:
ஆசியா
:
இலங்கை
Sri Lankan government rejects LTTE call
for peace talks
இலங்கை அரசாங்கம் சமாதான பேச்சுக்களுக்கான தமிழீழ விடுதலைப் புலிகளின் அழைப்பை
நிராகரிக்கின்றது
By Sarath Kumara
13 December 2004
Use this version
to print |
Send this link by email |
Email the author
இலங்கை அரசாங்கம், சமாதானப் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கான தமிழீழ
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அழைப்பை நிராகரித்துள்ளது. இதன் மூலம் அதிகளவில்
ஆட்டம் கண்டுபோயுள்ள தற்போதைய யுத்த நிறுத்த உடன்படிக்கை முற்றிலுமாக பொறிந்து விழுவதற்கான
அச்சுறுத்தல் அதிகரித்து வருகின்றது.
பிரபாகரன் நவம்பர் 27 அன்று தனது வருடாந்த மாவீரர் தின உரையில் இந்த அழைப்பை
விடுத்தார். விடுதலைப் புலிகளால் எந்தவொரு தீர்வும் இல்லாத அல்லது பேச்சுக்களில் நம்பிக்கையின்றி "ஒரு
அரசியல் வெறுமைக்குள்" தொடர்ந்தும் சிறைப்பட்டிருக்க முடியாது எனவும் எல்லைக் கோட்டை அண்மித்துவிட்டதாகவும்
அவர் எச்சரிக்கை விடுத்தார். தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்கான
விடுதலைப் புலிகளின் பிரேரணையின் அடிப்படையிலான பேச்சுக்களுக்கு அவர் அழைப்புவிடுத்ததுடன், "சமாதான முன்னெடுப்புகள்"
மீள ஆரம்பிக்கப்படாவிடில் ஆயுத மோதலுக்கு திரும்ப வேண்டிவரும் எனவும் அவர் சமிக்ஞை செய்தார்.
எவ்வாறெனினும், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இந்த அழைப்பை உறுதியாக
நிராகரித்து விட்டது. அரசாங்கம் டிசம்பர் 1 திகதி வெளியிட்ட ஒரு அறிக்கையில்: "ஒரு தனி விடயம் பற்றி
ஒருதலைப்பட்சமாக வலியறுத்துவதன் மூலம், தாங்களாகவே நிபந்தனைகளை முன்வைக்கும் அதே வேளை, நிபந்தனைகளின்றி
பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிக்குமாறு இப்போது அச்சுறுத்தும் பாஷையில் விடுதலைப் புலிகள் விடுத்துள்ள அழைப்பானது,
நல்ல நம்பகமான பேச்சுவார்த்தைக்கு போதுமானதல்ல," எனக் கூறியது.
இடைக்கால நிர்வாக சபை பற்றிய எந்தவொரு பேச்சுவார்த்தையும் இறுதி அரசியல்
முடிவு பற்றிய பேச்சுவார்த்தையுடன் இணைக்கப்பட வேண்டும் என சுதந்திரக் கூட்டமைப்பு கூறுகின்றது.
எவ்வாறெனினும், அரசாங்கமானது நாட்டின் நீண்ட உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான
கொடுக்கல் வாங்கல்களுக்கு எந்தவொரு பிரேரணையையும் முன்வைக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக,
இடைக்கால நிர்வாக சபையை இருத்தித் தீர்வுடன் இணைப்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதானது, வடக்கு
கிழக்கை நிர்வகிப்பதற்கான விடுதலைப் புலிகளின் கோரிக்கையை நிராகரிப்பதற்கு சமமானதாகும். 2002
பெப்பிரவரியில் யுத்த நிறுத்த உடன்படிக்கையை கைச்சாத்திட்டதுடன் தனித் தமிழ் அரசுக்கான தனது
கோரிக்கையையும் கைவிட்டதற்காக மிகச் சிறிதளவு நன்மையே விடுதலைப் புலிகளுக்கு கிட்டியது.
ஏப்பிரல் தேர்தல்களுக்கு முன்னதாக, ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் அவரது
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் (ஸ்ரீ.ல.சு.க) மற்றும் அவரது பங்காளிகளான மக்கள் விடுதலை முன்னணியும்
(ஜே.வி.பி), விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தையில் நாட்டைக் காட்டிக் கொடுப்பதாக ஆளும் ஐக்கிய
தேசிய முன்னணியை கண்டனம் செய்தனர். ஆயினும், தேர்தலில் வென்ற பின்னர், குமாரதுங்க தானே
விமர்சனத்திற்குள்ளாக்கியிருந்த "சமாதான முன்னெடுப்புகளை" மீள ஆரம்பிக்க முயன்றார். அதன் மூலம் சுதந்திர
முன்னணிக்குள்ளேயே பிளவுகள் வெடிக்கத் தொடங்கியது.
கடந்த எட்டு மாதங்களாக பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க
மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இடைக்கால நிர்வாக சபைக்கான விடுதலைப் புலிகளின் கோரிக்கையால் மீண்டும்
மீண்டும் தோல்விகண்டது. தன்னாட்சி அதிகார சபை பிரேரணை, "ஒற்றை ஆட்சியை" அதாவது சிங்கள பெளத்த
மேலாண்மைக்கு குழிபறிக்கும் அச்சுறுத்தலை தோற்றுவிப்பதனால் ஜே.வி.பி அதை நிராகரிக்கின்றது. முட்டுச் சந்து
தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், ஒப்பீட்டளவில் சிறியளவிலானாலும் ஆயுத மோதல் தீவிரமாக அதிகரித்து
வருகின்றது. குறிப்பாக கருணா என்றழைக்கப்படும் வீ. முரளீதரன் தலைமையிலான ஒரு குழு இந்தாண்டு ஆரம்பத்தில்
விடுதலைப் புலிகளில் இருந்து பிளவடைந்து சென்ற கிழக்குப் பிராந்தியத்தில் இந்த மோதல்கள் தீவிரமடைந்து
வருகின்றன.
பகிரங்கமாக யுத்ததிற்கு வக்காலத்து வாங்காத அதே வேளை, சுதந்திர முன்னணி
அரசாங்கம் மோதலுக்கு தயாராகி வருகின்றது. கடந்த திங்கழன்று, பிரதி பாதுகாப்பு அமைச்சர் ரட்னசிறி
விக்கிரமநாயக்க, பாதுகாப்பு நிதியை மேலும் அதிகரிப்பதை ஆதரித்து ஆரவாரமான தேசாபிமான உரையை
நிகழ்த்தினார். "மனித சக்தி, பொருள், கருத்து மற்றும் ஆயுதங்களால் நாம் ஆயுதப் படைகளை
சக்திபடுத்துவோம்.... இந்த ஒப்புயர்வற்ற நாட்டுக்கு எதிரான எந்தவொரு அச்சுறுத்தலையும் நாம் சந்திக்கத்
தயார்," என அவர் பிரகடனம் செய்தார்.
தமது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர்கள்
உற்சாகமாக மேசையில் தட்டினர். ஜே.வி.பி தலைவர்களில் முன்னணி வகிப்பவரான நந்தன குணதிலக, நவம்பர்
கடைப்பகுதியில், தன்னாட்சி அதிகாரசபை பற்றிய பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படுமானால் விவகாரங்களை தனது கட்சி
அதனது சொந்தக் கைகளில் எடுத்துக்கொள்ளும் என சமிக்ஞை செய்தார். "தன்னாட்சி அதிகாரசபை மூலம்
நாட்டை பிரிப்பதற்கு எதிராக தெற்கில் உள்ள இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினால் விடுதலைப் புலிகளுக்கு சார்பான
தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதற்கு பொறுப்புச் சொல்ல வேண்டும்," என எச்சரித்தார். ஜாதிக ஹெல உறுமய
போன்ற ஏனைய சிங்களப் பேரினவாத அமைப்புகளும் இதே மாதிரியான அச்சறுத்தல்களை விடுத்துள்ளன.
இராணுவச் செலவை 56 பில்லியன் ரூபாய்களால் (541 மில்லியன் அமெரிக்க
டொலர்கள்) அல்லது கடந்த ஆண்டிலும் பார்க்க 8 வீதத்தால் அதிகரித்துள்ள பாதுகாப்பு வரவு செலவுத் திட்டம்,
140 அறுதிப் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேறியது. தமிழ் கூட்டமைப்பும் மற்றும் இரண்டு சுயாதீன தமிழ்
பாராளுமன்ற உறுப்பினர்களும் மட்டுமே பாதுகாப்புக்கான நிதி அதிகரிக்கப்படுவதை எதிர்த்தனர்.
எதிர்க் கட்சியான ஐக்கிய தேசிய முன்னணி (ஐ.தே.மு) பாதுகாப்பு நிதி
ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக வாக்களித்தது. டிசம்பர் 5 அன்று கருத்துத் தெரிவித்த ஐ.தே.மு தலைவர் ரணில்
விக்கிரமசிங்க, "இலங்கை தவிர்க்க முடியாத வகையில் யுத்ததை நோக்கி தள்ளப்படுகிறது" என பிரகடனம்
செய்தார். "சமாதானப் பேச்சுக்களை நோக்கி முன்செல்லத்" தவறியமைக்காக சுதந்திர முன்னணியை
குற்றம்சாட்டிய அதே வேளை, அவர் யுத்தத்திற்கான அரசாங்கத்தின் தயாரிப்புகளை ஆதரிக்காமலில்லை.
நோர்வே விசேட தூதுவர் எரிக் சொல்ஹெயிம் இருசாராருடனும் மேலதிக
பேச்சுக்களுக்காக இன்று கொழும்பு வரவுள்ளார். உயர் மட்ட நோர்வீஜிய பிரதிநிதிகள் குழு எந்தவொரு
முன்னேற்றத்தையும் காண்பதில் தோல்விகண்டதை அடுத்து சற்றே சில வாரங்களின் பின்னர் விஜயம் மேற்கொள்ளும்
சொல்ஹெயிமால் நெருக்கடியைத் தகர்க்க முடியும் என எவரும் நம்பிக்கை தெரிவிக்கவில்லை. பிரான்ஸ் செய்திச்
சேவை கொழும்பில் ஒரு பிரதிநிதியின் நம்பிக்கையிழந்த பிரகடனத்திலிருந்து மேற்கோள் காட்டியிருந்தது: "இந்த
விஜயம், ஏதாவதொரு வகையில் தொடர்பை பேணிக்கொள்ளும் ஒரு முயற்சியாக மாதா மாதம்
மேற்கொள்ளப்படும் ஒரு வழக்கமான பயிற்சியாக கணிக்கப்படுகிறது," என்பதே அந்த மேற்கோளாகும்.
வடக்கு கிழக்கில் பதட்ட நிலைமைகள் அதிகரிக்கின்றன. டிசம்பர் 2 அன்று, இலங்கை
இராணுவம், யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதிலிருந்து முதற் தடவையாக, வடக்கின் யாழ்ப்பாணக்
குடாநாட்டையும் தெற்கையும் இணைக்கும் பிரதான பாதையான ஏ 9 பாதையை ஒருதலைப்பட்சமாக மூடியது.
கடந்த இரு வருடங்களாக, இந்தப் பாதையூடான பயணத்திற்கு தடங்கல் ஏற்படுத்தும் எந்தவொரு தீர்மானமும்
விடுதலைப் புலிகளுடன் கலந்துரையாடப்பட்டே எடுக்கப்பட்டது. இராணுவம் வவுனியாவிலும் மற்றும் மன்னாரிலும்
விடுதலைப் புலிகளால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டங்களில் மக்கள் கலந்து கொள்வதை தடுப்பதற்கு இந்தப்
பாதையை மூடுவது அவசியமாகியிருந்ததாக வலியுறுத்தியது.
டிசம்பர் 3, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலான யாழ்ப்பாண குடாநாட்டின் கிழக்குப்
பகுதியான வடமராட்சிக்கு மின்சார ஜெனரேட்டர்களை கொண்டுசெல்வதை இராணுவம் தடுத்தது. கிராமத்தவர்கள்
இவற்றை சமய சம்பந்தமான விழாக்களுக்கும் திருமணம் போன்ற ஏனைய பொது நிகழ்வுகளுக்கும் பயன்படுத்துகின்றனர்.
கடந்த திங்கழன்று, யாழ்ப்பாணத்தில் உள்ள சக்தி ஒளிபரப்பின் கிளை நிலையத்துக்குள் நுளைந்த "அடையாளந்தெரியாத
ஒரு கும்பல்" கட்டிடத்தின் முன்பகுதியை சேதப்படுத்தியது. அரசாங்கமும், இராணுவமும் மற்றும் ஏனைய சிங்களத்
தீவிரவாதக் குழுக்களும் இந்த நிலையத்தை விடுதலைப் புலிகளுக்கு சார்பானதாகக் கருதுகின்றன.
கிழக்கில், டிசம்பர் 7 அன்று விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அரசியல்துறை அலுவலகத்திற்கு
நான்கு கைக்குண்டுகள் வீசப்பட்டன. இந்த குண்டுத் தாக்குதல் கருணா குழுவின் செயல் எனக் குறிப்பிடப்படுகிறது.
அதே தினம், விடுதலைப் புலிகளுக்கு எதிரான மற்றும் இலங்கை இராணுவத்துடன் தொடர்புகள் வைத்துள்ள ஒரு
ஆயுதக் குழுவான தமிழீழ விடுதலை அமைப்பின் (டெலோ) அரசியல் காரியாலயத்திற்கும் குண்டு வீசப்பட்டது.
வியாபாரத் தலைவர்கள், நாடு மீண்டும் யுத்தத்தை நோக்கி தடம்புரள்வதையிட்டு
தமது பீதியை வெளிப்படுத்தியுள்ளனர். யுத்த நிறுத்தத்திற்காகவும் மற்றும் அரசியல் தீர்வுக்காகவும் நெருக்குவாரம்
கொடுத்த இந்த வியாபாரத் தலைவர்கள், மீண்டும் மோதல் வெளிப்பட்டால் வெளிநாட்டு முதலீடுகள் துரிதமாக
காய்ந்து போகும் என அவர்கள் கவலைகொண்டுள்ளனர்.
நவம்பர் கடைப் பகுதியில், இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் தேவா
ரொட்ரிகோ, சமாதானப் பேச்சுக்கள் தாமதமாவதையிட்டு கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தைக்
குற்றம்சாட்டினார். "தன்னாட்சி அதிகாரசபையை நிராகரிப்பதன் மூலம் தெற்கில் உள்ள அரசியல் கட்சிகள் சமாதானத்தை
ஆபத்துக்குள்ளாக்குகின்றன," என அவர் எச்சரிக்கை செய்தார். அதே கருத்தரங்கில் இருந்த பெண் வர்த்தகரான
நீலா மறிகார்: "இலங்கை (அரசியல்) கட்சிகளுக்கு இன்னமும் ஒரு நம்பகமான தீர்வு கிடையாது," என பிரகடனம்
செய்தார்.
கொழும்பில் உள்ள வர்த்தகப் பிரபுக்கள், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதன்
பேரில் சிங்கள பேரினவாதத்திற்கு தசாப்தங்களாக ஊக்கமளித்து வந்துள்ளனர். தமது இலாபங்களை பற்றி கவலைப்படும்
இந்த வர்த்தகப் பிரபுக்கள், தங்களது ஆதரவுடன் உருவாக்கப்பட்ட அழிவுக்கு முடிவுகட்டுவதற்கு அவர்களது அரசியல்
சேவகர்களிலும் பார்க்க இலாயக்கானவர்களல்ல.
Top of page |