WSWS
:Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு :
ஈராக்
Bush rules out any delay in bogus Iraqi
election
மோசடியான ஈராக் தேர்தல் எவ்வித்திலும் தாமதப்படுத்துவதை புஷ் நிராகரிக்கின்றார்
By Peter Symonds
6 December 2004
Back to screen version
ஜனவரி 30ல் திட்டமிடப்பட்டுள்ள ஈராக்கிய தேர்தல் ஏற்பாடுகள் ஆரம்பமாவதற்கு
முன்னரே ஈராக் மக்களுக்கு ஜனநாயகத்தை கொண்டு வருவதற்கும் அத்தேர்தலுக்கும் சம்மந்தமில்லை என்பது தெளிவாகிவிட்டது.
வாக்குப்பதிவு தேதிகூட வாஷிங்டனில் முடிவு செய்யப்பட்டு வருகிறது. ஈராக்கிற்குள்ளேயிருந்து
தேர்தலை தள்ளிவைக்க வேண்டுமென்று விடுக்கப்பட்டு வருகின்ற கோரிக்கைகளை சென்ற வியாழனன்று வெள்ளை மாளிகையில்
நிருபர்களுக்கு பேட்டியளித்த ஜனாதிபதி புஷ் அப்பட்டமாக தள்ளுபடி செய்திருக்கிறார். ''ஈராக் மக்கள் வாக்குப்பதிவில்
கலந்துகொள்ள வேண்டிய நேரமிது'' என்று அறிவித்தார்.
''ஒரு சமூகம் கொடுங்கோன்மையிலிருந்து, சித்திரவதையிலிருந்து பாரிய கல்லறைகயிலிருந்து
மாறி அந்த மக்கள் வாக்குச்சீட்டில் தங்களது விருப்பங்களை தெரிவிக்கின்ற அளவிற்கு மிக விரைவாக சமுதாய மாற்றம்
ஏற்பட்டிருப்பதை வரலாற்றில் ஏராளமான மக்கள் வியப்போடு நோக்குகின்ற சந்தர்ப்பங்களில் ஒன்று'' என்று அவர்
மேலும் அறிவித்தார்.
அங்கே கூடியிருந்த ஊடகப் பிரதிநிதிகள் எவரும் புஷ் கருத்தின் முட்டாள்த்தனத்தை எடுத்துக்காட்டவில்லை
என்பது குறிப்பிடத்தக்கது. ''கொடுங்கோண்மை, சித்திரவதை மற்றும் பாரியகல்லறைகள்'' என்பதுதான் ஈராக்கில் அமெரிக்க
ஆக்கிரமிப்பின் நீக்கமற நிறைந்திருக்கும் ஓர் அங்கமாகவுள்ளதுடன், இதுதான் அமெரிக்க இராணுவம் ஈராக்கில் இருப்பதற்கு
அந்த மக்களிடையே எதிர்ப்பை கிளறிவிடுகின்ற முக்கியமான காரணங்களாகும். மிக அண்மைக்காலத்தில் அமெரிக்கா
புரிந்துள்ள மிகப்பெரிய அட்டூழியமான, பல்லூஜா நகரத்தை தரைமட்டமாக்கி, போராளிகளையும் பொதுமக்களையும்
பல்லாயிரக்கணக்கில் கொன்று குவித்ததை தொடர்ந்து தேர்தல் தேதி முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
வெள்ளை மாளிகையை பொறுத்தவரை, தேர்தலுக்கான அத்தியாவசிய முன்னேற்பாடு மேலும்
12,000 அமெரிக்க துருப்பக்களை ஈராக்கிற்கு அனுப்பி ஆயுதந்தாங்கிய போராளிகளை ஒடுக்க அமெரிக்க இராணுவ
நடவடிக்கைகளை ஊக்குவிப்பதும், பாரியளவில் எதிர்ப்பு தெரிவித்துவரும் மக்களை அச்சுறுத்துவதும்தான். அமெரிக்க இராணுவ
ஆக்கிரமிப்பின் கீழ் ஈராக் மக்கள் ஒரு வாக்குச்சீட்டில் ''தங்களது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்ள முடியும்'' மற்றும்
அமெரிக்க அதிகாரிகள் சோதனையிட்டு கண்காணித்து அனுமதிக்கின்ற வேட்பாளர்களும் கட்சிகளும்தான் கலந்துகொள்ளமுடியும்.
நாட்டின் 18 மாகாணங்களில் மூன்றில் சண்டை மிகத்தீவிரமாக நடந்து கொண்டிருப்பதால்,
ஜனவரி 30 வாக்குப்பதிவிற்கான முன்னேற்பாடுகள் ஆரம்பமாகவில்லை. வடக்கு நகரமான மோசூல், நவம்பர் நடுவில்
கிளர்ச்சிக்காரர்கள் குறிப்பாக தாக்குதல்களில் ஈடுபட்டு, காவல் நிலையங்களையும், முக்கிய அரசாங்கக் கட்டடங்களையும்
கைப்பற்றிக்கொண்டதால், வாக்காளர் பதிவுப்பட்டியல்களும், இதர தேர்தல் சாதனங்களும் அழிக்கப்பட்டுவிட்டன.
நடைபெறவிருக்கும் தேர்தலில் ''போதுமான அளவிற்கு தேவையான'' பாதுகாப்பு
ஏற்பாடுகள் செய்யப்படும் என்று சென்ற வாரம் அமெரிக்கத் தூதர்
John Negroponte
ஊடகங்களுக்கு உறுதியளிக்க முயன்றார். என்றாலும், கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக அமெரிக்கப்படைகள் மற்றும்
ஈராக் அரசாங்க போலீஸ் மற்றும் துருப்புக்கள் மீது அலைபோன்ற தாக்குதல்கள் நடைபெற்றதால் 80 க்கு மேற்பட்ட
மக்கள் மடிந்திருக்கின்றனர். சனிக்கிழமையன்று வெடி மருந்துகளால் நிரப்பப்பட்ட கார் ஒன்று அரசாங்கப்படைகளுக்கு
உதவுவதற்காக மோசூலுக்கு குர்திஸ் குடிப்படைவீரர்களை ஏற்றிக்கொண்டு சென்ற சிறிய பஸ் மீது மோதிய
படுபயங்கரமான சம்பவத்தால் குறைந்தபட்சம் 18 பேர் கொல்லப்பட்டனர்.
சனிக்கிழமையன்று பிரசுரிக்கப்பட்டுள்ள ஒரு டச்சு செய்தி பத்திரிகைக்கு பேட்டியளித்த
ஐக்கிய நாடுகள் சபை சிறப்புத் தூதர் Lakhdar Brahim
''ஈராக்கில் இப்போது ஒரு பெரும் குழப்பம்'' நிலவுகிறது என்று அப்பட்டமாக எச்சரித்தார். தேர்தல்களை நடத்த
முடியுமா? என்று அவரிடம் கேட்கப்பட்டபோது ''இப்போதுள்ள சூழ்நிலை நீடித்துக் கொண்டிருக்குமானால், அதை நடத்த
முடியும் என்று நான் நினைக்கவில்லை'' என்று பதிலளித்தார். ''சர்வதேச சமூகம்'' மற்றும் அமெரிக்காவும், ''இந்த
குழப்பத்தை தீர்த்துவைக்க உதவவேண்டும். நிலவரம் இப்படியே நீடிக்க அனுமதித்து அது மோசமடையுமானால், அது
இன்னும் பேராபத்தாக மாறிவிடும்'' என்று அவர் கூறினார்.
பிராஹிமியின் கருத்துக்கள் குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றிய ஆளும் வட்டாரங்களின்
கவலைகளான ஈராக் நிலவரம் கட்டுப்பாடுகளை மீறி மோசடைந்து வருவதை எதிரொலிப்பதாக அமைந்திருக்கிறது.
இந்தச் சூழ்நிலைகளில் தேர்தல்கள் நடத்தப்படுமானால் நாட்டில் ஸ்திரத்தன்மையை உருவாக்குவதற்கு பதிலாக
ஈராக்கிற்குளேயும், வெளியிலும் அந்தத் தேர்தல் சட்ட விரோதமானது என்று பரவலாகக் கருதப்படும்.
நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதமாக உள்ள சுன்னி சிறுபான்மையினரிடையே
தேர்தல் நடத்துவதற்கான எதிர்ப்பு மிகத்தெளிவாகத் தெரிகிறது. இந்த வாரக்கடைசியில், 40 கட்சிகளைச்சார்ந்த
பிரதான சுன்னித்தலைவர்கள் ''தவறான தேர்தல்கள், தகராறுக்குரிய முடிவுகள்'' என்ற ஸ்லோகத்தின் கீழ் ஒரு
கூட்டத்தில் தேர்தல்களை தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. ஈராக்கின் தேசிய கூட்டணிக்கட்சி
தலைவரான Tawfik al Yassri
ஊடகங்களுக்கு பேட்டியளித்தபோது ''நிலவரம் படுமோசமாக இருக்கிறதென்று நான் இரு தரப்பையும்
எச்சரிக்கிறேன்.'' இந்தத்தேர்தல் சட்டவிரோதமானது என்று கருதப்படுமானால், அதுதான் உள்நாட்டுப் போருக்கான
முதல் வித்தாகும்'' என்று குறிப்பிட்டார்.
முஸ்லீம் அறிஞர்கள் சங்கம் ஈராக் துர்க்கோமென் இயக்கம் மற்றும் கிறிஸ்தவ ஜனநாயகக்
கட்சி உட்பட பல்வேறு கட்சிகள் ஒரு அடிமேலே சென்று வாக்குப்பதிவை புறக்கணிக்க வேண்டும் என்று
அழைப்புவிடுத்திருக்கிறது.
இப்படி புறக்கணிப்பு அறிவிப்பை சென்ற வாரம்
Negroponte
அக்கறையின்றி தள்ளுபடி செய்தார், அத்தகைய கட்சிகளை தேர்தலில் இருந்து ஒதுக்கிவிடுவோம் என்று எச்சரித்துள்ளார்.
''தங்களது நாட்டிற்கு எதிர்கால அரசியல் வடிவங்களை தருவதற்கும், அரசியல் சட்ட நகலை உருவாக்குவதற்கும் ஒரு
தேசிய நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுப்பதற்கான ஒரு தேர்தல் நடைமுறையிலிருந்து அவர்கள் உண்மையிலேயே
ஒதுங்கிக்கொள்ள விரும்புகிறார்களா?'' என்று அவர் சிக்காகோ டிரிபியூனுக்கு தந்துள்ள விமர்சனத்தில்
குறிப்பிட்டிருக்கிறார். ''தேர்தல்கள் திட்டமிட்டப்படி முன்னேறிக் கொண்டிருக்கின்றன என்பதை அவர்கள் உணர்ந்து
கொண்டதும், உண்மை நிலவரத்தை அவர்கள் சமாளித்தாக வேண்டும்'' என்றும் அவர் குறிப்பிட்டார்.
என்றாலும் அமெரிக்க எந்தப் புறக்கணிப்பையும் சீர்குலைப்பதற்கு தன்னால் முடிந்த அனைத்து
நடவடிக்கைகளையும், எடுத்துவருகிறது. அமெரிக்கா நியமித்துள்ள பொம்மைத்தலைவர்களான-- ஈராக் இடைக்கால
பிரதமர் இயத் அல்லாவி மற்றும் ஜனாதிபதி Ghazi
al-Yawar இருவரும் தேர்தல்களையும், நடப்புவாக்குப்பதிவு
தினத்தையும் ஆதரித்து அறிக்கைகளை வெளியிட்டு இருக்கின்றனர். சென்றவாரம் அல்லாவி ஜோர்தானுக்கு விஜயம் செய்து
அங்கு தஞ்சம் புகுந்துள்ள ஈராக்கியர்கள் தேர்தலுக்கு தங்களது ஆதரவை தரவேண்டுமென்று ஏற்றுக்கொள்ளச் செய்ய
முயன்றிருக்கிறார்.
இந்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து நேரடி தேர்தல்களை வலியுறுத்தி வருகின்ற முன்னணி ஷியைட்
குழுக்களின் தலைவரான அயத்துல்லாஹ் அலி சிஸ்தானியின் ஆதரவையே வாஷிங்டன் நம்பியிருக்கிறது. மக்கள் தொகையில் 60
சதவீதம்பேர் ஷியைட்டுகளாக இருப்பதால் அவர்களது ஆதரவை பெற்று தேர்தலில் வெற்றியடைந்துவிட முடியுமென்று
சிஸ்தானியும் இதர ஷியைட்டுத்தலைவர்களும் கணிக்கின்றனர். தேசிய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்று அடுத்த
ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் புதிய தேர்தல்கள் முன்னேற்பாட்டிலும் ஒரு அரசியல் சட்டத்தை உருவாக்குவதிலும்
ஆதிக்கம் செலுத்த ஷியைட்டுக்கள் விரும்புகின்றனர்.
தேர்தல்களை தள்ளிவைக்க வேண்டுமென்ற கோரிக்கையை சிஸ்தானி ஏற்க மறுத்துவிட்டார்.
தேர்தலில் போட்டியிடுவதற்கு கூட்டாக ஷியா வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் சிஸ்தானியின் உதவியாளர்கள் முன்னணி
பங்களிப்பு செய்து வருகின்றனர். இந்த கூட்டணியில் சம்மந்தப் பட்டிருக்கும் பிரதான கட்சிகளில் இஸ்லாமிய
தாவாக்கட்சியும், ஈராக்கிய இஸ்லாமிய புரட்சியின் சுப்ரிம் கவுன்சிலும் (SCIRI)
முக்கிய இடம்பெறுகின்றன, இந்த இரண்டு கட்சிகளுமே ஈராக் மீது அமெரிக்கா படையெடுப்பு நடத்தியதை தீவிரமாக
ஆதரித்தன. கிளர்ச்சி ஷியைட் மதபோதகர் மோக்தாதா அல்-சாதரின்
(Moqtada al-Sadr) பிரதிநிதிகளும் பங்கெடுத்துக்கொள்கின்றனர்,
அவரின் போராளிக்குழுக்கள் நஜாப்பிலும், பாக்தாத் புறநகரான சதர் நகர்பகுதியிலும் அமெரிக்கத் துருப்புக்களோடு
மிகத்தீவிரமாக போரிட்டு வருகின்றனர்.
இந்தக்கூட்டணி தேர்தல்களில் ஆதிக்கம் செலுத்துவதாக தோன்றுகின்ற உண்மையை அடிப்படையாகக்
கொண்டு வாஷிங்டன் சிறிது மனநிறைவடைந்துவிடலாம். சிஸ்தானியும், அவரது கூட்டணியினரும், வாக்குப்பதிவில் கலந்து கொள்வதால்,
அமெரிக்காவிற்கு அதிகம் தேவைப்படுகின்ற சட்டபூர்வமான அங்கீகாரம் கிடைத்துவிட முடியுமென்று திருப்தியடைகின்றது.
தேர்தலில் கலந்து கொள்கிற அதே நேரத்தில் ஈராக்கிலிருந்து அமெரிக்கப்படைகள் வெளியேற வேண்டும் என்று
விரும்புகின்ற மிகப்பெரும்பாலான மக்களது ஆதரவையும் கூட்டணி கட்சியினர் நாட வேண்டிவரும். ''தேர்தல்கள் நடக்காவிட்டால்,
அல்லது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் வராவிட்டால், அமெரிக்கர்கள் இங்கு நீடித்துக்கொண்டு இருப்பார்கள்
மற்றும் நமது பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டேயிருக்கும்'' என்று ஒரு ஷியைட்டுத்தலைவர்
Nadeem al-Jabbery
வாதிட்டார்.
டைம்ஸ் வார இதழில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள ஒரு ஈராக் வளைகுடா கருத்துக்கணிப்பில்
ஜனவரி 30 தேர்தல்களுக்குப்பின் அமெரிக்கப்படைகள் நாட்டைவிட்டு வெளியேறி விடவேண்டும் என்று 80 சதவீதம் பேர்
கூறியுள்ளனர். இந்தக்கருத்துக் கணிப்பு பல்லூஜா மீது அமெரிக்க கொடூரமான தாக்குதலை ஆரம்பிப்பதற்கு முன் எடுக்கப்பட்டதாகும்,
அந்தத்தாக்குதலால் ஆக்கிரமிப்பிற்கு ஈராக் மக்களது எதிர்ப்பு மேலும் தூண்டிவிடப்பட்டிருக்கிறது.
ஈராக் சாதாரண மக்கள் பலர் இந்தத் தேர்தலை துச்சமாக மதிக்கின்றனர்.
Occupation Watch
வலைத் தளத்திற்கு பேட்டியளித்த ஒரு பாக்தாத் பேராசிரியர், ''நியாயமான ஒரு வெற்றிகரமான தேர்தல் என்பது
நடக்க முடியாத ஒன்றாகும். ஆக்கிரமிப்புப்படைகள் எங்களது நாட்டில் இருக்கும்போது அந்தத்தேர்தல் சட்டபூர்வமானது
என்று நாங்கள் எப்படி கூறமுடியும்?
ஆக்கிரமிப்புப்படைகள் தங்களது சார்பாகவே இந்தத்தேர்தலை நடத்த முயல்வார்கள் என்பது நிச்சயம். எங்களது
நகரங்கள் மீது குண்டுகளை வீசி ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் செத்துக் கொண்டிருக்கும்போது ஒரு உண்மையான
தேர்தல் என்று எப்படி நாங்கள் கற்பனை செய்துகூட பார்க்க முடியும்? என்று கூறினார்.
தேர்தல் நடைமுறைகள் இன்னும் ஆரம்பமாகவில்லை. உணவு பங்கீடு அட்டை மூலம்
வாக்காளர் பதிவு பத்திரங்கள் நாடு முழுவதும் தரப்படுகின்றன-----இந்த முறையில் முறைகேடுகளுக்கு இடமுண்டு.
ஏனென்றால் 20 ஐ.நா அதிகாரிகள், 15 ஜோர்தான் அதிகாரிகள் உட்பட ஒரு சில சர்வதேச அதிகாரிகள்தான்
வாக்குப்பதிவில் உதவுவதற்காக பணியாற்றி வருகின்றனர். நாடு முழுவதிலும் வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவதற்கு
தேவைப்படும் தேர்தல் அதிகாரிகளை இன்னும் பதவியில் அமர்த்தப்படாததுடன், பயிற்சியளிக்கப்படவுமில்லை.
''இந்த தேர்தல்களை எவ்வாறு நடத்தமுயுமென்று எனக்குத்தெரியவில்லை,'' குறைந்த
பட்சம் 40,000 பேர் தேவை ஒன்பதாயிரம் வாக்குச்சாவடிகள் உள்ளன, ஒரு வாக்குச்சாவடிக்கு 4 அல்லது 5 பேர்
தேவை. அது நடக்குமென்று எனக்குத்தெரியவில்லை. தேர்தல் ஆணைக்குழுவிடம் அதற்கான மனித சக்தி இல்லை'' என்று
ஒரு சர்வதேச ஆலோசகர் Christian Science
Monitor இற்கு தெரிவித்துள்ளார்.
ஜனவரி 30ல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள தேர்தல் ஒரு மோசடியாகும். ஒப்பு
நோக்கிப் பார்க்கும்போது, அண்மையில் நடைபெற்ற உக்ரைன் தேர்தல் ஜனநாயக நடைமுறை மற்றும் நெறிமுறைக்கு ஒரு
முன்மாதிரியாகும். அப்படியிருந்தும், புஷ் நிர்வாகம் உக்ரைன் தேர்தல் முடிவுகளை கண்டித்தது, ஆனால் அதே புஷ்
நிர்வாகம் ஈராக் வாக்குப்பதிவு ஜனநாயகத்திற்கு ஒரு பெரிய வெற்றி என்று அறிவிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த
இரண்டு சம்பவங்களிலுமே இந்த வார்த்தைஜாலங்கள் அரசியல் நலன்களாலும் அமெரிக்க பொருளாதார மூலோபாய
நலன்களாலுமே தீர்மானிக்கப்படும். |