World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

How Britain's trade unions support occupation of Iraq

ஈராக் ஆக்கிரமிப்பை பிரிட்டனின் தொழிற்சங்கங்கள் ஆதரிப்பது எப்படி

By Julie Hyland
25 November 2004

Back to screen version

பல தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் சென்ற ஆண்டு போர் எதிர்ப்பு இயக்கத்திற்கு தலைமை வகித்த சோசலிச தொழிலாளர் கட்சி தலைமை வகிக்கும் போரை நிறுத்து கூட்டணிக்கும் (StWC) இடையில் நிலவுகின்ற ஒரு கருத்துவேறுபாடு, ஈராக் நவீன-காலனித்துவ முறையில் கைப்பற்றப்பட்டிருப்பதற்கு பிரிட்டனின் தொழிற்சங்கங்கள் வகித்த கிரிமினல் பங்களிப்பை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.

அக்டோபர் 20ல் ரயில்வே தொழிற்சங்கமான ASLEF இன் முன்னாள் பொதுச்செயலாளரும் ஒரு இடதுசாரி என்று கூறிக்கொள்பவருமான Mick Rix, StWC திட்டமிடல் குழுவிலிருந்து ராஜினாமா செய்தார். அந்த அமைப்பு ஈராக் தொழிற்சங்க சம்மேளன (IFTU) பிரதிநிதிகள் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கும், அமெரிக்க தலைமையிலான ஈராக் ஆக்கிரமிப்பிற்கும் ''ஒத்துழைப்பவர்களாக'' செயல்படுவதாக StWC கூறியிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

அதற்கு அடுத்தநாள் பொதுத்துறை தொழிற்சங்கமான ''Unison" StWC உடன் தனது உறவுகளை முறித்துக்கொள்ளப்போவதாக அச்சுறுத்தியது. ''ஈராக் தொழிற்சங்க சம்மேளன பிரதிநிதிகளுக்கெதிராக அவதூறு பிரச்சாரத்தை'' செய்து வருவதாக StWCä Unison கண்டித்தது. வர்த்தகம் தொடர்பான தொழிற்சங்க காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையும், ''ஒரு சிலர் ஈராக் தொழிற்சங்கங்களின் கருத்துக்களை தெரிவிக்கவிடாது தடுக்க முயற்சிகளை மேற்கொண்டதாக'' தாக்குதல் தொடுத்துள்ளது.

லண்டனில் அக்டோபர் 15-17ல் ஐரோப்பிய சமூக மன்றத்தின் (ESF) மூன்றாவது ஆண்டு கூட்டம் நடைபெற்றது. அதில் ஒரு ஈராக் தொழிற்சங்க சம்மேளன பிரதிநிக்கு சரியான மரியாதை தரப்படவில்லை என்று கூறப்படுவதை மையப்படுத்தி தொழிற்சங்கங்களின் புகார்கள் அமைந்திருக்கின்றன. அப்போது சில பிரதிநிதிகள் ஈராக் தொழிற்சங்க சம்மேளனத்தை சேர்ந்த Subji al Mashadani மேடையில் அமர்ந்திருப்பதை ஆட்சேபித்தனர், இந்தக் காரணங்களால் அந்தக் கூட்டம் கைவிடப்பட்டது.

தொழிற்சங்கங்களின் கருத்துப்படி, StWC இன் குறுங்குழுவாத போக்கு Mashadani நடத்தப்பட்ட விதத்திலிருந்து எடுத்துக்காட்டப்படுவதாகவும், இப்போக்கே ஈராக்கில் சுதந்திர தொழிற்சங்கங்களை உருவாக்குவதை StWC எதிர்த்து வருவதற்கான காரணமாக தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன.

ஆனால் ஈராக் தொழிற்சங்க சம்மேளனத்தின் கடந்தகால பங்கு தொடர்பான புறநிலையாக எந்த ஆய்வு செய்தாலும் அது ஆக்கிரமிப்பிற்கு ஒத்துழைத்து வருகிறது என்ற குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் சரியானவைதான் என்பதையும் மற்றும் Mashadani மேடையில் அமர்ந்திருப்பதே ஒரு போர் எதிர்ப்பு விவாதம் நடக்கும் கூட்டத்தில் ஒரு திட்டவட்டமான ஆத்திரமூட்டல் தன்மையை கொண்டதுதான்.

யார் இந்த ஈராக் தொழிற்சங்க சம்மேளனம்?

ஈராக் தொழிற்சங்க சம்மேளனம் ஈராக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இயங்கிவருகிறது, அது ஈராக்கில் அமெரிக்கா உருவாக்கியுள்ள பொம்மை நிர்வாகத்தில் பங்கெடுத்துக்கொண்டு வருகிறது. உலக சோசலிச வலைத் தளம் விளக்கியிருப்பதைப்போல், ஈராக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் உண்மையான சோசலிசத்திற்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை. அவர்கள் ஸ்ராலினிச தத்துவமான ''தனியொரு நாட்டில் சோசலிசம்'' என்பதை பின்பற்றுபவர்கள், மற்றும் பின்தங்கிய மற்றம் அரை- காலனித்துவ நாடுகளில் சோசலிசத்திற்கு முதல் ஒரு முதலாளித்துவ ஜனநாயகம் என்ற ''இரண்டு கட்ட'' புரட்சி தத்துவம் என்று கூறப்படுவதை பின்பற்றுபவர்கள். ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு புரட்சிகர சர்வதேச முன்னோக்கை அடித்தளமாகக் கொண்டு சுயாதீனமாக தொழிலாள வர்க்கத்தை அணி திரட்டுவதை எதிர்ப்பதற்கான காரணம், தேசிய முதலாளித்துவத்தின் ஏதாவது ஒரு பிரிவிற்கு சாதகமாக இசைந்து நிற்பதாலாகும்.

திரும்பத்திரும்ப பாதிஸ்டுகள் ஒடுக்குமுறைகளை மேற்கொண்டாலும், ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி இந்த மூலோபாயத்தை விடாப்படியாக பற்றி நிற்கிறது. 1972 இற்கும், 1979 இற்கும் இடைப்பட்ட காலத்தில் பாத்திஸ்ட் கட்சி ஆதிக்கம் செலுத்திய தேசிய முற்போக்கு முன்னணியில் (NFP) இது பங்கெடுத்துக்கொண்டது, அப்போது தொழிலாள வர்க்கத்தையும், குர்திஸ் மற்றும் ஷியைட் மக்களையும் ஒடுக்குவதில் அக்கட்சி சம்மந்தப்பட்டிருந்தது.

அரசியல் ரீதியில் தனது கொள்கையை விட்டுக்கொடுத்து பாத்திஸ்ட் சர்வாதிகாரத்தை ஆதரித்து நின்றதுடன், மற்றும் அவர்களது கையில் ஒடுக்குமுறைக்குள்ளாகி இறுதியாக ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி 1979ல் ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டது.

ஈராக் கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை சதாம் ஹூசேன் தூக்கி எறியப்பட்டது, அதிகார வட்டாரங்களில் மீண்டும் தன்னை நிலைநாட்டிக்கொள்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. இந்த ''ஆட்சி மாற்றம்'' அமெரிக்க ஏகாதிபத்தியத்தினால் சாதிக்கப்பட்டதாகும், அது ஈராக் மக்களை மீண்டும் அடிமைப்படுத்தி, நாட்டின் எண்ணெய் இருப்பை கைப்பற்றுவதற்கு மேற்கொண்ட முயற்சிகளின் ஓர் அங்கமாகும். இது ஈராக் கம்யூனிஸ்ட் கட்சியின் மதிப்பீடுகளில் பொருட்படுத்த வேண்டிய விவகாரமே அல்ல.

அமெரிக்கா தலைமையிலான படைகள் ஈராக்கை சிதைத்து சின்னாபின்னமாக்கிக் கொண்டிருந்த நேரத்தில் நகரங்களை எல்லாம் மண்மேடாக்கி எண்ணிறந்த சிவிலியன்களை கொன்று குவித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஈராக் கம்யூனிஸ்ட் கட்சியும், அது தலைமை தாங்கும் ஈராக் தொழிற்சங்க சம்மேளனமும், அயத் அல்லாவியின் பொம்மை அரசாங்கத்திற்கு சட்டபூர்வமான தன்மையை வழங்க முயன்று வருகின்றனர். சம்பிரதாயத்திற்காக ஆக்கிரமிப்பை எதிர்க்கின்ற ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி/ஈராக் தொழிற்சங்க சம்மேளனம் ஜனவரியில் நடைபெறவிருக்கின்ற தேர்தல்கள் ஈராக்கில் ''ஜனநாயகத்தை'' நிறுவுவதற்கு உயிர் நாடியானது என்றும் அதை சீர்குலைக்கும் வகையில் எதுவும் செய்யக்கூடாது என்றும் கூறிக்கொண்டிருக்கின்றன. இப்படி திட்டமிட்டு சிதைக்கப்பட்ட சித்திரத்தை உருவாக்கிக்காட்டியதன் மூலம் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் துருப்புக்கள் ''தேசிய இறையாண்மைக்கு'' உத்திரவாதம் செய்துதருபவர்கள் மற்றும் தொழிலாளர் உரிமைகளை கூட உறுதிசெய்து தருபவர்கள் மற்றும் அவர்களது முயற்சிகளை எதிர்ப்பவர்கள் காலனியாதிக்க பாணியில் ஆட்சி திணிக்கப்படுவதை எதிர்ப்பவர்கள் ஈராக் மக்களின் விரோதிகள் என்கின்றனர்.

ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி/ஈராக் தொழிற்சங்க சம்மேளன கூற்றுக்களில் எதுவும் அவர்களது சொந்தக்கருத்துக்கள் அல்ல, புஷ் மற்றும் பிளேயர் நிர்வாகங்கள் செய்து வருகின்ற பிரச்சாரத்தை அவர்கள் திரும்பக் கூறிக்கொண்டிருக்கிறார்கள். மற்றும் அவர்களது முயற்சிகளுக்காக அவர்களுக்கு வெகுமதிகள் கிடைத்திருக்கின்றன--- அல்லாவியின் அரசாங்கத்தில் ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி பல பதவிகளை வகிக்கிறது, மற்றும் ஈராக் தொழிற்சங்க சம்மேளனம் அதிகாரபூர்வமான தொழிற்சங்கங்கமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

TUC ஆக்கிரமிப்பை சட்டபூர்வமாக ஆக்குகிறது

ஈராக் தொழிற்சங்க சம்மேளனம் ஒரு ஒழுங்கற்ற பாரம்பரியத்தை கொண்டுள்ளது என்பது தொழிற்சங்கங்களுக்கு நன்றாகவே தெரியும். உண்மையிலேயே அதே காரணத்திற்காகத்தான் அவர்கள் அதே பணியை துல்லியமாக செய்து வருகிறார்கள். Mashadini நடத்தப்பட்ட விதம் குறித்து அவர்கள் தெரிவிக்கும் ஆட்சேபனைகள் ஒரு முகமூடிதான். அதற்கு பின்னாலே அவர்கள் நவீன காலனித்துவ ஆக்கிரமிப்பிற்கு தமது ஆதரவை கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அமெரிக்கா தலைமையில் ஈராக் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னர் TUCஉம் அதன் இடதுசாரி பிரதிநிதிகளும் குறிப்பாக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் போருக்கான பொதுமக்கள் எதிர்ப்பிற்கும், அரசாங்கத்தை ஆதரிக்கும் அதன் விருப்பத்திற்குமிடையே கயிற்றின்மேல் நடப்பது போன்ற ஒரு நிலையில் இருந்தனர். ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் இல்லாத இராணுவ தலையீட்டை எதிர்த்து அது அறிக்கைகளை வெளியிட்டது. ஆனால் போர் துவங்கியதும் எங்கே தனது உண்மையான முன்னுரிமைகள் உள்ளன என்பதை காட்டிக்கொண்டது ---பெப்ரவரி 15ல் நடைபெற்ற வெகுஜன போர் எதிர்ப்பு கண்டனப்பேரணியை ஆதரிக்க மறுத்தது. பிரதமர் டோனி பிளேயரை பதவியிலிருந்து விரட்டுவதற்கு முயலும் ஒரு இயக்கத்தில் தானும் ஒரு பங்காக இருக்க முடியாது என்று கூறியது.

ஆக்கிரமிப்புப்படைகள் நிலை கொண்டதும் TUC கவலை இரண்டுவகைப்பட்டதாக அமைந்துவிட்டது. ஒருவகை அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்பிற்கு பொதுமக்களது எதிர்ப்பை இல்லாதுபோகச் செய்வது. மற்றொன்று பிளேயர் அரசாங்கம் அமெரிக்காவின் நட்பு நாடு என்ற தனது நிலைப்பாட்டை பயன்படுத்தி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு போரில் கிடைப்பதில் நியாயமான பங்கை பெற்றுத்தருவதில் உறுதி செய்துக்கொள்வது. ஈராக் தொழிற்சங்க சம்மேளனம் இந்த இரண்டு வகையான நோக்கங்களுக்கும் ஒரு பயனுள்ள இணைப்பு பாலமாக செயல்பட்டது.

TUC இன் வலைத் தளம் 2004-பெப்ரவரி 14 முதல் 25 வரை ஈராக்கிற்கு ''உண்மை அறியும் விஜயத்தின்'' வெளிப்பாடுகளை விளக்கியுள்ளது. அந்த விஜயம் ஈராக் தொழிற்சங்க இயக்கத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை கண்டுபிடித்து, உலக தொழிற்சங்க இயக்கம் ஆக்கபூர்வமாக என்ன ஆதரவு தரமுடியும் என்பதை, மதிப்பீடு செய்வதுதான்'' என குறிப்பிட்டது.

பிரிட்டிஷ் தொழிற்சங்கங்களும், அதன் அமெரிக்க சகாக்களான AFL-CIO உம் ஈராக்கில் ஒருதலைப்பட்சமாக தலையிடவேண்டும் என்ற ஆலோசனைகளை எதிர்த்தன. ஏனென்றால் ஈராக் தொழிலாளர்களின் நலனுக்காக பணியாற்றுகிறோம் என்ற தங்களது கூற்றுக்களுக்கு சர்வதேச ஆதரவை அது சீர்குலைத்துவிடும். ஆனால் அதற்கு நேர்மாறான தோற்றம் மட்டுமே உருவாக்கப்பட்டது. அவர்களது விஜயம் சர்வதேச சுதந்திர தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் (ICFTU) ஆதரவில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அந்த அமைப்பு கெடுபிடி யுத்தகாலத்தில் CIA இன் ஆதரவு பெற்ற முன்னோடி அரங்காக செயல்பட்டு வந்தது. தற்போது TUC உம், AFL-CIO உம் ஈராக்கில் எந்த சூறையாடும் நோக்கங்களிலும் தம்மை அந்நியப்படுத்திக் கொள்ள மேற்கொண்ட முயற்சியை தோலுரித்துக் காட்டிவிட்டது.

மற்றும் TUC தனது விஜயத்திற்கு ஆக்கிரமிப்பு அரசுகளின் உதவியும் ஆசியும் கிடைத்தது என்ற உண்மையை மறைப்பதற்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. ''பிரிட்டன் மற்றும் அமெரிக்க அரசாங்கங்கள் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்வது உட்பட தூதுக்குழுவிற்கு பயனுள்ள ஆதரவும் உதவியும் தந்தன. வெளியுறவு மற்றும் பொதுத்துறை அலுவலகம் (FCO) மற்றும் எதிர்காலத்தில் ஈராக்கின் பிரிட்டிஷ் தூதராக நியமிக்கப்பட்டிருப்பவரும் குறிப்பாக உதவினர்'' என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

ஒரு சில பணியிடங்களுக்கு நேரடி விஜயம் மேற்கொள்ளப்பட்டது. அவை நேரடியாக ஆக்கிரமிப்புப்படைகள் கட்டுப்பாட்டில் இருக்கின்ற முக்கியமான இடங்களாகும். அவற்றில் ஒரு எண்ணெய் சுத்திகரிப்பாலை, இரண்டு ரயில்வே பண்டகசாலை மற்றும் Um Qasr துறைமுகம் அடங்கும். அந்த தூதுக்குழுவினர் அரசாங்க அமைப்புக்கள் என்று வர்ணித்துக்கொண்ட தரப்பினரோடு பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மிகவும் குறிப்பாக ஈராக்கிலுள்ள பிளேயரின் சிறப்புத்தூதர் Sir Jeremy Greenstock, பாக்தாத்திலுள்ள இடைகால ஆணைய அதிகாரிகள் (ஆணையாளர் பிரேமரின் ஒரு உதவியாளர் ஸ்காட் கார்பன்டர், அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி அமைப்பு (USAID) ஆகியவற்றோடு பேச்சு நடத்தினார்கள்.

அந்த அறிக்கையில் ஈராக் தொழிலாளர் இயக்கத்தின் நடப்பு நிலவரம் பற்றிய பிரிவில் அந்த அறிக்கை தொழிற்சங்க விஜயம் ஈராக்கிலிருந்து எந்த பொதுமக்களது கோரிக்கையினாலும் மேற்கொள்ளப்பட்டதல்ல, ஆனால் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும் பொம்மை ஆட்சிக்குள் இருக்கின்ற அவற்றின் கொத்தடிமைகளும், மேற்கொண்ட முயற்சிகளின் காரணமாக நடந்தது என்றும் தெளிவுபடுத்துகிறது.

பாத்திஸ்ட் ஆட்சி சுதந்திர தொழிலாளவர்க்க அமைப்பு அடையாளம் இல்லாமல் துடைத்தெறிந்துவிட்டது. அதன் விளைவாக சதாம் ஹூசேனின் கீழ் செயல்பட்டுவந்த தொழிற்சங்கங்களின் பொது கூட்டமைப்பு (General Federation of Trade Unions) சர்வாதிகாரியின் ஒரு முன்னோடி அமைப்பே தவிர வேறு ஒன்றுமில்லை என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. ''தொழிற்சங்கங்களின் பொது கூட்டமைப்பின் கீழ் செயல்பட்டுவந்த தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களது ஊதியத்திலிருந்து கட்டாயமாக பிடிக்கப்பட்ட சந்தாக்களிலிருந்து கணிசமான வருமானம் பெற்றன. பெரும்பாலும் கட்டங்களாக ஒரு பெரிய சொத்து அடித்தளம் உருவாக்கிக்கொண்டன. அதற்கு கைமாறாக தொழிற்சங்கங்களின் பொது கூட்டமைப்பு தொழிற்சாலைகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையில் பாத்கட்சி கொள்கைகளை கொண்டு செல்கிற தகவல் பரிமாற்ற அமைப்பாக செயல்பட்டது. மற்றும் சர்வதேச அளவில் ஆட்சியின் தூதர்களாகவும் செயல்பட்டது'' என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

இதன் விளைவாக TUC ஈராக் தொழிற்சங்கவாதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் பிரதானமாக வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு, படையெடுப்பிற்கு பின் நாட்டிற்கு திரும்பியவர்களுடனேயே அடங்கியிருந்தது. இதில் தொழிலாளர்கள் ஜனநாயக தொழிற்சங்க இயக்கமும் அடங்கும். அது ஆரம்பத்தில் மற்றும் அதற்கு சிறிது காலத்திற்கு பின்னர்வரை தன்னை தொழிற்சங்கங்களின் பொது கூட்டமைப்பு என்று கூறிக்கொண்டது..... தற்போது பொதுவாக ஈராக் தொழிற்சங்க சம்மேளனம் என்று குறிப்பிடப்படுகிறது.

பெப்ரவரி விஜயத்தின் போது TUC வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது: ''ஈராக் தொழிற்சங்க அமைப்புக்கள் (தொழிற்சங்கங்களின் பொது கூட்டமைப்பு, ஈராக் தொழிற்சங்க சம்மேளனம், ஈராக் தொழிலாளர் மற்றும் தொழிற்சங்கங்கங்களின் பொது கூட்டமைப்பு) அனைத்தும் பழைய தொழிற்சங்கங்களின் பொது கூட்டமைப்பு உறுப்பினர் பட்டியல்களையும், கட்டடங்கள், நிதிச்சொத்துக்கள் ஆகியவற்றையும் கையகப்படுத்த முயன்று வருகின்றன. எனவேதான் சில நேரங்களில் ஈராக் தொழிற்சங்க சம்மேளனம் தன்னை தொழிற்சங்கங்களின் பொது கூட்டமைப்பு என்று வர்ணித்துக் கொள்வதற்கு ஒரு காரணமாகும்''

அதற்குப்பின்னர் நடைபெற்ற சம்பவங்கள் சொத்துக்களில் பெரும்பகுதி ஈராக் தொழிற்சங்க சம்மேளனத்திற்கு கிடைக்க வகைசெய்வதாக அமைந்துவிட்டன. ஈராக் தொழிலாளர் மற்றும் தொழிற்சங்கற்சங்கங்களின் பொது கூட்டமைப்பு, அல்லாவியின் நிர்வாகத்துடன் பணியாற்ற மறுத்துவிட்டதால், ஈராக் தொழிற்சங்க சம்மேளனம் மட்டுமே ஒரே ஈராக் தேசிய தொழிற்சங்க சம்மேளனமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. ஈராக் தொழிற்சங்க சம்மேளனமும், தொழிற்சங்கங்களின் பொது கூட்டமைப்பும் முறையாக இணைக்கப்படுவதற்கு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

அரசாங்கத்தில் தான் பங்கெடுத்துக்கொள்வதால் அது ஈராக் தொழிலாளர்களது உரிமைகளுக்கு உறுதிசெய்து தரும் என்று ஈராக் தொழிற்சங்க சம்மேளனம் கூறுகிறது. நாட்டை வெளிநாட்டு துருப்புக்கள் கைப்பற்றியிருக்கும்போது ஆக்கிரமித்துக்கொண்டுள்ள அரசாங்கங்களின் கட்டளைப்படி தேர்தல்கள் நடத்தப்படும் போது அந்த தேர்தலுக்கு முன்னர் பல்லூஜா, மோசூல் போன்ற நகரங்களில் எந்த எதிர்ப்பையும் ஒடுக்குவதற்கு பலாத்கார ஒடுக்குமுறைகள் கையாளப்பட்டிருக்கும் நிலையில் எப்படி தொழிலாளர்கள் உரிமையை நிலைநாட்ட முடியுமென்பதை விளக்குவதற்குக்கூட ஈராக் தொழிற்சங்க சம்மேளனம் முயற்சி கூட மேற்கொள்ளவில்லை.

மாறாக அதன் கவனம் பெரும் பகுதி ஒரு புதிய தொழிலாளர் நெறிமுறையை வகுப்பதில் திரும்பியிருக்கிறது. அத்தகைய நெறிமுறை நகல் ஈராக்கில் சுதந்திர தொழிலாளர் அமைப்புக்களை உருவாக்கும் உரிமையை உள்ளடக்கியதாக இருக்குமென்று ஈராக் தொழிற்சங்க சம்மேளனம் கூறுகிறது. என்றாலும் மே மாதத்தில் இடைக்கால கூட்டணி ஆணையம் புதிய நெறிமுறையின் நோக்கத்தை தெளிவுபடுத்தியது. ஈராக்கை ஒரு ஒளிவுமறைவுள்ள மத்தியில் திட்டமிடப்பட்ட பொருளாதாரத்திற்கு இட்டுச்செல்வதை உறுதி செய்து தருவதாக அமையும். அத்தகைய ஒரு சுதந்திர சந்தை பொருளாதாரம் ஒரு சிறப்பான தனியார் துறையை அமைப்பதன் மூலம் நிலையான பொருளாதார வளர்ச்சித்தன்மை கொண்டதாக அமையும், மற்றும் அதற்கு செயலாக்கம் தருகின்ற வகையில் அமைப்பு ரீதியிலும் மற்றும் சட்டபூர்வமான சீர்திருத்தங்களையும் உருவாக்குவதாக அமையும். இந்த நோக்கங்களை உறுதிசெய்து தருகின்ற வகையில் புதிய பொருளாதார நெறிமுறை அமையும், சுருக்கமாக சொல்வதென்றால் சுயாதீனமான தொழிலாள வர்க்க அமைப்பை ஒடுக்குவதற்கு 1987ல் சதாம் ஹூசேன் கொண்டுவந்த நெறிமுறையை ஏகாதிபத்திய அரசுகள் கடைபிடித்து சர்வாதிகாரத்தின் அமைப்புக்களை பின்பற்ற முடியுமென்று நம்புகின்றன. அதன் மூலம் மேற்கு நாட்டு முதலீடுகள் மேலும் ஊடுருவி பொருளாதார வாழ்வை கையில் எடுத்துக்கொள்ள முடியும் என்று நம்புகின்றன.

TUCஐ பொறுத்தவரை ஈராக் தொழிற்சங்க சம்மேளனத்தை தழுவி, ஜனநாயகத்திற்கு மாறுவது என்று கூறப்படுவதற்கு ஒரு நம்பகத்தன்மையை தருவதற்காக அவ்வாறு செய்கிறது. ''எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாத சுதந்திர சந்தைப்பொருளாதாரம்'' என்று கருதப்படும் அந்த ஜனநாயகம் மூலம் ஈராக்கை ஏகாதிபத்தியம் கையகப்படுத்தியிருப்பதற்கு எதிர்ப்பு என்கிற நடிப்பிற்கு கூட முற்றுப்புள்ளி வைத்துவிட ஒரு வழிவகையை உருவாக்கி வருகிறது. ஒரு திருத்தப்பட்ட தொழிலாளர் நெறிமுறையை உருவாக்குவதற்காக ஆதரவு திரட்டுவதில் ஈராக் தொழிற்சங்க சம்மேளனத்திற்கு TUC ஆதரவு தந்து கொண்டிருப்பதன் மூலம் வாஷிங்டனும், லண்டனும் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் உண்மையிலேயே ஈராக்கின் தொழிற்துறை மற்றும் வளங்களை தங்கள் கையில் எடுத்துக் கொண்டிருப்பதற்கு சட்டபூர்வமான அங்கீகாரம் தருகின்ற கட்டுக்கோப்பை உருவாக்க முயலும்போது வாஷிங்டனுக்கும், லண்டனுக்கும் தான் 'ஒரு உதவியாளனாகவும் ஆலோசகராகவும், தனக்கு ஒரு இடத்தை உறுதி செய்துகொள்ள முடியுமென்று TUC நம்புகிறது.

இந்த நோக்கத்தோடு ஈராக் தொழிற்சங்க சம்மேளனத்தின் லண்டன் பிரதிநிதி Abdullah Muhsin அக்டோபரில் நடைபெற்ற தொழிற்கட்சி மாநாட்டில் கலந்துகொண்டு பிரிட்டிஷ் துருப்புக்கள் ஈராக்கில் இருந்தாக வேண்டும் என்ற பிளேயரின் வற்புறுத்தலுக்கு ஆதரவாக வாதிடுவதற்கு உறுதிசெய்து தருவதில் TUC ஒரு முன்னணி பங்களிப்பு செய்தது.

தொழிற்சங்கப் பிரநிதிகளுக்கு ஒரு பகிரங்கக்கடிதம் எழுதிய Mushin ஈராக்கிலிருந்து உடனடியாக வெளிநாட்டுத் துருப்புக்கள் வெளியேற வேண்டுமென்ற கோரிக்கைகளை ஆதரிப்பதற்கு எதிராக எச்சரிக்கை செய்திருந்தார். இப்படிச் செய்வது ''எனது நாட்டிற்கு படுமோசமான நிலையை உண்டாக்கும், தீவிரவாதிகளின் கைப்பாவையாக ஆகிவிடும்'' என்று வாதிட்டார்.

தொழிற்சங்கங்கள் இந்த தலையீட்டை ஒரு சாக்குப்போக்காக எடுத்துக்கொண்டு பிளேயருக்கு அனைத்து எதிர்ப்புகளையும் கைவிடுவதற்கு பயன்படுத்திக்கொண்டன. அமெரிக்க பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பு ஈராக் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு வெற்றி என்ற மாநாட்டு முடிவை அலங்கரிப்பதற்கு அதை பயன்படுத்திக்கொண்டன. உண்மையிலேயே அந்த தீர்மானத்திற்கு தொழிற்சங்க ஆதரவு "விரைவில் துருப்புக்கள் வெளியேற வேண்டுமென்ற" கோரிக்கைகளுக்கும் எதிர்ப்பு நாடகத்தையும், குப்பைதொட்டியில் போடுவதற்கு ஒரு வழியாக அந்த தீர்மானத்தை பயன்படுத்திக்கொண்டன. அதன் மூலம் அரசாங்கத்திற்கும், பெரு வர்த்தகத்திற்கும் அதன் நவீன காலனித்துவ நடவடிக்கைகளை சுமூகமாக கொண்டு செலுத்துவதற்கு வழியாக TUC ஐ நம்பலாம் என்று சமிக்கை காட்டினர்.

அக்டோபர் 19ல் TUC அதன் ''ஈராக்கிற்கான வேண்டுகோள் இயக்கத்தை தொடக்கியது. அதற்கு தொழிற்கட்சி பாரளுமன்ற உறுப்பினர் Hilary Benn, TUC பொதுச்செயலாளர் Berendan Barber உம் Mashadani உம் தலைமை வகித்தனர். அது ''ஐக்கிய'' நிதி உதவிகளை கோரியது. இதில் வசூலிக்கப்படும் பணம் ''தொழிற்சங்கங்கள் இனி அரசாங்கத்தின் ஓர் அங்கமல்ல என்ற கருத்தை பரப்புகின்ற அமைப்பாளர்களுக்கு'' செலவிடப்படும் என்று குறிப்பிட்டது.

ஏராளமான அமைப்பாளர்களை கொண்டு இந்த இயக்கம் நடத்துவது தெளிவாக ஒரு செலவை அதிகரிக்கும் இயக்கமாகும்.

அக்டோபர் 27ல் கார்டீயன் செய்தி பத்திரிகை தந்துள்ள தகவலின்படி ஈராக் தொழிற்சங்க சம்மேளனம் சர்வதேச அபிவிருத்திக்கான பிரிட்டிஷ் கவுன்சிலை அணுகி 5 மில்லியன் பவுண்ட்ஸ் அதன் நிதியிலிருந்து உதவி வழங்குமாறு கோரியது.

StWC என்னவிலை தரவேண்டும்?

ஐரோப்பிய சமூக அரங்கில் கலந்துகொண்ட சிலர் Mashadani இற்கு ஒரு பகை உணர்வு காட்டினார்கள் என்பது உண்மையான பிரச்சனை அல்ல, ஆனால் அவருக்கு ஒரு மேடையை முதலில் அமைத்துக்கொடுத்தது ஏன் என்பதே பிரச்சனை.

ஐரோப்பிய சமூக அரங்கில் அதனுடன் இணைந்த அமைப்புக்களும் தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் முன் அரசியல் சரணாகதியை அடைந்ததின் விளைவுதான் அவ்வாறு அது செயல்பட்டதற்கான காரணமாகும்.

அல்லாவியின் அரசாங்கத்தின் ஒரு தொங்குசதையாக ஈராக் தொழிற்சங்க சம்மேளனம் செய்துவரும் பங்களிப்பு StWC க்கு ஒரு இருதலைக்கொள்ளி நிலையை உருவாக்கிவிட்டது. ஏனென்றால் StWC ஆக்கிரமிப்பை எதிர்ப்பதாக கூறிவந்தது. அந்தக் கூற்றையே இழிவுபடுத்துகிற அச்சுறுத்தலாக இந்த உறவு அமைந்துவிட்டது. ஐரோப்பிய சமூக அரங்கின் மாநாடு நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் அக்டோபர் 11ல் அதன் வலைத் தளத்தில் ஒரு அறிக்கையை StWC வெளியிட்டது. அதில் ஈராக் தொழிற்சங்க சம்மேளனம் அரசாங்கம் மற்றும் தொழிற்கட்சி கட்டுக்கோப்பின் நேரடி ஆயுதம் என்றும், ஈராக் தொழிலாளர்களின் அங்கீகாரத்தை ஆக்கிரமிப்பு பெற்றிருப்பதாக பிளேயர் கூறிவந்ததற்கு ஒரு நம்பகத்தன்மை முகமூடியை வழங்குவதில் ஈராக் தொழிற்சங்க சம்மேளனத்தின் பங்களிப்பை கண்டித்திருந்தது.

ஆனால் StWC இந்த கண்டனத்தை வெளியிட்டுக் கொண்டிருக்கின்ற நேரத்தில் சோசலிச தொழிலாளர் கட்சி (Socialist Workers Party) ஒரு முன்னணி பங்குவகிக்கும் ஐரோப்பிய சமூக அரங்கு Mashadani ஐ போர் எதிர்ப்பு மேடையில் இடம்பெறச்செய்ய வேண்டுமென்ற TUC இன் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டது. இதன்மூலம் அந்த மாநாட்டிற்கு TUC இன் நிதியளிப்பிற்கு உறுதிசெய்து தரப்பட்டது மட்டுமல்லாமல் ஐரோப்பிய சமூக அரங்கின் கீழ் வருகின்ற பல அமைப்புக்கள் ஈராக் ஆக்கிரமிப்பிற்கு ஆதரவும் தந்தன. மற்றும் சோசலிச தொழிலாளர் கட்சிக்கு தொழிற்சங்கங்களோடு ஒரு மோதலை ஏற்படுத்திக்கொள்வது நினைத்துக்கூட பார்க்க முடியாதது- முதலாவதாக தொழிற்சங்கங்கள் தொழிலாளர் இயக்கத்தின் ஒரு சோசலிச புதுப்பித்தலுக்கு அடிப்படைகளாக அமைந்திருக்கின்றன எனவும், இரண்டாவதாக தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் ஐரோப்பிய சமூக அரங்கை சுற்றிவரும் இடதுசாரி அணியிலுள்ள பல்வேறு தொழிற்சங்க அதிகாரத்துவம், சமூக ஜனநாயக மற்றும் ஸ்ராலினிச குழுக்களுக்கு அரசு சாராத தொண்டு அமைப்புக்களினதும் (NGOs) நம்பகத்தன்மையுள்ள நண்பனாக ஒரு முக்கிய முதலிடத்தை பெறுவதில் இந்தப்போக்கு வெட்டிமுறிப்பதாக அமைந்துவிடும் என சோசலிச தொழிலாளர் கட்சி கருதுகின்றது.

எனவே ஈராக் தொழிற்சங்க சம்மேளனத்தை படுவேகமாக ஆதரிப்பதற்கு சென்ற TUC இன் கிரிமினல் தன்மையை அம்பலப்படுத்துவதற்கு பதிலாக StWC அறிக்கை ஈராக் தொழிலாள வர்க்கம் அதன் மிக தீவிரமான சிக்கல் நிறைந்த போராட்டங்களில் தங்களது ஆதரவை தெரிவிக்க வேண்டுமென்று தொழிற்சங்கங்கள் விரும்புவது புரிந்துக்கொள்ளக்கூடியது தான் என்று குறிப்பிட்டது. அந்த விருப்பத்தின் காரணமாக ஈராக் தொழிற்சங்க சம்மேளனத்திற்கு அவர்களது விருப்பத்திற்கு மாறாக கவனக்குறைவாக முகமூடிகளாக செயல்பட்டுவிட்டார்கள். ஈராக் தொழிற்சங்க சம்மேளனம் தொழிற்சங்கங்களின் ''நல்லெண்ணத்தை'' தனது சொந்த நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக முறைகேடாக பயன்படுத்திக்கொண்டது.

தொழிற்சங்கங்களின் உண்மையான நோக்கங்கள், குறிக்கோள்கள் தொடர்பாக StWC தான் தொழிலாளர்களை ஏமாற்றுவதற்கு முயன்றுவருகிறது. TUC உம் அதன் அமெரிக்க நண்பர்களும் தான் ஈராக்கில் முக்கிய பங்களிப்பு செய்வதாக பதிவேடுகள் காட்டுகின்றன. அவர்கள் ஈராக் தொழிற்சங்க சம்மேளனத்தை ஏற்றுக்கொண்டதற்கு காரணம் அதன் அரசியல் நோக்கங்களை அவர்கள் மிக நன்றாக அறிந்து கொண்டிருக்கிறார்கள். மேலும் TUC ஈராக்கில் செய்து கொண்டிருப்பதற்கும், பிரிட்டனில் அதன் பங்களிப்பிற்கும் இடையே வேறுபாடு எதுவுமில்லை. காலனித்துவ படையெடுப்பை சட்டபூர்வமாக நியாயப்படுத்துவது உள்நாட்டில் பெரிய நிறுவனங்கள் மற்றும் அரசாங்க கட்டளைகளை செயல்படுத்தும் அதன் முயற்சிகளின் மறுபக்கம்தான். ஏனெனில் இதுபோன்ற உள்நாட்டு கொள்கைகளின் விளைவாக தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத்தரம் படுமோசமாக வீழ்ச்சியடைந்து கொண்டுவருகிறது மற்றும் ஜனநாயக உரிமைகள் சிதைக்கப்பட்டு வருகின்றன.

தொழிற்சங்கங்களின் குற்றச்சாட்டுக்களுக்கு அப்பாலும் StWC உண்மையிலேயே அவர்களது விருப்பங்களுக்கு சிறப்பாக இடம் கொடுக்க முயன்றுவருகிறது. StWC மற்றும் சோசலிச தொழிலாளர் கட்சி தலைவர் லின்சே ஜெர்மன் ஆகியோர் ஐரோப்பிய சமூக அரங்கின் மேடையில் முஸ்ஹான்தானியுடன் சேர்ந்து அமர்ந்தனர்.

தொழிற்சங்கங்கள் தன் மீது தொடுத்துள்ள தாக்குதல்கள் அதற்குப்பின்னர் StWC அளித்துள்ள பதில் அதன் சந்தர்ப்பவாத அரசியல் தன்மையை வெளிப்படுத்துவாதக இருக்கிறது. கொள்கைவழி கண்ணோட்டங்கள் அனைத்திற்கும் மேலாக தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் தனது உறவுகளை நிலைநாட்டி வருகிறது.

StWC தலைவரும் பிரிட்டனில் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினருமான ஆன்ட்ரூ மூர்ரே இந்த கூட்டணியிலிருந்து Rix இராஜிநாமா செய்துவிட முடிவு செய்தது குறித்து தனது வருத்தத்தை தெரிவித்துக்கொண்டார். போரை எதிர்ப்பதில் தொழிற்சங்கங்களை தன் பக்கம் வென்றெடுப்பதில் அவர் குறிப்பாக முக்கியமான பங்களிப்பு செய்தார் என்று குறிப்பிட்டார்.

''பல்லூஜாவிற்கு படைகள் திரும்ப அனுப்பப்பட்டிருப்பது மற்றும் நடைபெறவிருக்கும் தாக்குதல் தொடர்பாக பிரிட்டிஷ் அரசியலில் கொந்தளிப்பு நிலவுகிறது. இந்தச் சூழ்நிலையில் எந்த இணைப்புடனும் இரண்டாம் நிலை கருத்துவேறுபாடுகள் காரணமாக விலகிக்கொள்ள நேர்ந்தால் அது அதிர்ச்சிதரக்கூடியது'' (அழுத்தம் சேர்க்கப்பட்டது)

ஈராக் ஆக்கிரமிப்பிற்கு நீங்கள் ஆதரவாக இருக்கிறீர்களா, அல்லது எதிர்க்கிறீர்களா என்ற அடிப்படை கேள்வியை ''இரண்டாம் நிலை'' வேறுபாடுகளுக்கு ஒதுக்கி தள்ளுவது StWC தனது நிலைப்பாட்டில் ஒரு கணிசமான மாற்றத்தை செய்வதற்கு தயாராகிவிட்டது என்பதை காட்டுகின்றது.

கார்டியன் செய்திபத்திரிகைக்கு அக்டோபர் 25ல் லின்சே ஜெர்மன் StWC பற்றி ஒரு கடிதம் எழுதினார்: ''TUC மாநாட்டில் கடைபிடிக்கப்பட்ட அதே தீர்மானத்தின் அடிப்படையில் எங்களது நிலைப்பாடு ஈராக்கிலிருந்து பிரிட்டிஷ் துருப்புக்கள் விலகிக்கொள்ளப்படுவதற்கு ஒரு விரைவான அடிப்படையில் தேதி நிர்ணயிக்கப்பட வேண்டும்'' என்பதாகும்.

சோசலிச தொழிலாளர் கட்சி தலைமையிலான StWC, TUC உடனான அதன் வேற்றுமைகளை தீர்த்து வைக்க ஒரு வழிதேடிக் கொண்டிருக்கின்றது. அதற்காக TUC இன் வழியை பின்பற்றி திட்டவட்டமில்லாத ஒரு ''விரைவான தேதியை'' நிர்ணயிப்பதற்கு ஆதரவாக திரும்பியுள்ளது. ஆக்கிரமிப்புப்படைகள் உடனடியாக விலக்கிக்கொள்ள்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை தள்ளுபடி செய்திருக்கிறது. போர் எதிர்ப்பு இயக்கத்திற்கான அடிப்படையையே உதறிதள்ளிவிட்ட பின்னர் எவரும் இந்தக் கேள்வியை எழுப்புவதற்கு உரிமை படைத்தவர்களாகிறார்கள்:- தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் தனது உறவுகளை நிலைநாட்டிக்கொள்தவற்கு StWC மேலும் எவ்வளவு தூரத்திற்கு தனது கொள்கைகளை விட்டுக்கொடுத்து செல்லவிருக்கிறது?


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved