World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil: செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியாLondon: lessons of the European Social Forum லண்டன்: ஐரோப்பிய சமுதாய அரங்கிலிருந்து படிப்பினைகள்By Chris Marsden லண்டனில் அக்டோபர் 15-17ல் நடைபெற்ற மூன்றாவது வருடாந்த ஐரோப்பிய சமுதாய அரங்கு (ESF) கூட்டம் ஈராக் ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஒரு ஆர்பாட்டத்தோடு நிறைவுற்றது. எதிர்காலத்தை காட்டுகின்ற ஒரு சமூக அலையென்றும் முற்போக்கு அரசியலுக்கு ஒரு புதிய மாதிரி என்றும் பாராட்டப்பட்ட ஒரு இயக்கத்தின் கையாலாகாத் தன்மையை வலியுறுத்திக் கூறுவதாக அந்த நிகழ்ச்சி அமைந்தது. பரவலாக போர் எதிர்ப்பு உணர்வு நிலவினாலும் அமெரிக்கா தலைமையிலான ஈராக் ஆக்கிரமிப்பில் பிரிட்டன் பங்கெடுத்துக் கொண்டிருப்பதற்கு எதிர்ப்பு காணப்பட்டாலும் அந்த கண்டனப் பேரணியில் ESF வாரக் கடைசி மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் மட்டுமே பங்கெடுத்துக் கொண்டனர். இந்த நேரத்தில் போலீஸ் மதிப்பீடுகளின்படி 20,000 பேர் பேரணியில் கலந்துகொண்டனர், இது உண்மையை நெருங்கி வருவதாக இருந்தது, மாறாக ஏற்பாட்டாளர்கள் 50-70,000 வரை கலந்துகொண்டதாக கூறினர். ஏன் இப்படியான ஒரு பொது அழைப்பு சாத்தியமற்றது என்பதை அந்த கண்டன பேரணியில் தரப்பட்ட உரைகள் எடுத்துக்காட்டியது. பிரதமர் Tony Blair-ன் தொழிற்கட்சி அரசாங்கத்திற்கு எதிரான ஒரு அரசியல் போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை திரட்டுவதற்கான முன்னோக்கை எவரும் எடுத்து வைக்கவில்லை. மாறாக, Blair-ன் போர் ஆதரவு போக்கிற்கு ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கூறுபவர்கள் கூட தொழிற்கட்சி MP-களோடும் தொழிற்சங்க அதிகாரத்தினரோடும் இணைந்து மேடை ஏறினர். இத்தகைய தரப்பினர் போர் தொடர்பாக எழுப்பும் சந்தேகங்கள், அரசாங்கத்திற்கும், கட்சிக்கும், அவர்கள் காட்டும் விசுவாசத்திற்கு முற்றிலும் அடிபணிந்து செல்வதாகும். தொழிற் கட்சிக்காரர்களிலேயே மிகத் தீவிரமான குரல் எழுப்புபவர்கள் தங்களது கருத்துக்களை Blair-ன் ராஜினாமாவை சுற்றியே எடுத்து வைத்தனர். தொழிற்கட்சிக்கு ஒரு அரசியல் மாற்று என்கிறபோது, அது, இரண்டில் ஒரு முகாம்களுக்குள் அடங்கும். ஒன்று தேசியவாத கட்சிகளான Plaidcymru மற்றும் Scotish தேசியக் கட்சி தலைமையில் நடத்தப்பட்டு வரும் பதவி நீக்க கண்டன தீர்மான பிரச்சாரத்தை ஆதரிப்பது அல்லது George Galloway தலைமையிலுள்ள Respect-Unity கூட்டணியை ஆதரிப்பது, இந்தக் கூட்டணி முஸ்லீம் வாக்காளர்களை கருத்தில் கொண்டு தன்னை சந்தர்ப்பவாதப் போக்கில் செயல்பட்டு வருகிறது. இந்தக் கண்டனப் பேரணி Blair அரசாங்கத்திற்கு ஆக்கபூர்வமான ஒரு அறைகூவலை தரவில்லை என்பது அந்த நிகழ்ச்சிக்கான நிதி ஆதார மூலத்திலிருந்தே தெளிவாயிற்று, நிதியில் பெரும் பகுதியை லண்டன் மேயர் Ken Livingstone வழங்கினார். அண்மையில் தொழிற்கட்சியில் மீண்டும் அனுமதிக்கப்பட்ட பின்னர் சென்ற மாதம் கட்சி மாநாட்டில் Blair இன் தனிப்பட்ட பாராட்டுதலுக்கு இலக்கானவர், Livingstone பிரதமரின் ஈராக் தொடர்பான அமெரிக்க ஆதரவு போக்கிற்கு கண்டனக் குரல்களை எழுப்ப அனுமதிப்பதில் மகிழ்ச்சியடைந்தார். ஏனென்றால் தொழிற்கட்சியின் அரசியல் ஆதிக்கத்திற்கு ESF மற்றும் தொழிற்சங்க நிர்வாக வர்க்கம் உழைக்கும் வர்க்கத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்துவதால் ஒரு அறைகூவலாக தோன்றவில்லை என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். இந்த ஆண்டு நடைபெற்ற ESF பல வழிகளில் அதனுடைய எதிர்காலத்திற்கே திருப்புமுனையாக அமைந்திருக்கிறது. அந்த மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தந்துள்ள பங்கு எடுத்துக்கொண்டவர்கள் பற்றிய புள்ளி விவரங்களை ஏற்றுக்கொள்வதாகவே இருந்தாலும் சென்றாண்டு பாரிசில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகளில் பாதிப்பேர் மட்டுமே இப்போது பங்கெடுத்துக்கொண்டனர். பரவலான புகார்களும் கண்டனங்களும் சில நூறு குழப்பவாதிகளால் எழுப்பப்பட்டன. எப்படி Livingstone ESF ல் எப்படி தன்னை அங்கத்தவராக இணைத்துக்கொண்டார். எப்படி லண்டன் பெருநகர் ஆணையம் 4,00,000 பவுன்களுக்கு மேற்பட்ட நிதியை அளித்தது. ESF-ன் சுதந்திர தன்மையையும் தன்னாட்சி தன்மையையும் பாதிக்கின்ற வகையில் பல்வேறு தொழிற்சங்கங்களும் பணம் கொடுத்தது சம்மந்தமாகவும் புகார்கள் எழுப்பப்பட்டன. மூன்று நாட்களுக்கு மேலாக பல்வேறு வகைப்பட்ட விவாதங்களும் 500 அல்லது அதற்கு மேற்பட்ட கருத்தரங்குகளும் கூட்டங்களும் நடத்தப்பட்டன என்று கூறப்பட்டாலும் அரசியல் நிகழ்ச்சி நிரலில் இருந்து எல்லாப் பெரிய கூட்டங்களிலும் கலந்துகொள்ளும் மேடை பேச்சாளர்கள் வரை Livingstone அவரது ஆதரவாளர்கள் மற்றும் ESF-ன் ஐரோப்பா கண்ட பிரதிநிதிகள் ஆகியவர்களோடு முன்கூட்டியே நடத்தப்பட்ட ஆலோசனையில் முடிவு செய்யப்பட்டது. இந்த நடைமுறை ESF துவக்கப்பட்ட காலத்திலிருந்து கடைபிடிக்கப்பட்டு வந்தாலும் இந்த ஆண்டு அது மிகவும் தரம் தாழ்ந்துவிட்டது. லண்டன் இல் நடைபெற்ற ESF- Livingstone ஆல் வழிநடத்தப்பட்டது ஆனால், சென்ற ஆண்டு பிரான்சில் சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஜனாதிபதி Jacques Chirac-ன் தனி அலுவலகமும் கூட இதே போன்று வழிநடத்தின. அதற்கு முந்திய ஆண்டு பிரான்சில் இந்த மாநாடு நடந்தபோது இரண்டு இத்தாலிய ஸ்ராலினிச கட்சிகள் பொறுப்பில் பெரும்பாலும் நிதி மற்றும் கட்டுப்பாடு தரப்பட்டது. இத்தகைய ஸ்பான்சர்கள் எந்த அளவிற்கு ESF-ன் நிகழ்ச்சி நிரலை கட்டளையிட்டு முடிவு செய்கிறார்கள் என்பதை பேரணியின் ஆரம்ப இரவு நிகழ்ச்சிகள் திடீரென்று வெளிக்காட்டின. ஈராக் ஆக்கிரமிப்பை எதிர்ப்பதற்காக அந்த நிகழ்ச்சி அற்பணிக்கப்பட்டது மற்றும் ஞாயிறு பேரணிகளின் தொனியையும் நிர்ணயிப்பதற்கு அந்தக் கூட்டத்தில் ஈராக் தொழிற்சங்கங்களின் சம்மேளன IFTU தலைவர் Subji al Mashadani கலந்துகொண்டார். ESF -ன் தொழிற்சங்க ஆதரவாளர்கள் Mashadani கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர். ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரான அவர் அமெரிக்கா நியமித்துள்ள பொம்மை நிர்வாகத்தில் பங்கெடுத்துக் கொண்டிருப்பவர். கொத்தடிமை அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வமான தொழிற்சங்கம். சில வாரங்களுக்கு முன்னர் தொழிற்கட்சி மாநாட்டில் லண்டனில் இருக்கும் IFTU பிரதிநிதி ஈராக்கில் பிரிட்டிஷ் துருப்புக்கள் நீடிக்க வேண்டும் என்ற Blair-ன் கருத்தை ஆதரித்தார். Mashadani-ம் ஆக்கிரமிப்பை எதிர்ப்பவர்களுக்கு எதிராகவே வாதிடுவதற்கு வந்திருந்தார்.அவர் அந்த ஆரம்ப விழா விவாதத்தில் கலந்துகொள்வதற்கு ஈராக்கியர்களும் மற்றவர்களும் எதிர்ப்பு குரல் கொடுத்ததால் அந்த நிகழ்ச்சி கைவிடப்பட்டது. இப்படி கட்டாயமாக தொடக்கப்பட்ட பேரணி இரத்து செய்யப்பட்டது. அந்த வாரக் கடைசியில் நடைபெற்ற முதலாவது தோல்வியாகும். அடுத்த இரவு இன வெறி தொடர்பான பெரும் விவாதத்திற்கு திட்டமிடப்பட்டிருந்தது. அதில் Livinstone க்கு எதிராக கடும் கண்டன குரல்கள் எழுப்பப்பட்டதால் அந்தக் கூட்டம் கைவிடப்பட்டது. கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்த லிவிங்ஸ்ட்ன் வரவில்லை. இத்தகைய நிகழ்ச்சிகள் ESF-ன் அரசியல் குணாதிசயம் பற்றி தெரிவிப்பது என்ன? இந்த ஆண்டு ESF-ன் அதிகாரபூர்வமான ஊடக ஆதரவாளர் Blair-க்கு ஆதரவான Guardian செய்தி பத்திரிகை. அக்டோபர் 18-ல் ESF ``ஐரோப்பியன் இடதுசாரி புதிய அரசியலுக்கு ஒரு நியாயமான உருவகத்தைத் தருகிறது`` என்று தனது தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தது. ``காலண்டரிலிருந்து அந்த சம்பவம் மறைந்துவிடக்கூடும் மற்றும் அரசியல் கருத்துக்களின் ஐரோப்பிய வர்த்தக கண்காட்சியாகவே அது நினைவில் நிற்கக்கூடும்`` என்று அந்த பத்திரிகை அனுமானித்திருப்பது மிகவும் நேர்மையானது. ``ஆனால் பெரிய ஐரோப்பிய நகரங்களின் மேயர்கள் இப்போது ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு ஒரு வகையான அரசியல் ஒலிம்பிக் நிகழ்ச்சியை நடத்துவதற்கு முயலக்கூடும்.`` இந்த ஒட்டுமொத்த நிதிக்கட்டுப்பாடு மட்டுமல்லாமல் ஏராளமான மாநாட்டு பிரதிநிதிகள் அரசு சாரா அமைப்புக்கள் (NGO) மூலம் அனுப்பப்படுபவர்கள். அவர்களுக்கு பிரதான முதலாளித்துவ அரசுகள் பெருமளவில் பண உதவிகள் செய்கின்றன. ESF தலைமை மிக கவனமாக சுரண்டிக்கொண்ட சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் பற்றிய மாயை சிதைந்துவிட்டதைக் குறித்து உண்மையிலேயே அராஜகவாத கண்டனக்காரர்களும் மற்றவர்களும் ஓலமிடுகின்றனர்.ESF உலக சமூக அரங்கிலிருந்து (WSF) உருவான அமைப்பாகும். பிரேசில் தொழிலாளர் கட்சியின் சார்பில் அதன் தலைவர் ஜனாதிபதி லூயிஸ் இனாஷயாலுவா டீ சில்வாவினால் 2000தில் WSF உருவாக்கப்பட்டது. பிரான்சு ``அட்டாக்`` இயக்கமும் மற்றவர்களும் இணைந்து உருவாக்கினர். IMF கட்டளைப்படி சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தனது முயற்சிகளை ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற பாராட்டுக்களுக்கு பின்னால் மறைத்துக்கொள்வதற்காக லூலா WSF-ஐ உருவாக்கினார். பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சிக்கு இணை அதிகாரபூர்வ ஆலோசகராக ``அட்டாக்`` செயல்பட்டு வருகிறது. பிரான்சின் தேசிய நலன்களை காப்பதற்கு ஒரு வழியாகவும், சமூக அமைதியை நிலைநாட்டும் உறுதி தருகின்ற வகையிலும் குறைந்தபட்ச சீர்திருத்தங்களையும் சர்வதேச ஊக பேரக்காரர்களுக்கு கட்டுப்பாட்டையும் ``அட்டாக்`` பரிந்துரைத்து வருகிறது. உலகம் முழுவதிலும் உள்ள அதே கண்ணோட்டத்தில் செயல்படும் சக்திகளுக்கு WSF திட்டம் பின்னர் கவர்ச்சியூட்டுவதாக அமைந்தது.ஷியாட்டிலில் 1999-ல் தொடங்கிய முதலாளித்துவ எதிர்ப்பு கண்டனங்கள் பெரும்பாலும் இயல்பாகவே உருவானவை அவற்றின் தேர்ந்தெடுக்கப்படாத தலைவர்களாக WSF மற்றும் ESF தன்னைத்தானே சித்தரித்துக் கொண்டது. அதற்கு பின்னர் அமெரிக்கா தலைமையில் ஈராக் மீது நடைபெற்ற தாக்குதலுக்கு எதிராக 2003-ல் வெடித்துச் சிதறிய வெகுஜன போர் எதிர்ப்பு உணர்வின் அரசியல் வெளிப்பாடாக தங்களை சித்தரித்துக் கொண்டனர். ஆனால், அதற்கு எதிரான அமைப்புகள் தான் இவை. பல்வேறு ஒதுக்கித் தள்ளப்பட்ட அரசியல் கண்ணோட்டங்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து ESF-ம் WSF-ம் புதுமை என்கிற ஒரு மாயையை தந்தன. அதன் மூலம் ஏகாதிபத்தியத்திற்கும் போருக்கும் எதிராக நியாயமான சுதந்திர போராட்டம் உருவாவதைத் தடுக்க குட்டி முதலாளித்துவ பிரதிநிதிகள் மேற்கொண்ட ஒரு முயற்சி தான் ESF மற்றும் WSF. சர்வதேச முதலீடானது உலக மக்கள் மீது தற்போது திணித்துள்ள சூறையாடல் மற்றும் சுரண்டல்களால் தீவிர தன்மையடைந்துள்ள சக்திகள் சோசலிச முன்னோக்கினை நோக்கி நகராது தடுப்பதுதான் இவர்களது மைய நோக்கமாகும். இப்போது ESF-ற்கு தலைமை தாங்கி செல்பவர்கள், ஸ்ராலினிஸ்ட்டுகள், சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் முன்னாள் தீவிரவாதிகள். அவர்களது அரசியல் வரலாற்று அடிப்படையில் சமகால சமூக வாழ்வில் நிலவுகின்ற கொந்தளிப்பான வெடித்துச் சிதறும் வர்க்க மோதல்களால் தங்களது சொந்த சலுகை பெற்ற வாழ்விற்கும் முதலாளித்துவத்திற்கும் ஏற்பட்டுள்ள ஆபத்தை மிக நன்றாக உணர்ந்திருக்கின்றனர். இந்த ஆபத்தை தவிர்ப்பதற்காகத்தான் ESF நிறுவனக்கொள்கைகள் கட்சிப் பிரதிநிதிகள் மாக்சிச சித்தாந்தங்களில் பங்கெடுத்துகொள்வதைத் தடுக்கின்றன. அறியாமையின் காரணமாக குரோத உணர்வோடு மாக்சிசத்திற்கு விளக்கம் தந்திருக்கிறார்கள். ``தர்க்க அடிப்படையில் பொருளாதாரம் முன்னேற்றம் மற்றும் வரலாற்று`` கண்ணோட்டங்களை எதிர்ப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்கள். பழைய தொழிலாளர் அமைப்புக்கள் துரோகம் இழைத்ததால் உருவாக்கப்பட்டுள்ள குழப்பத்தை பயன்படுத்திக்கொள்ள முயலுகின்ற கட்சிகளுக்குத்தான் இந்தத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், அடிப்டையில் முதலாளித்துவ ஆதரவு செயல்திட்டத்தை ஏற்றுக்கொள்பவர்கள் மற்றும் சமூக ஜனநாயக மற்றும் ஸ்ராலினிச அரசாங்கங்கள், அத்தகைய கட்சிகள், தொழிற்சங்க கூட்டமைப்புக்கள் ESF/WSF கண்ணோட்டங்களை ஏற்றுக்கொள்பவர்களுக்கு அரசியல் அடிப்படையில் அறைகூவலாக தோன்றாது. உறுதி செய்துகொள்ளும் நிலையில் அத்தகைய தரப்பினர் ESF-ல் பங்கெடுத்துக்கொள்ளலாம். இத்தகைய தரப்பினர் விவாதங்களில் கலந்துகொள்வதற்கு அமைப்பு விதிகள் உறுதி செய்து தருகின்றன. ``இந்த அமைப்பு விதிகளை ஏற்றுக்கொள்கின்ற அதில் தந்துள்ள உறுதிமொழிகளை பின்பற்றுபவர்கள் அரசாங்க தலைவர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் பங்கெடுத்துக்கொள்ள அழைக்கப்படலாம்.`` இத்தகைய ஒரு அடிப்படையில் சுதந்திரமான நியாயமான இயக்கத்தை என்றைக்கும் மேம்படுத்த முடியாது. சர்வதேச அளவிலான கார்ப்ரேஷன்களுக்கு ஒரு மாற்றாக ESF செயல் திட்டத்தை உருவாக்கித்தரும் என்று ஆரம்பத்தில் ஈர்க்கப்பட்டவர்கள் பலர் கடந்த மூன்றாண்டுகளில் அது முடியாது என்ற உணர்வினால் குறைந்துகொண்டு வருகின்றனர். ESF/WSF- ன் அடிப்படைத் தன்மை அதன் செயல் திட்டத்திலேயே விளக்கப்பட்டிருக்கிறது. தேசிய அரசானது உலகில் ஒடுக்கப்பட்டவர்களை தற்காத்து நிற்கும் ஒரு வழி என்று அந்த அமைப்பு கூறி வருகிறது. அரசாங்க நிர்வாகக் கட்டுக்கோப்பு பழைய பாணி Keynesian பொருளாதார நெறிமுறை அமைப்புக்களை வரையறுக்கப்பட்ட சமூக சலுகைகளுடன், தளர்த்தப்பட்ட வடிவத்தில் செயல்படுத்திவிட முடியும் என்ற நம்பிக்கை முதலாளித்துவ பிரிவினருக்கு வந்திருக்கிறது. இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் முதலாளித்துவத்திற்கெதிரான ஒரு அரசியல் இயக்கம் முன்னேறுவதற்கு தடுத்துவிட முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.1999-ல் முதலாவது ஷியாட்டில் கண்டனப் பேரணிகள் நடந்த நேரத்தில் உலக சோசலிச வலைத் தளம் எடுத்து வைத்த கண்ணோட்டத்தை நினைவுபடுத்துவது பயனுள்ளது. ESF அதன் ஆதரவாளர்கள் எடுத்து வைக்கின்ற பேரழிவுப் பாதையின் அடிப்படையை மறுக்கின்ற வகையில் வெளியிட்ட அந்த அறிக்கை இன்றைக்கும் பொருந்துவதாக இருக்கிறது. நவம்பர் 30-ல் பிரசுரிக்கப்பட்ட அந்த அறிக்கை ``சர்வதேச முதலாளித்துவத்திற்கெதிராக ஒரு இயக்கம் காண்பதற்கான அரசியல் முதல் கொள்கைகள்`` என்ற அந்த அறிக்கை வருமாறு. ``வியட்நாம் போருக்கு எதிரான போராட்டம் உட்பட இதற்கு முந்திய கண்டன இயக்கங்களின் வரலாற்றை பார்க்கும்போது தீவிரமாக செல்வதற்கும் பெரும் தியாகங்களைச் செய்வதற்கும் விருப்பத்துடன் இருப்பது மட்டுமே போதுமானதல்ல என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. தற்போது நடைமுறையிலுள்ள கட்டுக்கோப்பிற்கெதிராக ஒரு இயக்கத்தை உருவாக்குவது மனிதர்களை எதிர்நோக்கியுள்ள மிக சிக்கலான பணியாகும்..... ``இன்றைக்குள்ள மிகப்பெரிய கேள்வி இப்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை பெரும்பாலும் ஏதோ ஒரு கற்பனையில் அமைந்த தனித்து நிற்கும் யுகத்திற்கு அழைத்து செல்வதல்ல, அத்தகைய கற்பனை யுகம், தனித்து நிற்கும் தேசிய பொருளாதார வாழ்வு அல்ல. அது இதுதான்; சர்வதேச அளவிலான பொருளாதாரத்தை யார் கட்டுப்படுத்தப் போகிறார்கள். அதன் மகத்தான தொழிற்நுட்ப மற்றும் பண்பாட்டுத் திறமைகளை எப்படிப் பயன்படுத்துவது என்பதை யார் நலனை அடிப்படையாகக் கொண்டு முடிவு செய்யப்போகிறார்கள்? முற்போக்கான வழியில் சர்வதேச பொருளாதாரத்தை நடத்திச் செல்கிற வல்லமை படைத்த ஒரே சமூக சக்தி சர்வதேச தொழிலாளர் வர்க்கம்தான்.....`` ``சர்வதேச மயத்தோடு பிணைக்கப்பட்டிருக்கிற முன்னோக்கும், அடிப்படைத் தன்மையில் சற்றும் குறைவில்லாத பிரச்சனைதான் அது தொழிலாளர் வர்க்கம் சுயாதீனமான ஒரு அரசியல் அமைப்பாக உருவாவது. இந்த வாரம் ஷியாட்டிலில் எழுப்பப்பட்ட பிரச்சனைகளுக்கு கண்டனத்தால் தீர்வு கண்டுவிட முடியாது. உலகின் உழைக்கும் மற்றும் ஒடுக்கப்பட்ட வெகுஜனங்கள் சந்தித்துக்கொண்டிருக்கின்ற நிலவரத்தை கடுமையான வகையில் மாற்ற வேண்டுமென்றால் அது WTO அல்லது வேறு இதர முதலாளித்துவ அமைப்பு எதற்கும் நிர்பந்தம் கொடுப்பதால் நடந்துவிடப்போவதில்லை. ``இப்போது நிலவுகின்ற சூழ்நிலைகளை எதிர்த்து நிற்பவர்கள் அந்தப் பிரச்சனையின் ஆணிவேருக்கே செல்ல கடமைப்பட்டவர்கள், அந்த ஆணி வேர் இலாபத்திற்காக உற்பத்தி செய்கிற அமைப்பாகும். இதன் பொருள் என்னவென்றால் அடிப்படை மாற்றத்திற்கு ஒரு கிளர்ச்சி தேவை, அந்தக் கிளர்ச்சி ஒரு புதிய சமூகக் கொள்கையின் அடிப்படையில் சமூகத்தை மறு ஒழுங்கமைப்பதாக இருக்கவேண்டும், இது ஒரு அரசியல் போராட்டம், அந்த அரசியல் போராட்டத்திற்கு தொழிலாள வர்க்கத்திற்கு அதன் சொந்த கருவி ஒன்று தேவை. அந்தக் கருவி அதன் சொந்த அரசியல் கட்சி.`` அத்தகைய ஒரு அரசியல் கட்சியை உருவாக்குவதற்கான போராட்டத்தில்தான் மனித இனத்தின் தலைவிதியே அடங்கியிருக்கிறது. |