவிருத்தி செய்வதற்கு ஆதரவு கொடுப்பதாக நம்முடைய எதிர்ப்பாளர்கள் கூறிவந்தாலும், அது உடனடிப்பணி அல்ல என்று வலியுறுத்தி வருகின்றனர்.

திரு டாரிக் அலியின் நிலைப்பாட்டை உதாரணத்திற்கு பார்ப்போம், இவர் ஈராக் போரை எதிர்ப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் புஷ்ஷை, கெர்ரி தோற்கடித்தல்தான் முன்னுரிமையாக இருக்கவேண்டும் என்று பிரகடனப்படுத்தினார். கெர்ரி போருக்கு ஆதரவு கொடுத்து, அமெரிக்கப் படைகள் கூடுதலாக அனுப்பப்படவேண்டும் என்று அழைப்பு விடும்போது, எவ்வாறு அப்படிக் கருதமுடியும் என்பதை திரு அலி விளக்கவில்லை. தரப்பட்டுள்ள தகவல்களை காலத்திற்கு உகந்ததாக போற்றும் அவரின் நியாயப்படுத்தல், சந்தர்ப்பவாதத்தின் அனைத்து வடிவங்களையும் பண்பிட்டுக்காட்டுகிறது.

தன்னை விமர்சிப்பவர்களுக்கு விடையளிக்கும் வகையில் அவர் எழுதியதாவது: "விலைக்கு வாங்கப்பட்டவரே, நீங்கள் கெர்ரிக்கு வாதிடுகிறீர்களா?, என்று என்னிடம் கூறுபவர்களுக்கு, 'நீங்கள் புஷ் அதிகாரத்தில் தொடர்ந்திருக்கவேண்டும் என்று தீவிரமாக வாதிடுகிறீர்களா?" என்று கேட்பதே என்னுடைய பதில் ஆகும். ஏனெனில் அது ஒன்றுதான் மாற்றீடாக உள்ளது. ஒரு மூன்றாம் கட்சி இங்கு இல்லை. சோசலிஸ்ட் கட்சியின் Eugene Debs தேர்தலில் ஒரு மில்லியன் வாக்குகளைப் பெற்று அதையொட்டி பத்து ஆண்டுகள் சிறையில் இருந்த நிலை இப்பொழுது இல்லை. அவர் இங்கு, இப்பொழுது இல்லை."

ஆனால் திரு அலியும் அவரைப் போன்றோரும் ஏன் சோசலிச இயக்கம் இல்லை என்ற வினாவை எழுப்பவில்லை. தொழிலாள வர்க்கம், ஜனநாயகக் கட்சிக்கு தொடர்ந்து அடிபணிந்து நிற்பதற்கு பல காரணங்களில் ஒன்று, அக்கட்சிக்கு அரசியல் பிரமுகர்களான டாரிக் அலி, அவருடைய முன்னோடிகள் போன்றோர் ஆதரவு கொடுத்தது ஆகும். ஆம், நாம் சோசலிச இயக்கத்தின் வளர்ச்சிக்கு ஆதரவாக இருக்கிறோம்; ஜனநாயகக் கட்சி ஒரு முதலாளித்துவக் கட்சி என நாம் உணர்கிறோம் தான்; ஆனால் இப்பொழுது நிலைமையானது குடியரசுக் கட்சியை தோற்கடிப்பதற்கு தொழிலாள வர்க்கம் ஜனநாயகக் கட்சியின் பின்னே அணிதிரள்வதைக் கோருகிறது, அதன் பின்னரே நாம் நீண்டகால குறிக்கோளைப் பற்றி எண்ணிப்பார்க்க முடியும், என்றவாறாக வாதம் எப்போதும் இருந்து வருகிறது.

ஆனால், இந்தத் தேர்தலில் சந்தர்ப்பவாதிகள் அடைகாக்கப்பட்ட பின்னர் வெளிவந்துள்ளனர் எனத் தோன்றுகிறது. இதற்கு முக்கிய காரணம் தொழிலாள வர்க்கத்தின் முக்கியமான பிரிவுகள் குடியரசுக் கட்சியின் வலதுசாரி, வருங்கால கணிப்புக்களுக்கு இசைவு கொடுப்பதோடு, அக்கட்சியினரின் "மதிப்புகள்" பற்றிய அழைப்புகளுக்கும் செவிமடுத்திருப்பது, ஜனநாயகக் கட்சியினருக்கு தொழிலாளர்கள் எத்தனையோ தசாப்தங்களாக அடிபணிந்து நின்றிருப்பதால் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தை பெருக்கிவிட்ட நிலையையும் காட்டுகிறது. வேறுவிதமாகக் கூறினால், தொழிலாள வர்க்கத்திற்குள் சோசலிச நனவை அபிவிருத்தி செய்வதற்கான போராட்டம், தொழிலாள வர்க்கம் அரசியல் அளவில் தன்னை ஆயுதபாணியாக்கிக் கொள்ளவேண்டிய நிலை, முதலாளித்துவக் கட்சிகளுக்கு அடிபணிந்து நிற்கும் தன்மையை முடித்துக் கொள்ளவேண்டி அது மேற்கொள்ளவேண்டிய போராட்டம் அனைத்தும் ---- உடனடியாகக் கொள்ளவேண்டிய பணிகளின் தன்மைக்கு ஒவ்வாது என்று கருதப்படுகிறது---- ஆனால் இவைதான் மிகவும் தீர்க்கமானதும், உடனடியாக முடிவு காணப்படவேண்டியவையுமாகும்.

மற்றொரு இடதுசாரிப் பிரமுகரான, பிரிட்டிஷ் சோசலிச தொழிலாளர் கட்சியிலுள்ள திரு அலெக்ஸ் காலினிக்கோஸ் கருத்திற்கு வருகிறேன். பொதுமக்களின் மிக வறிய, ஒடுக்கப்பட்ட பிரிவினர் குடியரசுக் கட்சியினருக்கு வாக்கு அளித்திருந்ததை பற்றிக் குறிப்பிட்டு, "ஒரு சிறிய பெருஞ்செல்வந்தர் வணிகக்குழு அமெரிக்க சமுதாயத்தை ஆதிக்கத்திற்குட்படுத்துவதுடன், தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செயற்பட குடியரசுக் கட்சியையும் ஜனநாயகக் கட்சியையும் வாங்கியிருக்கையில், உழைக்கும் வர்க்கத்தின் துன்பத்திற்கான உண்மையான மூலத்தின் மீதான சீற்றத்தை சுட்டிக்காட்ட வர்க்க அரசியல் முனைவதுதான் இதற்கு விடையாகும்'' என்று அவர் வலியுறுத்தியுள்ளார். அதாவது, இதற்குப் பொருள் ரால்ப் நாடெரும் அவருடைய சிறு ஆதரவாளர் குழுவும் இரண்டு முக்கிய பெரிய கட்சிகளுக்கு எதிரான உண்மையான மாற்றீட்டினை வளர்க்கவேண்டும் என்பதுதான்." [Socialist Workers, November 11,2004]

நாடெர், அவருடைய இயக்கம் மற்றும் அவர் சில நேரங்களில் தொடர்பு கொண்டிருந்ந பசுமைக் கட்சி ஆகியோருடைய நோக்கமே, உழைக்கும் மக்களின் நலன்களை சுயாதீனமாக பிரதிபலித்து போரிடும் கட்சி ஒன்றை நிறுவக்கூடாது என்பதுதான். ஜனநாயகக் கட்சியை இடது புறம் தள்ள வேண்டும் என்ற மாற்றுக் கருத்தைத்தான் அவர்கள் கொண்டுள்ளனர். ஜனநாயகக் கட்சிக்கு ஒரு மாற்றீடு என்ற நிலையை நாடெர் பிரதிபலிக்கவில்லை; உழைக்கும் மக்களை அதன் பொறியில் வைக்கும் நிரந்தர நோக்கத்தைக் கொண்டுள்ள அரசியல் இயந்திரங்களின் ஒரு பகுதியாகத்தான் அவர் உள்ளார்.

இங்கு, ஆஸ்திரேலியாவில், எதிர்ப்பு இயக்கங்களின் கருத்தை வெளியிடும் Socialist Worker இத்தேர்தலை "இடதுபுறத்திற்கு விழித்தெழு என அழைப்புவிடும்" நிகழ்வாக விவரித்துள்ளது. அகதிகள் பிரச்சினை, ஈராக்கிய போர் ஆகியவற்றிற்கு எதிராக இயக்கங்களை வளர்த்துள்ளபோதிலும் கூட, அவை "ஹோவர்டிற்கு எதிரான சமநிலையைக்" காண்பதற்கு போதுமானதாக இல்லை என்று அவர் விளக்கியுள்ளார். "போருக்கும் இனவெறிக்கும் எதிராக தோற்றுவிக்கப்பட்டுள்ள தீவிர எதிர்ப்பு வலைப்பின்னல் மக்கட்தொகுப்பின் பரந்த பிரிவுகளிடையோ, குறிப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர் இயக்கத்தினுள்ளோ ஆழ்ந்த வேர்களைக் கொண்டிருக்கவில்லை."

ஆனால் அரசியலில் முக்கிய பிரச்சனை என்னவென்றால் முறையான தொழிலாளர் இயக்கத்திற்கான அமைப்பு இல்லை என்பதுதான். தொழிற்கட்சியும், தொழிற்சங்கங்களும் இருக்கின்றன; ஆனால் இந்த அமைப்புக்கள் உழைக்கும் மக்களின் பரந்த வெகுஜனங்களின் சமூக நிலை மற்றும் நலன்களை முன்னேற்றும் எண்ணத்தைக் கொண்டிருக்கவில்லை. இவை தொழிலாளர் இயக்கமாக இல்லாமல் அதிகாரத்துவத்தின் கூடாகத்தான் இவை உள்ளன. ஒரு மரத்தின் பட்டையில் உள்ள புல்லுவெட்டியை போல், வெளித் தோற்றம் முன்பு இருந்ததைப் போலத்தான் தொடர்ந்தாலும், உள்ளே இருக்கும் பொருளின் தன்மை மாறிவிட்டது. முக்கிய பணி இல்லாததொரு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர் இயக்கத்துடன் இணைந்து கொள்ளுவதல்ல. மாறாக ஓர் அமைப்பை புதிதாக உருவாக்குவதுதான் தலையாய பணியாகும். முந்தைய தொழிலாளர்கள் இயக்கங்களின் அமைப்புக்களை நன்கு ஆராய்ந்து அவற்றின் சிதைவுக்கும் சீரழிவுக்குமான காரணங்களை பகுத்தாய்ந்து, தக்க அரசியல் முடிவுகளை எடுப்பதுதான் முக்கியமாகும்.

ஒரு சோசலிச கலாச்சாரம்

தொழிலாள வர்க்கத்தின் வளர்ச்சி எப்பொழுதுமே சோசலிச வேலைதிட்டம், முன்னோக்கிற்கான போராட்டத்துடன் பிணைந்து உள்ளது. ஒரு சோசலிச கலாச்சார மற்றும் முன்னோக்கினை மறுபடியும் அறிமுகப்படுத்துவதனூடாக தொழிலாள இயக்கத்தை அரசியல் ரீதியாக மறு பயிற்றுவித்தல்தான் இன்றைய மையப்பணியாகும். இந்த முன்னோக்கு எதை உள்ளடக்கியுள்ளது?

முதன் முதலாக, இன்று தொழிலாள வர்க்கத்தை எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் அதன் தோற்றத்திலும் அளவிலும் பூகோளரீதியானதாக இருப்பதுடன், உலக மக்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் எதற்கும் ஒரு தேசிய வேலைதிட்டத்தின் அடிப்படையில் தீர்வை காண இயலாது என்பதை அறிதல் இன்றியமையாததாகும். தொழிலாளர் இயக்கத்தை புதிப்பிப்பதற்கு முதலும் முக்கியமானதுமான முன்னோக்கிய நடவடிக்கை தேசிய-அரசு கட்டமைப்புத்தான் மனித சமூகம் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் அனைத்திற்கும் மையமாக உள்ளன என்பது உணரப்படவேண்டும்.

துண்டு துண்டாகப் பிளவுற்று, போட்டியில் ஈடுபட்டுள்ள தேசிய-அரசுகள் நிறைந்த ஒரு உலகில், அறிவார்ந்த முறையில் பயன்படுத்தமுடியாத அளவில் பூகோள உற்பத்தி சக்திகள் விரிவடைந்துள்ளன. ஒரு பெரும் வல்லரசு மற்றவற்றின் மீது பூகோள மேலாதிக்கம் செலுத்தும் தன்மையிலும் இதற்கான தீர்வு இல்லை. மனிதனின் உற்பத்தி சக்திகளின் அறிவார்ந்த மற்றும் நுண்ணறிவுத்திறம் வாய்ந்த அபிவிருத்தியானது, பெருநிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் லாபங்களுக்கு அல்லாமல் மனித தேவைகளின் நலன்களின்பேரில் சர்வதேச அளவில் உலக உற்பத்தியாளர்களின் ஒத்துழைப்பின் மூலம் கட்டாயம் பொறுப்பெடுக்கப்பட வேண்டும் என்ற புள்ளி மனித சமூகத்தின் வரலாற்று வளர்ச்சியில் வந்தடைந்துள்ளது.

இரண்டாவதாக, தொழிலாள வர்க்கத்திற்கு மறுகல்வி, மறு தயாரிப்பு என்பது வேறு வழியின்றி முதலாளித்துவத்தை ஏற்று, வருங்காலம் சிறப்பாக இருக்கும் எனக் கருதும் நம்பிக்கையுடைய தன்மைக்கு அப்பால் செல்ல வேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்கான அனைத்துக் காரணக் கூறுபாடுகள் அடங்கிய அரசியல் போராட்டத்தை அபிவிருத்தி செய்வதுதான் இன்றியமையாத தேவையாக இருக்கிறது.

மூன்றாவதாக, இதை அடைவதற்கு குறுக்கு வழி ஏதுமில்லை என்ற உணர்வில் இது தளத்தை கொண்டிருக்க வேண்டும். ஏனைய அமைப்பினை ஒரு சோசலிச இயக்கத்திற்கு தலைமை தாங்கக்கூடிய வகையில் மாற்றுவதற்கான புத்திசாலித்தனமான தந்திரோபாய முயற்சி ஏதும் இல்லை. ஒரு விகாரச் சிறு தவளை போன்ற பிராணி மிக அழகிய இளவரசராக மாற்றப்படுதல் என்பது கட்டுக் கதைகளில்தான் உண்டு; இத்தகைய மாற்றத்தை அரசியல் முன்னோக்கில் காணமுடியாது. ஆனால் பல சிந்தனையாளர்களும் அமைப்புக்களும் இத்தகைய பொய்யுரைகளைத்தான் வளர்த்து வருகின்றனர்.

சோசலிஸ்ட் அலையன்ஸ் அத்தகைய குழுக்களில் ஒன்றாகும். தேர்தலில் பெரும் வெகுஜனங்களின் அழுத்தம், மற்றும் பசுமைகளின் திறன் ஒரு புதிய போக்கை தொழிலாள வர்க்கத்திற்காக அளிக்கும் என்ற கற்பனை தோற்றத்தை வளர்ப்பது இதன் முக்கிய செயற்பாடுகளில் ஒன்றாகும்.

தேர்தலுக்கு சற்று முன்பு வந்த தலையங்கம் ஒன்றில் சோசலிஸ்ட் அல்லையன்ஸ் பசுமை கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை, மனித நாகரிகம் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு ஆதரவாகப் பொருளாதார ஆளுமைக்கு எதிராக நிற்பதற்காகவும், ஹோவர்ட் அராசங்கத்தின் வேலை நிலைமை தொடர்பான சட்டம் (Workplace Relations Act) போன்ற நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு காட்டியதற்கும் புகழாரம் சூட்டியது.

"ஆனால் பசுமைகள் தங்களுடைய முக்கிய மாற்றுவிருப்பங்களை உடனடியாக இல்லாவிட்டாலும் பின்னர் தவிர்க்கமுடியாமல் எதிர்கொண்டே ஆகவேண்டும். அத்தகைய முடிவெடுக்கும் நேரம் வரும்போது அவர்கள் தங்களுடைய ஜேர்மனிய தோழர்கள் போல் "சிகப்பு-பச்சை" கூட்டை ஆஸ்திரேலிய தொழிற் கட்சியுடன் வலதுபுற ஆதரவு அல்லது ஒருவேளை அவர்களின் இடதோ?, எனக் கொண்டிருந்த முன்னுதாரணத்தைத்தான் பின்பற்றுவர்."

உண்மையில் ஆஸ்திரேலிய பசுமைகள் தங்கள் ஜேர்மன் தோழர்களை பின்பற்றும் நிகழ்வு மட்டும் அல்ல இது. பலவிதங்களிலும் அவர்கள் சர்வதேச அளவில் உள்ள உடன்பாட்டாளர்களுக்கு வழிவகுத்துக் கொடுத்துள்ளனர். 1980-களின் கடைசி ஆண்டுகளில் தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட உடன், தேசிய செய்தி ஊடகக் குழுவின் கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு நினைவுறுத்தும் வகையில், பசுமைகள் டஸ்மேனியாவில் தொழிலாளர் கட்சியுடன் உடன்பாட்டைக் கொண்டிருந்தனர் என்றும் அந்நேரத்தில் மிகப்பெரிய பற்றாக்குறை வருமானத்திட்டத்தை கொடுத்து நாட்டின் வரலாற்றிலேயே மிகப் பெரிய பொதுநலச் செலவுக் குறைப்புக்கள் செய்யப்பட்டன என்பதையும் பொப் பிரெளன் தெரிவித்தார். மேலும் அவர் பெருமிதத்துடன் பசுமைகள் வரம்பின் வழி நின்றனர் என்றும் வலியுறுத்தினார். இந்த வரலாற்றை அவர் விவாதித்ததின் காரணமே பசுமைகள் மீண்டும் அவ்வாறு செய்யத் தயாராக உள்ளனர் என்பதைத் தெரிவிப்பதற்குத்தான்.

சோசலிஸ்ட் அலையன்சின் கருத்தின்படி, பசுமைகளுடைய நான்கு கொள்கைகளான சமூக நீதி, அமைதி, ஜனநாயகம், சுற்றுப்புறச் சூழலைக் காத்தால், "கொள்ளைமுறை முதலாளித்துவம்" இவற்றுடன் "குறைக்கமுடியாத பொருத்தமின்மை" இருப்பதாகக் கூறப்படுகிறது.

"இந்த முரண்பாடு இரண்டில் ஒரு வகையில் தீர்க்கப்படும்: விரைவிலோ, சற்று தாமதித்தோ உள்ளுணர்வால் உந்தப்பெற்று முதலாளித்துவ எதிர்ப்பு இலாப முறையின் கட்டாயங்களுக்கு உடன்படும் அல்லது அது நனவைக் கொண்டு, இலக்குடைய முதலாளித்துவ எதிர்ப்பைக் கொண்டு சொல்லில் மட்டும் என்றில்லாமல் செயலிலும் சோசலிசத்தைக் கொள்ளும்."[Green Left Weekly, October 6, 2004].

"சொல்லில் மட்டும் இன்றி, செயலிலும் சோசலிசம்" இந்தச் சில சொற்களே அனைத்துச் சந்தர்ப்பவாதப் போக்குகளின் நிலைப்பாட்டையும் சுருக்கமாகக் கூறுகின்றன; இவை வரலாற்று வழிவகையை ஏமாற்றும் தன்மை என்று மட்டும் இல்லாமல் நனவுபூர்வமாக போராட்டம் நடத்தாமல் சோசலிசம் அடையப்படலாம் என்றும் கூறுகின்றன. சொல்லில் இருந்து வெளிவராத செயற்பாட்டுச் சோசலிசம் என்பது இயலாது; ஏனென்றால் தொடர்ச்சியான விவாதம், எதிர்வாதம் போன்றவற்றால் உருவாக்கப்பட்ட அரசியல் வேலைதிட்டத்தைக் கொண்டுதான் சோசலிசம் ஏற்படுகிறது. சோசலிசம் என்பது சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பரந்துபட்ட இயக்கத்தினால் நனவுபூர்வமாக வெளிப்படுத்தப்படுவதன் மூலமே வளர்ச்சியுறும்; அவ்வாறு இல்லாவிடின் அதற்கு வளர்ச்சி இல்லை. தன்னியல்பான எழுச்சியுடைய முதலாளித்துவ எதிர்ப்பு உணர்வுகள் வெடித்து இப்பொழுதும் தோன்றும், வருங்காலத்திலும் தோன்றும்; ஆனால் இந்த உணர்வு, எதிர்ப்பு, மிகதீவிரமான போராட்டமுறையைக் கொண்டிருந்தாலும் முதலாளித்துவத்தை தூக்கி எறிவதற்கு அதனால் இயலாது.

ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பே பிரெடெரிக் ஏங்கல்ஸ் இந்தப் பிரச்சனையை ஆராய்வதற்கு எடுத்துக் கொண்டார். 1848 புரட்சிகளின் தோல்விகளைப் பற்றிப் பரிசீலனை செய்யும்போது, படிப்பினைகளை ஆராய்ந்து 1893ம் ஆண்டு, அக்காலத்தில் நிலவியிருந்த ஆதிக்கம் செலுத்திய கருத்துக்கள் இப்போது முற்றிலும் பொருத்தமானதாக இருக்கவில்லை என்று அவர் விளக்கிக் கூறினார்.

"நனவற்ற வெகுஜனங்களின் தலைமையில் நனவான நிறுபான்மையினரால் நடத்தப்படும் புரட்சிகளின் எதிர்பாரா தாக்குதல்களின் காலம் கடந்த காலத்தோடு முடிந்துவிட்டது. சமூக அமைப்பின் முழு மாற்றம் பற்றிய பிரச்சினை எழும்போது வெகுஜனங்களும் அதில் கட்டாயம் பங்கு பெறவேண்டும்;எது பணயம் வைக்கப்பட்டிருக்கிறது என்பதை ஏற்கனவே அவர்கள் கட்டாயம் நன்கு அறிந்திருக்கவேண்டும், உடலும் ஆவியுமாய் நாம் எங்கு சென்றுகொண்டிருக்கிறோம் என்பதை அவர்கள் அறிந்திருக்கவேண்டும். கடந்த 50 ஆண்டுகளின் வரலாறு அதைத்தான் நமக்குக் கற்பித்துள்ளது. ஆனால் இதை வெகுஜனங்கள் உணர்ந்து கொள்ளுவதற்கு, என்ன செய்யவேண்டும் என்று புரிந்து கொள்ளுவதற்கு, நீண்ட, அயராத பணி தேவை; இந்தப் பணியைத்தான் நாங்கள் இப்பொழுது செய்து கொண்டிருக்கிறோம்...."

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சீரழிவு

ஆனால், இந்த முன்னோக்கு எந்த அளவிற்கு சாத்தியமானது? என்ற கேள்வி எழுகிறது. அமெரிக்காவின் பூகோள மேலாதிக்கம் சோசலிசம் அடையப்படுவது முடியாது என்று ஆக்கிவிடவில்லையா? அது சோவியத் ஒன்றியத்தின் பொறிவின் வரலாற்று முக்கியத்துவம் இல்லையா?

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக்குழு அப்பொழுது மேற்கொண்ட ஆய்வை இப்பொழுது நினைவு கூருவோம். சோவியத் ஒன்றியத்தின் உடைவு சோசலிசத்தின் முடிவு என்றோ, முதலாளித்துவத்தின் வெற்றி என்றோ எடுத்துக் கொள்ளப்படாமல், போருக்கும் பின் நிலவியிருந்த பொருளாதார, அரசியல் ஒழுங்கு முறிந்து உலக முதலாளித்துவத்தின் முக்கிய முரண்பாடு மீண்டும் வெடித்துள்ளதாகத்தான் கொள்ளப்படவேண்டும்; அதாவது பூகோளரீதியாக வளர்ச்சி அடைந்த உற்பத்தி சக்திகளுக்கும் தேசிய-அரசிற்கும் இடையே உள்ள முக்கிய முரண்பாடு இது என்று அறியப்படவேண்டும் என நாங்கள் வலியுறுத்தினோம்..

இராணுவ வாத தன்மையை பெருகிய வகையில் அமெரிக்கா கடந்த 15 ஆண்டுகளில் கடைபிடிக்கும் முறை --இது ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷினால் ஆரம்பிக்கப்பட்டது அல்ல -- பெருந்திகைப்பு நிலையில் உள்ள முதலாளித்துவ சக்தி தன்னுடைய நலன்களில் உள்ள உள்முரண்பாடுகளுக்குத் தீர்வு காணும் வகையில் அமெரிக்காவை மற்ற அனைத்தின்மீதும் ஆதிக்கம் செலுத்தும் வகையில் தலைசிறந்த தேசிய-அரசாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிதான். இத்தகைய முன்னோக்கு சாத்தியமானதா? அமெரிக்கா ஒரு வகையான அமெரிக்கப் பேரரசை நிறுவமுடியுமா?; அப்படிப்பட்ட நிலையில் அதனை தூக்கி வீசுவதற்கான எந்த வாய்ப்புவளமும் வரலாற்றுரீதியாக பலனளிக்காது என்ற முடிவிற்கு நாம் வரவேண்டி இருக்கும். அல்லது இந்த முயற்சி பெரும் சமூக, அரசியல் எழுச்சிகளை ஏற்படுத்தி, மிக அடிப்படை கேள்வியான முதலாளித்துவ ஒழுங்குமுறையின் தொடர்ச்சியை கேள்விக்குள்ளாக்குமா?. இப்படித்தான் இப்பொழுதுள்ள நிலைமைகள் உள்ளன.

முதலில், நாம் இராணுவ நிலைமையைக் காண்போம். Foreign Affairs சமீபத்திய பதிப்பில் வெளிவந்துள்ள கட்டுரை ஒன்று, அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் பெரும் பிளவுகளுடைய சிந்தனைப் போக்கை சுருக்கிக் கூறுகிறது. இதை எழுதியவர்கள் ஈராக் படையெடுப்பு நடந்த 18 மாதங்களுக்கு பின்னர் அமெரிக்காவின் சட்ட நெறி பற்றிய தீவிரப் பிரச்சினை இன்னும் உள்ளது. இது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், அமெரிக்கா உலக அரசியல் ஒழுங்கு, நிலைத்த தன்மை இவற்றிற்கு பொறுப்பை எடுத்துக் கொண்டபோது இருந்த உணர்வில் இருந்து முற்றிலும் மாறுபட்டதன்மையை கொண்டுள்ளது. அமெரிக்காவிற்கு "அதிர்ச்சி தரக்கூடிய அளவில் நெறித் தன்மை" குறைந்து விட்டிருக்கிறது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

"செப்டம்பர் 11, 2001 தாக்குதலுக்கு முன்பே புஷ் நிர்வாகம் சர்வதேசச் சட்டங்கள் பற்றி ஆழ்ந்த ஐயத்தைத்தான் வெளிப்படுத்தியது. இந்நாட்டின் ஆயுதக் கட்டுப்பாடு, மற்றும் சர்வதேச பாதுகாப்புத் துறையின் துணை அரசுத்துறை செயலரான ஜோன் போல்டன் 1990 களின் கடைசிப் பகுதியில் "குறுகிய கால நலனுக்கு உகந்தது என்றாலும் சர்வதேசச் சட்டங்களுக்கு அதிக உண்மை மதிப்பீட்டை நாம் தருதல் என்ற பெரிய தவற்றினை செய்து விடக்கூடாது; ஏனென்றால் ஒரு நீண்டகால தன்மையில் சர்வதேச சட்டம்தான் உயர்ந்தது என்றால் நாம் அமெரிக்காவை கட்டிப்போட்டு வைக்கும் நிலைக்கு ஆளாவோம். இத்தகைய கருத்துத்தான் அடிப்படையில் முன்பு அமெரிக்கா மேற்கொண்டிருந்த நடவடிக்கைகளின் நெறியான தன்மைக்கு மாற்று முறையில் இகழ்வான போக்கை ஏற்படுத்தியது. ஆனால் இவை அனைத்தும் செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களுக்கு முன்பு காற்றில் துரும்பு போல் செல்வாக்கு அற்று இருந்தவை, அந்த நிகழ்விற்குப் பின்னர், அதற்கு விடையிறுக்கும் வகையில் புஷ் நடந்த கொண்டபோது புயலென வெளிப்பட்டு நின்றன.

"வாஷிங்டன் தன்னுடைய சட்ட விரோத நடவடிக்கைகளை சட்டத்திற்கு பணிந்து எடுக்கப்படும் நடவடிக்கை என்று, மிக எளிதான, கூடுதலான முறையில் நியாயப்படுத்தும் நிலையை எட்டியுள்ளதை, உலக மக்களுடைய கருத்து அறிந்து விட்டது என்பது வெளிப்படை" சொல் அலங்கார முறையிலும், ஓரளவு உண்மையிலும் சில நாடுகளை "போக்கிரி நாடுகள்" என்று கூறி அவற்றின் மீது படையெடுக்கும் கூறுபாடுகள் நிறைந்த தன்மைகள் பலவற்றை அமெரிக்காவே இப்பொழுது கொண்டுவிட்டது. அமெரிக்க அதிகாரத்தின் சட்ட வரம்பு முறை மிகக் குறைந்த அளவில் உள்ளது; அது புரையோடி உள்ளது; ஈராக்கில் இருந்து வெளிவெரும் சித்திரவதை செய்திகள் பரந்து வெளிப்படும்போது, அது மிகப் பெரிய வடிவில் அதைக் கண்டிக்கும் வெறுப்பாகவும் வந்துள்ளது; மொத்தத்தில் சட்ட நெறி மறைந்து விட்டது போலத்தான் ஏற்பட்டுள்ளது."

இந்த ஆசிரியர்களின் கருத்தின்படி, மீண்டும் பழைய பாதைக்குச் செல்வது என்பது எளிதல்ல. ஏனெனில் அவ்வாறு வருவதற்கு சட்டபூர்வ நடத்தை தேவை. இதையொட்டி ஒரு வினா எழுகிறது: முதற்கண் ஏன் சட்டபூர்வ நெறி கைவிடப்பட்டது? அமெரிக்கா தன்னுடைய நிலைமையை பழைய வடிவமைப்பிற்குள், இரண்டாம் உலகப்போருக்குப் பின் இருந்த வடிவமைப்பிற்குள் இருந்து தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை என்பது இதனால் வெளியாகவில்லையா?

அமெரிக்காவின் சர்வதேச நிலை பற்றிய கவலைகள் பென்டகானிலேயே காணப்படுகின்றன. கடந்த செப்டம்பர் மாதம் பாதுகாப்பு விஞ்ஞானத் துறையினால் தயாரிக்கப்பட்டு, இப்பொழுதுதான் வெளியிடப்பட்டுள்ள "மூலோபாய தொடர்பு முறைகள்" என்ற அறிக்கை, "அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்ட சிந்தனைகள் பற்றிய போர், அல்லது உள்ளத்தையும் அறிவையும் ஈர்க்கும் போராட்டங்கள் தோல்வியில் முடிந்துவிட்டன; அவை இப்பொழுது எதிர்பார்த்ததற்கு முற்றிலும் மாறான விளைவுகளைக் கொடுத்துள்ளன."

"சிந்தனைக்கான பூகோள மற்றும் தலைமுறையான போராட்டங்களில் அமெரிக்கா" இப்பொழுது ஈடுபட்டுள்ளது என்றும், அது இதில் விரைவாகத் தோற்றுக் கொண்டிருக்கிறது என்றும், "உலகம் முழுவதும் காணப்படும் சீற்றமும், அதிருப்தியும் அமெரிக்கா தன்னுடைய இலக்குகளை அடைவதற்குக் கொள்ளும் வழிவகைகள் மீதான அமெரிக்காவின் கறைபடிந்த நம்பிக்கையீனத்தின் மீது காட்டப்படுகின்றன. அமெரிக்க அதிகாரம் தன்னுடைய நெருக்கடியை உணர்ந்து கொள்ளவேண்டும் என்ற பொதுக் கருத்து உள்ளது." அறிக்கை எழுதிய ஆசிரியர்களின் அக்கறையை, அவர்களுடைய எஜமானர்கள் புரிந்து கொள்ளாவிட்டாலும் அவர்களாவது இராணுவ வலிமை ஒன்று மட்டுமே பூகோள ஆதிக்கத்தை அடைவதற்குப் போதாது என்பதை உணர்ந்துள்ளனர் என்பதைத் தெளிவாக்குகிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் வெளிப் பூசல்கள், முரண்பாடுகள் ஆகியவற்றால் தாக்கப்பட்டுள்ளது என்றால், நாட்டின் உள் நிலைமை ஒன்றும் சிறந்து விளங்கிவிடவில்லை. அரசியலளவில் மக்கள் ஆழ்ந்த பிளவைக் கொண்டுள்ளனர். ஆளும் கன்னையானது அச்சம், ஒருதலைப்பட்ச பரிவு உணர்வு, சமயப் பிற்போக்குத் தன்மை இவற்றின் கலவையைக் கொண்டு தன்னைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் இதன் எதிரிகளிடையே கோபம், ஏமாற்றம், கசப்புத்தன்மை, குழப்பம் ஆகியவை மலிந்துள்ளன. தேர்தல் முடிவேகூட பெரும்பாலான மக்களுக்கு அவர்கள் தங்கள் அரசியல் கருத்துக்கள் பற்றி தீவிர ஆய்வைக் கொள்ளவேண்டும் என்றும் ஒரு அரசியல் மாற்றீட்டுக்கான தேடலை ஏற்படுத்தவேண்டும் என்ற உணர்வையும் தந்துள்ளது.

இறுதியாக, ஆனால் குறைந்த தன்மையற்றதன்று எனக்குறிப்பிட வேண்டியது, பொருளாதாரச் சூழ்நிலையாகும். உலக முதலாளித்துவ முறையின் முரண்பாடுகளை, தன்னை உலகத்தின் பெருங்காவலர் என நிறுவிக்கொள்ளும் முறையில் தீர்த்துவிடலாம் என்று அமெரிக்க ஏகாதிபத்தியம் கருத்திக் கொண்டுள்ளது. ஆனால் இந்த பணியை, ஆழ்ந்த பொருளாதார வலுவற்ற தன்மையில் மேற்கொள்ள முயலுகின்றது. நாள் ஒன்றிற்கு குறைந்தது 2.6 பில்லியன் டாலர் பணவரத்தாவது இருந்தால்தான் அமெரிக்க நிதிநிலை தக்கவைத்துக் கொள்ளப்பட முடியும் என்ற நிலை உள்ளது. 1980-ல் சோவியத் ஒன்றியம் சரிந்தபோது அமெரிக்கா இன்னமும் நிகரத்தில் கடன் கொடுக்கும் நாடாகத்தான் இருந்தது. இன்று அது உலகிலேயே மிகப் பெரும் கடனாளி நாடாக உள்ளது. உலகத்தின் வணிக சமநிலைத் தொகையில் நான்கில் மூன்று பங்கு அமெரிக்காவிற்குள் புகுத்தப்பட்டால்தான் அமெரிக்கா நிதியியல் முறையில் மூழ்காமல் தப்ப முடியும்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் அமெரிக்கா அடைந்திருந்த முக்கியத்துவம் அதன் நிதி முறை, உயர்ந்த உற்பத்தி முறைகள் ஆகியவற்றால் ஏற்பட்டிருந்தது. இன்று அமெரிக்க நிதி நிலைமை ஆசிய மத்திய வங்கிகளின் டாலர் வாங்கும் திறனை நம்பியுள்ளது; அப்பொழுதுதான் அமெரிக்க நாணய முறையும் அதன் உயரேற்ற வட்டிவிகித சரிவுகளும் தடுக்காமல் காப்பாற்றப்படும்.

கடந்த 200 ஆண்டுகளாக வரலாற்று ஆசிரியர்கள் ரோமானியப் பேரரசின் சரிவு வெளிக் காரணங்களாலா அல்லது பெருகிய பொருளாதாரப் பிரச்சினைகளாலா அல்லது வளர்ந்துவிட்டிருந்த சமுதாய வர்க்கப் பிரச்சினைகள் ரோமிலேயே தோன்றியதாலா என ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். அமெரிக்காவை பொறுத்தவரையில், உலகப் பேரரசை நிறுவுவதற்கு முன்பே இந்த வழிவகைகள் அனைத்துமே உறைந்துள்ளன.

பல தீவிர போக்குகள் இந்த பூகோளமயமாக்கல் நிகழ்ச்சிபோக்கை, அமெரிக்கா தன்னுடைய ஆதிக்கத்தை உலகின் மற்ற பகுதிகள் மீது செலுத்துவதற்காகச் செய்ததாகச் சித்தரித்துக் காட்டுகின்றன. உண்மையில் இந்த வழிவகைகள் அமெரிக்க அதிகாரத்தை சர்வதேச அளவில் குறைமதிப்பிற்கு உட்படுத்தி, உள்நாட்டிலும் பரந்த சமூக சமத்துமின்மையை பெருக்கிவிட்டன. வேறுவிதமாகக் கூறினால், இன்று உலகத்தை கவ்வியிருக்கும் சமூக, அரசியல் பூசல்கள் அமெரிக்காவில்தான் தங்களுடைய தீவிரமான வெளிப்பாட்டை முதலில் காட்டுகின்றன.

பொருளாதர பலத்தில் அமெரிக்கா மதிப்புக் குறைந்துள்ள நிலை பிரமாண்டமான வரலாற்று முக்கியத்துவம் கொண்டது ஆகும்; ஏனென்றால் இறுதிப்பகுப்பாய்வில் இந்த சக்திதான் முதலாளித்துவ முறையை உலகெங்கிலும் இருபதாம் நூற்றாண்டில் ஆதிக்கம் செலுத்த வைத்தது. இனி அவ்வாறு இருக்கப்போவதில்லை. ஒரு புதிய புரட்சிகரப் போராட்டங்களின் காலம் தொடங்கிவிட்டது; அதற்கான தயாரிப்புக்கள் தேவை. அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் நடைபெற்ற தேர்தல்கள் ஒரு சர்வதேச முறையில் பிரதிபலிப்பு என்று கொள்ளப்படலாம்; அரசியல் பிளவுகள் பெரும் கட்சிகளுக்கிடையே என்று இல்லாமல் அதிகாரபூர்வமான அரசியல் நடைமுறைக்கும் பெரும்பாலான வெகுஜனங்களுக்கும் இடையே உள்ள பிளவு என்று கொள்ளப்படவேண்டும். ஒரு புரட்சிகரமான சோசலிச மாற்றீட்டினை கட்டும் பணியை முன்னெடுக்க அரசியல் நிலைமைகள் இனிவரும் காலங்களில் பெரும் வாய்ப்புக்களை அளிக்கவுள்ளன.

See Also :

2004 தேர்தலுக்குப் பின்னர்: சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்குகளும் பணிகளும்

Top of page