WSWS
:Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு :
ஈராக்
Iraq: child malnutrition almost doubles
after US invasion
ஈராக்: அமெரிக்கப் படையெடுப்பிற்குப் பின்
குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவு கிட்டதட்ட இரண்டு மடங்காகியுள்ளது
By Rick Kelly
26 November 2004
Use this version
to print |
Send this link by email |
Email the author
சென்ற ஆண்டு மார்ச்சில் அமெரிக்கா தலைமையில் ஈராக் படையெடுப்பு நடைபெற்ற
பின்னர், ஆறு மாதம் முதல் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து மிகக் கடுமையாகக் குறைந்திருப்பதாகவும்,
இது 4% இலிருந்து 7.7% ஆக அதிகரித்திருப்பதாக நோர்வே நாட்டைச் சேர்ந்த ஒரு ஆராய்ச்சிக் குழுவான செய்முறை
சமூக அறிவியலுக்கான (Applied Social
Science) Fajo அமைப்பு தனது ஆய்வில் குறிப்பிட்டிருக்கிறது.
''இது சில ஆபிரிக்க நாடுகளின் அளவிற்கு உள்ளது. எந்தக் குழந்தையும் சத்தூட்டம்
குறைந்ததாக வளரக்கூடாது. ஆனால் அது 7% முதல் 8% இற்கு செல்லும்போது இது ஒரு மிகவும் கவலையளிக்கின்ற
அடையாளமாக ஆகிவிடுகிறது'' என்று அந்தக் அமைப்பின் துணை நிர்வாக இயக்குநர் ஜோன் பீட்டர்சன்
அசோசியேட் பிரஸ்ஸிற்கு தெரிவித்தார்.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 22,000 ஈராக்கிய வீடுகளில் நடத்தப்பட்ட ஒரு
ஆய்வின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வறிக்கை இன்னும் அதிகாரப்பூர்வமாக
பிரசுரிக்கப்படவில்லை. இதன் புள்ளிவிபரவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆய்விற்கான மத்திய ஈராக் அலுவலகமும்,
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்ட அமைப்பும் உதவின.
ஐ.நா. குழந்தைகள் நல அமைப்பான
UNICEF இன்
தலைவரான Carol Bellamy
ஈராக் குழந்தைகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள போரைக் கண்டித்தார். ''போரை வயது வந்தவர்கள்
நடத்திக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் குழந்தைகள்தான் மிகப்பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்த
இடைவிடாத சண்டையும் குழப்பமும் ஈராக் குழந்தைகள் வாழ்வை நாசப்படுத்தியுள்ளது'' என்று அவர்
குறிப்பிட்டார்.
ஏறத்தாழ 4,00,000 ஈராக் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவினால்
பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாகவும், ஈடு செய்ய முடியாத அளவிற்கு
மூளை வளர்ச்சி குறைந்தவர்களாகவும் உள்ளனர். சளிக் காய்ச்சல் மற்றும் வாந்தி வயிற்றுப் போக்கு போன்ற
நோய்களுக்கும், தொற்று நோய்களுக்கும் எளிதில் இலக்காகிவிடுகின்றனர்.
ஈராக் குழந்தைகளின் நிலை அமெரிக்க ஆக்கிரமிப்பின் மீது மற்றொரு
குற்றச்சாட்டாக அமைந்துவிட்டது. ஒரு காலத்தில் ஒப்பிட்டுநோக்கும்போது முன்னேறிய சமூகமாகவும்,
பொருளாதாரத்தையும் கொண்டுவிளங்கி வந்த ஈராக், முதலாவது வளைகுடா போரின் பேரழிவுத் தாக்கங்களிலும்,
தொடர்ந்து வந்த பொருளாதாரத்தடை நடவடிக்கைகளிலும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்தப்
போரும் சேர்ந்து அதனை சீரழித்துவிட்டது. ஒரு தலைமுறைக்கு முன்னர் ஈராக் இளைஞர்கள் எதிர்நோக்கிய
நெருக்கடியான ஊட்டச்சத்து பிரச்சனையே அவர்கள் உடல்பருமன் அதிகரித்துகொண்டு வந்ததுதான் என்று சென்ற
ஞாயிறன்று வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டிருந்தது.
வளைகுடா போருக்கு பின்னர்தான் சத்தூட்ட குறைபாடு ஒரு கடுமையான
பிரச்சனையாக உருவாயிற்று. அமெரிக்கா தலைமையில் ஐ.நா. ஆதரவோடு பல உணவு வகைகள் மற்றும்
மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் 1996 இல் ஈராக் குழந்தைகளின் கடுமையான சத்தூட்டக் குறைபாடு 11%
ஆக உச்சக்கட்டத்தை அடைந்தது. ''உணவுக்குக்கான எண்ணெய்'' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர்தான் இந்த
அளவு குறைய ஆரம்பித்தது. 2002 இல் 4% இற்கு வீழ்ச்சியடைந்தது.
ஆக்கிரமிப்பின் கீழ் மீண்டும் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடு பெருகிவிட்டது.
இந்தப் பிரச்சனை படையெடுப்பிற்கு பின்னர் ஈராக்கில் தோன்றியுள்ள பொதுவான சமூக மற்றும் பொருளாதார
நெருக்கடியோடு பின்னிப்பிணைந்திருக்கிறது. 6.5 மில்லியன் ஈராக்கியர்கள், பங்கீட்டு உணவை நம்பியிருக்கின்றனர்.
இதில் மிகவும் ஏழைகளாக இருக்கின்ற ஈராக் மக்கள் அடிக்கடி பங்கீட்டு உணவுப்பொருட்களை விற்று தங்களுக்கு
அதைவிட முக்கியமாக தேவைப்படுகிற மருந்துகளுக்கும் உடைகளுக்கும் செலவிடுகின்றனர்.
ஈராக்கிய பொருளாதாரம் சிதைந்து கிடக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம், 60
அல்லது 70 சதவீதமாக இருக்குமென்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இப்படி வறுமை பரவலாக இருப்பதால் மில்லியன்
கணக்கான குடும்பங்கள் தங்களது இளம் குழந்தைகளுக்குத் தேவையான உணவை அல்லது ஊட்டச்சத்துக் குறையை
பூர்த்தி செய்வதற்கு தேவையான பொருட்களை வாங்க வசதியில்லாதுள்ளனர்.
பாக்தாத்தின் பிரதான குழந்தைகள் மருத்துவமனையின் நிலவரத்தை வாஷிங்டன்
போஸ்ட் வெளியிட்டிருக்கிறது:
''போருக்கு பின்னர் எனது நிலவரம் படுமோசமாகிவிட்டது'' என்று
நோய்வாய்ப்பட்ட தனது ஒரு வயது மகன் அப்துல்லாவைப் பார்க்க வந்த ஒரு தினக்கூலி தொழிலாளி காசிம்
கூறினார். அந்தக் குழந்தை ஒரு தலையணையில் தனது தலையிலிருந்து ஈயை விரட்டுவதற்காக ஒரு துணி மூடப்பட்ட
நிலையில் படுத்திருந்தது. அந்தக் குழந்தை 11 இறாத்தல் எடை கொண்டது.
''முந்திய ஆட்சியில் அரசாங்கத் திட்டங்களில் நான் பணியாற்றினேன். இப்போது
அத்தகைய திட்டங்கள் எதுவுமில்லை'' என்று அவரின் தந்தை கூறினார்.
''அவருக்கு வேலை கிடைக்கும்போது, வீட்டிற்கு ஒரு நாளைக்கு 10 முதல் 14
டொலர் சம்பாதித்துக் கொண்டு வருவதாகவும் மேலும் கூறினார். டாக்டர்கள் பரிந்துரைக்கும் சத்தூட்ட உணவுப்
பொருளான ஏழு டொலர் விலையான Isomil
கிடைத்தால் அதற்காக தனது மனைவி சந்தோசப்படுவார்''
என்றும் அவர் கூறினார்.
''அடுத்த படுக்கையில் இருந்த ஒரு பெண் தான் 10 டொலர் கொடுத்து அந்த
சத்தூட்ட உணவு டின்னை வாங்கியதாக'' தனது காலை மடித்து முழங்காலிட்டு அதே வார்டில் அமர்ந்திருந்த
செய்யது அஹமத் கூறினார், அவர் வயிற்று போக்கால் எலும்பும் தோலுமாக ஆகிவிட்ட தனது 4 மாத பேத்தி
ஹீபாவிற்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்.''
ஈராக்கில் பல பகுதிகளில் நிரந்தரமாக மின்சாரமும், தூய்மையான தண்ணீரும்
கிடைக்காததால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்குறை மிகப்பெருமளவிற்கு வளர்ந்துள்ளது. இப்போது ஏற்பட்டுள்ள
மின்சார பற்றாக்குறையால் பலர் குடி தண்ணீரை சுட வைத்து பாதுகாப்பாக அருந்த இயலவில்லை. பாக்தாத் மகபேறு
மருத்துவமனையில் பணியாற்றுகின்ற ஒரு செவிலியர் Zina
Yahya ''நானே தூய்மையான தண்ணீர் கிடைக்காததால் பாதிக்கப்பட்டிருக்கிறேன்'',
ஒரு டம்ளரில் தண்ணீர் பிடித்தால் அது கலங்களாக காணப்படுகிறது. நான் தொற்று காய்ச்சல்
(Typhoid)
நிலைமை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்'' என்று அவர் கூறினார்.
ஈராக் சுகாதார கட்டமைப்பு ஏறத்தாழ சிதைந்துவிட்டது. ''2004 ஆகஸ்டிலிருந்து,
அக்டோபர் வரை சுகாதார சேவை கணிசமான அளவிற்கு சீர்குலைந்துவிட்டது, இது பாதகமான நிலைக்கு சென்றுவிட்டது.
ஈராக்கின் சுகாதார சேவை கட்டமைப்பு தற்போது தேவையான அடிப்படை சுகாதார வசதிகளை பெரும்பாலான
மக்களுக்கு தரமுடியாத நிலையில் உள்ளது, அனைத்து துறைகளும் ஆய்வு செய்த அறிக்கைகளில் சுகாதாரசேவை மிக
மோசமான போக்கில் உள்ளது, இதுதான் உண்மை'' என்று அண்மையில் மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான
கழகம் நடத்திய ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
புஷ் நிர்வாகம் ஈராக்கை விடுதலை செய்துவிட்டதாகக் கூறிக்கொள்வதன் அகங்காரத்தை
ஈராக்கின் சுகாதார நெருக்கடி கோடிட்டுக்காட்டுவதாக உள்ளது. சென்ற ஆண்டு ஈராக்கின் மறுசீரமைப்பிற்காக
அமெரிக்க நாடாளுமன்றம் 18.4 பில்லியன் டொலர்களை ஒதுக்கீடு செய்தது, இதில் 2 மில்லியன் டொலர்கள்தான்
சுகாதார திட்டங்களுக்காக செலவிடப்பட்டிருக்கின்றன. ஈராக் போலீஸ் மற்றும் இராணுவத்திற்கான வசதிகளை
அதிகரிப்பதற்காக சென்ற மாதம் அமெரிக்க வெளிவிவகாரத்துறை மின்சார வலைபின்னல் சீரமைப்பிற்காக ஒதுக்கப்பட்ட
வரவுசெலவுத்திட்டத்தில் 1.1 பில்லியன் டொலரையும், சாக்கடை வடிகால் கட்டுக்கோப்பிற்கு ஒதுக்கப்பட்ட
தொகையில் 1.9 பில்லியன் டொலரையும் வெட்டியிருக்கிறது.
Top of page
|