WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள் :
அவுஸ்திரேலியா & தென்பசுபிக்
Protracted crisis following government
ouster in French Polynesia
பிரெஞ்சு பொலினேஷியாவில் அரசாங்கம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து நீடித்த
நெருக்கடி
By John Braddock
17 November 2004
Use this version
to print |
Send this link by email |
Email the author
பிரெஞ்சு பொலினேஷியாவில், அக்டோபர் தொடக்கத்தில் சுதந்திர கோரிக்கை
சார்பு தலைவர் ஒஸ்கார் தெமரு (Oscar Temaru)
தலைமையில் நடைபெற்று வந்த கூட்டணி அரசாங்கமானது, பாரிசில்
உள்ள சிராக் அரசாங்கத்தின் மறைமுக ஆதரவோடு பழமைவாத எதிர்க்கட்சி மேற்கொண்ட முயற்சியினால் பதவியிலிருந்து
நீக்கப்பட்டுள்ளது. பொலினேஷியா ஒரு முன்கண்டிராத அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ளது.
தெமருவின் ஜனநாயக ஒன்றிய கூட்டணி, நீண்டகால சிராக்கின் நண்பரான கெஸ்டோன்
புளோஸை (Gaston Flose)
ஜனாதிபதியாக நியமிப்பதை அங்கீகரிக்க மறுத்துள்ளது. அத்தோடு, இந்த
பிரச்சனையை முடிவு செய்வதற்காக இப்பகுதிகள் முழுவதிலும் புதிதாக தேர்தல்களை நடத்தவேண்டும் என்று கோரி
பல்வேறு கண்டனப்பேரணிகளை இக் கூட்டணி நடாத்தியும் வருகிறது. ஆத்திரமடைந்த தெமருவின் ஆதரவாளர்கள் ஜனாதிபதியின்
அலுவலகத்தை பிடித்துக்கொண்டு தைத்தியின் தலைநகரான பாப்பெத்தில் (Pape'ete)
உள்ள பிரதான அரசாங்க அலுவலகங்களை முற்றுகையிட்டுள்ளனர்.
இதனால், அரசாங்கம் முடக்கப்பட்டுள்ளது.
தெமரு நிர்வாகம் நீக்கப்பட்டதை எதிர்த்தும், குறைந்தபட்ச ஊதியத்தில் உயர்வு
கோரியும் சென்றவாரம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை நிறுத்தங்களையும் கண்டனப் பேரணிகளையும் நடத்தினர்.
கடந்த புதன்கிழமையன்று சுற்றுலா தொழிற்துறையை சார்ந்த உணவு விடுதிகளில் வேலைசெய்யும் 2000 ம்
தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அதே நேரத்தில் மற்றொரு பிரிவைச் சார்ந்த 1000
தொழிலாளர்கள் தலைநகரில் பிரதான சாலைகளில் பேரணிகளை நடத்தினர். அத்துடன், அரசாங்க அலுவலகங்களுக்கு
வெளியில் அரசாங்க ஊழியர்கள் மறியலில் ஈடுபட்டதுடன் 300 தொழிலாளர்கள் அரசாங்கத்தின் செய்திக் குறிப்புகள்
நிகழ்ச்சிப்போக்கு துறையை பிடித்துக் கொண்டனர்.
திங்களன்று பிரான்சின் தலைமை நிர்வாக நீதிமன்றமான
Council of State
ஒரு பெரிய அரசியல் முடிவை அறிவித்தது. நீதிமன்றம் நடைபெற்றுவரும் கண்டனப் பேரணிகளை அலட்சியம் செய்துவிட்டு
பிரான்சின் ஆட்சிப் பரப்பு எல்லைகள் முழுவதிலும் புதிய தேர்தல்களை நடத்த முடியாது என்று தீர்ப்பளித்தது.
மாறாக, அது Windward
தீவுகளில்
(Tahiti and Moorea) நடைபெற்ற
''வாக்குப்பதிவில் முறைகேடுகள்'' நடந்துள்ளன என்று
குற்றம்சாட்டி தேர்தல் முடிவுகளை மட்டும் ரத்து செய்தது. இது அதிகாரத்தில் தனது பிடிப்பை இறுக்கமாக்கும் அடிப்படையில்
புளோஸ் மேற்கொண்ட முயற்சியாகும்.
இந்த நெருக்கடியின் வேர்கள் மே 23 பொலினேஷியாவில் நடைபெற்ற தேர்தல்
முடிவை பாரிசிலும் பாப்பெத்திலும் உள்ள ஆளும் செல்வந்த தட்டினர் ஏற்றுக்கொள்ள மறுத்ததில் அடங்கியுள்ளது. 20
ஆண்டுகள் ஆட்சிபுரிந்த புளோஸின் சொந்தக் கட்சியான பாப்புலர் யூனியன்
(THP) முதல் தடவையாக
தேர்தலில் தோல்வியடைந்தது. அதேநேரத்தில், சுதந்திரம் கோரிவரும் தெமருவின் அமைப்பான போலினேஷியா
விடுதலை முன்னணி தலைமையிலான கூட்டணி தேர்தலில் வென்றது. இந்தத் தேர்தல் முடிவுகள் பாரிசை கலவரமடையச்
செய்தது. வெளிநாட்டு எல்லைகள் தொடர்பான பிரெஞ்சு அமைச்சர் பிரஜிட் ஜிராடன் (Brigitte
Girardin) இந்த தேர்தல் முடிவை பாராட்டுபவர்களை
கண்டித்தார். இப்படி பாராட்டுபவர்கள் ''குடியரசை கூறுபோட'' விரும்புபவர்கள் என்று குறிப்பிட்ட அவர்
தேர்தல் நடைமுறை முடிந்துவிடவில்லை என்று உடனடியாக எச்சரித்தார்.
பிரெஞ்சு ஏகாதிபத்தியம் தனது முன்னாள் ஆப்பிரிக்க காலனிகளில் தனது நலன்களை
பேணிக்காப்பதற்காக இராணுவ வலிமையை பயன்படுத்தி வருவதைப் போன்றே சிராக் அரசாங்கம்
போலினேஷியாவில் தயக்கமின்றி ஆக்கிரமிப்பு மனப்பான்மையோடு செயல்படுகிறது. மே தேர்தல் முடிவுகளைத்
தொடர்ந்து, புதிய நிர்வாகத்தை மிரட்டுகின்ற ஒரு முயற்சியாக தைத்திக்கு பிரான்ஸ் 300 கலவரம் அடக்கும்
போலீசாரை அனுப்பியுள்ளது. ''ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதற்கு'' தேவைப்படும் அனைத்தையும்
செய்யப்போவதாக பிரெஞ்சு தூதர் அலுவலகம் அறிவித்தது.
ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திற்கு போலினேஷியா நீண்ட
நெடுங்காலமாக ஒரு முக்கியமான தளமாக உள்ளது. ஆகவே, இந்த நாடு சுதந்திரம் பெறுவதற்கான எந்த
முயற்சியையும் பிரான்ஸ் தீவிரமாக எதிர்த்து வருகிறது. இந்தப் பிராந்தியம் 118 பவளத் தீவுகளைக்
உள்ளடக்கியதுடன் ஆஸ்திரேலியா அளவிற்கு பரப்பளவைக் கொண்டுள்ளது. மக்கள் தொகை 201,000. 1960
களின் தொடக்கத்தில் அல்ஜீரியாவிலிருந்து பிரான்ஸ் வெளியேறிய பின்பு ஏறத்தாழ 30 ஆண்டு காலமாக இப்பகுதி
பிரான்சின் அணு சோதனைத் திட்ட தளமாக செயல்பட்டது. இராணுவ அதிகாரிகளும் பணியாளர்களும் வந்து
குவிந்ததால் ஒரு சிறிய சலுகைமிக்க தட்டு இதன் மூலம் பயனடைந்தது. அதே நேரத்தில் மிகப்பெரும்பாலான
பிரெஞ்சு போலினேஷிய மக்கள் தொடர்ந்தும் வறுமையிலேயே வாழ்ந்து வந்தனர். பிரான்ஸ் அணுக்குண்டு
சோதனைகளை நிறுத்திக்கொண்டதும், அண்மையில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்ததும்,
அந்தப்பகுதியின் பொருளாதாரப் பிரச்சனைகள் வளர்ச்சி கண்டதுடன் அரசியல் மற்றும் சமூக பதட்டங்கள் மேலும்
உக்கிரமடைந்தன.
பிரான்சின் அச்சுறுத்தலை சமாதானம் செய்கின்ற முயற்சியில் தெமரு பாரிசிலும்,
பாப்பெத்திலும் உள்ள ஆளும் செல்வந்த மேல்தட்டினரை அனுசரித்து நடக்க முயன்றார்.
1975 ல் அவரது
கட்சி அமைக்கப்பட்டதுடன், 2000 ஆண்டு வாக்கில் சுதந்திரத்தை வென்றெடுத்து ''தற்சார்புள்ள நாடாக''
மாற்றுவது குறிக்கோள் என்றும் அறிவிக்கப்பட்டது. என்றாலும், அவர் ஜூன் துவக்கத்தில் ஆட்சி அதிகாரத்திற்கு
வந்ததும், உடனடியாக பிரெஞ்சு அதிகாரிகளுக்கு அளித்த உறுதிமொழியில் சுதந்திரம் பெறுவது குறைந்தபட்சம்
இன்னும் 15 ஆண்டுகளைக் கடந்தே சாத்தியமென்றும், சுதந்திரம் பெறுவது ''சுய தேவைப்பூர்த்தியை'' நோக்கி
பொருளாதார வளர்ச்சி வேகம் அமைவதைச் சார்ந்தே இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
தெமருவின் சமூகத் திட்டம், ஒரு குறிப்பிட்ட வரையறைக்கு உட்பட்டது என்றாலும்
தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் ஸ்தாபனங்களின் எதிர்ப்பை அது கிளறிவிட்டுள்ளது. அவரது அரசாங்கம் அணு ஆயுத
சோதனைகளில் சம்மந்தப்பட்ட தொழிலாளர்களுக்கும், அருகாமையிலுள்ள தீவுகளில் வாழ்கின்ற மக்களுக்கும் ஏற்பட்ட
பாதிப்பை ஆராய்வதற்காக ஒரு அமைப்பை உருவாக்க திட்டமிட்டது. அதன்மூலம் ஆயிரக்கணக்கான சட்டப்பூர்வமான
இழப்பீட்டுக் கோரிக்கைகள் வருவதற்கு வாய்ப்புக்கள் உருவாகின. அரசாங்கம் மேலும் குறைந்தபட்ச மாத
ஊதியத்தை 1,10,000 பிரெஞ்சு பசுபிக் பிராங்குகளில்
($US1,195) இருந்து 5 ஆண்டுகளில் 1,50,000 பிராங்குகள்
அளவிற்கு உயர்த்தவும் திட்டமிட்டது.
57 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் அக்டோபர் 8 ல் கொண்டுவரப்பட்ட
ஒரு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் நான்கு மாதங்களாக செயல்பட்டுவந்த அரசாங்கம் கவிழ்ந்தது.
இந்தத் தீர்மானம் கொண்டுவரப்படுவதற்கு முன்னர் புளோஸ் புதியதொரு நாடாளுமன்ற குழுவான
Te Ara வை
உருவாக்குவற்கு ஒரு சிக்கலான முயற்சியை மேற்கொண்டார். ஒரு சட்டசபை குழு என்று ஒரு முறையான
அங்கீகாரம் பெறுவதற்கு குறைந்தபட்சம் 6 உறுப்பினர்கள் தேவை என்பதால், புளோஸின் கட்சியைச் சார்ந்த
முன்னாள் உறுப்பினர்கள் மூன்றுபேர் மூன்று நடுநிலை MP
க்களோடு சேர்ந்து குறைந்தபட்ச அங்கீகாரத் தகுதியை
பெறுவதற்கு முயன்றனர்.
மக்களது கட்டளை எதையும் பெறாத
Te Ara ரகசியமாக
அமைக்கப்பட்டது. அந்தக் குழுவை அச்சாணியாகக் கொண்டு நாடாளுமன்றத்தில் புதிய அணிகள் உருவாயின. இதனால்
ஒரு வாக்கு பெரும்பான்மையில் இயங்கிக் கொண்டிருந்த தெமருவின் அரசாங்கம் ஒரு வாக்கு குறைந்ததால் தோல்வியடைந்தது.
அக்டோபர் 6 ல் புளோஸின் எதிர்க்கட்சியானது, அரசாங்கத்திற்கு முன்னர் தந்திருந்த உறுதிமொழிகளுக்கு மாறாக
தனது கண்டனத் தீர்மானத் திட்டத்தை அறிவித்ததுடன் பொருளாதாரத்தை முறைகேடாக நிர்வகித்து வருவதாக அரசாங்கத்தின்
மீது குற்றம் சாட்டியது. அத்தோடு, முந்திய மாதத்தில் பொருளாதாரத்தின் முக்கிய பிரிவுகள் எல்லாம் ''தேங்கிக்
கிடப்பதாக'' கூறியதுடன், பொருளாதார நிலவரம் படுவேகமாக மோசமடைந்து வருவதாகவும் தெரிவித்தது.
மே 23 ல் தேர்தலில் மக்களது வாக்களிப்பு மூலம்பெற்ற வெற்றியை ''களவாடிச்
செல்வதற்கு'' புளோஸ் ஜனநாயக விரோத ''குண்டர் முறைகளை'' பயன்படுத்தி வருவதாக தெமரு குற்றம்
சாட்டினார். நிதித் தணிக்கை அறிக்கை வெளியிடப்படுமானால் அது முந்திய அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துகின்ற
வகையிலும், சட்டப்பூர்வமான தண்டனையில் முடியும் அளவிலும் சில உண்மைகள் அம்பலத்திற்கு வரலாம் என்ற
அச்சத்தின் பிரதான உந்துதலால் புளோஸ் செயல்பட்டு வருவதாக தெமரு குறிப்பிட்டார். அக்டோபர் 21 ல் பிரசுரிக்கப்பட்ட
ஒரு பூர்வாங்க அறிக்கையில், முந்திய நிர்வாகம் சுமார் 100 போலியான ஊழியர்களை பதிவேட்டில் பதிவு செய்து,
ஒவ்வொருவருக்கும் மாதம் 3,500 யூரோக்களை ஊதியமாக கொடுத்து வந்துள்ளது என்று கோடிட்டுக்காட்டியது.
தெமரு பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அவர் புதிதாக
தேர்தல்களை நடத்தவேண்டும் என்று விடுத்த வேண்டுகோள்களை பிரெஞ்சு அரசாங்கம் தள்ளுபடி செய்ததுடன்,
புளோஸை அப்பகுதியின் ஜனாதிபதியாக நியமிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளையும் பகிரங்கமாக
ஆதரித்தது. வெளிநாட்டு ஆட்சிப்பரப்புகளுக்கான அமைச்சர் ஜிராடன்
பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் ''நம்பிக்கையில்லாத் தீர்மானம்''
என்பது ஜனநாயக நடைமுறையின் ஓர் அங்கமென்றும் தைத்தியில் அரசாங்க அலுவலகங்கள் ''சதாரணமாய்
செயல்பட்டு'' வருவதாகவும் குறிப்பிட்டார்.
பாப்பெத்தில் உள்ள பிரெஞ்சு உயர் கமிசனரான மிசல் மத்தியூ அந்தப் பகுதியின்
நாடாளுமன்றத்தில் ஒரு புதிய ஜனாதிபதி நியமனத்திற்கான வாக்கெடுப்பை படுவேகமாக நடத்தினார். தெமருவின்
கூட்டணி உறுப்பினர்களில் ஒருவரும் நாடாளுமன்றத்தின் தலைவருமான அந்தோனி ஜெரோஸை, அக்டோபர் 24 க்கு
முன்னர் இதற்கான வாக்கெடுப்பு நடத்தாது குறித்து கமிசனர் இரண்டு முறை எச்சரிக்கை செய்தார். அத்துடன்,
புளோஸின் கட்சியை சேர்ந்த ஒரு உறுப்பினரும், நாடாளுமன்றத்தின் மூன்றாவது துணைத் தலைவருமான லான
தெத்துனியை நாடாளுமன்றத்தைக் கூட்ட அழைப்பு விடுத்தார். ஆனால், நாடாளுமன்றத்தின் தலைவர் அந்தோனி
ஜெரோஸ் அக்டோபர் 25 ல் வாக்கெடுப்பு நடத்தத் திட்டமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே, இந்த அரசியல் சூழ்ச்சிகள் பரவலாக பொதுமக்களது எதிர்ப்பை
கிளறிவிட்டிருக்கிறது. அக்டோபர் 16 ல் 20,000 திற்கு மேற்பட்ட மக்கள் பாப்பெத் மையப்பகுதி வழியாக
ஊர்வலம் சென்றனர். இது தலைநகர் பல ஆண்டுகள் கண்டிராத மிகப்பெரிய பேரணியாகும். ''ஒன்று, இரண்டு,
மூன்று கலைப்பா''? ''மாற்றம் வேண்டும்'' என்பது போன்ற முழக்கங்கள் பேரணியில் எழுப்பப்பட்டன.
தைத்தியின் இன்னொரு தீவான மொருவாவிலிருந்து இந்தப் பேரணியில் கலந்து கொள்வதற்காக 1,700 பேர்
வந்திருந்தனர். அதே நேரத்தில் Marquesas, the
Tuamotus,
Astrals மற்றும்
Leeward
தீவுகளிலும் முதல் தடவையாக அரசியல் பேரணிகள் நடத்தப்பட்டன.
பிரெஞ்சு உயர் கமிசனர் மேலும் தூண்டுதல்களைச் செய்தபின்னர், ஒரு புதிய
ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக லான தெத்துனி அக்டோபர் 20 ல் நாடாளுமன்றத்தைக் கூட்டினார். இந்தக்
கூட்டத்தை தெமருவின் கூட்டணி உறுப்பினர்கள் புறக்கணித்ததால் கூட்டத்திற்கான
குறைந்தபட்ச எண்ணிக்கை
இல்லாததால் வாக்கெடுப்பு நடக்கவில்லை. அதே நேரத்தில்,
அந்தோனி ஜெரோஸ் பிரெஞ்சு ஸ்டேட் கவுன்சிலுக்கு கண்டனம் தெரிவிக்கும் முயற்சிகளை மேற்கொண்டார்.
நாடாளுமன்றத்தை மூன்றாவது துணை தலைவர் தலைமை வகித்து கூட்டத்தை நடத்துவது சட்டவிரோதமானது என்றும்
கண்டனம் செய்தார். என்றாலும் கவுன்சில் அதை தள்ளுபடி
செய்ததுடன், தெமரு தாக்கல் செய்த வேறு இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்தது.
அக்டோபர் 23 ல் நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தொடரில் புளோஸ் இறுதியாக
ஒரு வாக்குப் பெரும்பான்மையில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். தெமருவும், அந்தோனி ஜெரோஸும் அந்த
வாக்கெடுப்பை அங்கீகரித்த மறுத்தனர். Taheraa
Huiraatira வுக்கு (புளோஸின் கட்சிக்கு) ஒரு தலைவர்
தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாரே தவிர அதற்கு மேல் இந்த வாக்கெடுப்பில் ஒன்றுமில்லை என்று அவர்கள் இதனை
வர்ணித்தனர். நாடாளுமன்றத்தை கலைக்க நிர்பந்திக்க முடியுமென்ற நம்பிக்கையில், தெமரு தைத்தியின் ஜனாதிபதி
மாளிகையை பிடித்துக்கொண்டு அங்கே ''ஒரு ஆன்மீக உண்ணாவிரதத்தை'' மேற்கொண்டார். நாட்டில் இப்போது
இரண்டு ஜனாதிபதிகள் இருக்கின்றனர், ''ஒருவர் மக்களால் மே 23 ல் சட்டப்பூர்வமாக
தேர்ந்தெடுக்கப்பட்டவர், மற்றொருவர் தன்னைத்தானே ஜனாதிபதி என்று பிரகடனப்படுத்திக் கொண்டவர்'' என்று
தெமரு குறிப்பிட்டார். என்றாலும், பிரெஞ்சு உயர் கமிசனர் மத்தியூ மீண்டும் தலையிட்டு புளோஸ் தான்
சட்டப்பூர்வமான ஜனாதிபதி என்று பிரகடனப்படுத்தினார்.
மக்களில் கணசமான பிரிவுகள் தெமருவை ஆதரித்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட
புதிய தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன. எனவே, அந்தப்பகுதி அரசாங்கம் குழப்பத்தில் ஆழ்ந்துவிட்டது.
நவம்பர் 4 ல் டசின் கணக்கான கண்டன ஆர்ப்பாட்டக்காரர்கள் ''சட்டப்பூர்வமான சமாதான முறையில் அரசாங்க
அலுவலகங்களை கைப்பற்றப் போகிறோம்'' என்ற பதாகைகளோடு சென்று அரசாங்கத்தின் அச்சக அலுவலகம்,
கிராம வளர்ச்சித்துறை, பொதுப்பணி அமைச்சகம், நிதித்துறை அமைச்சகம், பாஸ்போர்ட் அலுவலகம் மற்றும் அந்தப்பகுதியில்
பிரெஞ்சு மற்றும் உள்நாட்டு அரசாங்க செலவின கட்டுப்பாட்டு அலுவலகம் ஆகியவை உட்பட மாகாண மற்றும் உள்ளூர்
அரசு அலுவலகங்களில் மறியல் செய்தனர்.
''இரண்டு தரப்பிலும் இருந்து கண்டனங்கள் வந்து கொண்டிருப்பதால்'' பெருமளவில்
கவலையடைந்த புரட்டஸ்தாந்து சர்ச்சின் தலைவர், ''வாக்குப்பெட்டி'' மூலம் தீர்வுகாண்பதுதான் ''அமைதியை
நிலைநாட்டுவதற்குரிய ஒரே சமாதான தீர்வு வழி'' என்றும், ஆகவே புதிய தேர்தலை நடத்தக்கோரியும் ஒரு
அறிக்கை வெளியிட்டுள்ளார். அத்துடன், இதர பசுபிக் நாடுகளிலும் அரசியல் தலைவர்கள் இடைவிடாத இந்த
நெருக்கடி குறித்து கவலை தெரிவித்துள்ளனர். பசுபிக் தீவுகள் அரங்கின் (Pacific
Islands Forum) நடப்பு தலைவரான சமோவாவின்
பிரதமர் Tuilaepa Sailele Malielegao,
அந்த அரங்கின் சார்பில் தலையிட வேண்டுமென்று கோரிக்கைகள் விடுத்துள்ளார்.
போராட்டம் வளர்ந்து கொண்டு வருவது குறித்து கலவரம் அடைந்துள்ள தெமருவும்
கூட ''அமைதிகாக்க'' கோரிக்கை விடுத்துள்ளார். தனது ஆதரவாளர்கள் இந்த விவகாரத்தை அதிகாரப்பூர்வமான
அரசியல் கட்சிகளிடம் விட்டுவிட வேண்டுமென்றும் அப்போதுதான் ''ஒரு நாகரீகமான போரை'' நடத்த
முடியுமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நிலவரத்தை மட்டுப்படுத்தும் முயற்சியாக தெமரு பிரெஞ்சு
நாட்டு அதிகாரிகளுக்கும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். பிரெஞ்சு முதன்மை நிர்வாக நீதிமன்றத்திலும் பிரஸ்ஸல்சிலுள்ள
ஐரோப்பிய நாடாளுமன்ற சபாநாயகரிடமும் தெமரு புதிய தீர்மானங்களை தாக்கல் செய்திருக்கிறார்.
தெமருவின் கூட்டணிக் கட்சிகளின் ஒரு தூதுக்குழு பாரிசிற்கு புறப்பட்டுசென்று பிரெஞ்சு
நாட்டு அதிகாரிகளிடம் நேரில் முறையிடுவதற்காகவும், எதிர்கட்சிகளின் ஆதரவை திரட்டுவதற்காகவும் சென்றுள்ளனர்.
என்றாலும், சிராக் அரசாங்கம் எதிர்க்கட்சியிலுள்ள
சோசலிஸ்ட் கட்சியின் புதிய தேர்தல் போலினேஷியாவில் நடத்தவேண்டுமென்ற
கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. ''தங்களது சுதந்திர கோரிக்கைக் கனவு நனவாகிவிட்டதாக ஒஸ்கார் தெமருவும்
அவரது நண்பர்களும் நம்புகிற அளவிற்கு இது ஒரு ஊக்குவிப்பாகவே அமைந்துவிடும்'' என்று தேசிய நாடாளுமன்றத்தில்
ஜிராடன் தெரிவித்தார். ''பிரெஞ்சு பொலினேஷியா ஒரு சுதந்திர
அரசல்ல, ஆனால் குடியரசிற்குள் இருக்கும் ஒரு உள்ளூர் ஆணையம், ஆகவே அந்த சட்டம்தான் செயல்படும்''
என்றும் அவர் வலியுறுத்திக் கூறினார்.
ஆகவே, பிரான்சின் நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை வைத்து முதன்மை நிர்வாக நீதிமன்றத்தின்
தீர்ப்பை ஏற்றுக்கொண்டு மேலும் கண்டனங்களை கைவிடுமாறு தெமரு தற்போது கோரிக்கை விடுக்கவிருக்கிறார்
என்று தெரியவருகிறது. நிலவரத்தில் உடனடி மாற்றங்கள் மற்றும் திருப்பங்கள் எதுவாக இருந்தாலும், அடிப்படையாக
உள்ள சமூக பொருளாதார மற்றும் அரசியல் பதட்டங்கள் எதுவும் தீர்த்து வைக்கப்படவில்லை. இன்றைய அரசியல்
சூறாவளியில் புளோஸ் தப்பி பிழைத்தாலும், அவரது அரசாங்கம் மக்களில் பரந்த தட்டினரை சார்ந்தவர்களால்
சட்டவிரோதமானது என்று கருதப்படுவதால், மிகவிரைவில் புதிய நெருக்கடிகளை எதிர்நோக்கும் என்பது தவிர்க்க
முடியாததாகும்.
Top of page |